koolamathari 350ஆங்கிலேயக் காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்தாலும், வைதிக சமயத்தின் மேலாதிக்கம் காரணமாகச் சாதியத்தின் ஆளுகை இன்றளவும் தொடர்கின்றது.  பிறப்பின் அடிப் படையில் மனித உடல்களை மேல் கீழ் எனப் பகுத்துப் பொருளியல் ரீதியில் ஒடுக்குவதற்குச் சாதிய அடுக்கு முறை பல்லாண்டுகளாகப் பயன்படுகிறது.

குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர் அந்தச் சாதிக்கெனச் சநாதன தருமம் வகுத்துள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்ற நியதி நிலவுவது, சமூகக் கொடுமையாகும். கிராமப்புறத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் சாதியம் வகுத்துள்ள விதிகளின்படி வாழ வேண்டியுள்ளது.

சாதியமும் பொருளாதாரச் சுரண்டலும் கிராமத்து விளிம்பு நிலையினரை ஒடுக்குவதில் முன்னிலை வகிக்கின்றன. இத்தகைய சமூகப் பின்புலத்தில் வாழ்கின்ற சாதியினால் தாழ்த்தப்பட்ட கிராமத்துச் சிறுவர் சிறுமியர் வாழ்க்கையினைப் பின்புலமாகக்கொண்டு, பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ நாவலின் கதை விரிந்துள்ளது.

தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான மாற்றங்களால் உலகமே பூலோகக் கிராமமாகச் சுருங்கி விட்டது எனற நிலையிலும், சக்கிலியர் சாதியைச் சார்ந்த சிறுவர்கள், அடுத்தவேளைக் கூழுக்காக அத்துவானக் காட்டில் ஆடுகளின் பின்னே அலைந்து கொண்டிருக்கின்றனர். யதார்த்தமான கதை சொல்லல் மூலம் பெருமாள்முருகன் சித்திரித்துள்ள உலகம்,

மனித இருப்புக் குறித்த ஆழமான கேள்விகளை முன்வைத்துள்ளது. சின்னச்சின்ன சம்பவங்களின் தொகுப்பாக விரியும் கதைப்பரப்பினுள் நுழைகையில், ரத்தமும் சதையுமான அனுபவங்களைச் சந்தித்த அனுபவமேற்படுகின்றது.

குறிப்பட்ட பகுதியில் வாழும் குழுவினரை  மையமாக வைத்துப் பல்வேறு சம்பவங்களை வெறுமனே விவரிப்பது அலுப்பை ஏற்படுத்தும். எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்ற தேர்ந்தெடுப்பு முக்கியமானது. தகவல் தொடர்புக் கருவிகள், போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்த பின்னரும் தமிழகத்திலுள்ள பெரும்பான்மை யான கிராமங்கள் இறுக்கமாக உள்ளன. சாதிய மேலாதிக்கம் வலுவாக ஊடுருவியுள்ள கிராமப் புறங்களில் கண்காணிப்பின் அரசியல் காத்திரமாக உள்ளது.

ஆதிக்க சாதியினர்தான் ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரத்தினைச் செயல்படுத்துகின்றனர். குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்து வாழ்கின்ற விளிம்பு நிலையினர் அன்றாட வாழ்வில் துயரங்களை எதிர்கொண்டாலும், தங்கள் முன்னோர் வகுத்த வழியிலே செல்கின்றனர். தலைவிதித் தத்துவம் போன்ற ஏதோ ஒன்று அவர்களுடைய இருப்பினை நியாயப்படுத்துகின்றது. அதிலும் நிலத்தினை நம்பி வாழ்கின்றவர்கள், பண்ணை யத்தில் படுகின்ற பாடுகளை இயல்பானதாகக் கருது கின்றனர்.

