1
ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஓரியோல் மாநிலத்தில், ஸ்பாஸ்கோயே–லுடோவினோவோ என்ற சிறிய கிராமத்தில் துர்கனேவின் குடும்பத் தோட்டம் அமைந்திருந்தது. ‘பச்சைப்பசேல்’ என்ற பசுமையான மரங்கள் படர்ந்து விரிந்துகிடக்கும் அழகிய புல்வெளிகள், தொன்மையும் அழகும் கொண்ட மாளிகை – வெளியில் இருந்து பார்க்க மிக அழகாக இருந்த அந்த இடத்தின் உள்ளே, பலரின் வேதனையும்,அழுகுரலும், அடக்குமுறையும் புதைந்து கிடந்தன. இளம் வயதிலிருந்தே துர்கனேவ் அந்தத் தோட்டத்தில்தான் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அதிகாலை, பனி பொழிந்து மிதந்துகொண்டிருந்தது. பேரமைதியான அந்த நேரத்தில், தோட்டத்தின் பின்புறத்திலிருந்து அழுகையும் அலறலும் கலந்து பெருங்குரல் ஒன்று கேட்டது. அந்த அலறல் துர்கனேவின் மனதை உறுத்தியது. அவர் மனம் பதபதைத்து விட்டது. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு, அவர் அந்த அலறல் குரல் வந்த திசையை நோக்கிப் பதற்றத்துடன் வேகமாக நடந்தார்.
அங்கே, அவர்களின் வயலருகே உள்ள பழைய குடிசைகளின் பக்கத்தில், ஒரு வேலைக்காரச் சிறுவனை தோட்டத்தின் கண்காணிப்பாளர் கொடூரமாக அடித்துத்தாக்கிக் கொண்டிருந்தான். காரணம் மிகச் சிறியது. வேலையில் ஒரு சிறிய தவறு. இதற்கா இவ்வளவு பெரிய தண்டனை,! மனிதாபிமானமற்றது.! சிறுவனின் உடல் நடுங்கியது;, “ஐயோ… உதவுங்க உதவுங்க என்னைப் போட்டு அடிக்கிறாங்களே... உதவுங்க உதவுங்கள்” என்ற அழுகுரலும் அவனிடம் இருந்து வந்தது. ஆனால் யாரால் உதவமுடியும்? சுற்றிலும் மற்ற வேலைக்காரர்கள் பயத்தில் தலை துவண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் முகத்தில் பீதி!. ஒருவருக்கும் எதுவும் பேச முடியவில்லை. அப்படியே உறைந்து போய் கிடந்தார்கள்.! துணிவு இல்லை. ஏனென்றால் அந்தத் தோட்டத்தில் அவர்கள் மனிதர்கள் அல்ல.. கொத்தடிமைகள்!
இந்தக் காட்சி துர்கனேவின் மனதை மிக ஆழமாகக் குத்தியது. தன் குடும்பம் வசிக்கும் இந்த அழகான தோட்டத்தின் மறுபக்கம் எத்தனை எத்தனை கொடூரமானது…! துன்பமானது… இவ்வளவு கொடுமைகளையா தாங்கி நிற்கிறது என்பதை அவர் முதன்முறையாக உணர்ந்தார். வீட்டுக்குத் திரும்பிய பிறகும், அந்தச் சிறுவனின் முகம் அவரின் கண்களிலிருந்து மறையவே இல்லை. அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் அவர் மனத் திரையில் விழுந்து கொண்டே இருந்தது! அந்த நாள் முழுவதும் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. இரவில் தூக்கமே வரவில்லை!.
அந்தத் தருணத்தில்தான், செர்ஃப்டம் (serfdom) எனும் கொத்தடிமை அமைப்பு மனிதர்களின் ஆன்மாவையே நசுக்குகிறது என்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். ஆண்டுகள் கழிந்தன. துர்கனேவ் ஐரோப்பாவுக்குச் சென்று கல்வியையும் உலகளாவிய பார்வையையும் பெற்றார். ஆனால் ஸ்பாஸ்கோயே–லுடோவினோவோ தோட்டத்தில் அன்று கண்ட அந்தக் காட்சி மட்டும் அவரைவிட்டு ஒருபோதும் விலகவில்லை. தாய்-தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து விலகியதும், அவர் தன் தோட்டத்தில் இருந்த கொத்தடிமைப்பணியாளர்களை விடுதலை செய்தார். அதன் பின் அவர் எழுதிய A Sportsman’s Sketches போன்ற கதைத்தொகுப்புகள் ரஷ்ய கிராமங்களின் வெளித்தெரியாத கொத்தடிமைகளின் வேதனையும், எளியமனிதர்களின் நிலையையும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையும் உயிர்ப்புடன் பேசத் தொடங்கின. அந்தக் கிராமத்தில், ஒரு சிறுவனின் கண்ணீரிலிருந்து தொடங்கிய அந்த உணர்வே, துர்கனேவை மனிதாபிமான எழுத்தாளராக உருவாக்கியது.
