பகத்சிங் புரட்சிக் காப்பியம்bhavathisingh book 350

ஆசிரியர்வாய்மைநாதன்

வெளியீடுநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிலிட்.,

விலைரூ.350/-

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று நாமக்கல் கவிஞர் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பாடினார்.  பெரும் பாலான மக்களும் அப்படித்தான் நினைக் கிறார்கள்.  காந்தி வழியாகிய அகிம்சை வழியில் போராடியே சுதந்திரம் பெற்றதாகவே பரப் புரையும் செய்யப்பட்டு வருகிறது.  இதற்கொரு மற்றொரு பக்கமும் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவ நடவடிக்கைகளையும், பகத்சிங் போன்ற ஆயிரக் கணக்கான இளைஞர்களின் தியாகத்தையும்

ஓரம்கட்ட அனுமதிக்கக்கூடாது.  தமிழ்நாட்டில் வெள்ளையனை எதிர்த்து வீரச்சாவை ஏற்ற புலித்தேவன் மருதுபாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன் முதல், ஆஷ் துரையைச் சுட்டு வீழ்த்தித் தன்னையே மாய்த்துக்கொண்ட வாஞ்சு நாதன் வரையுள்ள இந்தக் கணக்கு சேர்க்கப் படவில்லை என்பது வரலாற்றுப் பிழையாகிவிடும்.

“கல்கத்தா காங்கிரசில் காந்தியடிகள் அறவழி ஒத்துழையாமை இயக்கத்தையும், அன்னிய ஆடைப் புறக்கணிப்பையும் அறிவித்தார்.  தற்காலிகமாகத் துப்பாக்கிகளுக்கு விடுமுறை விடுவதற்கு வங்கத்துப் புரட்சி இயக்க இளைஞர்களிடம் உடன்பாடு செய்தார்; ஓராண்டு காலத்தில் இந்தியா விடுதலை பெறும் என்றும் அறிவித்தார்.  இந்திய இளைஞர்கள் ஆங்கிலக் கல்விக் கூடங்களை விட்டு வெளியேறி ஒத்துழையாமைக் களத்தில் ஒன்று இணைந்தனர்.  இவ்விளைஞர் அணியில் பகத்சிங் என்ற 14 வயது இளைஞரும் வருகிறார்....” என்று நூலாசிரியர் புலவர்/கவிஞர் வாய்மைநாதன் தம் காப்பியத் தலைவனை முன்னுரையில் அறிமுகம் செய்கிறார்.

“காந்தியார் அழைத்ததனால் - பகத்

கல்விச்சா லையை விட்டுச் செல்லுவதானார்

ஏந்தும் படிப்பதனை - அவர்

இறுதி வகுப்பினில் உறுதி செய்கிறார்.

காந்தம்போல் விழிபடைத்தார் - உயர்

கண்ணியர் லஜபதிப் புண்ணியராலே

தேர்ந்துரு வாக்கியதாம் - லாகூர்

தேசியக் கல்லூரி வாசமேகொண்டார்”

என்று பாடுகிறார்.

காந்தியடிகள், ‘போருக்காக வெள்ளை யாட்சிக்கு ஒத்துழைப்பு, போருக்குப் பின் இந்தியா விற்கு விடுதலை’ என்ற திட்டத்துடன் ஆட்சியின் போர்த் தயாரிப்புக்குக் கைகொடுத்தார்.  போர்க் களம் ஓய்ந்த பிறகு, அங்கு வெடித்த துப்பாக்கிகள் உள்நாட்டை நோக்கித் திரும்பின.

ரௌலட் சட்டமும் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் காந்தியின் எதிர்பார்ப்பிற்கு விடையாயின.  வெள்ளைக் கொக்கைக் காந்தியக் கண்ணியிற் பிடிக்கும் முனைப்பு எதிர்மறை விளை வையே தந்தது.  ஏனெனில் பிடிக்க நினைத்தது கொக்கில்லை; அனைத்துலகையும் சுரண்டிக் கொழுக்கும் வஞ்சகக் கழுகு என்று ஆசிரியர் கூறுவதே சரியாகும்.

