இந்தியாவில் ஆரியர், திராவிடர் என்ற வாதம் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோது, திராவிடர் களும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த வர்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.  அதே போல் சிந்துவெளி நாகரிகம் திராவிடர்களுடையது என்றும், ஆரியர்களுடையது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இன்றைய அரசியலில் முன் வைக்கப்படும் சில வரலாற்று செய்திகள் பற்றி உண்மையை அறிந்துகொள்ள பழைய வரலாற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்மொழி திராவிடமொழிக் குடும்பத்தை சேர்ந்தது என்று கால்டுவெல் 1857-ல் முதன் முதலில் அறிவித்த காலத்திலிருந்தும், மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் ஆகியோர் சமஸ்கிருத மொழியின் பழமை பற்றி அறிவித்தபின்பும், இந்தியாவின் பூர்வீகக்குடிகள் ஆரியரா? திராவிடரா? என்ற வாதங்கள் முனைப்பு பெற்றன. The Tamils Eighteen Hundred Years Ago (1904) என்ற நூலில் கனகசபை பிள்ளை, தமிழர்களின் பூர்வீகம் திபேத்திய பீடபூமி ஆகும் என்று கூறியுள்ளார்.(The Primitive Home of the Tamil Immigrants must have been in the Thibetian Plateau, Page 51), பின்னர் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் (1917) என்ற நூலில் சரித்திர காலம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாக உள்ள லெமூரியா நாடு தமிழ்நாடாய் இருந்ததென்றும், அதன்பின் உண்டான பிரளயங் களில் அந்நாடு கொஞ்சம் கொஞ்சமாக கடலால் விழுங்கப்பட்டது என்றும், மேலும் தமிழ்நாட்டி லிருந்து மெசபடோமியா, பாபிலோன், கல்தேயா, ஆசியா, முதலிய இடங்களுக்குப் போனார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். (மேற்கோள் தமிழரின் உதயத்திற்கடுத்த சித்தாந்தங்கள் (1954) (பக்கம் 28). தமிழர் (திராவிடர்) மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தனர் என்ற கருத்து அறிஞர் சிலரால் முன்வைக்கப்பட்டது. Christopher Von Furor Haimendorf என்பவர் “When, How and from where did the Dravidians come to India?, (The Indo - Asian Culture) (1954) மற்றும் New aspects of the Dravidian Problem” (Tamil Culture, Vol- II, No.2, 1953) கட்டுரைகளில் திராவிடர்கள் (தமிழர்) மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று கூறியுள்ளார். இதனை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் தனது தென்னிந்திய வரலாறு (A History of South India) நூலில் மேற்கோளாகத் தந்து அவர் கருத்தை ஆதரித்து எழுதியுள்ளார். (பக்கம் 165).

மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழர்கள் வெளியில் இருந்து தற்பொழுது வசிக்கும் தமிழகத்திற்கு வந்து குடியேறியவர்கள் என்பது உறுதியாகிறது.

தமிழர்கள் கடல் கொண்ட லெமூரியா கண்டத்திலிருந்து வந்தவர்களா? அல்லது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்தவர்களா? என்பது முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

