இஸ்லாமியப் புனைகதை வரலாற்றில் ஒரே மாதிரியான போக்கு நிலையே தொடக்கத்தில் நிலவியது. இஸ்லாமியப் புனைகதைகள் பெரும்பாலும் மதக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்கிற கருவிகளாகவே இருந்தன. நாளடைவில், இஸ்லாமிய நாவல்கள் மதச் சம்பிரதாயத்துக்கு உரியவை என்று கருதப்பட்டு வந்த நிலை மாற்றத்திற்குள்ளாகியது. மதம் சார்ந்த விமர்சனங்கள், வர்க்க முரண்பாடுகள், விளிம்புநிலைப் பதிவுகள் போன்ற சிந்தனைகள் உருவாயின. இஸ்லாமியப் படைப்பாளர்களின் எண்ணிக்கையும் 1980களுக்குப் பிறகு அதிகரிக்கத் தொடங்கியது.
தோப்பில் முகம்மது மீரான் அவர்கள் இஸ்லாமியப் படைப்பாளர்களில் முன்னோடியாக விளங்கியவர். தன்னுடைய நாவல்களில் மதம் சார்ந்த பதிவுகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியவராவார்.
தோப்பில் முஹம்மது மீரானின் படைப்புகள்
ஒரு படைப்பாளியின் அடிப்படை நோக்கம் தான் பெற்ற இன்பத்தை இவ்வுலகம் பெறச் செய்வதும், தான் உணர்த்த விழையும் உண்மைக்கு வடிவம் தருவதுமே ஆகும். “படைப்பாளிகள் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு கால கட்டங்களில் உருவாகிறார்கள். சமுதாயத்தில் தன்னையோ, தன் குடும்பத்தையோ, தன் சமூகத்தையோ பாதித்த செயல்களில் சில படைப்பாளிகள் பிறக்கிறார்கள். எனவே அவர்களது படைப்புகளை வெளிக்கொணர்வதற்கு இலக்கியச் சூழல் மிக முக்கியக் காரணியாக அமைகின்றது”.
தோப்பில் முஹம்மது மீரான் படைத்துக் காட்டும் கதை மாந்தர்கள் அவர்தம் செயல்கள், நிகழும் சம்பவங்களைப் பற்றிய வருணனைகள் அனைத்திலும் இந்தக் குறிக்கோள்களே ஓங்கியிருக்கும். இக்கூற்றிற்கு மீரானின் படைப்புகள் பொருந்துகின்றன. மீரானின் ஒவ்வொரு படைப்பும் இஸ்லாமியச் சமூகத்தின் வாழ்வியல் இன்ப, துன்ப நிகழ்வுகளை எதிரொலிக்கின்றது. தோப்பில் முஹம்மது மீரான் தனது சமுதாயத்தின் சீர்திருத்தத்திற்காகப் பாடுப்பட்டுக் கொண்டிருந்தவர். தமிழ் இஸ்லாமியச் சமூகம் வெளிக்காண்பிக்காத செய்திகளைச் சுட்டிக் காண்பித்த முதல் தமிழ் இஸ்லாமியப் படைப்பாளுமையாகக் கருதப்படுகிறார்.
நாவல்கள்
தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனையடுத்து, ‘துறைமுகம்’ 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின் ‘கூனன் தோப்பு’ 1993 ஆம் ஆண்டும், ‘சாய்வு நாற்காலி’ 1995 இலும், ‘அஞ்சு வண்ணம் தெரு’ 2001 இலும், இறுதியாகக் ‘குடியேற்றம்’ 2017 இலும் மொத்தமாக ஆறு நாவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழக இஸ்லாமியப் பெண்களுக்கான கல்வியறிவைக் குறித்த மறுமலர்ச்சியை அவர்தம் படைப்புகளில் முன்னிறுத்தியுள்ளார். அனைத்து இஸ்லாமிய மக்களும் கல்வியறிவு பெறவேண்டும் எனும் சீர்திருத்தக் கருத்தைத் தத்தம் படைப்புகளில் வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமியச் சமூகத்தில் உள்ள பலதார முறையின் தவறான போக்குகள், புரிதல்களை விளக்கிக்காட்டி, பெண்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளைத் தவிர்த்திட எண்ணியுள்ளார். தோப்பில் முஹம்மது மீரான் நாவல்களில் பெண்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். இஸ்லாமியச் சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள் மறைமுகமாக நடந்த சூழலை எடுத்துக்காட்டி பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை முன்னிறுத்திப் படைப்புகளைத் தந்துள்ளார்.
தமிழகத்தில் சமயம் சார்ந்த இலக்கியங்கள் வெளிவராத சூழ்நிலையில் இஸ்லாமிய மக்களைக் குறித்து தோப்பில் முஹம்மது மீரான் சுட்டிய கருத்துகளால் இஸ்லாமியர்களிடையே பெரும் சர்ச்சைகள் உருவாயின. நாளடைவில், இஸ்லாமியச் சமூகத்தில் மாற்றத்திற்கான வழிகாட்டியாக மீரானின் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தோப்பில் முஹம்மது மீரான், தமது படைப்புகளில் சமயம் சார்ந்த போதனைகளையும் கடமைகளையும் வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய சமய விதிமுறைகளின்படியே மக்களை வழிநடத்திச் செல்லவும் விழைந்துள்ளார். சமுதாயத்திலுள்ள மக்களை ஒருநிலைக்குள்ளாகக் கொண்டுவந்து முறைதவறாமல் வாழ்வதற்குச் சமயம் என்னும் ஆயுதமே சிறந்ததென்னும் கருத்தினை வலியுறுத்துகின்றார்.
