சென்ற நூற்றாண்டில் தமிழ்க்க விதைகளுக்கான இடத்தை மிக உயரத்துக்குக் கொண்டுசென்று நிலைநிறுத்தியவர் பாரதியார். இனிமையும் எளிமையும் வீரமும் வேகமும் பொருந்திய சொற்களால் அவர் புனைந்த கவிதைகள் அவருக்கு பெயரையும் புகழையும் தேடித் தந்தன. அவர் மறைந்து தொண்ணூற்றியெட்டு ஆண்டுகள் கடந்த பிறகும்கூட அவர் படைப்புகள் இன்றளவும் புதிய இளம் வாசகர்களை ஈர்க்கும் ஆற்றலுடன் உள்ளன. ‘மந்திரம்போல சொல்லின்பம் வேண்டும்’ என்று எழுதிய பாரதியாரின் பாடல்கள் கண்ணால் படிப்பவரின் மனத்தையும் காதால் கேட்பவரின் மனத்தையும் காந்தம்போல இழுக்கும் மந்திரசக்தி பொருந்தியவை. அவருடைய ஒவ்வொரு பாடலும் அவரை நினைக்கவைக்கும் அடையாளச் சின்னம். அவருடைய காலத்திலேயே அவர் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தன. பல பாடல்கள் தொடர்ச்சியாக மேடைகளில் பாடப்பட்டன. சத்தியமூர்த்தி, கோதைநாயகி, ஜீவா, ஜெயகாந்தன் போன்றோர் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சிமயமான குரலில் பாடி மக்களிடையே எழுச்சியூட்டினார்கள் என்பது வரலாறு.

bharathi ninaivukalபாரதியார் மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றி நினைவுகூர்ந்து அவருடன் நெருங்கிப் பழகிய பல நண்பர்கள் எழுதினார்கள். அவையனைத்தும் கால ஓட்டத்தில் பின்தங்கிவிட, இன்றும் புத்தம் புதிதாகப் படிப்பது போன்ற உணர்வையும் நெருக்கத்தையும் அளிக்கும் நினைவுத்தொகுப்பாக நிலைத்திருப்பது யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ தொகுப்பு. மற்றவர்களின் விவரணைகளிலிருந்து திரண்டெழும் பாரதியாரின் சித்திரம் அவருடைய ஆளுமையை முன்னிறுத்துகின்றன. ஆனால் யதுகிரி அம்மாளின் விவரணைகளிலிருந்து உருவாகும் சித்திரம் அவரை நம் கண்முன்னால் உயிர்த்துடிப்புடன் நடமாடும் ஒரு மனிதராக உணரவைக்கிறது. யதுகிரியின் எழுத்திலிருந்து எழுவது கடந்தகால சித்திரம் என்றாலும் அவருடைய சொல்லாற்றல் அச்சித்திரத்துக்கு ஒரு நிகழ்காலத்தன்மையை அளிக்கிறது. யதுகிரியின் எழுத்துகள் வழியாக, பாரதியாரை நாம் உளங்கனிந்த ஒரு தந்தையாக, காதல்மிக்க ஒரு கணவராக, ஈகை மிக்க ஒரு மனிதராக, உலகமறியாத அப்பாவியாக, எவ்விதமான பாகுபாடுமின்றி அனைவரோடும் தோழைமையோடு பழகும் அன்புள்ளம் கொண்டவராக, குற்ற உணர்வில் நலிபவராக நம்மால் பார்க்கமுடிகிறது.

மண்டயம் ஸ்ரீநிவாச ஐயங்காரின் மகள் யதுகிரி. பாரதியார் புதுச்சேரிக்கு வந்தபோது, ஸ்ரீநிவாச ஐயங்காரும் புதுச்சேரிக்கு வந்தார். 1908 முதல் 1918 வரை பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தார். இருவருக்கும் எதிரெதிர் வீடு. தம் மகளிடம் காட்டிய அன்பையும் பாசத்தையும் யதுகிரியிடமும் காட்டினார் பாரதியார். தாம் புனையும் பாடல்களை மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பாடிக் காட்டும் பழக்கமுடைய பாரதியார் பல பாடல்களை யதுகிரிக்கும் பாடிக் காட்டினார். சில பாடல்களின் கையெழுத்துப் பிரதிகளை யதுகிரிக்கே கொடுத்துவிடும் பழக்கம் பாரதியாருக்கு இருந்தது. பாடிப்பாடி பல பாடல்கள் யதுகிரிக்கே மனப்பாடமாக இருந்தன. பாரதியாருக்கு மட்டுமல்ல, பாரதியாரின் மனைவி செல்லம்மாளுக்கும் கூட தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் துணையாக விளங்கினார் யதுகிரி. இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதுபோல பாரதியாரோடும் அவர் குடும்பத்தாரோடும் கழித்த நினைவுகளை பாரதியாரின் மறைவுக்குப் பிறகு பதினாறு ஆண்டுகள் கழித்து சிறுசிறு கட்டுரைகளாக எழுதினார் யதுகிரி அம்மாள். அதற்குப் பின் பதினாறு ஆண்டுகள் கழித்துத்தான் இவை நூல்வடிவம் பெற்றன.

