village womenஒரு சிற்றூராட்சித் தலைவர் தன் பொறுப்புக்களை அந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிற்றூராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்தார் என்ற செய்தி ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. அவர் தான் ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வந்தது என்பதையும் விளக்கியுள்ளார். கடந்த 10 மாதங்களாக பணியாளர்களுக்குச் சம்பளம் போட முடியவில்லை, அதுபோக அன்றாட நடைமுறைச் செலவுகளுக்குக்கூட பணம் இல்லாத சூழலில் என் சொந்தப் பணம் ரூ.2.60 லட்சத்தையும் செலவு செய்து விட்டேன், அதன் பிறகும் கூட பலமுறை நேரடியாகவும், எழுத்து மூலமும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நிதி விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே அந்தப் பொறுப்புக்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்து விட்டேன் என விளக்கியுள்ளார். இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணிகளை தரவுகள் இல்லாமல் விவாதிப்பது நியாயமற்றது. எனவே இந்த நிகழ்வு கூறும் செய்தியை மட்டும் நம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

இத்துடன் இன்னொரு நிகழ்வையும் சேர்த்துப் பார்த்தால் இந்த நிகழ்வு உணர்த்தும் பொருளை உணர்ந்து கொள்ள முடியும். ஒரு கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு உயர்நீதி மன்றத்திற்குச் செல்கிறது. மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதையும் மத்திய அரசின் பாரத தூய்மை இந்தியா திட்டம் செயலாக்கத்தையும் கிராமப் பஞ்சாயத்தின் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீறி செயல்படுகின்றார்கள். இது ஊராட்சிச் சட்டத்திற்கும், அரசாணைகளுக்கும் புறம்பானது. இது அதிகாரப்பரவலின் அடிப்படை நோக்கங்களுக்கே எதிரானது என்று வழக்குத் தொடுத்துள்ளனர். ஊராட்சிகளில் எடுக்க வேண்டிய முடிவுகளை அதிகாரிகள் எடுத்து எங்கள் நிர்வாகத்தில் தலையிடுவது நியாயமற்ற செயல் என்று வழக்கில் முறையிட்டுள்ளனர். இதற்கு நீதி மன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இத்துடன் இன்னொரு நிகழ்வையும் அலசிப் பார்த்தால் இதன் மூலத்தை நாம் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். கிராம சபையை கூட்டுவதற்கான அதிகாரம் கிராமப் பஞ்சாயத்துக்களிடம் தான் உள்ளது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நாங்கள் ஏன் உத்தரவு வாங்க வேண்டும் என்று கூறி உயர்நீதி மன்றம் சென்றார் ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர். அதற்கு உயர்நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. கிராம சபையைக் கூட்டும் அதிகாரம் கிராமப் பஞ்சாயத்துக்கே உள்ளது என்றும், கிராமப் பஞ்சாயத்து எத்தனை முறை வேண்டுமானாலும் கிராமசபையைக் கூட்டலாம். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி பெறத் தேவை இல்லை என தீர்ப்பை வழங்கியது. அதன் பிறகு பல கிராமப் பஞ்சாயத்துக்களில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடந்த செய்திகள் செய்தித்தாள்களில் வெளிவந்ததை நாம் பார்த்தோம். இதேபோல் இன்னொரு நிகழ்வு, சிற்றூராட்சி செய்ய வேண்டிய பணிகளை உயர்நிலையில் அதிகாரிகள் டெண்டர் விட்டு வேலைகளை ஒதுக்கியதை எதிர்த்து பஞ்சாயத்து தலைவர்கள் உயர்நீதி மன்றம் சென்றனர், அந்த வழக்கிலும் உயர்நீதி மன்றம் சிற்றூராட்சிப் பணிகளை அந்தந்த ஊராட்சிகள்தான் நடைமுறைப்படுத்திட வேண்டும், அந்தச் செயல்பாடுகளை மையப்படுத்தி உயர்நிலையில் டெண்டர் விட்டு செயல்படுவது தவறு என்று உத்தரவிட்டு இனிமேல் அப்படி பணிகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தியது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் ஒரே செய்தி, சட்டங்கள் மூலமும், அரசின் உத்தரவுகள் மூலமும் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை உள்ளாட்சித் தலைவர்களால் எடுக்க முடியாத சூழலுக்கு நிர்வாகக் கட்டமைப்பு வந்து நிற்கிறது என்பது தெளிவாகின்றது. கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் எடுத்துச் செயல்பட உயர்நீதி மன்றம் செல்ல வேண்டியுள்ளது என்பது உள்ளாட்சியைப் பற்றிய புரிதல் பல நிலைகளில் இல்லாமல் இருக்கிறது என்பதை தெளிவு படுத்துகிறது.

