2016 ஆம் ஆண்டு குறிப்பேட்டை முடித்து அட்டைப் பெட்டிக்குள் வைக்கும் முன்பாக ஒருமுறை மெதுவாகப் புரட்டினேன். இந்த ஆண்டில் படித்த சில நல்ல சிறுகதைகளின் பெயர்களையும் அவற்றைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் எழுதி வைத்திருந்த பகுதியில் ஒரு கணம் பார்வை படர்ந்தது. ஒவ்வொரு குறிப்பையட்டியும் மனத்துக்குள் விரிவடையும் கதையின் காட்சிகளை அசைபோடும் அனுபவம் மிகவும் பிடித்திருந்தது. ஓராண்டு கடந்த நிலையில் சில முக்கியமான அசைவுகளும் தருணங்களும் மட்டுமே நினைவில் பதிந்திருக்கின்றன. ஒரு கிளையைப் பற்றிக் கொண்டு இன்னொரு கிளைக்குத் தாவுவதைப்போல இந்த நினைவுகளின் துணையோடு கதைகளின் மையத்தைத் தொட விழையும் ஆசையே இப்பதிவு.

மக்காச்சோளக் கொண்டைகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு கடையிலிருந்து தொடங்குகிறது வண்ணதாசனின் Ôகருப்பும் வெள்ளையும்Õ சிறுகதை. ஆனந்தவல்லி சோளக்கொண்டைகளை எடுத்துக்கொண்டிருக்கிறாள். அவள் கணவன் பாப்புராஜ் அவளுக்கு அருகில் நிற்கிறான். இருவருக்கும் தெரிந்த நண்பன் சர்க்கரைப்பாண்டி தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு இவர்களைப் பார்த்துச் சிரித்தபடி நெருங்கி வருகிறான். இதுதான் தொடக்கக் காட்சி. சர்க்கரைப் பாண்டி தன் மகனுடன் கடைக்கு வந்திருக்கிறான். பேச்சு பல திசைகளில் அலைந்து செல்கிறது. உண்மையில் பாப்புராஜுக்கு அத்தருணத்தில் பாண்டியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி யெதுவும் இல்லை. உள்ளூர சற்று கோபமாகக் கூட வருகிறது. ஆனால் அத்தனை வெளிப்படையாக அதைக் காட்டிக்கொள்ள முடியவில்லை. மனைவியிடம் இவ்வளவு இயல்பாகவும் விருப்பத்தோடும் உரிமை யோடும் பேசும் அவன் மீது பொங்கும் சலிப்பை நெஞ்சுக் குள்ளேயே கட்டுப்படுத்திக்கொள்கிறான்.

சர்க்கரைப்பாண்டிக்கு நன்றாகப் படம் எடுக்கத் தெரியும். ஒருமுறை வீட்டுக்கே கேமிராவுடன் வந்து ஆனந்தவல்லியை நிறைய படங்கள் எடுத்திருக் கிறான். எடுத்த வேகத்தில் அந்தப் படத்தை பாப்புராஜுக்குக் காட்டிக்கொண்டே இருக்கவும் செய்கிறான். ஆனந்த வல்லி குனிந்து ஒரு பூவைப் பறிக்கும் தருணத்தை அபூர்வமானதாக நினைத்து ஒரு படமெடுக்கிறான். பாப்புராஜுக்கும் அத்தோற்றம் பிடித்திருந்ததால் கேமிராவுக்குள் எப்படி அது பதிந்திருக்கிறது என்று தெரிந்து கொள்கிற ஆவலில் வாங்கிப் பார்க்கிறார்.

நன்றாகவே வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார். படங்களைச் சட்டென்று புரட்டிக்கொண்டே செல்லும் கணத்தில் ஆனந்தவல்லியின் பின்முதுகும் பின்புறமும் தெரிகிற ஒரு படம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவர் முன்னாலேயே அதை அவன் அழித்துவிடுகிறான். “அவுங்க சட்டுனு திரும்பிட்டாங்க. அது அப்படியே விழுந்துட்டுது” என்று சொல்லி ஏதோ சமாளிக்கிறான். பிறகு இருவரையும் நிற்க வைத்து இணையராக பல படங்கள் எடுக்கிறான். ஒரு வாரக் கடைசியில் அப்படங்களின் தொகுப்பைக் கொண்டு வந்து கொடுக்கிறான். உங்களுக்கு என் அன்பளிப்பு என்று சொன்னபடி பாப்புராஜுவிடம் சட்டம் போட்ட படங்களைக் கொடுக்கிறான். அந்தப் படங்கள்தான் அவர்களுடைய படுக்கையறையில் இருக்கின்றன.

