86. மருதம்

 உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை

 பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகாற்

 றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி

 மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்

5 கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக்

 கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட்

 கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென

 வுச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர்

 பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

10 முன்னவும் பின்னவு முறைமுறை தரத்தரப்

 புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று

 வாலிழை மகளிர் நால்வர் கூடிக்

 கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்

 பெற்றோற் பெட்கும் பிணையை யாகென

15 நீரொடு சொரிந்த வீரித ழலரி

 பல்லிருங் கதுப்பி னெல்லொடு தயங்க

 வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்

 கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

 பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர

20 வோரிற் கூடிய வுடன்புணர் கங்குற்

 கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்

 தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தழீஇ

 முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப

 வஞ்சின ளுயிர்த்த காலை யாழநின்

25 னெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென

 வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்

 செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர

 வகமலி யுவகைய ளாகி முகனிகுத்

 தொய்யென விறைஞ்சி யோளே மாவின்

30 மடங்கொள் மதைஇய நோக்கி

 னொடுங்கீ ரோதி மாஅ யோளே.

என்பது: வாயின்மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக்கூடி யின்புற்றிருந்த தலைமகன் பண்டுநிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம். - நல்லாவூர்கிழார்.

மூலத்தில் பாடவேறுபாடு: 1:1 உழுந்துதலைப் (பிற.), உழுந்து தலைப் (மயி.), 10:2 பின்னவு (பிற.), பின்னவும் (மர்ரே.), 11:1 புதல்வற் (பிற.), புதல்வர் (மு.காசி.), 15:3,4 வீரித ழலரி (பிற.), ஈரித ழலரிப் (மயி.), 19:3,4 யாகெனத் தமர்தர (பிற.), யாகெனத்தமர்தர (மயி.).

அடிக்குறிப்புப் பாடவேறுபாடு: 1:4 விதவை (மயி.), 3:3 திருமணன் (மயி.), 9:3 முதுசெய் (மயி.), 10:4 தரீஇய (ராஜ.), தரீஇ (மயி.), 11:2 பயந்த (ராஜ., மயி.), 18:4 புகுதந்து (மயி.), 19:4 நுமர்தர (ராஜ.), 26:2 யிருக்கைய (மயி.), 30:1 மடங்கொண் (மயி.).

கூற்றுக்குறிப்பு வேறுபாடு: ...தலைமகன் சொல்லியது (பிற.), ...தலைமகள் சொல்லியது (மயி.).

அடிக்குறிப்பில் புலவர்பெயர் வேறுபாடு: நல்லார் பூரன்கிழார் (ராஜ.).

உரைவேறுபாடு

இப்பாடலில் வரும் உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை (1), நாடலை வந்தென (7), பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் (9), புதல்வற் பயந்த (11), கற்பினின் வழாஅ நற்பல உதவி (13), பல்லிருங் கதுப்பின் (16), ஒடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ (22), நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென, இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின் (25-26), மாஅ யோளே (31) என்ற பாடங்களுக்கான உரைக்கருத்துகளில் வேறுபாடுகள் காணப்பெறுகின்றன.tamilnadu landscape paintingஉழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை

இவ்வடிக்குப் பழைய., மயி.பதி.இ-ள் உரைகள் குழைதலையுடைய கும்மாயம் என்றும் ந.மு.வே. & க.க., சி.க., பு.கே., இரா.செ., நா.மீ. & தெ.மு., வ.த.இரா., ச.வே.சு. உரைகள் உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலொடு என்றும் பொ.வே.சோ. உரை உழுந்தம் பருப்புப் பெய்து சமைத்த கொழுவிற்று, களியாகிய மிதவையோடு என்றும் பொருள் குறிக்கின்றன.

