manitha-samoothayam 450ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க் கையைப் பற்றிய அடிப்படையான கேள்விகள், ஏதேனும் ஒரு மனநிலையில் அவனுக்குள்ளேயே எழுவது இயல்பு. மனித இருப்பு எங்கே எப்படி, எப்போது தோன்றியது, அது எதை நோக்கித் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது என்ப தாகவே அது இருக்கும். இதை வரலாறு என்னும் கட்டமைப்புக்குள் சேர்த்து மீண்டும் மீண்டும் மதிப்பீடு செய்து வருகிறோம்.

இந்த வரலாறு நெடுங்காலம் வரை, அனுபவங்களின் தொகுப்பாக அவரவர் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றபடி உருவாக்கப்படும் ஒரு மதிப்பீடாகவே இருந்து வருகிறது.வரலாற்றைத் தொடர்ந்து ஆய்வு செய் பவர்கள் கல்வெட்டுக்களிலிருந்தும், சிற்பங்களிலிருந்தும், கலை இலக்கிய வடிவங்களிலிருந்தும் ஊகித்து உணர்ந்து அவற்றிற்குள் ஓர் ஒருங்கிணைப்பை இனம் கண்டு தொகுத்து மனித சமுதாய வளர்ச்சிப் போக்கை வகைப்படுத்து கிறார்கள்.

நடைமுறை சார்ந்த கல்வியும், அதன் அடிப் படையில் உருவாக்கப்படும் வரலாற்றுக் கண் ணோட்டமும், வரலாற்றைக் கட்டுக் கதையாக வகைப்படுத்துகின்றன. அவை பொதுவாக விருப்பு வெறுப்புக் கலந்த ஒரு மதிப்பீடாக அமைந்து விடுகின்றன.

அனுபவம் சார்ந்த சுவையான நிகழ்வு களின் தொகுப்பாக அவை அமைந்து விடுவதால், ஒவ்வொருவரும் தனித்தனியான பார்வையையும், மதிப்பீட்டையும் அவரவர் அனுபவம் சார்ந்து உருவாக்குகிறார்கள்.

இது மாதிரியான கண்ணோட்டமும், நடை முறையும் அறிவியல் அடிப்படையிலான இயற்கையான இயங்கியலிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. வரலாற்றைத் தனிமனிதனே வடிவமைக் கிறான் என்ற மதிப்பீட்டிற்கு ஒவ்வொருவரையும் உள்ளாக்குகிறது.

மனித சமுதாய வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் உழைப்பு நிகழ்வுகளே அதை வடிவமைக்கிறது என்னும் சமுதாய அறிவியல் கண்ணோட்டம் பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. அதனால், குழப்பம் நிறைந்த மதிப்பீடுகளும், வாத விவாதங்களும் எங்கெங்கும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

மனித சமுதாய வரலாற்றில் மார்க்ஸியக் கண்ணோட்டம் தோன்றி வளரும் வரை, வரலாறு என்பது வீர, தீர, சாகசங்களின், நன்மை, தீமை நிறைந்த விளைவுகளையும் வைத்தே மதிப்பீடு செய்யப்பட்டு வந்தது. அறிவியல் கண்ணோட்டத் திற்கு முரண்பட்டதாகவும் இருந்தது.

கார்ல் மார்க்ஸும், ஃபிரடெரிக் எங்கல்ஸும் மனித சமுதாயத்தை ஆழமாகப் புரிந்து ஆய்வு செய்து மனிதனுடைய வாழ்க்கையில் உழைப்பு வகிக்கும் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி மனித சமுதாய வரலாற்றைப் புதுப்பித்தார்கள்.

இந்தக் கண் ணோட்டம் மனித சமுதாயத்தை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்லுவதற்கான வழிவகைகளை உலகளாவிய அளவில் நிகழ்த்தத் தொடங்கின. மனிதன் தன்னுடைய வரலாற்றைச் செழுமைப் படுத்திக் கொண்டு தொடர்ந்து முன்னேறி வருகிறான்.

மனிதனின் வரலாற்றை அறிவியல் கண் ணோட்டத்தோடு ஆய்வு செய்து வரலாற்றை ஒழுங்கமைக்கும் பொறுப்பைத் தன்னுடைய வாழ்க் கையின் இலக்காக அமைத்துக் கொண்டவர் ராகுல் சாங்கிருத்யாயன். விருப்பு வெறுப்பில்லாத துறவு மனப்பான்மையைத் தனக்குள் அமைத்துக் கொண்ட அவர் இடையறாத தேடலின் வாயிலாக அவர் பல உண்மைகளைக் கண்டறிந்து தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர். இந்திய நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராக அவரை வரலாறு மதிப்பீடு செய்கிறது.

