பள்ளிக்கூட நாட்களில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிறியதொரு குன்றையட்டி நீண்டிருக்கும் ஒரு சாலை. தற்செயலாக குன்றின் உச்சியி லிருந்து உருண்டு வந்த பாறையன்று சாலையின் குறுக்கில் விழுந்து நின்றுவிடுகிறது. மாட்டுவண்டிகள் போகத்தக்கதாக அதுவரை இருந்த அந்தப் பாதை எந்த வண்டியும் போகமுடியாத அளவுக்கு சிறுத்துப் போய் விடுகிறது. வண்டிக்காரர்கள் வேறொரு சுற்றுவழியைத் தேடி, அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த ஊரில் வாழ்ந்த முதியவர் ஒருவர் கைவிடப்பட்ட பாதையைப் பார்த்து மனம் வருந்துகிறார். ஒரு நாள் காலையில் சம்மட்டியை எடுத்துச் சென்று அந்தப் பாறையை உடைக்கத் தொடங்குகிறார்.

kaylanji 263ஒரு நாள் முழுக்க தொடர்ச்சியாக உடைத்தபோதும், அவரால் கையகலத்துக்கு ஒரே ஒரு துண்டுப் பாறையை மட்டுமே உடைக்கமுடிகிறது. அதுவே அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. அந்த ஊர்க்காரர்கள் எல்லோரும் அவரைப் பைத்தியக்காரன் என்று அழைக்கிறார்கள். வேலையற்றவன் என்று வசை பாடுகிறார்கள். ஆனால் எந்த விமர்சனத்தையும் காதில் போட்டுக்கொள்ளாமல், துண்டுதுண்டாக உடைக்கும் வேலையை மட்டுமே அவர் தினமும் செய்துவருகிறார். ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கியபடி பாறை தினமும் தன்னையே உற்றுப் பார்ப்பதாக எண்ணிக்கொள்கிறார். “எந்தக் காலத்தில் நீ இதை உடைத்து முடிக்கப் போகிறாய்?” என்று அவரைப் பார்த்து மீண்டும்மீண்டும் கேலி செய்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

“இக்கணத்தில் இந்த அளவுக்கு என்னால் உடைக்க முடிந்ததே மகிழ்ச்சி யாக இருக்கிறது” என்று விடையிறுத்தபடி பாறையை உடைக்கும் வேலையைத் தொடர்கிறார் முதியவர். முயற்சிக்கு அடையாளமாக அந்தக் காலத்தில் அக் கதையை ஆசிரியர்கள் சுட்டிக் காட்டினார்கள். இன்று, அக்கதையை நினைத்துக்கொள்ளும் இக்கணத்தில், வெற்றிதோல்வியைப் பற்றிய யோசனைகளைப் புறம் தள்ளிவைத்துவிட்டு செயல் ஒன்றையே தன் அடையாள மாக, செயல் ஒன்றே தன் மகிழ்ச்சியாக, செயல் ஒன்றே தன் வாழ்வை நிறைக்கும் வேலையாக உணர்த்தும் வகையில் இடைவிடாமல் பாறையை உடைக்கும் மனப் போக்கு முக்கியமாகப் படுகிறது. ஒவ்வொரு கணத் தையும் தன் செயல்மூலம் வாழ்ந்து இன்பத்தில் திளைக்கிற அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இக்கணம் மிகமுக்கியமான கணம் என உணர் கையில் வாழ்வு பேருருவமும் பேரின்பமும் கொண்ட தாக தோற்றமளிக்கிறது. வலியற்றவனாக உணர வைப்பதும் பேராற்றல் கொண்டவனாக உணர வைப்பதும் ஆனந்தத்தில் மிதப்பவனாக மாற்றுவதும் அத்தகு கணங்கள். கணங்கள் எல்லாவற்றையும் பெருக் கெடுத்தோட வைக்கும் மூல ஊற்றாக இருக்கின்றன. எல்லாவற்றையும் இயக்கும் மூல விசையாக இருக் கின்றன. கணங்களோடு ஒன்றிணைந்துபோகும் தருணங் களில் காற்றோடும் ஒளியோடும் கல்லோடும் மண் ணோடும் இணைந்துவிடுவதுபோல ஒரு தோற்றநிலை பரவி மனத்தை நிறைக்கிறது. மனத்தை நிறைக்கும் கணங்களையெல்லாம் தொகுத்தெடுத்த அனுபவமாக இருக்கிறது கல்யாண்ஜியின் புதிய தொகுதியாக வெளி வந்திருக்கும் ‘நொடி நேர அரைவட்டம்’. தொகுக்கத் தொகுக்க தீராதவையாக நீள்கின்றன கோடிக்கணக்கான கணங்கள்.

