பண்டைக் காலத்திலிருந்தே மனித குலம் தனது அறிவாற்றலையும் மனோபாவனையையும் புலப் படுத்தும் வகையில் பல இலக்கியங்களைப் படைத் திருக்கிறது. ஆயினும் தனக்கே உரிய விதிகளுடன் திகழும் நாவல் என்ற இலக்கியத்துறை தொழிற்புரட்சிச் சகாப்தத்தின் நன்கொடையேயாகும். அதை அச்சு யந்திரத்தின் சிருஷ்டி என்றும் ஒரு வகையில் குறிப் பிடலாம்.

ஒன்றோடொன்று உயிர்த்தொடர்பு கொண்டிராத பஞ்ச தந்திரக் கதைகள் முதலிய கதைக்கோவைகளைப் போலவல்லாமல், நாவல் உறுப்பழகும் ஒருமை நயமுமாய்ப் பெற்றுப் பொலியும் நெடுங்கதையாக உள்ளது. வாழ்வின் ஏதோ ஓர் அம்சத்தைத் தன் கற்பனை வளத்தால் புதிதாகச் செப்பம் செய்து தரும் சிறுகதை ஆசிரியனைப்போலவல்லாமல், அகலக்கால் விரித்து, வாழ்வின் பல்வகை அம்சங்கள் வெவ்வேறு கோணங் களிலிருந்து மனோபாவனைச் சிறப்புடன் நோக்கும் உரிமை நாவலாசிரியனுக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அவன் எத்துணைதான் சஞ்சாரம் செய்த போதிலும், நாவலின் கட்டுக்கோப்பில் ஓர் உள் தொடர்பு இருப்பது அவசியம்; நாவலின் கதை நிகழ்ச்சியில் ஒருமை நயம் மிளிர்வது இன்றியமையாதது. இந்த வகையில் நாவலைக் காப்பியத்துடன் ஒப்பிடலாம். காப்பியத்தில் கிளைக் கதைகள் இருப்பினும் அவை காவியக் கதைக்கு இன்றியமையாதனவாகிக் கதை யோட்டத்தில் ஒன்றிவிடுகின்றன வல்லவா?

நாவல் இலக்கியத்தில் ஒருதுறைதான். மேலும் கவிதை, நாடகம், திரைப்படம், ஓவியம், சங்கீதம் ஆகியவற்றால், நாவலால் இயலாத அளவுக்கு நுட்ப மாகவும் திட்பமாகவும் வாழ்வின் ஒரோர் அம்சங்களை உணர்த்த முடியுமென்பதும் உண்மையே. ஆனால் ஆங்கில இலக்கிய ஆய்வுரையாளரான ரால்ப் பாக்ஸ் கூறுவதைப்போல், தனி மனிதனின் முழு வாழ்வை வெளியிடுவதில் வேறு எந்தக் கலைத்துறையாலும் நாவலை விஞ்ச முடியாது. ஒளிவு மறைவாயுள்ள அக உலக ஓட்டங்களைத் துல்லியமாகப் புலப்படுத்தும் தனித் திறன் நாவலுக்கே உரியது என்று புகழ்பெற்ற ஆங்கிலேய நாவலாசிரியர் ஈ.எம்.பார்ஸ்டர் கூறுவது முற்றிலும் உண்மையே.

நாவல்களில் பல ரகங்கள் உண்டு. படிக்கும்போது தோன்றி மறையும் உணர்ச்சியைத் தவிர வேறு எத்தகைய அனுபவத்தையும்  அளிப்பதற்கு இயலாத ‘கிளுகிளுப்பு’ நாவல்களை நாம் இரண்டாம்முறை படிக்கமாட்டோம். மறு புறத்தில், ஜனங்களின் ஆசாபாசங்களிலும் ஆர்வ அபிலாஷைகளிலும் நலன்களிலும் வாழ்விலும் போராட்டத்திலும் ஒன்றி நிற்கும் எழுத்தாளன் தன் படைப்பில் யதார்த்த உண்மையை முழுமையாகவும் நுட்பமாகவும் வெளியிடும் வல்லவன் ஆகிறான். அத்தகைய எழுத்தாளர்களில் சிறந்தவர்களது இலக்கி யங்கள், சாகாவரம் பெறுகின்றன. ஐம்புலன்களும் அறிதிறனும் ஆத்மாவும் புதிய அனுபவம் பெறுவதற்கு அவை உதவுகின்றன. அவற்றால் ஏற்படும் அனுபவத்தை மறத்தற்கியலாது. அறிவைப் பெருக்கி, மனோ பாவனையை வளம்பெறச்செய்து, இதயத்தைத் தூய்மை அடையச்செய்யும் அத்தகைய நாவல்கள் காப்பிய இயல்பினைப் பெறுகின்றன என்னலாம்.