ஊர் சுற்றுவதிலும், கலைச் செல்வங்களையும், அறிவையும் தேடுவதிலும் மக்களை நேசிப்பதிலும் முழுமையான ஈடுபாடு கொண்டு வாழ்ந்தவர். வாழ்க்கை குறித்த தேடலில் முழு முனைப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கடைசியில் ஒரு கம்யூனிஸ்டாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டார். இந்தியாவின் விடுதலை வரலாற்றில் அழியா இடம் பெற்றவர். மனித சமுதாயத்தின் ஞானக் களஞ்சியமாக விளங்கியவர். அவருடைய வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது.

வால்காவிலிருந்து கங்கை வரை, சிந்து முதல் கங்கை வரை போன்ற நூல்களின் வாயிலாக இந்திய மக்களுக்குப் புதிய வரலாற்றுக் கண் ணோட்டத்தை வழங்கினார். இந்தியர் மட்டு மல்லாமல், உலகத்தவர் அனைவரும் தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் வகையில், இந்து தத்துவ இயல், பவுத்த தத்துவ இயல், இஸ்லாமிய தத்துவ இயல் ஐரோப்பிய தத்துவ இயல், விஞ்ஞான லோகாயதவாதம் போன்ற அறிவியல் அடிப்படை யிலான படைப்புக்களை வழங்கி உலக மனிதனை உருவாக்கியுள்ளார்.

அனைவராலும் ராகுல்ஜி என்று போற்றப் படும் அவர் எழுதிய “மனித சமுதாயம்” வரலாற்றைப் புதிய முறையில் கற்றுத் தெளிந்து கொள்ளும் வகையில் சமூக அறிவியல் கண்ணோட்டப் பார் வையில் புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது. வாசிப்புக்கு உகந்த முறையில் சரளமான மொழி நடையில் தமிழில் வெளியாகி உள்ள இது ஒவ் வொருவரின் பார்வையையும் புதுப்பித்துக் கொண்டு மறுமதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது.

மானிட வளர்ச்சிக் கால வரலாறு அடிப் படையில் மனித சமுதாயம் தொடர்ந்து உருமாறி இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை தேவை, உழைப்பு, உற்பத்தி, பகிர்வு போன்ற அறிவியல் சார்ந்த வாழ்க்கையின் அடிப் படையில் வரலாற்றை இனம் கண்டு தெளிவாக அடையாளப்படுத்துகிறார். ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த புராதானப் பொதுவுடைமைச் சமுதாயம் தொடங்கி, வளர்ந்து, இனக்குழு யுகம், தந்தை வழிச் சமுதாயம், புதிய கற்காலம், அடிமைச் சமுதாயம், நிலப்பிரபுத்துவச் சமுதாயம், முதலாளித் துவம், ஏகாதிபத்தியம், பொதுவுடைமை போன்ற சமுதாய அமைப்புக்களை உருவாக்கித் தொடர்ந்து வரலாற்றை வளர்த்து வரும் மனிதனின் இருத்தல் நிலைமையைப் படிப்படியாக விளக்குகிறார். அதைப் போலவே, உற்பத்தி முறை, உற்பத்திக் கருவிகள், உற்பத்திச் சாதனங்கள், போக்குவரத்து, புதிய கண்டுபிடிப்புக்கள், காலனியாதிக்க நிலைப் பாடுகள் எனப் பலவுற்றையும் இயல்பாகவும், அடக்கமாகவும் விளக்குகிறார்.

இருபது இலட்சம் ஆண்டுகளில் குரங்கு நிலைமையிலிருந்து மனிதன் எப்படி உருவாகி வந்தான் என்பதைத் தகுந்த எடுத்துக்காட்டுக் களுடன் தெளிவாக்குகிறார். விலங்குகளுடனும் இயற்கையுடனும் மனிதன் வரலாற்றில் நிகழ்த்தி வரும் போராட்டங்களை அவர் விளக்கிக் காட்டு கிறார்: “மனிதன் அவன் வாழும் இந்த உலகி லிருந்தும், சமுதாயத்திலிருந்தும் விலக முடியாது” என்பதை நிறுவுகிறார். “மனிதன், மனித சமுதாயத் திலிருந்து பிரிந்து வாழ முடியாது. அப்படி அவன் பிரிந்து வாழ்ந்தால் மொழியை மட்டுமல்லாமல் சிந்தனையையும் இழக்க வேண்டி வரும். ஏனெனில் சிந்தனை என்பது ஒலியற்ற சொல்லாகும்.

மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் சமுதாயத்தின் செல் வாக்கு இருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் சமுதாயத்தின் சட்ட திட்டங்களைத் தாய்ப் பாலுடனே ஏற்றுக் கொண்டு விடுகிறோம்”. தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இடையிலான இயற்கையான உறவைத் துல்லியமாகக் குறிப்பிடு கிறார் ராகுல்ஜி. விலங்கிலிருந்து மனிதன் எப்படி வேறுபட்டுச் சிறப்படைகிறான் என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார்:

“மனிதக் குரங்கு, நாய் போன்ற அறிவுடைய பிராணிகளும் எதிரிலுள்ள பொருளின் நிழலைக்கண்டு தமது மூளையால் சிந்திக்கும் திறன் படைத்திருக்கின்றன. ஆனால், அவற்றின் சிந்தனை வெறும் நிகழ்காலத்தை மட்டுமே சார்ந்திருக்கும். மனிதன் தீர்க்கதரிசியாவான் அவன் எதிர்காலப் பாதுகாப்புக் குறித்து முன்னமேயே சிந்திக்கிறான்.”

உழைப்பு மற்றும் உற்பத்திமுறை அடிப்படை களில் பல வகையான சமுதாயங்களிடையே ஏற்பட்ட உறவுகளையும் பகிர்வுகளையும் வரலாற்றுப் போக்கில் இனம் காட்டுவதோடு பல வகைப்பட்ட அரசுகளின் தோற்றங்களையும், போர்களையும், மாற்றங்களையும் தகுந்த ஆவணங்களோடு சமுதாய அறிவியல் கண்ணோட்டத்துடன் வகைப்படுத்து கிறார்.

சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் மதங்களின் தோற்றங்களையும், அவற்றிற்கான சமுதாய, பொருளாதார, கலாச்சாரப் பண்பாட்டும் பின்னணி களுடன் தெளிவாக்குகிறார்; மதங்களின் வாயிலாக நிறுவப்பட்ட ஆக்கங்களையும், எதிர்விளைவு களையும் அடையாளப்படுத்த அவர் தவறவில்லை. நாடுகளிடையே காணப்பட்ட வேறுபாடுகளும், மாறுபாடுகளும் தகர்ந்த முறைகளையும், புதிய உறவுகள் நிகழ்ந்து வளர்ந்த முறைகளையும் அவர் விளக்குகிறார் தனியரசு, பேரரசு, முடியரசு, ஜன நாயகம் போன்ற அரசியல் அமைப்பு வடிவங் களையும் விளக்குகிறார்.

மனித சமுதாய வரலாற்றில் ஒவ்வொரு நூற்றாண்டிலும், நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங் களையும் அவற்றின் தாக்கங்களையும் அவற்றின் ஒவ்வொரு படி நிலையிலும் விவரிக்கிறார் கிரேக்க, ஐரோப்பிய சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சி யையும் அவற்றிற்குரிய சிந்தனையாளர்களின் பங்களிப்பையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

வரலாற்றின் ஊடாக நிகழ்ந்த அரசியல், சித்தாந்த, தத்துவப் போராட்டங்களை சமுதாய அறிவியல் கண்ணோட்டத்துடன் தகுந்த ஆவணங்களோடு வகைப்படுத்தித் தன்னுடைய மதிப்பீடுகளை அவர் முன்வைக்கிறார். முதலாளித்துவச் சிந்தனைகள் வரலாற்றில் எப்படி சோசலிசச் சிந்தனைகளாக உருமாற்றம் பெற்றன என்பதையும் அவர் தெளிவாகக் காண்கிறார்.

தனிமனிதக் கண்ணோட்டத் தத்துவத்தி லிருந்து சமுதாய அறிவியல் கண்ணோட்டத்திற்கு கார்ல் மார்க்ஸ் மாறியதை அவர் அடையாளப் படுத்துகிறார். மார்க்ஸ் யாருடனும் ஒட்டி உறவாடாமல் இரவு பகலும் படிப்பிலேயே ஈடுபட்டிருந்தார் தாம் படித்த விஷயங்களின் சுருக்கங்கள், கிரேக்க, லத்தீன் மொழிபெயர்ப்புக்கள்; பல்வேறு தத்துவங்களைப் பற்றிய ஆராய்ச்சி, தன் கருத்துக்களை வரிசைப்படுத்திக் கொள்ளல், தத்துவ இயலின் சுருக்கம், மூன்று தொகுதிக் கவிதைகள் - ஆகியவை அக்காலத்தில் மார்க்ஸின் சாதனைகள்.

