singaravelarin ariviyal sinthanaigalம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள் என்றொரு நூல் தோழர் த ஸ்டாலின் குணசேகரன் எழுதி என்சிபிஎச் வெளியீடாக வெளிவந்துள்ளது. நூலின் தொடக்கத்தில் "சிங்காரவேலர்.... காந்தியடிகளைவிட ஒன்பது வயது மூத்தவர். தந்தை பெரியாரைவிட பத்தொன்பது வயது மூத்தவர்" பக்கம் -19 ; "கொஞ்சம் ஆழமாகப் பார்க்கிறபோதுதான் ஓ... காந்தியடிகளுக்கு ஒன்பது ஆண்டுகள் மூத்தவரா... பெரியாருக்கு பத்தொன்பது ஆண்டுகள் மூத்தவரா" என்ற வியப்பு ஏற்படுகிறது. வியப்போடு நின்று விடாமல் வரலாற்று வரிசை வெளிப்படுகிறது.

"இப்படிப்பட்ட துல்லியமான வரலாற்று உண்மைகள் சில சமயங்களில் ஒருவரைப் பற்றியான மதிப்பீடு மாறுவதற்குக்கூட வழிவகுக்கும்" பக்கம்-20.

உண்மையில் இதுவொரு முக்கியமான சுட்டிக்காட்டல். குறிப்பாக பொதுவுடமை - திராவிட இயக்கங்களின் வரலாற்று வரிசையையும்; சிங்காரவேலர் - பெரியார் ஆகியோரில் யார் யாருக்கு வழிகாட்டி என்பதையும் சுட்டுகிற முக்கியத்துவமுடைய வரிகள். அதைத்தான் "ஒருவரைப் பற்றியான மதிப்பீடு மாறுவதாக" நூலாசிரியர் உணர்த்தவும் செய்கிறார்.

சிங்காரவேலர் அக்காலத்திலேயே 20,000 நூல்களை சேகரித்திருந்தார் என்பதும் மதிப்புமிகுந்த அவைகளனைத்தும் இப்போதும் இரசியாவில் லெனின் நூலகத்தில் "சிங்காரவேலர் நூலக நூல்கள்" என்று தனிப்பிரிவாக இருக்கிறதென்பதும் எவ்வளவு இனிப்பானது.

இந்நூல், ஒரு உரையின் தொகுப்பு. உரைக்கு தலைப்பாக "ம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்" என்று கொடுத்திருக்கிறார்கள். நூலாசிரியரும் அறிவியல் என்றால், உயிரியல் - இயற்பியல் - வேதியல் - வானவியல் என்று கருதிக்கொண்டு சிங்காரவேலர் அதிலெல்லாம் ஆழ்ந்த அறிவோடு இருந்த விசயங்களை மாய்ந்து மாய்ந்து பேசியிருக்கிறார். ஏனோ மார்க்சியமும் விஞ்ஞானம்தான், அதனால் அதன்வழியிலான கம்யூனிஸ்ட் கட்சிகளும் செயல்பாடுகளும் விஞ்ஞான வழிபட்ட நடைமுறைகள்தான், அதனால்தான் சிங்காரவேலர் இவற்றிலெல்லாம் முன்னோடியாக இருந்தார் என்கிற விஞ்ஞான உண்மை தோழர் ஸ்டாலின் குணசேகரனுக்கு பிடிபடவேயில்லை போலும். அதனால் சிங்காரவேலரின் அறிவியல் வகையிலான சமூகச் செயல்பாடு குறித்து நூலில் மருந்துக்கும் இடமில்லை. நம்மவர்களுக்கு மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம் என்பதை நினைவுபடுத்தி யாராவது வகுப்பு எடுக்க வேண்டும். நிறைய தகவல்களைக் கொண்ட நூல்..

ம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்

த.ஸ்டாலின் குணசேரன்,

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,

விலை: ரூ.80

- சுப்ரபாரதிமணியன்

Pin It