vetri vetkai[1911ஆம் ஆண்டு உ.வே. சாமிநாதையர் மாணவர்களுக்காகப் பதிப்பித்து வெளியிட்ட புறநானூறு (101- 125 பாடல்கள் வரை) மூலமும் உரையும் கொண்ட பதிப்பு, சாமிநாதையர் பெங்களூர் செல்லும்போதெல்லாம் வாழ்குடை சுப்பிரமணிய சர்மா வீட்டில் தங்குவது வழக்கம். சர்மா அவர்கள் 1919ஆம் ஆண்டு பள்ளிக்கூட மாணவர்களுக்காகப் பதிப்பித்து வெளியிட்ட வெற்றிவேற்கை பதிப்பு ஆகிய இரண்டின் முகப்புப் பக்கம்]

யோனே நோகுச்சி உலகப் புகழ்பெற்ற ஜப்பானியக் கவிஞர்களுள் ஒருவர். ஜப்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் கவிதை எழுதும் புலமைபெற்ற நோகுச்சியைத் தமிழ்ப் பயண இலக்கியத்தின் முன்னோடியான ஏ.கே. செட்டியார் ஒருமுறை சந்தித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் சக்குராயாமா என்ற பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த தோட்டமொன்றின் நடுவேயிருந்த நோகுச்சியின் அழகிய வீட்டில் இருவரின் சந்திப்பு நடைபெற்றது.           

ஏ.கே. செட்டியார், நோகுச்சியின் சந்திப்பு குறித்து எழுதியபோது நோகுச்சியின் வீட்டில் கண்ட காட்சியைப் பற்றி இப்படி எழுதினார்: “பனையோலையில் எழுதப்பெற்ற வரவேற்புரை ஒருபுறம்; வெள்ளித் தாம்பாளம், வெள்ளிக் கூஜா முதலிய சன்மானப் பொருள்கள் ஒருபுறம்; தாகுரின் அரிய நூல்கள் பிறிதொரு புறம்! இந்தியச் சர்வகலாசாலைகள் அளித்த வரவேற்புப் பத்திரங்கள் ஒருபுறமாக வைக்கப் பெற்றிருந்தன.”

ஜப்பானியக் கவிஞர் நோகுச்சி, சன்மானமாகப் பெற்ற பொருட்களைத் தம் வீட்டில் காட்சிப்படுத்தி வைத்திருப்பது பற்றி செட்டியார் எழுதியிருப்பதைப் படித்தபோது தமிழ்ப் பெருங்கவிஞர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்பொன்று சற்றென்று முன்வந்து நின்றது.

ஒருமுறை, திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர்மீது பிள்ளைத்தமிழ் நூலொன்றைப் பாடி முடித்து அரங்கேற்றிய பின்னர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்குத் திருவாவடுதுறை மடத்தின் சார்பாக ஏறுமுக உருத்திராட்ச கண்டி ஒன்று சன்மானமாக அளிக்கப்பட்டது. அந்தக் கண்டியைப் பணத்திற்கு முட்டுப்பாடு வரும்போதெல்லாம் அடகு வைப்பதும், பணம் கிடைத்தபின் கடன்காரர்களிடத்தில் வட்டியும் முதலும் கொடுத்து மீட்பதுமாக மகாவித்துவானின் வாழ்க்கை நிலை இருந்தது.

ஒருமுறை புராண அரங்கேற்றம் செய்வதற்காகத் திருப்பெருந்துறைக்குப் பயணம்செய்ய நேர்ந்தபொழுது கண்டியை மீட்டு அணிந்துகொள்ள வேண்டுமென்று உ.வே. சாமிநாதையர் உள்ளிட்ட அவரது மாணவர்கள் வற்புறுத்திச் சொன்னபோது கையில் பணம் இல்லாமல் சோழன்மாளிகை இரத்தினம் பிள்ளையிடம் முந்நூறு ரூபாய் கடனாகப் பெற்றுவரச் செய்து கண்டியை மீட்டு அணிந்துகொண்டு சென்றிருக்கிறார்.