2
1843 ஆம் ஆண்டு.
அது ஒரு குளிர் காலம்…செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் புகை மூட்டத்தால் மூடப்பட்டிருந்தது . நெவா நதி பனியால் உறைந்திருந்தது. அந்த மாலை, நகரின் புகழ்பெற்ற இசை அரங்கில் ஒரு ஐரோப்பியப் பாடகி பாடவிருக்கிறாள் என்ற செய்தி நகரெங்கும் பரவியிருந்தது .மக்கள் ஆரவாரமாக இருந்தனர். இவான் துர்கனேவ், அப்போது இளம் எழுத்தாளர். ஆர்வமின்றி ஏதோ ஒரு மனநிலையில் அந்த இசை அரங்குக்குள் நுழைந்தார். ஆனால் அந்த இரவு, அவரது வாழ்க்கையின் திசையே மாறப் போகிறது என்பதனை அவர் அப்போது அறியவில்லை.
மேடைக்கு வந்தாள் அந்தப் பாடகி, அவர் பவுலின் வியார்டோ (Pauline Viardot). மேடையில் புதிய ஒளி, நிலவு போல் குளிர்ச்சியாக, அந்த ஒளி அரங்கில் பரவியது. அவள் பாடத் தொடங்கிய அந்தக் கணமே அரங்கம் அப்படியே உறைந்துபோனது. அவளின் குரல் மென்மையாகவும், காத்திரமாகவும் இருந்தது. அது உள்ளத்தை ஏதோ செய்தது. இயல்பாகவே இருக்க முடியவில்லை. ஏதோ அந்தரத்தில் மிதப்பது போல ஒரு உணர்வு. துர்கனேவ் அவளையே பார்த்துக் கொண்டே இருந்தார். அது பேரழகின் கவர்ச்சி மட்டுமல்ல, அதையும் தாண்டியது அவளின் அழகு , அவளின் அறிவின் தீச்சண்யம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புது ஒலியாக அந்த அரங்கில் பரவத் தொடங்கிற்று.
அந்த இரவிற்குப் பின், அவளின் குரல் துர்கனேவின் உள்ளத்தில் சதாஒலித்துக்கொண்டே இருந்தது. அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நெஞ்சில் எப்போதும் நிறைந்து கொண்டிருக்கும் அந்தக் குரலில் இருந்து அவரால் விடுபடவும் முடியவில்லை. எப்போதும் அது கேட்டுக்கொண்டே இருந்தது.
ஒரு பித்தனைப் போல் அவர் சுற்றிக்கொண்டு திரிந்தார். ஒரு கட்டத்தில் அவளைச் சந்தித்தார். அவளோடு பேசினார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து உரையாடினார்கள்., இலக்கியம், இசை, ஐரோப்பியச் சிந்தனைகள் அனைத்திலும் பவுலின் வியார்டோ துர்கனேவுக்கு ஒரு புதிய உலகைத் திறந்துவைத்தாள். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்தாள். இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது ஆனால்: அவள் ஏற்கெனவே திருமணமானவள். அவளின் கணவர், லூயி வியார்டோ, அந்தக் கலை உலகின் ஒரு முக்கியமான மனிதர். துர்கனேவ் அவள் மீது கொண்டுள்ள காதலை ஒருபோதும் அவளிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
அவருக்கு அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதும். அவள் அருகில் இருக்க வேண்டும். அவரின் ஒவ்வொரு நாளையும் அவள் அழகாக்கிக் கொண்டிருந்தாள். அதுவே அவருக்கு அப்போது போதுமானதாக இருந்தது, பின்பு அவள் வாழ்ந்த நகரங்களுக்கெல்லாம் இவரும் இடம்பெயர்ந்தார். எங்குச் சென்றாலும், ஒரு நிழல் போல அவர் அவளைத் தொடர்ந்தார்.
இவான் துர்கனேவ் எழுதிய கதைகளில் எல்லாம் அடிக்கடி ஓர் ஆண் கதாபாத்திரம் வரும் அவன் ஒரு பெண்ணை நேசிப்பான், ஆனால் அதை அவளிடம் கடைசிவரை் சொல்லவே மாட்டான். அவள் அருகிலேயே இருப்பான். அந்தச் சுகமே அவனுக்குப் போதுமானதாக இருக்கும் ஏனென்றால், அவள் அவனுக்கு உரிமையானவள் அல்லள். இப்படியான கதாபாத்திரங்களில் துர்கனேவ் தானே நிறைந்து இருந்தார்.
