அறிவுத்தளத்திலிருந்து சிலர் நூல் எழுதிச் சிந்திக்கச் செய்வார்கள்; உணர்வுத்தளத்திலிருந்து சிலர் நூல் வடித்து வசப்படுத்துவார்கள்; அறிவு, உணர்வுத் தளங்களைத் தாண்டி அனுபவதளத்திலும், அன்றாட மனித வாழ்க்கையின் ஆழமான பாதிப்புத் தளத்திலிருந்தும் பன்முகப் பரிமாணப் பெண்ணிய நோக்கில் வெளிவந்துள்ளது அ.ஜெயசீலி எழுதியுள்ள ‘திமிறி எழு!’

jayaseeli_298இந்த நூலை வாசிக்கிற எந்தப் பெண்ணும் சிலிர்த்து, அறச்சினம் கொண்டு திமிறி எழுவதுடன் மாத்திரம் நின்றுவிட மாட்டாள்; அநீதிகளுக்கு எதிரான அமைப்பாகி வரும் பெண்ணிய ஆயுதம் தாங்கி, ஆணாதிக்கத் தளங்களை அடித்து நொறுக்க இயக்கமாவாள்!

மேத்தாபட்கர், சி.கே. ஜானு, வங்காரி மூட்டாமதாய், மயிலம்மா போன்ற போராளிகள் என்ன? எப்படி? சாதித்தார்கள் என்று தெரிய வில்லையே என்று கவலைப்படலாம். எந்தச் சிக்கலும் இவை குறித்து அறவே தேவை இல்லை. திமிறி எழு! நூலைப் படித்தால் போதும்! பலப்பல பெண்ணியப் போராளிகளை அறிந்து, வாசித்து, யோசித்து, நேசித்து அவர்கள் வாரிசாக ‘நாமும் ஏதாவது அரியவற்றைப் பெண்ணுலகில் சரிநிகர் சமத்துவமான சுதந்திர வாழ்க்கைக்காகச் சாதிக்க வேண்டும் என்கிற உந்துதலை இந்நூல் ஏற்படுத்துவது உறுதி.

57 பக்க அளவிலான திமிறி எழு நூல் மகளிர் ஆளுமைகளில் தலைமைத்துவ வீச்சாய்ப் பரிணமிக்கப் பக்குவப்படுத்துவது மட்டும் அல்ல! சமூக அமைப்பின் பலநிறுவனங்களான குடும்ப உறுப்பினர் சிலர் குழந்தைகள் மீது தொடுக்கும் பாலியல் முறைகேடுகள், திரைப்படங்களில் சூடுசொரணையும் மானமும் மரியாதையும் அற்ற சில வசனகர்த்தாக்கள் வெட்க மில்லாமல் உலவவிடும் கொச்சை வட்டார மொழி களது பண்பாட்டுப் படை எடுப்பு, மேனாள் பெண்கள் ஆணைக் குழுவின் அரசு நியமனத் தலைவி திருவசந்திதேவி பேருந்துப் பயணத்தின் போது கேட்கவும் கூசி, “இவற்றைத் தடைசெய்ய வகைசெய்யவேண்டும்” என்று மனிதஉரிமை ஆணைக் குழு உயர்மட்டக் குழுவில் தெரிவிப்பதைக் கேட்க நேரிட்டது போல், காமப்பித்துக் “கவி”ப்பித்துக் கொள்ளிகள் எழுதிய மகளிரைக் கொச்சைப்படுத்தும் பாடல்கள் போன்ற எதார்த்த அவலங்களை நூலா சிரியர் அம்பலப்படுத்துவது ‘சமூகமனத்தைக் கேவலப் படுத்தும் போக்குகளை ஒழிக்கத் திமிறி எழுக!’ என்பதால்தான்!

