ஒரு பண்பாட்டில் புகழ்பெற்ற பாடல்கள், சொல வடைகள், கதைகள், புராணச் செய்திகள் ஏராளமாக வுள்ளன. அவை மக்களிடையே மிகவும் பிரபலமடைந் துள்ளன. திரும்பத் திரும்ப அவை அம்மக்களால் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றைக் கேட்கும் போதெல்லாம் அவை மக்களுக்கு இன்பம் பயக்கின்றன. இத்தகைய பாங்கினால் படைப்பாளிகளும் இப்பண்பாட்டுச் செல்வங்களை (Cultural resources) தம் படைப்புகளில் இணைத்துப் புதிய புதிய படைப்புக் களைக் காலந்தோறும் படைத்து வருகின்றனர். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சமகாலத்தில் அல்லது முற்காலத்தில் வழக்கிலிருந்த புகழ்பெற்ற வாசகங்களைத் தம் கதைக்குப் பொருத்தமான இடங்களில் சேர்த்துள்ளார். பிறருக்கு முற்பகலில் துன்பம் செய்தால் அவருக்குப் பிற்பகலிலேயே துன்பங்கள் தாமாக வந்து சேரும் (குறள் - 319). இந்தத் திருக்குறள் கருத்தை நினைவுபடுத்தி அவர் தம் காப்பியத்தில் சேர்த்துள்ளார்.
வஞ்சின மாலையில்...
“கோவேந்தன் தேவி-! கொடுவினை யாட்டியேன்;
யாவும் தெரியா இயல்பினேன்; ஆயினும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய - காண்!”
மன்னர் மன்னனின் மனைவியே, யான் பாவங்கள் செய்தவள். நிங்களுடைய இயல்பினை அறிந்தவள் அல்லள். ஆயினும் முற்பகல் வேளையிலே பிறனுக்குக் கேடு செய்தவன் அதன் பயனாகப் பிற்பகலிலே தானும் கெடுவான் என்பதை நேரிற் கண்டனை. தீவினையின் தகைமையும் இத்தகையதே என்று கண்ணகி கூறுவாள். இவ்விடத்தில் இளங்கோவடிகள் திருக்குறளைச் சுட்டிக் காட்டி (allude) தமது கருத்துக்கு வலுசேர்த்துள்ளார். இன்னொரு இடத்தில்
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணியதால் - தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து (கட்டுரை காதை)
மண்ணக மாதர்க்கெல்லாம் அணி போல்பவளான கண்ணகியானவள் தெய்வமாகி விண்ணக மாதர்க்கு விருந்தினளாயினள். ‘தெய்வந் தொழாள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும் தகைமையும் இவ்வுலகில் இதனால் உறுதியாயிற்று. இவ்விடத்திலும் தெய்வம் தொழாஅள்’ (குறள் - 55) என்ற குறள் எடுத்தாளப்பட்டிருப்பதைக் காணலாம். இளங்கோ வடிகள் தம் காப்பியம் முழுவதிலும் தமக்கு முன்பிருந்த சான்றோர்களின் மேற்கோள்களை நினைவுபடுத்தித் தம் காப்பியத்தில் சேர்த்துள்ளார். அவற்றையெல்லாம் ‘பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை’என்ற பொருள் ஆழமிக்கத் தொடரால் குறிப்பிடுகிறார். ‘பண்டையோர் உரைத்த நல்லுரை’என்ற தொடர் ஒரு பனுவலுக்கும் இன்னொரு பனுவலுக்கும் (text) உள்ள உறவைக் குறிக்கிறது.
ஒரு பனுவலைத் தழுவி இன்னொரு பனுவல் படைப்பது தற்காலத்திலும் இலக்கிய உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனைப் 'பனுவல் தழுவிய உறவு’ (intertexuality) என்று கூறுவர். ஒரு பனுவலை நினைவுபடுத்தி அதே நேரத்தில் அது இல்லை என்பதையும் உணருமாறு உத்தியைக் கையாள்வது. ஒரு சில எடுத்துக்காட்டுக் கவிதைகளால் பனுவல் தழுவிய உறவை விளக்கலாம்.
