“வருடம் தவறாமல்

குழந்தைகள் தினத்தைக்

கொண்டாடுகிறவர்களே,

தினங்கள் கொண்டாடுவதை

விட்டு விட்டு

குழந்தைகளை எப்போது

கொண்டாடப் போகின்றீர்கள்?”

கவிக்கோ அப்துல் ரகுமானின் இக் கவிதை வரிகள் குழந்தைகள் தொடர்பாகப் பல கேள்வி களை நம் முன்வைக்கிறது. அக் கேள்விகளில் ஒன்று, பள்ளியில் படிப்பு குழந்தைகளுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் படிப்பை விருப்பமான ஒன்றாக மாற்ற என்ன செய்வது? இதற்குப் பதில் ஒன்றும் தெரியாத ஒன்றல்ல! குழந்தைகள் ஆடல், பாடல், கதை யாடலை விரும்புகிறார்கள். அவற்றை இணைத்து அவற்றின் வழியாகப் படிப்பு நடந்தால் அது அவர்களுக்கு இனிப்பாக மாறிவிடும்.

குழந்தையின் முதல் ஆசிரியையான அம்மா தன் செல்லக் குழந்தை மழலை பேசத் தொடங்கி யதும் ‘கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு’ என்றும் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாயக்கிளியே சாய்ந்தாடு’ என்றும் பாடுவதற்குப் பழக்குகிறாள். தாலாட்டுப் பாடல்கள் கேட்டு வளர்ந்த குழந்தைக்குப் படிப்பின் துவக்கம் பாடல் களாக இருப்பதே பொருத்தமாக இருக்கிறது. அதனால் கற்பித்தலின் முதல் படியாக ஆயத்தப் பாடல்கள் (motivation) முக்கியத்துவம் பெறுகிறது.

குழந்தைகள் முன் பருவக் கல்வி பெறுவதற்காக நர்சரி, கான்வென்ட் போன்ற ஆங்கில வழி பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ‘தோ, தோ, நாய்க்குட்டி, துள்ளி வா, வா, நாய்க்குட்டி’ என்று பொருள் புரியும் பாட்டைத் தாய் மொழியில் பாடிய குழந்தைகளுக்கு ‘நர்சரி ரைம்ஸ்’ என்ற பெயரில் டுவிங்கிள், டுவிங்கிள், லிட்டில் ஸ்டார் பாடலும் ‘ரெய்ன் ரெய்ன் கோ அவே’ பாடலும் தருவது குழந்தைகளை ஆயத்தப்படுத்த உதவுமா என்பது புரியவில்லை. இதில் மேலும் ஒரு அபத்தம் என்ன வென்றால் மழை தேவைப்படும் தமிழ்நாட்டில் ‘மழையே மழையே போ, போ’ என்று குழந்தைகள் பாடுவதுதான்.

துவக்க நிலையில் குழந்தைகள் நிறைய பாடல் களைக் கேட்பதும் பாடுவதும் அவர்களின் மொழித் திறன்களை வளர்க்க உதவுகிறது. ஆங்கில மொழி யோடு ஒப்பிடும் போது மழலைப் பாடல்கள் தமிழில் அதிகமில்லை. 1980-களில் வெளிவந்த புலவர் இளஞ்செழியன் எழுதிய ‘மழலை மத்தளம்’ நூல் சிறப்பான மழலைப் பாடல்களைக் கொண்டது. இதற்கு இணையான நூல் இன்னும் வெளிவரவில்லை. அகர முதலியைக் கற்றுக் கொடுப்பதற்காகவோ, பாடப்பொருளை விளக்குவதற்காகவோ இவரது மழலைப் பாடல்கள் எழுதப்படவில்லை. ஓசை நயத்தோடு குழந்தை உலகத்தோடு நெருக்கமான காக்கா, மயில் பற்றிய எளிய பாடல்கள் இவை.

“மயில் ஒன்று ஆடுது

மந்தி எல்லாம் கூடுது!

குயில் ஒன்று பாடுது

குருவி எல்லாம் கூடுது!

மயிலைப் பார்த்து

குயிலைப் பார்த்து”

மந்தி தலையை ஆட்டுது! என்ற பாடலைக் கேட்டுத் தலையை ஆட்டாத குழந்தைகள் இருக்க முடியாது. விரல் விட்டு எண்ணத்தக்க நிலையிலே மழலைப் பாடல்களைத் தந்துள்ள கவிஞர்களுக்கு மத்தியில் மழலைக் கவிஞர் என்று புகழ்பெற்றுள்ள குழ.கதிரேசன் அவர்கள் மழலைப் பாடல்கள் அதிகம் எழுதியுள்ளவர். அவருடைய மழலைத் தேன், மழலை அரும்பு, மழலைக் கரும்பு போன்ற நூல்கள் பாடநூல்கள் போல் காட்சியளிக்கின்றன. ‘இளந்தளிர்’ என்ற தலைப்பில் கவிஞர் ச.வெற்றிச் செழியன் தொகுத்துள்ள நூலில் மழலைப் பாடல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆக, தமிழில் மழலைப் பாடல்கள் போதிய அளவிலும் வளமாகவும் வர வில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகவே இன்றும் இருக்கிறது.

குழந்தைகளுக்கான மழலைப் பாடல்கள் கற்பித்தலைக் கொண்டாட்டமாக மாற்ற உதவ வேண்டும். அப்படியென்றால் அப்பாடல்கள் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்க வேண்டும். அதில் நீதி போதனைக்கு இடமில்லை. பாட போதனைக்கும் முக்கியத்துவமில்லை.

உதாரணமாகச் சில பாடல்கள்:

“திமுக்குத் தக்கா திமுக்குத் தக்கா

                திமுக்குத் தக்காடி

சின்னப் பாட்டி தோட்டத்திலே

                சிவப்புத் தக்காளி.”

“டக் டக் கடிகாரம்

தட்டு நிறைய பணியாரம்

குட்டி குட்டி சுண்டெலி

எட்டி எட்டிப் பார்க்குதாம்”

மழலைப் பாடல்கள் குழந்தைகளைப் பரவசப் படுத்துகிறது. பக்தி பரவச நிலையில் பக்தர்கள் கடவுளோடு ஐக்கியமாகிவிடுவது போல் குழந்தைகள் கற்றலுக்குத் தயாராகி விடுகிறார்கள்.

முன்பருவக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கற்பித்தலில் விடுகதைகளும் குட்டிக் கதைகளும் குழந்தைகளின் கேட்டல் மற்றும் பேசுதல் திறன் களை வளர்க்க உதவுகிறது. கற்பித்தலைக் கற்கண்டாக மாற்றுவது இவைகள்தான். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அக்காவிடம் கதைகள் கேட்டுக் கேட்டு ஆர்வமும் ரசனையும் பெற்றுள்ள குழந்தை களுக்கு மேலும் அவர்களின் அகவுலகைப் பள்ளி களில் கேட்கும் கதைகள் விரிவுபடுத்துகின்றன. விரிவுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் நமது தொடக்கப்பள்ளிப் பாடநூல்களில் கதைகள் பாடங்களாகக் காட்சியளிக்கின்றன. சேர்த்து எழுதுக, பிரித்து எழுதுக, கோடிட்ட இடத்தை நிரப்புக, எதிர்ச் சொல் எழுதுக, வினாக்களுக்கு விடை எழுதுக என்று மொழிப் பயிற்சிகளுக்குரிய களன்களாகக் காட்சியளிக்கின்றன. கதையின் மையக் கருத்தை உணருவதற்குக் கூடப் பயிற்சிகள் இல்லை.

கதை கேட்கும் அல்லது படிக்கும் குழந்தை அக் கதையில் வரும் பாத்திரங்களோடோ, நிகழ்வு களோடோ, தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைக்குக் கற்பனையும் சிந்தனையும் வளர அக்கதை உதவக் கூடும். அவ் வாறில்லாமல் தேர்வில் மதிப்பெண்கள் பெறும் நோக்கில் படித்தால் மனப்பாடம் தான் விரியும்; மனவுலகம் விரியாது.