Dravidian India (1925) என்ற நூல் டி.ஆர்.சேஷை யங்கார் என்பவரால் வெளியிடப்பட்டது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழர் இந்தியா (1993) என்ற தலைப்பில் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலில் இந்துமாக் கடலில் இருந்த கண்டம் லெமூரியா என அழைக்கப் பெற்றது. இந்தக் கண்டம் கடலில் மூழ்கியது. மடகாஸ்கர், மலேயா தீபகற்பம், தென்னிந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றை லெமூரியா கண்டம் இணைத்து இருந்தது. சிலேடர், திராவிடர்கள் லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்தனர் என்று சுட்டுகிறார். தமிழ் மரபுகளும் கடல் கோள் களால் தெற்குப் பகுதி அழிந்ததையும், அங்கு வாழ்ந்த தமிழர்கள் வடக்குப் பகுதியில் குடியேறியதையும் சுட்டுகின்றன. நிலவியலாளர் கருத்தும் இக்கருத்தை வலியுறுத்துவதாக உள்ளன. எனவே எங்கோ தொலை தூரத்தில் இருந்து தமிழர்கள் நெடும் பயணம் செய்து தென்னிந்தியாவில் குடியேறி நிலைத்தனர் எனும் கருத்து சரியற்றதாகிறது (பக்கம் 44) என்று தெளிவுபடக் கூறியுள்ளார். மேலும் அவர் தென்னிந்தியா நாகரிகத்தின் ஆதி வீடாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் கருதுவது அடிப்படை காரணங்களை உட்கொண்ட முடிவு. டாக்டர் சாட்டர்ஜி கருதுவது வருமாறு. சுமேரியர் தம் தோற்றம் பற்றிய ஹால் கொள்கை உண்மை யானால் இந்தியாவில் தோன்றிய முதல் நாகரிகம் திராவிடர்களோடு பழம் திராவிடர்களோடு தொடர்பு கொண்டிருந்தது. பின்னர் மெசபடோ மியாவிற்கும் கொண்டு செல்லப் பெற்றது. பாபி லோனியாவிற்கும் ஏனைய பழைய நாகரிகங் களுக்கும் அதுவே மூலமாக இருந்தது. இந்த நாகரிகமே நவீன நாகரிகத்திற்கு அடிப்படையாக அமைந்தது (பக்கம் 68) என்று குறிப்பிட்டு தமிழர் கடல் கொண்ட லெமூரியாவில் தோன்றி இன்றைய தமிழகத்தில் தங்கினர் என்று நிறுவியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியராக விளங்கிய வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர் 1940-ஆம் ஆண்டு நவம்பர் 29, 30 தேதிகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சங்கர பார்வதி அறக்கட்டளை சார்பில் நிகழ்த்திய உரை 1947-ல் Origin and Spread of the Tamils என்று நூல் வடிவம் பெற்றது. இந்த ஆங்கில நூல் 1991-ல் தமிழில் புலவர் கா.கோவிந்தன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த நூலின் முன்னுரையில் பேராசிரியர் வி.ஆர்.ஆர். தீட்சிதர் “திராவிடர் களின் தோற்றம் அவர்களின் பண்பாடு ஆகியன குறித்த மேநாடு மற்றும் இந்திய நாட்டு அறிஞர் களிடையே உறுதிபட நிலவும் கருத்துக்களை ஆய்வதற்கும், திராவிடப் பண்பாடு எனப் பொதுவாக உணரப்படுவதும், தமக்குத் தாமே தம்மளவிலான அப்பண்பாட்டை உருவாக்கிய தமிழர் அம்மண்ணுக்கே உரிய தொல் பழங்குடியினர் என்பதை உணர்த்துவதற்கும், ஒரு பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தமிழர்கள் தங்கள் பண்பாட்டை மேற்கைப் போலவே கிழக்கிலும் உள்ள தங்களின் பின்வரும் கால்வழியினர் கையில் கொடுத்தனர். இவ்வகையில் தொல் பழங்காலத் திலும் இக்காலத்திலும் அவர்கள் பங்கு தமக்கே உரிய தனித்தன்மை வாய்ந்தது. கருத்தை கவரத் தக்கது. உள்ளத்தில் ஆழ்ந்து பதியத்தக்கது” என்று தமது சொற்பொழிவின் முக்கியத்துவத்தை சுருக்க மாகக் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் வி.ஆர்.ராமச் சந்திர தீட்சிதர் தொடங்கி வைத்த இந்த வரலாற்று பூர்வமான ஆழமான ஆராய்ச்சியை மறுத்து இன்று வரை வேறு யாரும் எழுதவில்லை என்றே சொல்லலாம். இந்த நூலுக்காக தேவநேயப் பாவாணர் அவர்கள் பேராசிரியர் வி.ஆர்.ஆர். தீட்சிதர் அவர்களை பெரிதும் போற்றினார் என்று நூல் பதிப்புரையில் (தமிழ்) குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் தீட்சிதர் “திராவிடர் இனம் மத்திய தரைக் கடல் நாகரிகத்தைச் சேர்ந்தது என்ற கொள்கை இன்று வரை மறுக்கப்படாமலே இருப்பதால் அது பெரும்பாலும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகிவிட்டது என்பனவே. அக்கருத்தை மறுக்க வேண்டிய கடும் பொறுப்பு என் மேல் விழுந்தது” (பக்கம் 28) என்று தெளிவுபடக் கூறி யுள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் மிஸிசிபி ஆறு கடலோடு கலக்கும் இடத்து நகராம் மெம்பிஸ் (Memphis) என்ற கடற்கரை நகரில் ஓர் இந்திய குடியிருப்பு இருந்ததற்கான அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு வழங்கும் ‘ஊர்’ என்ற சொல் தூய தமிழ்ப் பெயர் போலவே ஒலிக்கப் படுகிறது (பக்கம் 15).

