இரு நூல்களுமே அளவில் சிறியவை. ஆலம் விதை அளவில் சிறிதாக இருந்தாலும் அதனுள் மிகப் பெரிய மரம் உள்ளடங்கியிருப்பதைப் போல, தமிழ்ச் சமுதாய வரலாற்று வாழ்க்கையில் மறைந் திருக்கும் அரிய செய்திகளை இவை இரண்டும் தம்முள் அடக்கியிருக்கின்றன.

தனக்கே உரிய ஒரு மாறுபட்ட உரைநடையில் சுருக்கமான வாக்கியங்களில் தம்முடைய புரிதல் களையும், அறிதல்களையும், மதிப்பீடுகளையும் தெளிவாகவும், சரளமாகவும் முன்வைப்பதிலிருந்து, கா.சிவத்தம்பியின் ஈடுபாடும், சிரத்தையும், அக்கறையும் அழுத்தமாகப் புலப்படுகின்றன. எளிய சொற்கள் அடங்கிய குறுகிய வாக்கியங்கள் கூர்மையும், ஆழமும் மிகுந்தவையாக இருக்கின்றன. தான் உணர்ந்தவற்றையும், அறிந்தவற்றையும் தயங்காமல் தன் மொழியின் வழியே வெளிப்படுத்துகிறார். தமிழ்ச் சமுதாயம் தன்னுடைய பன்முகத் தன்மைகளுடன் வரலாற்றினூடே வளர்ந்து வந்த இயங்கியல் முறையை முன்வைத்து முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சி வடிவத்தை இனம் காட்டுகிறார். தன்னுடைய தனித்துவமான ஆய்வுகளின் வாயிலாகப் புதிய புரிதல்களையும், புதிய அறிதல்களையும் வாசிப் பவர்கள் உணரும்படி செய்கிறார்.

தமிழ் தொன்மையான மொழிகளில் ஒன்றாக இருப்பதால், அதில் உருவான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் வழக்கொழிந்த சொற்கள் அடங்கிய வெளிப்பாட்டு மொழிக்குப் பொருள் காணும் முயற்சியே முதன்மை பெறுகிறது. சொற்களும், அவற்றின் சேர்க்கைகளும் புரிதலுக்கு உள்ளாகும் போது மனதில் வியப்பிற்குரிய உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. அதனால் மனம் சார்ந்த உணர்ச்சிகளில் அதிர்வலைகளையே இலக்கியத்திற்கு உரிய தனிச்சிறப்பாக இதுவரை ஆய்வாளர்கள் கருதிவந்தார்கள். அதுவே இலக்கியத் திறனாய்வு என்று இன்றும் வலியுறுத்திவருகிறார்கள். அதைச் சார்ந்தே கலாசாரப் பண்பாட்டுத் தன்மைகளை வரையறை செய்தார்கள். ஒழுங்கும், ஒழுக்கமும் கலந்த அறவியல் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்தே அவை மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. நன்மைக்கும், தீமைக்கும் இடையில் அல்லாடும் மனிதனை நன்மையை நோக்கிச் செல்ல நெறிப் படுத்துவதாக இலக்கியங்கள் வடிவமைக்கப்பட்டன. நிலவுடைமை சார்ந்த உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட உலகச் சமுதாயங்கள் எல்லாவற்றிலும் இந்தப் பொதுத் தன்மையைப் பரவலாகக் காண முடியும். முதலாளித்துவச் சமுதாயத்தின் தோற்றத்திற்குப் பிறகு அதன் வளர்ச்சிப்போக்கில் புதிய சூழல்கள் உருவாகத் தொடங்கின. புதிய கண்ணோட்டமும், புதிய அறிதல்களும் காலத்தின் வளர்ச்சியால் புறக் கணிக்கப்பட்டு மறக்கப்பட்டன.

தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் காலாவதியாகிப் போய்விட்டதாகத் தோன்றும் மனிதப்பண்பாடு புதிய வாழ்வியலுக்குள் உறைந்து கிடப்பதை இனம் காணத் தவறிவிடுகிறோம். அந்தப் பண்பாட்டை மீண்டும் கண்டுபிடித்து அதன் மேன்மையையும், வளத்தையும் புதிய வாழ்க்கை குறித்த ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதே இவருடைய நோக்கம் என்று கருதலாம். இதன் விளைவாகத் தமிழ் இலக்கியங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளலாம். அவற்றின் அழகியலை ஆழமும், விரிவும் கொண்ட ஒரு தளத்தில் இருத்தி அவற்றின் பன்முகத் தன்மைகளை அடையாளம் காணலாம். அதற்கான வழிமுறை களை கா.சிவத்தம்பியின் ஆய்வுகளிலிருந்து பெறலாம். கற்றுக்கொள்ளலாம், பின்பற்றலாம். தமிழ் இலக் கியத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த மரபின் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கலாம், முற்றிலும் மாறுபட்ட மேற்கத்திய இலக்கியக் கோட்பாடுகளை அளவு கோல்களாக வைத்துத் திறனாய்வு செய்வதி லிருந்து தமிழ் மரபு சார்ந்த வளர்ச்சியின் அடிப் படையில் தனித்துவமான கோட்பாடுகளை உருவாக் கலாம். இந்தப் போக்குத்தான் தமிழ்க்கலாசாரப் பண்பாட்டுத் தன்மைகளை அவற்றிற்கே உரிய மண்ணிலிருந்தும் அதன் வாழ்விலிருந்தும், கண்டறிந்து வளர்ப்பதற்குப் பொருத்தமாக இருக்கும். அதைச் சாத்தியப்படுத்துவதற்கு இவருடைய இந்த ஆய்வு நூல்கள் சிறந்த கருவிகளாகப் பயன்படும்.

மனித சமுதாயம் தொடர்ந்து உருமாறிக் கொண்டும், வளர்ந்துகொண்டும் இருக்கிறது. தொடக்கக் காலத்திலிருந்து இன்றுவரை மனிதர்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் வாழ்வதற்கு உணவும், உடையும், உறைவிடமும் தேவைப்படுகின்றன. அவற்றை மனிதர்கள் உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த உற்பத்திக்குப் பொருத்தமான இடங்களை மனிதர்கள் தேடியபடியே இடம்பெயர்கிறார்கள். இடம் பெயர்தல் நிகழ்வுகளுக்குப் பின்னணியில் வணிகமும், போரும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அதன் விளைவாக அங்கங்கே வாழ்ந்துவரும் மனிதர்களின் சமுதாய பொருளாதார, கலாசாரம் பண்பாட்டுத் தளங்களில் கலப்பு தவிர்க்க முடியாமல் நிகழ்கின்றன. அந்த நிகழ்வுகளே மனித சமுதாயத்தின் பரிமாணமாகவும், பரிணாமமாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த விதமான கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே கா.சிவத்தம்பி தனது அறிவியல் பூர்வமான ஆய்வுகளை நிகழ்த்து கிறார். மனிதப் பண்பாடு என்ற கருத்தாக்கத்தை அவர் இப்படி வரையறை செய்கிறார்.

“பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமூக வரலாற்று வளர்ச்சியினடி யாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதிகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மதநடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகிய யாவற்றினதும் தொகுதியாகும். ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதி யாகும்.”

இது மாறுபட்ட ஒரு கண்ணோட்டத்தில் வரையறைப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாடு. வழக்க மாகக் காணப்படும் தனிமனித அகக் கண்ணோட்டத் திற்கு எதிரானது. விரிவான தளத்தில் மனித வாழ்வின் வளர்ச்சியை இனம் கண்டு அடையாளப் படுத்தும் முயற்சி இது. உண்மையை நோக்கிச் செய்யப்படும் ஒரு புதிய பார்வைக் கண்ணோட்டம் என்று இதைக் குறிப்பிடலாம்.

தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றை ஆய்வு செய்யும் கா.சிவத்தம்பி, அதன் வரலாற்றை ஐந்து கட்டங்களாகப் பிரித்துத் துல்லியமான வகையில் பகுப்பாய்வு செய்கிறார். அதன் விளைவாகப் பின்வரும் கருத்தாக்கத்தை அவர் முன் வைக்கிறார்:

“அகமரபு தமிழ்மரபு என்பது மாத்திரமல்ல முக்கியம். தமிழ் தனது இலக்கிய வெளிப்பாட்டுக்கு சமஸ்கிருத இலக்கிய மரபை உதாரணமாகக் கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியம். தமிழின் இலக்கியத் தனித்துவம் வற்புறுத்தப்படுகிறது. இது பின்னர் மொழிநிலை வேறுபாடு வற்புறுத்தப்படும் பொழுது முக்கியமாகிறது.”

தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்ந்த அகபுற வாழ்க் கையில் வெளியிலிருந்து பல வகையான தாக்கங்கள் வந்தபோதும் அதன் தனித்துவத்தை இழக்கவில்லை.

திராவிட மொழிகளில் நிகழ்ந்த வடமொழிக் கலப்பு அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து அவற்றின் இயல்பான அடையாளத்தை மாற்றிவிட்டது. தமிழில் அந்தத் தாக்கம் நிகழவில்லை. இந்திய மொழிகள் எல்லாமே வடமொழித் தாக்கத்திற்கு உள்ளாகி உருமாறிய போதும் தமிழ் தன் இயல்பு களை இழக்காமல் தன்னளவில் தனித்துவத்துடன் வளர்ந்து வரும் வரலாற்றை இவர் அடையாளப் படுத்துகிறார்.

தமிழ் வாழ்வின் வரலாற்றுப் போக்கில் சமண, பௌத்த, இஸ்லாமிய, கிறித்துவ மதங்களின் தாக்கங்கள் மாறிமாறி நிகழ்ந்தபோதும் அவற்றை ஏற்றுக்கொண்டு தமிழ்ச் சமுதாயம் தனிப்பட்ட ஒன்றாகவே தனி அடையாளத்துடன் வளர்ந்த முறையை இவர் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கித் தெளிவுபடுத்துகிறார்.

இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சமுதாயத்தின் தனிச் சிறப்புக்களை அடையாளப்படுத்தும் இவர் தமிழகச் சமுதாயத்திற்கும் அதற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைத் தெளிவுபடுத்துகிறார். அதற்குத் தேவைப்பட்ட ஆவணங்களைத் தகுந்த தரவுகளைக் கொண்டு நிறுவுகிறார்.

வணிகம், படையெடுப்பு, மதப்பரவல், தொழில் முறை விளைவுகளுக்கிடையில் உறவுகளுக்கிடையில் தமிழ்ச் சமுதாயம் தனித்தன்மையுடன் வளர்ந்து வருவதை இவர் இனம் காட்டுகிறார்.

சென்ற பதின்மூன்றாம் நூற்றாண்டு முதலாக வெளியிலிருந்து வந்த இஸ்லாம், கிறித்துவம் போன்ற மதங்களினால் ஏற்பட்ட தாக்கங்களையும், மாற்றங் களையும், விளைவுகளையும் வேறுவேறு பின்னணியில் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கித் தன்னுடைய கருத்துக்களை இவர் நிறுவுகிறார்.

நிலவுடைமைச் சமுதாயத்தில் மட்டுமே மதங்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது என்பது பொதுவான உண்மை. அந்தக் கால கட்டங்களிலேயே மதங்கள் தோன்றி வளர்ந்து உலக அளவில் பரவலாகின. முதலாளித்துவக் காலகட்டத்தில் அவை தீவிரமான அறிவியல் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டன. அந்தக் கால கட்டங்களில் கடவுளின் முதன்மை வலியுறுத்தப் பட்டது. அறவியல் கோட்பாடுகள் வரைவு செய்யப் பட்டன. கலை, இலக்கியங்களின் வாயிலாகப் பரவலான மக்கள் சமுதாயத்தில் அவை அறிமுகப் படுத்தப்பட்டு நிறுவப்பட்டன. அதனால் அன்றைய கலை, இலக்கியப் பண்பாட்டு நடவடிக்கைகள் எல்லாமே ஏதேனும் ஒரு வகையில் மதம் சார்ந்தே இருந்தன. முதலாளித்துவச் சமுதாயத்தில் அல்லது தொழில் வளர்ச்சி ஏற்பட்ட சமுதாயத்தில் புதிய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு அவை உருமாற்றம் பெற்றன.

சோசலிச சமுதாயத்தில் கடவுளுக்கு மாறாக மனிதன் முதன்மைப்படுத்தப்பட்டான். புதிய மானுடத்தின் தோற்றத்தை மாக்சிம் கார்க்கி இப்படி அறிமுகப்படுத்துகிறார்.

“மனிதனை விட மிக நுண்ணிய, அழகிய, அவனைவிடப் பன்முகக் கோலங்கொண்ட அவனை விடச் சுவாரசியமான வேறொன்றை நான் அறியேன். மனிதனே யாவும்.”

கடவுளை முதன்மைப்படுத்தி வந்த, மதம் சார்ந்த வாழ்க்கைக் கண்ணோட்டமும், மதிப்பீடும் மாற்றமடைந்தன.

