“டால்ஸ்டாய் என் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்களில் ஒருவர்;
அவரது சிந்தனைகள் என்னை அகிம்சையின் பாதையில் வலுப்படுத்தின.”
- மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். அவர் மனதில் நிறையக் கேள்விகள் இருந்தன. அநீதியை எதிர்க்க வன்முறைதான் தீர்வா? அது இல்லாமலே முடியாதா? அன்பும் உண்மையும் எப்போதும் வெற்றி தருமா? இவை போன்ற பல கேள்விகள் அவர் மனதில் தோன்றின. சரியான விடை கிடைக்கவில்லை. மனம் குழம்பியது. இந்தக் கேள்விகள் அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்ததன.
ஒரு நாள் மாலை. காந்தி கடுமையான வேலைகளுக்குப் பிறகு, தன் சிறிய அறையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது அவர் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். அது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்தகம்!
அந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க, காந்தியின் மனம் விரிந்தது. ஒரு தெளிவு தோன்றிற்று. “அன்பே மிகப் பெரிய சக்தி. வன்முறைக்கு வன்முறை ஒருபோதும் தீர்வு ஆகாது!” என்ற டால்ஸ்டாயின் எண்ணம், காந்தியின் இதயத்தை ஆழமாகத் தொட்டுவிட்டது! உடனே காந்திக்கு ஓர் ஆசை வந்தது. “டால்ஸ்டாயை நேரில் சென்று சந்திக்க வேண்டும். அதற்குமுன், அவரின் சிந்தனைகள் என்னை எவ்வளவு தைரியமாக்கின என்பதை உடனே அவருக்கு எழுத வேண்டும்” என்று காந்தி, டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். “நான் அஹிம்சை வழியில் போராடுகிறேன் - உங்கள் எழுத்தின் ஒளியில்” என்று மட்டும் பணிவுடன் எழுதியிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, பதில் கடிதம் வந்தது. டால்ஸ்டாய், காந்தியின் பணியைப் பாராட்டி, “அன்பும் உண்மையும் தான் உலகை மாற்றும் சக்தி” என்று பதில் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தைப் படித்ததும், காந்தியின் கண்களில் ஓர் ஒளி! மனதில் ஆனந்தம். “நான் தனியாக இல்லை. நான் தேர்ந்தெடுத்த இந்தப் பாதை சரியான பாதை”தான் என்று அவர் உறுதியாக நம்பினார். பின்னாளில், தன் வாழ்வில் மிகுந்த மரியாதை வைத்த டால்ஸ்டாயை நினைவுகூரும் விதமாக, காந்தி தென்னாப்பிரிக்காவில் ஜோன்னஸ்பார்க் அருகில் சத்தியாகிரகப் போராட்டத்திற்காக உருவாக்கிய கூட்டுறவு பண்ணைக்கு ஒரு இடத்திற்கு “டால்ஸ்டாய் பண்ணை” என்று பெயரிட்டார். அது அவரது உள்ளத்தில் டால்ஸ்டாய் மிக உயர்ந்த இடத்தில் இருந்ததற்கான அடையாளச் சின்னமாகக் கருதப்பட்டது.
உலக இலக்கிய வரலாற்றில் சில எழுத்தாளர்கள் மட்டுமே தங்கள் காலத்தைத் தாண்டி, தலைமுறைகளைக் கடந்து மனித மனங்களைத் தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருக்கிறார்கள்! அந்த வரிசையில் லியோ நிக்கோலயேவிச் டால்ஸ்டாய் (Leo Nikolayevich Tolstoy) ஒரு தனித்துவமானவர். அவர் நாவலாசிரியர் மட்டுமல்லர்; மனித வாழ்வின் அர்த்தம், துன்பம், காதல், கடமை, வாழ்க்கைநெறி, ஆன்மீகம் ஆகிய அனைத்துத் தளங்களையும் ஒரே நேரத்தில் ஆராய்ந்த மாபெரும் சிந்தனையாளர்; கலைஞர்! அவரது எழுத்துகள் மனிதர்களை அவர்களது புறவாழ்வில் இருந்து அகவாழ்வை நோக்கி ஆழமாக இட்டுச் செல்கின்றன. அதனால்தான் டால்ஸ்டாய் இலக்கிய உலகில் “வாழ்க்கை நெறியைப் போதிக்கும் ஆசிரியர்” என்று அழைக்கப்படுகிறார்.