ஹோமரின் இலியாது, வான்மீகி முனிவரின் இராமாயணம் முதலிய வளர்ச்சி-இயல் காப்பியங்களைப் பண்டைக்கால மக்களின் கூட்டுப் படைப்புகள் என்றே கூறிவிடலாம். வீரச்சுவையை மிகுதியாகப் பாராட்டும் இந்தத் தேசீய காவியங்களில், மனிதன் இயற்கையின் பிரதிகூலங்களை எதிர்த்து நிகழ்த்திய போராட்டமும், மனித சமூகத்தினுள் நிகழ்ந்த மோதல்களும் சித்திரிக்கப் படுகின்றன. இந்தக் காப்பியங்களில் உண்மைகளும் கற்பனைக் கதைகளும் இரண்டறக்கலந்துள்ளன. நாகரிகம் நிலைபெற்றுத் தளிர்த்துச் செழித்த காலத்தில் தோன்றிய இலக்கியக் காப்பியங்களில் (மில்டனது சுவர்க்க நீக்கம்) கம்பனது இராமகாதை முதலியன, சம காலத்திய சமுதாயத்தின் விமர்சனமும் இடம்பெற்ற போதிலும், புராதன உயிர்த்தெழுவதைக் காண்கிறோம். ஆக, வளர்ச்சி இயல் காப்பியங்களும் இலக்கியக் காப்பியங்களும் தொல் காலத்திய நினைவுகளையும் இயற்கை கடந்த நிகழ்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இயற்கை கடந்த அம்சம் என்பது காப்பியத்துக்கு இன்றியமையாதது என்றே மேனாட்டு அறிஞர் கருதுவாராயினர். ஆனால் நாவலில் இயற்கை கடந்த நிகழ்ச்சிகள் இடம்பெறுவதில்லை. நாவலாசிரியனது கற்பனை, வாழ்வின் உண்மைக்கு ஒத்ததாயிருக்கிறது. நாவல் வசனத்தில் விசுவரூபமெடுக்கும் கற்பனையாக மட்டுமின்றி, மானுட வாழ்வின் வசனமாகவே விளங்கு கிறது என்று ஆங்கிலேய அறிஞர் பாக்ஸ் கூறுவது முற்றிலும் உண்மை.

பண்டைய காப்பியகர்த்தாக்கள் சமுதாயத்துடன் ஒன்றி நின்றனர்; வாழ்வை நேசித்தனர்; மனித குலத்தின் முன்னேற்றத்தில் குன்றாத நம்பிக்கை கொண்டிருந்தனர். வாழ்வின் சகல நிகழ்ச்சிகளையும் தொகுத்து முழுமையாக அறியமுற்பட்டனர். இந்தப் பண்புகளை உடைய நாவலாசிரியன், சிந்தனைச் செறிவோடும் கற்பனை வளத்தோடும் கூடிய வாழ்க்கை விமர்சனத்தை இயற்றும் பொழுது, அந்த நாவல் காப்பிய இயல்பினைப்பெற முடியுமென்பது ஒருதலை. அத்தகைய வசன காவியங் களை இயற்றும் பணி நம் காலத்து நாவலாசிரியர்களை எதிர்நோக்குகிறது. இந்தத் துறையில், அலெக்ஸி டால்ஸ்டாய் ஆக்கியுள்ள சக்கரவர்த்தி பீட்டர் ஓர் அரிய முயற்சி என்போம்.