திங்கள், வழிபாடு திராவிடர்களிடமிருந்து மேற்கே சென்றது என்பதனை பேராசிரியர் தீட்சிதர் தென்னிந்தியாவில் நிலவும் பிறிதொரு தொல் பழங்கால வழிபாட்டு நெறி சிற்றாசியாவிலும் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியிலும் பெரு மளவில் இருக்கும் திங்களை வழிபடுதலாம், பாபி லோனிய நாகரிகத்தில் ஞாயிற்றைக் காட்டிலும் திங்களுக்கே சிறப்பான இடம் அளிக்கப்பட்டது. இன்று அழிவுறாமல் நம்மோடு நிலை கொண் டிருக்கும் இவ்வழிபாட்டு நெறிகளுக்கெல்லாம் தென்னிந்தியாதான் தாயகம் (பக்கம் 96 - 97) என்று பண்பாட்டுக் கூறுகளை ஆதாரம் காட்டி விளக்கு கின்றார்.

தமிழர்கள் மேற்கே சென்றதைப் போல கிழக்கேயும் பரவியுள்ளனர் என்பதை தமிழர்களின் வளைதடி (Boomerang) என்ற கருவி ஆஸ்திரேலி யாவில் பயன்படுத்தப்படுவதைக் காட்டி பேராசிரியர் தீட்சிதர் விளக்குகிறார். தொடக்க கால படைக் கலமாகி, தானே தாக்கித் திரும்பும் ஆயுதம் வளைதடி (Boomerang). அதே வழியில் தொடக்க காலத்தில் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பானதும் தென்னிந்திய பழைய கடல் மாலுமிகளால் கொண்டு வரப்பட்டதுமாம் (பக்கம் 78) என்று குறிப்பிடு கிறார். ஆய்வாளர்கள், Hexley, E.Thurston ஆகியோரின் கருத்துக்களை பேராசிரியர் தீட்சிதர் மேற் கோளாக தந்து வளைதடி தொடர்வை விளக்குகிறார்.

மேலும் பேராசிரியர் தீட்சிதர் மலேயா நாட்டுக் கப்பல்களுக்கு இடப்பட்டிருக்கும் பெயர் தமிழ்ச் சொல்லாகிய “கப்பல்” என்பதாம் என்பது நனிமிக வியத்தற்கு உரியது (பக்கம் 117) என்று குறிப்பிடுகிறார். தென்னகத்திற்கும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பை சிந்துவெளியில் பயன்படுத்தப்பட்ட பொன், கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து பெற்ற ஒளிமிகச் சிறந்தது என்று ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்யப் பட்டுள்ளது. (பக்கம் 89) என்று குறிப்பிடுகிறார். மேலும் நம் தென்னிந்திய இளமகளிரும், வயது முதிர்ந்த மகளிரும் இன்னும் அணிந்து கொள்ளும் கால் சிலம்பு சிந்து வெளியில் கண்டு எடுக்கப்பட்ட களிமண்ணால் ஆன சிறு உருவச் சிலை மற்றும் சிறு வெண்கலச் சிலைகளில் சிலம்பு அணியப் பட்டதை அறிகிறோம், (பக்கம் 91) என்றும் மேலும் கடவுள் வழிபாட்டாளராகிய மகளிரை அக் கடவுளுக்கே திருமணம் செய்து வைக்கும் தென்னிந்தி யாவுக்கே உரிய வழக்கம் மெசபடோமியாவில் பெரு வழக்காம் (பக்கம் 93) என்றும் குறிப்பிடு கிறார். இதுபோன்று பல்வேறு பண்பாட்டு தொடர்புகளை சுட்டிக்காட்டி தமிழர்களின் ஆதி முன்னோர் தெற்கேயிருந்து வடக்கே வடமேற்கே மத்திய தரைக்கடல் வரை சென்று குடியேறினர் என்று நிறுவுகிறார்.