இக்கருத்துகளில் மூன்றாவது உரைக்கருத்து மூலச்சொல்லையே அளிப்பதாக அமைகிறது. முதல்கருத்து காலை உணவுடன் தொடர்புடைய உளுந்து கலந்து செய்கின்ற, களிபோன்ற உணவாகும். இதிலிருந்து வேறுபட்டது உளுந்தங்களி. உளுந்தங்களியைக் காலைச் சிற்றுண்டியாகக் கொள்வது வழக்கம் அன்று. ஆனால், கும்மாயத்தைக் காலைச் சிற்றுண்டியோடு சேர்த்துக் கொள்வர். பொங்கலில் உளுந்து கலக்கும் வழக்கம் இல்லை. திருமண நிகழ்வின் காலைச் சிற்றுண்டி தொடர்பான பதிவு இப்பாடலில் வந்துள்ளதால் பொங்கல் என்று உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் குறித்துள்ளனர். இது பொருந்துமாறில்லை. கும்மாயத்தைக் காலை உணவோடு சேர்க்கும் பழக்கம் இன்றும் செட்டிநாட்டுப் பகுதியில் காணப்பெறுகிறது. ஆனால், சங்கப்பாடல் இந்தக் கும்மாயத்தைத்தான் கூறுகிறது என்று கருத இயலாது. எனவே, உளுந்தை மிகுதியாகப் பெய்து செய்த கும்மாயம் போன்ற குலைதலையுடைய உணவுப் பண்டத்தோடு என்று பொருள் குறிக்கலாம்.

நாடலை வந்தென

இப்பாடத்திற்குப் பழைய. உரை சகடம் திங்களையுடைய நாள், கல்யாண நாள் வந்தவளவிலே என்றும் ந.மு.வே. & க.க., சி.க., பொ.வே.சோ., பு.கே., அ.மா., இரா.செ., நா.மீ. & தெ.மு., வ.த.இரா., ச.வே.சு., ப.ஆ. உரைகள் உரோகணி எனும் நாள் அடைந்ததாக என்றும் மயி.பதி.இ-ள் உரைகள் கல்யாண நாள் வந்தவளவிலே என்றும் பொருள் தருகின்றன. இம்மூன்று கருத்துகளில் கல்யாணநாள் வந்தவளவிலே எனும் கருத்துத்தவிர்த்த பிற இரண்டும் நம்பிக்கை சார்ந்து எழுதப்பெற்ற கருத்துகளாக அமைகின்றன.

சகடம் திங்களை உடைய நாள் என்பதற்கு அடிக்குறிப்பிட்டு விளக்கம் அளிக்கும் ராஜகோபாலார்யன், “சகடமென்றது உரோகணியை என்பர். திங்கள், சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்து என்னுமிடத்து” (அகம்.136) என்று எழுதுகிறார். அகம்.136ஆம் பாடலில், “... திங்கட் சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்து” (அகம்.136:4,5) எனும் அடிகளில் வந்திருக்கின்ற சகடம் என்பதற்குக் குறிப்புரைகாரர், “இப்பாட்டிற் சகடமென்றது உரோகணியை” என்று உரை எழுதுகிறார். இதை அடிப்படையாகக் கொண்டே சகடம் திங்களையுடைய நாள் என்பதும் உரோகிணி எனும் நாள் அடைந்ததாக என்பதுமான உரைக்கருத்துகள் தோன்றியுள்ளன. ஆனால், சகடம் என்பது தொடர்பாகவோ உரோகணி என்பது தொடர்பாகவோ இப்பாடலில் எவ்விதக் குறிப்பும் காணப்பெறவில்லை.

பொதுவாகத் தமிழகத்தில் திருமணம் வளர்பிறையில் செய்வது வழக்கம். அதைத்தான் ‘கொடுவெண் திங்கள்’ (வளைந்த வெண்மையான பிறை) என்ற பாடம் உணர்த்துகிறது. இந்த வளர்பிறையில் எந்த நட்சத்திர நாளாக இருந்தாலும் அவரவர்களுக்குரிய நேரத்தின்படித் திருமணம் நிகழ்த்துவர். அதைத்தான் இப்பாடல் இவ்வாறு பதிவு செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து உரோகிணி நாளில் மட்டும் திருமணம் நடந்ததாக விளக்கமளிப்பது பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. எனவே, சிறந்த கல்யாணநாள் வந்தவளவிலே என்ற உரைக்கருத்தையே பொருத்தமுடையதாகக் குறிக்கலாம்.

பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

இவ்வடிக்குப் பழைய, மயி.பதி.இ-ள் கல்யாணம் எல்லாரும் புகுதற்கு யோக்யமாதலால், அதனைச் செய்கின்ற ஆரவாரத்தினையுடைய செவ்விப் பெண்டிர் என்றும் ந.மு.வே. & க.க., பு.கே., அ.மா., இரா.செ., நா.மீ. & தெ.மு. உரைகள் மணத்தினைச் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் என்றும் பொருள் குறிக்கின்றன. சி.க. உரை பொதுவான மங்கல காரியத்தைச் செய்துவைக்கும் ஆரவாரத்தையுடைய முதுமையமைந்த செவ்விய மங்கல மகளிர் எனும் பொருளைக் குறிக்கப் பொ.வே.சோ. உரை பொதுப்பணி செய்வதில் ஆர்வமும் ஆரவாரமும் உடைய முதுமையுடைய மங்கலநாண் உடைய பேரிளம் பெண்டிர் என்ற பொருளையும் வ.த.இரா. உரை பொழுதுபுலர மணம்செய்து வைக்கும் முதிய மங்கல மகளிர் என்ற பொருளையும் தருகின்றன. ச.வே.சு. உரை காலைவேளையில் மணம் முடிக்கும் ஆரவாரத்துடன் மங்கல மகளிர் என்ற பொருளைக் குறிக்கிறது.

‘பொதுசெய்’ என்பதற்குப் பொழுதுபுலர, காலைவேளையில் என்பன பொருந்தாத கருத்துகளாகும். பிற அனைத்தும் ஒவ்வொருவரின் சிந்தனைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கூறியனவாக அமைகின்றனவேயன்றிப் பெரிய அளவில் வேறுபாடில்லை. திருமணம் செய்து வைக்கும்போது மணமக்கள் அருகில் இருக்கும் பெண்கள் பண்பு, ஒழுக்கம், குழந்தைப்பேறு முதலானவற்றில் சிறந்து விளங்கும் மங்கலமகளிராக இருப்பது இன்றும் வழக்கில் இருக்கிறது. இம் மங்கலமகளிர்தாம் அக்காலத்தில் திருமணத்தை நிகழ்த்தி வைத்துள்ளனர் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. திருமண வாழ்த்துப் பாடல் பாடும்போதும் சில செய்முறைகள் செய்யும்போதும் ஆரவாரம் தோன்றுவது இயல்பு. இக்கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கிப் பொதுவான, மணம் செய்துவைக்கின்ற ஆரவாரம் உடைய வயதுமுதிர்ந்த சிறந்த மங்கலமகளிர் என்று பொருள் குறிப்பது பொருத்தமானதாக அமையும்.

புதல்வற் பயந்த

இப்பாடத்திற்குப் பழைய, மயி.பதி.இ-ள் உரைகள் பிள்ளைபெற்ற என்றும் ந.மு.வே. & க.க., சி.க., பு.கே., அ.மா., இரா.செ., நா.மீ. & தெ.மு., வ.த.இரா., சி.க. உரைகள் மகனைப் / புதல்வனைப் பெற்ற என்றும் பொருள் குறிக்கின்றன. பொ.வே.சோ. உரை மக்களைப்பெற்ற என்று உரை எழுதுகிறது. இவ்வேறுபாடுகளுள் பிள்ளை, மக்கள் எனும் இரு சொற்களும் ஆண், பெண் குழந்தைகளாகிய இருவருக்கும் பொருந்தக் கூடியனவாகும். ஆண்மகனை மையப்படுத்திய ஆண் தலைமைச் சமூகமான தமிழ்ச்சமூகத்தில் மகனைப் பெற்றெடுத்தலே சிறப்பு எனும் வலிமையான கருத்துருவாக்கம் நிலைபெற்றிருக்கும் நிலையில் சங்கப் பாடல்களும் மகனையே மையப்படுத்துகின்றன. இப்பாடலின் மூலத்திலும் புதல்வற் என்றே வந்துள்ளது. எனவே மகனை / புதல்வனை என்ற உரைக்கருத்தையே பாட்டின் கருத்தியலோடு பொருந்தக்கூடியதாகக் குறிக்கலாம்.

