statuebook 450பன்மைப் பண்பாட்டுத் தன்மை கொண்ட இந்திய தேசமெங்கும் ஒற்றைப் பண்பாட்டை நிறுவக்கூடிய சூழல் இன்று உருவாகிக்க கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழரின் மொழி, பண்பாடு, உணவு, உறவு முறைகள் சார்ந்த பண்பாட்டை மாற்றியமைக்கும் முயற்சியை வெளிப்படையாகவே நடுவண் அரசு செய்து வருகிறது. நம் பண்பாட்டை நம் கண்முன்னரே அழிக்க எண்ணும் எதேச்சகர பாசிச அரசிற்கு நம் வேர்களின் முகத்தைக் காட்டுவது காலத்தின் தேவையாக அமைகிறது. நம் பண்பாட்டின் பழமையை கீழடி காட்டிக்கொண்டிருக்க இன்னும் பண்பாட்டின் அடித்தளத்தின் பழமையை அவர்களுக்குக் காட்டுவது நமது கடமையாகும். சு.தியடோர் பாஸ்கரனின் ‘கல் மேல் நடந்த காலம்’ நூல் தமிழர் பண்பாட்டு வெளியை அச்சமின்றி காட்டியிருக்கிற முக்கியமான நூலாகும்.

கல்வெட்டுக்கள், கோயில் சார்ந்த ஆய்வுகளைப் பலர் முன்னெடுத்துச் சென்றுள்ளனர். வேலூருக்கு அருகிலிருக்கும் மகாதேவமலை, புதுக்கோட்டையருகே ஆளுருட்டு மலை, குற்றாலத்திலுள்ள பரதேசிக்குகை, ஆம்பூருக்கருகில் உள்ள ஆர்மா மலைக்குகை தொல் லெச்சங்கள், தஞ்சாவூர் கோவிலுள்ள புத்த சிற்பங்கள் குறித்த கட்டுரைகளில் புதிய பார்வையைத் தருகிறார். மேலும் தமிழில் அறியப்படாத பர்ப்பொலாவின் நேர் காணலும் திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும் தமிழக ஓவியங்கள் குறித்துப் பேசிய தாம்ஸன், தமிழறிஞர் கால்டுவெல், கோட்டையூர் முத்தையா, தேவதேவி பாலாமணி போன்ற ஆளுமைகள் குறித்த அறியப்படாத செய்திகளைத் தருகிறார்.

தியோடர் பாஸ்கரன் வரலாறு குறித்து நமக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட கற்பிதங்களை உடைக்கிறார். நமக்கு ஏற்கனவே வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்பட்ட வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது,

“துறவிகள் குகைகளில் வாழ்ந்த இந்த ஆயிரம் ஆண்டு வரலாறு ஆய்வாளர்களின் சரியான கவனத்தைப் பெறவில்லை. குகையை ஆராய்ந்தவர் களும் அவற்றிலுள்ள கல்வெட்டுக்களை மட்டுமே ஆய்விற்கெடுத்துக் கொண்டார்கள். மற்ற தொல் லெச்சங்கள் கவனிக்கப்படவில்லை. துறவிகள் இருந்த குகைகள் பற்றிய முழுமையான ஒரு பட்டியல்கூட நம்மிடம் இல்லை. இந்திய தொல்லியல் ஆராய்ச்சியில் கல்வெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியம் ஆங்கில ஆய்வாளர்களால் துவக்கப்பட்டது. இம்முறையில் ஒரு வசதி என்னவென்றால் கள ஆய்வு செய்யாமல் நூலகத்தில் அமர்ந்தே வரலாற்றை எழுதிவிடலாம் அல்லவா”  (ப.5)