ஒரு நாள், பாரிசில், மாலை நேரத்தில், பவுலின் வியார்டோ ஒரு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, துர்கனேவ் மெதுவாக அவளிடம் “உங்கள் குரல், மனிதர்களை மகத்துவமானவர்களாக்கி விடுகிறது அது எப்படி?” என்றார். அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. சிரித்தாள். ஒரு சிரிப்புதான் பதில். அது வழக்கமான சிரிப்பு அல்ல. அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு புது உறவு இருந்தது. நெருக்கம் இருந்தது. அதைக் காதல் என்று சொல்ல முடியாது அதற்கும் மேல் அது,. அதுவே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
ஆண்டுகள் கடந்தன. துர்கனேவ் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளராக மாறினார். ஆனால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. நிறைவேறாத அவருடைய அந்தக் காதல், அவரது தனிமையாக மாறியது. தன்னுடைய இறுதிக் காலத்தில், உடல்நலம் குன்றிய துர்கனேவ், பவுலின் வியார்டோவின் வீட்டருகிலேயேதான் வாழ்ந்தார். அவளின் அந்தக் குரலை, அவளின் சிரிப்பை அவரால் ஒருபோதும் மறக்க முடியவில்லை. அது அவர் மனதிலே உறைந்து விட்டது. அவர் இறந்த பொழுது அவரின் அந்த காதலும் அதனால் ஏற்பட்ட காயங்களும் காயங்கள் ஏற்படுத்திய வடுவும் வெளிஉலகிற்குப் பெரிய அளவில் தெரியாத அளவுக்குப் புதைந்து போய்விட்டது. ஆனால் அவருடைய கதைகள் ஒளிவுமறைவின்றி அவருடைய எல்லா ரகசியங்களையும் நமக்குச் சொல்லி விடுகின்றன.
3
ரஷ்ய இலக்கியத்தின் முகமாக விளங்குபவர் இவான் துர்கனேவ் (1818–1883). லியோ டால்ஸ்டாய், ஃபியோதர் தோஸ்தோயெவ்ஸ்கி போன்ற மகத்தான எழுத்தாளர்களின் சமகாலத்தவராக இருந்தாலும், துர்கனேவ் தன்னுடைய தனித்துவமான இலக்கியப் பாதையை உருவாக்கிக்கொண்டவர் . தீவிரமான தத்துவச் சிந்தனைகளோ, அதீத உணர்ச்சிவெளிப்பாடுகளோ இல்லாமல், மனித மனத்தின் நுண்ணிய அசைவுகளை, சமூக மாற்றங்களின் தாக்கங்களை மெல்லிய குரலில் பதிவு செய்தவர். சாதாரண மனிதர்களின் வாழ்க்கை வழியாகவே வரலாற்று மாற்றங்களை உணர்த்தியவர் துர்கனேவ். இதன் காரணமாகவே உலக இலக்கியத்தில் தனி இடம் பெற்றுள்ளார்.
துர்கனேவ் 1818ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஒரியோல் மாகாணத்தில் செல்வச்செழிப்பு மிக்க நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்தவர். வளமான சூழலில் வளர்ந்தாலும், அவரது இளமைக்காலம் மனஅழுத்தம் நிறைந்ததாகவே இருந்தது. அவரது தாய் வர்வாரா பெட்ரோவ்னா மிகவும் கடுமையானவர். மற்றவர்களை அடிமைபோல் நடத்துவார், மிக மோசமான மூர்க்கக்குணம் கொண்டவர். அடிமை விவசாயக் கூலிகளை மிகக் கொடூரமாக நடத்துபவர். இதையெல்லாம் பார்த்து துர்கனேவின் மனம் மிகவும் பாதிக்கப்பட்டது. சகமனிதர்களிடம் மனித நேயத்தோடு நடக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே அவர் மனதில் விழுந்து விட்டது. அதிகாரமும் செல்வச் செழிப்பும் மனிதர்களை எவ்வாறு கொடூரமாக மாற்றுகின்றன என்பதை அவர் சிறுவயதிலேயே உணர்ந்தார்.
கிராம வாழ்வின் அனுபவம், விவசாயிகளின் துயரமான நிலை, அடிமைத்தனத்தின் கொடுமைகள் அவரது எழுத்துக்களின் கருப்பொருள்களாக மாறின. மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற அவர், பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஜெர்மனியில் அவர் ஹெகல் உள்ளிட்ட மேற்குத் தத்துவஞானிகளின் கருத்துகளைக் கற்றறிந்தார். இதன் மூலம் மேற்கு அறிவுச் சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட “மேற்கத்தியச் சிந்தனையாளர்” (Westernizer) ஆக உருவெடுத்தார்.
துர்கனேவின் இலக்கியத்துடனான தொடர்பு கவிதையில் இருந்துதான் தொடங்குகிறது. ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் பாணியில் கவிதைகள் எழுதிய அவர், பின்னர் கவிதை என்ற வடிவம் தன் உள்ளார்ந்த எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை என உணர்ந்தார்.. அதன்பின் தான் அவர் சிறுகதை, நாவல் வடிவங்களுக்கு மாறினார். இதுவே அவரது உண்மையான இலக்கிய அடையாளமாக உருவாகிய காலம்.
