ஆண்டவர்களாலும், ஆட்சிபுரிபவர்களாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட பலரில் மதுரகவி பாஸ்கரதாசும் ஒருவர். மதுரகவி தமது படைப் பாற்றல்களால் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
அதேபோன்று தங்களது பேச்சாலும், எழுத்தாலும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்கள் திருவாளர்கள் சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரம், நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற பெருமக்கள். ஆனால் இச்சமூகத்தில், பாட நூல்களில் எங்குமே அவர்களுக்கு இடமில்லை?
இச்சூழலில் தான் “மதுரகவி பாஸ்கர தாஸின் வாழ்வும் பணியும்” என்ற சிறிய நூல் வெளி வந்துள்ளது. மிகப்பெரும் ஆவணமாக வெளிவர வேண்டிய நூல், மிகச் செல்வச் செழிப்பான விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பிற செல்வச் சீமான்கள் அந்நியர்களுக்கு ஆலவட்டம் சுற்றாதவர்.
மதுரகவி இயற்கையிலேயே கவி புனைவதிலும், கவி பாடுவதிலும் ஆற்றல் பெற்றிருந்தார். குறிப்பாக கூறுவதானால் முத்தமிழ் வித்தகராக, சங்கீத ஞானம் பெற்றிருந்தார்.
தான் கற்றறிந்தவை அனைத்தும் நாட்டிற்கு வலிமையும், வளமையும் சேர்க்க வேண்டும் என்பதே அவருக்குக் குறிக்கோளாக இருந்துள்ளது. ஒவ்வொரு பாடலும் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு கனலாகத் தெரிந்தது.
தோழர்கள் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் ஆகியோரைத் தூக்கிலிட்டபோதும், ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட படுகொலைகளும் இன்றளவிலும் மறக்க முடியாதவை.
“பஞ்சாப் படுகொலை
பாரினில் கொடியது
டயர் மடமதியன்
அஞ்சாப் பெருவம்பன்
அறநெறி தவறிய
கொடியவன் டயர்”
“சிறை வாயிலில் கண்ணீர் வடித்தால் பாரத மாதா
கரையொன்றுமில்லாக் காளையர் மூவரை
கழுத்தை அறுத்ததனாலே கவலை கொண்டே”
என்று தியாகத் திருவுருவங்களை நமது கண்முன்பு நிறுத்தியுள்ள பாங்கு மறக்க இயலாது.
பொதுவாக பாடல்கள் பாடுவது மேட்டுக் குடிக்கே உரியது என்ற காலத்தில் பாமர மக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை மதுரகவிக்கே உண்டு.
தனது பாடல்கள் திரைப்படங்களாக இருந் தாலும், நாடக மேடைகளாக இருந்தாலும் அவற்றிலும் தேசபக்தியை ஊட்டமுடியும் என்று செய்து காட்டியுள்ளார்.
“ஆங்கிலேயர் தேடிவந்த தேசம் - நம்மை
ஆளநேரிட்டதவர் பாசம் - இனி
ஏங்கி இருப்பதுவும் மோசம் - இன்னும்
ஏன் வரவில்லை இந்தியர்க்கு ரோஷம்”
அவரது பாடல்களில் உள்ள கருத்துக்கள் பாமர மக்களுக்கு வாழ்வு கொடுத்தது. குறிப்பாக தெருவோர பிச்சைக்காரர்கள் வாழ்விற்குக் கை கொடுத்தது. அதே போன்று அண்ணல் காந்தியடிகளின் பாசத்திற்குரியவராக இருந்ததும் குறிப்பிடத் தக்கது.