‘இன்னும் ஒருமுறை
ஏறத் தொடங்கிவிட்டது
எறும்பு
ஒன்றுமே சொல்லவில்லை
மரம்’

இப்படி ஒரு கணத்தின் சித்திரம் தொகுப்பில் உள்ளது. முதிர்ந்த தாத்தாவின் மார்பில் தத்தித்தத்தி ஏறத் துடிக்கும் குழந்தையின் சித்திரத்துக்கு இணையானதாக உள்ளது இச்சித்திரம். மரம் எவ்வளவு உயரம் என்பது எறும்புக்குத் தெரிந்துமிருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். மரத்தில் ஏறி அதன் உச்சியைத் தொடுவது எறும்புக்குச் சாத்தியமான பயணமாகவும் இருக்கலாம். சாத்தியமற்ற பயணமாகவும் அமைந்துபோகலாம். இங்கே அதுவல்ல முக்கியம். ஊர்வதை மட்டுமே அறிந்த எறும்பு, ஊர்ந்துசெல்லும் இன்பத்துக்காகவே மரத்தின்மீது ஊர்ந்து செல்கிறது. தாயின் முலைக்காம்பை மட்டுமே அறிந்த உதடுகளைக் குவித்து பாலருந்தும் குழந்தைபோல. வாழ்வதன் நோக்கம் வாழ்ந்து எதையோ அடைவதற்காக அல்ல. மாறாக, வாழ்ந்து பெறும் இன்பத்துக்காகவே என்றும் எறும்பின் பயணத்தை விரிவாக்கிக்கொள்ளவும் வழியிருக்கிறது.

‘ஒரு மின்னல் கீற்றுச்
சிறு துள்ளல்
நீரிலிருந்து உருவி
வெற்று வெளியில்
அரைவட்டமிட்டு
நீருள் செருகியது
ஒற்றை மீன்
என்றோ பார்த்த மகாநதி
இன்றுவரை பாய்வது
அந்த நொடிநேர
அரைவட்டத்தின்
கீழேதான்.’

அற்புதமான இன்னொரு கணத்தின் சித்திரமாக விரிந்திருக்கிறது கவிதை. ஒரு மீனுக்குரிய சித்திரம். நதியின் ஆழத்திலிருந்து மேல்பரப்புவரை நீந்திநீந்திக் களிக்கிற மீன் ஏதோ உற்சாகத்தின் வேகத்தில் சட்டென நீரிலிருந்து துள்ளியெழுந்து வட்டமிட்ட பிறகு, நீருக் குள்ளேயே பாய்ந்து சென்றுவிடுகிறது. ஆயிரமாயிரம் விழிகளால் சூரியன் பார்த்திருக்க, வானம் பார்த்திருக்க, மேகம் பார்த்திருக்க, கரையோர மரங்கள் பார்த்திருக்க, கரிய பாறைகள் பார்த்திருக்க அந்த மீனின் அரைவட்டப் பாய்ச்சல் நிகழ்கிறது. சூரியனுக்குக் கீழே, வானத்துக்குக் கீழே, மேகத்துக்குக் கீழே, ஆயிரமாயிரம் பறவைகளுக்குக் கீழே வெள்ளிநிறக் கொடியென பரந்து விரிந்து பாய்ந் தோடிய நதி, ஒரே ஒரு கணம் மீனின் வட்டத்துக்குக் கீழே ஓடும் நதியாகவும் உருமாறிப் பாய்கிறது. மீன் பறக்க முடியாத பறவை. பறக்கத் துடிக்கும் அதன் விழைவே அதன் அரைவட்டப் பாய்ச்சல். துரும்பு பறவையாகும் கணம், உதிரும் இலை பறவையாகும் கணம்போல மீன் பறவையாகி அரைவட்டமிடும் கணம். வானத்தைப்போல, சூரியனைப்போல பாய்ந் தோடும் நதிப்பெருக்கை ஒரே ஒரு கணம் மேலேயிருந்து பார்க்கிறது. அற்புதமான தரிசனம் என்பதன்றி வேறெந்தச் சொல்லால் அதை அழைக்கமுடியும். மீனுக்குள் இருக்கும் விசைக்குக் கிட்டிய வெகுமதி அந்தத் தரிசனம். மீனுக்குக் கிட்டிய தரிசனம், மானுடனுக் கண்களுக்கும் காணக் கிடைப்பதும் ஒரு தரிசனமே. காணக் கிடைக்காத கண்களுக்கு கல்யாண்ஜியின் கவிதையே மாபெரும் தரிசனம்.