சந்தையிலிருந்து திரும்பி வந்ததும் குக்கரில் வைக்கப்பட்ட மக்காச்சோளம் வெந்துவிட்டதன் அடையாளமாக மணம் வருகிறது. ஆனந்தவல்லி குளிக்கச் சென்றுவிடுகிறாள். கூடத்தில் உட்கார்ந்திருக்கிற பாப்புராஜ் எல்லாவற்றையும் அசைபோட்ட படி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு திடீரென அப்படங்களைப் பார்க்கவேண்டும் என்று ஆவல் எழுகிறது. குக்கர் சத்தமிடுகிறது. Òஅதை அணைச்சிருங்க” என்று குளியலறையிலிருந்தபடியே ஆனந்தவல்லி அவரிடம் சொல்லும் குரல் கேட்கிறது. சர்க்கரைப்பாண்டி மீது பொங்கிய வருத்தமெல்லாம் சட்டென்று தணிந்துபோக “காலைச் சாப்பாட்டுக்கு அவர் வீட்டுக்குப் போகலாமா?” என்று ஆனந்தவல்லியிடம் கேட்கிறார். அந்த அழைப்பு அவளைத் தொட்டதா இல்லையா என்று தெரிய வில்லை. கதவுக்குப் பின்னால் தண்ணீர் சிதறும் சத்தம் மட்டுமே கேட்கிறது.

கதை முழுதும் ஆனந்தவல்லியின் கருப்புவெள்ளை புகைப்படத்தைப்பற்றிய கதைபோல ஒரு தோற்ற மிருந்தாலும் உள்ளூர இது ஒவ்வொருவர் மனத்திலும் உள்ள கருப்பையும் வெளுப்பையும் முன்வைக்கும் சிறுகதை என்றே தோன்றுகிறது. “இவன் எதுக்கு இந்த நேரத்துக்கு வந்தான்?” என்று ஒருகணம் பாப்புராஜுவின் மனம் கோபமுறுகிறது. இன்னொரு கணம் “அவுங்க வீட்டுக்கு சாப்புட போய் வரலாமா?” என்று அழைக்கவும் செய்கிறது. இருமுனைகளைத் தொட்டு ஊசலாடி நிற்கிறது மனம். இந்தக் கதை முழுக்க வீட்டுக்குள் மக்காச்சோளம் வேகிற வாசனை பரவத் தொடங்கும் கணத்தில் துண்டுதுண்டாக விரிகிறது. அது ஓர் அழகான குறியீடு. வேகத் தொடங்கிய சோளத்தின் மணத்தை யாராலும் தடுக்கமுடியாது. ஒருவரைப்பற்றிய விருப்பத்தையும் ஆசையையும் யாராலும் மறைத்து வைக்க முடியாது. நெஞ்சிலெழும் மணத்தை ஏற்றுக் கொள்வது என்பது ஒருவகையில் நாம் அன்புக்கும் காதலுக்கும் கொடுக்கக்கூடிய மரியாதை. இக்கதையில் இப்படி ஒரு வாசிப்புக்கு வழியிருக்கிறது.

கதைக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பின் கவித்துவம் முக்கியமானது. ஒளியும் இருளும் சரியான அளவில் அமைந்திருப்பதே ஒரு படத்துக்கு அழகு சேர்க்கிறது. அந்த விகித அளவு மிக முக்கியம். ஒளியோ இருளோ எது கூடினாலும் குறைந்தாலும் படத்தின் மதிப்பு ஒரு மாற்று குறைந்துதான் போகும். மானுட மனத்துக்கும் அவ்விகிதம் பொருந்துமோ என்று எண்ணவைத்துவிடுகிறது இந்தத் தலைப்பு. இவ்விகிதம் ஏறி இறங்கும் ஒரு முக்கியமான தருணத்தை வண்ண தாசன் இக்கதையில் கட்டியெழுப்புகிறார். அது ஆனந்த வல்லியின் வீட்டில் அவளையும் பாப்புராஜுவையும் நிற்கவைத்து சர்க்கரைப்பாண்டி படமெடுக்கும் தருணம். மூவரின் மனமும் பொங்குகிறது. கருப்பையும் வெளுப் பையும் மாறிமாறி வெளிப்படுத்தியபடி ஒரு கேமிராவின் படச்சுருள்போல வேகவேகமாக நகர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் நினைக்கப்படும் ஓர் அழகான கருப்புவெள்ளைப்படமாக வண்ணதாசனின் சிறுகதை அமைந்திருக்கிறது.

நெஞ்சிலெழும் மணத்தை வெளிப்பட்டுவிடாதபடி அடக்கிவைத்திருக்கும் ஒரு பெண்ணின் முயற்சியையும் தற்செயலாக அது பொங்கி வெடிக்கும் கணத்தையும் முன்வைத்திருக்கும் முக்கியமான சிறுகதை கண்மணி குணசேகரனின் வாடாமல்லி. இளம்பருவத்தில் காதலித்தவனின் மரணச்செய்தியைக் கேள்விப்பட்டு இருபதாண்டுகளுக்குப் பிறகு சாவுக்குப் புறப்பட்டுச் சென்று மாலை போட்டு அஞ்சலி செலுத்தச் செல்லும் பெண்ணின் கதை. இளமையில் அவளால் காதலிக்கப் பட்டவன் ஒரு குடிகாரன். புறம்போக்கு. போக்கிரித் தனங்களுக்குப் பேர்போனவன். எனினும் அவனைத் தன் அன்பால் திருத்தி வழிக்குக் கொண்டுவந்துவிடமுடியும் என எண்ணிக் காதலிக்கிறாள் அவள். ஆனால் அந்த முயற்சியை அவளுடைய பெற்றோர்களும் உறவினர் களும் ஆதரிக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு வெளியேறிச் சென்று வாழ்ந்துவிடலாம் என்ற கனவுகளோடு அவர்கள் போடும் திட்டம் பாதியில் முறியடிக்கப்படுகிறது. ஊர் எல்லையில் அவர்கள் பிடிபட்டுவிடுகிறார்கள். பிறகு பெற்றோர்களின் நெருக்கடிகளுக்குப் பணிந்து வேறொருவனை மணந்து கொண்டு இன்னொரு ஊருக்கு வாழச் சென்றுவிடுகிறாள் அவள்.