இக்கட்டுரைகளை யதுகிரி அம்மாள் 1938 காலகட்டத்தில் ஆனந்தவிகடன் இதழில் அவ்வப்போது எழுதினார் என்பதை புதிதாகக் கண்டடைந்திருக்கிறார் இத்தொகுப்பின் புதிய பதிப்பாசிரியரான கடற்கரய் மத்தவிலாச அங்கதம். 1954 ஆம் ஆண்டில் இன்ப நிலையம் இக்கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவந்தது. அதற்கொரு முன்னுரையையும் யதுகிரி அம்மாள் ஜூலை மாதம் எழுதி அளித்திருக்கிறார். ஆனால், ஆகஸ்டு மாதத்தில் நூல் வெளிவந்த சமயத்தில் அவர் உயிருடன் இல்லை. பழைய பதிப்பில் இல்லாத மூன்று கட்டுரைகளை ஆய்வாளர் கடற்கரய் புதிதாகத் தேடிக் கண்டடைந்து இத்தொகுப்பில் இணைத்திருக்கிறார். மேலும் யதுகிரி அம்மாளின் கொடிவழியினரைத் தேடிச் சந்தித்து அவரிடமிருந்து ஒரு கடிதத்தையும் பெற்று இந்நூலுடன் இணைத்து ஒரு புதிய பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறார்.

அதிகாலையில் எழுந்து கடலில் குளிக்கச் செல்லும் பழக்கம் பாரதியாருக்கு உண்டு. பிறகு மாலையில் பொழுது சாய்ந்த வேளையில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து மனைவியோடும் பிள்ளைகளோடும் உரையாடிக் களிக்கும் பழக்கமும் உண்டு. வானத்தையும் கடலலைகளையும் பறவைகளையும் பிள்ளைகளுக்குச் சுட்டிக் காட்டிக் கதை சொல்வார். யாரோ பழகிய ஆளிடம் நெருக்கம் பாராட்டி உரையாடுவதுபோல சிற்சில சமயங்களில் வானத்திடமும் கடலலைகளிடமும் உரையாடுவார். நெருங்கிவந்து கையேந்தி வணங்கும் பண்டாரங்களுக்கும் பாம்புப்பிடாரன்களுக்கும் கையிலிருக்கும் சில்லறைகளை கணக்குப் பார்க்காமல் எடுத்துப் போட்டுவிடுவார். பல சமயங்களில் இடுப்பில் கட்டியிருக்கும் புதுவேட்டியையும் கழற்றிக் கொடுத்துவிடுவார். எவ்விதமான பேதமுமின்றி, மீனவர்கள், பேண்ட் வாசிப்பவர்கள், நெல் குத்தும் பெண்கள், பிச்சைக்காரர்கள் என யார் பாடினாலும், அவர்களை நெருங்கிச் சென்று காதாரக் கேட்டு மகிழ்வார். உத்வேகம் கொண்டு அதே தாள ஓட்டத்தில் புதுவகையான பாட்டை புயல்வேகத்தில் எழுதி மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பாடிக் காட்டுவார். பாடல்கள் பிறந்த தருணங்களும் அவற்றை லயித்துப் பாடும் தருணங்களும் மட்டுமே அவருடைய புதுச்சேரி வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான தருணங்கள் என்று சொல்லலாம்.