லியோ டால்ஸ்டாய் 1828 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று (அன்றைய ரஷ்ய நாட்காட்டியின்படி ஆகஸ்ட் 28) ரஷ்யாவில் உள்ள யாஸ்னயா பொல்யானா என்ற பெரிய நிலப்பகுதியில், ஓர் உயர்குடிக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பம் கல்வியும் மிகுந்த செல்வமும் பெற்ற குடும்பமாக இருந்தது. ஆனாலும், அவர் சிறு வயதிலேயே தாய்–தந்தையரை இழந்தவர்.
வெளிப்படையாகப் பார்க்கும்போது அவரது வாழ்க்கை வசதியும் செழிப்பும் நிறைந்ததாகத் தோன்றினாலும், அவரது உள்ளார்ந்த வாழ்க்கை என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே சோகத்தாலும் தனிமையாலும் நிரம்பியது. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அவரது தனிமை அனுபவம், அவரது மனதில் ஒரு நிரந்தரமான வெற்றிடத்தை உருவாக்கியது. அந்த வெற்றிடமே பின்னாளில் அவரது எழுத்துகளில் காணப்படும், வாழ்க்கை–மரணம் பற்றிய ஆழமான விசாரணைகளுக்கான விதையாக அமைந்தது. செல்வச் சூழலில் வளர்ந்தாலும், அவர் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைத் தேடும் மனநிலையிலேயே இருந்தார். அதை நோக்கியே அவரது மனம் சென்றுகொண்டிருந்தது.
இளமைப் பருவத்தில் டால்ஸ்டாய் வழக்கமான “அரிஸ்டோக்ராட்” மனோபாவத்தில் – அதாவது, ஒரு மேட்டுக்குடி இளைஞனாகவே வாழ்ந்தார். சூதாட்டம், ஆடம்பரம், மது, என ஓர் ஒழுங்கற்ற வாழ்க்கை. பல நேரங்களில் அவர் தன் சொந்த வாழ்க்கையில் வெறுப்பும் குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தார். அவருடைய வாழ்வின் இருள்நிறைந்த இந்தப் பக்கங்கள்தான் அவரை எழுத்தாளராக உருவாக்கின எனலாம். ஏனெனில், மனிதன் எவ்வாறு தன் பலவீனங்களில் சிக்கிக் கொள்கிறான் என்பதையும், அந்தச் சிக்கல்களிலிருந்து மீள அவன் மேற்கொள்ளும் போராட்டத்தையும் அவர் நேரடியாக அனுபவித்திருந்தார். இந்த அனுபவங்களே அவரது கதாபாத்திரங்களை உயிர்துடிப்பான மனிதர்களாக மாற்றின.
டால்ஸ்டாய் வாழ்ந்த காலம் 19ஆம் நூற்றாண்டு. அப்போது ரஷ்ய சமூகத்தில் பெரும் சமத்துவமின்மை நிலவியது. செல்வந்தர்கள் மிக வசதியாக வாழ்ந்தனர்; விவசாயிகளும், ஏழைகளும் கொடிய வறுமையில் வாடினர். அடிமைத்தனம் (Serfdom), போர், மதச்சடங்குகள், அரசின் அதிகாரம் ஆகியவற்றை டால்ஸ்டாய் கடுமையாக விமர்சித்தார். பின்னாளில், எளிய வாழ்க்கை, அஹிம்சை போன்ற கொள்கைகளை அவர் வலியுறுத்தினார்.
டால்ஸ்டாய் எழுத்துலகில் காலடி வைத்தது 1840களின் இறுதியில்தான். ஆனால் அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனை அவர் ராணுவச் சேவையில் பங்கேற்றதுதான். க்ரிமியன் போர் (Crimean War) காலத்தில் அவர் ராணுவத்தில் பணியாற்றினார். போர்க்களத்தில் கண்ட மரணம், பயம், வீரத்தின் போலித்தனம், மனித உயிரை அற்பத்தனமாக மதித்தது, சிலர் நடந்துகொண்ட முறை அவரை ஆழமாக உலுக்கின. இதன் விளைவாக, அவர் எழுதிய “செவாஸ்டோபோல் சித்திரங்கள்” (Sevastopol Sketches) போன்ற படைப்புகள், போரை மனித வாழ்க்கையின் கொடூரமாகச் சித்திரித்தன. இது ரஷ்ய இலக்கியத்தில் ஒரு புதிய யதார்த்தவாதப் பார்வையை உருவாக்கியது.