நாவல் காப்பிய-வரலாற்று இயல்பினைப் பெற்றிருக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் நாவலாசிரியரான பீல்டிங் வலியுறுத்தினார். ஹோமரும் மில்டனும் தத்தம் காலத்து அறிவுச் செல்வம் அனைத்திலும் பாண்டித்தியம் பெற்றிருந்ததைப்போல், நாவலாசிரியர் ‘அஃகி அகன்ற’ அறிவுக்கு உரியவராக இருத்தல்வேண்டுமென்று அவர் கருதினார். மேலும், நாவலாசிரியர் சகலவிதமான மாந்தர்களோடும் ஒன்றிப்பழகும் திறம் படைத்திருக்க வேண்டுமென்றும், சகல விஷயங்களையும் ஊடுருவிப் பார்த்து அவற்றின் முக்கியமான வேற்றுமைகளைக் கண்டுகணிக்கும் ஆற்றலை அடைந்திருக்க வேண்டு மென்றும் அவர் கருதினார். இந்தப் பண்புகளுக்கு உரிய இலக்கிய கர்த்தாவோ சரித்திர அம்சத்துடன் சிறக்கும் நாவலைப் படைக்கமுடியுமென்பது அவரது கருத்து. ‘சோதனை’ (ளிக்ஷீபீமீணீறீ) என்ற தலைப்பில் அலெக்ஸி டால்ஸ்டாய் ஆக்கியுள்ள மூன்றுபாக நவீனம் இத்தகைய யதார்த்தவாத இலக்கியமாகும்.

சரித்திர அம்சத்தைக் குறிப்பிடுங்கால், சரித்திரத் துக்கும் நாவலுக்கும் இடையே உள்ள வேற்றுமையை மறந்துவிடக்கூடாது. உறுதியான உண்மைகளைப் பகுத்துத் தொகுத்துப் பிழையின்றிப் பொதுமைப் படுத்துவதே வரலாறு ஆகும். ஆனால் மனிதனது வாழ்வு தாழ்வையும் இன்பதுன்பத்தையும் எடுத்துரைக்கும் கதை என்ற அளவிலேயே, நாவல் சரித்திர அம்சம் உடையதாகிறது. ஐந்தாண்டுத் திட்ட நிறைவேற்று விவரணம் சரித்திரமாகும். திட்டத்தில் பணியாற்றும் மனிதனது சிந்தனைகளும் உணர்ச்சிகளும் செயல்களும் மாறுதல்களுமே நவீனத்தின் வீச்சுக்குள் அடங்கும்.

சமகாலச் சமுதாயத்தை அடி நிலமாகக்கொண்டு எழுத்தாளர் படைக்கும் நாவல்களும் வரலாற்று அம்சம் பெறமுடியுமென்றாலும், அவற்றை நாம் சரித்திர நவீனங்கள் என்று குறிப்பிடுவதில்லை. கடந்தகாலச் சமுதாயத்தைக் களமாகக் கொண்டு அமையும் நாவல் களையே சரித்திர நாவல்கள் என்போம். மனிதனைப் புரிந்துகொள்வதற்கு அவனது பாரம்பரியத்தை அறிவது அவசியமாகும். எனவே, மனிதனது வாழ்வைப் புலப்படுத்துவதில் சரித்திர நவீனம் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகிக்கிறது. மேலும், பாரம்பரியத்தைப் புலப் படுத்தும் சரித்திர நவீனம் சமுதாய முன்னேற்றத்துக்கு ஆக்கம்தரும் ஆற்றலூட்டியாக விளங்குகிறது. இந்த வகையில், சிறந்த சரித்திர நவீனங்களை இராமாயணம் போன்ற தேசீய காவியங்களுடன் ஒப்பிடலாம்.

சரித்திர நாவலாசிரியன் செழுமையான மனோ பாவனையைப் பெற்றிருக்கவேண்டும். வாழ்வையும் மானிட இயல்பையும்பற்றி நுட்பதிட்பமான அறிவை அடைந்திருக்கவேண்டும். வரலாற்றைப்பற்றி விவர மாகவும் முழுமையாகவும் ஞானம் எய்தியிருக்க வேண்டும்.