‘சிலர் கண்ணால், சிலர் மனதால்!’ கவிதையும் கிட்டத்தட்ட ஒரு தரிசனத்துக்கு நிகரான கவிதை. பயணம் போயிருந்த இடத்தில் பழுதான வண்டியை பழுது பார்க்க நிறுத்திவிட்டு, நிழலிருக்கும் இடமாகப் பார்த்து ஒதுங்கி உட்கார்கிறார்கள் நண்பர்கள். அடுப் பாகப் பயன்பட்ட கற்கள், காலி மதுக்குப்பி, கசங்கிய தாள் குவளைகள், காரப்பொட்டல மிச்சங்கள் என சிதறிக் கிடக்கும் எதைஎதையோ பார்த்துவிட்டு, ‘எல்லா இடத்தயும் கெடுத்துருவானுங்க’ என்று சொல்கிறார் ஒருவர். மண்டபத்தின் பக்கமாக பார்வையைத் திருப்பிய இன்னொருவர் ‘யாரோ சந்தோஷமா இருந்துட்டு போயிருக்காங்க’ என்று சொல்கிறார் இன்னொருவர். இன்னொருவர் சந்தோஷத்தையும் தன்னுடைய சந்தோஷத்தைப் போல அவரால் சொல்ல முடிகிறது. ஒரு கணத்தில் ஒருவர் கண்ணால் பார்த்துச் சொன்ன தையும் இன்னொருவர் மனதால் பார்த்துச் சொன்ன தையும் நம்மால் கற்பனையின் துணையோடு பார்க்க முடியும். ஒரே காட்சியை இருவர் இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளும் விசித்திரத்தை புரியாத புதிர் என்றே சொல்லவேண்டும். ‘பூனையும் நானும் அம்மாவும்’ கவிதையிலும் கல்யாண்ஜி இப்படி மாறுபடும் இருவேறு பார்வைகளைத் தொகுத்து முன்வைத்திருக்கிறார். கருசுமந்து உப்பிய வயிற்றோடு திரிந்தலைந்துவிட்டு புங்கைமரத்தடியில் படுத்துறங்கும் தாய்ப்பூனையைப் பார்த்து ஒரு அம்மா ‘ஐயோ பாவம்’ என்று பரிதாபத்தை வெளிப்படுத்துகிறாள். இன்னொரு அம்மா “ஒரு தரம் குடிச்சி ருசி கண்டுட்டா, இங்கயே சுத்திசுத்தி வரும்” என்று விரட்டியனுப்புகிறாள். இருவித மனிதர்களுக்கும் உரியது இந்த உலகம்.

‘புனரபி மரணம் புனரபி ஜனனம்’ என்னும் வாக்கியம் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் வரும் உயிர்களைப் பற்றிய ஒரு குறிப்பை வழங்குகிறது.

நமக்குப் பிடித்தவர்கள் மரணத்துக்குப் பிறகும் வேறு வேறு உயிர்களாக நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை. பூவாகவும் பூச்சியாகவும் நம்மைச் சுற்றி வாழும் உயிர்கள் அனைத்தும் நம் நெருக்கத்தையும் உறவையும் விழையும் உள்ளங்களே. அந்த உண்மை அனுபவமாகும் கணம் ‘செடியில் ஒரு பூ’ என்னும் கவிதையில் அழகாகப் பதிவாகியிருக்கிறது.