நல்ல கணவன் அவன். நல்ல புரிதலோடு அனுசரித்துப் போகும் குணம் உள்ளவன். வாழ்க்கை அவளுக்கு ஒரு பெண்குழந்தையைப் பரிசாக வழங்கு கிறது. இருபதாண்டுகளில் அவளும் வளர்ந்து பெரியவளாகி நிற்கிறாள். திடீரென ஒருநாள் பழைய காதலனுடைய மரணச்செய்தி அவளை வந்தடைகிறது. இருபதாண்டுகளாக அவனை முற்றிலும் ஒதுக்க முடியாமல் ஆழ்மனத்தில் தவித்தபடி இருந்த அவள் அந்த மரணச்செய்தியால் நிலைகுலைந்துவிடுகிறாள். சாவுச்சடங்கில் கலந்துகொள்வதற்காக அவள் கணவனே அவளைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவைக்கிறான். பெரியதொரு பூமாலையோடு அவன் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அவள் செல்கிறாள். அவள் அதைப் பூமாலையாகவே உணரவில்லை.

கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் அவன் உடல்மீது அந்த மாலையை வைக்கும்போது கிட்டத்தட்ட தன்னை ஒரு மணமகளாகவே நினைத்துக்கொள்கிறாள். பதற்றம் எதுவுமின்றி, அடிமேல் அடிவைத்து உடலருகில் செல்வதும் மாலை அணிவிப்பதும் கிட்டத்தட்ட ஒரு மணநிகழ்ச்சிபோலவே நிகழ்கிறது. வாடாமல்லியாக அவனுடைய நினைவுகள் அவளுடைய நெஞ்சில் மணம் வீசியபடியே இருக்கிறது. மரணம் அம்மலரின் மணத்தைப் பல மடங்குகளாகப் உருப்பெருக்கம் அடையவைத்துவிடுகிறது.

இன்னொரு நல்ல சிறுகதை லட்சுமி சரவணக் குமாரின் பர்மா ராணி. கதைக்கான களம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்ட படைப்பு. இரு இளைஞர்கள் இதில் இடம்பெறுகிறார்கள். அவர்களில் ஒருவன் லாகூரிலிருந்து சென்னைக்கு வந்து நடிப்புத்துறையில் இறங்கியவன். இன்னொருவன் அந்தக் கம்பெனி யிலேயே இருந்தவன். அந்தக் கம்பெனி முதலாளி எடுக்கவிருக்கும் தன் புதிய படத்தில் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்க நினைக்கிறார். கம்பெனி இளைஞனைத்தான் அவர் கதாநாயகன் பாத்திரத்துக்கு முதலில் தீர்மானிக்கிறார். பிறகு ஏதோ காரணத்தால் அவன் நிராகரிக்கப்பட்டு, லாகூர் இளைஞனுக்கு அவ்வாய்ப்பு சென்றுவிடுகிறது. மனம் முழுக்க வெறுப் பையும் ஆத்திரத்தையும் சுமந்திருக்கும் இளைஞன்

படம் முடியும் தருணத்தில் லாகூர் இளைஞனை துப்பாக்கியால் சுட முயற்சி செய்கிறான். எதிர்பாராத விதமாக அந்தக் குண்டு, அவன் அருகிலிருந்த நடிகைமீது பாய, அவள் இறந்துவிடுகிறாள். கண நேரத்தில் வாழ்க்கை திசைமாறிவிடுகிறது. கனவுகள் கலைந்து போகின்றன. லாகூர் இளைஞன் எங்கெங்கோ அலைந்து திரிந்து தில்லிக்குச் சென்று சேர்கிறான். ஏதோ தொழில் செய்து பிழைக்கத் தொடங்கிவிடுகிறான்.

காலம் கடந்துபோகிறது. ஒரு காலத்தில் துப்பாக்கியால் சுட்ட இளைஞனின் பேரன் திரைத் துறையில் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்று கிறான். தன் தாத்தா பணியாற்றிய படத்தைத் தேடும் முயற்சியில் அவ்வப்போது ஈடுபடுகிறான். ஒருநாள் அவனுக்கு வெற்றி கிடைக்கிறது. பர்மா ராணி என்னும் அந்தப் பழைய படத்தைக் கண்டுபிடிக்கிறான். எங்கோ கண்மறைவாக இருக்கும் லாகூர் தாத்தாவையும் ஒரு

நாள் கண்டுபிடித்து சென்னைக்கு அழைத்து வருகிறான். அந்தத் திரைப்படம் அவர்களுக்காகத் திரையிடப் படுகிறது. காட்சிகள் நகர்கின்றன. அந்தப் பெரியவர் அதுவரை தான் காணாத படத்தைப் பார்க்கத் தொடங்குகிறார். அப்போது அவரிடம் அந்த இளம் இயக்குநர் தன்னைப் பற்றிய விவரத்தை முதன்முதலாக வெளிப்படுத்துகிறான். தன்னைக் கொல்ல முயன்ற நண்பனின் பேரனை அவர் கண்ணிமைக்காமல் பார்க்கிறார். மன்னிப்பதும் மறப்பதும் அவர் எடுக்கப் போகும் முடிவில் இருக்கும் கணத்தில் கதை நிறை வடைகிறது. வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் இரு வாய்ப்புகளை நம் முன்னால் வைத்தபடி இருக்கிறது. எது நம்முடைய தேர்வு என்பதைப் பொறுத்து நம் வாழ்க்கையின் திசை தீர்மானிக்கப்படுகிறது.