1837-இல் அவர் பத்தொன்பது வயது இளைஞராக இருந்த போதே கான்ட், ஃபிகட்டே, போன்ற தத்துவாளர்களின் கற்பனைச் சித்தாந்தம் பூராவும் வீணானதே என்னும் முடிவுக்கு வந்து விட்டார். ஆனால், ஹெகலின் தத்துவ இயல் வாலிபரான மார்க்ஸைச் சற்றுக் கவர்ந்தது. அப்போதே அவர் தன் தந்தைக்கு எழுதினார். “நான் இதுவரை ஆன்மீக வாதத்தையே விரும்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால், இப்போது யதார்த்தத் திலேயே ஆதர்சனத்தைத் தேடவாரம்பித்திருக் கிறேன். நான் ஹெகலின் தத்துவ இயலைப் பல நூல்களில் படித்தேன். ஆனால், இனிமையற்ற அதன் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. நான் இன்னொருமுறை இக்கடலில் தீர்மானமான முடிவுடன் குதிக்க விரும்புகிறேன்.”

கடைசியில், மார்க்ஸ், ஹெகல் தத்துவத்தின் ஆதரவாளராகிவிட்டார். அவர் தான் எழுதிய கவிதைகளின் சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதிகளை எரித்துவிட்டார். ---- 1843- 44 வருடங் களை மார்க்ஸ் பொருளியல், மற்ற அரிய விஷயங்கள் ஆகியவற்றைப் படிப்பதிலும் சிந்திப்பதிலும் கழித்தார். இவ்வாறு 1844-இல் மார்க்ஸ் தனது இருபத்தியாறாவது வயதில் உறுதியான சோஷ லிஸ்டாக மாறிவிட்டார். 1883-மே மாதத்தில் கோலோன் நகரிலிருந்து அவர் ஒரு கடிதத்தில் எழுதுகிறார்:

“பொருளைச் சேர்க்கும் அமைப்பும், வியாபார அமைப்பும், மனித இனத்தை அடிமைப் படுத்திச் சுரண்டும் அமைப்பும் தற்காலச் சமு தாயத்தை உள்ளுக்குள்ளேயே அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. இது, மக்கள் தொகை பெருகும் வேகத்தைவிட அதிக வேகத்தில் நடந்துகொண் டிருக்கிறது. இந்தக் காயத்தைப் பழைய அமைப்பு அகற்றமுடியாது. ஏனெனில் அதனிடம் காயத்தை ஆற்றக் கூடிய சக்தி கிடையாது. இந்த வியாபார அமைப்புக்கு அனுபவிக்கவும் மட்டுமே தெரியும்.”

இது போன்ற துல்லியமான ஆதாரங் களுடனும் ஆவணங்களுடனும் “மனித சமுதாயம்” வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அரிய பெரிய ஆய்வு நூல்களை ஆழமாகக் கற்றுத் தெளிந்த அறிவுடைய ராகுல்ஜி ஒரு சாதுவைப்போல இந்தியா முழுவது மாகப் பயணம் செய்து இந்த மனித வரலாற்றை ஒரு சிறந்த ஆவணமாக வடிவப்படுத்தியிருக்கிறார்.

இது, நவீன உலகின் வளர்ச்சி குறித்துப் பலவகை யான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. குறிப் பாகத் தத்துவம், அரசியல், சமுதாயம், வரலாறு, மதம், பொருளாதாரம், கலாச்சாரப் பண்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய விசாலமான ஒரு பார்வையில் ஆழமாக ஆய்வு செய்து, புதிய சமுதாய அறிவியல் கண்ணோட்டத்துடன் ராகுல்ஜி இந்த ஒப்பற்ற நூலை வடிவமைத்திருக்கிறார். இதை ஏ.ஜி. எத்திராஜூலு அவர்கள் வாசிப்புக்கு உகந்த வகையில் தமிழ் மொழிபெயர்ப்புச் செய்திருப்பது ஒரு தனிச்சிறப்பு.

மனித சமுதாயம்

ராகுல் சாங்கிருத்யாயன்

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41-க்ஷ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ` 200/-

Pin It