கற்பினின் வழாஅ நற்பல உதவி

இவ்வடிக்கு ந.மு.வே. & க.க. உரை கற்பி­னின்றும் வழுவாது நன்றாய பல பேறுகளையும் தந்து என்றும் சி.க. உரை கற்பினின்றும் தவறாது நல்ல பல உணவுகளைக் கொடுத்து என்றும் பொருள் குறிக்கின்றன. பொ.வே.சோ., பு.கே., அ.மா., இரா.செ. உரைகள் கற்பொழுக்கத்தினின்றும் சிறிதும் வழுவாமல் நல்ல பலவாகிய உதவிகளையும் செய்து பலவற்றிற்கும் உதவியாக இருந்து என்று பொருள் குறிக்க வ.த.இரா. உரை கற்பினின்றும் வழுவாது நின்னை மனைவியாகப்பெற்ற நின் கணவனைப் பேணிக்காக்க என்ற பொருளைத் தருகிறது.

இவ்வடிக்கு முன்னர் வந்திருக்கும் அடிகள் புதல்வரைப் பயந்த மகளிர் மணமக்களை வாழ்த்துவதைப் பதிவு செய்கிறது. குழந்தைப்பேறுடையவர்களை வாழ்த்தச் செய்வதன் முக்கிய நோக்கமே இவர்களுக்கும் குழந்தைப்பேறு கிட்டவேண்டும் என்பதுதான். எனவே, ‘நற்பல உதவி’ என்பது குழந்தைப்பேறு முதலான பல உதவிகளையே குறிக்கிறது எனலாம். இந்நிலையில், இவ்வடிக்கு இக்கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கிக் கற்புத்திறத்தினின்றும் மாறுபடாமல் சிறந்த குழந்தைப்பேறு முதலான பல உதவிகளைச் செய்து என்று உரை குறிக்கலாம்.

பல்லிருங் கதுப்பின்

இப்பாடத்திற்கு ந.மு.வே. & க.க., பு.கே. உரைகள் மிக்க கரிய கூந்தலில் என்றும் சி.க. உரை பலவாக முடித்த கரிய கூந்தலின்கண் என்றும் பொருள் குறிக்கின்றன. பொ.வே.சோ. உரை பலவாகிய கரிய கூந்தலின்மேல் எனும் பொருளைக் குறிக்க அ.மா. உரை கரிய கூந்தலின்மீது எனும் பொருளையும் இரா.செ. உரை பலவாகிய கரிய கூந்தலையுடைய தலையின்மேல் என்ற பொருளையும் தருகின்றன. திருமணம் தொடர்பான பதிவுகளினிடையில் இப்பதிவு வந்திருப்பதால் இவ்வனைத்திலும் பலவாக முடித்த கரிய கூந்தலின்கண் என்ற உரைக்கருத்தை மிகப்பொருத்தமுடையதாகக் குறிக்கலாம். திருமணப் பெண்ணுக்கான கூந்தல் ஒப்பனையைக் குறிப்பதற்காகவே இப்பாடத்தைப் புலவர் பதிவு செய்திருக்க வேண்டும் எனலாம்.

ஒடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ

இவ்வடிக்குப் பழைய., மயி.பதி.இ-ள் உரைகள் ஒடுங்கிக்கிடத்தலாற் கோடினபுறம் என்றும் ந.மு.வே. & க.க., பொ.வே.சோ., பு.கே., அ.மா. உரைகள் ஒடுங்கிக்கிடந்த இடத்தினைச் சார்ந்து என்றும் பொருள் தருகின்றன. சி.க., இரா.செ. உரைகள் ஒடுங்கிக் கிடந்த அம்முதுகைத் தழுவி என்ற பொருளைத் தருகின்றன. இக்கருத்துகளுள் இரண்டாம் கருத்துப் ‘புறம்’ என்பதற்கு இடம் என்று பொருள் கொண்டு அவள் ஒடுங்கிக்கிடந்த இடத்தினைச் சார்ந்து என்று பதிவு செய்கிறது. புதுமணத் தம்பதியினரின் முதலிரவுக் காட்சியையும் அதனால் தலைவி வெட்கப்படும் நிலையையும் பதிவு செய்யும் இப்பாடலில் புறம் என்பதற்குப் பின்புறம் அதாவது முதுகுப்புறம் என்று பொருள் கொள்வதே பொருத்தமானது.