பண்டு ஒழிந்த காலத்தை உயிர்த்துடிப்புள்ளதாக உருவெடுக்கச் செய்வது, மிகவும் கடிமான பணியாகும். அந்தக் காலத்தில் வாழ்ந்த நானாவிதமான மக்களின் லட்சியங்கள், கொள்கைகள், நம்பிக்கைகள், வழக்க ஒழுக்கங்கள் ஆகியவற்றையும் அவர்கள் அடைந்த சிரமங்கள், தொல்லைகள், துன்பங்கள், துய்த்த இன்பங்கள் ஆகியவற்றையும் அவர்கள் அனுபவித்த வெற்றி தோல்விகள், சோர்வு எழுச்சிகள் ஆகியவற்றையும், இவற்றால் எல்லாம் அவர்களிடமும் சமுதாயத்திலும் நிகழ்ந்த மாறுதல்களைப்பற்றியும் கறாராகவும் நுணுக்க மாகவும் தெளிவாகவும் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய அறிவொடு வளமார்ந்த மனோபாவனையும் இருந்தால்தான், ஆசிரியனால் அக்காலத்துடன் ஒன்றி விட இயலும். சரித்திர நவீனம் எழுதும் ஆசிரியன், தன் கண்ணெதிரே காட்சிதரும் உண்மையான உலகத்தை மறந்துவிடவேண்டும்; அவனது கதைக்குரிய காலமும் இடமுமே அவனுக்கு உண்மையாகத் தோன்ற வேண்டும். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் நிகழ்ந்தன வற்றையெல்லாம், மனிதன் புதிதாகக் கற்றதை யெல்லாம், மனிதன் அடைந்த மாறுதல்களையெல்லாம் அவன் மறந்துவிடவேண்டும். அப்பொழுதே, கால வழுவினுக்குச் சிறிதும் இடம்கொடாமல் எழுதமுடியும்; அக்காலத்தில் ஒரு நாவலாசிரியன் இருந்து தன் சமகாலத்து மக்களின் வழக்க ஒழுக்கங்களை எவ்வாறு வெளியிட்டிருப்பானோ, அதே முறையில் சரித்திர நாவலாசிரியனால் எழுத முடியும். ஒரே ஒரு வேற்றுமை இருக்கலாம். சரித்திர நவீனம் இக்காலமக்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் அமையும் என்பதே அது.

யாவரும் அறிந்த சரித்திர உண்மைகளுக்கு ஒத்த வகையில், அல்லது அவற்றை முரண்படாத வகையில், கதை சொல்வது எளிதான காரியமாகும். ஆனால் சரித்திர நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதும் அவற்றுக்கு விளக்கம் தருவதும் சரித்திராசிரியனின் பணி என்றோம். இல்லாதொழிந்த சகாப்தத்தை உயிர்த்தெழச் செய்வதும், அதில் ஆடவரும் பெண்டிரும் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதைக் காலவழு இல்லாமல் தத் ரூபமாகப் புலப்படுத்துவதுமே சரித்திர நாவலாசிரி யனுக்கு மனநிறைவு அளிக்கும் மகத்தான கடமை யாகும். தற்செயலான நிகழ்ச்சிகளின் குழப்படி குளறு படியாக மேல் நோக்கில் தோன்றும் வாழ்வு என்பது, பலதரப் பட்ட மக்களின் பொதுவிவகாரங்களும் தனி வாழ்வும் இணங்கியும் பிணங்கியும் ஒட்டியும் வெட்டியும் செயல்படுவதால் உருப்பெறுவதைச் சரித்திர நாவலாசிரியன் புலப்படுத்தவேண்டும். பல்வேறு மக்களின் முக்கியமான செயல்களையும் உணர்ச்சி களையும் எண்ணங்களையும் புலப்படுத்துவதுடன், அவர்களின் வேடிக்கை விளையாட்டுகளையும் கூடச் சித்திரிக்க வேண்டும். அடிக்கடி, சரித்திர நவீனம்

அந்தக் காலத்தின் முழுமையான வெளியீடாக விளங்க வேண்டும்; அந்தகாலத்தின் உயிர்த்துடிப்பை உணர்த்த வேண்டும்.

சரித்திர நவீனங்களை இருவகையாகப் பிரிக்கலாம் (1) அற்புதச் சரித்திர நவீனம்; (2) யதார்த்த சரித்திர நவீனம். ஸர் வால்டர் ஸ்காட் அவர்களின் வேவர்லி நாவல்களும் தமிழ்வசன இலக்கியத்தில் சிறந்த கல்கி அவர்களின் சரித்திர நாவல்களும் அற்புதச் சரித்திர நவீனங்களாகும். அற்புதச் சரித்திர நவீனத்தில், பரபரப்பூட்டும் சம்பவங்கள் நிறைந்துள்ளன. எதிர்