இந்தியாவில் செயல்படுகின்ற மூன்று அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களை அளிப்பது நமது அரசியல் சாசனம் தான். மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அரசாங்கங்கள் அனைத்தும் அரசியல் சாசனம் தரும் அதிகாரங்களை வைத்துத்தான் ஆட்சி நடத்துகின்றன. மேல்நிலையில், அதாவது 27 மத்திய அரசுத்துறைகள் வழங்கும் நிதியினை, மாநில அரசுகளின் 17 துறைகள் மூலமாக கிராமங்களை வந்தடைகின்றன. அதேபோல் மத்திய மாநில அரசுகள் நேரடியாக உள்ளாட்சிகளுக்குத் தரும் நிதியினையும், உள்ளாட்சிகள் தாங்கள் உருவாக்குகின்ற நிதியினையும் வைத்து உள்ளாட்சிகள் செயல்படுகின்றன. இந்தப் பணிகளைத் தாண்டி உள்ளாட்சிகள் மத்திய மாநில அரசு உருவாக்கும் திட்டங்களை அரசுத் துறைகள் நேர்மையாக நடைமுறைப்படுத்துகின்றனவா என்பதை கண்காணித்து செயல்படுவதும் முக்கியமான கடமையாகும். மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய சேவை செய்வது மட்டுமல்ல சிற்றூராட்சிகளின் பணி. இவைகளைத் தாண்டி அரசுத் துறைகளை, அதன் சேவைகளை கண்காணித்து கிராமத்திற்கு பணியாற்ற வைப்பதும் சிற்றூராட்சிகளின் பணியாகும். மேல்நிலையில் இயங்குகின்ற மத்திய மாநில அரசுகள் அரசாங்கமாக செயல்படும்போது ஏன் உள்ளாட்சி மட்டும் எதோ அரசுத் துறைகளின் எடுபிடிபோல் அதிகாரிகளின் பிடியில் இருக்கின்றன என்பதற்குத் தான் நாம் விடைதேட வேண்டும்.

