குறிசொல்லுதல் நாட்டார் வழிபாட்டுக் கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. குறிசொல்லுதல் என்பது குறி சொல்லுபவருக்கும் கேட்பவருக்கும் இடையில் இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையின் அடையாளமாகும். குறிசொல்லுபவர்களாக ஆண், பெண் என இருபாலரும் ஈடுபடுகின்றனர். நாட்டார் தெய்வம் குறிசொல்லுபவருக்குள் ஏறி ஆடி குறிகேட்பவரின் நன்மை கருதிச் சொல்வதே குறிசொல்லல் ஆகும். சடங்கியல் அல்லாமலும் குறிசொல்லல் பல இடங்களில் நடைபெறுகின்றன. கோடங்கி குறிசொல்லல், குறத்தி குறிசொல்லல், மலையாள குறிசொல்லிகள், மந்திரவாதி போன்றவர்கள் சடங்கியல் சாராது குறிசொல்கின்றனர். எனினும் வழிபாட்டு குறிசொல்லலின் வழி புதிய சடங்குகள் தோற்றம் பெறுகின்றன. நாளடைவில் இச்சடங்குகள் பொருளாதார நோக்கமாக மாற்றமடைகின்றன என்பதை விளக்குவதாய் இவ்வாய்வு அமைந்துள்ளது.

வழிபாடும் குறிசொல்லலும்

நாட்டார் வழிபாட்டுக் கூறுகளில் இடம்பெறும் பல சடங்கியல் நிகழ்வுகளில் ஒன்றாக குறிசொல்லுதலும் இடம்பெறுகின்றது. நாட்டார் தெய்வத்திற்கு பூசைசெய்யும் பூசாரி குறிசொல்பவராக இருப்பார். அல்லது அத்தெய்வத்திற்கு அடிமைப்பட்ட குடும்பத்தினருள் மூத்தவரின் மேல் தெய்வம் ஏறி குறிசொல்லும். வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் சடங்கின் இறுதி நிகழ்வாக, அதாவது பெரும்பாலும் விழாவானது நிறைவு பெறும் போது குறிசொல்வார்கள். முடிவு நேரத்தில் குறிசொல்பவரின் உடலில் இருந்து தெய்வம் நீங்கிவிடும். உடனே அவர் மலை ஏறிவிடுவார். குறிசொல்ல ஆரம்பித்து விட்டால் மக்கள் நெருக்கிக் கொண்டு குறி கேட்பதற்காக சாமியாடியை நோக்கி முன்னே செல்வார்கள்.

குறிசொல்பவர் மக்களின் மனத்தில் உள்ளதைக் கூறுவார். மக்களும் தங்களுக்குத் தேவையானவற்றை வேண்டும் என உரிமையுடன் குறி சொல்பவரிடம் கேட்பார்கள். இந்நிகழ்வு தெய்வத்திற்கும் மக்களுக்கும் இடையே நிகழும் ஊடாட்டம் ஆகும். இத்தகைய ஊடாட்டம்தான் மக்களை நாட்டார் வழிபாட்டில் பிணைத்துள்ளது எனலாம்.kuri sollalசாமியாடும் நிகழ்வு

சாமியாடுபவரை கோமரத்தாடி அல்லது சாமியாடி என்று அழைப்பார்கள். சாமி ஆடுபவர் பெரும்பாலும் நாட்டார் தெய்வத்திற்கு பூசை செய்பவராகவோ அல்லது குலதெய்வ வழிபாடு செய்பவராகவோ இருப்பார். சாமியாடுதலின் போதுதான் குறிசொல்லல் நிகழ்த்தப்படும். பூசைகள் முடிந்த பின்புதான் குறிசொல்ல ஆரம்பிப்பார்கள். சில இடங்களில் இடையிலும் நடைபெறும். பூசை முடிந்த பின்பு குறிசொல்பவர் நடுஇரவாக இருந்தாலும் தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு தெய்வத்தின் முன்வந்து நிற்பார்கள். அவர்முன் மண்சட்டியில் நெருப்பை வளர்த்து சாம்பிராணி போடுவார்கள். புகை அதிகமானதும் சாமியாடி உடல் ஆட ஆரம்பிக்கும். அப்போது ‘ஓ’ என்று வேகமாகக் கத்துவார்கள். சாமியாடுபவரின் உடலில் தெய்வம் வந்ததின் அறிகுறிதான் இந்தச் சத்தம். அப்போது பம்பை, உடுக்கை, பறை போன்ற இசைக் கருவிகளை அதிவேகத்துடன் வாசிப்பார்கள். இவ்வகையான இசைக்கருவிகள் அந்தந்தப் பண்பாடுகளுக்கேற்ப மாறுபடும். இசையின் வேகம் அதிகமானதும் வழிபாட்டில் ஈடுபட்ட மக்களில் ஒருசிலர் (ஆண், பெண்) சாமி வந்து ஆடுவார்கள். இவை போலச்செய்தல் எனலாம்.