டாக்டர் தா.வி.தேவநேசன் பிள்ளை என்பவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதியது தமிழரின் உதயத்திற்கடுத்த சித்தாந்தங்கள் Deductions on the Origin of the Tamils (1955) என்ற நூல் (தமிழில் தமிழ் சைப தீபிகை இதழில் 1949 முதல் 1952 வரை தொடராக வெளிவந்தது) தேவநேசன் பிளளை விலங்கியல் மற்றும் கடல் வாழ் உயிரியல் துறையின் சிறந்த அறிஞர் லண்டன் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்று மீன் வள, கடல் வாழ் உயிரியல் துறை (சென்னை)யில் உதவி இயக்குநராகப் பணி செய்தவர். அவர் சங்கு தமிழர் களின் சிறப்பான பொருள் என்பதோடு சங்கு தமிழ் நாட்டுக்கே உரியது. வலம்புரி சங்கும், இடம்புரி சங்கும் தென்னிந்தியாவைச் சார்ந்த மன்னார் குடாக் கடலில் விளைகின்றனவே அல்லாமல் வேறெங்கனும் அகப்படுவதில்லை. மஞ்சு தருவில் (மொகஞ்சதாரோ) அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஓர் சிலை இவண் கருதற்பாற்று. அஃதில் கோணக் கொண்டை அமைத்து இடது கரம் நிறைய (அதாவது தோளடியிலிருந்து கணுக்கை வரை) சங்கு வளைகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். இப்பழக்கம் ஆதித் தமிழருக்குள் பொதுவாக நடைபெற்று வந்ததென்பது பெறப்படும். ஆரியர் குழாம். 2000 கி.மு.வுக்கு முன் ஆபரணங்களை அணிந்ததாக ஆராய்ச்சியாளர் நுவலவில்லை (பக்கம் 4-5). இந்திய பெருங்கடல் பகுதியில்

முன்பு குமரிக் கண்டம் என்ற பெருநிலப் பரப்பு இருந்து பின் நீரில் மூழ்கியது என்று குறிப்பிடுகிறார் (பக்கம் 6-9), இவரது மேற்கண்ட நூல் ஆய்வாளர்களால் கண்டு கொண்டதாகத் தெரிய வில்லை.

வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி யார் பேராசிரியர் தீட்சிதர் ஆராய்ச்சி செய்து வெளியிட்ட நூலைக் கண்டுகொண்டதாகத் தெரிய வில்லை. பேராசிரியர் தீட்சிதர் அவர்களின் ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்தும் சோவியத் ரஷிய கடல் ஆய்வு நூல் The Riddles of Three Oceans (1974) Alexander Kondratov (1974) Alexander Kondratov என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் இன்றைய இந்திய பெருங்கடல் பகுதி முன்பு நிலமாக இருந்தது என்றும் அது Gondwana land என்ற கண்டமாக அறியப்பட்டு தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா பகுதிகளை உள்ளடக்கிய பூமியின் தென் கோளப் பகுதியாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்று குறிப்பிடுகிறது (பக்கம் 123). தமிழர்களின் தாயகம் பற்றி அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்து இருந்தது என்பதை “ Greatest controversy, however, centers round the Tamilsa Dravidian people with a distinctive culture. Scholars have named various countries and even continents as the original home of the Tamils” (Page 122): : என்று குறிப்பிடுகிறார். Haeckel என்ற அறிஞர் மனித மூதாதையர் ஆன பித்திகாரந்தோர பஸ் (Pithecanthropus) என்ற குரங்கு மனிதன் லெமூரியா கண்டத்தில் வசித்து வந்து அங்கிருந்து இந்தியா விற்கும் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கும் மேற்கே ஆப்பிரிக்காவுக்குச் சென்றனர், (பக்கம் 128) என்று மேற்காட்டுகிறார். சோவியத் ரஷிய ஆய்வாளர் Y.Reshetov என்பவர் The nature of the Earth and origin of man என்ற நூலில் மனிதத் தோற்றம் நிகழ்ந்ததில் லெமூரியா மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது (முன்நூல்) (பக்கம் 129) என்று குறிப்பிடுகிறார்.

தமிழர்கள் ஆரியர் வருகைக்கு முன்பிருந்தே அங்கு வசித்து வந்துள்ளனர். (They lived there long before the belligerent nomad tribes of Aryans) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திராவிட மொழி பலுசிஸ்தான், ஈரானின் தென்பகுதி பகுதிகளில் பேசப்பட்டு வந்துள்ளது. யூபிரிடிஸ், டைகிரிஸ் நதிப் பகுதிகளில் சுமேரியர்களுக்கு முன்பு முதன் முதலில் சென்று தங்கியவர்கள் திராவிடர் ஆவர். (More over, the facts show that several Thousand yearas ago the Dravidian languages were also spoken in Baluchisthan and Southern Iran, the Dravidian may have been the first to settle in the Tigris and Euphrates area, Preceding the Sumerians, whose civilisation, is regardedas the oldest in the world) (page 132) என்று தமிழர்கள் தோன்றிப் பரவிய விபரத்தை விஞ்ஞான பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளார்.