எனக் குறிப்பிடுகிறார். சித்தன்னவாசல் குறித்த செய்திகளைத் தரும் ஆய்வாளர்கள் அதன் மேலே அமைந்த ஏழடிப்பட்டம் பற்றிப் பேச மறுத்துள்ளனர். தியோடர் அந்தக் குகை குறித்த செய்திகளை விரிவாகவே பதிவு செய்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூருக்கருகே உள்ள ஆர்மா மலைக்குகையைப் பற்றி மதராஸ் ராஜதானியி லுள்ள தொல்லெச்சங்களை 1882 இல் ஒரு நூலில் பட்டியலிட்ட வரலாற்றாசிரியர் ராபர்ட் சிவல் (Robert Swell) ஆர்மா மலைக் குகையைப் பற்றி மூன்றே வாக்கியங்களில் ஒரு குறிப்பை எழுதி வைத்தார். இக்குறிப்பைக் கண்டு 1916 இல் இந்த இடத்தைப் பார்வையிட்ட தொல்லியலாளர் ழூவோ துப்ராயில் (Zovueau Dubreuil) இந்த குகையில் சில ஓவியங்கள் தெரிகின்றன. ஆனால் தாமரை இலை தவிர அவை என்னவென்று தெரியவில்லை என்று மட்டும் பதிவிட்டார். 1970 இல் மன்கோமேரி என்ற நண்பரோடு சென்ற தியோடர் இம்மலையைப் பற்றி விரிவாகவே பதிவு செய்கிறார். தமிழகத்தில் சமண சமயம் செழித்தோங்கியிருந்த காலத்தில் தேவ, சிம்ம, சேனா, நந்தி என நான்கு கிளைப் பிரிவுகள் இருந்தன. ஆர்மா மலைக் குகை நிறுவனம் நந்தி கணத்தைச் சேர்ந்தது என்றறிய முடிகின்றது. இந்த நந்தி கணத்திலிருந்துதான் பின்னர் மதுரையில் 10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திராவிட சங்கமும் உருவானது (பக்.16-17) என்ற செய்தியைத் தருகிறார். எல்லோரா, சித்தன்ன வாசல், ஆர்மா மலை ஓவியப் பாணிகளில் காணப்படும் ஒற்றுமைகளை எடுத்துக்காட்டும் அதே நேரத்தில் ஆயிரம் ஆண்டுகள் இயங்கிய பாறைக் குடில்கள் பற்றிய ஆய்வுகள் இல்லாததை தெரிவிக்கிறார். இக்குகைகளைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வது காலத்தின் தேவை என்ற தியோடரின் கருத்து முக்கியமானதாகும்.

சிவனுக்குப் பல கோயில்களை எழுப்பிய சோழ கற்றளிகளில் நடராஜர் காணப்படுவதைப் போல பல்லவ ஆலயங்களில் கங்காதரரை சிற்ப வடிவில் காண முடிகிறது. கங்காதரர் பற்றிய கட்டுரையில் பல்லவ கங்காதர சிற்பங்களில் நாய் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டுகிறார். கங்காதரர் கதையில் நாய் எங்கிருந்து வந்தது என்பதற்கு சான்றில்லை என்று கூறுகிறார். தக்கோலப் போரில் ராஷ்டிரகூட படையை நடத்திச் சென்று வெற்றி கண்ட மன்ரேல என்ற தளபதியின் திறமையை மெச்சி, மன்னன் கிருஷ்ணன் தான் போற்றி வளர்த்து வந்த காளி என்ற நாயைப் பரிசாக அளிக்கிறார். இந்த நாய் காட்டுப்பன்றியோடு நடந்த சண்டையில் காயம் பட்டு இறக்கிறது. இந்த இரண்டு செய்திகளைக் குறிப்பிட்டு சிற்பங்களில் ஓவியங்களில் இடம்பெற்றுள்ள விலங்குகளைப் பற்றிய ஆய்வு மிக முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார்.

