வளமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது தமிழ்ச் சிறுகதை இலக்கியம்.

ஒப்பீட்டு முறையில் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சியை அளவிட வசதியாக ‘அகஸ்டஸ்’ சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது வரவேற்கத் தகுந்ததாக உள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளின் கதைகளை யூமா.வாசுகி மொழிபெயர்த்துள்ளது கவனத்திற்கு உரியது. மணிக்கொடிக் காலத்தில் புதுமைப்பித்தனும் கூட ‘உலகச் சிறுகதைகள்’ என்று தாம் கருதிய கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அதற்குப் பிறகு இப்படி ஒரு முயற்சி தமிழில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

yuma_vasuki_450வழக்கமாக உள்ள எடுப்பு, தொடுப்பு, வளர்ச்சி, முடிவு என்ற கட்டமைப்புக்களுக்குள் அடங்காமல் அவற்றின் வரையறைகளைக் கடந்து புதிய தளங் களில் தாராளமாக இயங்குகிறது. நவீன இலக்கியம், புதிய புதிய உள்ளடக்கங்களையும், உருவங்களையும், உத்திகளையும் தனித்துவமான மொழியில் கை யாளுவது நவீன இலக்கியத்தின் போக்காக அமைந் துள்ளது. இதைக் கூர்மையாகக் கவனித்ததன் விளைவாகவோ, என்னவோ யூமா.வாசுகி இந்தப் புதுமையான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

சூரியனுக்குக் கீழ்வரும் மனிதர்கள் உருவம், நிறம், மொழி என்ற வேறுபாடுகளுடன் வாழ்ந் தாலும் அவர்களின் உள்ளுணர்வுகள் ஒன்றாகவும், இயல்பானவையாகவும் இருக்கின்றன. அதை நாம் ஒன்பான் சுவைகள் என்று வரையறை செய்திருக் கிறோம். இந்தச் சுவை உணர்வுகள்தான் நம்மைப் பாகுபாடுகளிலிருந்தும், மாறுபாடுகளிலிருந்தும் விலக்கி ஒருங்கிணைத்து மனக்கிளர்ச்சியைத் தூண்டி மனமகிழ்வைத் தோற்றுவிக்கின்றன. மனித இனம் முழுவதும் ஒன்று என்ற உணர்வை அடையச் செய் கின்றன. மனித நேயத்தை வளரச் செய்து வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வைத் தோற்றுவிக்கின்றன.

நவீன இலக்கியத்தில் நிகழ்ந்துவரும் இந்தப் போக்கை உலக மொழிகளில் எல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டுகின்றன, இந்தச் சுவை உணர்வுகள். மனிதமனம் என்பது முடிவில்லாத ஒரு புத்தகம். காலந்தோறும், தலை முறை தலைமுறையாக எழுதிக்கொண்டும், வாசித்துக் கொண்டும் இருக்கும் மகத்தானது. முழுமை இல்லாத மனித வாழ்வின் முடிவில்லாத ஒரு தொடர் கதையாக இலக்கியம் தொடர்ந்து மனிதர்களுக்குள்ளிருந்து பிறந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதைப் புலப்படுத்துவதைப் போல ‘அகஸ்டஸ்’ கதைத் தொகுதி வடிவமைத்துள்ளது.

தொகுப்பில் பத்து நாடுகளைச் சேர்ந்த மிக உன்னதமான இலக்கியப் படைப்பாளிகளின் தேர்ந்தெடுத்த கதைகள் அடங்கியுள்ளன. இதில், ஜப்பானைச் சேர்ந்த இஷிக்காவா தத்ஸுஸோ, ஜெர்மனைச் சேர்ந்த ஹெர்மன் ஹெஸ்ஸே, பிரான்சைச் சேர்ந்த மாப்பஸான், இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் போஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஓ ஹென்றி, இரஷ்யாவைச் சேர்ந்த தஸ்தயேவ்ஸ்கி, இஸ்தான்புல்லைச் சேர்ந்த ஸெவத் குத்ரத், நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த டோரதி பார்க்கர், ஜாவாவைச் சேர்ந்த அக்தியத் கே.மிஹர்ஜா, குறிப்புக்கள் இல்லாத கெஸ ஸாத் போன்ற இலக்கியப் படைப்பாளி களின் கதைகள் அடங்கி உள்ளன.

வாசிப்புக்கு எளிமையானதாகவும், இயல்பான தாகவும் உள்ள கதை மொழி மனதை வருடக் கூடியதாக உள்ளது. காட்சிகளையும், நிகழ்வு களையும், உணர்வுகளையும், தெளிவாகவும், துல்லியமாகவும் வெளிப்படுத்தும் உரைநடை இதன் சிறப்பு.

கண்பார்வையை இழந்தபின் வாழ்க்கையைச் சலித்துக்கொள்ளும் கணவனுக்கு ஆறுதலாக வாழும் மனைவியின் அன்பான அணுகுமுறை களின் வாயிலாக வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளச் செய்யும் மனநிலைக்குத் தூண்டப்படும் நிகழ்வு களின் சாரத்தைத் துல்லியமாகவும், இயல்பாகவும் உணர்த்துகிறது ‘இருளின் சிந்தனைகள்’. தந்தையை அறியாத குழந்தை மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தன்னைத் தானே அறிந்துகொள்ளும் அனுபவங்களை இணைக்கும் ‘அகஸ்டஸ்’ சாவைக் குறித்த அச்சத்திலிருந்து விடுபட்டு வாழ்வை ஏற்றுக் கொள்ளும் டாரோனை, ‘வயதான ஒருவர்’ கதையில் காணலாம்.