இவான் துர்கனேவ் மென்மையானவர், எளிதில், உணர்ச்சி வசப்படக் கூடியவர். மற்ற மனிதர்களை நம்புவதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவதிலும் முடிவுகள் எடுப்பதிலும் மிகப் பலவீனமாக இருந்தார். இந்த அவரின் குணம் தான் அவருடைய பல கதைகளில் சிந்தனையிலும் செயலிலும் முடிவெடுப்பதிலும் தடுமாறும் கதாபாத்திரங்களாக வெளிப்பட்டன. அவரது வாழ்க்கையின் மிக வலி நிறைந்த ஒர் அனுபவம், ஓபரா பாடகி பவுலின் வியார்டோ மீது அவர் கொண்ட காதல்.
இவான் துர்கனேவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக “ஒரு வேட்டைக்காரனின் குறிப்புகள்” (A Sportsman’s Sketches) என்ற சிறுகதைத் தொகுப்பு விளங்குகிறது. இந்த நூல் அவரது இலக்கிய வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்ததோடு, ரஷ்ய சமூகத்தின் சிந்தனைப் போக்கிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் கிராமப்புறங்களில் வாழ்ந்த சாதாரண விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை, துயரங்கள், கனவுகள், நம்பிக்கைகள், மனித உறவுகள் மற்றும் அவர்களின் உழைப்பின் மதிப்பை மிகவும் நுட்பமாகவும் மனிதநேயத்தோடும் சித்திரிக்கின்றன.
விவசாயிகளின் வாழ்க்கைச் சிக்கல்களை மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் வெளிப்படுத்தியதன் மூலம், ரஷ்ய சமூகத்தில் நிலவிய அடிமை விவசாய முறையின் அநீதியைப் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கியது. இதன் விளைவாக, அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடையிலும் அறிவுஜீவிகளிடையிலும் வலுப்பெறத் தொடங்கியது.
பல வரலாற்றாசிரியர்களும் இலக்கிய ஆய்வாளர்களும், இந்த நூல் ரஷ்யாவில் சமூகச் சீர்திருத்த சிந்தனைகள் வளர்வதற்கு முக்கிய பங்காற்றியதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, 1861 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அடிமை விவசாய முறை (Serfdom) ஒழிக்கப்பட்டதற்கான சமூக மனநிலையை உருவாக்குவதில் இந்தப் படைப்பின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்று மதிப்பிடப்படுகிறது.
துர்கனேவ் எழுதிய காலத்தில் ரஷ்யாவின் சமூகச் சூழல்
19ஆம் நூற்றாண்டு ரஷ்யா அரசியல், சமூக மற்றும் அறிவுசார் மாற்றங்கள் வேகமாக உருவாகிக் கொண்டிருந்த ஒரு முக்கியமான காலமாகும். நாட்டில் நீண்டகாலமாக நிலவிய அடிமை விவசாய முறை, அரசரின் முழுமையான அதிகார ஆட்சி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்துப் பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழத் தொடங்கின. ஒரு புறம், ஐரோப்பாவின் நவீன சிந்தனைகள், அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் ஜனநாயகக் கருத்துக்களை ரஷ்யா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் இருந்தனர்; மறுபுறம், ரஷ்யாவின் பாரம்பரியக் கலாசாரம், மதிப்புகள் மற்றும் தேசிய அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வாதிட்டவர்களும் இருந்தனர். இதனால் ரஷ்ய சமூகத்தில் தீவிரமான கருத்து மோதல்கள் உருவாயின.
புதிய தலைமுறைக்கும் பழைய தலைமுறைக்கும் இடையே உருவான சிந்தனை மோதல்களை இவான் துர்கெனேவ் தனது புகழ்பெற்ற நாவலான “தந்தையரும் மகன்களும்” (Fathers and Sons) என்னும் படைப்பில் ஆழமாகச் சித்தரித்துள்ளார். இந்த நாவலில் இடம்பெறும் பசரோவ் என்ற கதாபாத்திரம், பழமைவாத நம்பிக்கைகள், சமூக மரபுகள் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட மதிப்பீடுகளைச் சவாலுக்கு உட்படுத்தும் புதிய இளம் தலைமுறையின் பிரதிநிதியாகக் காட்டப்படுகிறார். அவர் பகுத்தறிவு, அறிவியல் சிந்தனை மற்றும் மாற்றத்திற்கான விருப்பத்தை முன்னிறுத்துகிறார். ஆனால் துர்கனேவின் தனிச்சிறப்பு என்னவெனில், அவர் எந்த ஒரு தரப்பின் கருத்தையும் முழுமையாக ஆதரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முயலவில்லை. மாறாக, சமூகத்தில் நிலவிய சிந்தனை மோதல்களை ஒரு நடுநிலைப் பார்வையாளராகப் பதிவு செய்கிறார்.
