அண்டத்தின் வரையறையான இயக்கத்தில் அடங்க மறுப்பவன் மனிதனே. தனக்கு வாய்த்த பகுத்தறிவால் இயற்கையைத் தனக்குச் சாதக மாக்கிக் கொண்டு வாழவேண்டுமே தவிர, அதனைப் பகைத்துக்கொண்டு வாழக்கூடாது; வாழவும் முடியாது. காடுகள் அழியாமல் பூமி செழிப்பாக இருந்த காலத்திலேயே பூமி பல முறை புரட்டிப் போடப்பட்டு இருக்கிறது. கடல் திடலாகவும், திடல் கடலாகவும் மாறி இருக் கின்றன. பழந்தமிழகத்தின் தெற்கிலிருந்த குமரிக் காண்டம் என்னும் பகுதி முற்றிலுமாக கடலுள் ஆழ்ந்துவிட்டது.

mazhai-thuli-mazhai-thuliஇயற்கை இயற்கையாக இருந்த காலத்தி லேயே இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்றால் இப்போதுள்ள சுற்றுச்சூழல் அழிவால் எப்போது எது வேண்டுமானாலும் நிகழலாம். இயல்பாகப் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த காலச் சுழற்சி முற்றிலுமாக மாறிவிட்டது. மழை பெய்கிறது; ஆனால் பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்ய வில்லை. பயிரிடும்போது ஆக்க மழையாகப் பெய்ய வேண்டியது, அறுவடைக் காலத்தில் அழிவு மழையாகப் பெய்கின்றது.

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருனை நதி - என

மேவிய யாறு பல ஓடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு   (பாரதி பாடல்கள் 1763)

என மகாகவி பாடியதை இளைய சமுதாயம் நம்ப மறுக்கும். காவிரியும் வைகையும் கூவங்கள் ஆகிவிட்டன. பாலாறு ஆங்காங்கே மணல் அள்ளப்படும் மணல் ஆறாகக் காட்சியளிக்கிறது.

பூமியையும் வளி மண்டலத்தையும் நாம் எவ்வளவு பாடாய்ப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதை ஒரு நூல் வேதனையோடு அதே நேரத்தில் தெளிவாக விளக்குகின்றது. யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் நிலையை “மழைத்துளி மழைத்துளி” எனும் நூல் அற்புதமாக விளக்குகின்றது.

இந்நூலாசிரியர் தம்மை நல்ல வேளையாக வேளாண் விஞ்ஞானி என்று அழைத்துக் கொள்ள வில்லை. மரபு சார்ந்த வேளாண்மையை அழித்தவர் களும் வேளாண் விஞ்ஞானிகள். வளர்க்க நினைப் பவர்களும் வேளாண் விஞ்ஞானிகள். அழிப்பில் ஒரு தொடர்கதையே இருக்கிறது.

இயற்கை ஆர்வலர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரே மக்களிடம் தெளிவாகக் கருத்துக் களைச் சொல்லக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர் களில் குறிப்பிடத்தக்கவர் மழைத்துளி மழைத் துளி எனும் நூலை எழுதிய இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன். அறிவியல் வளர்ச்சி, பசுமைப் புரட்சி போன்றவற்றால் பூமி படும் பாட்டையும் மக்கள் படும் பாட்டையும் துளி விடாமல் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்கின்றார்.

நீர்நிலைகள்

வரலாற்றில் மன்னர்கள் மரம் வளர்த்ததையும் நீர்நிலைகளை அமைத்ததையும் படிக்கின்றோம். ஆனால் நம்முடைய காலத்தில் காடுகளை எல்லாம் அழித்து விட்டோம். ஏரி குளங்கள் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் தொழிற்சாலைகளாகவும் கல்வி நிறுவனங் களாகவும் ஆகிவிட்டன. 1978 - 79ம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் 38,297 ஏரிகள் இருந்துள்ளன. நூலாசிரியர் அவற்றில் பல இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டதை வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

முன்பெல்லாம் ஜப்பசியில் தொடங்கும் அடைமழை கொட்டிக் கொண்டே இருக்கும். ஏரி குளங்களில் தேங்கும்; அதிகமான நீர் வடிகால் வழியாகக் கடலுக்குப் போகும். இப்போது இரண்டு மூன்று நாள் தொடர்ந்து மழை பெய் தாலே கிராமம், நகரம் என்னும் வேறுபாடு இல்லாமல் வெள்ளத்தில் மூழ்குகின்றன. வடி கால்கள் அடைபட்டு விட்டன. நீர்நிலைகள் கட்டடங்கள் ஆகிவிட்டன. பிறகு மழைநீர் என்ன செய்யும்? நிழலைப் போல நம்மோடுதான் இருக்கும்.

“பழவன்தாங்கல் ஏரியால் நெல் விளைந்த பூமி இது. அங்கும் ஏரிகள் உண்டு. மீனம் பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை தாம்பரம் போன்ற எல்லா ஊர்களிலும் ஏரிகள் உண்டு. இப்போது ஏரிகள் இல்லை. ஏரிகள் மீது கட்டடங்கள் வந்துள்ளன. வடிகால் தூர்ந்து விட்டன. மழை நீர் வடியாமல் இன்றும் சென்னைப் புறநகர்ப் பகுதியில் பெருமழை பெய்தால் வெள்ளம் சூழ்ந்து ஓடாமல் நிற்பதைப் பார்க்கலாம்.” (ப-16)

இந்நிலை தமிழ்நாட்டில் மட்டுமில்லை. இந்தியா முழுவதுமே இருப்பதை நூலாசிரியர் ஆர்.எஸ். நாராயணன் சுட்டிக்காட்டுகின்றார். 2005ஆம் ஆண்டில் சில நாட்கள் பெய்த மழையில் மும்பையே மிதந்தது. மைத்தி என்னும் நதியின் ஆக்கிரமிப்பால் இந்நிலை ஏற்பட்டதை விளக்கு கின்றார்.

மழையின் அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந் தாலும் பெய்யும் மழைநீர் வீணாகக் கடலுக்குப் போகிறது. பாசனத்துக்கு உதவிய நீர்நிலைகள் எல்லாம் அழிந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் பூமியைப் பொத்துப் பூமித்தாயின் செழுமையைக் குருதியாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம். மேலும் நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகின்றேன்; கலந்து ஊதி ஊதித் தின்போம் என்பது போல அந்நிய நிறுவனங்களும் சேர்ந்து கொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொழுக் கின்றன.

“ஆழ்துளைக் கிணறுகளின் பலன் விவசாயத் துக்குத்தான் என்ற எண்ணமெல்லாம் தவறு. அதிகபட்ச பயனை - கோகோ கோலா, பெப்சி போன்ற குடிநீர் பாட்டில் நிறுவனங் களே நமது நீர் வளத்தை உறிஞ்சி எடுத்து விடுகின்றன” (பக்கம் 23.)

வடநாட்டில்தான் வற்றாத ஜீவ நதிகள் இருப்பதாகக் குறிப்பார்கள். இப்போது தமிழ் நாட்டிலும் காவிரி, வைகை போன்றவையும் ஜீவ நதிகளாகி விட்டன. ஆலைக் கழிவுகள், நகரக் கழிவுகள் எனக் கழிவுகளால் கூவத்தைப்போல ஆண்டு முழுவதும் நாறிக் கிடக்கின்றன.

மானாவாரி

முன்பெல்லாம் உழவு, விதைப்பு, களை யெடுப்பு, அறுவடை என அதிகச் செலவில்லாமல் கம்பு, சோளம், உளுந்து, துவரை, பாசிப்பயிறு, காராமணி எனப் பல விளைந்தன. பசுமைப் புரட்சி வந்தவுடன் இவை எல்லாம் காணாமல் போய் விட்டன. பாரத பூமியை ஒரு சுரண்டல் பூமியாகவே வெளிநாட்டுக்காரர்கள் எண்ணிவிட்டார்கள். முடியாட்சி காலத்தில் இங்கிருந்த குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என் பார்கள். நேரடியாக வந்து ஆட்சியைக் கைப் பற்றிச் சுரண்டிச் சென்றார்கள். இப்போது உலக மயம், தாராள மயம், தனியார் மயத்தால் நம் அரசுகளின் ஆசியோடு சுரண்டுகின்றார்கள்.

நெல்லை உற்பத்தி செய்ய அதுவும் மூன்று போகம் உற்பத்தி செய்ய ஆழ்துளைக் கிணறு போட எந்திரம், நீரை எடுக்க எந்திரம், உழ எந்திரம், நட, அறுக்க எந்திரம் என எல்லாமே எந்திரமயமானதால் பெருமையாகப் பேசப்படும் வேளாண் பெருமக்கள் கடன் காரர்கள் ஆகி விட்டார்கள். பலர் தற்கொலை செய்து கொண் டார்கள். மக்களின் வயிறு நிறையவில்லை. வெளி நாட்டு நிறுவனங்களின் பெட்டிகள்தான் நிறைந்தன. இரசாயன பூச்சிக்கொல்லி மருந்தால் விளைந்த உணவு தானியங்களை உண்டதால் நோயாளிகள் ஆனதுதான் மிச்சம். மானாவாரிப் பயிர்களை அழித்துவிட்டதோடு கரு இல்லாத புதிய விதை களைக் கொண்டு வர நம் வேளாண் விஞ்ஞானி களும் அமைச்சர்களும் துடிக்கின்றார்கள். இதன் மார்க்கத்தை இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன் உடைத்துக் காட்டுகின்றார்.

