சென்ற இதழின் தொடர்ச்சி...

ஆய்வுலகில் நோம் சோம்ஸ்கியின் ஆக்கமுறை இலக்கணம் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை மொழியியல் அறிஞர் முத்துச் சண்முகன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். மொழிகளுக்குப் பொருத்தமான, பொதுவான இலக்கண அமைப்பைக் காணும் முயற்சியில் இந்த நூற்றாண்டில் மொழியியல் துறையில் முன்னணியில் நிற்பவர் சோம்ஸ்கி அவருடைய மாற்றிலக்கணக் கோட்பாடு. இக்கோட்பாட்டின் செயற்பாடு மொழியியலோடு மட்டும் நின்றுவிடவில்லை. மொழியாசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இவர்களிடையே முடக்கிக்கிடந்த மொழியியல். உளவியல், சமூகவியல், தத்துவவியல் ஆகிய துறைகளை எல்லாம் பாதிக்கத் தொடங்கியது (மாற்றிலக்.ப.1).

noam chamskey 377மாற்றிலக்கண அறிஞர் நோம் சோம்ஸ்கிக்கு முன்னர் எழுத்தியல், சொல்லியலை விளக்கிய அளவிற்குத் தொடரியல் விளக்கப்படவில்லை. மேலும் அவர் எழுத்தியல், சொல்லியல், தொடரியல் என்னும் முறையைத் தொடரியல், சொல்லியல், எழுத்தியல் என முறை மாற்றி விளக்குகின்றார். மொழியைப் பேசினாலும் எழுதினாலும் அது தொடரில் இருந்துதானே தொடங்குகின்றது. அது புறநிலை அல்லது புதைநிலைத் தொடராக இருக்கலாம். மேலும் தொடரை விளக்குவதற்கு முன்னர் அது பொருண்மை (Semantics) உள்ளதா என்பதை அறிய வேண்டும் என்கின்றார்.

ஒரு வாக்கியம் எழுவாய் - பயனிலை மயக்கம் காலமயக்கம் போன்றவை இல்லாமல் இலக்கண அமைதியோடு இருந்தாலும் அது பொருள் உயர்த்துவதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அவ்வாக்கியத்தை ஆய்வுக்கு உட்படுத்தாமல் தவிர்த்து விடவேண்டும்.

               அமைப்பு மொழியியலில் தொடரை விளக்கும் அண்மை உறுப்புப் பகுப்புநிலை (IC.Analysis) வாக்கியங்களை விளக்கப் போதுமானதாக இல்லை என்பதாலேயே சோம்ஸ்கி ஆக்க முறையிலான மாற்றிலக்கணக் கோட்பாட்டை முன்மொழிந்தார். பேராசிரியர் கி.அரங்கன் அவ்விதிகளைப் பின்வருமாறு விளக்குகின்றார்

தொடரமைப்பு விதிகள்

அக அமைப்பு

மாற்றுவிதிகள்

புற அமைப்பு                            (ப.41)

               மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கியின் மொழி விளக்கத்தின்படி அக அமைப்பு, புறஅமைப்பில் காணப்படும் வாக்கியம், தொடர்களை மாற்றுவிதிகள் (Transformational Rules) வழியாகத் தெளிவாக விளக்கிவிடலாம். இவற்றை எல்லாம் பேராசிரியர் கி.அரங்கன் நிறைய சான்றுகளுடன் நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம் என்னும் தம் நூலில் விளக்கியுள்ளார்.

இலக்கணமும் மொழியியலும்

தமிழில் தொல்காப்பியமும் வடமொழியில் பாணினியின் அஷ்டாத்தியாயியும் இருமரபு சார்ந்த இலக்கண நூல்கள். நாட்டை ஆண்ட அந்நியருக்கு அணுக்கமாக இருந்தவர்கள் வடமொழி அறிந்த பார்ப்பனர்களே. அதனால் வடமொழியை அறிய அந்நியருக்கு அதிகமான வாய்ப்பு இருந்தது. அதன் பெருமையை வெளிப்படுத்தினாலும் அது இந்தியாவுக்கு அந்நியமொழி - அதாவது இந்தோ - ஐரோப்பியாவில் இருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது என்றும் அவர்களே கூறினார்கள்.