காலங்காலமாகக் கவுண்டர்களின் ஆட்டு மந்தையைச் சக்கிலியர் இனத்துக் குழந்தைகள்தான் மேய்க்க வேண்டும் என்பது விதியாக நிலவும் சமூகம் பற்றிய புனைகதையினை வட்டார வழக்கு நாவல் என்ற வகைக்குள் மட்டும் அடக்க முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது.  பெருமாள்முருகனுக்கு கொங்கு வட்டாரம் பற்றிய தகவல்களைப் பதிவாக்குவது நோக்கமன்று. ஏன் இப்படியெல்லாம் மனிதர்கள் கொடூரமாகக் குழந்தைகளை வதைக்கின்றனர் என்ற மனநிலையின் வெளிப்பாடுதான் நாவலாகியுள்ளது. குழந்தைத் தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டு எவ்வளவோ ஆண்டுகள் கடந்த பின்னரும், சமூகச் சூழலில் மாற்றம் ஏற்படாத நிலை குறித்த பெருமாள் முருகனின்  ஆதங்கம்தான்  நாவலுக்கான மூலமாக உள்ளது.

இந்திய அளவில் அரசியல் ரீதியில் அடுத்தடுத்துப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும், கிராமத்தில் நிலத்தை நம்பி வாழும் சிறு விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை, பொருளாதார ரீதியில் சிக்கலாக உள்ளது. அரசாங்கம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தராத சூழலில், நிலத்தை நம்பி வாழும் சிறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை துயரமானது.

அதே வேளையில் விவசாயத்தைச் சார்ந்து கூலிக்காக வாழ்கின்றவர்களின் நிலை இன்னும் பரிதாபகரமானது. இத்தகு நிலையில் யாரையாவது சுரண்டி வாழ வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ள கவுண்டர்களின் தேவைக்குச் சக்கிலியச் சிறுவர்கள் பலியாக்கப் படுகின்றனர்.

வயிறார உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கைக்காகத் தங்களுடைய குழந்தைப் பருவத்தைத் தொலைத்த சிறுவர்கள் எதிர்கொள்கின்ற துயரங்களைப் பதிவாக்கியுள்ள  கூளமாதாரி நாவலில் இனவரைவியல் கூறுகள் பதிவாகியுள்ளன. கொங்கு வட்டாரக் கிராமப் புறங்களில் ஆடு மேய்க்கும் சிறுவர் சிறுமியரின் வாழ்க்கை பற்றிய விசாரணை எனவும் நாவலை வாசிக்கலாம்.

வளமான ஆறு எதுவும் பாயாத வானம் பார்த்த பூமியான கொங்குப் பிரதேசத்தில், சிறிய நில உடமை யாளர்கள் கடுமையாக உழைத்து விவசாயம் செய் கின்றனர். கவுண்டர் சாதியினருக்குத்தான் பெரும்பாலும் நிலம் சொந்தமாக உள்ளது. அவர்களுடைய நிலத்தில் விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றவர்கள் தெலுங்கு மொழி பேசும் அருந்ததியினர் எனப்படும் சக்கிலியர் சாதியினர் ஆவர். ஆண்டு முழுக்க உழைத்தாலும் பொருளியல் ரீதியில் வளமற்ற வாழ்க்கை வாழும் சக்கிலியர்கள், ஆறு வயதான குழந்தைகளையும் ஆடு மேய்க்கக் கவுண்டர் வீடுகளுக்கு அனுப்புகின்றனர்.. மாட்டுத் தொழுவத்தில் தங்கும் சிறுவர்கள், மாட்டுச் சாணத்தைக் கூட்டித் தள்ளுவதுடன், வயிற்றுக்குப் போதாத கூழைக் குடித்துவிட்டு, மேய்ச்சலுக்கு ஆடுகளைக் காடுகளை நோக்கி விரட்டுகின்றனர்.

ஆண்டுக்கு இவ்வளவு எனப் பேரம் பேசித் தங்கள் பிள்ளைகளை மாடு மேய்க்க அனுப்பும் பெற்றோர் களுக்கு வறுமை ஒருபுறம் எனில், பிள்ளைகள்மீது அக்கறையற்ற தன்மை இன்னொருபுறம் உள்ளது. குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற விருப்பமற்றுக் கவுண்டரிடமிருந்து பணம் வாங்கிக் குடித்துத் திரியும் தந்தையரை என்னவென்று சொல்ல?  பள்ளிக்குச் செல்லும் வயதில் சிறுவன் இருபது அல்லது முப்பது ஆடுகளை அத்துவானக் காட்டில், மேய்ப்பது சிரமமானது. பயிர் அறுவடை செய்யப்பட்ட பின்னர் தரிசாகக் கிடக்கும் நிலத்திலும், அதையட்டி விரியும் வறண்ட பூமியில் தினமும் ஆடுகளைக் கவனத்துடன் மேய்க்க வேண்டியுள்ளது.