துர்கனேவின் தனித்துவம்
இவான் துர்கனேவின் எழுத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் மனித மனத்தின் நுண்ணிய அசைவுகளை ஆழமாக ஆராய்ந்து சித்தரிக்கும் திறனாகும். ஓர் ஓவியர் தனது தூரிகையால் உயிருள்ள ஓவியத்தை வரைவதுபோல், துர்கனேவ் தனது சொற்களின் வழியாக மனித மனத்தின் மறைந்திருக்கும் உணர்வுகளை உயிர்ப்புடன் வெளிப்படுத்துகிறார். அவரது படைப்புகளில் பெரும் சம்பவங்கள், பரபரப்பான திருப்பங்கள் அல்லது நாடகத்தன்மை நிறைந்த காட்சிகள் காணப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, மனித மனத்தில் மெல்லிய மாற்றங்கள், சொல்லப்படாத உணர்வுகள் மற்றும் உள்ளார்ந்த போராட்டங்களே கதையின் மையமாக அமைகின்றன.
தயக்கம், ஏக்கம், தனிமை, தோல்வி, இழப்பு, நிறைவேறாத காதல், கடந்தகால நினைவுகளின் சுமை மற்றும் மனித மனம் அனுபவிக்கும் மெல்லிய துயரங்கள் போன்ற உணர்வுகளை மிக இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் அவர் வெளிப்படுத்துகிறார். இதனால் அவரது கதாபாத்திரங்கள் கற்பனையான இலக்கியப் பாத்திரங்களாக அல்லாமல், நம் வாழ்வில் நாம் சந்திக்கும் உண்மையான மனிதர்களைப் போலவே வாசகர்களுக்கு நெருக்கமாகத் தோன்றுகின்றன.
இயற்கையைச் சித்தரிப்பதிலும் துர்கனேவ் தனித்துவமான கலைஞராக விளங்குகிறார். அவரது எழுத்தில் இயற்கை வெறும் பின்னணிக் காட்சியாக மட்டுமே இருப்பதில்லை; அது கதையின் உணர்வுகளோடும் கதாபாத்திரங்களின் மனநிலையோடும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. மரங்கள், புல்வெளிகள், ஆறுகள், மாலைப் பொழுதுகள், பருவநிலையின் மாற்றங்கள் ஆகியவற்றை அவர் கவிதைநயத்துடன் அற்புதமாக விவரிக்கிறார். பல இடங்களில் இயற்கையும் மனித மனமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதுபோலத் தோன்றும். கதாபாத்திரங்களின் மகிழ்ச்சி, துயரம், நம்பிக்கை அல்லது விரக்தி ஆகிய உணர்வுகள் இயற்கைக் காட்சிகளின் வழியாக மேலும் ஆழமடைந்து வாசகர்களின் மனதில் பதிகின்றன.
இவான் துர்கனேவின் சிறுகதைகள் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான காலப்பரப்பில் உருவாகியுள்ளன. எனவே அவை ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் படைப்பாற்றலை மட்டுமல்லாமல், 19ஆம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் வளர்ச்சிப் பயணத்தையும் பிரதிபலிக்கின்றன. ரொமான்டிக் உணர்வுகளின் தாக்கத்திலிருந்து சமூக யதார்த்தவாதத்திற்கும், பின்னர் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் உளவியல் யதார்த்தவாதத்திற்கும் ரஷ்ய இலக்கியம் எவ்வாறு வளர்ந்தது என்பதை அவரது சிறுகதைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்தக் கதைகள் சமூக மாற்றங்கள், வர்க்க உறவுகள் மற்றும் மனித வாழ்க்கையின் சிக்கல்களைப் பதிவு செய்வதோடு மட்டும் நிற்கவில்லை; இலக்கியம் சமூகத்திடம் எழுப்பும் கேள்விகள், கதைசொல்லலின் புதிய வடிவங்கள், மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் தத்துவப் பார்வைகள் மற்றும் எழுத்தாளரின் சமூகப் பொறுப்பு ஆகியவை எவ்வாறு காலப்போக்கில் வளர்ச்சியடைந்தன என்பதையும் வெளிப்படுத்துகின்றன. எனவே துர்கனேவின் சிறுகதைகள் வெறும் இலக்கியப் படைப்புகளாக மட்டுமல்லாமல், ஒரு காலத்தின் சமூக வரலாறு, மனித மனத்தின் ஆழம் மற்றும் இலக்கிய வளர்ச்சியின் பரிணாமத்தைப் பதிவு செய்த முக்கியமான ஆவணங்களாகவும் கருதப்படுகின்றன.
காலவரிசை அடிப்படையில் அவரது சிறுகதைகளை ஆராயும்போது, அவை மூன்று முக்கியமான இலக்கியக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த மூன்று கட்டங்களும் துர்கெனேவின் படைப்புலக வளர்ச்சியையும், ரஷ்ய இலக்கியத்தின் பரிணாமப் பயணத்தையும் புரிந்துகொள்வதற்கான முக்கியமான அடையாளங்களாக விளங்குகின்றன.