சமக்கிருத மொழியை அந்நிய நாட்டினர் ஆராய்ந்தார்கள், மொழியியல் வளர்ச்சிக்கு அதன் பங்கு முக்கியமானது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. வடமொழியைக் கற்று அந்நியர் யாராவது வடமொழியில் இலக்கியம், இலக்கணங்களைப் படைத்துள்ளார்களா என்பது தெரியவில்லை. அந்தியர் மட்டுமில்லை, சமக்கிருதத்தின் பெருமிதம் பேசுவோருக்கும் அம்மொழி வழக்கொழிந்த மொழியாதலால் பேசவோ, எழுதவோ தெரியாது. பேச்சு மொழியாக இருந்தால்தானே இலக்கியங்கள் எழுத முடியும். ஆனால் தமிழில் காலந்தோறும் இலக்கியங்களும் இலக்கணங்களும் தோன்றுகின்றன.

தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் மேலைநாட்டு அறிஞர்கள் அடிப்படையான சில தமிழ் இலக்கண நூல்களை எழுதி உள்ளார்கள். மரபிலக்கணங்களில் விளக்கப்படாத பல இலக்கணக் கூறுகள் அவற்றில் விளக்கப்பட்டுள்ளன.

மேலும் திராவிடர் நன்றியுடன் போற்றி நினைக்கத்தக்கவர் திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெல். இவரைப் போன்றே வீரமாமுனிவரின் தமிழ்ப்பணியும் தமிழ் உள்ளளவும் நிலைத்திருக்கும்.

தொன்னூல் விளக்கம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றியவர் வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டன் டைன் ஜோசப்பெஸ்கி (1680 - 1747). கொடுந்தமிழ், செந்தமிழ் இலக்கணம் என்னும் அடிப்படை இலக்கண நூல்களையும் இயற்றி உள்ளார். தேம்பாவணி என்னும் காப்பியமும் அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் கலம்பகம், அடைக்கலமாலை, கலிவெண்பா போன்ற சிற்றிலக்கியங்களும் சதுரகராதி போன்ற அகராதி நூல்களும் பரமார்த்த குருவின் கதை போன்ற உரைநடைகளும் வீரமாமுனிவருக்கு இறவாப் புகழைக் கொடுக்கும்.

மொழிகளை ஒப்பிட்டு ஆராய, இலக்கணம் எழுத வழி உள்ளதை மரபிலக்கண நூலார் அறிந்திருந்தனர். வீரசோழியம், பிரயோகவிவேகம், இலக்கணக் கொத்து என்னும் இலக்கண நூல்கள் வடமொழியையும் தமிழையும் ஒப்பிட்டு ஒற்றுமை, வேற்றுமை அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. உலக மொழிகளுக்கு ஒரே பொது இலக்கணம் இல்லை; எழுதமுடியாது என மரபிலக்கண நூலார் நம்பினர். மொழிகளில் ஒலிப்பு, வரிவடிவம், சொற்கள் புறநிலையில் வேறுபட்டிருப்பதால் இவ்வகையான முடிவுக்கு அவர்களால் வர முடிந்தது. தொல்காப்பிய உரையாசிரியர் தெய்வச்சிலையார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறி இட்டு ஆண்ட துணை அல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்ப முடிந்தோர் இலக்கணம் இன்மையான் என்க (தொ.சொ.151).

மொழியின் புறத்தோற்றமாகிய ஒலி, ஒலியன் மற்றொலி, உருபு, உருபன், மாற்றுருபு, தொடர் என்பவை மொழிக்கு மொழி மாறுபட்டிருந்தாலும் அவற்றுக்கென்று உலகலாவிய பொதுப் பண்புகள் உள்ளன. அவற்றை இனங்கண்டு மொழியியல் உலக மொழிகளுக்குப் பொது இலக்கணம் காண முற்பட்டது. பேராசிரியர் முத்துச் சண்முகன் கருத்து இவண் குறிப்பிடத்தக்கது. எல்லா மொழிகளிலும் பெயர், வினை என்ற பாகுபாடு இருப்பது பொருட் பொதுமை மனிதனுடைய ஒலியுறுப்புக்கள் ஒன்று போல் இருப்பதால் ஒலிக் கூறுகளில் பொதுமை இருப்பதில் வியப்பில்லை. சோம்ஸ்கி உருவாக்கிய பொதுமைக் கூறுகளே மொழியியலில் பெரும்புரட்சியை உண்டு பண்ணியது (மாற்றிலக்கணம். ப.2).

வடமொழி இலக்கண அமைப்பு மொழி­யியல் என்னும் கோட்பாடு வளர உதவியுள்ளது. தமிழ் இலக்கணங்கள் தொன்மையானவையாக இருந்தாலும் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் தான் அச்சேறத் தொடங்குகின்றன. மொழியியல் பார்க்கும் பொதுப்பார்வை தமிழ் இலக்கணங்களில் தேடிப்பார்த்தால் நிறையக் காணப்படுகின்றன.

மொழிப் பொருள்

நோம் சோம்ஸ்கியின் சான்று ஒன்று பெரும்பான்மையான மொழியியல் அறிஞர்களால் எடுத்தாளப்படும். Colourless green ideas sleep furiously (நிறமற்ற பசிய எண்ணங்கள் சீற்றத்துடன் உறங்குகின்றன) வாக்கியம் பிழையின்றி அமைந்தாலும் பொருளற்றதாக இருப்பின் அதனைத் தவிர்த்து விடவேண்டும். இக்கோட்பாடு தொல்காப்பிய உரை­யிலேயே காணப்படுகின்றது.

தொல்காப்பியர், எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொ.சொ.152) என்பார். பொருள் குறிப்பதை மெய்ப்பொருள் குறிப்பவை (முயல்,கோடு;யாமை, மயிர், கம்பலம்) எனவும் பொய்ப்பொருள் குறிப்பவை (முயற்கோடு, யாமை மயிர்க் கம்பலம்) எனவும் குறிப்பர். முயற்கோடு உண்டு என்னும் வாக்கியம் எழுவாய் - பயனிலை இயைபுடன் தவறின்றி இருந்தாலும் இல்லாத பொருளை உண்டு எனக் கூறுவதால் தவறுடைய வாக்கியம். முயற்கோடு இன்று என்றே வாக்கியம் அமைய வேண்டும் எனத் தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (தொ.சொ.157) குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு வருவதை வழூஉ என மரபிலக்கணம் குறிப்பிடும். திணைவழூஉ: அது வந்தான்; பால்வழு: அவள் வந்தான்; இடவழூஉ: உண்டேன்நீ; காலவழூஉ: செத்தானைச் சாம் என்றல்; மரபு வழூஉ; யானை மேய்ப்பானை இடையன் என்றல் (தொ.சொ.11).

அண்மை உறுப்புப் பகுப்பு நிலை

சொற்களைவிட வாக்கியம் நெகிழ்வுத் தன்மை உடையது. அவன் வந்தான் - வந்தான் அவன் என மாற்றியும் வழங்கலாம். நோம் சோம்ஸ்கியின் மாற்றுவிதி இதற்குப் பயன்படும். ஆனால் பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர் போன்றவற்றை இவ்வாறு மாற்ற முடியாது; எழுவாய் - பயனிலை இயைந்தே வரும். வாக்கியத்தில் தொடரும் சொற்களுக்கு இடையே இயைபு இருக்கும். இவற்றை விளக்க மொழியியல் அண்மை உறுப்புப் பகுப்பு நிலை (IC.Analysis) எனக் குறிப்பிடும். தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையர் வாக்கியங்களில் சொற்கள் அண்மை உறுப்பாக வரும் முறையை, தொடர் மொழியாவது அவாய் நிலையானும் தகுதியானும் அண்மை நிலையானும் இயைந்து பொருள் விளக்கும் தனிமொழி ஈட்டம் (தொ.சொ.1) எனக் குறிப்பிடுகின்றார்.

அவாய் நிலை (செங்கால்நாரை), தகுதி (தீச்சுடும்; நீர்குளிரும்), அண்மை நிலை (உணவை உண்டான்).

பேச்சு உறுப்புகள்

இக்கால மொழியியலார் ஒலிகள் உருவாகப் பயன்படும் உறுப்புகளைக் காற்றறை (Air cavity) பேச்சுறுப்பு (Speech organ) என இருவகையாகப் பகுப்பர்; பேச்சு உறுப்புகளை இயங்கு உறுப்பு (Active Articulator), இயங்கா உறுப்பு (Passive Articulator) எனப் பகுப்பர் (David Abercrombie, 1966).

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வகையான பாகுபாடு தொல்காப்பியத்தில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது (தொ.எ.83). மொழியியலார் மூக்கை ஒரு காற்றறை என்பர்; தொல்காப்பியர் மூக்கை ஒரு பேச்சு உறுப்பு என்கின்றார். இந்த ஒன்றைத் தவிர மொழியியல் விளக்குவதற்கும் மரபிலக்கணம் விளக்குவதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை.

எச்சம் என்பது ஒன்று இல்லை

17ஆம் நூற்றாண்டில் இலக்கணக் கொத்து என்னும் சொல்லிலக்கண நூலை எழுதிய சாமிநாததேசிகர் தமிழில் ஐந்து எழுத்துகள் மட்டுமே உள்ளன;வடமொழியே தமிழுக்குத் தாய்மொழி, வடமொழி இன்றித் தமிழால் இயங்க முடியாது என்னும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பேசினாலும் மொழியியல் கூறும் புதைநிலை அமைப்பு (Deep Sbuctisve) புறநிலை அமைப்பு (Surface Structure)  என்னும் தொடரியல் கோட்பாட்டை முன்பே கூறியுள்ளார். எச்சம் என்று ஒன்று இல்லைஞ். விகாரமுற்று (இல.கொ.84).

படித்த பெண் என்னும் பெயரெச்சத் தொடர் ஒரு புறநிலைத் தொடர். இதன் புதைநிலை வடிவம் பெண் படித்தாள். இந்த அளவோடு அமைப்பு மொழியியல் நின்றுவிடும். புதைநிலையில் இருந்து புறநிலை வடிவத்தைக் கொண்டுவரும் மாற்று விதிக் கோட்பாட்டால் நோம் சோம்ஸ்கி மொழியியலில் புரட்சி செய்தார்; உச்சம் தொட்டார் என்று பாராட்டப் படுகின்றார்.

புறநிலை வடிவம் படித்த பெண், புதைநிலை வடிவம்: பெண் படித்தாள் மாற்றுவிதிகள் 1. நீக்கல்விதி - பால் காட்டும் விகுதி ஆள்: பெண் படித்த-2 சேர்த்தல் விதி - பெயரெச்சவிகுதி - அ: பெண்படித்த 3.முறைமாற்றவிகுதி - 1,2 - 2,1 பெண் படித்த - படித்த பெண்.

எதிர்மறை வடிவங்கள்

தமிழில் உடன்பாட்டு வினைமுற்று, எச்சங்களுக்கு இணையாக எதிர்மறை வடிவங்களும் நிறையக் காணப்படுகின்றன. தொல்காப்பிய உரையாசிரியர்கள் சான்றுகள் கொடுக்கின்றார்களே தவிர, தொல்காப்பியர் எதிர்மறை வினையெச்ச, பெயரெச்ச வாய்பாடுகளைக் குறிப்பிடவில்லை. உடன்பாட்டுப் புதைநிலை வடிவில் இருந்து எதிர்மறைப் புறவடிவங்களைப் பெறலாம் என்பதே இதன் அடிப்படையாகும்.

மரத்தைக் குறைத்தான் - மரத்தைக் குறையான் என்னும் வாங்கியங்கள் உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வருகின்றவே தவிர, வேற்றுமை உருபு ஏற்று வருவதில் எந்த வேறுபாடும் இல்லை (தொ.சொ.107). இதே போன்று பெயரெச்சமும் வினையெச்சமும் உடன்பாடு - எதிர்மறையில் வந்தாலும் பொருள் வேறுபடுமே தவிர, அமைப்பு ஒன்றாக இருக்கும் (தொ.சொ.236). அதாவது புறநிலையில் வரும் எதிர்மறை எச்சங்களுக்குப் புதைநிலையில் வரும் எச்சங்களே அடிப்படை வடிவங்கள் உண்டசோறு - உண்ணாச்சோறு; உண்டு வந்தான் - உண்ணாது வந்தான். நோம் சோம்ஸ்கியின் மாற்றிலக்கண விதிகள் வழிப் பெறலாம்.