மகாவித்துவானவர்கள் தல தரிசனத்திற்காவும், புராணம் இயற்றி அரங்கேற்றம் செய்வதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இளமைக் காலத்தில் வேண்டிய வித்துவான்களைத் தேடிச் சென்று பாடம் கேட்கும்பொருட்டும் அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

1841ஆம் ஆண்டு ஒருமுறை திரிசிரபுரம் இலட்சுமணப் பிள்ளையின் உதவியினால் சென்னைக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் மகாவித்துவானுக்கு வாய்த்தது. காஞ்சீபுரம் சபாபதி முதலியார், திருவேங்கடாசல முதலியார், திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை, மழவை மகாலிங்கையர் ஆகிய அறிஞர்களை இந்தப் பயணத்தின்போது சந்தித்துத் தமிழ் நூல்கள் பலவற்றில் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து கொண்டார்.

மகாவித்துவானின் பல்வேறு பயணங்களுள் பெங்களூர்ப் பயணம் மிக முக்கியப் பயணமாக இருந்தது. தம் வாழ்நாளின் இடைப்பகுதியில் (1850) மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கல்வி ஆற்றலால் புகழ்பெற்று விளங்கியிருந்தார். தமிழ்நாட்டின் எல்லை கடந்தும் அவரது புகழ் அப்போது பரவியிருந்தது. ஒருமுறை இவருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ‘மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இந்தியா’ என்று மட்டும் முகவரியில் எழுதப்பட்டிருந்தது. அக்கடிதம் எந்தத் தடையுமின்றி இவருக்குக் கிடைத்தது. மகாவித்துவானின் பெரும்புகழ் ஒன்றே அதற்குக் காரணம் என்பது மிகையாகாது.

மொழி, மாநிலம் என்ற எல்லைகள் கடந்து மகாவித்துவானைப் பலரும் அக்காலத்தில் தெரிந்துவைத்திருந்தனர். பெங்களூரிலிருந்த தேவராசப்பிள்ளை என்பவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கல்வி ஆற்றலையும் பாடம் சொல்லும் திறமையையும் அறிந்து வைத்திருந்தார்.

தேவராசப் பிள்ளையின் தந்தை கம்பெனியாருக்கும் மைசூர் அரச குடும்பத்தாருக்கும் துவிபாஷி (மொழி பெயர்ப்பாளர்) வேலை பார்த்து வந்தார். இதனால் தேவராசப் பிள்ளையின் குடும்பம் செல்வத்திலும் புகழிலும் நன்றாக விளங்கியிருந்தது. தேவராசப் பிள்ளையவர்கள் தமிழ் நூல்களை விரும்பிக் கற்கும் இயல்பைக் கொண்டவராக இருந்தார்.

பெங்களூரில் இருந்த வித்துவான்களிடம் சில தமிழ் நூல்களை தேவராசப் பிள்ளை கற்றறிந்திருந்தார். மேலும் பல தமிழ் நூல்களைக் கற்றறிந்துகொள்ளும் விருப்பம் அவரிடம் மிகுதியாக இருந்தது. அதற்குத் தக்கவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பதை அவர் அறிந்துகொண்டார். மகாவித்துவானிடம் பாடம் கேட்க வேண்டுமென்ற தம்முடைய விருப்பத்தை நண்பர்கள் மூலமாக மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார்; பெங்களூருக்கு வரவழைத்து அவரிடம் தமிழ் நூல்களைப் பாடம் கேட்பதற்குரிய ஏற்பாட்டைச் செய்யத் தொடங்கினார். திரிசிரபுரத்தில் (திருச்சி) இருந்த தேவராசப் பிள்ளையின் நண்பர்கள் மூலமாக மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெங்களூர்ப் பயணம் ஏற்பாடாயிற்று.

பெங்களூர் செல்வதற்கு முன்பாக மகாவித்துவானவர்கள் “இங்கே படித்துக்கொண்டு உடனிருக்கும் மாணவர்களையும் அழைத்துக் கொண்டு வரலாமா?” என்று கேட்டார். “எவ்வளவு பேர்களை வேண்டுமானாலும் அழைத்து வரலாம்” என்று அவர்கள் உறுதியளித்தனர்; இவர் பெங்களூர்ப் பயணத்திற்கு மகிழ்ந்து உடன்பட்டார். பிள்ளையவர்கள் தம் குடும்பத்தினர், மாணவர் சிலருடன் 1850ஆம் ஆண்டு (சௌம்ய ஆண்டு) பெங்களூர் சென்றார். அப்போது மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு வயது 35.

உடன் சென்ற மாணவர்களுள் சுப்பராய செட்டியாரும் ஒருவர். பெங்களூர் சென்று தேவராசப் பிள்ளையின் வீட்டில் தங்கியிருந்து தேவராசப் பிள்ளை விரும்பிய தமிழ் நூல்களிலிருந்து பாடம் சொல்லி வந்தார். இடையிடையே தேவராசப் பிள்ளை முன்னரே தாம் கற்று முடித்திருந்த நூல்களில் ஏற்பட்டிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தும் வந்தார். இருவருக்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் கழிந்தது.