அரசியல் சார்ந்த போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்ட குமுதன் காலப் போக்கில் அரசியல் அதிகாரத்தைப் பெற்ற பின்பும் அரசியல் கைதியாக இருக்கவேண்டிய அங்கத நிலையைக் காட்டும் கதைதான் ‘ராஜ கைதி’.

நண்பர்கள் இருவர் ‘இருபது வருடங்களுக்குப் பிறகு’ சந்திப்பதாகக் கூறிக்கொண்டு பிரிந்து சென்று மீண்டும் சந்திக்கும் பொழுது இருவரும் இருவேறு துருவங்களாக மாறிச் சந்திக்கும் அனுபவம் அதிர்ச்சி யடையக் கூடியதாக உள்ளது. ‘பந்தயம்’ என்ற பெயரில் இது தமிழில் திரைப்படமாக்கப்பட்டிருக் கிறது. பரபரப்பும், விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் மிகுந்த கதை.

எதார்த்த வாழ்க்கையில் தாயையும், குழந்தை யையும் பிரிக்கும் சாவின் விளைவுகளையும், அவற்றி லிருந்து விலகி ஆறுதல் பெற்று ஆனந்தமடையும் குழந்தைகளின் நம்பிக்கையாக நிலைபெறும் அனுபவத்தைச் சித்திரிக்கும் ‘சொர்க்கத்தின் கிறிஸ்துமஸ் மரம்’. ஓர் உன்னதமான ஆன்மிகத் தளத்தின் காட்சியைக் கண்முன் நிகழ்த்துகிறது.

பசியின் கொடுமையையும், வாழ்க்கையின் அவலத்தையும் மனித உறவுகளின் தன்மைகளையும் உணர்த்தும் கதைதான் ‘சாவுச் சாப்பாடு’.

சாவின் தன்மையை அறியாத நிலையில் குழந் தைகளின் கற்பனை மிகுந்த மனஓட்டத்தையும், செயலையும் சித்திரிக்கும் கதை தான் ‘எம்மா’.

காதல் உணர்வுவயப்பட்டுத் தவிக்கும் பெண்ணின் மன ஊசலாட்டத்தைக் காட்சிப்படுத்தும்’ தொலை பேசி அழைப்பு.

மனித மனங்களின் முரட்டுத்தனமான குணங் களை அடையாளம் காட்டி அவற்றின் அபத்தங் களை நகைச்சுவைக்கு உள்ளாக்கும் கதைதான் ‘தென்னை உச்சியில் இரண்டு நாட்கள்’.

பத்துச் சிறுகதைகளும், பத்து வகையான பாவங்களின் உணர்வோட்ட வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன.

சாராம்சத்தில், இதில் அடங்கியுள்ள கதைகள் எல்லாமே எதார்த்த வாழ்க்கையின் இயல்பான வெளிப்பாடுகளே. இயல்பான வாழ்க்கையில் இயங்கும் இயல்பான மனிதர்களின் துல்லிய உணர்ச்சிகளின் எழுத்து வடிவமே இந்தக் கதைகள்.

பொருளியல் சார்ந்த வாழ்க்கையின் கற்பனை யான மதிப்பீடுகளைத் தவிர்த்து உலகில் மனிதர் கள் தேடும் அமைதியை நோக்கி அவர்களை இட்டுச் செல்லும் நோக்கத்தை முதன்மைப்படுத்து வதாக ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த தேர்வு முறை என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தி ஓப்பீடுகளை உள்ளடக்கிப் புனையப்படும் தமிழ்ச் சிறுகதை களின் மரபுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வையாக இந்தக் கதைகள் உள்ளன. படைப்பாளர் களின் பார்வைக் கோணங்கள் மாறுபட்டவையாக இருந்தாலும் அவர்களின் ஒன்றுபட்ட நோக்கம் உண்மையை உணர்ந்து வாழத் துடிக்கும் விருப்பத்தை ஊக்குவிக்கின்றது.

ஒவ்வொருவரும் அனுபவங்களின் ஊடாகப் பயணம் செய்து தன்னைத் தானே உணர்ந்து கொள்ளுவதற்கான சாத்தியத்தை இதில் உள்ள கதைகள் நிகழ்த்துகின்றன. புதிய தளங்களில் பயணம் செய்து புதிய உணர்வுகளைப் பெறுவதற் குரிய அனுபவங்களைப் புலப்படுத்தக் கூடியதாக ஒவ்வொரு கதையும் உள்ளது. தமிழில் புதிய சாத்தியங்களை ஏற்படுத்துவதற்குரிய முன்னோட்ட மாக இந்தக் கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. உள்மனதில் மௌனங்களைத் தோற்றுவித்து இயங்கச் செய்கின்றன..

Pin It