தமிழ் மொழி, புழக்கத்தில் இருந்துவரும் இன்றைய நிலப்பகுதி மற்றும் இதில் வாழும் மனிதர்கள் தொடர் பான விவரணங்கள் முழுமையாக அறியக் கூடியதாக இல்லை. குறிப்பாக, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி இன்றுவரை மேற்குறித்த தன்மைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அதனால் உருவான விளைவுகள் ஆகியவை குறித்து அறிந்து கொள்ளும் தரவுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, முறையாக நமக்குக் கிடைக்க வில்லை. பகுதி பகுதியாகவே பேசப்பட்டு இருப்பதைக் காண்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் தொல்லியல் தரவுகள், செவ்விலக்கியங்கள், கல்வெட்டுகள், சுவடிகள் மற்றும் வழக்காறுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்குறித்தவை தொடர்பான விரிவான பதிவுகளைச் செய்ய வேண்டிய அவசியமுண்டு.

thanjayan 285கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம், கி.பி.5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம், கி.பி.12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம், கி.பி.19 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம், பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு எனத் தரவுகள் சார்ந்து கால நிகழ்வுகளை ஊகிக்க முடிகிறது. மேற் குறித்த ஆறு பிரிவுகள் சார்ந்து, தமிழ்மொழி, தமிழ் மொழி பேசும் மனிதர்கள், இவற்றின் முந்தைய வரலாறுகள் ஆகியவை குறித்து உரையாடல் நிகழ்த்த ஏதுண்டு. இந்தப் பின்புலத்தில் `வண்ணார் மக்கள்’ குறித்த இந்த நூல் மேற்குறித்த வரலாறுகளை அறிவதில் ஏதோவொரு வகையில் உதவுவதாக அமைகிறது. தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆர்வமுடையவர்களின் கவனத்திற்குரியதாக இந்நூலைக் கூறலாம். இந்நூலில் காணப்படும் தரவுகள் சார்ந்து, தமிழ்ச் சமூக வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பல்வேறு பரிமாணங் களைப் புரிந்துகொள்ள இயலும். இந்நூல் செய்திகள் சார்ந்து உரையாடுவதற்கு வசதியாகக் கீழ்க்காணும் வகையில் தொகுக்கலாம்.

- வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி, `ஊர்கள்’ என்பவை, ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? ஊரிருக்கை (Settelment)) என்பதில் ஏற்படும் மாற்றங்களுக்கும் அரசு உருவாக்கத்திற்கும் (State formation) உள்ள உறவுகள், முரண்கள் என்பவை எவ்விதம் உருப் பெறுகின்றன? நிலம் எவ்விதம் வரையறை செய்யப்பட்டு, தனித்த பெயர்களை உள்வாங்கு கின்றன? ஆகிய பிற குறித்த உரையாடல்.

- குடித்தொழிலாக வடிவம் பெற்ற மக்கள் வாழ் முறை, எவ்விதம் படிப்படியாகக் குலத் தொழி லாகக் கட்டமைக்கப்பட்டது? தொழில், சாதியாக வடிவம் பெறுவதால் மநுநூல் வழிப்பட்ட வர்ணாசிரமம் எவ்வகையான பங்களிப்பைச் செய்துள்ளது? அரசு (State) மேற்குறித்த தன்மை உருவாக எவ்வெவ் வழிகளில் உதவியது? நிலம்- அரசு - சாதி ஆகியவை தம்முள் கொண்டிருக்கும் உறவுகளின் பரிணாம வளர்ச்சிகள் எவை? ஆகிய பிற குறித்த விவரணங்கள் சார்ந்து விவாதிக்க முயலுதல்.

-              பழம் தொல்லியல் தரவுகள் பழம் இலக்கியங்கள், கல்வெட்டுகள், கதைப்பாடல்கள், புனைகதைகள் ஆகிய ஊடகங்களில், மேற்குறித்த கூறுகள் எவ் வகையில் பதிவு செய்யப்படுகின்றன? அப்பதிவு களின் பின்னணியில் அமைந்துள்ள நோக்கங்களை நாம் எவ்விதம் புரிந்துகொள்வது என்பதும் அவசியமாக அமைகிறது.