‘நேற்று இந்தத் தொட்டிச் செடிக்கு
தண்ணீர் வார்க்கும்போது வந்தது
அந்த மரணத்தகவல்,
காடேகி சிதையேற்றி
கரைத்தாயிற்று சாம்பல்
கருப்பந்துறையில்
கதவு திறந்து நுழைந்தால்
ரப்பர் குழாயின்மேல் ஒரு வளையல் பூச்சி
செடியில் ஒரு சிறு பூ
எந்தத் தகவலும் இன்றி
அல்லது
ஏதோ ஒரு தகவல் தந்தபடி’

‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்று வள்ளுவரின் எச்சரிக்கை யாராலும் புறக்கணிக்க முடியாத ஒன்று. ‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல்’ ஆகிய நான்கு குணங்களிலிருந்தும் அறவழி நடக்க விரும்புவர்கள் விலகி நிற்கவேண்டும் என்பதுவும் அவர் வகுத்த விதி. விளையாட்டாகக்கூட பகை யுணர்வை ஒருவன் வளர்த்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்துகிறார். அடக்கமின்மை, ஆணவம், பொறாமை, பேராசை என ஒவ்வொரு குணத்தைப் பற்றியும் வள்ளுவர் எச்சரித்தபடியே இருக்கிறார். மனிதனைத் திசைதிருப்புகிற அல்லது அழிக்கிற குணங்கள் என பட்டியலிடத் தொடங்கினால் அது மிகப்பெரிய பட்டியலாக நீளும். அவை அனைத்தையும் ஒரே ஒரு பெயரால் அழைக்கமுடியும் என்றால் அதற்கு நாம் என்ன பெயர் சூட்டலாம்? அழிவின் மையம் என்று சொல்லலாமா? தீமையின் கரு என்று குறிப்பிடலாமா? அதை கத்தி என்று அடையாளப்படுத்துகிறது கல்யாண்ஜியின் கவிதை. தூக்கி வீசவேண்டிய அந்தக் கத்தியை எல்லோரும் உறுதியாகப் பிடித்திருப்பதை அக்கவிதை கவலையோடு பார்க்கிறது. ஒரே ஒரு புள்ளிகூட கூர்மை இழந்துவிடக்கூடாதபடி, கணந் தோறும் சாணை பிடித்தபடி இருக்கிறார்கள் மக்கள் என்பதை மௌனமாக அடையாளம் காட்டுகிறது. தீமையின்பால் மனிதர்களுக்கு இருக்கும் ஈர்ப்பை கச்சிதமாகச் சித்தரிக்கிறது ‘ஒரே ஒரு’ என்னும் தலைப்பில் அமைந்த அக்கவிதை.

‘உலகத்தில்
இதுவரை ஒரே ஒரு
கூரான கத்திதான்
உயிரோடு உள்ளது
அது
சாகாமல் இருப்பதற்காக
சாணை பிடித்துக்கொண்டே
இருக்கின்றன
லட்சோப லட்சம் கைகள்’

தீமையின் ஈர்ப்பிலிருந்து விலகிச் செல்லும் மனம் படைத்தவர்களாக எல்லா இடங்களிலும் சிலர் இருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அவர்கள் செல்ல நினைக்கும் பாதைகள் அடைபட்டிருக்கின்றன. திறக்கவேண்டிய கதவுகள் திறப்பதில்லை. பயணத்தைத் தொடரமுடியாமல் பாதையின் விளிம்பில் திகைத்து நின்றுவிடுகிறார்கள். ‘எல்லாப் பக்கங்களிலும்’ கவிதை அந்தத் திகைப்பை ஒரு காட்சியாக முன்வைக்கிறது.