பள்ளிப் பாடங்களில் இடம் பெறும் கதை களில் இறுதியாகக் கேட்கப்படும் கேள்வி ‘இக் கதையிலிருந்து நீ தெரிந்துகொண்ட நீதி என்ன?’ என்பதாக இருக்கிறது. ஒரு கதையில் ஏதாவது நீதி இருக்கிறதா, இல்லையா என்பது குழந்தைகளுக்கு முக்கியமில்லை. அவர்களைப் பொறுத்த வரை கதையே முக்கியம். இந்தக் கதை இந்த நீதியைத் தான் கூறுகிறது என்று சொல்லி முடித்துவிட்ட பிறகு அக்கதையை மாறுபட்ட கோணத்தில் சிந்திப் பதற்கு குழந்தைக்கு வாய்ப்பில்லாமல் போய் விடு கிறது. உதாரணத்திற்கு, காகமும் நரியும் கதையை எடுத்துக்கொள்ளுவோம். அக்கதை எவ்வாறெல்லாம் உருமாற்றம் செய்யப்பட்டு இன்று சொல்லப்படுகிறது. அக்கதையில் ஒருமுறை காகம் ஏமாறுகிறது. இன் னொரு முறை நரி ஏமாறுகிறது. இப்படி, கதைகளை நீட்டியும் சுருக்கியும் மாற்றியமைத்தும் பாத்திரங் களின் குணநலன்களை மாற்றியும் தன் சொந்தக் கதைகளாக மாற்றிக் கொள்ளும் சுதந்திரத்தை பள்ளிப் பாடப் புத்தகக் கதைகள் குழந்தைகளுக்கு வழங்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் இலக்கியம் தனித்த அனுபவங்களைத் தருவது. கற்பித்தலில் பயன்படுத்தப்படும் போதும் அதன் பண்புகள் காக்கப்பட வேண்டும். (Literaure is more experienced than taught. Allow children to feel free read against a text - Prof. Krishna Kumar) 

குழந்தைகள் தாமாக விரும்பிக் கற்கும் வகையில் பாடங்களை ஆக்குவது குழந்தை இலக்கியந்தான். குழந்தை இலக்கியத்தைப் பாடங்களாக மாற்றிக் கற்பிக்கும் போது நேருவது என்ன? வெறும் யந்திரத் தனம், யந்திரத்தனம், யந்திரத்தனம்.

இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் உள்ள யார்? யார்? யார்? என்ற அழ. வள்ளியப்பாவின் பாடல் எப்படிக் கற்பிக்கப்படுகிறது? அப்பாடல் பகுதியில் இடம்பெற்றுள்ள பயிற்சிகளைக் கொண்டே அதை அளவிட்டு விடலாம்.

காற்று என்னவெல்லாம் செய்தது? என்ற வினா கேட்கப்படுகிறது. சட்டையைத் தூக்கிக் கீழே போட்டது, தாள்களை அங்கும் இங்கும் இறைத்தது, சன்னல் கதவை சாத்தியது, மரங்களை அசைத்தது என்று உயிரோட்டமில்லாத பதில்கள் படிக்கப்படுகிறது. ஆனால் அப்பாடல் உணர்ச்சி களை எழுப்ப வல்லது.

தொங்கப் போட்ட சட்டையைத் தூக்கிக் கீழே போட்டவன் யார்? என்று படிக்கும் போது குழந்தைக்குக் குழப்ப உணர்ச்சி எழுகிறது.

எழுதி வைத்த தாள்களை இங்கும் அங்கும் இறைத்தவன் யார்? எனப் படிக்கும் போது குழந்தைக்குக் கோப உணர்ச்சி தோன்றுகிறது.

சன்னல் கதவைப் பட்டெனச் சாத்தி விட்டுச் சென்றவன் யார்? எனப் படிக்கும் போது திகைப்பு உணர்ச்சி ஏற்படுகிறது.

அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்? எனப் படிக்கும் போது பிரமிப்பு குழந்தைகளின் உள்ளத்தில் தொற்று கிறது. யார்? யார்? என்ற கேள்விகளின் விடையாக இயற்கைச் சக்தியான காற்றின் வல்லமையைக் குழந்தை உணர்ச்சிகளின் வழியே அறிந்துகொள்கிறது. இவ்வாறு இந்தப் பாடல் எழுப்பும் உணர்ச்சிகள் எதையும் தராமல் அகர முதலி அறிவது, எதிர்ச் சொல் அறிவது என்று இப்பாடலைக் கற்பிப்பது குழந்தை இலக்கியத்தை உயிரோட்டம் இல்லாமல் செய்து விடுகிறது.

கற்பித்தலில் குழந்தை இலக்கியத்தை யந்திரத் தனமாகப் பயன்படுத்துவதால் அதை உயிரோட்ட மில்லாமல் செய்து விடுவது ஒரு புறமிருக்க, பாடப் பொருளை விளக்குவதற்காக யந்திரத்தனமாகக் குழந்தை இலக்கியத்தை உருவாக்குவதும் உயிரோட்ட மில்லாமல் செய்து விடுகிறது.

மொழிப் பாடத்தைக் கற்பிக்க, குழந்தை இலக்கியம் நிறையவே உள்ளது. கணிதம், அறிவியல், வரலாறு போன்ற பாடங்களைக் கற்பிக்கப் போதுமான அளவில் பாடல்கள், கதைகள் இல்லாத நிலையில் பாடப்பொருளை விளக்குவதற்காக அவை உருவாக்கப் படுகிறது. அவ்வாறு உருவாக்கப் படும்பொழுது அவை வறட்டுத்தனமாக இல்லாமல் உயிரோட்டம் உள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

கணிதத்தில்,

‘ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

இரண்டு முகத்தில் கண் இரண்டு

மூன்று முக்காலிக்குக் கால் மூன்று’ என்ற

பாடலும்

‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது.

இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்தது.’

என்ற பாடலும் குழந்தைகளுக்கு எண்களைச் சிறப்பாகக் கற்பிக்க உதவுகின்றன.

அறிவியலில் ‘திசைகள்’ பற்றிய இந்தப் பாடல் மிகவும் ஆற்றலுள்ளது.

‘சூரியன் உதிப்பது கிழக்கு

அதன் எதிர்ப்புறம் இருப்பது மேற்கு

நின்று கையைத் தூக்கு

வலக்கைப் பக்கம் தெற்கு

வாதம் வேண்டாம் இதற்கு

இடக்கைப் பக்கம் வடக்கு

போதும் கையை மடக்கு’

இதுபோலவே உடல் உறுப்புகள், உடல்நலம், நீர் நிலைகள்பற்றிக் கற்பதற்கும் குழந்தைக் கவிஞர்கள் பற்பல பாடல்களை எழுதியுள்ளதை நாமறிவோம்.

சமூகவியலில் தலைவர்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கதைகளாகவும் பாடல்களாகவும் நாடகங்களாகவும் கற்பிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.

சமூகவியல் பாடங்கள் ஒவ்வொன்றையும் சிறு சிறு நாடகங்களாக ஆக்கிவிட முடியும். நாடகம் மிகச் சிறந்த கற்பித்தல் உத்தி. வகுப்பறையை நாடக மேடையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நாடகம் குழந்தைகளின் பேச்சுத் திறனை வளர்க்கிறது. பாடப் பொருளை ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ள உதவுகிறது. முழு வகுப்புமே பங்கெடுத்துக் கொள்ளும் கற்றல் செயலாக பரிணமிக்கிறது. ஓரிரண்டு காட்சிகள் கொண்ட நாடகங்கள் குழந்தைகள் படிக்கவும் நடிக்கவும் துணை செய்ய வல்லது. ஆயினும் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் நாடகங்கள் தேர்வு, மதிப்பெண் என்கிற அணுகுமுறையை அதிகம் கொண்டுள்ளது. இது குழந்தையின் இயல்புக்கு மாறானது. குழந்தைகள் எல்லா நேரங்களிலும் நாடகத்தின் உத்திகளை அதாவது வேறொருவர் போலப் பேசுதல், மிகைப்படுத்திக் கூறுதல், அபி நயத்தல், நடித்தல் போன்றவற்றைச் செய்து கொண்டு இருக்கின்றனர். ஆகவே குழந்தைகள் சொந்தமாகப் பேசி நடித்து விட்டால் அவர்களின் ஆளுமைத் திறனுக்கு வேறென்ன சான்று வேண்டும்? நாடகங் களைத் தேர்வுக்குரிய பாடங்களாக ஏன் மாற்ற வேண்டும்?

இன்று தொடக்கப்பள்ளிகளில் ‘சர்வ சிக்ஷா அபியான்’ (S.S.A.) அறிமுகப்படுத்தியுள்ள கற்றல் அட்டைகளில் பாடப்பொருளைக் கற்க கதைகள், பாடல்கள், நாடகங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன. இது வரவேற்கத்தக்கது. கற்பித்தலில் குழந்தை இலக் கியத்தின் வலுவான பங்கை இது வலியுறுத்துகிறது எனலாம்.

முறை சாராக் கல்வி, வயது வந்தோர் கல்வி, அறிவொளி இயக்கம் போன்ற கல்வித் துறைத் திட்டங்களில் கற்பிக்கும் உத்திகளாகக் கதை, பாடல் களே அதிகம் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். அறிவொளி இயக்கத்தில் படிக்கும் பெரியவர்களின் மூலம் கிராமப்புறங்களில் வழங்கும் நாட்டுப்புறக் கதைகள், சொலவடைகள், பழமொழிகள் அதிகம் சேகரிக்கப்பட்டுள்ளது சிறப்பான விஷயமாகும். இம் முயற்சிகள் அவர்களை இலக்கியத்தின்பால் ஈர்த்துள்ளதைக் காண முடிகிறது.

நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் குழந்தை இலக்கியக் கதைகள் துணைப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியக் கதைகள் என்னும் ஆறு வழியாக வாசிப்புக் கடலைச் சென்றடைய இவை குழந்தைகளுக்கு உதவியிருக்க வேண்டும். பலர் கடலில் சேராமல் கரையொதுங்கி விட்டார்கள். காரணமென்ன? பரந்த வாசிப்புக்கு வழிகாட்ட வேண்டிய துணைப் பாட நூல்களில் கூட தேர்வுக்குரிய மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்தை வைத்திருக்கிறோம். அதனால் துணைப் பாட நூல்களைப் படிக்காமலே கோனார் உரையைப் படித்து தமிழ் இரண்டாம் தாளில் அதிக மதிப் பெண் பெற குழந்தைகள் முயல்கிறார்கள். படிக்கும் ஆர்வத்திற்குத் துணை செய்யவேண்டிய துணைப் பாட நூல் துணை செய்யாமலே போய் விடுகிறது. இன்னும் இன்றும் நூல்களைத் தேடிப் படிப்பதற்குக் குழந்தைகளுக்கு உறுதுணை செய்யும் விதமாகத் துணைப்பாட நூல் கற்பித்தலும் கதைகளும் அமைய வேண்டும்.

கற்பித்தலில் குழந்தை இலக்கியம் சிறப்பாகப் பயன்பட ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பாடங்களில் இடம் பெறும் குழந்தை இலக்கியத்தை உயிரோட்டம் உள்ளதாகக் கற்பித்திட அவர்களால் முடியும். பாடநூல்களில் உள்ள பாடல் களை, கதைகளைப் பாடவும் படிக்கவும் அவர்கள் தான் வழிகாட்ட வேண்டியுள்ளது. இந்நிலையில் அவர்கள் வெறும் ஆசிரியர்களாக இல்லாமல் படைப்பாசிரியர்களாகவும் மாற வேண்டியுள்ளது.

குழந்தை இலக்கியத்தைப் பயன்படுத்தியும் உருவாக்கியும் கற்பித்தலைக் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆசிரியருக்கு முதன்மையாக இருக்கிறது. தனக்கு வாசிப்பின் மீது ருசியை ஏற்படுத்தியது ஆசிரியர்கள்தான் என்று நாவலாசிரியர் பொன்னீலன் அடிக்கடி சொல்லுவார். தேவைப்பட்டால் ஆசிரியர் கோமாளியாகக் கூட மாற வேண்டுமென்று நவீன குழந்தை நாடகாசிரியர் வேலு சரவணன் குறிப் பிடுவார். ஒரு ஆசிரியர் குழந்தைகளின் மனதில் கதை சொல்லியாக, பாடகராக, நடிகராக, நடனக்காரனாக இடம் பிடித்து விட்டால் அதுவே நல்லாசிரியருக் கான தகுதியாகும். அத்தகைய ஆசிரியர்களே கற் பித்தலில் குழந்தை இலக்கியத்தைக் கொண்டாட்டமாக மாற்றுவார்கள், மாற்ற வேண்டும்.

Pin It