-              இன்றைய தமிழக ஊர் அமைப்புகளில் வட்டாரம் சார்ந்து வேறுபட்ட தன்மைகள் உள்ளன. இத் தன்மைகள் எவ்விதம் உருப்பெற்றன? குடித் தொழில், குலத் தொழில் ஆகியவற்றை வட்டார மரபுகளை அடிப்படையாகக் கொண்டு அணுகுவதா? தமிழ்மொழி பேசும் பகுதி என்று ஒட்டுமொத்த அலகாகக் கொண்டு பார்ப்பது சரியாக இருக்க முடியுமா? உள்முரண்பாடுகள் எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன? என்பது குறித்தும் பேசுதல்.

- இந்நூல் பல்துறை சார்ந்த தரவுகளை ஒரு குறிப்பிட்ட பொருண்மைக்கு எவ்வகையில் பயன்படுத்துகிறது? இவ்வகையான பயிற்சியின் தேவைகள்? இத்தன்மையற்ற ஆய்வுகளின் போதாமை ஆகியவை குறித்த உரையாடல்.

-              தமிழ்ச் சமூக வரலாறு எழுதியலில் இந்நூலுக் கான இடம், தமிழ்ச் சமூக வரலாறு எழுத முனைவோருக்கான தரவாக இதனை எப்படிக் கருதலாம்? இன்ன பிற குறித்த உரையாடல்.

தமிழ் பேசும் நிலப்பகுதிகளில் வாழும் வண்ணார் மக்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் வாழும் ஊரமைப்பு, அவர்களது வாழ்முறையில் எவ்விதமான தாக்கம் செலுத்துகிறது என்பதை அறிய வேண்டி யுள்ளது. காலனிய ஆட்சியாளர்கள் காலத்துக்குப் பிற்பட்ட ஊரமைப்பு, காலனிய கால ஊரமைப்பு, பிற்காலச் சோழர்காலத்திற்குப் பிற்பட்ட ஊரமைப்பு, பிற்காலச் சோழர்கால ஊரமைப்பு ஆகியவற்றை நாம் ஊகிக்க முடிகிறது. அதற்கான தரவுகள் நம்முன் உள்ளன. அதற்கு முந்தைய ஊரமைப்பு குறித்த தரவு களை ஊகித்தறிய வேண்டும். நேரடியான தரவுகள் நம்முன் இல்லை.

பிற்காலச் சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த ஊரமைப்பின் தொடர்ச்சி, அடிப்படையான மாற்றங்கள் இன்றி, சில மேல்கட்ட மாற்றங்களைப் பெற்று இன்றும் தொடர்கின்றன என்று கருதமுடியும். பிற்காலச் சோழர் கால ஊரமைப்புகளை அறிந்துகொள்ள பழைய மேலத்தஞ்சாவூர் மாவட்ட ஊர்களின் அமைப்பு உதவும். நான் பிறந்து வளர்ந்த ஊரமைப்பு இவ்வகையில் அடங்கும். பதினெட்டு ஊர்களைக் கொண்ட ஒரு நாடு என்னும் அமைப்பு இன்றும் நடைமுறையில் உள்ளது. திருமண உறவுமுறைகள் இந்தப் பதினெட்டு ஊர்களில் மட்டுமே ஒரு காலத்தில் நிகழ்ந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில் அதில் சிறிதளவு மாற்றங்கள் உருவாகி யுள்ளன. ஒவ்வொரு ஊரும் கரைகள் என்ற பாகு பாட்டைக் கொண்டவை. ஒவ்வொரு கரைக்கும் ஓர் அம்பலம் உண்டு. வழக்கமாக ஏழு கரைகள், ஏழு அம்பலங்கள் உண்டு. இவ்வகையான அமைப்பில் உள்ள ஊர்களில் குடித்தொழில் செய்யும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உண்டு. பறையர் இன மக்கள் இருப்பர். அவர்கள் அந்த ஊரிலுள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் குடித்தொழில் புரிவர். அவர்களைக் குறிப்பிட்ட வீட்டினரின் குடியாள் என்று அழைப்பர். குறிப்பிட்ட நபரின் நிலங்களில் உழைப்பது அவர்களின் முதன்மையான தொழில். அவர்களின் வாழ்நிலைக்கு வேண்டிய ஏதுக்களை அவர் குடித்தொழில் செய்யும் நில உடைமையாளர் கொடுப்பார்.