சாமி ஆடுபவரை கட்டுப்படுத்துவதற்கு இரண்டு மூன்று பேர் தேவைப்படுவார்கள். சாமியாடியைத் தவிர சாமியாடும் மற்றவர்களைத் தடுப்பதற்கு தலையில் சாம்பலைத் தெளிப்பார்கள். அல்லது எலுமிச்சை பழத்தை வாயில் வைத்து கடிக்கச் சொல்வார்கள். பழத்தைக் கடித்த பின்பு சாமியாடுபவர் சமநிலைக்கு வந்துவிடுவார். கோமரத்தாடி தெய்வத்தின் அருகில் இருக்கும் கத்தியையோ, சுக்குமோத்தடி என்ற கருவியையோ கையில் எடுத்துக் கொண்டு ஆடுவார். ஆடும் போது நிலையின்றி ஆக்ரோஷமாக ஆடுவார். தெய்வம் வந்து ஆடும்போது எதிரில் யாரும் நிற்க மாட்டார்கள்; பேசவும் மாட்டார்கள். தெய்வத்தின் கருவியால் சாமியாடி தன்னையே அடித்துக்கொண்டும் ஆடுவார். நெருப்புச் சட்டியைக் கையில் எடுத்து ஆடிக் கொண்டிருக்கும்போது சாம்பலை எடுத்து வழிபட வந்திருக்கும் நாட்டார்களிடம் கொடுப்பார். கொடுத்ததும் குறிசொல்ல ஆரம்பித்து விடுவார். குறிசொல்லி முடித்தபின் மலையேறி விடுவார். குறி சொல்லலின் போது ஆவிகள் சாமியாடியின் மீது உறைவதாக நம்பிக்கைக் கொள்கின்றனர். குறிசொல்பவர் அசைவம், மது சாப்பிடாமல் விரதம் இருக்கவும் சிலர் குடும்ப வாழ்விலிருந்து விலகியும் இருப்பர்.

சில வழிபாட்டு முறைகளில் மலையேறி முடித்த பிறகு குறிசொல்வதையும் காணலாம். குறிசொல்லல் இல்லாமலும் சாமியாட்டம் நிகழ்த்தப்படும். இவ்வாறு பல முறைகளில் சாமியாடுதல் நடைபெறுகின்றது.

குறிமொழி

குறிசொல்லலில் குறிசொல்பவர் சில குறிமொழிகளைப் பயன்படுத்துவார். இத்தகைய குறிமொழியைக் கேட்கும் நாட்டார்களுக்கு புரியும் வகையில் குறிசொற்கள் அமைந்திருக்கும்.

சின்னவரப்பு              - வாரம்

நடுவரப்பு                    - மாதம்

பெரியவரப்பு            - வருடம்

குட்டி                 - பெண்குழந்தை

குஞ்சு                - ஆண்குழந்தை

கரும்பு                           - கிடா

சாப்பாடு                      - நெருப்பு

போன்ற குறிசொற்களைத் தனித்த மொழிகளாகக் கையாளுகின்றனர். மக்களும் குறிசொற்களைப் புரிந்துகொண்டு பதில் அளிப்பார்கள். அந்நேரத்தில் தெய்வத்திடம் பேசுவது போன்றே மக்கள் உணர்வார்கள். நீ, வா, போ என்று உரிமையுடன் உரையாடுவார்கள். சென்ற வருடம் கூறியது நடந்துவிட்டால் மகிழ்வுடன் தெரிவிப்பார்கள். நடக்கவில்லை என்றால் ஏன் நடக்கவில்லை என்று வருத்தத்துடன் கேட்பதற்கும் மக்களுக்கும் உரிமை உண்டு. அதே போல தெய்வமும் இந்த வருடம் விழா நிறைவாக இருந்ததா? இல்லையா? என்பதைக் குறிசொல்பவர் மூலம் தெரிவிக்கும். இவ்வாறு குறிசொல்லும் நிகழ்வானது நடைபெறும்.