தொடக்க காலக் கதைகள்
1840களின் இறுதியிலும் 1850களின் தொடக்கத்திலும் எழுதப்பட்ட இவான் துர்கெனேவின் தொடக்ககாலச் சிறுகதைகள், அவரது இலக்கியப் பயணத்தின் அடித்தளமாகவும் ரஷ்ய சமூக யதார்த்தவாத இலக்கியத்தின் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன. “கோர் மற்றும் கலினிச்” (Khor and Kalinych, 1847), “யெர்மோலை மற்றும் அரிசி ஆலைக்காரனின் மனைவி” (Yermolai and the Miller’s Wife, 1847), “மாவட்ட மருத்துவர்” (The District Doctor, 1847), “பாடகர்கள்” (The Singers, 1850), “பெழின் புல்வெளி” (Bezhin Meadow, 1851) போன்ற கதைகள் இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான படைப்புகளாகும். இக்கதைகள் அனைத்தும் பின்னர் “ஒரு வேட்டைக்காரனின் குறிப்புகள்” (A Sportsman’s Sketches) என்ற புகழ்பெற்ற தொகுப்பில் இடம்பெற்றன. இந்தக் கதைகளின் மூலம் துர்கனேவ், ரஷ்யக் கிராமப்புற வாழ்க்கையின் உண்மையான முகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
உள்மனப் பயணம்
1850களின் நடுப்பகுதியிலிருந்து 1860கள் வரை எழுதப்பட்ட இவான் துர்கெனேவின் சிறுகதைகள், சமூக அமைப்புகளிலிருந்து தனிநபரின் உளவியல் உலகத்தை நோக்கி நகர்கின்றன. “மூமு” (Mumu, 1854), “ஆசியா” (Asya, 1858), “முதல் காதல்” (First Love, 1860), “சந்திப்பு” (The Rendezvous, 1850) போன்ற கதைகள் இந்த உளவியல் யதார்த்தவாதக் கட்டத்தின் முக்கிய வெளிப்பாடுகளாகும். இக்கதைகளில் வெளிப்புற நிகழ்வுகளை விட மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளே மையமாக அமைகின்றன.
“மூமு” (Mumu) அடிமைத்தனத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தினாலும், அதன் மையம் சமூக அமைப்பின் விமர்சனமாக அல்ல; ஒரு தனிநபரின் துயரமும் உதவியற்ற நிலையும் ஆகும். “ஆசியா” (Asya) மற்றும் “முதல் காதல்” (First Love) போன்ற கதைகளில் தயக்கம், மன உறுதியின்மை, காலதாமதத்தால் இழக்கப்படும் வாய்ப்புகள், நிறைவேறாத காதல் மற்றும் பின்னர் ஏற்படும் வருத்தம் போன்ற உணர்வுகள் ஆழமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இதனால் இக்கதைகள் நவீன உளவியல் இலக்கியத்தின் தொடக்கப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
நிக்கோலை கோகோல், இவான் துர்கனேவ், ஆன்டன் செக்காவ் ஆகியோரின் படைப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது துர்கெனேவின் தனித்துவம் தெளிவாக வெளிப்படுகிறது. குறிப்பாக, “ஆசியா” (Asya) போன்ற கதைகள், பின்னர் செக்காவ் விரிவாகக் கையாண்ட, நிறைவேறாத காதல், தவறவிடப்பட்ட வாய்ப்புகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நீளும் நினைவுகள் போன்ற கருப்பொருள்களுக்கான முன்னோட்டங்களாக அமைந்தன.
இறுதிக்காலக்கட்ட சிறுகதைகள்
1870களில் எழுதப்பட்ட இவான் துர்கெனேவின் இறுதிக்காலச் சிறுகதைகள் அவரது இலக்கியப் பயணத்தின் முதிர்ச்சியான கட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் தலைமுறை மோதல்கள் போன்ற கருப்பொருள்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மனித வாழ்க்கையின் ஆழமான அனுபவங்கள் முன்னிலைக்கு வருகின்றன. முதுமை, காலத்தின் நிலையாமை, கடந்த கால நினைவுகள், இழந்தவாழ்வு, மனச்சுமைகள் மற்றும் வாழ்வின் அர்த்தம் போன்ற தத்துவச் சிந்தனைகள் அவரது படைப்புகளின் மையமாக அமைகின்றன.
“வசந்த வெள்ளம்” (Spring Torrents, 1872), “உயிர்ப்பான நினைவுச்சின்னம்” (Living Relic, 1874), “கனவு” (The Dream, 1877) போன்ற கதைகள் இந்தக் காலகட்டத்தின் முக்கியமான படைப்புகளாகும். இக்கதைகளில் மனிதன் தனது கடந்தகாலத்தை எவ்வாறு நினைவுகூர்கிறான், செய்த தவறுகளின் சுமையை எவ்வாறு சுமக்கிறான், காலம் மனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பன ஆழமாக ஆராயப்படுகின்றன. குறிப்பாக, பழைய நினைவுகள் மனித மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், திரும்பப் பெற முடியாத காலத்தைப் பற்றிய ஏக்கத்தையும் துர்கெனேவ் மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறார்.