முத்துலிங்கத்தின் முக்கியமான சிறுகதை வெள்ளிக் கிழமை இரவுகள். ஒரு புத்தம்புதிய தகவலே அவருடைய கதைகளுக்கு முதல் அடித்தளம். பிறகு அந்த அடித் தளத்துக்குப் பொருத்தமான மேல்தளமாக கதைக்களத் தையும் கதைமாந்தர்களையும் அவர் கண்டடைகிறார். கலைநயமும் அழகும் பொருந்திய காட்சிகளை அப் பாத்திரங்களை முன்வைத்து அமைக்கிறார். அழகான தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் கச்சிதமாக கதையைப் பொருந்தும் விதத்தில் சொல்லி முடித்து விடுகிறார். தொழில்நுட்பமும் கலையமைதியும் சரியான விகிதத்தில் அமைபவை அவருடைய சிறுகதைகள்.

இச்சிறுகதையில் ஒரு பள்ளிக்கூடத்தைக் காட்டு கிறார் முத்துலிங்கம். அது ஒரு விசேஷமான பள்ளிக் கூடம். அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மூன்று விதமானவர்கள். அம்மா இல்லாமல் அப்பாவால் வளர்க்கப்படும் பிள்ளைகள். அப்பா இல்லாமல் அம்மாவால் வளர்க்கப்படும் பிள்ளைகள். இரண்டு அம்மாக்கள் அல்லது இரண்டு அப்பாக்கள் உள்ள பிள்ளைகள். மனப்பிரச்சினை இல்லாத பிள்ளைகளே இல்லை. இப்படி ஒரு தகவல். இந்தத் தகவலையட்டி அமைக்கப்பட்டிருக்கிறது முத்துலிங்கத்தின் சிறுகதை.

அம்மா மட்டும் உள்ள ஒரு சிறுமி அந்தப் பள்ளியில் படிக்கிறாள். அவளுக்கு தன் தந்தை யார் என்று தெரியவில்லை. வீட்டில் அம்மா அதைப்பற்றிய பேச்சையே எடுப்பதில்லை. பதில் தெரியாத அந்தக் கேள்வி அச்சிறுமியின் மனத்தைக் குடைந்தபடியே இருக்கிறது. அலுவலகத்துக்குச் செல்வது, தாமதமாக வீட்டுக்கு வருவது என வார நாட்கள் எப்படியோ கடந்து செல்கின்றன. ஆனால் வெள்ளிக்கிழமை இரவுகளை அவளால் தவிர்க்கமுடிவதில்லை. கேள்வியால் குடைந்து கொண்டே இருக்கும் மகளை அமைதிப்படுத்தும் வழி தெரியாமல் தவிக்கிறாள் தாய். இது கதையின் ஒரு பகுதி.

போர், போரையட்டிய இனத்தாக்குதல், இனப் போரில் மாற்று இனப் பெண்களோடு ராணுவ வீரர்கள் வல்லுறவு கொள்தல், இருளடைந்துவிடும் அப்பெண் களின் எதிர்காலம் என்பவை உலகில் போர் நடக்கும் பகுதிகளிலெல்லாம் நிகழும் கொடுமை. அதை இன்னொரு கோணத்தில் காட்டுகிறார் முத்துலிங்கம். இலங்கையில் நிகழ்ந்த இனப்போரில் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சித்தரிக்கிறார் அவர். அவள் மற்ற பெண்களைப்போல உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. ஒடுங்கி ஒளிந்துகொள்ளவும் முயற்சி செய்யவில்லை. மாறாக, எப்படியோ வெளிநாட்டுக்குத் தப்பியோடி, அகதியாக உரிமை பெற்று உயிர் வாழ்கிறாள். வல்லுறவின் காரணமாக கருவுற்ற குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கிறாள். பாசத்தோடு வளர்க்கும் அந்தக் குழந்தைதான் தந்தையைப்பற்றி கேள்வி கேட்டுக் குடைந்தெடுக்கும் சிறுமி. இவ் விவரங் களை முன்வைக்கிறது கதையின் இரண்டாவது பகுதி.

சிறுமியின் ஆழ்ந்த மனப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு முடிவெடுக்கிறாள் அந்தத் தாய். ஒரு விடுமுறை காலத்தில் தன் நாட்டிலிருந்து விமானம் பிடித்து கொழும்புக்கு வந்து இறங்குகிறாள். தன் தோழி வழியாக ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப் படையில், விமான நிலையத்திலிருந்து ஒரு சிங்கள கிராமத்துக்குச் செல்கிறாள். அது தன்னுடன் வல்லுறவு கொண்ட படைவீரன் வசிக்கும் கிராமம். அவனுடைய வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள். அழைப்பு மணியை அடித்துவிட்டு வெளியே வருபவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். அந்தப் படைவீரனின் மனைவியும் மகளும் வெளியே வருகிறார்கள்.