செம்புலப் பெயல்நீர்
‘செம்புலப் பெயல்நீர் போல’என்ற குறுந்தொகைப் பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலாகும். முன்பின் தெரியாத தூய்மையான அன்புடைய நெஞ்சங்கள் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அந்நிலத்தின் வண்ணத்தை, நிறத்தைப் பெறுவதனைப் போல கலந்து விடுகின்ற காதலை விவரிக்கின்றது அப்பாடல். இந்தப் பனுவலை கவிஞர் மீரா ஒரு கவிதையில் நினைவுபடுத்தி வேறொரு கவிதை புனைந்துள்ளார். கவிதையின் தலைப்பு ‘நவயுகக் காதல்’ என்பதாகும்.
“உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்கள்
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”
பாடல் அமைப்பு கூட குறுந்தொகைப் பாடலை எதிரொலிப்பதாகவே உள்ளது. ‘யாயும் ஞாயும் / எந்தையும் நுந்தையும்’ என்பது போலவே எனக்கும் உனக்கும், நீயும் நானும், உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் போன்ற தொடர்கள் குறுந்தொகைப் பாடலின் அமைப்பை ஒத்துள்ளன. இருந்தாலும் கவிஞர் வலியுறுத்தும் கருத்து முற்றிலும் வேறானது. நேர் எதிர்மறையானது. ஊர் பார்த்து, சாதி மதம் பார்த்து வசதி பார்த்து காதல் செய்கிற தற்காலப் போக்கினை கவிஞர் சாடுகிறார். அதற்குப் பழைய பாடலை, பனுவலைக் கையாள்கிறார்.
இதே பாடலை இன்னொரு கவிஞர் வேறு பிரச்சினையை வலியுறுத்தக் கையாண்டுள்ளார். அந்தக் கவிதையையும் காண்போம். கவிதையின் தலைப்பு ‘யாயும் ஞாயும்’ என்பதாகும். அதே குறுந்தொகைப் பாடல் வேறு விதமாக :
“செம்புலமெல்லாம்
செங்கற் சூளையாயிற்று
பெயல் நீரையெல்லாம்
புட்டியிலடைத்து
விற்றாயிற்று,
இதில் இனி
அன்புடை நெஞ்சமாவது
உறவு கலப்பதாவது”
பாடலாசிரியர் சௌந்திர மகாதேவன். 3.9.2017 தினமணி ஞாயிறு தமிழ்மணியில் பாடல் இடம் பெற்றுள்ளது. இயற்கை வளங்கள் அநீதியாகச் சூறையாடுவதைக் கண்டித்து இப்பாடலைப் படைத் துள்ளார். செம்புல நிலமுமில்லை. பெயல் நீருமில்லை. மனிதனின் உயிர் வாழ்க்கையே கேள்விக் குறியாகும் போது ‘அன்புடை நெஞ்சமாவது உறவு கலப்பதாவது’ என்று தம் கவலையை வெளிப்படுத்துகிறார். குறுந் தொகைப் பாடலை எதிரொலிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. ஒரே பழைய பனுவலை இரண்டு படைப்பாளிகள் இரண்டு விதமாகக் கையாள்வதைக் காணமுடிகிறது.
புராணச் செய்திகளை எதிரொலிப்பவை
சாதாரணமாக ‘அனுமார் வால்போல வரிசை நீண்டு சென்றது’ என்று கூறும்போது ஒரு புராணக் கூறை இணைத்துப் பேசுகின்ற வழக்கைக் காணமுடியும். புராணச் செய்திகள் மக்களிடையே பிரசித்தி பெற்றவை. படிக்காத பாமரன்கூட புராணக் கதைகளை அறிந்து வைத்திருப்பான். அவையும் மக்களின் பண்பாட்டுக் கருவூலங்களாகும். இத்தகைய பண்பாட்டுக் கருவூலங் களை எதிரொலித்து படைப்புகள் ஆக்கப்படுவதையும் எளிதாகக் காணலாம். மீராவின் கவிதைத் தொகுப்பி லிருந்து இன்னொரு எடுத்துக்காட்டைக் காண்போம்.
“துருபதன் மகளை
நிருவாணக் கோலத்தில்
நிறுத்த நினைத்த
நீசர்க் கெதிராய்க்
கண்ணன் கொடுத்த துகில்
இன்னுமா நீள்கிறது
குற்றாலத்தில்?”