துர்கெனேவின் இறுதிக்காலச் சிறுகதைகள் வெறும் நினைவுகளையும் தனிப்பட்ட அனுபவங்களையும் பதிவு செய்வதல்ல; மனித வாழ்க்கை, காலம், நினைவு மற்றும் இருப்பின் அர்த்தம் குறித்து தத்துவப்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டும் ஆழமான இலக்கியப் படைப்புகளாகவும் விளங்குகின்றன.
தன்னைத்தானே வரைந்து கொண்டவர்
இவான் துர்கனேவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அவரின் நேரடிவாழ்வின் பிரதிபலிப்புகளே அவர் தன் கதாபாத்திரங்களின் வழியாக தன்னையே பல இடங்களில் வெளிப்படுத்திக்கொள்கிறார். பெரும்பாலும் சிலர் அறிவுப்பூர்வமாகவும் ஆழமாகவும் சிந்திப்பவர்களாக இருந்தாலும், நடைமுறையில் வாழ்க்கையை எதிர்கொள்ளமுடியாமல் பின் தங்கிவிடுகின்றர் . ருடின் (Rudin, 1856) நாவலின் நாயகன் அப்படிப்பட்டவன் தான் , இவான் துர்கனேவும் இதே இயல்பு கொண்டவர் தான்.
இதே மனநிலை நிலப்பிரபு குடும்பம் (A Nest of the Gentry, 1859) நாவலிலும் வெளிப்படுகிறது; அங்கு லாவ்ரெட்ஸ்கியிடம் ஒழுக்கம், நேர்மை, அறிவு, உயரிய பண்பு என பல சிறப்பியல்புகள் இருந்தாலும், மனநிலை மற்றும் தயக்கம் காரணமாக அவரால் வாழ்க்கையில் பலநேரங்களில் மகிழ்ச்சியுன் இருக்க முடியாமல் போய்விடுகிறது. இதுவும் அப்படியே துர்கனேவின் குண இயல்புதான்
தன் தாயின் அதிகார மமதையும் அடக்குமுறைகளையும் நேர்மையான எண்ணம் கொண்ட இவான் துர்கனேவை ஆழமாகப் பாதித்தது. இதன் வெளிப்பாடே வேட்டைக்காரனின் குறிப்புகள் (A Sportsman’s Sketches, 1847–1852) தொகுப்பில் உள்ள பல கதைகளில் வெளிப்படுகின்றன. பண்ணையில் அடிமைகளாக இருப்பவர்களிடம் இருக்கும் மனிதநேயத்தையும் அன்பையும் நிலப்பிரபுகளிடம் காணமுடியவில்லை, அவர்களிடம் வன்மமும் கொடூரமும்தான் இருக்கின்றன என வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மூமு (Mumu, 1854) கதையில், வாய்பேசமுடியாத அடிமையான ஜெராசியிடம் அவளது பிரியமான வளர்ப்பு நாயைக் கொல்லும்படி அவள் எஜமானி கட்டாயப்படுத்துவது, மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல அதிகாரத்தின் உச்சம் எனக் காட்டுகிறார்
இவான் துர்கனேவின் ஐரோப்பியக் கல்வி அவரது பார்வையைக் கூர்மையாக்கியது மட்டுமல்ல; மாறுபட்ட சிந்தனை எண்ணத்தையும் தோற்றுவித்தது, ஜெர்மனியில் அவர் பெற்ற கல்வி, மேற்குத் தத்துவம், யதார்த்தவாத இலக்கியம், சுதந்திரமான சிந்தனைப்போக்கை அவரது எழுத்துகளில் ஆழமாகப் பதித்தது. தந்தையரும் மகன்களும் (Fathers and Sons, 1862) நாவலில், மரபுச் சிந்தனைகளுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் இடையிலான மோதல் நடுநிலையோடு சித்தரிக்கப்படுகிறது. நிஹிலிஸ்ட் பசாரோவ் விமர்சிக்கப்படுகிறான்; அதே நேரத்தில் அவனது அறிவாற்றலும் நேர்மையும் மதிக்கப்படுகின்றன. இதே நடுநிலைப் பார்வை கன்னி நிலம் (Virgin Soil, 1877) நாவலிலும் காணப்படுகிறது;
இவான் துர்கனேவ் பவுலின் வியார்டோ மீது கொண்ட (நிறைவேறாத) காதல் அவரது காதல் சித்தரிப்புகளில் எல்லாம் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது படைப்புகளில் காதல் பெரும்பாலும் நிறைவேறாத காதலாகவும், காதலை வெளிப்படுத்தத் தாமதிப்பதால் தவறுவதாகவும் . பெறும்பாலும் அது இழப்பில் முடிவதாகவும் , தாமதம், மௌனம் ஆகிய செயல்களால் எற்படும் அபாயங்களை அவை வெளிப்படுகின்றன. அஸ்யா (Asya, 1858) கதையில், காதலை வெளிப்படுத்த நாயகனின் காட்டும் தயக்கம நிரந்தர மான சோகத்தை அவனிடம் ஏற்படுததிவிடுகிறது. வசந்த வெள்ளம் (Spring Torrents / Torrents of Spring, 1872) நாவலில், மன உறுதி இல்லாமையே காதலை வீழ்ச்சிக்குத் தள்ளுகிறது. துர்கனேவின் காதல் கதைகள், பெரும்பாலும் மகிழ்ச்சியை வழங்குவதில்லை; மனவலியை ஊண்டாக்கி மன உணர்வுகளைப் பரிசோதிக்கின்றன