பாராத நிகழ்ச்சிகள்மூலம் வியப்பூட்டும் வகையில் கதை உருப்பெறுகிறது. கதைத் தலைவன் எதிர்ப்படும் இடர்களைக் கடந்து இறுதி வெற்றி அடைகிறான் என்பது உண்மை. ஆனால் அவன் சிந்தித்துத் திட்ட மிட்டுச் செயல்படுவதால், இந்தச் சிறப்பை அடை வதில்லை. நற்பேற்றின் துணை கொண்டே, இந்த நிலையை அடைகின்றான். எனவே, அறிவாற்றல், மனோபாவனை, நெஞ் சுரம், துணிவு, வீரம் முதலிய பண்புகளை உடைய உன்னத பாத்திரமாக அவன் உருப்பெறுவதில்லை. கதையும் விரும்பிய முடிவை நோக்கித் தானடித்த மூப்பாக முன்னேறுகிறது. ஆக, அற்புதச் சரித்திர நவீனங்கள் பாத்திரப்படைப்பில் வெற்றி அடைவதில்லை என்னலாம்.

யதார்த்த சரித்திர நவீனத்தில், கதை நிகழ்ச்சி இயற்கையாக உருப்பெறுகிறது. பாத்திரங்கள் ஒன்று பட்டும் மாறுபட்டும் செயல்படுகின்றன; அவை சூழ்நிலையுடன் இணங்கியும் அதனை எதிர்த்துப் போராடியும் செயல்படுகின்றன. இந்த நிகழ்ச்சிப் போக்கில், கதைத்தலைவன் சூழ்நிலையின்மீது பிற பாத்திரங்களது செயல் அல்லது செயலற்ற தன்மைமீது வெற்றி அடைகின்றான்; அல்லது அந்தச் சக்திகளுடன் இறுதிவரையில் போராடித் தோல்வி அடைகின்றான். அவனது உள்ளத்தில் ஏற்படும் மோதலும், செயலில் பிறருடன் அவன் மோதுவதும் துலாம்பரமாகின்றன. இவ்வாறாக, அவன் நிறைவடிவான, நுட்பதிட்பமான உயிர்ப்பாத்திரமாக உருப்பெறுகிறான். நாடகத்தன்மை கதையின் சாராம்சமாகச் சிறக்கிறது. அற்புதச் சரித்திர நவீனத்தில், இந்த நாடக இயல்பைக் காணமுடியாது.

ஷேக்ஸ்பியர் தமது சரித்திர நாடகங்களில், பாத்திரங்களது செயல்களால் சரித்திரம் உருப்பெறும் போக்கினைப் புலப்படுத்தினார். ஆனால் அந்தப் பணியை ஸ்காட்டினால் செய்யமுடியவில்லை. சரித்திரத்தால் உண்டான பாத்திரங்களையே ஸ்காட் தமது நவீனங்களில் புலப்படுத்தினார். அற்பச் சுவையில் அதிகமாக ஈடுபட்ட ஸ்காட், வரலாற்றின் விளிம்பி லேயே வாழ்ந்தார் எனலாம். முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகள் அவரது நவீனங்களில் இடம்பெற்ற போதும், இரண்டாம் பட்சமானவையாகவே அமைந்தன. இதன் காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். முக்கியமான நிகழ்ச்சிகள் சரித்திர நவீனத்தின் மையமாக அமைந்தால், அவற்றுக்குக் காரணமான மாந்தர்களை - அவர்களின் கொள்கை, உறுதி முதலியவற்றைப் புலப்படுத்த வேண்டும். வியப்பூட்டும் நிகழ்ச்சிகளின் கோர்வையாக இல்லாமல், உயிர்ப்பாத்திரங்களது அக உலகப் போராட்டங்களையும் அவை ஒன்றோடொன்று செயல் பட்டதையும் யதார்த்தமாக விவரிப்பதாக நவீனம் அமைந்துவிடும். எனவே, ஸ்காட் பிரதானமான சரித்திர நிகழ்ச்சிகளைத் தம் நாவல்களின் மையமாகக் கொள்ள வில்லை.