மீரா எழுதிய ‘குக்கூ’ என்ற கவிதைத் தொகுப்பில் இக்கவிதை இடம் பெறுகிறது. மகாபாரதக் கதையில் இடம் பெறும் ஒரு பனுவல் சுருக்கத்தைக் கையாண்டு குற்றால நீர்வீழ்ச்சியின் அழகை மிகவும் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார். புராணத்தில் இடம் பெறும் துகில் உரிகின்ற காட்சியையும், குற்றாலத்தில் தொடர்ச்சியாக விழுகின்ற அருவியின் காட்சியையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். மகாபாரதப் பனுவலை நினைவுறுத்தி, அதனைத் தொடர்புபடுத்திப் புதிய பனுவலைப் படைத்துள்ளார். அதே நேரத்தில் அதனை வேறுபடுத்தியும் காட்டுகிறார்.
தோடுடைய செவியள்
மீராவின் இன்னொரு கவிதை பின்வருமாறு அமைந்துள்ளது.
மூன்று வயதில்
ஞானசம்பந்தர்
பாடினாராம்
தோடுடைய செவியன் என்று
இப்போதும்
அதே வயதுப்
பாலகர்கள்
பாடுவார்கள்
தோடுடைய செவியள் என்று
தப்பில்லாமல். (ஊசிகள், ப/77)
சைவ சமயக் குரவர்களுள் முதலாமவரான திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்து தோடுடைய செவியனாகக் காட்சி தந்தது புராணச் செய்தியாகும். இப்புராணச் செய்தியைக் கையாண்டு, அல்லது அதனை நினைவுபடுத்திப் புதுச் செய்தியை, புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். பெண்களைக் கேலிவதை செய்வது பெருகி வரும் போக்கினைக் கண்டிப்பதாய் இக் கவிதை அமைந்துள்ளது. கவிஞர் மீராவின் கவிதைகளில் சில புகழ்பெற்ற அரசியல் முழக்கங்கள், இலக்கியத் தொடர்கள், பழமொழிகள், திரைப்பாடல்கள் ஆகியவை கையாளப்பட்டிருப்பதையும், சொல்ல வந்த கருத்துக்குப் பகைப்புலமாக முரண்பாடான ஒன்றை நிறுத்திச் சொல்லும் உத்தி கையாளப்பட்டிருப்பதையும் பாலு குறிப்பிட்டுள்ளார். (மீராவின் Ôஊசிகள்Õ நூலின் முன்னுரை உரையாடல் காண்க). இதுவே (intertexuality) என்ற நடையியல் உத்தியாகும்.
காவ்ய நாயகி - விக்ரமாதித்யன் கவிதை
இராமாயணத்தில் சீதைக்கு ஏற்படும் பல்வேறு இன்னல்களையும், நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி விக்ரமாதித்யன் ஒரு அற்புதமான கவிதை படைத் துள்ளார். இக்கவிதை intertexuality-க்கு அழகிய எடுத்துக் காட்டாக விளங்குகிறது. அக்கவிதை பின்வருமாறு :
இளவரசியாய்
மிதிலைப்பட்டணத்தில்
பேரரசியாய்
அயோத்திப் பட்டணத்தில்
சிறைக் காவலாய்
இலங்கைப் பட்டணத்தில்
வனவாசம்
அக்னிப்ரவேசம் வேறு
லவகுசா ஜனனம்
மகரிஷிகள் தயவில்
அவதாரத்தை நம்பியே
ஆயிரத்தொரு அவஸ்தைகளும்
ஆனாலும்
அந்தத் தேவியின் பாடுகள் அதிகம்தான்.
மிதிலையில் ஜனகனுக்கு மகளாய் இளவரசியாய் வளர்கிறாள். அயோத்திப் பட்டணத்தில் இராமனுக்கு மனைவியாய் பேரரசியாக விளங்குகிறாள். இலங்கையில் இராவணனின் சிறைக்காவலில் துன்புறுகிறாள். இராம னோடு வனவாசம் செல்கிறாள். இவ்வளவு துன்பங்களும் இராமனின் அவதாரச் சிறப்பை உணர்த்துவதற்காகச் சீதை அனுபவிக்கிறாள். ஒருவனின் சிறப்புக்காக அந்தப் பெண் பட்ட அவஸ்தைகளும் பாடுகளும் அதிகம் தான் என்று இராமாயணத்தை அப்படியே எடுத்துக் கவிதை யாக்கியுள்ளார்.