குத்துச் செடிகள், மரங்கள், பறவைகள் எனச் சிறுவர்கள் தங்களுக்கான உலகினைக் கட்டமைத்துக் கொள்கின்றனர். கொதிக்கும் வெயில், அனல் காற்று, வெக்கை, புழுதி என நாளும் வாடி வதங்கும் சிறுவர்களுக்கு, ‘நாளை மற்றுமொரு நாளை தான்’. திடீரென வீசும் சூறைக்காற்று, மழைக்குக்கூட ஒதுங்க இடமற்ற நிலப்பரப்பில் ஆடுகளை மேய்ப்பதில் எப்பொழுதும் எச்சரிக்கை தேவை.

கிழிந்த உடை, சிக்குப் பிடித்த தலைமுடி குளிக்காத உடல், கோவணம் என ஆடுகளின் பின்னால் திரிகின்ற சிறுவர் சிறுமியரின் வயிறுகள் எப்பொழுதும் நிறை யாமல் உள்ளன. என்றாலும் ஊருக்கு வெளியே விரியும் நிலப்பரப்பில் சிறுவர்கள் தங்களுக்கான உலகினை வடிவமைத்துக்கொண்டு விசித்திரக் குள்ளர்கள் போல அலைந்து திரிகின்றனர்.  மேய்கின்ற ஆடுகளின்மீது கண் வைத்துக்கொண்டே இயற்கையின் ரகசியங்களை எளிமையாகக் கடந்து செல்கின்றனர். சலிப்பும் அலுப்பும் நிரம்பிய மேய்ச்சல் வேலையினூடாகச் சக சிறுவர் சிறுமியருடன் விளையாட்டுகளில் ஈடுபடு கின்றனர். பனம் பழத்தினைச் சுட்டுச் சாப்பிடுதல், குட்டையில் மீன் பிடித்துச் சுட்டுத் தின்னுதல், காடை பறவையின் முட்டைகளை எடுத்துவந்து பொறித்துச் சாப்பிடுதல் எனச் சிறுவர்கள் பசித்திருக்கும் வயிற்றினை நிரப்ப முயலுகின்றனர்.

ஒருபோதும் நிரம்பிடாத பசித்த வயிறு என்பது வறுமையின் வெளிப்பாடு. சிறுவர்களின் வயிற்றுக்குப் போதுமான உணவுகூட அளிக்காத ஆடுகளின் உரிமையாளர்கள், அவர்களைக் கொத்தடிமை யாக நடத்துகின்றனர். வயிற்றுப் பசியினால் தேங்காய் பறித்த சிறுவனான கூளையனுக்குத் தரப்பட்ட தண்டனை கொடூரமானது. கிணற்றுக்குள் தலைகீழாகக் கூளையனைத் தொங்கவிடும் கவுண்டரின் சித்ரவதை செயல், குழந்தையின் உடலில்மீது நிகழ்த்தப்படும் அதிகபட்ச வன்முறையாகும்.

சிறிய அத்துமீறலுக்குக் கூட உடல்களை அடக்கியடுக்கும் செயலானது, அதிகாரத்தைக் கட்டமைப்பதாகும்.  சாதிய அடுக்கில் உயர் நிலையில் இருப்பதாக நம்புகின்ற மேலாதிக்க சாதியினரான கவுண்டர்கள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த சக்கிலியர் சிறுவர்களை அடக்கியடுக்குவதில் சநாதனம் நுட்பமாக வினையாற்றுகின்றது.