இதை உணராத சில விமர்சகர்கள், சரித்திர நவீனங்கள் முக்கிய நிகழ்ச்சிகளை மையமாகக் கொள்ளக் கூடாதென்றே விதிவகுப்பார்கள். சரித்திர புருஷர்கள் கதைத்தலைவர்களாயிருக்கக் கூடாதென்றும் கூறுவர்; சமகாலத்து நவீனம் எழுதும் ஆசிரியர் தம் காலத்து அரசியல் தலைவர்களைக் கதைத்தலைவர்களாகக் கொள்வதில்லை. அதேபோல், சரித்திர நவீன ஆசிரியரும் சரித்திரச் சிற்பிகளைக் கதைத்தலைவர்களாகக்  கொள்ளக் கூடாதென்று வாதிப்பர். சரித்திரச் சிற்பியைத் தலை வனாகக்கொள்ளும் கதை, சாராம்சத்தில் உண்மையான தாயிருந்தால், வாழ்க்கை வரலாறாகச் சிறுமையடையக் கூடிய அபாயம் உள்ளது என்பது உண்மை. ஆனால் மனோபாவனைச் சிறப்புக்குரிய நாவலாசிரியனால் அந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். ஜுலியஸ்ஸீஸர் போன்ற சரித்திர புருஷர்களைத் தலைவர்களாகக் கொண்ட சரித்திர நகங்களை இயற்று வதில் ஷேக்ஸ்பியர் அடைந்திருக்கும் ஒப்புயர்வில்லாத வெற்றியே, சரித்திரத்தலைவனைக் கதைத்தலைவனாகக் கொள்ளக்கூடாதென்ற ஆட்சேபனைக்குத் தகுந்த பதிலாகும். ருஷியாவின் சரித்திர புருஷர்களிடையே மகத்தான ஸ்தானத்தை வகிக்கும் சக்கரவர்த்தி பீட்டரைக் கதைத்தலைவனாகக்கொண்ட இந்த நவீனமும் சரித்திரச் சிற்பியை நாயகனாகக் கொண்ட நாவல் சிறப்பாக அமையமுடியுமென்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ருஷிய எழுத்தாளர்கள் யதார்த்தவாதிகளாக விளங்கினார்கள். அவர்கள் சரித்திரத்தை அலங்காரமான பின்னணியாக மட்டும் கொண்டு சரித்திரநாவல் எழுதும் போக்கினை வெறுத்தார்கள். தேசங்களது வாழ்வில் நிகழ்ந்த மகத்தான இயக்கங்களை உண்மையாக உயிர்த்தெழச் செய்யும் முறையில் சரித்திர நவீனம் எழுத வேண்டு மென்ற ருஷிய யதார்த்தவாதிகள் கருதினர். உலகப் புகழ்பெற்ற தனிப்பெரும் நவீனமான “போரும் வாழ்வும்” அவ்வகையில் அமைந்ததுதான்.

“போரும் வாழ்வும்” என்ற தன்னேரில்லா நவீனத்தை இயற்றிய லியோடால்ஸ்டாயின் யதார்த்த வாதப் பரம்பரையில் தோன்றியவர் அலெக்ஸி டால்ஸ்டாய். மேலும், அவர் சோஷலிஸ்ட்  யதார்த்த வாதம் என்ற இலக்கியக் கொள்கையைத் தழுவியவர். வாழ்வை அதன் இயக்கத்தில் சித்திரிப்பதும், தனி மனிதன் வாழ்வு சமுதாயத்தின் வாழ்வுடன் பின்னிப் பிணைந் திருப்பதைப் புலப்படுத்துவதும் சரித்திர நோக்கின் பின்னணியில் வாழ்வின் முன்னேற்றத்தைப் படம் பிடித்துக் காட்டுவதும் சோஷலிஸ யதார்த்த வாதத்தின் அம்சங்களாம். காட்சி அளவையை மட்டும் பயன்படுத்திச் சமுதாய நிலைமையைப் படம் பிடிக்கும் சூனியமான இயற்கை வாதமாகச் சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் சிறுமை அடைய முடியாது. வாழ்வின் வளரும் அம்சத்தையும் தேயும் அம்சத்தையும் இனங் கண்டுகொள்ளும் ஆற்றல் சோஷலிஸ்ட் யதார்த்த வாதிக்கு இருப்பதால், அவன் சமுதாய நிலையைச் சித்திரிக்கும்போது இந்த இரு அம்சங்களையும் புலப்படுத்துகின்றான். இவற்றின் முரண்பாடு பகையாக வளர்ந்து, வளரும் அம்சம் வெற்றியடையவிருப்பதையும் அதன்மூலம் புதிய ஐக்கியம் அமையவிருப்பதையும் அவன் அறிந்திருப்பதால், அவனது யதார்த்தவாதம் அந்த எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டி அற்புத இயல்பினைப் பெறுகிறது. இவ்வாறாக சரித்திர உண்மையின் சாரத்துக்கு இடம் தராத பழைய அதீதகற்பனாவாதம், யதார்த்தவாதத்தின் அடிப்படையில் புதிய மலர்ச்சி அடைகிறது. யதார்த்த வாதமும் சூனியமான இயற்கை வாதமாகச் சிறுமையடையாமல், எதிர்காலத்தைப்பற்றிய தெளிவுடன், லட்சிய ஒளிவீசும் மனோபாவனையுடன் அற்புத இயல்புக்கு இடம் தந்து நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கும் கொள்கையாகச் செழுமை யடைகிறது. எனவே, வாழ்வில் வேரூன்றி நின்று கொண்டே கம்பீரமான கனவை நனவாக்கும் மகோன்னதமான பாட்டையில் மக்கள் அணிதிரள்வதை சோஷலிஸ்ட் யதார்த்தவாதியால் புலப்படுத்த முடியும். இவ்வாறு, தார்மீக லட்சியமும் யதார்த்த உண்மையும் இணைபிரியா இரட்டையராக ஐக்கியப்பட்டு இதிகாச இயல்புக்குரிய இலக்கியத்தைப் படைக்க முடியுமென் பதற்குச் சக்கரவர்த்தி பீட்டர் ஒரு சான்று ஆகும்.