உடல்மொழி

குறிசொல்லும் போது குறிசொல்பவர் உடல்மொழியையும் கையாளுவார். கைகளிலும் முகத்திலும் சில சைகைகளை வெளிப்படுத்துவார். எண்களைக் கூறுவதற்கு விரல்களை நீட்டிக் காட்டுவார். சில சாமியாடிகள் வாயைத்திறந்து பேசமாட்டார்கள்; சைகையின் மூலமே குறிசொல்லுவார்கள். குழந்தை என்பதற்கு இருகைகளையும் குவித்துக் காட்டுவார்கள்; மனத் திருப்தி என்றால் நெஞ்சில் கைவைத்து தலையை ஆட்டுவார்கள். இவ்வாறு குறிசொல்லுதலில் உடல்மொழியும் முக்கியத்துவம் பெறுகின்றது.

உடை அமைப்பு:

குறிசொல்லுதலில் உடை அமைப்பு என்பது நோக்கத்தக்கதாகும். குறிசொல்லுபவரில் சிலர் சாதாரண உடையிலும், வேறு சிலர் ஏற்கனவே தெய்வத்தின் சிலைக்கு உடுத்தப்பட்ட உடையினையும் உடுத்திக்கொண்டு குறிசொல்வார்கள். அவ்வாறு சொல்லும் போது தெய்வம் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக உணர்வார்கள். மக்களும் தெய்வமே நேரில் வந்தது போல மகிழ்வார்கள். மேலும் தெய்வத்தின் பொருள் மற்றவர்களிடம் வரும்போது அவர் தெய்வத் தன்மை பெற்றுவிட்டதாகக் கருதுகிறார்கள். இவ்வாறு, குறி சொல்லும் நேரத்தில் உடையும், உடை அமைப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிசொல்லும் முறைகள்

குறிசொல்லும் முறைகள் பலவகைப்படும். ஆண்களும் குறிசொல்வார்கள், பெண்களும் குறிசொல்வார்கள். கோவிலில் அதிகமாக ஆண்கள்தான் குறிசொல்கிறார்கள். தற்போது வீட்டிலோ கோவிலுக்கு அருகிலோ குறிசொல்லும் முறை காணப்படுகிறது. அவற்றில் சாமியாடி குறிசொல்லுதல், மைபோட்டு கூறுதல், வெற்றிலையைப் பார்த்துக் கூறுதல். விளக்கின் ஒளியைப் பார்த்துக் கூறுதல், எலுமிச்சைப் பழத்தைப் பார்த்துக் கூறுதல், சூடத்தின் ஒளியைப் பார்த்துக் குறிசொல்லுதல், சாம்பலைப் பார்த்துக் குறிசொல்லுதல், கத்திமேல் நின்றுகொண்டு குறிசொல்லுதல் போன்ற பல்வேறு முறைகள் காணப்படுகின்றன.

குறிசொல்லுதல் குறித்த நம்பிக்கைகள்

குறி சொல்லலும், குறிகேட்டலும் மக்களின் நம்பிக்கை சார்ந்த ஒன்றாகும். இதன் மூலம் தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் சிக்கல்கள் இல்லாமல் நடைபெறும் என்ற நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. குறிகேட்டல் நிகழ்விற்குப் பிறகு தெய்வம் தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் உணர்கின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் குறிசொல்லல் குறித்த செய்திகள் பரவலாக்கம் செய்யப்படுகிறது. நாட்டார்களிடமிருந்து மற்ற சமயத்தினருக்கும் வேறு பண்பாட்டிற்கும் பரவலாக்கமானது நடைபெறுகின்றது. தற்போது வேற்று சமயத்தினரும் நம்பிக்கைக்கொண்டு குறிகேட்க வருவதை வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் கலிதீர்த்த அய்யனார் கோவிலில் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமை நாட்களில் காணமுடியும். மேலும் நாட்டார் கிறித்தவர் வழிபடும் தேவாலயங்கள் மற்றும் நாட்டார் இசுலாமியர் வழிபடும் தர்காக்களிலும் குறிசொல்லலும் பேய் விரட்டும் சடங்குகளும் நடைபெறுகின்றன.