இறுதியாக, மரணம் மற்றும் அமைதி குறித்த துர்கனேவின் அணுகுமுறை அவரது நவீன உளவியல் பார்வையை வெளிப்படுத்துகிறது. உயிருடன் இருக்கும் பாழடைந்த உடல் (The Living Relic) மற்றும் மரணம் (Death) போன்ற கதைகளில், வேதனையும் மரணமும் எந்த உணர்ச்சி மிகைப்படுத்தலுமின்றி, மென்மையாகவும் மனிதாபிமானத்துடனும் சித்தரிக்கப்படுகின்றன. இந்த நுணுக்கமான நடை, பின்னாளில் உருவான செக்காவ் போன்ற எழுத்தாளர்களின் யதார்த்தவாதத்திற்கு முன்னோடியாக அமைந்தது.
இசை போல் கசியும் மொழிநடை
துர்கனேவின் மொழிநடை எளிமையானதும் நளினமானதும் ஆகும். சிக்கலான வாக்கியங்களையோ கனமான தத்துவச் சொற்களையோ அவர் பெரிதும் பயன்படுத்துவதில்லை. அவரது உரை ஓர் இசைபோல் ஒழுகுகிறது; எளிதாக வாசிக்க முடியும், அதே நேரத்தில் ஆழமான பொருளையும் கொண்டுள்ளது. இயற்கை வர்ணனைகள் அவரது எழுத்தின் சிறப்பாகும், நிலப்பரப்புகள், பருவநிலைகள், வானிலை ஆகியவை கதைமாந்தர்களின் உள்ளுணர்வுகளோடு இணைந்து வெளிப்படுகின்றன. கிராமப்புற இயற்கை வெறும் பின்னணியாக இல்லாமல், அடிமைகளின் துன்பமும் சுயமரியாதையும் வெளிப்படும் உயிர்ப்பான கூறாக அமைகிறது. அவரது மொழி கதையை ஆட்கொள்ளாது கதையின் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் துலங்கச் செய்கிறது
எடுத்துரைப்பு உத்தியில், துர்கனேவ் யதார்த்தவாதத்தையும் உளவியல் நுட்பமாக இணைத்துவிடுகிறார். ஆசிரியர் நேரடியாக எதற்கும் தீர்ப்பளிப்பதில்லை. மௌனம், இடைவெளி, முடிக்கப்படாத உரையாடல்கள் ஆகியவை அவரது எடுத்துரைப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால் கதைகள் உணர்ச்சி ஆழம் பெறுகின்றன; வாசகர் சுயமாகச் சிந்திக்கத் தூண்டப்படுகின்றார். முதல் காதல் (First Love) கதையில் நினைவின் வழியாகவே கதை சொல்லப்படுவது, வாசகர்களிடம் உணர்வு எழுர்ச்சியை உருவாக்கிவிடுகிறது.
துர்கனேவின் எழுத்துமொழி மென்மையும் கவிதைநயமும் கொண்டது. ஆழமான உணர்ச்சிகளை மிக மென்மையான சொற்களால் வெளிப்படுத்தும் அவரது நடை, வாசகரை எளிதில் கதையின் உள்ளே இழுத்துச் செல்கிறது.
இவான் துர்கெனேவின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அறிவார்ந்தவர்களாகவும் ஆழமாகச் சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் முடிவெடுத்துச் செயல்படுவதில் அவர்கள் தயக்கம் காட்டுவார்கள். இந்த மனப்போராட்டம்தான் அவரது இலக்கியத்தின் முக்கியமான உளவியல் அம்சமாகும்.
சமூக மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்தாலும், மனித மனம் அவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படத் தயங்குகிறது என்பதை அவர் ஆழமாகப் பதிவு செய்கிறார். சமூக மாற்றத்தின் வேகத்திற்கும் மனித மனத்தின் தயக்கத்திற்கும் இடையேயான இடைவெளியை மிகத் தெளிவாகக் காட்டுவதே அவரது தனிச்சிறப்பாகும். இதனால்தான் இவான் துர்கெனேவின் படைப்புகள் ரஷ்ய இலக்கியத்தில் மட்டுமல்லாமல் உலக இலக்கியத்திலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன.
- பாரதிபாலன்