ஒரு பாறையில்
ஒரு கூழாங்கல்லில்
ஒரு மணல் பரலில்
நுழைய விரும்பினேன்
கதவைத் திறக்கச் சொல்லி
கெஞ்சினேன்
‘எல்லாப் பக்கங்களிலும் நாங்கள்
திறந்தே இருக்கிறோம்’
மூன்றுமே சொல்லின
எல்லாப் பக்கங்களிலும் திறந்த வீட்டுக்குள்.
நுழையத் தெரியாத திகைப்பில்
வெளியேயே நிற்கிறேன்
இத்தனை காலமும்

‘புலிகள் கணக்கெடுப்பில்’ தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை. ‘ஆட்கொல்லிப் புலிகளைவிட புலிகொல்லி ஆட்களே கூடுதல்’ என வருத்தம் தொனிக்கும் குரலோடு தொடங்கும் கவிதை காட்டில் உலவும் புலிகளைப் பற்றியும் புகைப்படத்தில் பார்த்த புலியைப்பற்றியும் சர்க்கஸில் பார்த்த புலிகளைப் பற்றியும் எழும் நினைவு களை முன்வைப்பதாக மாறுகிறது. அது முதல் கட்டம். பிறகு விலங்குக் கண்காட்சிச் சாலைகளில் கூண்டுகளில் அடைபட்ட புலிகளைப் பற்றியும் புத்தகத்தில் படித்த புலிகளைப் பற்றியும் தோன்றும் நினைவுகளை முன் வைக்கின்றன. அது இரண்டாவது கட்டம். இறுதியாக தன்னையும் ஒரு புலியாக முன்வைக்கிறது. புலிகளைக் கணக்கெடுக்கும் கூட்டம் முதல்வகையான புலிகளை மட்டும் கணக்கெடுத்துக்கொண்டு, பிற புலிகளை விட்டு விடுகிறது என ஓர் எள்ளல் குறிப்போடு முடிவடை கிறது. காட்டுப்புலியையும் கூண்டுப்புலியையும் வேறுபடுத்தும் அம்சம் எது? காட்டுப்புலி சுதந்திர மானது. அதன் வேகமும் கொலைவெறியும் காமமும் இயற்கையானவை. கூண்டுப்புலி கூண்டு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்தப்பட்டது. உணவு, சுபாவம், பழக்க வழக்கம் எல்லாமே பயிற்சியின் விளைவால் கொண்டு வரப்பட்டவை. வெறியும் காமமும் கட்டுப்படுத்தப் படுகின்றன. காட்டுப்புலிகள் நீண்டகாலப் பயிற்சி களுக்குப் பிறகே கூண்டுப் புலிகளாக மாறுகின்றன. பல நூற்றாண்டு காலப் பயிற்சிகளுக்குப் பிறகு விலங்குக் குணங்களையெல்லாம் துறந்து மாறியவன் மனிதன். ஆதி விலங்குணர்வு ஒரு சிறு புள்ளியாக அவனுடைய அடிநெஞ்சில் இருப்பதால்தான், கவிதையில் இடம் பெறும் மனிதன் தன்னையும் புலி என அறிவித்துக் கொள்கிறான்.

‘ஒரு கூண்டை தொங்கவிட்டிருக்கிறேன்
ஒரு கூண்டை மேலும் புரிந்துகொள்ள
ஒரு பறவையை மேலும் புரிந்துகொள்ளவும்’

என்னும் முதல் கவிதையை இப்போது மீண்டும் படித்துப் பார்க்கும்போது, அது இந்த மொத்தத் தொகுப்பையும் அணுகுவதற்கான ஒரு வாயில் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கவிதையிலும் கல்யாண்ஜி சித்தரித்திருக்கும் அற்புதக்கணங்கள், அந்தக் கணங் களின் அற்புதத்தன்மையை இன்னும் நெருக்கமான முறையில் அறிந்துகொள்ளத் தூண்டுகின்றன. அக்கணங் களில் சுடர்விடும் வாழ்வை உணரத் தூண்டுகின்றன. நமக்குக் கிட்டிய வாழ்க்கையையும் நம் முன் நிகழும் வாழ்க்கையையும் ஆழ்ந்து புரிந்துகொள்ளவும் தூண்டு கின்றன.

நொடி நேர அரைவட்டம் (கவிதைகள்)
ஆசிரியர்: கல்யாண்ஜி
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
53வது தெரு, 9வது அவென்யு,
அசோக் நகர், சென்னை - 83
விலை: ரூ. 130/-

Pin It