இத்தொகுதியில் இருபத்தாறு கட்டுரைகள் உள்ளன. தாவித்தாவிச் செல்லும் நடையில் ஒவ்வொரு கட்டுரையிலும் காட்சிகள் மிகவேகமாக நகர்கின்றன. தேர்ந்த கலைஞர்களுக்கே உரிய வகையில் ஒவ்வொரு கட்டுரையும் சரியான புள்ளியில் தொடங்கி சரியான புள்ளியில் முற்றுப்பெறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. எங்கும் விரயமான சொல் என்பதே எதுவுமில்லை. ஓரிடத்திலும் எழுச்சியூட்டும் ஆவேசமும் இல்லை. பரிதாபமென உணரவைக்கும் வருத்தமும் இல்லை. எவ்விதமான மெனக்கிடலும் இல்லாமல் ஒவ்வொரு சம்பவத்தையும் அழகான காட்சிச்சித்திரமாக மாற்றும் கலை மிகஇயல்பாக யதுகிரிக்குக் கைவந்திருக்கிறது. பெரும்பாலான கட்டுரைகள் பாடல் பிறந்த தருணங்களை முன்வைத்துள்ளன. மனத்தில் உறுதி வேண்டும், விட்டு விடுதலையாகி, பிள்ளைப் பிராயத்திலே ஆகிய மூன்று பாடல்கள் பிறந்த கணங்களைச் சொல்லும் கட்டுரைகள் இத்தொகுப்பில் மிகமுக்கியமானவை. எத்தனை முறை படித்தாலும் முதல்முறை படிப்பதுபோன்ற அனுபவத்தையே அவை வழங்குகின்றன.

ஒருமுறை யாரோ ஒரு நண்பர் பாரதியாரைப் பார்க்க வருகிறார். பாரதியாரின் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அவர். சந்தித்துவிட்டுப் புறப்படும் சமயத்தில் சிறிது பணம் கொடுத்துவிட்டுச் செல்கிறார். பாரதியார் அதை வாங்கி அப்படியே மனைவியிடம் கொடுத்துவிடுகிறார். அப்பணத்தில் பிள்ளைகளுக்கு சில சிறுசிறு நகைகளையும் குடும்பத்துக்குத் தேவையான மளிகைச்சாமான்களும் நெல்மூட்டைகளையும் வாங்கிவைக்கிறார் செல்லம்மாள். வீட்டில் நெல் குத்தும் வேலை நடக்கிறது. வீட்டிலேயே ஓர் ஓரமாக உரலில் நெல் குத்துகிறார்கள் பெண்கள். அன்றைக்கு அவசரமாக ஏதோ எழுதத் தொடங்கி எதுவும் சரியாக அமையாததால் தவிக்கிறார் பாரதியார். தற்செயலாக அவர் கவனம் திசைமாறி, உரலுக்குள் உலக்கை விழும் ஓசையின்மீது படிகிறது. சீராக எழுந்தெழுந்து அடங்குகிறது அந்த ஓசை. அலுப்பு தெரியாமல் இருக்க நெல் குத்தும் பெண்கள் பாடும் பாட்டும் கேட்கிறது. அந்தத் தாளமும் பாட்டும் பாரதியாரை அக்கணமே வசீகரித்து இழுக்கிறது. அவர் அனைத்தையும் மறந்து அந்தத் தாளத்தையே பின்தொடர்ந்து செல்கிறார். உலக்கை உரலுக்குள் விழும் ஒவ்வொரு கணமும் அவர்கள் ராகமுடன் இழுத்து ‘வேணும்’ என்று சொல்கிறார்கள். பிறகு உலக்கை உயர்ந்து தாழும் வரையில் வேறொரு வாக்கியத்தை மற்றொரு ராகமுடன் நீட்டி முழக்கிச் சொல்கிறார்கள். இருவித தாளங்கள். இருவித சொல்லாட்சி. கேட்கக்கேட்க பாரதியாரின் மனம் பொங்குகிறது. அக்கணமே ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற பாடலை எழுதத் தொடங்கி முடிக்கிறார். அந்த வேகத்தில் எழுத பிடி கிடைக்காத பழைய கதையையும் எழுதி முடித்துவிடுகிறார்.