அ.ஜெயசீலி, பெண் அடிமைத்தனமற்ற- பாலின சமத்துவம் நிறைந்த சமுதாய உருவாக்கம் நோக்கிப் ‘புதிய சமூக விடுதலை’ நிறைவேற்ற என்னவழி என்று வினவுகிறார். பெண்கல்வி, பெண் வேலை வாய்ப்பு, பெண்ணுக்கான சுயதொழில் ஆகியன உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகிய வற்றின் தாக்குதல்களால் ஏற்கெனவே வலுவற்றோரை நலிவுற்றோராக நிரந்தரமாக்கும் போக்கின் விளைவு? ஏழைப்பெண்களுள் 61ரூ விபசாரம் நோக்கித் தள்ளப் படுவதைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் விமர்சிக் கிறார். பெண் உடலை மூலதனமாக்கி ஆண்கள் செலுத்தும் ஆதிக்கமாக விபசாரம், கடத்தல் ஆகியன நவீன “கூட்டு வர்த்தக நடவடிக்கை”யாகி வருகின்றன. பெண்ணியத் தன்னறிவுக் கோடரி கொண்டு அடியோடு வெட்டி வேருடன் இத்தீமை களைச் சாய்க்க அறைகூவல் விடுக்கிறார் அ. ஜெயசீலி.

உலகில் கெட்ட போரிடும் நாடுகளில் அமைதியை நிலைநாட்ட மகளிர் தலைமை ஆற்றுகிற அரசியல் குறுக்கீடுகளது எதிர்வினை வடிவங்கள்தான் எத்தனை! இயற்கைவள நில-நீர்பகிர்வு, சிறைக்குள்ளும் அமைதித் தூதராய்ப் பணிசெய்வது, போரின் போது காணாமல் போவோரைக் கண்டறிய உதவுவது, அமைதி ஊர் வலம் செய்வது, குழுவாக வேறுநாடு சென்று நல்லிணக்க உரையாடல் நிகழ்த்துவது போன்ற பலசெயல்தந்திரங்கள், உத்திகள் ‘திமிறி எழு’ நூலில் பேசப்படுகின்றன; உரத்த சிந்தனைகள் செயல்வடிவம் பெற்ற வரலாற்றை உணர்த்துகிறது ‘பணயப்பொருளாக’ என்னும் தலைப்பிலான கட்டுரை.

மதத்தின்பெயரால் நிகழ்ந்த குஜராத் கலவரங் களில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் இவர் களுக்கு எதிராக மதவாதப் பெண் தலைவியர்கள் வன்கொடுமை இழைத்துள்ளனர். மதநல்லிணக்கத் தால் மகளிர் அன்புறவு கொள்ளாமல் மதவெறிப் போக்கால் பிரித்தாளும் செயல் ஆணாதிக்க அதிகாரச் செயல்பாடே என்று சாடுகிறார் ஆசிரியர்.

95% குடும்பவன்முறைகளுக்கு ஆடவரே காரணம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. பெண் அடக்கு முறையின் 16 வன்கொடுமைகள் பட்டியலிடப்படு கின்றன. இவற்றைச் செய்பவன் யார்? கணவன், தந்தை, மகன், உடன் பிறந்தோர் போன்ற துரோகி களே! நூலில் சமூக நிகழ்வுகளையும் - எதிர் மறை எதார்த்தங்களையும் பகுத்தாய்ந்து சுவாரசிய மாகவும், சரளமாகவும், ஆர்வமாகவும் படிக்கத் தூண்டுகிற முறையில் எழுதியது மட்டுமல்ல; உடன் பாடாக அணுகக்கூடிய - கடைப்பிடிக்கக்கூடிய வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. ‘கட்டித் தழுவி’ கட்டாயம் வாசிக்கவேண்டிய ஆழமான கட்டுரை. ‘மாத்தி யோசிப்போம்’ கடைசிக்கட்டுரை முத்தான பத்து தீர்வுகளை - மாற்றுச்சிந்தனைகளை- மாற்ற வேண்டிய அநீதி நடைமுறைகளை முன்வைக்கிறது.

ஒரு நல்ல தந்தை, ஒரு நல்ல கணவன் ஒரு நல்ல சகோதரன், ஒரு நல்ல உறவினன் உணர்ந்திருக்க வேண்டிய ‘உரிமைகளை’, ‘நெறிகளை’, ‘முறைகளை’த் ‘திமிறிஎழு!’ நூலை வாசித்தால் தெளிவாக அறிய முடியும்.

திமிறி எழு

ஆசிரியர் : அ.ஜெயசீலி

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.40.00

Pin It