தலைவி நாணத்தால் கோடிப்புடவைக்குள் தம்மை மறைத்து முதுகுப்புறத்தை வளைத்து ஒடுங்கிக் கிடக்கிறாள் எனும் சூழலை இவ்வடிக்கு முந்தைய அடிகள் விளக்குகின்றன. இந்நிலையில், புறம் என்பதற்குப் பின்புறம் (முதுகுப்புறம்) என்று பொருள் கொள்வதே பொருத்தமாக அமையும். கோடினபுறம் எனும் பழைய உரைக்கருத்தும் வளைந்த முதுகுப்புறம் என்பதையே வலியுறுத்துவதாக அமைகிறது.

நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென

இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்

இவ்வடிகளுக்குப் பழைய உரை இன்னகை இருக்கைப் பின் எஞ்சாது உரையென வினவலின் எனக் கூட்டுக என்று பொருள் குறிக்கிறது. ந.மு.வே. & க.க., சி.க., பு.கே., அ.மா., இரா.செ. உரைகள் நின் உள்ளம் நினைந்ததனை மறையாது உரை என்று யான் பின்பு வினவுதலின் இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையின்கண் என்றும் பொ.வே.சோ. உரை இனிய மகிழ்ச்சியோடு யாங்கள் இருந்த இருக்கையின் மேல் இருந்ததன் பின்னர் யான் அன்புடையாய்! நின் நெஞ்சம் நினைந்தவற்றை மறையாமல் எனக்குச் சொல்க என்று வினவாநிற்ப என்றும் பொருள் குறிக்கின்றன. மயி.பதி.இ-ள் உரை இனிய நகையோடு கூடிய இருக்கையிடத்து, கல்யாணங் கழிந்த பின்.... இன்னகையிருக்கைப்பின் எஞ்சாதுரையென வினவலின் எனக் கூட்டுக.... வினவலின் இறைஞ்சியோள் எனக்கூட்டுக எனும் பொருளைத் தருகிறது.

இவ்வுரைக் கருத்துகள் பின்யான் வினவலின் என்பதற்கான உரைகுறித்தலில் வேறுபடுகின்றன. இக்கருத்துகளிலும் மயிலம் வே.சுப்பிரமணியன் பதிப்பின் இ-ள் எனும் உரை பின் என்பதற்கு, கல்யாணங்கழிந்தபின், இன்னகையிருக்கைப்பின் என்றும் வினவலின் என்பதைப் பிற அடியோடு பொருத்தியும் ஒரு தெளிவற்ற உரையைப் பதிவு செய்கிறது. எனவே, இவ்வுரைக் கருத்தையும் விடுத்துப் பிற மூன்று கருத்துகளுக்கு இடையிலான உரைக்கருத்தையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

முதல் கருத்து, இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையில் தலைவிக்குப் பின்புறமாக இருந்து உன் மனதில் உரைப்பதை அஞ்சாது உரை என்று வினவியதாகப் பதிவு செய்கிறது. பிற இரண்டு கருத்துகளும் இதிலிருந்து மாறுபட்டுப் பதிவு செய்கின்றன. இரண்டாம் கருத்து, பின்பு வினவுதலின் என்றும் மூன்றாம் கருத்து இருக்கையில் இருந்ததன் பின்னர் வினவாநிற்ப என்றும் பதிவு செய்கின்றன. இவற்றுள் இரண்டாம் கருத்து எதன்பின்பு என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில், இக்கருத்தில் வரும் பின்பு என்பதற்கான பொருள் குழப்பத்திற்கானதாக அமைகிறது. மூன்றாம் கருத்து, இருக்கையில் இருந்த பின்னர் வினவியதாகப் பதிவு செய்வதும் முரண்பாடாகவே தோன்றுகிறது. தலைவி புடவைக்குள் ஒடுங்கிக் கிடக்கும்போதே தலைவன் இருக்கையில் அமர்ந்து அவள் முதுகினைத் தழுவியதற்கான குறிப்பு உள்ளது. இந்நிலையில் இருந்தவுடன் வினவினான் என்பதும் குழப்பத்தை மிகுவிப்பதாகவே அமைகிறது.

