நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், மிகச்சிறந்த அறிவுப் போராளியுமான தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி மறைவு என்னைப் பேரதிர்ச்சிகொள்ளச் செய்தது.  24-12-10 அன்று காலையில் அவர் காலமான செய்தியை என்.சி.பி.எச். நிறுவனத்தின் செயல்இயக்குநர் தோழர் ஜி. துரைராஜ், மதுரை மண்டலநிர்வாகி தோழர் அ. கிருஷ்ண மூர்த்தி இருவரும் இந்தத் துயரச் செய்தியைக் கூறினர்.  நானும் எனது குடும்பமும் தந்தையை இழந்த சோகத்திற்கு ஆளானோம்.

அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும், பின்பு இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சியின் போராளியாகவும் உறுதி குலையாத நெஞ்சத்தோடு போராடியவர்.  தமிழகத்தில் மார்ச்சீய லெனினியத்தைப் பரப்புவதையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்.  கடந்த அறுபது ஆண்டுகளில் லட்சக்கணக்கான சோவியத் வெளியீடுகளைத் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் கொண்டு போய்ச் சேர்த்த பெருமை அவரைச் சேரும்.  மேலும் அவர் காலத்தில் மூவாயிரம் நூல்களைப் பதிப் பித்தவர் என்ற புகழும் என்றும் நிலைத்திருக்கும்.  புத்தகங்களுக்காகவே வாழ்ந்தவர் அவர் என்றால் அது மிகையாகாது.

1960ஆம் ஆண்டு விருதுநகரில் கல்லூரி மாண வனாக, ஏ.ஐ.எஸ்-இல் இணைந்து நான் பணி யாற்றிய போதுதான் முதன்முதலாக தோழர் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சந்தித்தேன்.  அப்போது விருதுநகர் தேசபந்துமைதானத்தில் என்.சி.பி.எச். புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.  புத்தக விற்பனையில் நானும் தோழர்களும் உதவி னோம்.  மிக மலிவானவிலையில் ஒரு புத்தகம் 5 காசு, 10 காசு விலையில் கூட விற்பனை செய்தோம்.  உதாரணமாக சிலந்தியும் ஈயும் என்ற புத்தகம் 5 காசுதான்.  ஒருநாள் தோழர் எஸ். உலகநாதன் எங்களைக் கட்சி அலுவலகத்திற்கு அழைத்தார்.  சென்னையிலிருந்து தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி வந்திருப்பதாகவும், அவர் மாணவத் தோழர்களைச் சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.  அவரைச் சந்தித்தோம்.  எங்களோடு கைகுலுக்கினார்.  கை வலிக்கும்படி குலுக்கினார்.

பின்பு மார்க்சைப்பற்றியும் அவரது மூலதனம் நூலையும் பற்றி எங்களிடம் ஆங்கிலத்தில் விரிவாகப் பேசினார்.  பின்பு “மாணவர்கள் சிறந்த போல்ஷி விக்குகளாக மாறவேண்டும்.  மூலதனம் நூறு செட் கொண்டு வந்திருக்கிறேன்.  அதைநீங்கள் உங்கள் கல்லூரியில் விற்பனை செய்யவேண்டும்” என்றார்.  ஆங்கில டாஸ் கேபிடல் பெரிய புத்தகமாக இருந்தது.  அது மூன்று புத்தகங்களும், சர்ப்லஸ் வேல்யு இரண்டு புத்தகங்களும் சேர்த்து ஐந்து நூல்களும் ரூ. 2.50க்கு விற்பனை செய்யுமாறு கூறினார்.  ஒரு வால்யும் 50 காசுதான்.