இளமையிலே வறுமை, சாதிய இழிவினைக் குழந்தைகள் மீது திணிக்கும் கொடூரமான சமூக அமைப்பு பற்றிய சித்திரிப்பு நாவலில் ஆழமாகப் பதிவாகியுள்ளது. குழந்தைகளின் இயற்கையான வேடிக்கையும் விளை யாட்டும் நிரம்பிய கொண்டாட்டமான உலகினை முளையிலே கிள்ளி எறிந்து, துயர வாழ்க்கை வாழ வேண்டிய நெருக்கடி பற்றிய பேச்சு முக்கியமானது.  அன்பும் ஆதரவும் காட்டாத சூழலில் வாழ்ந்திட நேரிடுகின்ற குழந்தைகளின் அவலம் அளவற்றது. குழந்தைப் பருவத்தினைப் பறித்துவிட்டு, ஆடுகளின் பின்னால் சிறுவர்களைத் துரத்திவிட்ட சூழல் குறித்த கேள்வியை  நாவல் எழுப்புகின்றது.

ஆடு மேய்க்கின்ற  சிறுவர்கள் ஆடுகளை மேய்க்கின்றபோது ஒவ்வொரு கணமும் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். ஆடு காணாமல் போய் விடலாம். ஆடுகள் சோளத்தட்டையைத் தின்று வயிறு ஊதி மந்தமாகிச் சாக நேரிடலாம். கவுண்டர், கவுண்டச்சி ஏவும் ஒவ்வொரு வேலையையும் கட்டாயம் செய்ய வேண்டிய நிலை. இளவயதிற்குரிய குறும்புகளை ஒதுக்கிவிட்டு, தன்னைப் பெரிய மனிதனாகப் பாவித்து  ஆட்டு மந்தையை வழி நடத்த வேண்டிய சூழலில், சிறுவர்களின் நிலை சிக்கலானது.

எனவேதான் ஆடு மேய்க்கும் சிறுவனான கூளையன் வயதுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகின்றான். மேய்ச்சலின் போது பிசிறு தட்டினால், கவுண்டரின் சித்ரவதை அல்லது கொடிய தண்டனை காத்திருக்கின்றது என்பது அவனுக்குத் தெரியும். இன்னொருபுறம் சாதியரீதியில் தீண்டத்தாகதவர்களாகத் தங்களை ஒதுக்கிக் கேவல மாகக் கருதும் சமூக அமைப்பின் விதிகளுக்கும் தண்டனைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவலத்தினை மௌனமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

கிராமியப் புனைவில் அமானுஷ்ய ஆற்றலுக்கும் மனிதர்களுக்குமான உறவு நுட்பமானது. கிராமத்துச் சந்துகளிலும், ஊரினைச் சுற்றியுள்ள வெளியிலும் எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன என நம்பும் கிராமத்தினரின் மனதில் பயம் பொதிந்துள்ளது. மரங்கள், நீர்நிலைகள், தோப்புகள், வயல்வெளி, தெருமுக்குகள் எனச் சகல இடங்களிலும் துடியான தெய்வங்கள், முனிகள், பேய்கள் உறைந்துள்ளன. வாய்மொழிக் கதைகள் மூலமாகத் தலைமுறைகளாக வாழ்ந்து வரும் அமானுஷ்ய சக்திகள் ஒவ்வொரு வருக்குள்ளும் ஆழமாக ஊடுருவியுள்ளன, எல்லாம் ஒழுங்காக நடைபெற வேண்டியது அவசியம் இல்லா விடில் முனிகளின் கோபத்திற்கு ஆளாகி உயிரை இழக்க நேரிடலாம்.

இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியே வருகையில், அவனது நனவிலி மனதில் புனைந்துள்ள கதைகள் பயத்தைத் தந்து கொண்டேயிருக்கும். கடவுள் நம்பிக்கையைவிடக் கோபம் கொண்ட துடியான தெய்வங்கள் ஆளுகை செலுத்தும் கிராம வெளியினில் சிறுவர்கள் ஒற்றை யாகவும் இருக்க நேரிடுகின்றது. ஊருக்கு வெளியே பொட்டல் காட்டில் இரவு வேளையில் வயலில் போடப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளுக்குக் காவலாகக் கூளையன் இருக்கின்றான்.