பறையர் இன மக்களைப் போன்றே தச்சர், கொல்லர், மருத்துவர், வண்ணார் ஆகிய குடித்தொழில் செய்யும் மக்களும் அவ்வூரில் இருப்பர். இவர்களின் எண்ணிக்கை பறையர் இன மக்கள் அளவிற்கு இருக்காது. ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் மட்டும் இருக்கும். இவர்கள் ஆதிக்க சாதிகள் வாழும் பகுதி யிலேயே குடியிருப்பர். ஆனால் பறையர் இன மக்களுக்கு ஊரிலிருந்து தள்ளிய சேரிகள் என்ற தனிப்பகுதியுண்டு. ஆதிக்க சாதியினர்-குடித்தொழில் செய்வோர்-பறையர் இனமக்கள் என்றே சாதியப் படிநிலை அமைப்பு இருக்கும். பறையர் இன மக்களுக்குக் குடித் தொழில் செய்வோர் அவர்கள் வாழும் சேரிக்குள் இருப்பர். ஆதிக்க சாதி களுக்கான குடித்தொழில் செய்வோர் பறையரின மக்களுக்குச் செய்ய மாட்டார்கள். இவ்விதம் பிற்காலச் சோழர் காலம் தொடங்கி அடிப்படைத் தேவைகளைச் செய்யும் மக்கள் குடித்தொழில் செய்வோராகக் கட்டமைக்கப்பட்டு, ஊரின் அன்றாட வாழ்முறைகளில் பங்கு பெற்று வருகின்றனர். இதில் வண்ணார் மக்கள், துணிகளை வெளுத்துத் தருவதை முதன்மைப் பணியாகச் செய்து வந்தனர். மேலும், அவ்வூர் மக்களின் பல்வேறு வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும் இடம் பெறுவர். பறையர் இன மக்களிடம் காட்டப்படும் தீண்டாமை இவர்களிடம் காட்டப்படுவதில்லை.

சோழ மண்டலப்பகுதி சார்ந்த ஊர்களில் அமைந் திருக்கும் இத்தன்மை, தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் நடைமுறையில் இருப்பதாகக் கூறமுடியாது. சில பகுதிகளில் இம்மக்கள் கூட்டமாக ஓரிடத்தில் வாழ் வதைக் காணமுடிகிறது. ஒரு ஊரின் குடியாக இருப்ப தில்லை. இவ்விதம் ஊர்கள், இக்குடிமக்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டதற்கும் அரச உருவாக்கத் திற்கும் தொடர்பு இருப்பதாகக் கருதலாம். நிலங்கள் அரசுக்கு உரிமை, அதில் உழைப்பவர்கள் ஒரு பிரிவினர்; அவ்விதம் உழைப்பவர்களுக்கு ஊழியம் (குடித்தொழில்) செய்வோர் இன்னொரு பிரிவினர் என்றும் நிலவுடைமைப் பண்பாடு வலுவாகக் கட்டமைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இதற்குள் சாதிய நியாயங்கள் அங்கீகரிக்கப்பட்டதைக் காணமுடியும். பிற்காலச் சோழர்கள் போன்ற மன்னர்களே இவ்வகை யிலான அமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும். இது வர்ணாசிரம முறையாகவும் அங்கீகரிக்கப்பட்டது. நிலம் - அரசு - வர்ணாசிரமம் - சாதி என்ற கட்டமைப்பு குடித்தொழில் மரபில் இருந்ததைக் காண்கிறோம். இப்புரிதலுக்கு வண்ணார்கள் குறித்த தரவுகள் உதவுகின்றன.