“குட்டக் குட்ட குனிந்தவரையெலாம்

குப்புறத் தள்ளுதல் தெரிகிறது

கொட்டம் அடிக்கிற ரௌலட் சட்டத்தைக்

கொன்றிடக் கோபமும் விரிகிறது”

என்று ரௌலட் சட்டத்தைப் பாடும் கவிஞர் அதன் மூலம் ஏற்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் விவரிக்கிறார்.

“சுட்டேன் சுட்டேன் என்கைக் குண்டுகள் தீரும்வரை”

சொறிநாயின் கொக்கரிப்பு!

ஒட்டாரக் கொலை வெறியன் ஊர் மக்கள் உணர்ச்சியை

உணராதான் திமிர் வெடிப்பு.”

ஓராண்டு ஒத்துழையாமை இயக்கம் வெறு மையில் முடிந்தபொழுது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் புரட்சி இயக்கங்கள் முந்தி நின்றன.  இளைஞர்கள் அணிஅணியாக அவற்றில் சேர்ந் தனர்.  உடல், பொருள், உயிரைத் தியாகம் செய்ய சூளுரைத்தனர்.

பகத்சிங்கும், அவரையொத்த இளைஞர் களும் உருவாக்கிய ‘நவஜவான் மன்றம்’ பஞ்சாபில் விரிந்த அரங்கமாக விளங்கியது.  சமயச் சார்பைப் புறம் தள்ளியது.

“புரட்சி இயக்கத்தின் அரங்கம் - வெல்லும்

புதுமை எழுச்சிக்குச் சுரங்கம்

மிரட்சியுற் றேவெள்ளை கிரங்கும் - எமை

மெல்லும் அடிமை இனிஎங் குறங்கும்?”

என்று கவிஞர் இதனைப் பாடுகிறார்.

1928 பிப்ரவரி 13 அன்று சைமன் குழு பம்பாய் வந்தடைந்தபோது. ‘சைமனே, திரும்பிப் போ!” என்ற சைமன் புறக்கணிப்புப் போராட்டம் எங்கும் எதிரொலித்தது.  காவல் துறையின் கண்மூடித் தனமான தாக்குதலுக்கு உள்ளானார் லாலா லஜபதிராய்.  அவரது இறப்பு தீப்பொறியாய் நாடெங்கும் பரவியது.  பகத்சிங்கின் தலைமை யிலான இந்துஸ்தான் சோசலிஸ்டுக் குடியரசுச் சங்கம் கொதித்து எழுந்தது.

“நாடு வணங்கும் லஜபதிராய் சாவத் தாக்கினான் - அந்த

நட்டத்துக்கு ஈடாய்த்தன் உயிரைப் போக்கினான்

ஏடுமெச்சும் இந்தியத்தாய் மகிழ்ச்சி பூக்கிறாள்! - அவள்

இதயத்தில் இவ் விளைஞர்களை அணிந்து களிக்கிறாள்”

லஜபதிராயின் இறப்புக்குப் பழிவாங்கும் வகையில் லாகூர் துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்படுகிறான்.  தொழி லாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டவரைவுகளை விவாதித்தபோது தில்லி சட்டமன்றத்தின் மையப் பகுதியில் இரு வெடிகுண்டுகளை வீசி பகத் சிங்கும், பதுகேஸ்வர் தத்தாவும் கைதாகினர்.

“காது கிழிய முழக்கம் எழுந்தன

கயவர்கள் நெஞ்சம் அதிரும் - இரு

கண்ணிலார் அக்கிரமங்கள் சருகாய் உதிரும்”

என்று வெடிகுண்டுகளின்  வீச்சைப் பதிவு செய் கிறார் கவிஞர்.  அவர்களது தீர்மானத்தின்படி தப்பிக்க முனையாமல் கைது செய்யப்படும் வரை காத்திருந்தனர்.

