“பேரண்டத்தின் அளவு மற்றும் வயது சாதாரண மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது. அபரிமிதத்திற்கும் நித்தியத்திற்கும் இடையில் எங்கோ தொலைந்து போனது நமது சிறிய பூவுலக வீடு. ஒரு பேரண்டக் கண்ணோட்டத்தில், பெரும்பாலான மனிதக் கவலைகள் அற்பமானவை, சிறுபிள்ளைத்தனமானவை என்று கூடத் தோன்றுகின்றன.” - கார்ல் சாகன், காஸ்மோஸ்

சர்வதேசச் சமூகம் வாலாது நின்று கைபிசைந்த பாலஸ்தீன காஸாவின் குழந்தைகள் மற்றும் பெண்களின் இனப்படுகொலை உள்ளிட்டு 2023 ஆம் ஆண்டில் நாம் கண்ட பெரும் அழிவுகள் பல. அவையெல்லாம் உண்மைதான். தாங்க முடியாத மனத்துயரை அளிப்பவைதான்.

ஆனால் பேரண்டத்தின் அளவுகளையும் அதன் பிரளயங்களையும் விளக்கும் அறிஞரும் மனிதாபிமானியும் பகுத்தறிவாளருமான கார்ல் சாகன் மானுடக் கவலைகள் குறித்து கூறிய சொற்கள் ஆழமானவை. அவை பேரழிவின் விளிம்பில் பூவுலகை நிறுத்தியிருக்கும் புவி வெப்பமாதலின் பின்னணியில் ஏனைய பிரச்சனைகள் குறித்து காணும்போதும் பொருந்துகின்றன. ‘பேரிடர்களின் தொடரோட்டத்தில்’ பூவுலகை தள்ளிவிட்டுக் கொண்டிருக்கும் ‘புவி வெப்பமாதல்’ குறித்து சிறிதளவும் கவலையின்றி தனது சர்வதேச ஆதிக்கத்துக்கு வருவதாக அது கருதும் குந்துமணி அளவு ஆபத்திற்கும் எதிர்வினையென குழந்தைகளின் பிணமலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.chennai flood 2023 389மானுட குலம் எதிர்நோக்கும் பேரிடர்களின் தொடரோட்டத்தின் ‘தூரத்து இடிமுழக்கம்’ என நம்மை வந்து சேரும் பல அறிகுறிகளை கேட்டும் பார்த்தும் வருகின்றோம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகைப் புரட்டிப் போட்ட கொரோனா முதல் மானுடம், மானுடமாய் உருவாகிய காலம் முதல் சமீபத்திய காலம் வரை ‘புயல்’ என எதனையும் கண்டிராத ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் புயல்கள், உலகின் அதிகமான மழைபொழியும் இடமெனப் பெயர் பெற்ற சிரபுஞ்சியிலும் நமக்கு அருகமைந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மழை அளவு குறைவு, வறட்சி, உத்தரகாண்டில் வெள்ளம், சாதாரணமாகப் பனி விழும் வட அமெரிக்கக் காடுகளில் காட்டுத் தீ என்பவை கேட்ட செய்திகள். சென்னை, செங்கை பகுதியிலும் தென்தமிழகத்திலும் நாம் இப்போது அடிக்கடி பார்க்க ஆரம்பித்துள்ள ‘வரலாறு காணாத மழை’! இவை எல்லாம் புவி வெப்பமாதலோடு தொடர்பில்லாதவை என நாம் கூற இயலாது.

2015ஆம் ஆண்டு 12 டிசம்பர் 2015 அன்று பாரிஸில் நடந்த ஐ.நா சபை காலநிலை மாற்ற மாநாட்டில் (COP21) ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டப்பூர்வ சர்வதேச ஒப்பந்தமாகும். இது 196 தரப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 4 நவம்பர் 2016 அன்று நடைமுறைக்கு வந்தது.

“உலக சராசரி வெப்பநிலையின் அதிகரிப்பை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளைவிட 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே” வைத்திருப்பது மற்றும் “தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான” முயற்சிகளைத் தொடர்வது இதன் முக்கிய குறிக்கோள்.

புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த, பசுங்குடில் வாயு உமிழ்வுகள் 2025க்கு முன் உச்சத்தை எட்ட வேண்டும், 2030 க்குள் 43% குறைய வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட வரைமுறை. பாரிஸ் ஒப்பந்தம் பலதரப்பு காலநிலை மாற்ற செயல்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல், ஏனெனில், இது முதல்முறையாக, அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வழிவகுத்தது. அமெரிக்காவின் வழக்கமான மேலாதிக்கப் போக்கு, ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நாக்கு எல்லாம்

மீறி இது கையெழுத்தானது. பராக் ஒபாமாவின் ஊசலாட்டம், பின்னர் வந்த டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிக்காது என்றெல்லாம் சொல்லி வந்தது எல்லாம் தாண்டி பின்னர் 2021இல் டிரம்பைத் தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் புண்ணியத்தில் ஒப்பந்தம் மீண்டும் மூச்சுவிட்டது. இந்த நிலையில் சமீபத்திய காலநிலை மாநாடு COP28 துபாய் நகரில் 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 13 வரை நடந்தது.

COP28 ஏன் முக்கியமானது?

பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஏற்கப்பட்ட நிலையில், COP28 என்பது ஒப்பந்தத்தை செயல்படுத்துவது, குறிக்கோளையும் செயலையும் மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தது

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2030ஆம் ஆண்டளவில் பசுங்குடில் வாயு உமிழ்வுகள் 43% குறைக்கப்பட வேண்டும் என்று ஐநாவின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் சமீபத்திய அறிவியல் சுட்டிக் காட்டுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்பநிலை உயர்வை

1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தவும், அடிக்கடி கடுமையான வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் மழைப்பொழிவு உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்கவும் இது மிகவும் முக்கியமானது. மாநாட்டில் பேசிய இந்திய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர், பூபேந்தர் யாதவ், இந்தியாவின் சாதனைகள் எனப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டார்:

  • பசுங்குடில் வாயு உமிழ்வுகளிலிருந்து பிரித்த பொருளாதார வளர்ச்சிக்கான எங்கள் முயற்சியில், இந்தியா, 2005-2019க்கு இடையே தனது ஜிடிபியின் உமிழ்வுச் செறிவை 33% குறைத்துள்ளது, இதன் மூலம் 2030ஆம் ஆண்டிற்கான இலக்கை, 11 ஆண்டுகள் முன்னதாகவே எட்டியுள்ளது.
  • 2030ஆம் ஆண்டிற்கான இலக்கைவிட ஒன்பது ஆண்டுகள் முன்னதாகவே, நிறுவப்பட்ட மின்நிலையத் திறனில் 40% புதைபடிம எரிபொருள் சாராதவையாக இருப்பதை இந்தியா சாதித்துள்ளது. 2017-க்கும் 2023க்கும் இடையில், இந்தியா சுமார்  100GW நிறுவப்பட்ட மின்நிலையத் திறனைச் சேர்த்துள்ளது, இதில் 80% புதைபடிம எரிபொருள் சாராதவை.

உண்மையென்றால் பாராட்டத்தக்கதுதான். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு பெரிய அளவில் புவி வெப்பமாதலைத் தடுக்காது என்பதுதான் உண்மை. 2022இல் தமிழகத்தில் நிறுவப்பட்ட மின்நிலையத் திறனில் 50%க்கும் மேல் மீளுருவாக்க ஆற்றல் நிலையங்களான காற்றாலைகளும் சூரியஒளி ஆலைகளும்தான். ஆனால் ஓராண்டில் உற்பத்தி செய்த மின்னாற்றலில் இவற்றின் பங்கு சுமார் 10% தான். அவை அடிப்படை மின்சுமை தாங்கும் நிலையங்களாக இருக்க இயலாது. இந்த எதார்த்தம் காரணமாக இந்தியா இன்றும் நிலக்கரி பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களையே நம்பி இருக்க வேண்டி யுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்நுகர்வு 8.2% அதிகமாகியுள்ளது. இனி மேலும் 20 ஆண்டுகளுக்கு இந்த வளர்ச்சி இருக்கும். அதில் பெரும்பகுதி நிலக்கரி பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களாகத்தான் இருக்க இயலும். ஓரளவு அணு மின்நிலையங்கள் இருக்கலாம். சீனா உள்ளிட்ட பெரும்பாலான வளர்முக நாடுகளின் நிலை இதுதான். இந்தியா போன்ற நாடுகள் இந்த வளர்ச்சியைக் குறைத்தால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி குன்றும். வேலையின்மை பெருகும். சமூகம் அமைதியும் மேம்பாடும் இழக்கும்.