***

முன்னர் குறித்த குடித்தொழில், குலத்தொழில் அல்லது சாதிக்கான தொழில் என்ற அடையாளத்தை நமது செவ்விலக்கியப் பதிவுகளில் காணமுடிகிறதா? என்ற உரையாடல் சுவையானது. கூட்டமாக வாழ்ந்த மக்கள் கூட்டம் குடிகள் என்று அழைக்கப்பட்டிருப் பதை செவ்விலக்கியங்கள் காட்டுகின்றன. அந்தணர், அரசர், இடையர், உமணர், உழவர், எயிற்றியர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், துடியர், பரதவர், பறையர், பாணர், புலையர், மழவர், வேட்டுவர், வண்ணார், வணிகர் எனப் பல்வேறு மக்கள் குறித்த தரவுகளை செவ்விலக்கியப் பிரதிகள் வழி அறிகிறோம். இதில் பிற்காலங்களில் காணப்படும் சாதிய அடை யாளங்களை இலக்கியப் பிரதிகள் வழி கட்டமைக்க முடியுமா? என்ற உரையாடல் தேவைப்படுகிறது. அரசர் குடியும், வண்ணார் குடியும் `குடி’ என்ற அடை யாளத்தில் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒவ்வொரு மனிதக் குழுவும் வாழும் இடம், செய்யும் தொழில் மற்றும் கண்டறிய இயலாத இடுகுறித் தன்மை ஆகிய வற்றை உள்வாங்கிப் பெயர்களாக அடையாளப் படுத்தப்படுகின்றன. செவ்விலக்கியப் பிரதியின் குடிகளும் இவ்வகையில் அமைவதாகவே உள்ளன. அகராதிகளும் இக்கண்ணோட்டத்தில் பொருள் கூறுவதாக அமைகின்றன. தொல்காப்பியத்தில் காணப் படும் பயில்வும் இவ்வகையில் இருப்பதை இந்நூல் வழி அறிய முடிகிறது. சோழர் குடி, சேரர் குடி, சேரமான் குடி, பாண்டியர் குடி ஆகிய சொல்லாட்சிகளையும் செவ்விலக்கியப் பிரதிகளில் காண்கிறோம்.

இவ்விதம் சாதிய அடையாளமற்ற குடி எப்போது சாதிய அடையாளம் பெற்ற குடி அல்லது குலமாக வடிவம் பெற்றது? இத்தன்மையை நமது இலக்கியப் பிரதிகளில் காணப்படும் பதிவுகள், கல்வெட்டுப் பதிவுகள், வழக்காறுகள் ஆகியவை வழி விவாதிக்க வேண்டும். இந்நூலில் அதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டிருப்பதைக் காண்கிறோம். குடித்தொழில் எப்போது குலத் தொழில் ஆனது? குடித் தொழிலுக்குக் கொடுக்கப் பட்ட சமூக மதிப்பீடுகள் எவை? குலத்தொழிலுக்குக் கொடுக்கப்பட்ட சமூக மதிப்பீடுகள் எவை? ஆகியவை குறித்த உரையாடலுக்கு, இந்நூல் வழி பேசப்படும் வண்ணார் குறித்த தரவுகள் உதவ ஏதுண்டு. பிற்காலச் சோழர் காலத்தில்தான் குடி என்பது குலமாகியது. அது கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி, படிப்படியாக வளர்ந்து 12 ஆம் நூற்றாண்டில் நிலைபேறு கொண் டிருக்க வேண்டும். இந்த மாற்றத்தை அரச உருவாக்கத் தின் பல்வேறு பரிமாணங்கள் வழி கண்டடைய முடியும்.