1852ஆம் ஆண்டு வெளிவந்த “குழந்தைப் பருவம்” (Childhood) என்ற அவரது முதல் நாவல், அவரது எழுத்துத் திறனை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது. குழந்தை மனதின் நுண்ணிய உணர்வுகளை, நினைவுகளின் இனிமையையும் வேதனையையும் ஒருவிதமான மொழியில் அவர் வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, “இளமைப் பருவம்” (Boyhood), “வாலிபப் பருவம்” (Youth) ஆகிய படைப்புகள் வெளிவந்தன. இவை அனைத்தும் டால்ஸ்டாயின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவைதான் என்றாலும், அவை தனிப்பட்ட நினைவுகளாக மட்டுமல்லாமல், பொதுவான மனித அனுபவங்களாக இருந்தன.
டால்ஸ்டாயின் இலக்கிய வாழ்வின் உச்சம் என்பது 1860–70 ஆகும். “போரும் அமைதியும்” (War and Peace), “அன்னா கரீனினா” (Anna Karenina) போன்ற மாபெரும் படைப்புகள் இந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்தன. போரும் அமைதியும் நாவல் ஒரு காலத்தின் வரலாற்றையும், அக்கால மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் மாபெரும் படைப்பாகும். ஒரு தேசத்தின் மனநிலை, மனித வாழ்க்கையின் பரந்து விரிந்த காட்சிப்படம் போல விரிகிறது. நெப்போலியன் போர்கள், ரஷ்ய சமூக வாழ்க்கை, அரசியல், குடும்ப உறவுகள், தனிமனிதனின் உள்ளார்ந்த போராட்டங்கள் என அனைத்தையும் ஒரே நாவலில் பேசியது டால்ஸ்டாயின் மேதைமையைக் காட்டுகிறது. இதில் உள்ள கதாபாத்திரங்கள் வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டன.
“போரும் அமைதியும்” (War and Peace) – 1869 வெளிவந்தது. அது ரஷ்ய மக்கள் தேசம், போர், வீரம் பற்றியே அதிகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம். நெப்போலியனின் தாக்குதல்களால் ஏற்பட்ட போர்கள் மாறாமல் மக்களின் நினைவில் தங்கியிருந்தன. அரசர்கள், படைத்தலைவர்கள், தேசப்பற்று ஆகியவை வாழ்க்கையின் பெருமிதமாகவும் வரலாற்றுச் சிறப்பாகவும் கருதப்பட்டன. அதனால் டால்ஸ்டாய், “மிகப்பெரிய வரலாறுகள் யாரால் உருவாகின்றன?” என்ற கேள்வியை எழுப்புகிறார். அரசர்களா? இல்லை, சாதாரண மக்களா? போர் மனிதனை உயர்த்துகிறதா, அழிக்கிறதா? என்பது போன்ற தொடர் விசாரணைதான் இந்த நாவலின் மையம்.
ரஷ்யாவில், அரச குடும்பங்கள் மற்றும் மேட்டுக்குடி மக்களுக்கிடையில் இருந்துதான் இந்தக் கதை தொடங்குகிறது. ஒருபுறம் நாட்டை உலுக்கும் போர், மறுபுறம் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை – காதல், குடும்பம், கனவுகள். இந்த இரண்டு வெவ்வேறு உலகங்களையும் இணைத்துக் காட்டும் கதைதான் போரும் அமைதியும்.
“பியர்” என்ற பணக்கார இளைஞன் இருக்கிறான். அவன் வாழ்வின் அர்த்தம் என்ன என்று புரியாமல் மனக்குழப்பத்தில் இருக்கிறான். பணமும் பதவியும் அதிகாரமும் இருந்தும், அவனுக்கு மன அமைதி என்பதே இல்லை, “நல்ல உயர்வான நிலையில் வாழ வேண்டும்” என்ற ஆசையுடன், பல தவறுகளைத் தொடர்ந்து செய்து பின்பு அதை உணர்ந்து திருந்துவது என்பதான கதைக் களம்.
அதே நேரத்தில் “ஆண்ட்ரெய்” என்ற இளவரசன் போர்க்களத்துக்குச் செல்கிறான். போர்க்களத்தில் வீரமாகப் போரிட்டால் புகழும் பெருமையும் கிடைக்கும் என நம்புகிறான். ஆனால் போர்க்களத்தில் அவன் கண்ட காட்சி மரணம், துன்பம், அழுகுரலும் உயிர்இழப்பும்.இந்த வீண் அழிவு அவனுடைய எண்ணங்களைச் ‘சட்’டென்று சிதைத்துவிடுகிறது. அதன் பின் அவன் வாழ்க்கையைப் பற்றி மிக ஆழமாகச் சிந்திக்கத் தொடங்குகிறான்.
இதற்கிடையில் “நத்தாஷா” என்ற ஓர் இளம் பெண். அவள் அன்பும் அழகும் நிறைந்தவள். அது மட்டுமல்ல, அவள் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பாள். வாழ்க்கையை ஓர் இசையாகவும் மகிழ்ச்சியாகவும் பார்த்தாள். ஆனால் அவளின் காதல், ஏமாற்றம், மனவேதனை, தவறான முடிவுகள் அவள் மன நிலையை முற்றிலும் மாற்றிவிடுகின்றன. காலம் ஓடுகிறது. அவள் மனமுதிர்ச்சி அடைகிறாள்.
நெப்போலியன் ரஷ்யாவைத் தாக்க, நாடெங்கும் போர் வெடிக்கிறது. மக்கள் வீடு, உடைமைகளை இழக்கிறார்கள்; நகரங்கள் தீப்பற்றி எரிகின்றன; வீரர்கள் வீழ்கிறார்கள். மாபெரும் போரின் முன் மனிதர்கள் மிகவும் சிறுமைப்பட்டு விடுகிறார்கள் என்பதைத்தான் இந்தக் கதை உணர்த்துகிறது. பெரிய பேரரசர்களின் தவறான முடிவுகள் எளிய பொதுமக்களின் வாழ்க்கையை அழிக்கின்றன. போரின் கொடூரத்துக்குப் பிறகு, மீதமிருப்பவை அமைதி, குடும்பம், அன்பு மட்டுமே என்பதே முடிவு. பியர் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கண்டடைகிறான். நத்தாஷா வாழ்க்கையின் சுமைகளை ஏற்றுக்கொண்டு அமைதியான குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறாள்.
இதே போல் அன்னாகரீனினா காதல், திருமணம், சமூக கட்டுப்பாடுகள், பெண்ணின் நிலை ஆகியவற்றை மிக ஆழமாக ஆராயும் படைப்பு .
அன்னா கரீனினா – 1877 ஆண்டு, போர்களின் சத்தம் சற்று அடங்கிய பின் வெளிவந்தது. சமூகத்தில் ஒழுக்கம், திருமணம், பெண் சுதந்திரம், மக்களிடம் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் தீவிரமாகத் தோன்றத் தொடங்கியிருந்தன. மேல்தட்டு சமூகத்தில் அறியப்படாத ஒரு வெறுமையும் போலித்தனமும் வெளிப்பட்டன. குறிப்பாக, ஒரு பெண் சமூகக் கட்டுப்பாடுகளால் எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகிறாள் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்.
ரஷ்ய நாட்டில், உயர் சமூகத்தில் பிறந்து வாழ்ந்த ஓர் அழகான பெண் தான் அன்னா கரீனினா . அவள் தன் கணவர் கரீனின் அரசு அதிகாரி. மதிப்புமிக்க உயர் பதவி, சட்டம் பகட்டு என்பதிலே அவர் வாழ்க்கை ஓடுகிறது, ஆனால் அன்னாவின் வாழ்க்கையில் அன்பும் பாசமும் வற்றிப்போய் ஒரு வெறுமை ஏற்படுகிறது!
ஒரு நாள் மாஸ்கோ நகருக்கு வந்த அன்னா, அங்கு இளம் இராணுவ அதிகாரியான விரோன்ஸ்கியை எதிர்பாராமல் தற்செயலாகச் சந்திக்கிறாள். அந்த முதற்சந்திப்பிலேயே இருவருக்கும் ஒருவிதமான மன ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது!. காலப்போக்கில் மெல்ல அது காதலாக மலர்கிறது. அது வெளி உலகிற்கும் தெரியவருகிறது, அது மறைக்கமுடியாமல் மறக்கமுடியாத காதலாகிறது. ஆனால் அந்தக் காதல் சமூகத்திற்கு எப்படி பிடிக்கும்.? “திருமணமான ஒரு பெண்” இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது. கணவர் அவளை வெறுத்து ஒதுக்குகிறார். தன் மகனிடமிருந்தும் அன்னா பிரிக்கப்படுகிறாள். விரோன்ஸ்கியுடன் இருந்தாலும், சமூகம் அவளை அவமானப்படுத்துகிறது. பொறாமை கொள்கிறது. மனவேதனை அடையச் செய்கிறது. அந்த மன வேதனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது!. அன்புக்காக ஏங்கும் அன்னா, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குத் தள்ளப்படுகிறாள். அவளின் காதல் சோக முடிவை அடைகிறது.
இதே கதைக்குள், இன்னொரு கதையும் வருகிறது. லெவின் என்ற மனிதனின் வாழ்க்கையும் சொல்லப்படுகிறது. அவன் எளிய மனிதன்; நிலத்தில் உழைப்பவன். கிட்டி என்ற பெண்ணைக் காதலிக்கிறான். அவர்கள் திருமணம் செய்து கொண்டு, எத்தனையோ பல சிரமங்களுடன் வாழ்ந்தாலும், அன்பும் காதலும் கொண்ட ஒரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, மிக மகிழ்ச்சியாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள்.
ஒருபக்கம் அன்னாவின் வாழ்க்கைப் போராட்டமும் சிதைவும், மறுபுறம் லெவின்–கிட்டி யின் காதல் வாழ்வும் மகிழ்வும் மறுபக்கம் இவை சமூக கட்டுப்பாடுகளை மீறி காதல் கொள்ளும் போது எவ்வளவு துன்பத்தை மனிதர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும், உண்மையான வாழ்க்கை எளிய அன்பிலும் பொறுப்பிலும் தான் உள்ளது என்பதையும் சொல்லும் யதார்த்தவாதக் கதைதான் அன்னா கரீனினா!
இந்த இரண்டு மாபெரும் படைப்புகளுக்குப் பிறகு, டால்ஸ்டாயின் வாழ்க்கையில் ஓர் ஆன்மீகத் தேடல் ஏற்பட்டுவிடுகிறது. வாழ்வின் அர்த்தம் என்ன? மனிதன் எதற்காகப் பிறக்கிறான்? எதற்கு மனிதனுக்குத் துன்பம் வருகிறது? என்பதான பல கேள்விகள் அவரைத் தொடர்ந்து வாட்டின. இதன் விளைவாக அவர் எழுதிய “ஒப்புதல்” (A Confession) போன்ற படைப்புகள், அவரது ஆன்மீகத் தேடலின் வெளிப்பாடுகளாக அமைந்தன. இக்காலகட்டத்தில் அவரது எழுத்துகளில் கலை அழகைவிட வாழ்வியல் தத்துவம் குறித்த பார்வையே அதிகரித்துள்ளது என சில விமர்சகர்கள் கூறினாலும், அது அவரது உள்ளார்ந்த உண்மையின் தேடலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
டால்ஸ்டாயின் எழுத்துப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான அம்சம் என்பது அவரது யதார்த்தவாதம். அவர் வாழ்க்கையை அலங்காரமின்றி, போலித்தனமின்றி உரித்துக்காட்டினார். மனிதன் ஒரே நேரத்தில் நல்லவனாகவும், கெட்டவனாகவும் இருக்க முடியும் என்பதை அவரது கதாபாத்திரங்கள் உணர்த்தின. அவரிடம் முழுமையான கதாநாயகன் என்பதோ, முழுமையான வில்லன் என்பதோ கிடையாது. அனைவரும் தங்கள் சூழ்நிலைகளின் கைதிகள் தான்!
அதே நேரத்தில் டால்ஸ்டாய் ஒரு சமூக சிந்தனையாளர். அகிம்சை, எளிமை, தொழிலாளர் வாழ்க்கை, மதத்தின் உண்மையான பொருள் ஆகியவற்றை அவர் தீவிரமாகச் சிந்தித்தார், ஆராய்ந்தார். அவரது இந்தச் சிந்தனைகள் மகாத்மா காந்தியை ஆழமாகப் பாதித்தன என்பது குறிப்பிடத்தக்கது. டால்ஸ்டாயின் தத்துவம் (Tolstoyan Philosophy) என்றே தனியான சிந்தனை மரபு ஒன்று உருவானது.
இலக்கிய மதிப்பீட்டின் வழி பார்க்கும்போது, டால்ஸ்டாய் உலகின் மிகச் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்படுகிறார். மனித மனத்தின் உளவியலை இவ்வளவு நுணுக்கமாகப் பதிவு செய்தவர் அரிது. சிலர் அவரது பிற்கால எழுத்துகளை அதிக போதனை கொண்டவை என்று விமர்சித்தாலும், அந்தத் தத்துவத் தேடலையே அவரது தனித்துவமாகவும், அவரது மனிதநேயத்தின் அடையாளமாகவும் சுட்டுகின்றனர்.
டால்ஸ்டாயின் படைப்புகளின் மையமாக இருப்பது “வாழ்க்கை நெறி” (moral life). ஆகும். மனிதன் எப்படி வாழ வேண்டும்?, எது சரி?, எது தவறு? என பல கேள்விகள் அவரது நாவல்களில் தொடர்ந்து எழுகின்றன. “சமூகத்தில் மதிப்பைப் பெறுவது, பதவி, பணம் ஆகியவை உண்மையான வாழ்க்கை வெற்றியா?” என்ற சந்தேகத்தை அவர் தொடர்ந்து எழுப்புகிறார். அன்னா கரீனினா போன்ற நாவலில், சமூகக் கட்டுப்பாடுகளை மீறிய ஒருவரை சமூகம் எவ்வாறு தண்டிக்கிறது என்பதையும், அதே சமூகம் உள்ளுக்குள் எவ்வளவு போலியாக உள்ளது என்பதையும் அவர் காட்டுகிறார். இங்கே இன்னொன்றையும் அவர் சொல்கிறார், சமூகக் கட்டுப்பாடுகளை மீறுவது என்பதாலே அது முற்போக்காக அமைந்துவிடாது என்கிறார்.
மரணம் மற்றும் வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தம் என்பது டால்ஸ்டாயின் மற்றொரு முக்கியமான மையக்கரு. “இவான் இல்யிச்சின் மரணம்” (The Death of Ivan Ilyich) என்ற படைப்பில், ஒரு சாதாரண எளிய மனிதன் தனது இறுதிக் காலத்தில்தான் வாழ்வின் உண்மையைப் புரிந்து கொள்வதை டால்ஸ்டாய் காட்டுகிறார். பதவி, சமூக மரியாதை ஆகியவற்றுக்காக மட்டும் வாழும் வாழ்வு உண்மையில் வெறுமையானது என்பதையும் உணர்த்துகிறார்.
டால்ஸ்டாய் போர் மற்றும் வரலாற்றைப் பற்றியும் தனித்த பார்வையைக் கொண்டிருந்தார். போரும் அமைதியும் நாவலில், போர்களை வீரமாகச் சித்திரிக்கும் மரபை அவர் மீறுகிறார். போரில் உள்ள குழப்பம், பயம், உயிரிழப்பு, எளிய மனிதர்களின் பெரும் துயரங்கள், அபாயங்கள் ஆகியவற்றை அவர் மிக யதார்த்தமாக விளக்குகிறார். பெரிய பெரிய தலைவர்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்ற கருத்தை அவர் மறுக்கிறார். அதே வேளை, இலட்சக்கணக்கான மனிதர்களின் எளிய செயல்களே வரலாற்றைக் கட்டமைக்கின்றன என்பது அவரது அழுத்தமான பார்வை!
சமூகத்தில் உள்ள உயர்சாதி – தாழ்ந்தசாதி, ஏழை-பணக்காரர்கள் என்ற வேறுபாடுகள் டால்ஸ்டாயை மிகவும் பாதித்தன. அவரே உயர்குடியில் பிறந்தவராக இருந்தாலும், அவர் அந்த வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைக் கடுமையாக விமர்சித்தார். உயர்சாதி மக்களின் வாழ்க்கை பகட்டாக இருந்தாலும், உள்ளுக்குள் அது அர்த்தமற்றது என்றுதான் அவர் தொடர்ந்து காட்டிவந்தார். அதே நேரத்தில், விவசாயிகளின் எளிய, அன்றாட வாழ்வில் ஓர் ஒழுங்கு, நேர்மை, விடா முயற்சியும் உழைப்பும் இருப்பதாக அவர் நம்பினார். ஆனால் அவர்களை முழுமையாக உயர்த்திப் பேசவில்லை; மாறாக, எளிமை ஒரு நல்ல வாழ்க்கை வழி என்பதை மட்டும் காட்டுகிறார்.