தலைவியின் ஒடுங்கிக் கிடந்த முதுகினைத் தழுவிய தலைவன் கொஞ்சலாக அவள் முதுகுப்பின் அமர்ந்து உன் மனதில் இருப்பதை மறைக்காது கூறு என்று வினவியிருக்க வாய்ப்புண்டு. இதையே, இவ்வடிகள் உணர்த்துகின்றன எனலாம். எனவே, பழைய உரைக்கருத்தே பொருத்தமுடையது என்று குறித்து அதனை, நின் மனதில் இருப்பதை எதையும் மிச்சம் வைக்காது உரை என்று இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையில், அவள் பின்னிருந்து யான் வினவுதலின் என்று தெளிவாகப் பதிவு செய்யலாம்.

மாஅ யோளே

இப்பாடத்திற்கு நா.மீ. & தெ.மு., ச.வே.சு., ப.ஆ. உரைகள் எந்தப் பொருளையும் குறிக்காதிருக்கப் பிற உரைகள் அனைத்தும் மாமை நிறத்தினையுடையாள் என்று பொருள் குறிக்கின்றன. இப்பொருளே இப்பாடத்திற்குப் பொருத்தமுடையதாகும். பொருள் குறிக்காமல் விட்டுச் செல்லுதல் என்பது பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.

பாடல் கருத்து

(1-7) உளுந்தை மிகுதியாகப் பெய்து செய்த கும்மாயம் போன்ற குழைதலையுடைய உணவுப் பண்டத்தோடு பெரிய சோற்றை உண்ணுகின்ற உறவினர்களின் பேரொலி நிலைத்திருக்க வரிசையாக நடப்பெற்ற கால்களையுடைய குளிர்ந்த பெரிய பந்தலில், புதிதாகக் கொண்டுவந்த மணலைப் பரப்பி மனையில் விளக்கை ஏற்றிவைத்து மாலைகளை வரிசையாகத் தொங்கவிட்டு மிகுந்த இருள் நீங்கிய அழகுமிகுந்த விடியற் காலையில் தீயகோள்களின் தொடர்பு நீங்கப்பெற்றதான வளைந்த வெண்மையான வளர்பிறைத் திங்களோடு குற்றமற்ற சிறந்த கல்யாண நாள் வந்ததாக -

(8-17) உச்சந்தலையில் குடத்தை உடையவர்களும் புதியதான அகன்ற ‘மண்டை’ எனும் கலத்தினை உடையவரும் ஆகிய பொதுவான மணம் செய்து வைக்கும் ஆரவாரம் உடைய வயதுமுதிர்ந்த சிறந்த மங்கல மகளிர் முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறைப்படித் தரவும் அதே முறைப்படிப் பெறவும் புதல்வனைப் பெற்றெடுத்த தேமலையுடைய அழகிய வயிற்றினையுடைய தூய்மையான அணிகலன்களை அணிந்த மகளிர் நான்குபேர் கூடிநின்று ‘கற்புத்திறத்தினின்றும் மாறுபடாமல் சிறந்த குழந்தைப்பேறு முதலான பல உதவிகளைச் செய்து பெற்ற கணவனை விரும்பிப் பேணும் துணையான பெண்ணாக ஆகுக!’ என வாழ்த்தி நீருடன் கலந்து சொரிந்த ஈரமான இதழ்களையுடைய பூக்கள் பலவாக முடித்த கரிய கூந்தலில் நெற்களுடன் விளங்கத் திருமணச் சடங்குடனான நல்ல மணநிகழ்வு முடிந்த பின்னர் -