“நான்கு கைகளே நேராய் நீண்டன

நடுவில் தப்பித்தல் எளிதில் நேரலாம்

தேன்போற் சங்கம் செய்த தீர்மானம்

தேடிச் சேர்க்கிறார் பேர்புகழ் மானம்”

வெடிகுண்டு வழக்கில் தொடர் விசாரணை. சாண்டர்ஸ் கொலை மீதான சதிவழக்கு, 63 நாள் உண்ணா நோன்பினால் யதீந்திரநாத் தாஸ் மறைவு, சந்திரசேகர ஆஸாத் சுட்டுக் கொல்லப் படுதல், பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்குமேடை ஏறுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தாண்டு கால, தியாக வரலாறு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சிவப்புப் பக்கங்கள்.

“இப்போர் எங்களால் எழுந்தது மில்லை

இப்போர் எம்மொடு முடிவது மில்லை”

என்று பகத்சிங் முழங்கிய முழக்கம் இன்னும் கேட்கிறது.

“இதைத் தனியொரு பகத்சிங்கின் தீரச்செயல் என்ற குறுக்கிப் பார்ப்பது அவசரக் கணிப்பில் நேர்கிற பிழையாகும்.  இளைஞரணி இயக்கமாக வடிவெடுத்து கொள்கை விவாதம் புரிந்து” தீர் மானம் இயற்றித் திட்டம் வகுத்து, அடிமையரசின் கொடுங்கோன்மைக்குப் பதிலடி கொடுத்தது இந்திய விடுதலை வரலாற்றின் வீரம் செறிந்த பகுதியாகும்....” என்று கவிஞர் கூறியிருப்பது காப்பியம் படிப்பவரின் கவனத்திற்குரியது.

ஒரு போராட்ட வரலாற்றைக் காப்பிய மாக்குவது கடினமான முயற்சியாகும்.  ‘நேதாஜி காவியம்’, வ.உ.சிதம்பரனாரைப் பற்றிய ‘கப்பல் காவியம்’ ஆகியவற்றை எழுதி தமிழக அரசின் விருதுகள் பெற்றவர் இந்நூலாசிரியர் புலவர், கவிஞர் வாய்மைநாதன்.

‘பகத்சிங் புரட்சிக் காப்பியம்’ என்னும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர் தோழர். ஆர். நல்லகண்ணு அவர்கள்.  “ஆசிரியர் மு. இராமநாதன் நாகை மாவட்டம் வாய்மை

மேடு கிராமத்தில் பிறந்தவர்.  முதுநிலைப் பட்டம் பெற்றவர்; மேல்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிர்வாகிகளில் ஒருவராகப் பொறுப்பேற்று சிறப் பாகச் செயலாற்றி வரக்கூடியவர்....” என்று நூலாசிரியரை அறிமுகம் செய்துள்ளார்.

“பஞ்சநதிகள் பாயும் பாஞ்சாலத்தில் பிறந்த பகத்சிங் இந்திய மக்கள் அனைவருக்கும் ஆதர்ச மாகவும், இளைஞர்களின் இரத்த நாளங்களின் உயிரோட்டமாகவும்  விளங்கி வருகிறார்.  இந்திய மண்ணின் விடுதலைக்காக மட்டுமல்ல; மானுடத்தின் மேன்மைக்கான சோசலிசத் தத்துவத்தைக் கற்றுணர்ந்த ஞானச் சுடராக பகத்சிங் விளங்கினார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் களையும் கவிதையாக வடித்துக் கொடுத்திருக் கிறார்....” என்று அணிந்துரையில் குறிப்பிட்டு இருப்பது அருமை.

காப்பியத்தைத் தனிமனித சுயசரிதையாகக் குறுக்கிவிடாமல், அக்கால வரலாற்றில் ஒருவகை கதைத் தலைவனைக் கொண்டு சென்றிருப்பதால் ஆசிரியரின் காவிய நோக்கம் வெற்றி பெற்றிருக் கிறது; இந்தக் காப்பியம் இப்படித்தான் செய்யப் படவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகிறது.

புரட்சி என்பது பொழுதுபோக்கல்ல, போராட்ட வரலாற்றின் மறுவடிவம் என்பதை பகத்சிங்கின் குறுகிய கால வாழ்க்கை கூறாமல் கூறுகிறது.

பகத்சிங் புரட்சிக் காப்பியம்

ஆசிரியர்: வாய்மைநாதன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

விலை: ரூ.350/-

Pin It