தொழில்பட்ட மேற்கத்திய சமுதாயத்தில் நிகழ்ந்த புதிய மாற்றங்கள் இந்தியச் சமுதாயத்திலும் மாறுதல்களை ஏற்படுத்தின. புதிய வாழ்க்கையில் மனிதன் முதன்மைப்படுத்தப்பட்டு அவன் சார்ந்த உலகமும், இயக்கமும், வாழ்க்கையும் புதிய கலை இலக்கிய வெளிப்பாடுகளாக மலர்ந்தன.

மகாகவி பாரதியின் ‘இலக்கிய உந்துதலினால் வெளிவந்த இலக்கியம் சார்ந்த அரசியல், அரசியல் சார்ந்த இலக்கியம் என்னுமிரண்டையுமிணைத்த இயக்கத்தின் முன்னணி வீரர்களில் ஒருவராக விளங்கிய திரு.வி.கல்யாண சுந்தர முதலியாரின் எழுத்துக்களில் மனிதாய உந்துதல்கள் முக்கிய இடம் பெறுவதனைக் காணலாம்.’

“அந்த இயக்கத்தின் விரிவாக வந்து, பின்னர் தன்னைப் பொதுவுடைமைக் கட்சியுடன் இணைத்துக் கொண்ட ப.ஜீவானந்தமே தமிழ் இலக்கியத்தின் மேலாண்மையுடைய பொருளாக மானுடத்தையே கொள்ளவேண்டுமென்றும், காண வேண்டுமென்றும் வற்புறுத்தினார். சமய வாதக் கோட்பாடுகளைக் கொள்கைரீதியாக ஏற்காத ஜீவானந்தம் தமிழ் நாட்டின் சமய இயக்கங்களினடியாக இலக்கிய வடிவம் பெற்ற மனிதாயதப் பண்பை வலியுறுத்தினார்.”

“தமிழின் நவீனமயப்பாட்டில் இச்சிந்தினை மிக முக்கியமானதாகும்.”

“நவீன உலகின் அந்நியப்பாட்டையும், வெற்றிச் சாத்தியப்பாடுகளற்ற மனித ‘இருப்பு நிலை’”யையும் கவிதைப் பொருளாகக் கொண்டும், இரவல் உந்துதல்கள் பெற்றும் புதுக்கவிதையை நடத்தி வந்த ஓர் இலக்கியச் செல்நெறியைப் புறங்கண்டு, தொழிலாளி வர்க்கத்தின் இந்திய நிலைப்பாட்டையும் சர்வதேச நிலைமைகளையும் விளக்கிப் புதுக் கவிதையை ஓர் உடனிலைச் சாதனமாக்கிக் கொள்ள முனைந்த “வானம்பாடி” கவிஞர்களே இங்குக் குறிப்பிடப்படுகின்றனர். உலகளாவிய மனிதாயதச் சிந்தனைகளை இந்திய-தமிழ்ப் பாரம்பரியங்களில் வழிவரும் படிவங்கள் கொண்டு செறிவுடன் புலப் படுத்துகின்றனர். அவர்களின் கவிதைகள் ஆர்வம் கொப்பளிக்கும் இதய தாபத்தையும் நம்பிக்கை நிறைந்த நோக்கையும் வெளிப்படுத்துகின்றன.”

கா.சிவத்தம்பி தன்னுடைய இருநூல்களிலும் இந்த இலக்கிய வரலாற்று ஆய்வை நிகழ்த்துகிறார்.

சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும், விளைவுகளையும் சமுதாய அறிவியல் கண் ணோட்டத்தின் வாயிலாக அடையாளம் கண்டு தன்னுடைய ஆய்வுகளை முன்வைக்கிறார்.

இவரது ஆய்வு முறைகள் பழைய, புதிய இலக்கியங்களைச் சரியான முறையில் இனம் கண்டு திறனாய்வு செய்யப் பெருமளவில் உதவும். வாசகர்களும், திறனாய்வாளர்களும் இந்த ஆய்வு நூல்களை வாசிப்பதன் வாயிலாகத் தங்களைக் கூர்மையான பார்வையாளர்களாக வளர்த்துக் கொள்ள முடியும்.

தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டு பிடிப்பும்

விலை ரூ.40/-

தமிழிலக்கியத்தில் மதமும் மானிடமும்

விலை ரூ. 55/-

கார்த்திகேசு சிவத்தம்பி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்

Pin It