25 ஆண்டுகால அனுபவத்தில் நாம் பார்த்த எதார்த்தமான உண்மை, என்னவென்றால் மத்திய அரசு மாநில அரசுகளின்மேல் ஆதிக்கம் செலுத்த எண்ணுகின்றது, அதேபோல் மாநில அரசுகள், உள்ளாட்சிகள்மேல் ஆதிக்கம் செலுத்த எண்ணுகின்றது என்பதுதான். மாநில அரசுகள் தங்கள் அதிகாரங்களைக் காக்க போராடித்தான் செயல்படுகின்றன. அதேபோல்தான் உள்ளாட்சிகளும் போராடித்தான் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசு மாநில அரசுகளின் நிதி மேலாண்மையை நேர்மையானதாக ஏற்றுக் கொள்வதில்லை. அதிக அளவில் மாநில அரசுகள் நிதி விரயம் செய்கின்றன என்றுதான் மாநில அரசுகளின் நிதி சார்ந்த உரிமைகளைப் பறித்தது. அதேபோல்தான் மாநில அரசுகள் உள்ளாட்சியின் நிதி மேலாண்மையை நேர்மையானதாக பார்ப்பது கிடையாது. அதுமட்டுமல்ல மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புக்கள் நிதி விரயங்கள் செய்கின்றன என்ற பார்வையைக் கொண்டுதான் கொடுத்த நிதி அதிகாரங்களை பறித்துக் கொள்கின்றன. ஆனால் மத்திய அரசுக்கு ஒரு தெளிவான பார்வை தொடர்ந்து உள்ளாட்சிகள்மேல் உண்டு. மத்திய அரசு போடும் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கச் சென்று சேரவேண்டுமாயின் அதற்கு உள்ளாட்சிகள் வலுவாக இருந்து, மத்திய அரசின் துறைகள் ஒதுக்கும் நிதியை மாநில அரசின் துறைகள் செலவிடும்போது, உள்ளாட்சிகள் கவனம் செலுத்தி அரசுத் துறைகளை ஆளுகை செய்து ஆலோசனை வழங்கி மக்களுக்கு முழு அளவில் ஒதுக்கிய நிதி சேர்ந்திட பணி செய்திட வேண்டும் என்று திடமாக நம்பி உள்ளாட்சியை வலுப்படுத்த முனைந்து செயல்படுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டு மத்திய நிதி ஆணையம் தொடர்ந்து உள்ளாட்சிக்கு வழங்கும் நிதியினை அதிகரித்துக் கொண்டே வருவதும், உள்ளாட்சிகளின் ஆளுகை மற்றும் நிர்வாகத்திறனை கூட்டுவதற்கும் செயல்படுகிறது. ஆனால் மாநில அரசு உள்ளாட்சியின் முக்கியத்துவம் உணர்ந்த போதும், மாநில அரசு தங்கள் துறைகளின் அதிகாரிகளின் திறன்மேல் இருக்கும் நம்பிக்கைபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்மேல் நம்பிக்கை வைத்து செயல்படுவது இல்லை. இதில் இருக்கக்கூடிய உண்மையையும் எதார்த்தத்தையும் நாம் மறுக்க முடியாது. தமிழகத்தின் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பெரும் வெற்றியைப் பெற்றதற்கு அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் திறன் மற்றும் ஆற்றல் சார்ந்த செயல்பாடுகள்தான் என்பதை மத்திய அரசு பலமுறை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தாண்டி ஒரு அரசியல் காரணம் ஒன்று உள்ளது. உள்ளாட்சி அமைப்புக்கள் வலுப்பெறுவது என்பது மாநில அரசுக்கு பல சமயங்களில் சவாலாக அமைந்துவிடும் என்ற பார்வையும் சிந்தனையும் மாநில அரசுக்கு இருப்பதை எவரும் மறுக்க இயலாது. அத்துடன் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் மாநில அரசுகள் தங்களின் அதிகாரங்களை தொடர்ந்து இழந்து வரும் சூழலில் உள்ளாட்சி வலுப்பெறுவது மாநில அரசுக்கு நிச்சயமாக சவாலாக அமைந்துவிடும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை மாநில அரசிடம் இருக்கிறது.

இந்தப் பார்வை தமிழகத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான மாநிலங்களில் இருக்கின்றன. ராஜிவ்காந்தி புதிய பஞ்சாயத்துக்கான மசோதாவை அறிமுகம் செய்தபோதே பல மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த அச்சத்தை வெளிப்படுத்தினர். இருந்தபோதிலும் அதிகாரப் பரவலை மத்திய அரசிடமிருந்து, மாநில அரசாங்கங்களுக்கு செய்திடாமல், மாநில அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு கொண்டு செலுத்த அரசியல் சாசனத்தை திருத்தியது. இந்தச் செயல்பாடுதான் இன்று வரை பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரங்களைத் தர மாநில அரசுகள் தயங்குகின்றன. இந்தச் சூழலில் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் உள்ளாட்சிகளுக்கு இருக்கும் வாய்ப்பு என்பது மிக அதிகம். இதற்கான புரிதலை நம் உள்ளாட்சித் தலைவர்கள் ஏற்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அந்த வாய்ப்புக்களை பயன்படுத்த உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஒரு தனி ஆற்றல் வேண்டும். அரசியல் சாசனத்தின் மூலம் அரசாங்கமாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்களை தாங்கள் கைக்கொண்டு அதிகாரங்களை கையிலெடுத்துச் செயல்பட தேவையான தகுதிகளை முயற்சி செய்து பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான ஒரு பார்வையை உருவாக்கிக் கொண்டு அதிகாரத்தை கையிலெடுக்க ஒரு துணிவு மிக்க தலைமைத்துவம் தேவை. அச்சமும் கூச்சமும் இருபெரும் எதிரிகள் தலைமைத்துவத்திற்கு என்பதை புரிந்து நம் உள்ளாட்சித் தலைவர்கள் செயல்பட வேண்டும்.