பிள்ளையவர்கள் பெங்களூர் செல்லுகையில் உறையூர்ப்புராணத் தமிழ் வசனத்தைக் கையில் எடுத்துச் சென்றிருந்தார். ஓய்வு நேரங்களில் மெல்ல மெல்ல சிந்தித்து அதனைச் செய்யுளாகப் பாடியும் வந்தார்.

பெங்களூர்ப் பயணத்தின்போது திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்து விளங்கிய சிவஞான முனிவரிடம் தவசிப் பிள்ளையாக இருந்த பெரியவர் ஒருவரையும் ஒருநாள் கையுறையுடன் சென்று சந்தித்து சிவஞான முனிவரின் இயல்புகளைக் கேட்டறிந்து இன்புற்றார்.

கன்னட மொழியில் வழங்கிவந்த குசேலோபாக்கியானத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்யுள் நடையில் இயற்ற வேண்டுமென்பது தேவராசப் பிள்ளையின் விருப்பமாக இருந்தது. அதை அறிந்து மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அவற்றைச் செய்யுள் நடையில் இயற்றி தேவராசப் பிள்ளைக்கு அளித்தார்.

1850ஆம் ஆண்டு (சாதாரண - சித்திரை) அந்நூலை இவரே பரிசோதித்தும், சிறப்புப் பாயிரம் அளித்தும் வல்லூர் இராமசாமிப் பிள்ளை மூலமாக அச்சிட்டு வெளியிடவும் செய்தார். ஸ்காந்த புராணத்திலுள்ள ஆறு சங்கிதைகளில் ஒன்றான சூதசங்கிதை என்ற நூலையும் தேவராசப் பிள்ளைக்கு இயற்றி அளித்தார். தேவராசப் பிள்ளைக்குப் பல நூல்களைப் பாடம் சொல்லி முடித்தார்.

சிலகாலம் கழித்து மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் ‘ஊர்செல்ல வேண்டுமென்று’ தேவராசப் பிள்ளைக்குத் தெரிவித்தார். புறப்படும்பொழுது ஐயாயிரம் ரூபாய் பணம், உயர்ந்த பீதாம்பரம் முதலியவைகளை மகாவித்துவானுக்குத் தேவராச பிள்ளை அளித்தார். இவருக்கு அதுவரையில் அவ்வளவு பெரிய தொகையை யாரும் அளித்ததில்லை என்பதால் மிகவும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டார்.

புறப்படுகையில் பெங்களூரில் இருந்த வேறுசில செல்வர்களும் மகாவித்துவானுக்குப் பொருளுதவி செய்தனர். பயணத்திற்கு வேண்டிய வசதிகள் தேவராச பிள்ளையால் செய்தளிக்கப்பட்டன. மகாவித்துவான் நன்முறையில் திரிசிரபுரம் வந்து சேர்ந்தார். பிள்ளையவர்கள் பெங்களூருக்குச் சென்று பெற்றுவந்த சிறப்பு பற்றி திரிசிரபுரம் எங்கும் அந்நாளில் வியந்து பேசப்பட்டது. மகாவித்துவானவர்கள் தம் வாழ்நாளில் தமிழக எல்லை கடந்து சென்ற ஒரே ஊர் பெங்களூர் மட்டுமேயாகும்.

ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் போன்றே அவரது மாணவரான உ.வே. சாமிநாதையரும் வாழ்நாளில் வெளிமாநிலப் பயணமாகப் பெங்களூருக்கு மட்டுமே சென்றுவந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

உ.வே. சாமிநாதையரவர்கள் சென்னை, மைசூர், அண்ணாமலை, ஆந்திர பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பாடத்திட்டக் குழு உறுப்பினராக இருந்தார். அதனால் அப்பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழுக் கூட்டம் எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்துகொள்வது வழக்கமாக இருந்தது.

ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக் குழுக் கூட்டம் பெரும்பாலும் சென்னையிலேயே நடைபெறும் என்பதால் ஆந்திராவுக்குச் செல்ல வேண்டிய சூழல் சாமிநாதையருக்கு ஏற்பட்டதில்லை. மைசூர் பல்கலைக்கழகத்தின் கூட்டம் சில நேரங்களில் சென்னையில் நடைபெற்றாலும், பெரும்பாலும் பெங்களூரில் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இதனால் சாமிநாதையர் பலமுறை பெங்களூருக்குச் சென்று வந்திருக்கிறார். பெங்களூர்ப் பயணம் அவரது ஓய்வுக் காலத்திற்குப் பின்னர் (1919) அமைந்திருக்கிறது.

