20 -ஆம் நூற்றாண்டு குமரி மாவட்டம் தமிழ்ச் சமூகத்திற்குத் தந்த முத்துக்களில் சிறந்த ஒரு முத்து, பூதப்பாண்டி தந்த சொரிமுத்து. இந்த முத்து தான் ஜீவானந்தமாகி, தூய தமிழ் உயிர் இன்பனாகி, தமிழ் கூறும் நல்லுலகத்தால் என்றும் அன்போடு போற்றப்படுகின்ற பேரா சான் ஜீவா.

மிக இளமையிலேயே அவரிடம் சமத்துவ, சகோதரத்துவ உணர்வு பொங்கி நின்றது ஒரு பேரதிசயம். இல்லையென்றால், சாதி வெறி கொடிகட்டிப்பறந்த அந்தக் காலத்தில், மண்ணடி மாணிக்கம் என்னும் தம் வகுப்புத் தோழனான தலித் சிறுவனையும், இன்னும் இரு தலித் சிறுவர் களையும் தன்னோடு அழைத்துக்கொண்டு, துணிச்சலாக, மார்கழி மாத பஜனையைத் தனக்கு ஏற்ற விடுதலை பஜனையாக மாற்றிப் பாடியபடி, அந்த இளைஞர்களோடு, உயர் ஜாதிக்காரர்கள் வாழும் தன் ஊர்த் தெருக்களில் சுற்றி வந்து உதை வாங்கியிருப்பாரா அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவன்? தலித் விடுதலை மட்டுமா? பக்திப் பாடலைச் சமூக விடுதலைக் காக மாற்றிப்பாடி, மக்களை வசப்படுத்தும் புரட்சிகரமான தமிழ்ப் பார்வையும் அன்றே அவருக்கு வாய்த்துவிட்டது அல்லவா! கடவுள் நம்பிக்கையாளர்கள் செய்யும் ஒரு காரியத்தைச் சமூக எழுச்சிக்காகப் பயன்படுத்தும் திறனும் அன்றே ஏற்பட்டு விட்டதே.

கோயிலில் சுண்டல் வினியோகிக்கிறார் பூசகர். பின்னால் நிற்பவர்களுக்குக் கிடைக் காமல் போய் விடுகிறது சுண்டல். பூசகரிடமிருந்து சுண்டல் சட்டியை வாங்கி, எல்லாருக்கும் சம மாகப் பங்கிட்டு வழங்கும் சமதர்ம உணர்வும் அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே வாய்த்து விட்டது அவருக்கு.

திரிகூடசுந்தரம் பிள்ளை தலைமையில் அந்நியத் துணி எரிப்புப் போர் பூதப்பாண்டியில் நடக்கிறது. காங்கிரஸ் பெரியோர் எல்லாரும் மாற்று உடை களோடு கூடி நிற்கிறார்கள். கட்டிய உடையை அவிழ்த்து நெருப்பில் எறிந்துவிட்டுக் கதர் உடை களை அணிந்துகொள்கிறார்கள் அவர்கள். பள்ளிக் கூடம் விட்டு பைக்கட்டோடு வந்து பார்த்துக் கொண்டு நின்ற ஜீவா, தான் அணிந்திருந்த ஆடை களைத் தீயில் போட்டு விட்டு, கோவானாண்டியாக வீட்டுக்குப் போய், தந்தையிடம் உதை வாங்கினார்.

சுசீந்திரம் - தெரு நுழைவுப் போராட்டம். தேசபக்தர் எம். இ. நாயுடு தலைமையில் வீரர்கள் போராடுகிறார்கள். நாகர்கோவிலில் 9-வது படித்துக் கொண்டிருந்த ஜீவா, பையையும், புத்தகங்களையும் பள்ளிக்கூடத்தில் போட்டுவிட்டு, அந்தப் போராளி களோடு கலந்து கொள்ளுகிறார்.

அந்தத் தொடர்பால், வைக்கம் போராட்டத் திலும் கலந்துகொள்கிறார் ஜீவா. அங்கே என்ன பாடலை ஜீவாவும் பெரியவர்களும் பாடுகிறார்கள்? பாரதியின் அச்சமில்லை என்னும் பாடலை, போருக்குத் தமிழைப் பயன்படுத்தப் பயிற்சி எடுக்கிறார் ஜீவா. ஜீவாவின் பள்ளிப் படிப்பு முறிந்து போகிறது.

அங்கிருந்து சேரன் மாதேவி ஆசிரமத்திற்குப் போகிறார் ஜீவா. அங்கும் அவர் சந்திப்பது சாதி ஏற்றத்தாழ்வுச் சிக்கல். இந்தச் சிக்கலை விடுவிப் பதற்காகக் களம் இறங்கியவர் தந்தை பெரியார். பெரியாரோடு ஜீவாவுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. விடுதலையை ஜீவா பன்முகம் கொண்டதாகப் பார்த்தார். அவருடைய ஆளுமையின் அடித்தளம் இதுவே.

சிறாவயல் வந்த ஜீவா, அங்கிருந்த காந்தி ஆசிரமத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். ராட்டை யால் நூற்றார். காந்தியைப் போலவே உடுத்தார், வாழ்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் அக்கறை செலுத்தினார். அவர்களுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டினார். காந்தி ஆசிரமப் பள்ளியில் தலித்களை அதிகம் சேர்த்தார். குறிப்பாகப் பெண் களை அதிகம் சேர்த்தார். ஆசிரமத்தின் புகழ் ஒங்கியது. காந்தியடிகளே அந்த ஆசிரமத்திற்கு ஜீவாவைத் தேடி வரும் நிலை ஏற்பட்டது.

காரைக்குடிக்கு வந்த காந்தி, ஜீவாவைச் சந்திக்க வேண்டுமென்று சா.கணேசனிடம் சொன்ன போது, ‘தகவல் சொன்னால் அவர் ஓடோடி வந்து விடுவார்’ என்றார் கணேசன். இல்லை இல்லை, நான் சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்றார் காந்தி. ஏன்? காந்திக்கும், ஜீவாவுக்கும் இடையில் அப்படியொரு தொடர்பு இருந்தது. யங் இந்தியாவில் வரப்போகிற பாரதம் எப்படி இருக்குமெனக் காந்தியடிகள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் பெண்கள், ஆண்களுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டுமென்றும், புதிய இந்தியாவில் தீண்டாமை இருக்காது என்றாலும் வருணாசிரமப்படி நிலைகள் இருக்கும் எனவும் எழுதியிருந்தார். இதைக் கடுமையாகக் கண்டித்து, அவருக்கு ஒரு கடிதம் ஜீவா எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்த காந்தி, உங்களை நான் பார்க்க வரு வேன். அப்போது இதுபற்றிப் பேசலாம் என்றார். அந்த அடிப்படையில்தான் காந்தியடிகள் சிறா வயலுக்குப் போனார்.

காந்தியார் வந்துவிட்டாரே என ஜீவாவுக்கு அதிசயம். ஜீவா இவ்வளவு இளமையாக இருக் கிறாரே என்று காந்திக்கு அதிசயம். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, காந்தி கேட்டார், ‘ஆசிரமம் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறதே, உங்களுக்கு எவ்வளவு சொத்து’ என்று. இந்த நாடு தான் என் சொத்து என்றாராம் ஜீவா. இல்லை இல்லை, நீங்கள் தான் நாட்டின் சொத்து என்றாராம் காந்தி. அப்படி காந்தியால் பாராட்டப்படுகிறார் ஜீவா.

அதன் பிறகுதான் காந்திக்கும், அவருக்கும் வாக்குவாதம் நடந்தது. ஆணும், பெண்ணும் சரி நிகர் சமானமாக வாழ வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார் ஜீவா. அதுபோல, வருணாசிரமக் கொள்கையையும் அவர் எதிர்த்தார். இப்படிச் சொல்லுகிறீர்களே, உங்களுடைய வழிகாட்டி யார்? உங்களுடைய மதம் என்ன? என்றார் காந்தி. ஜீவா சொன்னார்: என் வழிகாட்டி பாரதி. என் மதம் வள்ளுவம்.

புரிகிறதா? ஜீவா தமிழ் சார்ந்து அனைத்தையும் சிந்தித்தார். அவர் பேசிய சமதர்மமும், தமிழுக்குள் திரண்டு நிற்கும் சமதர்மமே. இந்தப் பாதை தான் அவரை விரிவுபடுத்தியது. எல்லாருக்குமானவராக் கியது.

கோவை பஞ்சாலைத் தொழிலாளர் போ ராட்டத்தின்போது, அந்தப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக விரிவுபடுத்த அவர் தமிழையே ஆயுதமாகப் பயன்படுத்தினார். “காலுக்குச் செருப்பும் இல்லை” என்ற பாடல் நெருப்புப்போலச் சுடும் ரோட்டில் நின்றுகொண்டு போராடும் தொழி லாளர்களுக்காகவே அவரால் பாடப்பட்டது.

அதிகம் போனால் ஆயிரம் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கலாம். ஆனால், அன்றைய ஊர்வலத்தில் பதினைந்தாயிரம் பேருக்கு அதிகமான வர்கள் திரண்டிருந்தார்கள். ஜீவா எப்படி அவர்களைப் போராடும் தொழிலாளர்களோடு இணைத்தார்? தமிழால் இணைத்தார்.

கூட்டம் பெருத்துவிட்டது. போலீசார் கூட்டம் நடந்துவதற்குத் தடை சொன்னார்கள். கூட்டத்தைப் பிற இடங்களில் நடத்துவது முடியாது. ஆனாலும் நடத்தியாக வேண்டும். சுடுகாட்டுக்குப் போவோம், அங்கே கூட்டம் நடத்துவோம் என்றார் ஜீவா.

சுடுகாட்டுப் பயணத்திற்கு ஒருபோதும் போலீஸ் தடையில்லை. இரவு சுடுகாட்டில் எந்த வசதியும் இல்லை. ஒரு ஸ்டூல் மேல் ஏறி நின்றார் ஜீவா. அவர் முகத்தைக் காட்டுவதற்காக, இன்னொருவர் இன்னொரு ஸ்டூல் மீது ஒரு விளக்கோடு ஏறி நின்றார். கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். ஜீவா பேசுகிறார், பேசுகிறார், போராட்டம் வெற்றி பெறும் வரை பேசுகிறார்.

இதே கோவையில் தான் இன்னொரு நிகழ்ச்சி. எந்த முதலாளிகளை ஜீவா போராடிப் பணிய வைத்தாரோ, அந்த முதலாளி ஒருவரின் மில் வாசல். தோழர்களைக் காண்பதற்காக ஜீவா நிற்கிறார். தோழர்களைச் சந்தித்து விட்டு, அவர் ஈரோடு செல்ல வேண்டும். அதற்குரிய பணத்துடன் தோழர் ஒருவர் அவருக்கு வழித்துணையாக வந்திருந்தார்.

திடீரென மில் வாசல் திறக்கவே, முதலாளியின் படகுக்கார் வெளியே வருகிறது. ஜீவாவைக் கண்டதும் கார் நிற்கிறது. காரிலிருந்து இறங்கிய முதலாளி, ஜீவாவிற்கு வணக்கம் சொல்லுகிறார். ஜீவாவும் பதில் வணக்கம் போட்டு விட்டு, அவரிடம் போ கிறார். இருவரும் உரையாடுகிறார்கள். புறப்படும் போது, அந்த முதலாளி காரினுள்ளே இருந்த தன் பேத்தியிடம் “ஜீவா தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு” என்கிறார். அந்தக் குழந்தையும்’ தாத்தாவுக்கு ‘வணக்கம்’ என்றது. தாத்தா என்று சொல்லி வணங்குகிறது குழந்தை, வெறும் கையோடு எப்படிப் பதில் வணக்கம் சொல்லுவது? அங்குமிங்கும் பார்த் தார் ஜீவா. பெண் ஒருத்தர் ஒரு கூடை மாம்பழங் களோடு உட்கார்ந்திருந்தார். பழத்தைக் கூடை யோடு எடுத்து அந்தக் குழந்தையின் கையில் கொடுத்துவிட்டார் ஜீவா.

பக்கத்தில் இருந்த தோழர்களுக்கு அதிர்ச்சி. மாம் பழக்கூடைக்கான பணத்தை எப்படிக் கொடுப்பது? ஆனால் தன்னை வழியனுப்ப வந்த தோழர்களிட மிருந்த பஸ்சுக்கான பணத்தை வாங்கி அந்த மாம் பழ வியாபாரியிடம் கொடுக்கிறார் ஜீவா. அந்த அம்மாவுக்கு மகிழ்ச்சி. இனி பஸ் கட்டணத்திற்குப் பணம்?

‘அந்தச் சிறுமிக்கு ஒரு மாம்பழம் கொடுத் தால் போதுமே’, என்று அவரைக் கண்டித்தார்கள், தோழர்கள். “முதலாளி தகுதிக்குத் தொழிலாளி வர்க்கம் இளைத்துப் போய்விட்டதா? தமிழ்ப் பண்பாடு தொழிலாளி வர்க்கத்துக்கு இல்லாமல் போய்விட்டதா? பேசாமல் இருங்கள், பணம் வரும்” என்கிறார் ஜீவா. மில்லின் மணி ஒலிக்கிறது. தொழி லாளர்கள், வெளியே வருகிறார்கள். ஜீவாவைக் கண்டதும் மகிழ்ச்சியோடு அவர்கள் அவரை மொய்க் கிறார்கள். நலம் விசாரிப்பு முடிந்ததும், ஜீவா தன் நிலையைச் சொல்லி, தொழிலாளி வர்க்கமே காசு கொடு என்கிறார். சிறுதுளி பெருவெள்ளம். தேவைக்கு அதிகமாக வசூலான பணத்தைக் கட்சி நிதியாகக் கொடுத்துவிட்டு, ஈரோடுக்குப் புறப்படுகிறார் ஜீவா.

1951-இல் ஜீவா சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த காரைக்குடி சா.கணேசன் அவரைக் கம்பன் விழாவுக்கு அழைத்தார். ஜீவாவின் இலக்கிய ஆழம் அவருக்குத் தெரியும். ஆனால் சா.கணேசனின் நண்பர்களான சீனிவாசராகவன் முதலியோருக்கு ஜீவாவைப் பற்றி ஒரு பயம். ஜீவா ஒரு கம்யூனிஸ்டு சிங்கம். அவரைக் கட்டுப்படுத்த முடியாது. ஏதாவது பேசினால் என்ன செய்ய? தலைமைக்கு சீனிவாச ராகவனையும், ஜீவா ஏதாவது தவறாகப் பேசி விட்டால் அதை மேடையிலேயே கண்டிக்க கணபதியா பிள்ளையை ‘கம்பனும், வம்பனும்’ என்னும் தலைப்பில் பேசவும் ஏற்பாடு செய்தார்கள்.

முழுக்க முழுக்க கம்பதாசர்களின் கூட்டம் அது. ஜீவா என்றதால் தொழிலாளி வர்க்கமும் வந்திருந்தது. ஜீவா மேடையில் ஏறி முழங்கத் தொடங்கினார். அவர் பேச்சு புதியது. பார்வை புதியது. செய்தி புத்தம் புதியது. சாதாரணமாகக் கம்பன் விழா மேடையில் நாற்பது நிமிடமானால் சிவப்பு விளக்கு எரியும். நாற்பத்தி ஐந்தாவது நிமிடம் ஒலி பெருக்கி நின்று விடும்.

ஆனால் ஜீவா எந்தத் தடையுமில்லாமல் ஒன்றே கால் மணி நேரம் பேசினார். பேச்சு முடிந்ததும், கணபதியா பிள்ளை எழுந்து, இதுவரை பேசியது கம்பன். இதற்கு மேலும் பேசினால் அது வம்பன் என்று முடித்துக் கொண்டார். தலைவர் சீனிவாச ராகவன் எழுந்து பேசினார்: சிவப்பு விளக்குப் போட்டு, ஜீவாவை நான் உரிய நேரத்தில் நிறுத்தி இருக்க வேண்டும். செய்யவில்லை. உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்றார். இல்லை இல்லை, நிறுத்தியிருந்தால்தான் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்கள் மக்கள். இப்படியான பேச்சுக்கள் ஒன்றா! இரண்டா!

கூட்டம் முடிந்த பிறகு அறிஞர்கள் உரையாடிக் கொண்டிருந்த போது, சீனிவாசராகவன் ஜீவாவிடம் சொன்னார், “நீங்கள் கம்பனை இவ்வளவு ஆழமாகப் பேசினீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டு ஜனங்கள் மெய் மறந்துபோனார்கள். நீங்கள் ஏன் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு, இவ்வளவு சிரமப்பட வேண்டும்? வெளியே வாருங்கள். எங்களோடு சேருங்கள். தமிழோடு சிறப்பாக வசதியாக வாழுங்கள்” என்றார். சிரித்துக் கொண்டே ஜீவா சொன்னார்: நீங்கள் என்னை விடத் தமிழை ஆழமாகக் கற்ற வர்கள். அறிஞர்கள், கம்பனில் கரை கண்டவர்கள். ஆனாலும், உங்கள் பேச்சில் இல்லாத கவர்ச்சி என் பேச்சில் இருக்கிறதே ஏன்?

ஏனென்றால், நீங்கள் இலக்கியங்கள் வழியாகக் கம்பனைப் பார்க்கிறீர்கள். நானோ தொழிலாளியின் வழியாக, விவசாயியின் வழியாக, உழைக்கும் வர்க்கத்தின் வழியாக, மார்க்சியத்தின் வழியாகக் கம்பனைப் பார்க்கிறேன். பார்த்துப் பேசுகிறேன். இதனால் தான் என் பேச்சுக்கு இத்தனை வலிமை இருக்கிறது. ஆனால் நீங்களோ, மக்களோடு உள்ள என் தொப்புள் கொடி உறவை அறுத்து விட்டு வா என்கிறீர்கள், இது நியாயமா என்றார்.

ஜீவா கம்பனைப் பார்த்த பார்வை மண் சார்ந்த பார்வை. மக்கள் சார்ந்த பார்வை. அது மார்க்சீயப் பார்வை. எதையும் உழைக்கும் மக்கள் சார்பில் நின்று பார்க்க வேண்டும். மேலோர் சார்பில் நின்று பார்க்கக் கூடாது. ஆதிக்கங்களின் சார்பில் நின்று பார்க்கக் கூடாது. இறுகிய உளுத்துப் போன, சட்டதிட்டங்கள் நிலையிலிருந்து பார்க்கக் கூடாது. மேலுலக நிலையிலிருந்து பார்க்கக் கூடாது. அடித்தளச் சார்பில் இருந்து பார்க்க வேண்டும்.

இப்படித்தான் ஜீவா மார்க்சீயத்தைத் தமிழோடு, தமிழ்ச் சமூகத்தோடு, தமிழ் வாழ்வோடு இணைத்துப் பார்க்கிறார். வள்ளுவரை, இளங்கோவை, கம்பரை, பாரதியை இப்படிப் பார்த்து மதிப்பிடுகிறார். இது மக்களின் மனங்களினுள்ளே ஊடுருவிச் செல்லும் மண்சார்ந்த மார்க்சீயப் பார்வை. இதனால் தான் உலகப் பேரறிஞன் என்று அவரே கொண்டாடிய திருவள்ளுவரை விமர்சித்துப் பெண் பற்றிய பார் வையில் இவரிடம் வளர்ச்சி இல்லை என்கிறார் ஜீவா.

தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் ஜீவா வுக்கும் உள்ள உறவு பிரபலமானது. திருப்பத்தூர், திருத்தளிநாதர் கோயில் திருவிழாவில், அப்பர் அடிகளைப் பற்றிப் பேச அவரை அழைத்திருந்தார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். ஜீவா பேச்சைக் கேட்கக் கூடியிருந்த கூட்டம் முழுக்க முழுக்க சைவப் பழங்களின் கூட்டம். அந்தக் கூட்டத்தில், அப்பர் வழியாக சமதர்மத்தைப் பேசினார் ஜீவா “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்னும் பாடலை எடுத்துச் சொல்லி, இங்கே அப்பர் அடிகளின் உள்ளடக்கிடக்கை மன்னர் ஆட்சிக்கு எதிரானது, மக்களுக்கு ஆதரவானது, மக்கள் மனதில் அஞ்சாமையை விதைப்பது என விளக்கினார். அதே போல அப்பருடைய சாதி எதிர்ப்புக் கருத்துக்களையும் நவீன கோணத்தில் விளக்கி, அப்பர் பெருமான் சாதி, ஏற்றத்தாழ்வுக்கு எதிரானவர் என்ற கருத்தின் வழியாகத் தற்காலச் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் நுழைந்துவிட்டார் ஜீவா. ஒன்றேகால் மணிநேரம் கழிந்ததும், பேச்சை முடித்து விடட்டுமா? என்றார் ஜீவா. ‘இல்லை. இன்னும் பேசுங்கள்’ என்றனர் சைவப் பழங்கள். கூட்டம் முடிந்ததும், அவர்கள் ஜீவாவைக் கட்டித் தழுவி, இது தான் கம்யூனிசம் என்றால், நாங்கள் எல்லாரும் கம்யூனிஸ்டுகளே என்றார்கள்.

மார்க்சீய அறிஞர்களிடம் ஒரு கேள்வி எழலாம். மார்க்சீயத்தை இப்படி அறிமுகம் செய்தால், மார்க் சீயத்தின் நிலை என்னவாகும்? உண்மைதான். மார்க்சீய அறிஞர்கள் விளக்கும் மார்க்சீயம் வேறு. ஜீவா மக்களுக்கு விளக்கும் மார்க்சீயம் வேறு. ஜீவா மார்க்சீய அறிஞர் என்பதையும், மார்க்சீய அடிப்படை நூல்கள் சிலவற்றை எழுதியவர் என் பதையும் யாரும் மறுக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஜீவா, மக்களிடம் பேசும் போது ஏன் இவ்வளவு எளிமையாகப் பேசுகிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மார்க்சீய தத்துவம் யாருக்குத் தேவை? மார்க்சிய ஒளியில் மக்களுக்குத் தொண்டு செய்யக் களத்தில் நிற்கும் செயல் வீரர்களுக்கு வழிகாட்டத் தேவை. சாதாரண மக்களுக்கு மார்க்சீயம் அப்படியே கெட்டியாகப் புகட்டப்படுமானால், அது செரி மானம் ஆகாது. மார்க்சீயம் சமூக அறிஞர்களால் செரிமானம் செய்யப்பட்டு, மக்கள் விரும்பிச் சுவைக்கும் மார்க்சீயப் பாலாக்கப்பட வேண்டும். சுவை மிக்க மக்கள் பாலாக்கப்பட வேண்டும். அதையே மக்கள் விரும்பிப் பருகுவார்கள். இந்த ரசவாதத்தைச் செய்யத் தெரிந்தவர்களே மக்கள் தலைவர்கள். அவர்களே மக்களுக்குச் சொல்லப் பட வேண்டிய மார்க்சீயம் சார்ந்த கருத்துக்களைத் தங்கள் திறமையால், மக்களுக்கான மொழியில், மக்களை ஈர்க்கும் வகையில், சுவை மிக்க கருத்துக் களாக்கிக் கதைகளாக்கி மக்களுக்குத் தருவார்கள்.

மார்க்சீயத்தின் பக்கம், தொழிலாளி, விவசாயி, உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் மக்களைச் சார்பு கொள்ளச் செய்ய இதுவே சிறந்த வழி.

மார்க்சீயத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், அந்த முயற்சியில் இறங்குவதற்கும் இது தூண்டு கோலாய் அமையும். ஆனால் முதன் மையான இதன் நோக்கம் மக்கள் மனங்களை மலர் விப்பதே. ஒரு ‘மக்கள் ஆதரவு’ உணர்வு நிலையை உருவாக்குவதே. மார்க்சீயத் தத்துவத்திற்கும், மக்கள் மனங்களுக்குமிடையே இப்படித்தான் உறவுப் பாலம் அமைக்க முடியும். இதைத்தான் ஜீவா தன் வாழ்நாள் முழுவதும் செய்தார்.

