subrabharathimani 450சுற்றுச்சூழல் நூல்களை எழுதுவதில் அக்கறை கொண்டவர்  சுப்ரபாரதிமணியன். அவரின் சாயத்திரை, புத்துமண் போன்ற நாவல்கள், சூழல் அறம், மேக வெடிப்பு, மூன்றாம் உலகப்போர் கட்டுரை நூல்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்கள் இதைச் சொல்லும்.  அந்த வரிசையில் இந்நூல் எழுதிய அனுபவத்தை இப்படிச் சொல்கிறார். “பசுமை விகடனின் Ôஒரு நாள் விவசாயிÕ நிகழ்ச்சிக்கு மது ராமகிருஷ்ணனின் பொள்ளாச்சி இயற்கை வேளாண்மைப் பண்ணைக்குச் சென்றிருந்த போது காலை, மதியம் உணவு வகைகளை திருவோட்டில் வழங்கினார். நண்பர்கள் ஒருவிதக் கூச்சத்தால் நெளிந்தனர். பிறகு திருவோடு மரத்தைக் காட்டியவர்   இது அழிந்து வரும் மரம் என்றார். அதன்பின்னதான அவருடனான பேச்சில் அழிந்து வரும் மரங்கள் பட்டியலைத் தந்து  எழுதச் சொன்னார். சில புத்தகங்கள், இணையதளச் செய்திகள் என் தேடலுக்கு உதவி செய்தன.”

இதில் மறைந்து வரும் 30 மரங்கள் பற்றிய செய்திகள் உள்ளன. தாவரவியல் செய்திகள், மருத்துவச்செய்திகள்  முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கிய ரீதியான தகவல்கள் இதன் சிறப்பம்சம். சுப்ரபாரதிமணியன் ஒரு எழுத்தாளர் என்ற வகையில் பல நவீன கவிதைகளை (நாஞ்சில் நாடன், கல்யாண்ஜி, தேவதேவன்) மற்றும் சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டுவது வெகு சிறப்பு.

உதாரணமாய் சில : இலந்தை பள்ளிப்பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வெளியே இலந்தைப் பழம் வாங்கி சாப்பிடுவோம். இதன் வரலாறு , வகைகள் விரிவாய் உள்ளது.

பூவரசம் பீப்பி எங்கே? கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி எங்கே? அரைஞான் கயிறு எங்கே?

தென்னை ஓலை விசிறி எங்கே? பனை ஓலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே? கிச்சு கிச்சு தாம்பாளம் எங்கே?

தெல்லு விளையாட்டு எங்கே? கோபிபிஸ் விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே?

கோலிகுண்டு எங்கே? கோலிசோடா எங்கே?

இப்படி எங்கே எங்கே என்று கேட்கிற கேள்விகள் இன்று நீண்டு கொண்டே இருக்கின்றன.

நம் இலக்கியங்கள் அடையாளப் படுத்திய பாடல் பெற்ற சிறப்புடைய நானூற்றி சொச்சம் மரங்களில் எத்தனை மரங்கள் இப்போது உள்ளன. உலகின் தற்போதைய மக்கள் தொகையான 7.2 பில்லியன் எதிர்வரும் 2050-ம் ஆண்டு 9.2 பில்லியனாக உயரும் எனக்கூறுகிறார்கள். நிலம், நீர், காற்று மற்றும் ஏனைய இயற்கை வளங்களை முறையற்ற வகையில் பயன் படுத்துவதே காரணமாகும். புவி வெப்பமயமாதல், ஆற்றல் பற்றாக்குறை, அதிகப்படியான உணவுத் தேவை, பாதுகாப்பு, மண்வளம், காலநிலை மாற்றம், உயிரினங்களின் அழிவு மற்றும் பருவகால மாற்றங் களினால் ஏற்படும் நோய்கள் போன்றவை தற்கால சூழலின் சவால்களாகத் திகழ்கிறது. 2016-ம் ஆண்டு உயர்ந்த அளவில் வெப்பநிலை உலகெங்கிலும் காணப் பட்டது. அனலால் அலறினோம். 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆற்றல் தேவைகள் நிலக்கரியின் மூலம் பெறப்படுவதால் சூழல் மாசுபாடு அடைவதோடு புவி வெப்பமயமாதலுக்கும் முக்கிய காரணியாக விளங்கு கிறது. இந்தியாவில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தறுவாயில் உள்ளதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட சூழல் சவால்களை எதிர்கொண்டு சூழல் மண்டலங்களைக் காப்பதற்கு பல்துறை ஆராய்ச்சி இன்றியமையாததாக விளங்குகிறது. மாசு இல்லாத உலகில் அன்று மனிதர்கள் வாழ்ந்தார்கள். நோய் பயம் இல்லாமல் நீண்ட ஆயுள் பெறமுடிந்தது. காற்று மண்டலத்தில் உள்ள விண்வெளியை வனங்கள் தூய்மைப்படுத்தின. தொழில் புரட்சியின் விளைவால் வனங்களின் அழிவு தொடங்கியது. நெருக்கமான நகரக்குடியிருப்புகள் தோன்றின. கிராமமாயிருந்த இடங்களில் மாநகரங்கள் தோன்றின. அபூர்வமான மரங்களும் அழிந்து வருகின்றன  என்கிறார்.

அதற்கான விழிப்புணர்ச்சியாய் மறைந்து வரும் சில மரங்கள் பற்றி இத்தொகுப்பு பேசுகிறது. மரங்கள் பற்றி அறிந்து கொள்ள நல்ல நூல் இது. மரங்களின் அவசியம், அவற்றைப் பேண வேண்டிய அவசியம் பற்றி இந்நூல் சூழல் அக்கறையுடன் பேசுகிறது.

மறைந்து வரும் மரங்கள்

சுப்ரபாரதிமணியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

` 100/-

Pin It