மெசபடோமியாவில் “ஊர்” என்ற பெயருள்ள பல இடங்கள் உள்ளன. உருக், நிப்பூர், மற்றும் ஊர். இவை திராவிட சொல் மூலத்தை கொண்டு உள்ளன.  (In the Dravidian languages the word “Ur”means settlement, town, or community. The oldest cities in Mesopotamia also have words with “Ur” in the root, such as Uruk, Nippur and a city that is actually called “Ur ” (Page 138).

மேலும் பெர்ஷிய வளைகுடா பகுதியில் உள்ள பக்ரைன் தீவுகளில் ஏற்பட்ட நாகரிகம் சுமேரியன் மற்றும் பழைய இந்திய நாகரிகம் ஆகும் (பக்கம் 139) என்று குறிப்பிடு கிறார்.

மேலும் ஊர் இடத்தில் உள்ள நினைவிடத்தில் குரங்கு சிலை உள்ளது. அது மொகஞ்சதாரோ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குரங்கை ஒத்துள்ளது. இந்தக் குரங்கு அனுமான் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (பக்கம் 139) என்று குறிப்பிடுகிறார்.

ஈரான் நாட்டின் கிழக்குப் பகுதியில் டைகிரிஸ் நதிக்கு கிழக்கே உள்ள Khuzistan என்ற பகுதி முன்பு ஈழம் ((Elam)) என்று அழைக்கப்பட்டது. அங்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு நாகரிகம் தழைத்தோங்கியது. இந்த நாகரிகம் சுமேரியா மற்றும் பழம் இந்திய நாகரீகத்தை ஒத்துக் காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் என்று கூறுகிறார் (பக்கம் 143). Languages of Ancient Asia Minor நூலின் ஆசிரியர் Dyakonov எலாமைட் (Elamite) மொழிக்கும் திராவிட மொழிக்கும் உள்ள ஒற்றுமையை குறிப்பிட்டு காட்டுகிறார். தமிழ் ‘கெட்டு’ அதே பொருளில் எலாமைட் மொழில் உள்ளது. மேலும் சொற்களை விட மொழி கட்டமைப்பு ஒரே மாதிரியாக உள்ளது. இதற்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடு கிறார். (பக்கம் 144).

இந்தியாவில் மூன்று மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. 1) இந்தோ - ஐரோப்பியா மொழிக் குடும்பம் 2) முண்டா மொழிக் குடும்பம் 3) திராவிட மொழிக் குடும்பம். இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுவோர், மத்திய ஆசியா, சின்ன ஆசியா, கருங்கடல் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் முண்டாமொழி பேசுவோர் கிழக்கு பக்கத்திலிருந்து வந்திருக்கலாம் என்றும், திராவிட மொழி பேசுவோர் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர் என்பதில் மாறுபட்ட கருத்து உள்ளது. மற்ற இருவருக்கும் முன்பு வந்தவர் என்று கருதப்படுகிறது. N.Lahovary தனது  Dravidian Origins and the West என்ற நூலில் திராவிடர் (Caucasian) மொழிக்கும் காகேசிய மொழிக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். ஒரு சிலர் திராவிடர்கள் சுமேரியர், ஈரான், ஈழம், காகேசியன் மலைப் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என் கின்றனர். ஆனால் திராவிட மொழிகள் தெற்கி லிருந்து வடக்கு நோக்கி சென்றுள்ளது என்று குறிப்பிடுகிறார் (பக்கம் 148 - 150).

உலகப் பழம்பெரும் நான்கு நாகரிகங்கள் 1) எகிப்திய 2) உபைடு - சுமேரியன், 3) எலாமைட் 4) திராவிட ஆகியவை தோன்றியது ஒரே இடத்தில் இருந்துதான். லெமூரியா என்பது கடல் ஆய்வு மூலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது அந்தப் பகுதி என்பது உறுதி செய்யப் படுமானால் வரலாறு மறுபடி திரும்பி மாற்றி எழுதப்பட வேண்டும் (பக்கம் 161-162) Is it possible that all four of the earliest Civilizations - the Egyptian, Ubaid - Sumerian, Elamite and Dravidian, originated inone place, in Lemuria? If Oceano graphy confirm theexistence, the Indian ocean, of land that subsideseveralthousand years ago many pages of man’s earliest History will have to be rewritten (Page 161-162).

இதுவரை கண்ட அறிஞர்களின் கருத்துக்களி லிருந்து தமிழரின் தாயகம் மத்திய தரைக் கடல் பகுதி அல்ல. மாறாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடலில் மூழ்கிய லெமூரியா கண்டமே என்று உறுதிபடத் தெரிய வருகிறது.

Pin It