சாமிநாதையர் 1920ஆம் ஆண்டில் இரண்டுமுறை பெங்களூருக்குச் சென்று வந்திருக்கிறார். 1920ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் நாள் மாலை சென்னையிலிருந்து இரயிலில் புறப்பட்டு மறுநாள் காலையில் பெங்களூர் சென்று சேர்ந்திருக்கிறார். பெங்களூர் வா. பி. சுப்பிரமணிய சர்மா (வாழ்குடை பி. சுப்பிரமணிய சர்மா) பெங்களூர்த் தண்டு இரயில் நிலையத்திற்கு வந்து இவரை வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார். சர்மா வீட்டில் தங்கியிருந்துவிட்டு அன்று பிற்பகல் நடைபெற்ற மைசூர் பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இன்னின்ன நூல்களைப் பாடமாக வைக்கலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சாமிநாதையர் இந்தப் பெங்களூர்ப் பயணத்தின்போது இருமல் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இரயிலில் உடன் பயணித்த இசுலாமியப் பயணி (துலுக்கப் பிரயாணி என்று எழுதியிருப்பார் சாமிநாதையர்) ஒருவர் “உப்பு நீரில் நனைத்து ஊற வைத்து வறுத்த நாலு வாதாம் (பாதாம்) பருப்பை முதலில் உண்டும் பின்னர், வற்றல் மிளகாயைக் கிள்ளிப் போட்டுக் காய்ச்சிய அரைச் சேர் பாலை இரவு உணவின் பின் உண்டுவந்தால் மூனு வேளையில் இருமல் வாங்கிவிடும்” என்று சொல்லியிருக்கிறார். அதை அப்படியே செய்திருக்கிறார். பயணி சொல்லிய வைத்தியம் இவருக்கு நல்ல பயனை அளித்திருக்கிறது.

இதே ஆண்டு மே மாதத்திலும் ஒருமுறை பெங்களூர் சென்று வந்திருக்கிறார். 1920ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சாமிநாதையர் பெங்களூர் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சாமிநாதையர் எப்போது பெங்களூர் சென்றாலும் சுப்பிரமணிய சர்மா வீட்டில் தங்குவது வழக்கமாக இருந்தது.

சாமிநாதையருக்கு 1928ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அன்று பெங்களூர் நரஸிம்மாச்சாரியார் கூட்டத்திற்கு வரவேண்டுமென்று கடிதம் எழுதியிருக்கிறார். கடிதத்துடன் நடராசர் பிரசாதத்தையும் ஆச்சாரியார் அனுப்பி வைத்திருந்தார். அவரின் அழைப்பைக் கண்டு ஜனவரி 26ஆம் நாள் சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை பெங்களூர் சென்று சேர்ந்திருக்கிறார். சனிக்கிழமை (ஜனவரி, 28) பாடத்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. கூட்டத்திற்குப் பின்னர் நரசிம்மாசாரியார் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார். மைசூர் மஹாராஜா கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ராகவாசாரியார் இவரைச் சந்தித்திருக்கிறார். மாலையில் சுப்பிரமணிய சர்மா வந்து இவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 29) பெங்களூரிலிருந்த பி. டி. ஸ்ரீநிவாசையங்காரையும், சாமிநாதையர் என்பவரையும் சென்று சந்தித்திருக்கிறார். மறுநாள் சேவூர் ஸ்ரீநிவாசையங்காரையும், பம்பை சுப்பிரமணிய ஐயரையும் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார். ஜனவரி 30ஆம் தேதி இரவு பெங்களூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.

சாமிநாதையர் 1929ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்று ஜனவரி 26ஆம் நாள் பெங்களூரை அடைந்து அன்று மாலையில் நடைபெற்ற பாடத்திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இந்த முறை சாமிநாதையர் நாராயணராவ் என்பவரை உடனழைத்துக் கொண்டு பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். ஜனவரி 28ஆம் நாள் மாலை பெங்களூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை சென்னை வந்தடைந்திருக்கிறார்.