இன்னொரு நாள். மாதக்கடைசி. கையில் பணமில்லை. பத்திரிகை அலுவலகத்திலிருந்து வரவேண்டிய மணியார்டர் வரவில்லை. எழுதுவதற்கான தொடக்கம் கிடைக்காமல் பாரதியாரும் தவிப்போடு காணப்படுகிறார். சமைப்பதற்காக அரிசியை எடுத்து முறத்தில் வைத்துவிட்டு குளியலறைக்குச் செல்கிறார் செல்லம்மாள். எழுத மனம் குவியாத பாரதியாரின் கவனம் கூரை வரைக்கும் பறந்து வந்து முறத்திலிருக்கும் அரிசியை நோக்கி தத்தித்தத்தி வரும் ஒரு சிட்டுக்குருவியின் மீது பதிகிறது. குருவியின் வேகமும் சுறுசுறுப்பும் வாலாட்டலும் பாரதியாரின் மனத்தை எழுச்சியடையச் செய்கிறது. சட்டென்று குனிந்து முறத்திலிருந்த அரிசியை அள்ளி குருவியை நோக்கி வீசுகிறார். அரிசி மணிகளைக் கொத்திக் கொத்தி விழுங்குகிறது குருவி. பறந்து சென்று மறுகணமே ஒரு படையுடன் திரும்பி வருகிறது. பாரதியார் மேலும் மேலும் அரிசியை அள்ளி வீசுகிறார். குருவிகள் பறப்பதும் எழுவதும் இரையெடுப்பதும் பாரதியாருக்கு ஆனந்தமளிக்கும் காட்சியாக இருக்கிறது. குளித்துவிட்டு வந்த செல்லம்மாளை அருகில் அழைக்கும் பாரதியார் “இந்தக் குருவிகளைப்போல நம்மால் ஏன் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை?” என்று கேட்டுவிட்டுச் சிரிக்கிறார். அதே உத்வேகத்தில் மேசைக்குத் திரும்பி ‘விட்டு விடுதலையாகி’ கவிதையை ஒரே மூச்சில் எழுதிமுடிக்கிறார். செல்லம்மாளோ அழுதுகொண்டே சமையலறைக்குச் செல்கிறார். தன் மகளை மடியில் தூக்கிவைத்து அந்தப் பாட்டைப் பாடிக் காட்டுகிறார் பாரதியார். அழும் மனைவியிடம் “பத்திரிகைக்கு இந்தக் குருவி பாட்டையே அனுப்பப் போகிறேன். பணம் வரும், கவலைப்படாதே” என்று சொல்லித் தேற்றுகிறார்.

yathugiri ammalமற்றொரு நாள். மாலை நேரம். சரஸ்வதி பூஜைக்கு முதல்நாள். பாரதியாரும் செல்லம்மாளும் தங்கம்மாவும் யதுகிரியும் கடற்கரைக்குச் செல்கிறார்கள். அன்று வியாழக்கிழமை என்பதால் கடற்கரையில் டியுப்ளே சிலைக்கு அருகில் நின்று தொப்பியணிந்த வாத்தியக்காரர்கள் பேண்ட் இசைக்கிறார்கள். அந்தத் தாளம் புதுமையாக இருக்கிறது. பிள்ளைகளிடம் அந்த இசையில் உள்ள புதுமையைப் பற்றி எடுத்துச் சொல்கிறார் பாரதியார். அந்தத் தாளத்தில் புதிதாக ஒரு பாட்டை எழுதப் போவதாகவும் சொல்கிறார். மகள் தங்கம்மா எழுதவிருக்கும் பாட்டை சரஸ்வதிமீது எழுதும்படி கேட்டுக் கொள்கிறாள். வாத்தியக்காரர்களின் அடுத்த பாடல் வேறொரு தாளத்தில் அமைந்திருக்கிறது. அந்தத் தாளம் யதுகிரிக்குப் பிடித்திருந்ததால் தனக்காக லட்சுமி மீது ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். வாத்தியக்காரர்களின் மூன்றாவது பாடல் முற்றிலும் புதிய தாளக்கட்டில் இருக்கிறது. அது செல்லம்மாளுக்குப் பிடித்திருக்கிறது. அவர் காளியைப் புகழ்ந்து சொல்வதாக தனக்கொரு பாடல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். மூன்று பேரின் கோரிக்கைக்கும் தலையசைத்த பாரதியார் அன்றிரவே அவர்கள் கேட்ட தாளங்களில் மூன்று துதிப்பாடல்களையும் எழுதி முடிக்கிறார். மறுநாள் காலை பூஜை செய்த பிறகு மூவரையும் உட்கார வைத்துக் கொண்டு சரஸ்வதியைப் பற்றி மனோகரி ராகத்திலும் லட்சுமியைப் பற்றி ஸ்ரீராகம் ராகத்திலும் காளியைப் பற்றி புன்னாகவராளி ராகத்திலும் பாடிக் காட்டினார். அது பிள்ளைப்பிராயத்திலே என்று தொடங்கும் பாடல்.

