தங்கப்பொத்தானோடு பட்டாடை உடுத்தி பள்ளிக்குச் செல்லும் சிறுமியாக அல்ல. பின்னுக்குத்திய சட்டையோடு செல்பவளைப் போன்ற அட்டை கிழிந்த புத்தகமாகத்தான் என்னையும் என் கவிதைகளையும் அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. கவிதை எனக்குள் துளிர்விட்ட தருணத்தினைவிட அதை நேசிப்பதற்காக கிடைத்த பொழுது மிக அற்புதமானது. தனது கல்லூரி டைரியில் வியக்க வைக்கும் விதவிதமான கவிதைகளை எழுதி வைத்த என் பெரிய அண்ணனின் கவிதைகள்தான் எனக்கு கவிதைகளை அறிமுகப்படுத்தின. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நான் எழுதிய அம்மாவைப் பற்றிய கவிதையை அண்ணன்கள் பாராட்டியபோதும் அக்காக்கள் வியந்தபோதும் கவிதை எனக்குள் வேர் பிடித்தது.

பள்ளியில் நடைபெறும் கவிதைப் போட்டிகளில் பங்கு பெறுவதும் வெளியூர்களுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் செல்வதுமாக தொடங்கியது என் கவிதைப் பயணம். ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாள் நடக்கின்றதோ இல்லையோ நிச்சயமாக எங்கள் ஊரில் கலவரம் நடக்கும். இரு சக்கர வாகனம் இருப்பவர்கள் பத்து, இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தங்கள் சொந்தக்காரர்களின் ஊர்களுக்குச் சென்று விடுவார்கள். ஓலை வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் தங்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு துணி மணிகளோடு ஓட்டு வீடுகளுக்கும் மாடி வீடுகளுக்கும் வந்து விடுவார்கள். செம்பூர் கிராமத்தினைக் கடந்துதான் பள்ளிக்கூடம், மருத்துவமனை இன்ன பிற அத்தியாவசியத் தேவைகளுக்காக அத்திப்பாக்கம் சேரிக்காரர்கள் வந்தவாசி நகரத்திற்குச் செல்ல வேண்டும். இது போன்ற நாட்களில் பல நாட்கள் நாங்கள் பள்ளிக்கூடம் சென்றதே இல்லை.

வீடுகள் சூரையாடப்பட்டு கொளுத்தப்படும். வயசுக்கு வந்த பெண்கள் தெருவில் நடமாடக் கூடப் பயப்படுவார்கள். கலவரப் பொழுது களில் நெருங்கியபடி ஒருவர் மீது ஒருவர் தூங்கிக் கிடப்போம். கைக்குழந்தைகளும் கர்ப்பினிப் பெண்களும் தவித்துப் போவார்கள். சமையல் சமைத்து உண்ணக்கூட தைரியம் இருக்காது. எந்நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இத்தகைய பொழுதுகள்தான் என்னையரு சேரிப் பறச்சியாக உணர வைத்தன. ஆதிக்க ஜாதிக்கும் ஆரிய ஜாதிக்கும் வேண்டுமானால் கவிதை உயிர் வேதனையாக இருக்கலாம். கலவரத்தின் போதெல்லாம் போலிசுக்கு பயந்து தலைமறைவாகிப்போன ஆண்கள் இல்லாத எங்கள் அத்திப்பாக்கத்தில் ‘போலிசுங்களோ ஊரானுங்களோ எந்த மயிரானுங்க வந்தாலும் தொடப்பக்

கட்டையால அடிங்கடி’ என்று கோவணம் கட்டிய எம் சேரிப் பெண்களிடமிருந்துதான் நான் பெண்ணியத்தையும் கவிதை அரசியலையும் கற்றுக்கொண்டேன். எனது முதல்கவிதை ‘மனனுயிர்’ இதழில் வெளிவந்தது. பின்னர் வந்தவாசி த.மு.எ.க.ச மேடைகளில் எனது கவிதைகள் பரவலாக அறியப்பட்டன. எனது 19 வயதில் பேரா. அமைதி அரசுவின் பொன்னி நாடகத்தில் பொன்னியாக நடித்ததைத் தொடர்ந்து அங்குலிமாலா, புத்தரும் சோபகனும், கு.ப.ரா கவிதையுலகம், நா.பிச்சமூர்த்தியின் கவிதை நாடகம், என்று இன்றுவரை பல நாடகங்களில் நடித்து வருகிறேன். எனது முதல் தொகுப்பான ‘திசைகளைப் பருகியவள்’ பனிக்குடம் வெளியீடாக 2006ல் வெளிவந்தது.