பெண்தெய்வ வழிபாடு குறித்து ஏழு கன்னிமார்கள் கலையும் கதையும் என்ற கட்டுரையில் பேசுகிறார். கர்நாடகா அய்ஹோலேயில் உள்ள சாளுக்கிய குடவரைக் கோயிலிலும் எல்லோராவிலும் தமிழகத்தில் சில பல்லவ ஆலயங்களிலும் சோழர் கோவில்களிலும் சப்தமாதர் என்று குறிப்பிடப்படும் இவர்களுக்கு சிற்றாலயங்கள் எழுப்பப்பட்டன. சிவன் வழிபாட்டை போற்றிய நாயன்மார்கள் காலத்திற்குப் பின் சப்தமாதர் வழிபாடு பின்னடைவு பெற்று பின் மறைந்து போனது. சோழர் காலத்திற்குப் பின் சப்தமாதர்களின் சிற்பங் களையோ ஆலயங்களையோ காண்பது அரிது என்கிறார். தாய்த்தெய்வ வழிபாட்டின் எச்சமாக இருந்த சப்தமாதர் வழிபாடு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காணாமல் போனதன் பின்னணி குறித்த ஆய்வின் தேவையை இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் இருக்கும் இடம் புத்தக் கோயில் இருந்த இடம் என்ற முக்கியமான செய்தியைத் தருகிறார். தஞ்சை பெரிய கோவிலைப் பற்றிய நூல்களில் சிற்பங்களில் சொல்லப்படும் செய்தி என்னவென்றால் ஒரு புத்த விஹாரம் இருந்த இடத்தில்தான் இன்று பெரிய கோயில் இருக்கின்றது என்பதுதான் என்ற செய்தியைத் தருகிறார். இந்தச் செய்தியை எந்த வரலாற்று ஆசிரியரும் இதுவரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுகள், கோயில்கள் குறித்த வரலாறுகள் நிலவுடைமை சார்ந்த மையமாகவே மாறிப்போய் விட்டது. இது சமயம் சார்ந்த வரலாறுகள் அனைத்தும் அதிகார மையத்தை மையமிட்டே வரையறுக்கப் பட்டுள்ளன. இந்த மையத்தை உடைப்பதற்கான சூழ்நிலை இன்று எழுந்துள்ளது. இந்த உடைப்புக்கான தொடக்கப் புள்ளியாக, புதிய வெளிச்சமாக இந்நூல் அமைந்திருக்கிறது என்பது மிகையில்லை. திருக்குறளை எழுதியவர் யார் என்ற கட்டுரையில் ‘எவ்வாறு பழந் தமிழகத்தில் சமண நூல்கள் வெள்ளத்தில் எறியப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டனவோ அதே போலவே உரை என்ற பெயரில் திருக்குறளில் பொதிந் திருக்கும் சமணக் கருத்துக்கள் இன்று அழிக்கப் படுகின்றன. புதுப்புது பொருள்கள் கொடுக்கப்பட்டு மைய அடையாளம் சிதைக்கப்படுகின்றது’ என்ற கருத்தினைக் கூறுகிறார். இந்த கருத்து மிக முக்கியமானதாகும். மேலும் திருமலையில் ஜீனாலயத்தைக் கட்டிய சோழ இளவரசு குந்தவி பற்றிய குறிப்புகளைத் தருகிறார்.

இந்நூல் நெடுகிலும் நாம் அறிந்திராத வரலாற்றின் புதிய வெளிச்சங்களை நமக்குத் தருகிறார். முதல் உலகப் போரில் பயன்படுத்திய ஜெர்மனியின் போர்க்கப்பல் எம்டன் குறித்த செய்திகள் பலருக்கும் அறிமுக மில்லாதது. அந்தப் போர்க்கப்பல் சென்னைமீது தாக்குதல் நடத்தியபோது மக்கள் மனநிலை எவ்வாறு இருந்தது என்பனவற்றை இயல்பாக எடுத்துரைக்கிறார். வரலாறு சார்ந்த கட்டுரைகள் என்றாலே சோர்வை ஏற்படுத்தும். ஆனால் இந்நூலில் தியோடர் விறு விறுப்பாக அதேநேரத்தில் எதார்த்தமாக எப்பக்கமும் சாய்வின்றி எழுதுகிறார். தமிழ்ச் சமூகத்தில் நிகழ்த்த வேண்டிய ஆய்வுகள் குறித்து பல கட்டுரைகளில் பேசுகிறார். தியோடர் சொல்லுகிற ஆய்வுகளை நிகழ்த்தினால்  புதிய பண்பாட்டு வெளிச்சம் தமிழ்ப் பண்பாட்டில் விழும். ஆய்வுலகில் பண்பாட்டில் மாற்றத்தை விரும்புவோர் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது. தமிழர் வரலாற்றுப் பண்பாட்டு வெளியில் இந்நூலுக்கு தனித்த இடம் உண்டு.

கல் மேல் நடந்த காலம்

சு. தியடோர் பாஸ்கரன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லி.,

41-பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600098

விலை - 160/-

Pin It