பொருளாதாரத்தை முன்வைத்த சடங்கியல்

சடங்கியல் தோற்றத்திற்கு அடிப்படை வழிபாடுகளும் நம்பிக்கைகளும் ஆகும். நம்பிக்கைகள் புதிய புதிய சடங்குகளைத் தோற்றுவிக்கின்றன.சங்க காலத்தில் குறத்தி குறிசொல்லல் என்ற நிலை இருந்ததை இலக்கியங்கள் வழி அறியலாம். தற்போது குறிசொல்லல் என்பது சடங்கியலுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. முன்பு வருடத்திற்கு ஒருமுறை விழா அன்று மட்டும் நடைபெற்ற குறிசொல்லல் இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து நாட்களிலும் நடைபெறுகின்ற ஒன்றாக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் குறிசொல்லும் நிகழ்வானது பொருளாதார நோக்கமாக மாறிவிட்டது என்பதே.

பணத்தேவையினை அடிப்படையாகக் கொண்டு புதிய சடங்கியலை உருவாக்குகின்றனர். அத்தகைய சடங்குகளாக திருமணத் தோசம் கழித்தல், பில்லி சூன்யம் எடுத்தல், காவுகொடுத்தல், கோழி அறுத்து தலையில் இரத்தம் விடல், குழந்தையின்மைக்குப் பரிகாரம் செய்தல், பேய் விரட்டுதல் போன்ற சடங்குகள் நடைபெறுகின்றன. இத்தகைய சடங்குகளைச் செய்வதன் வழி தெய்வத்திற்குத் தேவையானப் பொருட்கள் வாங்கிக்கொடுக்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய சடங்குகள் நாட்டார் தெய்வ வழிபாட்டில் புதிதாகத் தோன்றியவையாக இருக்கின்றன. பரிகாரம் செய்வது என்ற பெயரில் நாட்டார் மக்களிடம் பணத்தினை வசூல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

குறிகேட்பதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் வரிசை முறைப் பின்பற்றப்படுகிறது. அவ்வாறு வருபவர்களில் நபர் ஒன்றுக்கு ரூபாய் 50 முதல் 100 வரை வசூலிக்கப்படுகிறது. அவசரமாகக் குறிபார்க்க வேண்டுமானால் அதற்குத் தனியாகப் பணம் வாங்குகிறார்கள். குறிசொல்லும் நபருக்கும் தனியே பணம் வைக்கவேண்டும் என்று கூறியே உள்ளே அனுப்புகிறார்கள். நெருக்கி அடித்துக்கொண்டு குறி கேட்ட மக்கள் இன்று அலைபேசியில் வருகையைப் பதிவு செய்துவிட்டு குறிக்கப்பட்ட நேரத்திற்கு வருகை தந்து குறிகேட்கும் சூழல் உருவாகி விட்டது. இது இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சியைக் காட்டுவதோடு, கார்பரேட் வணிக கலாச்சாரமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை என்பது ஆழமான உளவியல் அடிப்படை கொண்டது. குறிசொல்லல் என்ற நிகழ்வு மக்களின் நம்பிக்கையைச் சுரண்டுவதாகவும், அதற்கான ஒரு தொழில் உத்தியாகவும் இருக்கிறது என்பதுதான் உண்மையையும் வெளிப்படுத்துவதாகக் கருதலாம்.

வழக்காறுகள் அரசியல், சமூகம், பண்பாடு, மக்களின் வாழ்வியல் முறைகள் போன்றவற்றின் காரணமாக காலத்திற்கேற்ப மாற்றங்கள் நடைபெறுகின்றன. இம்மாற்றங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய வழக்காறாகவும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு நாட்டார் மக்களின் வழிபாடு, நம்பிக்கை, சடங்குகள் போன்ற இயல்பான விசயங்கள் பொருளாதாரத்தை முன் வைத்து ஒரு வணிகமாக மாற்றம் பெறுவதையும், அதன் வழி புதிய சடங்குகள் தோற்றம் பெறுவதையும் இவ்வாய்வின் வழி அறிய முடிகின்றது.

- கனிமொழி செல்லத்துரை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்

Pin It