இதுவரை மக்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படைச் சேவைகள் அனைத்தையும் மாநில அரசின் கடமையாக வழிகாட்டு நெறிமுறையில் அரசியல் சாசனம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது அவை அனைத்தும் மக்களின் உரிமைகளாக சட்டங்கள் மூலம் கொடுத்துவிட்டது மத்திய அரசு. அத்துடன் பெருமளவு நிதியினையும் ஒதுக்கித் திட்டங்களாகத் தந்துள்ளது மத்திய அரசு. உள்ளாட்சிகள் தாங்கள் அரசாங்கமாகச் செயல்பட்டு இந்த மேம்பாட்டு உரிமைகளை கிராமங்களில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இதை செய்வதற்குத் தேவையான தலைமைத்துவ பயிற்சையை எடுத்துக் கொண்டு அரசுத் துறைகளை வேலை வாங்க ஆளுகையில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு தாங்கள் செயல்படுவதுடன் தங்களின் பணி செய்ய உருவாக்கப்பட்ட பஞ்சாயத்தின் நிலைக்குழுக்களை உருவாக்கி செயல்பட வைக்க வேண்டும். அதேபோல் கிராமசபையை முழுப்புரிதலுடன் கூட்டி கிராமசபை உறுப்பினர்களின் பங்கு பணி என்பதை விளக்கி மக்களை விழிப்புணர்வுள்ளவர்களாக உருவாக்க வேண்டும். பொறுப்புமிக்க கிராமசபைச் செயல்பாடுகள்தான் கிராமத்தை மீட்டெடுத்து கிராம மக்கள் கையில் வைத்திருக்க உதவிடும் என்ற புரிதலை கிராமசபை உறுப்பினர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.     

வலுவான கிராமசபையும், புரிதலுடன் பணியாற்றும் நிலைக்குழுக்களும், சிற்றூராட்சியுடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்துவிட்டால் உள்ளாட்சி என்பது தலைவர்கள் கையில் இருக்காது. மாறாக அது மக்கள் கையில் இயங்க ஆரம்பித்துவிடும். அந்த நிலைக்கு உள்ளாட்சி வந்துவிட்டால் கிராமம் மக்களுக்கானதாக மாறும். அங்கு உள்ள பள்ளிக்கூடம், சத்துணவுக்கூடம், சுகாதார நிலையம், நூலகம், விளையாட்டுத் திடல், சாலைகள், குளங்கள், சமுதாயக் கூடங்கள், பொதுச் சொத்துக்கள் அனைத்தும் மக்களின் சொத்தாக மாறிவிடும். இவை அனைத்துக்கும் கிராம மக்கள் சொந்தக்காரர்களாக ஆகிவிடுவார்கள். இன்று கிராமக் கோவில்கள் மட்டும்தான் எங்களது என்று மக்கள் கூறுவார்கள்.

மற்ற எந்த நிலையத்தையும் அது கல்விக்கூடமாக இருந்தாலும், சத்துணவுக் கூடமாக இருந்தாலும், சுகாதார நிலையமாக இருந்தாலும் எதைக் கூறினாலும் உடனே கூறுவார்கள், இது கல்வித்துறைக்குச் சொந்தமானது, இது வருவாய்த்துறைக்குச் சொந்தமானது, இது விவசாயத் துறைக்குச் சொந்தமானது, இது பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது என்று கூறுவார்களே தவிர எதன் மேலும் அவர்கள் சொந்தம் கொண்டாடுவது இல்லை. கிராமக் கோவில்களை மட்டும் எங்களுடையது என்பார்கள், ஏனென்றால் அது அவர்கள் கட்டியது, அவர்களால் திருவிழா நடத்தப்படுவது. அது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற காரணத்தால். மத்திய மாநில அரசாங்கங்களின் நிதியால் உருவாக்கப்பட்ட அனைத்து பொதுச்சொத்துக்களும் மக்களுடையதுதான் சட்டப்படி. ஆனால் அதை அரசுத் துறைகள் அப்படி மக்களிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதில்லை. மக்களும் அப்படி பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. நாம் பொறுப்பற்று இருப்பதில் ஒரு சுகம் கண்டவர்கள் என்பதால்.

இனியும் அப்படி இருக்க முடியாது. அதற்காகத்தான் புதிய உள்ளாட்சியை அரசாங்கமாக உருவாக்கி அந்த அரசாங்கத்தையும் மக்களை மையப்படுத்தி உருவாக்கி, மக்களை அதிகாரப்படுத்தி மக்கள் முன்னேற்றம் மக்கள் கையில் என்று புதிய வழிமுறை காணப்பட்டுள்ளது. அதிகாரப்படுத்தப்பட்ட மக்களால் மட்டுமே அதிகாரத்தை கைக்கொள்ள முடியும். அதன் விளைவாகத்தான் மக்களை கிராமங்களுக்கு பொறுப்பேற்று கிராம வளர்ச்சி மற்றும் மேம்பாடுக்கு மக்கள் திட்டமிட்டு செயல்படட்டும் என உருவாக்கினர் புதிய உள்ளாட்சி அரசாங்கத்தை. அந்த அரசாங்கத்தை மக்கள் கையிலெடுக்க முன்வர வேண்டும்.

இன்றைய பஞ்சாயத்து என்பது அரசாங்கம் இது முற்றிலும் பழைய பஞ்சாயத்திலிருந்து வேறுபட்டது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்த பஞ்சாயத்துச் செயல்பாடு என்பது கூட்டுச் செயல்பாடாக இருப்பதால் இதற்கு பெருமளவு மக்கள் தயாரிப்புத் தேவைப்படுகிறது. பஞ்சாயத்துச் செயல்பாடுகளில் ஒரு அறிவார்ந்த மக்கள் பங்கேற்பு தேவைப்படுகிறது. அதற்கான விழிப்பை மக்களிடம் உருவாக்க வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு சமூகச் சிந்தனை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது. அதில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவருக்கு அதிக பொறுப்பும், அக்கறையும் இருக்கிறது.

இந்த மக்கள் தயாரிப்புச் செய்ய முதலில் நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களுக்கு அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு பயிற்சியின்போது கொடுக்கப்பட்ட ஒன்பது நூல்களையும் படியுங்கள். அந்த நூல்களை படித்து உள்வாங்கிக் கொண்டு செயல்பட்டால் நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் அலுவலர்களுக்கு ஆணையிட முடியும். மக்களை இணைத்துக் கொண்டு மிகப்பெரும் மாற்றத்தை கிராமங்களில் உருவாக்கிட முடியும். தங்களின் அறிவார்ந்த செயல்பாடுகளினால் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் அதிகாரங்களை எடுத்துக் கொள்ள முடியும். அதிகாரங்கள் யாரும் தட்டில் வைத்து வழங்குவது அல்ல. அதிகாரங்கள் போராட்டத்தின் மூலம் பெறுவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் குடும்பம் கடனில் மூழ்கும்போது நாம்தான் போராடி சமாளிக்க வேண்டும். அதை யாரிடமும் ஒப்படைக்க முடியாது. மாநில முதல்வரால், நம் மாநிலம் கடனில் மூழ்கும் சூழலுக்கு வந்துவிட்டால், மாநிலத்தை எந்த வியாபார நிறுவனத்திடமும் ஒப்படைக்க முடியாது. அதேபோல்தான் நாடும். எனவே பொறுப்புக்கள் வரும்போது சோதனைகள், சவால்கள் வந்து நிற்கும். அவைகளைச் சமாளிக்கத் தயாராக வேண்டுமே தவிர, முடியவில்லை அதிகாரி பார்த்துக் கொள்ளட்டும் என்பது நாம் தலைமை ஏற்க தயங்குவதாகும். நம் கிராமம் நம் கையில் இருக்க வேண்டும் என்றால் நம் கிராம மேம்பாடு நம் மக்களால் நிகழ்த்தப்படல் வேண்டும். இன்று நாம் செயல்படும் ஆளுகை மற்றும் நிர்வாகச் சூழலை புரிந்து கொள்ள பயிற்சியில் கொடுத்த புத்தகங்களை ஆழ்ந்து படியுங்கள், அவற்றை அசை போடுங்கள். அதன் அடிப்படையில் உள்ளாட்சித் தலைவர்கள் மக்களோடு செயல்பட முயல வேண்டும். மற்றவற்றை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்த அதிகாரப் பரவல் எப்பொழுது பொருளுள்ளதாக மாறி மக்களுக்கு பலன் அளிக்கும் என்றால் தலைவர்களும் மக்களும் புரிதலோடு உள்ளாட்சியில் எல்லா நிலைகளிலும் செயல்படும்போது மட்டும்தான். இதைத்தான் நம் தலைவர்கள் செய்ய வேண்டும். அதுதான் இன்று நமக்குத் தேவை.

- க.பழனித்துரை

Pin It