புதிய இலக்குகள்

COP28 சில புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது:

  • 2030ஆம் ஆண்டு வாக்கில் பசுங்குடில் வாயு உமிழ்வை 2019ஆம் ஆண்டில் இருந்ததில் 43%ஐ குறைக்க வேண்டும்.
  • 2030ஆம் ஆண்டு வாக்கில் மீளுற்பத்தி ஆற்றல் மின்நிலையத்திறனை 2019ஆம் ஆண்டு இருந்ததை போல் 3 மடங்கும் மின்னாற்றல் பயன்பாட்டுத் திறனை இரு மடங்கும் அதிகரிக்க வேண்டும்.

இவை மிகவும் கடினமான இலக்குகள். குறிப்பாக இந்தியா போன்ற வளர்முக நாடுகளின் வளர்ச்சி மேம்பாடு, சமூக நலன் ஆகியவற்றை பாதிக்கும் சாத்தியங்கள் கொண்டவை. இது நாம் வாழும் காலத்தின் முரண்பாடு. அத்தோடு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தங்கள் பொறுப்பைத் துறந்து, சீனா, இந்தியா, பிரேசில் போன்ற வளர்முக நாடுகள் மீது சுமையை ஏற்றியுள்ளதும் இதற்குள் உள்ளது. இந்தியா இதனை எப்படி சாதிக்கப் போகின்றது என்பதை அரசு விளக்க வேண்டும்.

மறுபுறம் இந்தக் காலநிலை மாற்ற மாநாடு (COP28) புதிய அணு ஆற்றல் வரலாறு படைத்துள்ளது. 1995இல் வருடாந்திர காலநிலை உச்சி மாநாடுகள் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, அணு ஆற்றல் உள்ளிட்ட குறைந்த - உமிழ்வு தொழில் நுட்பங்களை ஆழமான மற்றும் விரைவான ‘கார்பன் சார்புக் குறைவை’ அடைய உதவும் வகையில் நிறுவ கையெழுத்திட்ட 198 நாடுகள் அதிகார பூர்வமாக அழைப்பு விடுத்தன. அறிவியல்பூர்வமான, எதார்த்தமான முடிவுதான். ஃபுக்குஷிமாவில் பெரும் விபத்து ஏற்பட்ட போது உலகில் இயங்கிக் கொண்டிருந்ததைக் காட்டிலும் இன்று அதிக எண்ணிக்கையில் அணு உலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உலகின் பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட அணு உலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. ஜப்பான் தான் நிறுத்திய அணு மின்நிலையங்களை மீண்டும் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவு அணு ஆற்றல் உற்பத்தியில் ஈடுபடும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வாய்ப்பையும் பொறுப்பையும் அதிகரித்துள்ளது. 1994ஆம் ஆண்டில் சர்வதேச அணு ஆற்றல் முகமையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் நாடுகள் சுயேச்சையான, சுதந்திரமான, அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட அணு ஆற்றல் ஒழுங்காற்றல் வாரியத்தை நிறுவ வேண்டும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. கனடா, ஃபிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் அதனை நிறுவிவிட்டன. இந்தியா இன்னும் பழைய அதிகாரமற்ற பெயரளவிலான ஒழுங்காற்றல் வாரியத்தோடு தொடர்கின்றது. இது மக்களுக்கு ஆபத்தானது. அணு ஆற்றல் துறைமீதான நம்பிக்கையை இழக்கச் செய்வது.

அரசு செய்ய வேண்டியதை அரசு செய்ய வேண்டும். அது ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். அது அரசின் கடமை. அரசு அப்படிச் செயல்படுவதை கண்காணிப்பதும் உறுதி செய்வதும் குடிமைச் சமூகத்தின் கடமை. இந்தச் சிக்கலான நிலையை, பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் சென்று விளக்குவதும் அவர்களது அறிவார்ந்த தலையீட்டிற்கு உதவுவதும் எழுத்து, பதிப்பு மற்றும் ஏனைய ஊடகங்களில் உள்ளோருக்கு காலம் அளித்துள்ள கடமை.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Pin It