1930ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருமுறை கி.வா. ஜகந்நாதையரை உடனழைத்துக்கொண்டு பெங்களூர் சென்றிருக்கிறார். ஜனவரி 24ஆம் நாள் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை பெங்களூர்த் தண்டு இரயில் நிலையம் சென்று சேர்ந்திருக்கிறார். சுப்பிரமணிய சர்மா இரயில் நிலையத்திற்கு வந்து இவரை அழைத்துச் சென்றிருக்கிறார். 25ஆம் தேதி மாலையில் பெங்களூர்ப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இந்தப் பயணம் மேற்கொண்ட காலத்தில் தக்கயாகப்பரணி பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தமையால் சுப்பிரமணிய சர்மாவின் குருநாதர் ராமதாசர் என்பவரைச் சந்தித்து தக்கயாகப்பரணி தொடர்பான செய்திகளைக் கேட்டறிந்தார்.

ஜனவரி 27ஆம் நாள் இரண்டாம் வகுப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் மாலையில் சிட்டி இரயில் நிலையத்திலிருந்து இண்டர் கிளாஸில் சென்னைக்குப் புறப்பட்டிருக்கிறார். மறுநாள் காலை 6.30 மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தார். இரயில்நிலையத்திற்குக் கோதண்டராமன் வந்து இவரை அழைத்து வந்திருக்கிறார்.

சாமிநாதையர் 1930ஆம் ஆண்டு, ஏப்ரல் 20ஆம் நாள் சி. சுப்பிரமணியத்தை உடனழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு 25ஆம் தேதி ஸ்ரீரங்கப்பட்டணம் சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு அன்று இரவே புறப்பட்டு மறுநாள் (ஜனவரி 26) காலை சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.

1934ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னையிலிருந்து இரவு இரயிலில் புறப்பட்டுப் பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். சுப்பிரமணிய சர்மா வீட்டில் தங்கியிருந்து விட்டு மறுநாள் பெங்களூர் சென்ட்ரல் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் நரசிம்மாசாரியார், கோபாலசாமி ஐயங்கார், பதிவாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பாடப் புத்தகங்களும், தேர்வுகளும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டன. அங்கிருந்து அலசூருக்குச் சென்று சர்மா வீட்டில் தங்கியிருந்தார். அங்குப் பெங்களூர்க் கோட்டை உயர்நிலைப் பள்ளிக்கூடத் தமிழ்ப் பண்டிதர் செங்கல்வராய ஐயர் வந்து பரிசிக்கப் பெற்று வித்துவான் தேர்வுக்குக் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்.

ஜனவரி, 11ஆம் நாளன்று K.R.சீனிவாசையங்கார், R. நரசிம்மாசாரியார் இருவரின் வீட்டிற்கும் சென்று வந்திருக்கிறார். சந்திப்பின்போது நரசிம்மாசாரியார் தம்முடைய கன்னடமொழி சரித்திர நூலை இவருக்குக் கொடுத்திருக்கிறார். அன்று மாலை பெங்களூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.

மகாவித்துவான் காலத்திற்கும் சாமிநாதையர் காலத்திற்குமான கல்விச் சூழல் வெகுவாக வேறுபட்டிருந்தது. இருவரும் இருவிதமான கல்விமுறைகளை எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். ஆசிரியரைத் தேடிச் சென்று அல்லது வசதியிருப்பின் ஆசிரியரை அழைத்துக் கொண்டு வந்து விரும்பிய நூல்களைப் பாடம் கேட்டுக் கொள்ளும் சூழல் மகாவித்துவானின் காலத்தில் இருந்தது. இந்தப் பின்புலத்தில்தான் மகாவித்துவானின் பெங்களூர் பயணம் அமைந்தது. சாமிநாதையரும் இந்தக் கல்விப்புலப் பின்புலத்தில் வந்தவராயினும் நிறுவனக் கல்விப்புலச் சூழலையும் சந்தித்தவராக இருந்தார். சாமிநாதையரவர்களின் காலத்தில் நிறுவனக் கல்விமுறை நன்றாக வளர்ச்சி பெற்றிருந்தது. அதன் பின்புலத்தில்தான் சாமிநாதையரின் பெங்களூர் பயணம் அமைந்தது. தமது 65ஆம் வயதில் சாமிநாதையர் பெங்களூருக்குப் பயணம் மேற்கொண்டார். ஒரு நூற்றாண்டை நிறைவடையும் அவரது பெங்களூர்ப் பயண நினைவுகளை அவரது 165ஆம் ஆண்டு பிறந்தநாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்.

Pin It