நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.
தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் என்.சி.பி.எச்.சின் பங்களிப்பு ஆழமானது; தனித்தன்மை வாய்ந்தது. சமூக முன்னேற்றம் – மாற்றம் என்ற உயரிய இலட்சியத்தோடு தொடங்கப்பட்ட பதிப்புப் பயணம்.
இந்நிறுவனத்தைத் தொடங்கியவர்களும் இதில் பணியாற்றியவர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடும் சமுதாய நோக்கத்தோடும் அல்லும் பகலும் தங்களது அயராத உழைப்பைச் செலுத்தியுள்ளனர்.
தொடக்கக் காலத்தில் சோவியத் நாட்டில் அச்சடிக்கப்பட்ட தரமான தமிழ் நூல்களை மிகக் குறைந்த விலையில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் சென்று ஓர் அறிவுப்புரட்சிக்கே அடித்தளமிட்ட நிறுவனம் என்.சி.பி.எச்.
புத்தக விற்பனையகமாகத் தொடங்கப்பட்டு விதவிதமான நூல்களை அடுத்தடுத்த நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று வழிகாட்டியவர்களின் இலட்சியநோக்குடனான திட்டமிடலாலும், பணியாற்றியோரின் சமூக உணர்வுடன் கூடிய செயற்பாட்டாலும் புத்தக விற்பனையில் புத்தெழுச்சியை ஏற்படுத்தியது, என்.சி.பி.எச். மிக விரைவில் இந்நிறுவனம் ஒரு பதிப்பகமாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றது.
சமூக மாற்றத்திற்கு நெம்புகோல்களாகத் திகழும் அரசியல், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட நூல்களையும் மக்களுக்கு மிகவும் பயன்படும் மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, பொதுஅறிவு, வாழ்வியல், மொழிப்பயிற்சி, விளையாட்டு, குழந்தை இலக்கியம் உள்ளிட்ட நூல்களையும் வித்தியாசமான தலைப்புகளில் அதிக எண்ணிக்கையில் பதிப்பித்த நிறுவனம் என்.சி.பி.எச். பதிப்பகமாகவும் விற்பனையகமாகவும் விளங்கியதாலும், மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற இலட்சியத்துடன் உயிரோட்டமாகச் செயல்பட்டதாலும், வணிக நோக்கோடு அல்லாமல் சமூக மாற்றத்திற்கு வித்திடுபவை புத்தகங்கள் என்ற உணர்வுடன் செயல்பட்டதாலும் தமிழக மக்களின் உளப்பூர்வமான அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெற்ற நிறுவனமாக வளர்ந்தது.
விற்பனையகம், பதிப்பகம் என்று பயணித்த நிறுவனம் நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ் என்ற புத்தகங்களை அச்சிட்டுக் கொள்கிற அடுத்த நிலைக்கு உயர்ந்தது. அண்ணா சாலையில் அச்சகம் தொடங்கப்பட்டது.
நிறுவன விரிவாக்க முயற்சியாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1971ஆம் ஆண்டு இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு நவீன இயந்திரங்களைக் கொண்ட அச்சகமும், புத்தகங்களைப் பாதுகாக்கும் இடங்களும் செயல்பட வழிவகைகள் செய்யப்பட்டன. 1977இல் நிறுவனத்தின் தலைமையகமே அம்பத்தூரில் செயல்படத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் புத்தகக் கண்காட்சி என்ற ஒரு கலாசாரத்திற்கு அடித்தளமிட்டது என்.சி.பி.எச். என்றால், அதில் மிகையில்லை. மக்களுக்கு நூல்களின் மீதும் வாசிப்பின் மீதும் நாட்டம் இல்லை என்று புலம்பிக் கொண்டிருக்காமல் மக்களை நோக்கி நூல்களை அரிதின் முயன்று எடுத்துச் சென்று புத்தகங்களின் மீது ஈடுபாட்டை உருவாக்கும் நோக்கில் விதவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றில் வெற்றி கண்ட நிறுவனம் என்.சி.பி.எச்.
அறிவார்ந்த சமூகத்தில்தான் நல்ல அரசியல் முகிழ்க்கும்; வாசிக்கும் மக்கள்தான் யோசிப்பர்; மக்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் ஆற்றல் மகத்தான நூல்களுக்கே உண்டு என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அறிவுப் பயணத்தைத் தொடங்கிய என்.சி.பி.எச். எழுபத்தைந்தாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்தோர், உதவியோர், உடனிருந்தோர், ஒத்துழைத்தோர் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்; நன்றிக்குரியவர்கள்.
இந்நிறுவனத்தின் பவளவிழா நிறைவை எழுச்சிமிகு நிகழ்வாக்குவோம்! எழுபத்தைந்தாண்டு கால அறிவுப் பயணத்தை ஆவணப்படுத்துவோம்! எந்த இலட்சியத்திற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதோ அந்த உன்னத இலட்சியம் ஈடேற தொண்டூழியம் தொடரட்டும்! அறிவார்ந்த தமிழகம் மலரட்டும்!
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு