1925-ஆம் ஆண்டு பிறந்த ராஜம் கிருஷ்ணன் மறைந்துவிட்டார். தமிழ் நாவல் உலகில் ஒரு அழுத்தமான, அழியாத இடம் அவருக்கு உண்டு. பெண்களது வாழ்வை மிக நுணுக்கமாக, சரளமான தமிழ் நடையில் சித்திரித்தவர் அவர். அவரது படைப்புகள் பரந்துபட்டவை. ‘பெண் குரல்’ என்ற அவரது முதல் நாவலை ‘கலைமகள்’ நாராயணசாமி அய்யர் பரிசுக்கு உகந்ததாகத் தேர்வு செய்து தமிழ் நாவல் உலகிற்கு ஒரு படைப் பாளியை அறிமுகம் செய்தார். அதன் பின்னர் அவரது எழுதுகோலிற்கு ஓய்வே அவர் கொடுக்க வில்லை. கடைசி ஒரு சில ஆண்டுகள் தவிர மற்ற நேரங்களில் அவர் எழுதிக்கொண்டே இருந்தவர்.

rajam krishnanபடைப்பாளிகளில் பலவகை உண்டு. கற்பனையிலேயே படைப்புகளை உருவாக்கு பவர்கள் ஒரு வகை; மற்றொருவகை படைப்பிலக் கியத்திற்குத் தேவையான விவரங்களைச் சேகரித்து, படைப்பிற்குரிய சூழலில் வாழ்ந்து, பின்னர் நாவலை அல்லது சிறுகதையை எழுதுபவர்கள். இதில் ராஜம் கிருஷ்ணன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அவர் படைத்த ஒவ்வொரு நாவலிற்கும் அவர் பல இடங்களுக்குச் சென்று விவரங்கள் சேகரித்த பின்னரே நாவல் எழுதுவதை வழக்க மாகக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டலாம்.

“தேரோடும் வீதி” என்ற நாவல் ஒன்று உள்ளது. இதனை எழுதியவர் நீல பத்மநாபன். இது தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அங்கதம் ஆகும். இதில் அனேகமாக எல்லா தமிழ் எழுத்தாளர் களையும், ஆய்வாளர்களையும் அவர் கேலி செய் துள்ளார். ரசிக்கவேண்டிய ஒன்று, இந்த நாவலில் ஒரு இடம் வருகிறது. நிறைய தமிழ் எழுத்தாளர்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஒரு பெட்டியில் மூன்று பெண் எழுத்தாளர்கள் மேல் பெர்த்தில் உள்ளனர். கீழே இரு ஆண் எழுத்தாளர்கள் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் கூறுகிறார் “மெதுவாகப் பேசுங்கள். மேலே உள்ள அந்தப் பெண் படைப்பாளி இதைக் கேட்டுவிட்டால் விவரங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடுவார்.” இது ராஜம்கிருஷ்ணனைக் குறிப்பதாக அமைந்துள்ளது. அந்த அளவிற்குக் கள ஆய்வு செய்வதில் அவர் ஈடுபாடு காட்டினார். இது பற்றி அவரே கூறுகிறார். “மண்ணகத்துப் பூந்துளிகள்” என்ற அவரது நாவலுக்கு அவர் மேற்கொண்ட முயற்சி பற்றி அவரே கூறுகிறார்:

“இந்தப் படைப்பை உருவாக்குவதற்கான உண்மைகளை அறிய மதுரை மாவட்டப் பகுதி களில் நான் களப்பணி மேற்கொண்ட போது, பல நண்பர்கள், இளைஞர்கள், பெண்கள் எனக்குத் தகவல் தந்து உதவினார்கள். என்னுடன் பல கிராமங் களுக்கு வந்து அன்புடன் ஊக்கமும் உற்சாகமும் அளித்தனர். இத்தகைய பிரச்சினைகளை அணுகும் பொழுது தீர்வுக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது என் கருத்தாகும். ஏனெனில் அதற்குரிய சமுதாயக் கூறுகள் தோன்றியுள்ளன. இது 1987ம் ஆண்டின் கோடை காலத்தில் கலை இலக்கியப் பெருமன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய முகாமில் கன்னியாகுமரியில் நான் பங்கு கொண்டபோது உறுதியாயிற்று. கன்னியாகுமரி மாவட்ட, ஒரு இளைஞர் குழுவினரின் நிஜ நாடகம் ஒன்றைக் கண்ணுற்றேன். இந்த நாவலின் இறுதியில் நான் சித்திரித்திருக்கும் நிஜ நாடகம் அதிலிருந்து தோன்றிய கருத்தே என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்”

மற்றொரு நிகழ்ச்சி அவர் எழுதிய ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற நூல் பற்றியது. அப்பொழுது நான் ஆழ்வார்குறிச்சியில் இருந் தேன். என் வீட்டிற்கு வருவதாக ராஜம் கிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். என் வீட்டிற்கு வந்து ஒருநாள் தங்கியிருந்தார். பின்னர் அவரைக் கடையத்திற்கு அழைத்துச் சென்றேன். அது பாரதியின் மனைவி செல்லம்மாவின் ஊர்.

அங்கு பாரதியின் மைத்துனி இருந்தார். அவரை சாமியார் பாட்டி என்று அழைப்பார்கள். அங்கு அவரை அழைத்துச் சென்றேன். சாமியார் பாட்டி யுடன் சுமார் ஒரு மணிநேரம் உரையாடி, அவர் கூறியதைக் குறிப்புகளாக எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பாரதி தொடர்பான பல இடங் களுக்குச் சென்று, பல தகவல்களைத் திரட்டிய பின்னர் பாரதியின் வாழ்வு பற்றிய ஒரு நூலை எழுதினார்.

மற்றொரு நிகழ்ச்சி அவரது ‘அலைவாய்க் கரையில்’ என்ற நாவல் பற்றியது. இந்த நாவல் மீனவர்களது வாழ்வு பற்றியது. இந்த நாவல் எழுதுவதற்கு பேரா.ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் ராஜம் கிருஷ்ணனுக்கு மிகப் பெரிய உதவி செய்துள்ளார்கள். தூத்துக்குடிப் பகுதி கடற்கறை கிராமங்களுக்குச் சென்று அவர் ஏராளமான விவரங்கள் சேகரித்தார். இது ‘அலை வாய்க்கரையில்’ என்ற நாவலாக மலர்ந்தது. இந்த நாவல் பற்றி தூத்துக்குடியில் நெல்லை ஆய்வுக் குழு கிளை துவக்க விழாவில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இது ஒருநாள் ஆய்வுக் குழுக் கூட்டம். இதனை ஏற்பாடு செய்தவர்கள் பேரா.ஆ. சிவசுப்பிரமணியம், இரா.எட்வின் சாமுவேல், பேரா. முத்தையா, தி. சிகாமணி, ஜெயக்குமார், ஸ்ரீதர கணேசன் ஆகியோர். இவர்களில் சிகாமணியும், ஜெயக்குமாரும் திருமதி. ராஜம் கிருஷ்ணனுக்குப் பல வழிகளில் உதவி செய்தவர்கள் ஆவர். இந்த நாவல் கருத்தரங்கின் தலைவர் பேரா. நா. வானமா மலை ஆவார். இந்தக் கருத்தரங்கத்திற்கு ராஜம் கிருஷ்ணன் வருகை தந்திருந்தார். அவர் பேசும் பொழுது “எனது ஒரு நாவல் பற்றி ஒரு நாள் முழுவதும் ஆய்வரங்கு நடத்துவது இதுவே முதல் தடவை. இது எனக்கும் மிகப் பெருமையாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இது போன்று அவர் பற்றி பல நிகழ்ச்சி களைக் குறிப்பிடலாம். அவரது படைப்புகள் பரந்துபட்டவை. நாவல், வாழ்க்கை வரலாறு என்று பலவகையான தன்மை உள்ளவை. அவர் இந்தியாவெங்கிலும் சுற்றுப் பயணம் செய்துள்ளார். அவர் சோவியத் யூனியன் சென்று வந்துள்ளார்.

அவரது நாவல்களில் ‘பெண்குரல்’ முதல் நாவல். ஆனால் இதனை முதல் நாவல் என்றே கூறமுடியாது. ஒரு முதிர்ந்த எழுத்தாளர் ஒருவரது படைப்பு போலவே இது உள்ளது. இதன் கதாநாயகி சுசீலா இன்றும் ரசிகர்கள் மனதில் அழியாத பாத்திரமாக உள்ளார். ஒரு கூட்டுக் குடும்பத்தின் சம்பிரதாயக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடத் துடிக்கும் சுசீலாவின் மன உணர்வுகளை ராஜம்கிருஷ்ணன் மிக நுட்பமாக இந்த நாவலில் சித்திரித்துள்ளார். இது பற்றி கி.வா. ஜகன்நாதன் கூறுகிறார். “கதையில் நிகழ்ச்சிகளும் மனத் தத்துவமும் இழைந்து செல்கின்றன. பாத்திரங்கள் பூரண உருவம் பெற்று நடமாடு கிறார்கள். சிறிய சிறிய இழைகளெல்லாம் சேர்த்து பெரிய கயிறாக மாறி சோர்ந்து போன பெண் உள்ளத்தைப் பிணைத்து வீழ்த்துவதைப் பார்க்கிறோம். கதை மேலும், மேலும் விறு விறுப்பாக நடக்கிறது. இதில் உள்ள நடை இயற்கையாக இருக்கிறது... அங்கங்கே வரும் உபமானங்கள் அனுபவகாரமாக இருக்கின்றன” (பெண் குரல்: முன்னுரை)

இந்தக் கூற்று ராஜம்கிருஷ்ணனின் எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும். அவரது நாவல்கள் எல்லாவற்றிலுமே பெண் கதாபாத்திரங்கள் அழுத்தம் பெறுகின்றன. ஒரு காலத்தில் பல்லா யிரக்கணக்கான ரசிகர்கள் படித்த ‘குறிஞ்சித் தேனி’ன் பாருவை யாரும் மறக்கமுடியாது. படகர் வாழ்க்கையை மிக நுணுக்கமாகச் சித்தரித்த நாவல் இது. இன்றைய படகர்களில் யாரேனும் ஒருவர் வேண்டுமானால் படகர் வாழ்க்கையைப் படகர் எழுதினால்தான் நன்றாக இருக்கும் என்று கூறலாம். ஆனால் ராஜம் கிருஷ்ணன் போன்றவர் களது கலை நோக்கு இல்லாமல் யார் எழுதி னாலும் அது ஒரு விவரப் பட்டியலாக இருக்குமே அன்றி, இலக்கியமாக இருக்காது. ‘குறிஞ்சித்தேன்’ படகர் வாழ்க்கையில் தலைமுறை மாறுதல்களை, ஜோதி - பாரு ஆகியோர் மூலமாகச் சித்தரிக்கும் நாவல் ஆகும்.

ராஜம் கிருஷ்ணனின் மற்றொரு நாவல் “ரோஜா இதழ்கள்.” இதனை ஒரு அரசியல் நாவல் என்று கூறலாம். திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கிய கலாச்சாரச் சூழல் எவ்வாறு ஒரு பெண்ணைச் சீரழிக்கிறது என்பதை இந்த நாவலில் அவர் எடுத்துக் காட்டுகிறார்.

‘கூட்டுக்குஞ்சுகள்’ அவரது மற்றொரு குறிப் பிடத்தக்க நாவல். அந்தக் காலத்தில் சிவகாசிப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் சென்ற பெண்கள் பேருந் தோடு அடித்துச் செல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு புனையப்பட்ட நாவல் இது. இதன் தாக்கம் மிக அதிகமானது. தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள், ராஜம் கிருஷ்ணனுக்கு கொடுத்த நெருக்கடிகளையும் பொருட்படுத்தாமல் உழைப்பாளிகளின் அவலநிலையை இந்த நாவலில் ஆசிரியை பதிவு செய்துள்ளார்.

‘சேற்றில் மனிதர்கள்’ தஞ்சை மாவட்டத்து உழைக்கும் பெண் விவசாயக் கூலிகள் படும் அவலத்தைப் பதிவு செய்த நாவல். விவசாயிகள் ஒன்று திரண்டு நிகழ்த்திய போராட்டம் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பாதையில் பதிந்த சுவடுகள்.” தஞ்சை மாவட்டத்தில் தோழர் பி. சீனிவாசராவ் பண்ணை யடிமை முறையை ஒழிக்கப் பெரும் போராட்டம் நிகழ்த்திய பொழுது, யாருடைய உதவியும் இன்றி ‘மணியம்மை’ என்ற பிராமணப் பெண் சேரி வாழ் பெண்களுக்காகப் பாடுபட்ட நிகழ்ச்சியைப் பதிவு செய்த நாவல் இது. மணியம்மை கொல்லப்பட்ட நிகழ்ச்சியை சோகரசம் ததும்ப ராஜம் கிருஷ்ணன் இந்த நாவலில் விவரிப்பார்.

ராஜம் கிருஷ்ணன் சோவியத் யூனியன் சென்று வந்த பிறகு எழுதிய நாவல் “அன்னையர் பூமி.” பெண்களுக்கு எந்த அளவிற்கு சோவியத் யூனியனில் சுதந்திரம் இருந்தது என்பதை மிக அற்புதமாக ராஜம் கிருஷ்ணன் இந்த நாவலில் வர்ணிப்பார். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் பேபியையும், அதே காதல் தோல்வியை ஆக்கபூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறும் அன்னாவையும் ஒப்பிட்டுக் காட்டி இதனை விளக்குவார். இரு வேறு சமுதாய அமைப்புகள் இருவேறு வகை யான முடிவுகளுக்கு இடமளிப்பதையும் இந்த நாவலில் விளக்குவார். ராஜம் கிருஷ்ணன் பற்றி ஆராய்ந்தவர்கள் இந்த நாவல் பற்றி மூச்சுவிட மாட்டார்கள். கம்யூனிச எதிர்ப்பு என்பது அவர் களது இரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகும். ஆனால் ராஜம்கிருஷ்ணனது சமுதாயப் பார் வையில் ஒரு மாறுதல் கொண்டு வந்த நாவல் இது எனலாம்.

அவரது மற்றொரு நாவல் ‘வீடு’ என்பது. இப்சன் என்ற நாடக ஆசிரியர் எழுதிய ‘பொம்மை வீடு’ என்ற நாடகத்தினைப் போன்றது இது. ஆனால் ராஜம்கிருஷ்ணன் இப்சனைப் படித்ததில்லை. இருப்பினும் வீடு நாவலின் கதாநாயகியான யசோதாவை இப்சனின் டோராவுடன் ஒப்பிடலாம். யசோதா கொடுமைக் காரப் புருடனின் மனைவி. அவளைப் பொறுத்துக் கொள்கிறாள். தன் பெண் திருமணம் முடியும் வரை காத்திருக்கிறார். பெண்ணின் திருமணம் முடிந்த பின்னர், ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இது பெண் விடுதலை பற்றிய அவரது கருத்தின் ஒரு புதிய பரிமாணமாக உள்ளது.

‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ என்ற நாவல் பெண் சிசுக்கொலை பற்றியதாகும். இந்த நாவலின் முன்னுரையில் அவர் கூறுகிறார்.

“பெண்ணுக்கு மனித மதிப்பை ஏற்றுவிக்கும் ஒரு மாண்பினைச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் போது தான் சமுதாயத்தின் பெருந்தீமையாக உருவெடுத்திருக்கும் வரதட்சணையை... வேரோடு அகற்ற முடியும். உழைப்பிலும், உற்பத்தியிலும் உரிமையிலும் சமமாகப் பங்கு பெறும் பெண், கல்வியும், ஆற்றலும் பெற்றுத் தன்னை மேம் படுத்திக் கொள்கிறாள். சமஉரிமை பெற்று ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் குடும்பங் களே நல்லதொரு மனித சமுதாயத்தைத் தோற்று விக்கும் நாற்றங்கால்களாக உருவாக முடியும்.”

இவை ராஜம் கிருஷ்ணன் பற்றிய ஒரு சுருக்க மான அறிமுகம் மட்டுமே. அவரது படைப்பு களில் பிரபலமானவற்றைப் பற்றி மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளது. தமிழ் நாவலில் பெண் எழுத்தாளர்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வை.மு. கோதை நாயகி (வை.மு.கோ) அநுத்தமா, லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன், அம்பை என்று பலரை நாம் குறிப் பிடலாம். இவர்களில் ராஜம் கிருஷ்ணன் தனித் துவம் வாய்ந்தவர். அவர் பராம்பரியத்தின் ஆக்க பூர்வமான அம்சங்களை ஏற்றுக்கொண்டு, புதுமையின் புரட்சிகரமான அம்சங்களையும் இணைத்துப் பெண் விடுதலை பேசியவர். பாரதியின் வரிகளுக்கு - நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் / திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் அறம் திறம்புவதில்லையாம் - இலக்கணமாகத் திகழ்ந்தவர். தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டவர். அதிகம் படிக்காமல் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு அணிசேர்த்தவர்.

Pin It