பேய்களும் முனிகளும் புனைகதைகளாக நிரம்பிய பகுதியில், இரவினில் சிறுவன் காவல் இருப்பது ஒருவகையில் சித்ரவதைதான். வாமுனி வேட்டைக்குப் போற வழியை அடைத்துப் பட்டி போட்டதற்காக ஆத்திரமடைகையில், கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடான வீரன் முன் வந்து கூளையனைக் காப்பாற்று கின்றது. எது புனைவு எது நிஜம் என்ற எல்லை தகர்ந்துபோய் கதையின் தளம் வேறு தளத்திற்குள் நுழைகின்றது, துடியான தெய்வம் பற்றிய பயமே கிடாய் வீரனையும் தெய்வத்தின் அங்கமாக மாற்றுகின்றது. மாபெரும் ஆற்றல் மிக்கதாக நம்பப்படும் வீரன், முனியப்பனுக்காகப் பலியிடப்பட்டபோது, கூளை யனுக்கு ஏற்படும் மனஉணர்வுகள் அன்பில் தோய்ந் தவை. மந்தையில் மேய்ந்த வீரன் என்ற உயிரினம்மீது கூளையனுக்கு ஏற்படும் வாஞ்சை அளவற்றது.

இரவினில் திடீரென வீசத் தொடங்குகின்ற காற்றின் உக்கிரத்தின் முன்னர், பட்டியில் காவலுக்குப் படுத்திருக்கும் கூளையனும் செல்வமும் பயந்து நடுங்கு கின்றனர். மின்னலுடன் கொட்டுகின்ற மழையினால் பட்டியின் படல்கள் காற்றில் பறக்கின்றன. ஆடுகளைக் காப்பாற்ற சிறுவர்கள் படுகின்ற பாடுகள் வலி மிக்கவை. கும்மிருட்டில் இயற்கையின் சீற்றத்தினுக்கு எதிராகக் கூளையனின் மனத்துணிவும் செயல்களும் குறிப்பிடத் தக்கன. எந்தச் சூழலிலும் ஆடுகளைக் காப்பாற்ற வேண்டியது கூளையனைப் போன்ற ஆடு மேய்க்கும் சிறுவர்களின் முதன்மையான கடமை.

கொஞ்சம் கவனம் பிசகினாலும் எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடு மிக்க சூழலில்,  விழிப்புணர்வு என்பது, சிறுவர்களிடம் வயதுக்கு மீறிய அளவில் உள்ளது. இயற்கையுடனான போராட்ட வாழ்க்கையினூடே சிறுவர்கள் விளையாட்டு, மீன் பிடித்தல், பனங்கிழங்கு விவசாயம், வேட்டை, கிணற்றுக் குளியல் எனத் தங்களுக்கான உலகினை உருவாக்கிக் கொள்கின்றனர்.  தங்களிடம் இருப்பதை நண்பர்களுடன் பகிர்ந்து உண்டாலும், அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்கின்றனர். நெருக்கடியான வேலைப் பளுவையும் மீறிச் சிறுவர்களின் அன்றாட உலகம் ஒருவகையில் கொண்டாட்டமானது தான்.

பண்ணையத்துக்கு இருக்கின்ற கவுண்டரின் வீட்டிலும் சிறுவர்கள் மறுப்பு எதுவும் சொல்லாமல் வேலை செய்ய வேண்டும். சிறிய முணுமுணுப்புக்கூட இல்லாமல் இயந்திரம் போல வேலை செய்யாவிடில், பெரிய தண்டனை காத்திருக்கின்றது. பெரிய கவுண்டர் கீழே விழுந்து நடக்க முடியாதபோது அவரை மாட்டுத் தொழுவத்தில் கொண்டு வந்து போடுகின்றனர். அவருடைய மூன்று மகன்களும் மருமகள்களும் நடக்க இயலாத கிழவரைப் பார்ப்பதுகூட இல்லை. கிழவர் மோண்ட மூத்திரத்தையும் பேண்ட மலத்தையும் தூக்கிக் கொண்டுபோய் கொட்டுகின்ற வேலையை வளரிளம் பருவத்திலுள்ள நெடும்பன் செய்கிறான்.