அந்தச் சிறுமி தோற்றத்தில் தன்னைப்போலவே இருக்கும் சிறுமியை வாசலில் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போகிறாள். வாசலில் காத்திருக்கும் சிறுமியும் அவள் தோற்றத்தைக் கண்டு திகைத்துவிடுகிறாள். படை வீரனின் மனைவி திகைப்போடும் குழப்பத்தோடும் அவர்களைப் பார்த்து விசாரிக்கிறாள். தன்னைப்பற்றிய தகவல்களை சுருக்கமாக அவளிடம் முன்வைத்துவிட்டு தன் மகளுடன் வெளியேற முற்படுகிறாள் அவள். சிறுமிகளின் முக ஒற்றுமை குற்றவாளியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வெளியேறும் தருணத்தில் அந்தப் படைவீரன் சைக்கிளில் வீட்டுக்கு வந்து நிற்கிறான். அவளைப் பார்த்த கணத்திலேயே திகைத்து சிலையென உறைந்து நின்றுவிடுகிறான். அவன் உருவத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி தன் மகளிடம் சொல்கிறாள் அவள். பிறகு ஒருகணமும் அங்கே காத்திருக்காமல், வெளியே காத்திருக்கும் வாகனத்தில் ஏறி இருவரும் விமான நிலையத்துக்குப் புறப்பட்டுவிடுகிறார்கள். செல்லும் வழியில் தன் மகளிடம் அவள் “அந்த முகத்தை நன்றாக நினைவில் வை. அவன்தான் உன் அப்பா” என்று சொல்கிறாள் அவள். இது கதையின் மூன்றாவது பகுதி.

வெள்ளிக்கிழமை இரவுகளில் கேள்வி கேட்டு தொல்லை கொடுக்கும் சிறுமி இனிமேல் அமைதியாக உறங்கக்கூடும். அந்தத் தாயும் மனக்கொதிப்பின்றி அமைதியுடன் இருக்கப் பழகிக்கொள்ளக்கூடும். அதுவரைக்கும் அவள் குடும்பம் சுமந்த அமைதி யின்மையின் பாரம் படைவீரனின் குடும்பத்தின் மீது ஒரே கணத்தில் இடம் மாறிவிடுகிறது. அது கதைக்குள் சொல்லப்படவில்லை என்றாலும் உணர்ந்துகொள்ள முடிகிறது.

என்.ஸ்ரீராம் எழுதிய வடுகநாதம் சிறுகதை இந்த ஆண்டில் படிக்கக் கிடைத்த நல்லதொரு சிறுகதை. ஆட்டுப்பட்டி வைத்திருப்பவர்களுக்கு நல்ல காவல் காரர்கள் அவசியம். நல்ல காவல் அமையாமல் படும் சிரமங்களையும் மனிதர்களை நம்ப முடியாத அவஸ்தை களையும் அழகாகச் சொல்கிறார் ஸ்ரீராம். இத்தகு சிரமங்களோடு உழலும் ஒருவர் ஒருநாள் சந்தைக்குப் போன இடத்தில் கோவில் வாசலில் ஒரு நாயைப் பார்க்கிறார். இதுதான் தனக்கு இனிமேல் காவல்நாய் என அவர் மனத்தில் ஏதோ தோன்றிவிடுகிறது. அன்று மாலை சந்தையிலிருந்து திரும்பும்போது அந்த நாயைத் தூக்கிவந்து வளர்க்கத் தொடங்கிவிடுகிறார். அந்த நாய் அவர்களோடு அழகாக ஒட்டிக்கொண்டுவிடுகிறது. ஒரு குழந்தையைப்போல அவர்கள் வீட்டில் வளர்கிறது அந்த நாய். அவர்களுடைய பட்டிக்கு அந்த நாயே காவல். அதை மீறி யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. ஒருநாள் அது இறந்துபோகிறது. அந்த மரணத்தை யாராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த நாயுடன் மிகவும் நெருக்கம் கொண்ட அந்த வீட்டுப் பையன் அந்த நாயின் கதையைச் சொல்வதுபோல அமைந்திருக்கிறது கதை.

அவர்கள் வசிக்கும் தெருவிலேயே இன்னொரு வீட்டிலும் நாய் வளர்க்கிறார்கள். அந்த வேட்டை நாய்க்கு திடீரென பைத்தியம் பிடித்துவிடுகிறது. தெருவில் யாரைப் பார்த்தாலும் துரத்திச் சென்று கடிக்கத் தொடங்குகிறது அந்த வேட்டை நாய். யாராலும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருநாள் அந்தப் பையன் வீட்டுக்குத் திரும்பி வரும் தருணத்தில் அந்த நாய் அவனைத் துரத்தத் தொடங்குகிறது. அவன் உயிருக்குப் பயந்து தப்பியோடி வருகிறான். தற்செயலாக அவன் நாயால் துரத்தப்படுவதைப் பார்த்துவிடும் அவனுடைய நாய் உடனே பாய்ந்து சென்று வேட்டை நாயுடன் போராடுகிறது. ஆவேசமான அந்தப் போராட்டத்தில் வேட்டை நாயின் கழுத்தைக் கடித்துக் குதறிவிடுகிறது அது. வேட்டை நாய் இறந்து போகிறது. பையனும் ஆபத்தில் இருந்து தப்பித்து விடுகிறான். துரதிருஷ்டவசமாக வேட்டை நாயின்