கறங்கு போல ஒரே வட்டத்தினுள் சுழல்வதாகவோ, பரிவு அல்லது ஏளனத்துக்கு உரிய தற்செயலான நிகழ்ச்சிகளின் கோவையாகவோ சரித்திரம் உருப்பெற வில்லை என்பதைச் சோஷலிஸ்ட் யதார்த்தவாதியாகிய அலெக்ஸிடால்ஸ்டாய் நன்கறிந்திருந்தார். பழையன கழிந்து புதியன புகுதலால் சமுதாயம் முன்னேறும்போது, அதன் தன்மை மாறுதல் அடைவதை அவர் அறிந் திருந்தார். பழமையின் கூட்டினுள்ளேயே புதிய அம்சங்கள் உருப்பெற்றுச் சேகர மாவதையும், இந்தப் பரிணாமப் போக்கு ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தவுடன், முட்டையிலிருந்து குஞ்சு வெளி வருவதைப் போலவும், நூறு டிகிரி சென்டிகிரேடில் தூய தண்ணீர் நீராவியாவதைப் போலவும், புதுமை பழமையின் கூட்டினைத்தகர்க்கும் புரட்சியைச் சாதிப்பதால், தன்மை மாறுதல் நிகழ்கிறதென்பதை அவர் உணர்ந்தார். அவ்வாறு குணமாறுதல் நிகழும் கொந்தளிப்பான காலகட்டங்களே, வரலாற்றின் முக்கியமான சகாப்தங்கள் ஒன்று ஆகும். எனவே, தேசபக்தரான அலெக்ஸி டால்ஸ்டாய் தம் நாட்டு மக்களின் குணாதிசயங்களை உணர்த்தும் வகையில், மகா பீட்டரைத் தலைவராகக் கொண்ட சரித்திர நவீனத்தை எழுதத் துணிந்தார்.

அலெக்ஸி டால்ஸ்டாய் 1883 ஜனவரி 10 ஆம் நாள் பிறந்தார். குழந்தைகளுக்கான நூல்களை எழுதி வந்த தாயார், சிறுவன் அலெக்ஸியிடம் இலக்கிய ஆர்வம் வளர்வதற்குப் பெரிதும் துணை புரிந்தார்.

1901-ஆம் ஆண்டில், அலெக்ஸி, பீட்டர்ஸ்பர்க் தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவன் அலெக்ஸி, ஜாராட்சிக்கு எதிராக நிகழ்ந்த இயக்கங் களில் பங்கு கொண்டார். சமூக ஜனநாயகக் கட்சியிலும் சேர்ந்தார்.

அலெக்ஸியின் கவிதைகளே முதன்முதலில் வெளிவந்தன. 1907-இல் அவை வெளிவந்த பின், அவர் கதைகளும் நாவல்களும் எழுதலானார். ஜாராட்சிக் காலத்தில் நிலப்பிரபுத்துவம் சிதைந்து வந்ததைச் சித்திரிக்கும் இந்த நூல்கள், இவருக்கு இயற்கை யினிடமும் மக்களிடமும் உள்ள பேரன்பைப் புலப் படுத்துகின்றன.