டால்ஸ்டாயின் எழுத்தின் வெளிப்பாட்டு உத்தி மிகவும் முக்கியமானது. அவர் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தை (inner thoughts) மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார். ஒரு மனிதன் உள்மனதில் என்ன நினைக்கிறான், என்ன மாதிரியான மனக்குழப்பத்தில் இருக்கிறான், எந்த முடிவையும் எடுக்க முடியாமல் ஏன் தவிக்கிறான் என்பதையெல்லாம் வாசகர் நேரடியாக உணரும் வகையில் அவர் எழுதுகிறார். இதனால் அவரது கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக, நேரடியாக நம்மோடு உரையாடுவதுபோவே தோன்றுகிறது.
அவர் ஒரு கதையை ஒரே கோணத்தில் மட்டும் சொல்வதில்லை; பல பார்வைகளில் சொல்கிறார் எனலாம். இதனால், “இதுதான் உண்மை”, “இது பொய்” என்று எதையும் நேரடியாகச் சொல்வதில்லை, அவரவருக்கு அவரவது நியாயங்கள். இது வாழ்க்கையின் சிக்கலான தன்மை. இதை அவர் தெளிவாகவே உணர்த்துகிறார்.
டால்ஸ்டாயின் மொழிநடையைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனில் அது மிகவும் எளிமையானது. அலங்காரமான சொற்கள், கவித்துவ நடையை அவர் அதிகம் பயன்படுத்தவில்லை. நேரடியான, தெளிவான மொழியில் அவர் எழுதுகிறார். உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். உண்மைக்கு அலங்காரம் எதற்கு என்று நினைத்தார். இது அவருடைய எழுத்திற்கு வலிமை சேர்த்தது!.
அவருடைய காலத்தில் எழுதிய பிற எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டால், டால்ஸ்டாய் தனித்தன்மையுடன் தெரிகிறார். ஃபியோதர் தோஸ்தோயெவ்ஸ்கி மனித மனத்தின் தீவிரமான பக்கங்களை, குற்ற உணர்வு, பாவம், புண்ணியம், கடவுள் நம்பிக்கை போன்றவற்றை ஆழமாக எழுதினார். டால்ஸ்டாய் அன்றாட வாழ்க்கையில் மனிதன் எப்படி ஒழுக்கநெறியுடன் வாழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். இவான் துர்கனேவ் சமூகத்தை அமைதியாகக் கவனித்து எழுதினார்; ஆனால் டால்ஸ்டாய் சமூகத்தை நேரடியாக விமர்சித்து மாற்ற வேண்டும் என்று நினைத்தார். அதற்கான ஆயுதமாகத்தான் அவர் எழுத்தைக் கருதினார்.
லியோ டால்ஸ்டாய் 1910ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று, தனது 82-ஆவது வயதில் உயிரிழந்தார். யாஸ்னயா பொல்யானாவை விட்டு வெளியேறிய அவர், பயணத்தின்போது நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் ரஷ்யாவின் அஸ்தாபோவோ ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார். அங்குள்ள ரயில் நிலையத் தலைவர் இல்லத்தில்தான் அவரது இறுதி நாட்கள் கழிந்தன. அவருடைய நெருங்கிய சீடரும் நண்பருமான விளாடிமிர் செர்ட்கோவ் அவரைச் சந்தித்து, இறுதி நேரம் வரை அவருடன் இருந்தார். உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், டால்ஸ்டாய் வாழ்க்கை, மரணம், இறைநம்பிக்கை, மனிதநேயம் போன்றவற்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். 1910 நவம்பர் 20 அன்று அதிகாலை அவர் அஸ்தாபோவோவில் உயிரிழந்தார். அவரது வாழ்க்கையின் இறுதி தருணங்களும், அவர் வாழ்நாள் முழுவதும் தேடிய உண்மை, அன்பு, எளிமை, அறம் ஆகியவற்றை நினைவுபடுத்துவனவாக அமைந்தன.
- பாரதிபாலன்