தோப்பில் முஹம்மது மீரான் இஸ்லாமிய மார்க்கத்தில் சில மதப் பண்டிதர்களின் கட்டமைப்பில் உருவான சடங்காசார முறைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவற்றின்படி வாழ்ந்திட வேண்டாமென்ற கருத்தினை முன்வைத்துள்ளார். அவர் படைப்புகளில் மட்டுமே தனது எண்ணத்தினைப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், தனது சொந்த வாழ்விலும் முன்மாதிரியாக வாழ்ந்து வந்த ஆளுமையாவார்.
இஸ்லாமியச் சமுதாயத்தில் வேற்றுமொழியைக் கற்பது பாவமானதாகக் கருதப்பட்டது. இதனால் வேற்றுமொழி அறிவின் தேவையை மக்கள் உணர்ந்திடவில்லை. இக்காலச் சூழ்நிலையில்தான் தோப்பில் முஹம்மது மீரான் கல்வியறிவின் தேவையைப் படைப்புகளின் வழி விதைக்கின்றார். கல்வியறிவின் இன்றியமையாமையைக் குறித்துப் போதித்துள்ளார்.
சமயத்தின் பெயரால் சமூகத்தில் நிலவிவந்த மூடத்தனமான செயல்களையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்தார். மக்களின் அறியாமையைப் போக்கி மறுமலர்ச்சிக்கான சிந்தனைகளை மக்கள் மனத்தில் விதைத்துச் சென்றார்.
“இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்துக்களில் யதார்த்தவாதப் போக்கு பின்னடைந்துவிட்டது எனப் பின் நவீனத்துவ வாதிகள் பேசினாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் யதார்த்தவாதப் போக்கு நமது நாவல் இலக்கியத்தில் பல புதிய பரிமாணங்களுடன் எழுச்சி பெற்றுள்ளது” என்கிறார் பா. ஆனந்தகுமார்.
அதற்கேற்ப, எதார்த்தவாத உலகில் தோப்பில் முஹம்மது மீரான், அறியப்படாத இஸ்லாமிய வாழ்க்கையை எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும், படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி மீரானின் படைப்புகள் அமைந்தன. இருந்தும், ஒட்டுமொத்த மனிதஇனத்தின் வாழ்வியல் சாராம்சமாகவும் அவை பிரதிபலிப்பதால் மீரானின் படைப்புகள் யாவும் ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் பிரச்சனைகளை வெளிக்காட்டுபவையாகவே அமைந்தன.
“யதார்த்தம் என்பது உண்மையைத் தேடிக் காணும் நெறி. உள்ளதை உள்ளவாறே படம் பிடித்துவிடின் உண்மை துலங்கும் என்பதில்லை. இயற்கையில் முக்கியமானதும், முக்கியமற்றதும், பயனுள்ளதும், பயனற்றதும், செத்ததும், உயிருள்ளதும், கலந்து விரவிக் கிடக்கின்றன. இவற்றை நுணுக்கமாக வருணித்து விடுவதால் ஒரு பொருளின் உள்ளியல்பு அல்லது சிறப்பியல்பு தெளிவாகாது. மேலோட்டமான நுணுக்கங்களையும் ஊடுருவி உள்ளியல்புகளைக் கண்டறிய வேண்டும். இது யதார்த்த இலக்கிய நெறியாகும்” என்று க. கைலாசபதி எதார்த்த இலக்கியத்தின் தன்மையை வரையறுக்கிறார்.
அவ்வகையில் மீரானின் நாவல்கள் வாழ்வியலின் இன்ப, துன்பங்களை அப்பட்டமாக ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகின்றன. நாவல் மனித வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையது. வாழ்வியலின் தவறுகளை வெளிக்காட்டும் கருவியாக நாவல் வலம் வருகிறது. தோப்பில் முஹம்மது மீரான் இதனை மெய்ப்பிக்கிறார். எதார்த்த வாழ்வியலின் தன்மைகளை நாவலின்வழி வெளிப்படுத்தியுள்ளார்.
தோப்பில் முஹம்மது மீரானின் ஒவ்வொரு கதையும் எதார்த்த வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுபவையாய் அமைந்தன. துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய நாவல்கள் மக்களின் வாழ்வியல் போராட்டங்கள் குறித்து வாதிடுபவையாகப் படைக்கப்பட்டுள்ளன.
மூடநம்பிக்கைகளாலும் அறியாமையாலும் வாழுகின்ற மனித மனங்களில் ஏற்பட வேண்டிய மாற்றத்தினைக் குறித்தும் தோப்பில் முஹம்மது மீரானின் நாவல்கள் பேசுகின்றன.
- முனைவர் கோ. சத்தியகுமார், கௌரவ விரிவுரையாளர், அரசு ஆடவர் கலைக் கல்லூரி கிருஷ்ணகிரி.