சொந்த மகன் களே அருவருப்படைந்து கிழவரை ஒதுக்கி வைக்கும் போது, நெடும்பன் வேறு வழியிலாமல் வெறுப்புடன் செய்கிறான். கிழவருக்கான அருவருப்புத்தரும் வேலை களைச் செய்துவிட்டு நெடும்பன் ஆடுகளை மேய்ப் பதற்காக ஓட்டிச் செல்லுகிறான்.  வறுமையும் இல்லாமையையும்  அலைக்கழிக்கும் துயரமான வாழ்க்கையிலிருந்து விடுவிப்பு நிகழலாம் என்ற எண்ணம் சிறிதளவுகூட இல்லாத சிறுவர்கள் பற்றிப் புனைகதையின் வழியே பெருமாள்முருகன் சித்திரிப்பது மனதை உலுக்குகின்றது.

அஞ்சாறு குழந்தைகளை அடுத்தடுத்துப் பெற்றுக் கொண்டு வாழும் சக்கிலியர் சாதியினர்,  தங்களுடைய பெண் குழந்தைகளையும் ஆடு மேய்க்கக் கவுண்டர் வீடுகளுக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  ஆடுகளை மேய்க்கும் சிறுமிகளின் கதைகளும் துயரம் தோய்ந்தவையாக உள்ளன. கவுண்டரின் வீட்டில் வேலைகளைச் செய்துவிட்டுக் கவுண்டச்சியின் கைக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆடுகளை மேய்ப் பதற்காக விரட்டிவரும் செவுடிக்கு ஓயாத வேலை. எப்பொழுதும் இடுப்பில் உட்கார்ந்துகொண்டு கீழே இறங்க மறுத்து அழுது அடம் பிடிக்கும் குழந்தையைப் பராமரிப்பது அவளுடைய வயசுக்கு மீறிய செயல்.

ஏழெட்டு வயதான பெண் குழந்தைகூட ஆடுகளை மேய்த்துக்கொண்டு அத்துவானக் காட்டில் அலைந்து திரிகின்றது. வயதுக்கு வந்த சிறுமியை ஆடு மேய்க்க அனுப்பாமல், மில் வேலைக்கு அனுப்புகின்றனர். பொட்டல்காட்டில் சிறுவர்களுக்குச் சமமாகத் துணிச்சலுடன் ஆடுகளை மேய்ப்பதில் பெண் எனப் பால் பேதம் எதுவுமில்லை. சிறுவர்களுக்கு இணையாகக் கிணற்றில் குதிப்பது என எல்லாச் செயல்களிலும் சிறுமிகள் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றனர்       கவுண்டர் வீட்டுச் சிறுவர்கள்  செல்வம், மணி.  போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். சக்கிலியர் சாதிச் சிறுவர்களின் பெயர்கள் கூளையன், நெடும்பி, மொண்டி, பொட்டி எனவும் சிறுமிகளின் பெயர்கள் வவுறி, செவிடி எனவும் உள்ளன. பெயரில் கூட சாதிய ஆதிக்கத்தின் அடையாளம் நுட்பமாகப் பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு குழந்தையும் பூமியில் பிறக்கும்போது வளமான எதிர்காலம் குறித்த கனவுகளுடன்தான் பிறக்கின்றன. சாதி, மதம் பால், மொழி எனப் பாகு படுத்தும் உலகில் ஆறேழு வயதில் அடியெடுத்து வைக்கும்போது சில குழந்தைகள் எதிர்கொள்ளும் உலகம் கசப்பானதாக உள்ளது. தீண்டத்தகாத குழந்தைகள் எனப் பிஞ்சுப் பருவத்திலேயே ஒதுக்கப்படுவதுடன், அடுத்தவேளை உணவிற்காகக் கடுமையாக உழைக்க வேண்டுமென நிர்பந்தப்படுத்தப்படும் சமூகக் கொடு மையை முன்வைத்துப் பெருமாள்முருகன் எழுதியுள்ள ‘கூளமாதாரி’ நாவல், சாதிய ஒடுக்குமுறையையும் பொருளியல் சுரண்டலையும் இனவரைவியல் தன்மை யுடன் பதிவாக்கியுள்ளது.

(சாகித்ய அகாதெமியும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் 24-10-13 அன்று தஞ்சையில் நடத்திய தமிழ் நாவல் இலக்கியப் போக்குகள் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம்)

Pin It