வர்ணாசிரமம் அல்லது மநு நூலுக்கும் அரச உருவாக்கத்திற்கும் உள்ள உறவு இதற்கு அடிப்படையாக அமைகிறது. சமசுகிருத பிரதிகளில் பேசப்படும் செய்திகள், தமிழ் பேசும் நிலப்பகுதி சார்ந்த அரசர் களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம், அதன் மூலம், சமயச் சார்பற்ற தமிழ்ப் பிரதிகள் முற்று முழுதான சமயப் பிரதிகள் ஆகுதல் ஆகியவை உருவாயின. இந்த வளர்ச்சி யுடன் குடியும் குலமாகியிருக்க வேண்டும். இவ்வகை யான உரையாடல்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது. இக்கண்ணோட்டத்தில், மேலும் மேலும் சிந்திக்க வேண்டும். இடங்கை, வலங்கைப் பிரிவுகள், நில உறவுகள், அரச உருவாக்கம் ஆகியவை இணைந்து உருவான நிலவுடைமைச் சமூக அமைப்பைப் புரிந்து கொள்வதன் மூலம், குடி என்பது குலமாகியதைப் புரிந்து கொள்ள இயலும்.

***

இந்நூலில் பல்வேறு ஊடகத் தரவுகளை அடிப் படையாகக் கொண்டு, வண்ணார் மக்கள் குறித்த உரையாடல் நிகழ்த்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இவ்வகையான பதிவுகள், அவை இடம் பெற்றிருக்கும் வடிவம் மற்றும் காலம் சார்ந்து, தனித்த தன்மைகளை உள்வாங்கியிருப்பது இயல்பு. தொல்லியல் தரவுகள், பயன்படுத்தப்பட்ட பின்புலம் சார்ந்தே புரிந்து கொள்ள முடியும். இவ்வாய்வில் அவ்வகையான தேவை ஏற்பட வில்லை. ஆனால் செவ்விலக்கியப் பிரதிகளிலிருந்து, பின்னர் உருவான சமயப் பிரதிகள் எவ்வகையில் வேறுபட்ட பொருளை, ஒரு குறிப்பிட்ட சொல்லுக்குக் கொடுக்கின்றன என்ற புரிதல் அவசியம். சொல்லைக் காலந்தோறும் ஒரே பொருளைக் குறிப்பதாகக் கொள்ள முடியாது. செவ்விலக்கியப் பிரதிகளில் உள்ள குடி, சாதி என்னும் பொருளை உள்வாங்கியிருக்காது, ஆனால் பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் உள்ள குடி, சாதி என்றும் பொருளை உள்வாங்கியிருக்கும். காலந்தோறும் சொற்பொருள் மாற்றத்திற்கும் சமூக வரலாற்றுக்குமான உறவு குறித்தும் நாம் உரையாடல் நிகழ்த்த வேண்டும். இவ்விதம் நிகழ்த்தும்போது அரச உருவாக்கம் சாதிய உருவாக்கத்தைக் கட்டமைப்பதும், அவை அக்காலத்தின் சொற்பொருளாக வடிவம் பெறுவதை அறிய முடியும். வண்ணார் தொடர்பான பல்வேறு காலச் சொல்லாட்சி களை இக்கண்ணோட்டத்தில் அணுகுவது அவசியம். இந்நூல் அதற்கான அடிப்படைகளை முன்வைத்திருப் பதைக் காணமுடிகிறது. துல்லியமான தரவுகளை நிரல் படுத்தி, அதன் வழி கட்டமைக்கப்படும் பொருண்மை களைக் கொண்டு சமூக வரலாறு குறித்துப் புரிந்து கொள்ள மேற்குறித்த அணுகுமுறை உதவலாம். குடிகள் பற்றிய ஆய்வில் இத்தன்மைக்கான கூறுகள் கூடுதலாகவே உள்ளன என்று கூறமுடியும். இந்நூலில் பல்வேறு இடங்களில் காணப்படும் சொற்பொருள் மாற்றங்களைக் கொண்டு கூட்டி, காலம் - சொல் - பொருண்மை மற்றும் - சமூக வரலாறு கட்டமைப்பு என்ற அணுகுமுறையைக் கண்டடையலாம். இவ்வகையான உரையாடல்களுக்கு இந்நூலில் பல்வேறு அரிய தரவுகள் காணக் கிடைப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குடித்தொழில் மரபுகளைக் கொண்டு வாழும் மக்கள், இன்றைய தமிழ்ச் சூழலில், ஒவ்வொரு வட்டாரத்திலும் வாழும் முறை வேறுபட்டதாக இருக்கிறது. குறிப்பாக ஊரமைப்பு முறை வேறு பட்டதாக உள்ளது. திருநெல்வேலி, தாமிரபரணி கரைப் பகுதியில் கூட்டமாக வண்ணார் குடும்பங்கள் உள்ள ஊரிருக்கை முறை சோழ மண்டலப் பகுதிகளில் இல்லை. குறிப்பிட்ட ஊரின் குடியாக இருப்பது, குறிப்பிட்ட ஊராகவே இருப்பது என்னும் இருவேறு கூறுகள், தமிழ்நாட்டில் வாழும் குடித்தொழில் சார்ந்த மக்களின் வாழ்முறையாக உள்ளது. குறிப்பிட்ட ஓர் ஊராகவே அம்மக்கள் வாழும்போது அவர்களுக்குள் செயல்படும் அதிகார உறவுகள், குறிப்பிட்ட ஊரில் குடியாக இருக்கும்போது செயல்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இந்நூலில் குறிப்பிட்ட பகுதிகளில் குடித் தொழில் செய்யும் மக்கள் முழு ஊராக இருப்பது குறித்த பதிவு உள்ளது. ஒவ்வொரு சாதிக்குள்ளும் குறிப்பாக பறையர் இன மக்களுக்கு ஊழியம் செய்யும் வேறுபட்ட வண்ணார் குடி இருப்பது தொடர்பான பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒடுக்கப்பட்டவருள்ளும் ஒடுக்கப்பட்டவராக, ஒரு பிரிவு வண்ணார் மக்கள் வாழும் அவலம் உள்ளது. இவ்வகையில், ஊரில் உள்ள குடிகளாக இருப்பது, முழு ஊரும் அவர்களே குடிகளாக இருப்பது, சாதிய படிநிலை சார்ந்து வெவ்வேறு சாதிகளுக்கு ஊழியம் செய்யும் குடிகளாக இருப்பது எனப் பல்வேறு படிநிலைகளை வண்ணார் என்னும் குடித்தொழில் மக்களுக்குள் காணமுடிகிறது.