(18-31) சுற்றத்தார் கல்லென்ற ஓசையுடன் விரைவாக வந்து ‘(குழந்தைகளைப் பெற்றுப்) பெரிய மனைக்கிழத்தி ஆகுக’ என்று கூறித்தர ஓர் அறையில் உடன்புணர்ந்து கூடிய புணர்ச்சிக்குரிய இரவில், முதுகினை வளைத்துக் கோடிப்புடவைக்குள் ஒடுங்கிக் கிடந்தனள். அவ்வாறு கிடந்த அவளின் வளைந்த முதுகுப்புறத்தைத் தழுவிச் சேரும் விருப்பத்துடன் முகத்தை மறைத்திருந்த ஆடையைத் திறக்க அவள் அஞ்சினாள். அவ்வாறு அஞ்சி நெடுமூச்செறிந்தபொழுது ‘நின் மனதில் இருப்பதை எதையும் மிச்சம் வைக்காது உரை’ என்று, இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையில் பின்னிருந்து யான் வினவியதால், மானின் மடப்பம் பொருந்திய செருக்கினையுடைய பார்வையினையும் ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலினையும் உடைய மாமை நிறமுடையவளான தலைவி சிவந்த மணிகள் பதித்த ஒளிபொருந்திய குழை வளமையான காதில் அசைந்துவர உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியினை உடையவளாகி (நாணத்தால்) முகத்தினைக் கவிழ்த்து விரைவாகத் தலைகவிழ்ந்தாள் (என்று தலைவன் கூறினான்).

குறிப்பு

இரண்டாம் குறிப்பை இப்பாடலுடன் பொருத்தும்போது வரைவும் அதனைச் சார்ந்த நிகழ்வுகளும் நிறைவுபெற்ற ஒருசில நாட்களில் தலைவியின் நிலைபற்றித் தலைவன் தன் நெஞ்சிற்குள் சொல்லி இன்புற்றான் என்றும் தலைவியிடமே முன்பு நிகழ்ந்தவற்றைச் சொல்லி இன்புற்றான் என்றும் கூறலாம்.

அருஞ்சொற்பொருள்

களிமிதவை - கும்மாயம் போன்ற குலைதலையுடைய உணவுப்பொருள்; அமலை, கம்பலை - பேரொலி; நிரை - வரிசை; தண் - குளிர்ச்சி; தருமணல் - புதிதாகக் கொண்டுவரப்பெற்ற மணல்; ஞெமிரி - பரப்பி; தொடரி - வரிசையாகத் தொங்கவிட்டு; கனையிருள் - மிகுதியான இருள்; கவின் - அழகு; கோள்கால் - தீயகோள்களின் தொடர்பு; கொடுவெண் திங்கள் - வளைந்த வெண்மையான வளர்பிறைத் திங்கள்; கேடில் - குற்றமற்ற; ஓர்புறம் - வளைந்த முதுகுப்புறம்; மண்டை - ஒருவகைப் பாத்திரம் (வட்டில்); முறைமுறை தருதல் - முன்னிருந்து பின்தருதலும் பின்னிருந்து முன்தருதலும்; திதலை - தேமல்; வால் - ஒளி; இழை - அணிகலன்; பெற்றோன் - கணவன்; பெட்கும் - விரும்பிப் பேணும்; பிணை - துணை; அலரி - பூ; கதுப்பு - கூந்தல்; வதுவை - திருமணச் சடங்கு; கல், சும்மை - ஒலிக்குறிப்பு; ஞெரேரென - விரைவாக; தமர் - சுற்றத்தார்; கங்குல் - இரவு; வளைஇ - வளைத்த; கோடிக்கலிங்கம் - புதுப்புடவை; முயங்கல் விருப்பம் - புணரும் விருப்பம்; குழை - தோடு; உவகை - மகிழ்ச்சி; ஓதி - கூந்தல்.

மா.பரமசிவம்

Pin It