நஞ்சு உடலில் பரவி அதன் நடத்தையில் மாற்றம் தோன்றுகிறது. தனக்குள் நிகழும் மாற்றத்தை உணர்ந்துகொள்ளும் அந்த நாய், தனக்கு வெறி பிடித்திருக்கிறது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளா மலேயே நின்றநிலையிலேயே சில நாட்கள் உயிருடன் இருந்து பிறகு இறந்துபோகிறது. ஒரு மனிதனுக்கு நிகராகவே ஒரு நாய் தன்னை எடுத்து வளர்த்த குடும்பத்துக்காக உழைத்து உயிரை விடும் சம்பவம் நெஞ்சைத் தொடுகிறது. படிப்பவர்கள் மனம் கலங்கும் விதத்தில் அதைச் சித்தரித்திருக்கிறார் என்.ஸ்ரீராம்.

தூயன் என்னும் இளம் எழுத்தாளர் எழுதிய மஞ்சள்நிற மீன் இந்த ஆண்டின் முக்கியமான சிறுகதை என்றே சொல்லவேண்டும். தன்னோடு தொடக்கப் பள்ளியில் படித்த ஒரு நண்பனுடைய நினைவுகளால் நிறைந்திருக்கிறது இச்சிறுகதை. தொடக்கப்பள்ளியின் ஒரு வகுப்பறைச் சித்திரத்தை மிகுந்த நம்பகத் தன்மையோடு கட்டியெழுப்பியிருக்கிறார் தூயன். செவந்தியான், விசுவநாதன் இருவரும் பால்யகால நண்பர்கள். கதையின் முதல் பகுதியில் மஞ்சள்நிற மீன்கள் பற்றிய விவரிப்பை ஒரு கனவுபோல விவரிக் கிறான் செவந்தியான். அவன் வழியாக அதைக் கேட்டுக் கேட்டு, அதைத் தன் கனவாக மாற்றிக்கொள்கிறான் விசுவநாதன். கதையைப் படித்து முடிக்கும் கணத்தில் ஒவ்வொரு வாசகனும் அதைத் தன் கனவாக உணரும் வகையில் வலிமையாகப் படைக்கப்பட்டிருக்கிறது இச்சிறுகதை.

விசித்திரமான சிறுவன் செவந்தியான். அவன் உடல்மீது எப்போதும் மீன்மணம் கமழ்ந்தபடி இருக்கிறது. பள்ளிப் பிள்ளைகள் அனைவரும் அவனை நேசிக்கிறார்கள். அவன் சொல்லும் கதைகளை ஆர்வத் தோடு கேட்கிறார்கள். அதே சமயத்தில் அவனைத்தான் அதிகபட்சமாக கேலி செய்து விளையாடுகிறார்கள். அவன் மற்றவர்களுக்குச் சூட்டும் பட்டப்பெயர்களை உள்ளூர விரும்புகிறார்கள். ஆனால் வெளிப்படையாக திட்டுகிறார்கள். அவன் ஒழுங்காக பள்ளிக்கு வருவ தில்லை. பதினோரு மணிக்கு மேல் பள்ளிக்கு வந்து மதிய உணவை உண்டு முடித்துவிட்டு வெளியேறி விடுவான். படிப்பு அவனுக்கு வரவில்லை. ஆனால் கற்பனை செய்துகொள்வதிலும் அதைச் சித்தரிப்பதிலும் வல்லவன்.

ஒருநாள் பள்ளியில் எல்லோரோடும் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஒரு மோதல் உருவாகிறது. வாய்ச்சொல்லில் தொடங்கிய ஒன்று சண்டையில் முடிகிறது. அதன் விளைவாக விசுவநாதனும் செபாஸ்டினும் குற்றவாளிகளாக ஆசிரியர் முன்னால் நிற்கவைக்கப்படுகிறார்கள்.

மறுநாள் செவந்தியானை அழைத்து வர அவனுடைய வீட்டுக்குச் செல்லும் விசுவநாதன், சென்ற நோக்கத்தை மறந்து அவனுடன் சேர்ந்து கடற்கரையில் விளையாடி பொழுதைக் கழிக்கிறான். மதியத்துக்குப் பிறகுதான் பள்ளியின் நினைவு வருகிறது. அன்று இரவு தன் சித்தப்பாவுடன் மீன் பிடிக்க கடலுக்குப் போகப் போவதாகவும் தனக்குப் பிரியமான மஞ்சள் மீனைப் பார்க்கச் செல்வதாகவும் சொல்லிவிட்டு புத்தகப்

பையை கீழே வீசியெறிந்துவிட்டு ஓடிவிடுகிறான். செய்வதறியாமல் திகைத்து நிற்கும் விசுவநாதன் தனியாக பள்ளிக்குத் திரும்புகிறான். தனியாக வரும் அவனை மறுநாள் தன் தந்தையோடு வந்து சந்திக்கும்படி சொல்லிவிடுகிறார் ஆசிரியர். அச்சத்தின் காரணமாக அன்று அவன் கடுமையான காய்ச்சலில் படுத்த படுக்கையாகிவிடுகிறான். பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இரு வாரங்களுக்குப் பிறகுதான் அவன் உடல்நிலை தேறுகிறது. நீண்ட விடுப்புக்குப் பிறகு அவன் பள்ளிக்குத் திரும்புகிறான். தான் வராத நாட்கள் முழுதும் செவந்தியானும் பள்ளிக்கு வரவில்லை என்னும் விஷயம் தெரிய வந்தபோது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதற்குப் பிறகும் அவன் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் அவன் சொன்ன கதைகளை மீண்டும் மீண்டும் பேசுவதன் வழியாக, ஏதோ ஒரு வகையில் அவன் இருப்பை உணர்ந்தபடி இருக்கிறார்கள். வலிமையும் நம்பகத்தன்மையும் மிக்க பால்யகாலச் சித்தரிப்புகளாலேயே இச்சிறுகதை முக்கியத்துவம் பெறுகிறது.

எம்.கோபாலகிருஷ்ணனின் ஊதாநிற விரல்கள் ஒரு முக்கியமான சிறுகதை. பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்று கிராமத்தில் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட கதை. வீடு கட்டுவதற்கான திட்ட ஒப்புதலுக்காக உரிய விண்ணப்பங்களையும் ஆவணங்களையும் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, ஒப்புதலுக்காக நடையாக நடக்கிறார் ஒரு நெசவாளி. உழைப்பைத் தவிர வெளியுலகமே தெரியாத அந்த அப்பாவியை நடையாய் நடக்க விடுகிறது அந்த அலுவலகம். ஏமாற்றத்தில் சலிப்படைந்துவிடுகிறார் அவர். அந்தச் சலிப்பை மறந்து சம்பந்தப்பட்ட அலுவலரை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்று உறுதியோடு ஒருநாள் அந்த அலுவலகத்துக்குச் சென்று, அவர் வருகைக்காக அலுவலக வாசலில் மரத்தடியில் நிற்கிறார் அவர்.

அதே நாளில் அந்த அலுவலரைகையும் களவுமாகப் பிடிக்கவேண்டும் என உத்தேசித்து முன்னேற்பாடுகளுடன் லஞ்சத்துறை அதிகாரிகள் காத்திருக்கிறார்கள் என்னும் செய்தி அவருக்குத் தெரியவில்லை. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு சட்டென தன் கண் முன்னால் தோன்றிய அந்த அலுவலரின் முகத்தைப் பார்த்து நிம்மதியடைகிறார் அவர். வேட்டைவலையிலிருந்து தப்பிப்பதற்காக ஓடி வந்த அந்த அலுவலர் யாரும் எதிர்பாராத கணத்தில் அந்தப் பெரியவரை நெருங்கி தன் கையிலிருந்த பணத்தை அவருடைய சட்டைப்பையில் செருகிவிட்டு ஓட்டமாக ஓடி மறைந்துவிடுகிறார். அலுவலரைப் பிடிப்பதற்காக ஓடிவந்த லஞ்சத்துறை அலுவலர்கள் அவரைப் பிடித்து வண்டியில் ஏற்றிக்கொள்கிறார்கள். எல்லாமே ஒரு கணத்தில் நிகழ்ந்துமுடிந்துவிடுகிறது. இது கதையின் ஒரு பகுதி. கடுமை நிறைந்த விசாரணை அறைச் சம்பவங்கள் அனைத்தும் இரண்டாவது பகுதியில் நிறைந்திருக்கின்றன.

அவருக்குப் பேசவே வாய்ப்பளிக்காமல் அவர்மீது குற்றத்தைத் திணிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் அவர்கள். மறுநாள் அவருடைய மகன் வழக்கறிஞருடன் வந்து அவரை விடுவித்துச் செல்கிறான். வழக்கு நீதி மன்றத்தில் நடைபெறுகிறது. அது ஒரு பெரிய இம்சை யான காலம். அவர் சுதந்திரமாகப் பேச அனுமதி இல்லை. வழக்கறிஞர் சொல்லிக்கொடுப்பதுப்போலச் சொல்லுமாறு மகன் கட்டாயப்படுத்துகிறான். பெரிய வரைக் காப்பாற்றும் போர்வையில் குற்றவாளியையும் சேர்த்துக் காப்பாற்ற முயற்சி செய்கிறார் வழக்கறிஞர். பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இறுதியில் வழக்கறிஞருக்கு வெற்றி கிடைக்கிறது. தன் கசப்பை பெரியவரால் எங்கும் வெளிப்படுத்த இயலவில்லை. பதற்றமின்றி நூலையும் தறியையும் கையாண்ட அவருடைய மென்மை பறிபோய்விடுகிறது.

வழக்கு முடிவடைந்த பிறகு ஒருநாள் பெரியவரின் வீட்டுக்கு அந்த அலுவலர் வழக்கறிஞரோடு வருகிறார். முன்பொரு கட்டத்தில் அலுவலக வாசலில் அவருடைய சட்டைப்பையில் நோட்டுகளைத் திணித்திவிட்டு ஓடிய அதே அலுவலர். தன்னால் அந்தக் குடும்பத்துக்கு அதிக அளவில் நஷ்டமும் கஷ்டமும் நேர்ந்துவிட்டதென்று சொல்லி, அதை ஈடுகட்டும் விதமாக ஒரு நோட்டுக் கட்டை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லி அதை எடுத்துவைக்கிறார். குடும்பத்தினரும் வழக்கறிஞரும் அந்த அலுவலரும் அதை அவர் எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் தருணத்தில் அவர் அதை நிராகரிக்கிறார்.