இரண்டு மாட்டுவண்டிகளில் ஏற்றி விருதுநகர் செந்தில் குமார்நாடார் கல்லூரி வாசலில் குவித்து விற்பனை செய்தோம்.  விலைமலிவாக இருந்ததால் மாலை நான்கு மணிக்குள் மாணவர்கள் அள்ளிச் சென்றனர்.  பிந்தியவர்களுக்குக் கிடைக்காமல் ஏக்கத்தோடு சென்றனர்.  மாலையில் ஆர். ராதா கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ 250 ஐக் கொடுத்தோம்.  அவர் எங்களைப் பாராட்டிவிட்டு எங்களுக்கு ஐந்து பேருக்கும் ஆளுக்கொரு செட் வழங்கி சாப்பிடவும் பணம் கொடுத்தார்.  நீங்கள் ஏன் ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்கள், தமிழில் பேசக்கூடாதா என்று கேட்டேன்.  அதற்குத் தோழர் உலகநாதன் “அவன் ஆந்திராக்காரன், பலவருசமாகியும் தமிழ் படிக்காமல் இருக்கான்.  நீ தெலுங்கில் பேசு” என்று கூறினார்.  அன்று முதல் இறுதிவரை அவரைப் பார்த்தால் தெலுங்கில் பேசுவதை வழக்கமாகக் கொண்டேன்.

புத்தகங்களை அவர் மிகவும் வேகமாக வாசிக்கக் கூடியவர்.  ஏராளமாய்ப் படித்தவர்.  கடைசியாக ஐந்து மாதங்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்த போது எமிலிஜோலாவின் நாநா ஆங்கில நாவலைப் படித்துக் கொண்டிருந்தார்.  அவரது வாழ்க்கைப் பயணம் குறித்து அவ்வப்போது கூறுவார்.  அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு மூன்றாண்டு களுக்கு முன்பிருந்தே வேண்டுகோளாக வைத்தேன்.  பின்பு தோழர் என். ராமகிருஷ்ணனும் அவரிடம் பேசியும் பயனில்லை.  ஒரு கேள்வித்தாளைத் தயாரித்து அவரிடம் நானே நேரில் கொடுத்தேன்.  பதில் எழுதவில்லை.  சுயசரிதை எழுதுமளவுக்கு நான் பெரியவனில்லை என்பது அவரது கருத்தாக இருந்தது என்பதுதான் உண்மை போலும்.

இந்த மகாசிற்பி ஆந்திராவில் காளஹஸ்தி நகரில் 6-12-1924-இல் ராவுரி வெங்கடசாமி-வெங்கட் ரமணம்மா தம்பதிகளின் கடைசி மகனாகப் பிறந்தார்.  அவருடன் பிறந்தவர்கள் நான்கு அண்ணன்களும் ஒரு அக்காவும் ஆவர்.  ஓரளவு வசதிமிக்க குடும்ப மாதலால் டொனகொண்டா, தெனாலி, விஜய வாடா, கம்மம் ஆகிய இடங்களில் உயர்நிலைப் பள்ளி வரை படித்தார்.  பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் 1945-இல் பி.எஸ்.ஸி படித்து முடித்தார்.  1942இல் இண்டர்மீடியட் படிப்பை முடித்தவுடனேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார்.  தோழர்கள் எம்.பி. சீனிவாசன், பி. ராமச்சந்திரன், கே.ஆர். கணேசன், கே.வி.சங்கரன், கிரிஜா போன்றவர்கள் அவருடன் கட்சி உறுப்பினர்களாயிருந்தனர்.  தோழர் எம்.பி. சீனிவாசன் ராதாகிருஷ்ணமூர்த்தியை பிராட்வேயி லிருந்த கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தோழர்கள் எம்.ஆர். வெங்கட்ராமன், ஏ.எஸ்.கே. அய்யங்காரிடம் அறிமுகப்படுத்தினார்.  தோழர் எம்.ஆர்.வி. தனிக் கவனம் செலுத்தி இவருக்குத் தத்துவ ஞான அறிவைப்புகட்டினார்.  ஏ.எஸ்.கே. தனது நெருக்கமான தோழராய் உருவாக்கினார்.