எனது இளங்கலை படிப்பின் போது அறிமுகமான (தலித் மாணவர்களின் செயல்பாட்டிலும் முன்னேற்றத் திலும் அக்கறையோடு செயல்பட்டு வரும்) துடி தலித் மாணவர் இயக்கத்தில் இணைந்து அனைத்து விடுதி மாணவர்கள் தொடங்கி, கிராமப்புற மாணவர்கள் வரை கல்வி - அரசியல் - சமூகம் - பௌத்தப் பண்பாடு குறித்தான பயிற்சிப்பட்டறைகள் நிகழ்த்தி வருகின்றோம்.

நாக்கூசாமல் தன்னையரு அறிவுஜீவியெனக் கூறித்திரியும் பின் நவீன வட்டத்துள் பிணைந்து பூடகங்களாய் பிரதிபலிக்கும் கவிதைகளைச் செய்து அலுத்துப்போன எனக்கு ஆப்பிரிக்க குழந்தை போலிருக்கும் சேரியின் அம்மணக் குழந்தை பாடுபொருளானபோது கவிதை எனக்குள் பரவசத்தைத் தந்தது. மேற்கத்திய பெண்ணியமாய் செரித்துத் திரிக்கப்பட்ட சீணுக்ம் நிகரான உடையோ, நடையோ, பழக்கங்களோ எனக்கும் என் சமூகத்திற்குமான விடுதலையைப் பெற்றுத்தராது என்பதிலும் புரட்சியாளர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் முன்னெடுத்த பௌத்த மார்க்கமே சமூக விடுதலையையும் தனிமனித விடுதலையையும் பெற்றுத் தரும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். பௌத்த பண்பாட்டு - அரசியல் - தத்துவம் இவற்றை முன்னிறுத்த முயலும் பின்வருவனவையே எனது கவிதையின் கருப்பொருள்கள்

- பார்ப்பனீய ஜாதி இந்துத்துவங்கள்

- அறிவோடு தோற்றுப்போகும் தலித் சமூகத்தின் வெகுளிகள்

- எந்த அவையிலும் எங்களைப் பணிந்து கை கட்ட வைக்கும் வறுமை

- அந்த வறுமையிலும் கொடூரமான முதலாளித்துவ சுகபோகங்கள்

- பொழுது வாழ்க்கையோடு போட்டிப் போட முடியாத எங்களின் போதாமைகள். எனது உரிமைகளை நூறாக உடைத்து அந்த நூறில் ஒன்றை இலவசமென்று வழங்கும்போது பல்லை இளித்துக் கொண்டு வாங்குவதற்கு நானொன்றும் அன்னதானத்தை வாங்கிக்கொண்டு அரசனை வாழ்த்திப்பாடும் புலவர் தலைமுறையைச் சார்ந்தவளல்ல. சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்தையும், மனிதருக்கும் மனிதருக்குமான உறவையும் போதிக்கும் பௌத்தம்தான் எனக்குக் கடல்/ தோணி/ துடுப்பு/ கவிதை எல்லாமே.

நிலத்திற்கொரு திணையும் குலத்திற்கொரு தொழிலும் கற்பித்த தொல்காப்பியத்தை விட சிறைச்சாலையை அறச்சாலையாகவும், காதலால் திரிந்த உதயணனை காம விகாரமற்று பண்படுத்திய பௌத்த மணிமேகலையே பெண் சமூக விடுதலைக்கு அடிப்படையாய் திகழ்கின்றாள். நிலப்பிரபுத்துவக்கால சாணி பாலைப் போல் மனிதனுக்கு மலத்தையும் சிறுநீரையும் திணிக்கின்ற மனிதனை செருப்பெடுத்து அடிக்கின்ற கவிதை செய்யாமல் அருவங்களுக்கு வண்ணம் பூசி அலங்காரமாய் ஆடை சூட்டி படைப்புத் திமிரோடு வரும் படைப் பாளிகளைக் கிண்டலடிக்கக் கூடப் பிடிக்கவில்லை. சமூகம் பேசாமல் சமூகத்திற்காகப் பேசாமல் படைக்கப் படும் தனிபுலம் பல்காரர்களை காடுவெட்டிகளாகத்தான் பார்க்க முடிகிறது. ஏனென்றால் அவர்களால் காகிதமரம் வீணாகின்றது.

Pin It