இன்றைய திரை இசை, பெண்களை போகப் பொருளாகச் சித்திரித்துக் கொண்டுள்ளது. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்குமுன்பே மதுரகவி தன் பாடல்களால் பெண்களுக்குப் பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதே போன்று ஆணவக்கொலைகள் நடை பெறுவதும் இன்று பல்கிப் பெருகி வருகின்றது. ஆனால்,
“ஆதியிலும் பறையனல்ல
சாதியிலும் பறையனல்ல
பாதியிலே பறையன் ஆனேனே என் தங்கமே
பாரிலிது உண்மை தானே தங்கமே”
என்று சாதி என்பது இடையிலே வந்ததுதான் என தெளிவுபடுத்துகின்றார்.
தனது பாடல்களால் மக்கள் எழுச்சி பெற்று வருவது கண்டு கோபமடைந்த வெள்ளையர்கள் மதுரகவிக்கு எதிராக வழக்குகள் தொடுத்தபோது அதனை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டார்.
ஆனால் இன்றைய அரசியல்வாதிகளோ நாங்கள் அரசியல் சட்டத்தையா எரித்தோம்? இல்லை வெறும் காகிதத்தைத்தானே எரித்தோம் என்று மன்றாடியது நமது நினைவிற்கு வருவதைத் தடுக்க இயலவில்லை.
இன்று பலரும் தாங்கள் தான் தமிழுக்காக உழைப்பதாக நடித்துக் கொண்டுள்ளனர். ஆனால் அந்தக் காலத்திலேயே தனது இல்லத்திற்கு “தமிழகம்” எனப் பெயர் வைத்துள்ளார்.
இவரின் புலமையைப் பாராட்டி இராம நாதபுரம் சேதுபதி மன்னர் “முத்தமிழ் சேத்திர மதுரகவிபாஸ்கரதாஸ்” எனப் பெயரிட்டார்.
அதே போன்று எட்டயபுர மன்னர் இவரை பெருமைப்படுத்தியதோடு விளைநிலங்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.
இவரது புலமையை கவியோகி சுத்தானந்த பாரதியார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ஒளவை தி.க. சண்முகம், தீரர் சத்யமூர்த்தி போன்ற பல்வேறு துறை பெருமக்களும் பாராட்டியுள்ளார்கள்.
மதுரகவி தேசபக்தனாக, கவிஞராக, பாடகராக, நடிகராகத் திகழ்ந்தார் என்பது மட்டுமே இவரின் சிறப்பல்ல. அனைத்துக்கும் மேலாக தொழிற்சங்க வாதியாகவும் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தொழிற்சங்கங்கள் என்பது இன்று ஊதிய உயர்வு போனஸ் என்று குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிட்டது. ஆனால் 1926ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி மதுரையில் “தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம்” முதல் முறையாக நாடக நடிகர் களுக்காகத் துவக்கினார். அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். அனைத்துக்கும் மேலாக அச்சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகச் சொல்லி யுள்ளதுதான் குறிப்பிடத்தக்கது.
1. நடிகர்கள் முன்னேற்றம்
2. மது விலக்கு
3. கதர்துணி குறித்து பரப்புரை
4. தேசத் தொண்டு
இப்படி பல்வேறு தகவல்கள் இந்தச் சிறிய நூலில் உள்ளன.
11 தலைப்புகள், 78 பக்கங்கள், ஏறத்தாழ 200 பாடல்களின் பட்டியல் என “கடுகைத் துளைத்து ஏழு கடலை புகுத்திய” குறள் போன்றுள்ளது.
இதனைத் தோழர் அய்யாசாமி எழுதியுள்ளார். இதை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் வெளியிட்டு உள்ளது. இவர்கள் இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.
எதிர்கால தலைமுறைக்குப் பாடமாகவும், இந்த ஆவணத்தை விரிவுபடுத்தி வரும் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் கடமையும் இனிமேலாவது ஆட்சியாளர்கள் செய்வார்களா?
அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
மதுரகவி பாஸ்கரதாஸ்
வாடிநவும் பணியும்
தொகுப்பு: க.அய்யாசாமி
வெளியீடு: 41-B,, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.
விலை: ரூ.70.00