இப்படி எண்ணற்ற பாடல்களின் பின்னணிச் சம்பவங்களை அழகான விவரணைக் குறிப்புகளுடன் இத்தொகுப்பில் எழுதியுள்ளார் யதுகிரி. ஒருமுறை ரயில்பயணத்தில் யதுகிரியின் பெட்டியையும் துணிமுடிச்சுகளையும் ஆய்வுசெய்த காவலர் அதற்குள் வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் பாடல்களையெல்லாம் எழுதி வைத்திருந்த குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர். பாரதியார் என்னும் பெயர் எழுதப்பட்ட தாளை வைத்திருப்பதைக் கண்டுபிடித்து விட்டாலே கைது செய்து தண்டனை கொடுத்த காலம் அது. ஒருமுறை அசுரர்களுக்கும் ரிஷிகளுக்கும் நிகழும் உரையாடலைப் போன்ற விதத்தில் ‘எங்கள் வேள்விக்கூடமீதில்’ என்றொரு எழுச்சிமிக்க பாட்டை எழுதியிருந்தார் பாரதியார். யதுகிரிக்கு அப்பாட்டு மிகவும் பிடித்திருந்தது. அதை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. உடனே பாரதியார் தன் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு தாளில் அப்பாட்டை மட்டும் எழுதி தலைப்பாக ‘அக்கினி தோமம்’ என்று எழுதிக்கொடுத்துவிட்டார். அன்றைய ரயில் பயணத்திலும் சோதனை நிகழ்ந்தது. ஆனால் அக்கினி தோமம் என்று எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டு அத்தாளை விட்டுவிட்டனர். பாரதியாரைச் சூழ்ந்திருந்த நெருக்கடிகளையும் தினசரி வாழ்க்கையில் அவர் அனுபவித்த சங்கடங்களையும் படிக்கும்போது மனம் கனத்துவிடுகிறது.

மகளைவிட யதுகிரியின் மீது பாசம் மிக்கவராக இருந்தார் பாரதியார். இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு படுக்கையிலிருந்து புரண்டு மனைவியிடம் “யதுகிரி எங்கே இருக்கிறாள்?” என்று கேட்கிறார். மைசூரில் இருப்பதாகப் பதில் சொல்கிறார் செல்லம்மாள். “அவளுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று மறுபடியும் கேட்கிறார். “நம்மைப்போலவே அவளுக்கும் இரு பெண் குழந்தைகள்” என்று சொல்கிறார் செல்லம்மாள். “அவளைப் பார்க்கவேண்டும் போல இருக்கிறது. நாம் இங்கிருந்துகொண்டு என்ன செய்யமுடியும்? எப்படியோ, பிள்ளைகளோடு அவள் நன்றாக இருக்கட்டும்” என்று சொல்லி மூச்சு வாங்குகிறார். அடுத்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்துவிடுகிறது. “சாகும்போதுகூட அவருக்கு உன் நினைவுதான்” என்று தன்னைச் சந்திக்க வந்த யதுகிரியிடம் சொல்கிறார் செல்லம்மாள்.

அரவிந்தர், வ.வே.சு.ஐயர் போன்ற பலரும் யதுகிரியின் நினைவுக் குறிப்புகளில் பாத்திரங்களாக வந்து போகிறார்கள். பாரதியார் மிகவும் படைப்பூக்கத்துடன் வாழ்ந்த காலம் புதுச்சேரியில் வாழ்ந்த காலம். அதன் சுவடுகளை யதுகிரியின் குறிப்புகள் ஆவணப்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் அவருடைய ‘பாரதி நினைவுகள்’ ஒரு முக்கியமான படைப்பு. அவர் கொடுத்திருக்கும் குறிப்புகள் மிகக் குறைவானவையே என்றாலும், அவற்றின் வழியாக உருப்பெறும் பாரதியாரின் சித்திரம் மகத்தானது. பாரதியாரும் செல்லம்மாளும் இணைந்திருக்கும் படத்தை அட்டைப்படமாகக் கொண்டு அழகுற வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகம் பாராட்டுக்குரியது.

- பாவண்ணன்

Pin It