நாட்டுப்புறக் கதை என்றாலே அதன் பாணியே கேட்பவரை வியக்க வைக்கும். அத்தகைய கதை களை நயமான முறையில் எடுத்துக் கூறியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் சங்கொலி பாலகிருஷ்ணன்.

sangoli_balakrishnan_450இதில் இடம்பெற்றிருக்கும் அனைத்துச் சிறுகதைகளும் நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சாதாரணமான நிகழ்ச்சிகளைக் கொண்டே புனையப்பட்டிருக்கின்றன. அதிலும் கைம்பெண் அருக்காணியின் மனிதாபிமான செயல் நாம் அனைவரும் அவளுக்குத் தலைவணங்கச் செய்கிறது. பிறருக்கு உதவ பணம் மட்டும் போதாது; குணமும் வேண்டும். அத்தகைய குணம் இருந்தால் பணம் ஒரு விஷயமே அல்ல என்று தெளிவாக உணர்த்திருக்கிறார்.

நகர்ப்புற வாழ்க்கையில் அண்டை வீட்டில் கொலையே நடந்தாலும் அடுத்த நாள் செய்தியில் தான் அறிய முடிகிறது. கிராமத்தில் இருக்கும் தன் தாயின் வீட்டிற்குச் சென்ற மனைவியை அழைத்து வர சென்ற குமாருக்கு அந்தக் கிராமத்து மக்கள் காட்டிய அன்பைப் பார்க்கும் போது அத்தகைய மனிதர்கள் மத்தியில் ஒரு நாளாவது வாழ வேண்டும் என்ற ஆசை வாசகருக்கு எழும்.

ஊரில் எந்தக் காரியமானாலும் முன்நின்று உதவி செய்யும் பண்ணைக்காரர் நொடிந்துவிட்ட நிலையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கிராமத்து மக்களுக்கு தன்னுடைய ஒரே சொத்தாக இருந்த நிலத்தையும் பொதுப் பணிக்காக வழங்க வரும் போது வாசகர்கள் வாயடைத்துப் போவர்.

யாருமற்ற அனாதையாக வந்த செங்கோடுக்கு அவன் இறக்கும்போது அந்தக் கிராமமே உறவாக மாறியது. ‘கடவுள் கடவுள்’ என்று பகல் வேசம் போடும் சிலருக்கு, ‘கடவுள் என்பவர் கோயில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருள் அல்ல; அடுத்தவரின் கஷ்டத்தைப் புரிந்து உதவி செய்யும் மனிதர்கள் தான் கடவுள்!’ என்று சாட்டையடி கொடுத்திருக் கிறார்.

ஒரு இலையை வைத்து இரு கிராமங்களுக் கிடையே இருக்கும் பெரிய விரோதத்தையே மாற்றும் சடங்கை நிகழ்த்தும் முறை நமக்கு நம்ப முடியாததாக இருந்தாலும், நல்ல விஷயம் எதில் இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தகவலை வாசகர்களுக்கு உணர்த்துகிறது.

சிறுவனைத் தத்து எடுத்து வளர்க்க மனம் இருந்தாலும் ‘ஊர் என்ன சொல்லுமோ?’ எனத் தயங்கி பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க, ஊரே அவர்களைப் பாராட்டுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அவ்வாறு தான் செய்வது சரியெனப்பட்டாலும் அதனை ஊரார் ஏற்றுக் கொள்வார்களா? என்று தயங்கி பின்வாங்கி விடு கிறார்கள். அத்தகைய சூழ்நிலை மாற வேண்டும் என்ற கருத்தை இக்கதையின் மூலம் அறியலாம்.

அரசியல் என்ற சொல்லைப் பயன்படுத்தி, அடித்தள மக்களை, நடுத்தர மக்களைப் பாடு படுத்தும் அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக எத்தனை அக்கிரமங்களைச் செய்கிறார்கள், அவற்றின் விளைவுகள் என்னென்ன என்று கதைமாந்தர்கள் மூலம் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.

தன் மனைவியைத் தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்லும் கணவன் தன் உடன் பிறந்தவள் புகுந்த வீட்டில் அதே கொடுமையை அனுபவிக் கிறாள் என்று அறிந்து பதறுவது ஆணாதிக்க மனப் பான்மை கொண்ட ஆண்களுக்கு நல்ல பாடம். இதில் கூறப்பட்டிருக்கும் பெரும்பாலான கதைகள் பெரியவர்கள் தம் வாழ்வில் இது ஒன்றும் பெரிய தவறில்லை நினைத்து அன்றாடம் தவறு செய்து கொண்டிருப்பவர்களின் உள்ளங்களில் கட்டாயம் செம்மையான அசைவை ஏற்படுத்தும். மேலும், கதைத் தொகுப்பில் அழகியலும் மிளிர்கிறது.

அருக்காணி

ஆசிரியர் : சங்கொலி பாலகிருஷ்ணன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.80.00

Pin It