1917-இல் சோஷலிஸ்ட் புரட்சி வெற்றி அடைந்த பிறகு, 1919-இல் அலெக்ஸி தம் நாட்டிலிருந்து வெளியேறிப் பாரிஸ் நகரில் புகலிடம் தேடினார். அப்போதே, தாய்நாட்டைத் துறந்துவிட்டு அன்னி யரிடையே அகதியாக வாழ்வதின் தாழ்வை அனு பவத்தில் அறிந்தார். தாய்நாட்டுக்கு விரோதமாகச் சதி செய்த ருஷிய அகதிகளிடம் வெறுப்படைந்து, 1921-இல் பெர்லினுக்குச் சென்றனர். 1922-இல் மாக்ஸிம் கார்க்கி பெர்லின் வந்தபோது, இருவரும் நண்பராயினர். சோவியத் ஆட்சியின் மாட்சியை உணர்ந்த அலெக்ஸி அதே ஆண்டில் தம் தாயகம் திரும்பினார். ருஷிய மக்களும் சர்க்காரும் அவரை மனமகிழ்ந்து வரவேற்றனர்.

அலெக்ஸி பல நாவல்களும் நாடகங்களும் கதைகளும் கட்டுரைகளும் இலக்கிய மதிப் புரைகளும் எழுதினார். தம் நாட்டின் பல்வேறு மக்களது நாடோடி இலக்கியங்களைத் தேடிச் சேகரித்தார்; குழந்தைகளுக்கான கதைகளும் எழுதினார்.

1917- லேயே பீட்டரின் காலம் அலெக்ஸியின் நெஞ்சைக் கவர்ந்தது. பீட்டர் காலத்தைப் பொருளாகக் கொண்ட இலக்கியம், ருஷிய மக்களின் இயல்புகளைப் புலப்படுத்தும் சிறப்பினுக்கு உரியதாயிருக்குமென் பதைக் கலைஞனது ‘அந்தராத்மா’ அவருக்குணர்த்தியது. 1930-இல், சக்கரவர்த்தி பீட்டர் என்ற சரித்திர நவீனத்தின் முதற்பாகம் வெளிவந்தது. 1934-இல் இதன் இரண்டாம் பாகம் பிரசுரமாயிற்று. 1943-இல் அவர் மூன்றாம் பாகத்தை எழுதத் தொடங்கினார். ஆறு அத்தியாயங்கள் பூர்த்தியாயின. 1945 பிப்ரவரி 23-நாள் அவர் இறந்தார்.

சரித்திர நவீனத்தை இயற்றுவோனுக்குத் தேவை யான பேரறிவையும் சரித்திர ஞானத்தையும் மனோ பாவனையையும் நாட்டுப்பற்றையும் அலெக்ஸி பெற்றிருந்தார். பல்லாண்டுகள் பாடுபட்டு பீட்டர் சகாப்தத்தின் சகல தகவல்களையும் அறிந்து அவற்றை ஊடுருவி ஆராய்ந்தார். எனவே, சக்கரவர்த்தி பீட்டர், அந்த இலக்கிய பீமனின் தலைசிறந்த நாவலாக உருப் பெற்றிருக்கிறது. ஸ்டாலின் பரிசு பெற்ற இந்நாவலின் முதலிரண்டு பாகங்கள் வெளிவந்தவுடனேயே அவை உலகின் கவனத்தை ஈர்த்தன. ஆங்கிலம் உட்படப் பல மொழிகளில் அவை வெளிவந்தன.

டால்ஸ்டாய், உயிரற்ற வெற்றுச் சொல்லடுக் கையும் ஆடம்பரமான சொற் சிலம்பத்தையும் வெறுத்தார். ஆற்றல் கொப்புளிக்கும் அழகான மொழியில் எழுதுவதையே அவர் விரும்பினார். “நமது சிந்தனைகளும் கருத்துகளும் சொற் சித்திரங்களும் புதிய உலகின் பொற்சங்கு என முழங்க வேண்டிய நிலையில், நாம் ஏன் சலிப்பூட்டும் வகையில் எழுதவேண்டும்” என்று அவர் வினவினார். தொட்டு உணரத்தக்க ஸ்தூலமான சித்திரங்களைச் சொற்களால் வரைவதில் வல்லவராய் விளங்கினார் அலெக்ஸி. அவரது ‘சித்திர’ நடையை இந்நவீனமெங்கும் பரக்கக் காணலாம்.

Pin It