 நோட்டுகளை ரசாயனத்தண்ணீரில் மூழ்கவைத்து நிறம் மாறும் தன்மையால் குற்றவாளியைக் கண்டறியும் நுட்பத்தைப் போல, மனத்தின் நிறம் மாறும் தன்மையைக் கண்டறியும் நுட்பமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். எல்லோருமே ஒருவகையில் ஊதா நிறமாக மாறக்கூடிய மனம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நம்மிடையே நிலவும் லௌகிகப் பார்வை, அவர்கள் அனைவரையும் நல்லவர்களாகவும் பெரியவரை மட்டுமே தகுதியற்றவராகவும் எடைபோடும் துர திருஷ்டமே மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் நிகழ்கிறது. வாழ்க்கை ஒரு அபத்த நாடகமாகவே முடிவடைந்துவிடுகிறது. அந்த நாடகத்தை எம்.கோபால கிருஷ்ணன் தன் கதையில் சிறப்பான முறையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

வண்ணதாசனுடைய சிறுகதை வாசிப்போடு தொடங்கிய இந்த ஆண்டு அதே வண்ணதாசனின் சிறுகதை வாசிப்போடு முற்றுப்பெற்றிருப்பது ஒருவித தற்செயல் என்றே சொல்லவேண்டும். இந்தக் கதையின் பெயர் சூரிய நமஸ்காரம். “எங்களயெல்லாம் நடுத் தெருவுல விட்டுட்டு அவ பொறத்தால ஓடத்தான் போறீரு” என்று கணவனைப் பார்த்துப் புலம்பிப்புலம்பி அதையே உண்மையென நம்பி ஒருவித மனச்சிக்கலுக்கு ஆளாகிவிடும் ஆவுடை பாத்திரம்தான் கதையின் மையம். அமைதிக்கு மாத்திரை போடும் அளவுக்குச் சென்றுவிடுகிறது. அவர்களுடைய மகள் தெய்வு. அவள் வழங்கும் அன்பும் கனிவும் எல்லாத் துயரங்களையும் மறக்கவைக்கிறது. ஆவுடை சிவனைத் தாங்கும் குறியீடு. இக்கதையில் சிவனே ஆவுடையைத் தாங்குகிறான். அவனுக்கு அருகில் புயலும் அமைதியுமாக மனைவியும் மகளும் இருக்கிறார்கள்.

ஒருநாள் தன் வண்டிக்காகக் காத்திருக்கும் தருணத்தில் ரயிலிலிருந்து இறங்கி வரும் ஒரு பெண் ணோடு அவன் உரையாட நேர்கிறது. ஆவுடையால் அடிக்கடி அவனுடன் சம்பந்தப்படுத்திப் பேசப்படுகிற பெண். பார்த்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் எதிர் பாராத அந்தச் சந்திப்பை உடனடியாக முடித்துக்கொள்ள அவனால் முடியவில்லை. ஏதேதோ பேச்சுகளால் அந்த உரையாடல் நீண்டுகொண்டே செல்கிறது. மிகவும் நெருக்கமாக நின்று அவர்கள் உரையாடிபடி நின்றிருக்கும் கோலத்தை அந்தத் தருணத்தில் அங்கே வந்துவிடும் தெய்வு நேருக்கு நேர் பார்த்துவிடுகிறாள். ஒரே கணத்தில் பார்த்தும் பாராததுபோல ஒதுங்கி நடந்து சென்றுவிடுகிறாள். குற்ற உணர்வோடு வீட்டுக்குத் திரும்பும் அவனால் ஆவுடையை நிமிர்ந்து பார்க்கக்கூட கூச்சமாக இருக்கிறது. தெய்விடம் எப்படி உரை யாடலைத் தொடங்குவது என்றே தெரியவில்லை. ஆனால் அவள் அமைதியாக இருக்கிறாள். மிகவும் இயல்பாகவே காணப்படுகிறாள்.

“காப்பி கலக்கட்டுமா?” என்று கரிசனையோடு கேட்டுவிட்டு சமையலறைக்குள் சென்றுவிடுகிறாள். அந்த அமைதி அவனுக்கு ஒரு வகையில் ஆறுதலாக இருக்கிறது. அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. அதுவரை அவள் உட்கார்ந்துவிட்டு எழுந்து சென்ற நாற்காலியை வணங்குகிறான். நாற்காலி மீது வெளிச்சத்தைப் பொழியும் சூரியனை வணங்குகிறான். அது நேரிடையான சூரிய நமஸ்காரம் இல்லை. பெண்ணுக்கு அப்பா நமஸ்காரம் செய்வது மரபில் இல்லை. வணங்க நினைக்கிற ஒரு அப்பா இப்படித்தான் அவளுக்குப் பின்னால் வானத்தில் சுடர்விட்டபடி இருக்கும் சூரியனை வணங்கும் சாக்கில் அவள் அமர்ந்து சென்ற நாற்காலியை, அவள் நின்றுவிட்டுப் போன மரத்தடியை, அவள் சாய்ந்திருந்த கம்பத்தை வணங்க வேண்டும்.

Pin It