ஆனாலும் இது இராமாயணக் கதை அன்று. சீதையைப் பற்றிக் கூறுவதோ, அவளுக்காக அனுதாபப் படுவதோ கவிஞரின் நோக்கமன்று. இராமாயணச் சீதையை நினைவுபடுத்தித் தற்கால பெண்கள் படும் அவஸ்தைகளை, அவலங்களைச் சுட்டிக் காட்டுகிறாள். அந்த நிலையில் இக்கவிதை ஒரு புதிய பனுவல். பழைய பனுவலைத் தழுவி அதன் எதிரொலியாக இக்கவிதை உருவாக்கப்பட்டுள்ளது. பழைய பனுவலுக்கும் புதிய பனுவலுக்குமான தொடர்பு கவிதைக்கு மெருகூட்டுகிறது. கவிதையை ஓர் உயர்ந்த நுகர்வுப் பொருளாக, இலக்கியமாக மாற்றுகிறது.
விக்ரமாதித்யனின் இன்னொரு கவிதையில் ஒரு நாலுவரி அகலிகையைக் குறித்து வருகிறது.
“அகலிகை எனும் கல்
யோசிக்கிறது
அவன் ஏன் வந்தான்
இவன் எப்படி சாபமிடலாம்”
இந்திரன் அகலிகையை வஞ்சிக்கிறான். அகலிகையின் கணவனான கௌதம முனிவரின் உருக்கொண்டு அவளை அடைகின்றான். அவளும் தன் கணவன்தானே என்று அவனது இச்சைக்கு ஆளாகிறாள். அவள்மீது யாதொரு பிழையுமில்லை. இதனை அறிந்த கௌதமர் இந்திரனையும், அகலிகையையும் சாபமிடுகிறாள். மூன்றாவது மனிதன் இராமனின் ஸ்பரிசம் பட்டு கல்லான அகலிகை மீண்டும் பெண்ணாகிறாள். இந்தப் பழைய பனுவலைத் தந்து ‘பெண்ணின் அந்தரங்கத்தின் மீது ஆண்களின் அத்துமீறல், ஆக்கிரமிப்பு, ஆதிக்கம்’ என்று உணரும் வகையில் புதிய பனுவலை விக்ரமாதித்யன் உருவாக்கியுள்ளார். பழைய பனுவலின் எதிரொலியாகப் புதிய பனுவல் அமைந்துள்ளது. அதனை நினைவுபடுத்தி அதே நேரத்தில் அதுவல்ல என்பதையும் சுட்டிக் காட்டு வதாக பனுவல் உறவு அமைந்துள்ளது.
இந்த உத்தி விளம்பரங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றது. அண்மையில் அஞ்சலகத்தில் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன். ‘அஞ்சல் செய விரும்பு’ என்பது தான் அந்த விளம்பரத் தொடர். ‘அறம் செய விரும்பு’ என்ற ஒளவையின் ஆத்திச்சூடியைப் பின்பற்றி எழுதப்பட்டிருந்தது. ‘யாமிருக்க நடையேன்’ என்று ஒரு ஆட்டோவில் விளம்பர வாசகத்தைப் பார்த்தேன். ‘நீயின்றி அமையாது உலது’ என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயர். இவையெல்லாம் பனுவல் தழுவி படைக்கப்படும் ஆக்கங்களே. ஒரு பனுவலுக்கும் இன்னொரு பனுவலுக்கும் தொடர்பை உருவாக்கிப் படைக்கும் ஆக்கங்கள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.
Note :Intertexuality - an allusion to another text and atthe same time, an apple to the reader’s awareness ofthe text. (Verdonk).
பார்வை நூல்கள்
1) Verdonk Peter, Stylistics, (2002) Oxford
2) மீராவின் Ôஊசிகள்Õ கவிதைத் தொகுப்பு
3) விக்ரமாதித்யன் கவிதைகள்