இந்திய மொழிகளில் தமிழ் நூல் ஒன்றுதான் முதன்முதலாக அச்சாக்கம் பெற்றது என்பது வரலாறுகண்ட உண்மை; 1557 - ஆம் ஆண்டு கொல்லத்தில் அச்சேறிய தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) எனும் சிறு நூல் போர்ச்சுக்கீசிய மொழி நூல் ஒன்றின் தமிழாக்கம். அடுத்து தமிழ் நூல்களைப் பெருமளவில் அச்சுவயப்படுத்தியவர் ஈழநாட்டின் ஆறுமுகநாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து தமிழ்நூற்களைப் பதிப்புச் செய்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளை. தமிழ் நூற்பதிப்புப் பணியின் தலை மகன் என அறிஞர் உலக போற்றும் இப்பெருமான் 1832 - ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை ஓட்டியுள்ள சிறுப்பிட்டி எனும் சிற்றூரில் வைரவநாதர் - பெருந்தேவி ஆகியோரின் மகனாகப்பிறந்தார்.

 

தாமோதரனாரின் பதிப்புப் பணி பற்றி ஓரளவு அறிந்துள்ள தமிழகம் அவர் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி நன்கறிந்துள்ளது எனக் கூறுவதற்கில்லை. யாழ்ப்பாணம் - வன்னிப்பகுதிகளில் புலம்பெயர்ந்து கடும் துன்பதுயரங்களுக்கு ஆட்பட்டு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக பட்ட வகுப்புகளை அந்த முகாம்களிலேயே நடத்த சென்னைப் பல்கலைக்கழகம் அண்மையில் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாமோதனாருக்கு சென்னைப்பல்கலைக்கழகத்துடன் உள்ள உறவு பற்றிய செய்தி வியப்புமேலிடச் செய்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் 1857 - இல் நிறுவப்பெற்றது நமக்குத் தைரியம். அதன் முதலிரண்டு பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தைச் சேர்நதவர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் சி.வை. தாமோதரம்பிள்ளை, டி.சி.டபிள்யூ விசுவநாதபிள்ளை மற்றொருவர் என்பதும் அவ்வளவாகத் தெரியாது.

 

இன்று Jaffna College என வழங்கப்படும் கல்வி நிறுவனத்தின் பழைய பெயர் வட்டுக்கோட்டை வேதாகமப்பள்ளி. அமெரிக்க மிஷனரிகள் இதை நடத்தி வந்தனர். (வட்டுக்கோட்டை Botticotta  எனும் பெயரால் அறியப்பட்டது.) அப்பள்ளியிலிருந்து உயர்கல்விக்காக தாமோதரம் பிள்ளையும் விசுவநாதபிள்ளையும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இங்கு இருவரும் பி.ஏ.பட்டம் பெற்றனர். (1858); இருவருக்கும் இரண்டாம் வகுப்பில்தான் தேறினர். விசுவநாதபிள்ளையை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற தாமோதரம்பிள்ளை முதலிடம் பெற்றுச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி எனும் பெருஞ்சிறப்பைப் பெற்றார்.

 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவராக நுழைந்தபோது அவருடைய பெயர் சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரம்பிள்ளை என்றே பதிவாகியுள்ளது. கிறித்தவராகத் திருச்சபை உறுப்பினரானபோது முறைப்படி அவர் சார்லஸ் வின்ஸ்லோ கிங்ஸ்பரி எனும் பெயர் சூட்டப்பெற்றார். ஆனால் ஊருலகம் அவரைத் தாமோதரம்பிள்ளை என்றே அறியும். அவருடைய தந்தையார் தமிழ்ச்சைவக்குடும்பங்களிலிருந்து முதன் முதலில் கிறித்துவத்தைத் தழுவியவர்களில் ஒருவர். (பாதிரியாராக வாழ்ந்த வைரவநாதரின் கிறித்தவப் பெயர் சைரஸ் கிங்ஸ்பரி. தாமோதரம் பிள்ளையின் நெருங்கிய உறவினர்களில் ஒருவர் நீலன் திருச்செல்வம், மற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் அமைதிப்பணியில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ரஞ்சன்.)

 

சங்க இலக்கியங்களில் மனதைப் பறிகொடுத்து ஓலைச் சுவடிகளைத் தேடும் முயற்சியில் பல திருமடங்களுக்கும் செல்ல நேர்ந்த போது தாமோதரம் பிள்ளை எனும் பெயர் அனுகூலமாக இருக்கும் என்று மீண்டும் பழைய பெயரைச் சூட்டிக் கொண்டார் எனவும் கருதப்படுகிறது. பட்டம் பெற்றபின்பு சென்னை அரசுப்பணியில் தணிக்கையாளராகச் சேர்ந்த தாமோதரனார் சட்டம் பயின்று 1871 - இல் பட்டம் பெற்றார். புதுக்கோட்டைச் சிற்றரசில் சட்டத்துறையில் கடமை ஆற்றி புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து 1890-ல் ஓய்வு பெற்றார். ‘ராவ்பகதூர்’ பட்டம் அவரைத் தேடி வந்தது; பிரதம நீதிபதி என்ற முறையில் மன்னருக்குப் பதிலாகச் சிலகாலம் ஆட்சிப் பொறுப்பில் (Regent) இருந்தார்.

 

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் ஓலைச்சுவடிகளைத்தேடுவதிலும் பதிப்பிப்பதிலும் முழுநேரத்தையும் செலவிட்ட தாமோதரனார் பற்றித் திரு.வி.க. அவர்களின் குறிப்பு மனம்கொள்ளத்தக்கது; “பதிப்புப்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுகநாவலர். சுவர்களை எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை. கட்டமைத்தவர் சுவாமிநாத அய்யர்”

 

நாவலரையும் அய்யர் அவர்களையும் அறிந்த அளவுக்கு கிங்ஸ்பரி - தாமோதரம் பிள்ளையை அறிவோமா? நன்றியறிதல் பற்றித் திருக்குறள் நிறைய பேசுகிறது.

 

“ காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடையார்

-பரிதிமாற்கலைஞர்

Pin It