“ஜீவாவின் சோசலிசம் கம்பன் வழியாக வந்த சோசலிசம், பாரதி வழியாக வந்த சோசலிசம்” எனக் கலாநிதி சிவத்தம்பி கொண்டாடியது இந்தக் கோணத்தில்தான்.

இந்தியாவில் 80ரூ மக்கள் சமய நம்பிக்கை யுள்ளவர்கள். மார்க்சீயம் அந்த சமய நம்பிக் கையின் வழியாக அவர்களினுள்ளேயும் ஊடுருவ வேண்டும். ஊடுருவி, மார்க்சீயத்திற்கு ஆதரவான, கம்யூனிஸ்டு இயக்கத்திற்கு ஆதரவான, ஒரு மன நிலையை அவர்களிடமும் உருவாக்க வேண்டும்.

இந்தப் பேராசையில் தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்தார் ஜீவா. மற்ற மாநிலங்களிலும் தலைமை இடத்திலும், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், மக்கள் நாடக மன்றமும் தனித்தனியே அமைக்கப் பட்டுப் பணியாற்றின. மொழி அடையாளம் இல்லாத அமைப்புகள் அவை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் அடையாளத்தோடு ஒரு பண்பாட்டமைப்பை உருவாக்கினார் ஜீவா. கலையும் இலக்கியமும் இணையும் போது தான் பண்பாட்டுத் தளத்திற்கான போர்க்களம் விரிவாக உருவாகும். எனவே தான் கலை இலக்கியப் பெருமன்றம் என்னும் பெயர் தமிழ்நாட்டு அமைப்புக்குச் சூட்டப்பட்டது. இயல், இசை, நாடகம் மூன்றுக்கும் சம மதிப்புக் கொடுக்கப் பட்டது.

முதல் மாநாட்டில் முழு நிகழ்ச்சிகளையும் ரசித்துவிட்டு, அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு சொன்னார்: “ஜீவா உங்களின் இந்தப் பாதை தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். இந்த மாநாட்டைச் சென்னையில் நடத்த வேண்டும்.” அதுமட்டுமல்ல, மாநாட்டுச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக் கொண்டார்.

அந்த மாநாட்டில் தான், அடித்தள மக்களின் கலைகளையும், இலக்கியங்களையும், சேகரிக்கவும், ஆராயவும் என “நாடோடி இலக்கியக்குழு” என்ற ஒரு குழு பேராசிரியர் நா.வானமாமலை தலை மையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் செயல் பாடுகள்தான் அடித்தள மக்களின் எழுச்சிக்கான ஆற்றல் மூலங்களைத் திரட்டி மக்களுக்கு வழங்கின.

இவ்வாறு அணுகும்போது, தமிழ் வழியாக, தமிழ் இலக்கியங்கள் வழியாக, ஜீவா மக்களுக்கு மார்க்சீயத்தை எப்படி அறிமுகப்படுத்தினார், தமிழ் வழியாக மார்க்சீயத்தையும் தமிழையும் எப்படி இணைத்தார், எழுச்சியை ஏற்படுத்தினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அந்தத் திசைவழியைப் பலப்படுத்த வேண்டி நாம் உழைக்க வேண்டும்.

கடுமையான காலங்கள் நம்மை எதிர் நோக்கி யுள்ளன. முற்போக்கான முகங்களோடு மதவாத சக்திகள் தமிழகத்தினுள்ளே ஊடுருவிக் கொண்டிருக் கின்றன. இதை எதிர் கொள்ள நம் பண்பாட்டுப் போராட்டத்தை வலுப்படுத்தியாக வேண்டும். ஜீவாவின் பாதையை நாம் விரிவுபடுத்த வேண்டும். அவர் தீட்டித் தந்த தமிழ் ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும்.

(19.1.2013 அன்று திருத்துறைப் பூண்டியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பாக நடந்த ஜீவா 50 வது ஆண்டு நினைவு விழாவில் பேசியது.]

Pin It