1944-ஆம் ஆண்டு முதல் தோழர்கள் சர்மா, வி.பி.சிந்தன் இருவருடன் இணைந்து பணியாற்றினார்.  1946-இல் கட்சியில் தலைமறைவுக்கமிட்டி, சட்ட பூர்வ கமிட்டி என்று பிரிக்கப்பட்டது.  சட்டபூர்வ கமிட்டிக்கு தோழர் சி.எஸ். சுப்பிரமணியம் அவர்களும் தலைமறைவுக் கமிட்டிக்கு தோழர் ஏ.எஸ்.கே. அய்யங்காரும் செயலாளர்களாக இருந்தனர்.  தோழர் ஆர். இராதாகிருஷ்ணமூர்த்தி சட்டபூர்வக் கமிட்டியில் இணைக்கப்பட்டு முழுநேர ஊழியரானார்.

இவரது சகோதரர் ராவுரிசுப்பிரமணியன் ரயில்வே தொழிற்சங்கத்தில் தீவிரமாய் பணியாற்றி யதால் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்திக்கு பன்னிரண்டு வயது முதலே கட்சியோடும், செங்கொடித் தொழிற் சங்கத்தோடும் நெருங்கிய தொடர்பு இருந்தது.  மேலும் அன்று கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் சி.ராஜேஸ்வரராவ் இவர்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.  அதனால் இளவயதிலேயே கம்யூனிஸ்டுக் கட்சியுடன் இவர் நெருக்கமாக வளர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.  1946-இல் நடந்த ரயில்வே தொழிலாளர்களின் மகத்தான போராட்டத்தில் தனது அண்ணனுடன் இணைந்து பணியாற்றினார்.  அதே ஆண்டில் சென்னையிலிருந்த தெலுங்குத் தோழர்களின் கட்சியூனிட்டுக்குச் செயலாளராகத் தேர்வு செய்யப் பட்டார்.  சென்னையில்அமைக்கப்பட்ட இப்டா (இந்தியமக்கள் கலைமன்றம்) அமைப்புக்குச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.  தோழர் எம்.பி.சீனிவாசன் தலைவரானார்.

ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து தொழிற் சங்கப் பணிகளில் பொறுப்பினராகச் செயல் பட்டார்.  சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கம், என்ஜினியரிங் தொழிலாளர் சங்கம், துறைமுகத் தொழிலாளர் சங்கம், பி.ஆர்.அன் சன்ஸ் தொழி லாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கங் களில் பணியாற்றினார்.  அக்காலத்தில் சென்னையில் துப்புரவுத் தொழிலாளர்களின் ஒருமாபெரும் போராட்டம் நடைபெற்றது.  தோழர்கள் ஆர். இராதா கிருஷ்ணமூர்த்தி வி. வெங்கட்ராமன், பி. கருப்பண்ணன் தலைமையில் கோட்டை நோக்கித் தொழிலாளர் களின் பேரணி நடைபெற்றது.  போலீசார் போராளியைத் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர்.  இதில் தலைவர்கள் உட்பட ஏராளமான தொழி லாளர்கள் காயமடைந்தனர்.  தடியடியில் ஒரு பெண் தொழிலாளி மரணமடைந்தார்.

1946-இல் நடந்த போலீசார் வேலைநிறுத்தம், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தங்களை ஆதரித்து முன்னணியில் நின்று செயல்பட்டார்.  அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இதர பகுதி தொழிலாளர்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார்.  பம்பாயில் ராயல் கப்பல் படை வீரர்களின் புரட்சிக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்களின் பேரணி நடைபெற்றது.  இப்பேரணிக்கு தேவகிவாரியர், ஆர்.ராதாகிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றுச் சென்றனர். அப்போது வெள்ளைக்கார போலீஸ் கமிசனர் ஹியூம் பேரணியைத் தடுத்து நிறுத்தினான்.  சுடப்போவதாக மிரட்டினான்.  மாணவர்களும் பொதுமக்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி அருகில் சாலைமறியல் செய்தனர்.

ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி போலீஸ் கமிசனர் இடம் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  மாணவர்கள் பணியமறுத்தனர்.  இந்தத் தகராறில் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி உட்பட பத்துப்பேரைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு ஜாமீனில் வெளிவந்தனர்.  கட்சித் தலைமை அவரைத் தலைமறைவாகச் செல்லும்படி பணித்தது.  அவர் தோழர் எம். அனுமந்தராவுடன் தலைமறை வாக இருந்தார்.  1948-இல் கைது செய்யப்பட்டு தலைவர்களுடன் வேலூர் சிறையிலடைக்கப் பட்டனர்.  அவர் மொத்தம் மூன்றாண்டுகள் சிறையில் கழித்துள்ளார்..

சிறையில் இருந்தபோது நடைபெற்ற உண்ணா விரதம் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங் களிலும் பங்கேற்றார்.  பலமுறை தடியடிகளுக்கும் சித்ரவதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.  போலீசார் மீது தாக்குதல் தொடுத்ததாக அவர் மீதும் பல தோழர்கள் மீதும் வழக்குத்தொடரப்பட்டது.  விடுதலைக்குப் பின்னரும் அவர் காளஹஸ்தியில் தான் இருக்க வேண்டுமென்று தடை விதிக்கப் பட்டது.  ஆனால் இந்தத் தடைகளை மீறிக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார்.

1951-இல் கட்சி மார்க்சீய லெனினியத்தை மக்களிடம் பரப்புவதற்கு ஒரு புத்தகாலயத்தைத் துவக்கியது.  அதுவே நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மாகும்.  கட்சி ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி அவர் களை இங்குப் பணியாற்றும்படி பணித்தது.  1953-ஆம் ஆண்டு இறுதியில் இவரது திருமணம் நடை பெற்றது.  மனைவி பெயர் சத்ய நாராயணம்மா.  இருவரும் அன்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தனர். குழந்தைகள் இல்லாவிட்டாலும் இரண்டு பெண் களை வளர்ப்பு மகள்களாக வளர்த்தனர்.  கட்சியில் பணியாற்றும் எண்ணற்ற இளைஞர்கள்தான் எங்களுக்குப் பிள்ளைகள் என்று ஆர். ராதா கிருஷ்ணமூர்த்தி கூறுவதுண்டு.

என்.சி.பி.எச் நிறுவனத்தின் செயலராகவும் இயக்குநராகவும் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி

பல ஆண்டுகளாகத் திறம்படச் செயலாற்றினார்.  தொடர்ந்து நிர்வாக இயக்குநராக இறுதிவரை செயல்பட்டுள்ளார்.  1965-இல் இவர் முதன்முறையாக சோவியத் யூனியன் சென்று வந்தார்.  மீண்டும் சர்வதேச புத்தகக்கண்காட்சியை முன்னிட்டு ரஷ்யா சென்றார்.  கிழக்கு ஜெர்மனி, ஹாங்காங், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்து உள்ளார்.  1990-ஆம் ஆண்டில் மக்கள் சீனத்துக்குச் சென்று வந்தார்.

கடந்த அறுபதாண்டுகளாகத் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கருத்துவளர்ச்சிக்கு அவரது பங்கு மகத்தானது.  எத்தகைய நிலை மையிலும் உறுதிகுன்றாமல் நின்றார்.  எவ்வித சலனமுமின்றி உறுதியாக மார்க்சிய லெனினியத் திற்காகவே வாழ்ந்தவர்.  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஒருமாபெரும் அமைப்பாக வளர்ந்து உள்ளதற்கு ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தியின் பங்கு முக்கியமானது.  அது தொடர்ந்து வளர்வதற்கான நிர்வாக அமைப்பையும், விற்பனை அமைப்பு களையும் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.  அவர் ஒரு மகாசிற்பி என்பதை நிரூபித்திருக்கிறார்.

அவர் அடிக்கடி சொல்வது “கம்யூனிஸ்டுகள் ஏராளமாய்ப் புத்தகங்கள் படிக்கவேண்டும்.  ஏராள மாய் நூல்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்” என்பார். 

நெஞ்சிருக்கும் வரை அவரது நினைவிருக்கும்!

Pin It