சாதியத்தின் உள்முரண்பாடுகளுக்கும் குடிகளின் உள்முரண்பாடுகளுக்கும் உள்ள இத்தன்மைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும். சாதிக்குள் சாதி என்னும் அவலம் எவ்வகையில் உருவானது? மநு பேசும் வர்ணம் குறித்த வேறுபாடுகள் இத்தன்மைகளைக் கொண்டு உள்ளதா? அப்படி எனில் வர்ணாசிரம முறைகளிலிருந்து வேறுபட்ட சாதியம் எப்படி உருவானது? நால்வருணம் என்பது சாதிக்குள் சாதி என்னும் பாகுபாட்டில் எப்படிப் புரிந்து கொள்வது? ஆகிய பல்வேறு உரையாடல்கள் நிகழ்த்த இந்நூலில் பேசப்படும் வண்ணார் குடித் தொழில் செய்யும் மக்களின் பல்வேறு பிரிவுகள் இடமளிக்கின்றன. குறிப்பிட்ட வண்ணார் மக்களுக்குள் செயல்படும் சாதி சார்ந்த குடிகள் (புரத வண்ணார்) வேறு எந்தெந்த குடித்தொழில் மரபில் செயல்படுகிறது? என்ற உரையாடலையும் நிகழ்த்த வேண்டும். சூத்திரர் என்னும் பிரிவுக்குள் செயல்படும் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் எவ்விதம் உருவாயின? இதற்கும் குடித் தொழிலுக்கும் என்ன உறவு? ஆகிய பல விவாதங் களுக்கு இந்நூல் வழி காணப்படும் தரவுகள் உதவு கின்றன? களஆய்வுவழி செயல்படும்போது இவ் வகையான உள் முரண்பாடுகள் நடைமுறையில் இருப்பதைக் காண்கிறோம். சமூக வாழ்வின் மிகக் கேவலமான இத்தன்மை எப்படி உருவானது? என்பது போன்ற பல உரையாடல்கள் வண்ணார் மக்கள் குறித்த இந்நூல் பதிவுகள் மூலம் முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

***

தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தொடர்பான ஆய்வுகளில் `குடித்தொழில்’ பற்றிய ஆய்வு மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்று கூறமுடியும். சமூகத்தின் நுண்ணிய அலகுகளைப் புரிந்துகொள்ள குடித்தொழில் சார்ந்த தரவுகளே உதவுகின்றன. குடி - ஊர் - மண்டலம் - நாடு - அரச உருவாக்கம் என்னும் படிநிலைகளைக் காணமுடிகிறது. அடிப்படை அலகாக உள்ள குடியைப் புரிந்துகொள்வது மிகச் சிக்கலானது. இதற்கு இந்நூல் மேற்கொண்டுள்ள அணுகுமுறை வேறு பட்ட நிலையில் இருப்பதைக் காணலாம். பண்டைய தொல்லியல் தரவுகள், பழந்தமிழ் இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, கதைப் பாடல்கள், பாடல்கள், கதைகள், நடைமுறை வழக்காறுகள், சுவடிகள், நாட்குறிப்பேடுகள், அச்சு வழியான நவீனப்பதிவுகள் ஆகிய அனைத்தையும் தமது ஆய்வுப் பொருளுக்கான மூலத்தரவுகளாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இவ்வகையான அணுகுமுறையின் மூலம்தான் குறிப் பிட்ட பொருண்மையின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர முடியும். இந்தத் தன்மையை இந்நூலில் காணமுடிகிறது.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பயிற்சிபெறும் மாணவர்கள் மேற்குறித்த அனைத்துத் துறை தொடர்பான களஆய்வுப் பயிற்சியும், படிப்பு நிலையில் பட்டயங்களாகவும் (Diploma) பெறுகின்றனர். இவ்வகையான பயிற்சியின் அணுகு முறைகளை நடைமுறைப்படுத்த வாய்ப்பு பெற்றவன் என்ற வகையில் இந்நூலில் எம்மாணவர் தனஞ்செயன் செயல்பட்டுள்ள நிலை ஆசிரியனுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்திருப்பதைப் பதிவு செய்வது எனது கடமை. இப்படியான செயல்பாடுகளில் எம்துறை மாணவர் பலர் உள்ளனர், அதில் தனஞ்செயனும் ஒருவர் என்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. பயிற்சி-ஆய்வு-தன்னுணர்வு- சமூகம் சார்ந்த செயல்பாடு என்ற படிநிலைகளில் எம் மாணவர்களின் செயல்பாடுகளுக்கு இந்நூல் ஏதோவொரு வகையில் தரவாக அமைவதைப் பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். மேலும் மேலும் இவ்வகையில் தனஞ்செயன் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்நூல் தமிழ்ச் சமூக வரலாறு எழுதுவோருக்கு ஏதோவொரு வகையில் உதவும் அரிய தரவு நூல். அது மட்டுமின்றி, தமிழ்ச் சமூக வரலாறு எழுதியல் நெறி குறித்தும் அறிய உதவும் நூலாக அமைகிறது.

குறிப்பு :

‘தமிழகத்தில் புரத வண்ணார்கள் - தமிழரின் குடித்தொழில் மரபு பற்றிய ஆய்வு’ என்ற நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரை.

Pin It