“அமைச்சர்களின் கவலை வளரும் குழந் தைக்குப் பருப்பு சாதம் வழங்குவதாக இல்லை. மாறாக யு.எஸ். நிதி உதவிய உயிரித் தொழில்நுட்பம் பாக்கேஜகளிலிருந்து துரோகி விஞ்ஞானிகளுக்கு வரும் பாக்கேஜு களைக் கூறு போட்டால் எவ்வளவு தேறும் என்பதில் ஆர்வம் உள்ளது. பருப்பு ஒரு கேடா? பி.ட்டி வெண்டைக்காய், பி.ட்டி முட்டைக் கோஸ், பி.ட்டி மக்காச்சோளம் என்று எவ்வளவு அயிட்டங்கள் உள்ளன. பருப்பு நிலமெல்லாம் பி.ட்டி பருத்தி நில மானது. இன்று பருப்பு அபேஸ். மக்காச் சோளம் பி.ட்டி வெண்டை வந்து இனி கோதுமை நிலம் அபேஸாகும்.” (பக்கம் 26)

வேளாண்மை தொடர்பான அரசாங்கத்தின் பார்வையும் சரியில்லை; பாதையும் சரியில்லை. நிறையப் பணம் ஒதுக்குகின்றார்கள்; மானியம் கொடுக்கின்றார்கள். அவற்றால் சாகுபடியாளர்கள் பயன் அடையவில்லை; யானை வாய்க்குள் போகும் கரும்பு போல எந்திர நிறுவனங்களுக்கும் உர நிறுவனங்களுக்குமே போகிறது.

“தேசிய வங்கிகளின் விவசாயக் கடன் நேரடி யாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மறைமுகமாகவே விவசாயம் பயன்பெறும். மறைமுக விவசாய உதவி என்றால் விவசாய உற்பத்திக்கு வித்திடும் தொழில் நிறுவனங்கள், உர நிறுவனங்கள் விதை நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள், விவசாய எந்திரங் களான டிராக்டர், புல்டோசர், குழாய், மோட்டார் பம்பு செட், ஆழ்துளைக் கிணறு தோண்டும் எந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்... சொல்லப்போனால், யார் யார் விவசாயக் கடன் பெறலாம் என்ற வரை யறையில் விவசாயி நீங்கலாக விவசாயத் துடன் மறைமுகத் தொடர்புள்ள நிறுவனங் களுக்குத்தான் முன்னுரிமை!” (பக்கம். 95)

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வங்கிகள் குறிப்பிட்ட அளவுக் கடனை விவசாயம் என்னும் பெயரில் அளிக்க வேண்டும். ஒரு குழி நிலம் இல்லாதவர்களுக்கெல்லாம் நகைக்கடன் அளித்தன. கடன் தள்ளுபடி என வந்த போது விவசாயி அல்லாத மற்றவர்களே பயன் பெற்றார்கள்.

உலகம் சிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழுவினர் பிரார்த்தனை செய்கின்றார்கள். வளர்ந்த நாடுகள் நாங்கள் புகையைக் கக்குவோம்; நீங்கள் கக்கக்கூடாது என வளரும் நாடுகளை எச்சரிக்கை செய்கின்றன. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதை எவ்வளவு அக்கறையோடு தடுக்க வளர்ந்த நாடுகள் பாடுபடுகின்றன!

மழைநீரை உண்மையாகச் சேகரிக்க வழி செய்ய வேண்டும்; காடு, மலை, ஆறு போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். மரபு சார்ந்த சாகுபடியை மீட்டெடுத்து நஞ்சு கலக்காத காய்கறி, பழங்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும்; வெளிநாட்டினரின் சுரண்டலுக்குத் துணை போகக் கூடாது என எவை எவை நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையோ, அவற்றை எல்லாம் மழைத்துளி மழைத்துளி என்னும் நூலில் இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன் பட்டியலிட்டுக் கூறு கின்றார். நாணயத்தின் இரு பக்கங்கள் போல, நூல் ஒரு பக்கம் தீமைகளை எடுத்துக் கூறுகின்றது; இன்னொரு பக்கம் தீர்வுகளையும் கூறுகின்றது.

‘மழைத்துளி மழைத்துளி’ அனைவரும் படிக்க வேண்டிய நூல்; இந்த உலகம் பல்லாயிரம் ஆண்டுகள் நம் முன்னோர்கள் துய்த்த ஒன்று. அவர்கள் நம் கையில் கொடுத்துள்ளார்கள். விஞ்ஞான உலகில் இருக்கிறோம் என்பதற்காக நாம் வாழ நம் சந்ததியினருக்குக் கெடுதலைச் செய்யக்கூடாது.

மழைத்துளி... மழைத்துளி...

ஆசிரியர்: ஆர்.எஸ்.நாராயணன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ.120/-

Pin It