மேலே விளக்கப்பட்டுள்ள பொருண்மை­யியல், எழுத்தியல், சொல்லியல், தொடரியல் தமிழ் இலக்கணக் கூறுகள் அனைத்தும் ஒருமொழிக்கு உரியதாயினும் பொதுமைப் பண்பு நிறைந்தவை பேராசிரியர் கி.அரங்கன் மொழியியல் வளர்ச்சிக்கு வட மொழி இலக்கண மரபு உதவியதைச் சுட்டிக் காட்டுகின்றார். புளும்பீல்டு (1933) ஜான் லைன்ஸ் (1968), நோம் சோம்ஸ்கி (2001) குறிப்பிட்டவற்றைச் சுட்டுகின்றார். தமிழ் இலக்கண மரபு தொடக்க கால மொழியியல் அறிஞர்களுக்கு அதிகம் தெரியவாய்ப்பில்லாமல் இருந்துள்ளது.

சோம்ஸ்கியும் அரசியலும்

உலகம் முழுவதிலும் ஆன்றவிந்து அடங்கியோர் கணக்கற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் படைப்புகளின் வழி வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அனைவரையும் சான்றோர் எனக் குறிப்பிட முடியாது. தம்மின மக்கள் வாழ வேண்டும் என நீதி நூல்களை எழுதியவர்களும் இருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து ‘நீங்கள் வாழப் பிறரைக் கெடுக்காதீர்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகப்பொதுமறையை அருளிய திருவள்ளுவப் பெருந்தகை அனைவரும் இசைபட (திருக்.231) வாழ வேண்டும் என்கின்றார். அடுத்தவரைச் சுரண்டி வாழ வேண்டும் என நினைப்பவர் கொடூர மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆளும் வர்க்கத்தின் இடத்தை மதவாதிகள் பிடித்துக் கொண்டார்கள்; பண்ணையார்கள், முதலாளிகள், உலகப்பெரு முதலாளிகள் என ஆள் மாறுகின்றார்களே தவிர, சுரண்டலும் ஏமாற்றும் மாறவில்லை.

பல முற்போக்குச் சிந்தனையாளர்கள் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவத்திற்காக வாழ் நாளைத் தியாகம் செய்துள்ளார்கள். கார்ல் மார்க்ஸ், உலக அளவிலும் அம்பேத்கர் இந்திய அளவிலும் பெரியார் தமிழக அளவிலும் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலகம் போற்றும் மொழியியல் சிந்தனையாளர் மாமேதை நோம் சோம்ஸ்கி அதிகார வர்க்கத்தின் மேலாண்மைப் போக்குக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றார். ‘படித்தவன் சூது செய்தால் ஐயோ ஐயோ என்று போவான்’ என்கிறார் மகாகவி. அவர்கள் போகிறார்களே இல்லையோ? மக்கள் உலகம் முழுவதிலும் ஐயோ ஐயோ என்று வறுமை, போர், நோய் போன்றவற்றால் மடிகிறார்கள்.

சர்க்கரை, இதய நோய், சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் எனப் பல்வேறு தொற்றா நோய்களால் மடிகின்றார்கள். வெடி குண்டு தயாரிக்கப் பயன்படும் இரசாயனப் பொருள்களை வேளாண் உற்பத்திக்குப் பயன்படுத்தினால் இவ்வாறு தான் நடக்கும். அதிகாரவர்க்கத்துக்குத்தான் இல்லை; அறிவாளிகளுக்கு - வேளாண் விஞ்ஞானிகளுக்கு அடிப்படை அறிவு வேண்டாமா?

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விட்டதாகப் பெருமிதம் பேசுகின்றார்கள். புதுப்புது நோய்கள் உற்பத்தி ஆகி இருப்பதை மறந்துவிடுகின்றார்கள். அறுபது-எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்த் தொற்று நோய்கள் இருந்தன. பசுமைப்புரட்சி வந்த பிறகு ஒவ்வொரு மனிதரின் உடம்பிலும் புற்றுக்குள் பலவகைப் பாம்புகள் குடி இருப்பது போலப் பலவகை நோய்கள் இடம் பிடித்துக் கொண்டுள்ளன. மருந்து கண்டு பிடிக்கின்றார்களே தவிர, நோயின் மூலத்தை அறிவதில்லை. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் / வாய் நாடி வாய்ப்பச் செலல் (திருக். 948). ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். உடல் நலத்திற்கும் உலகச் சுற்றுச் சூழலுக்கும் மரபு சார்ந்த வேளாண்மையே சிறந்தது. நம்மாழ்வார் போல இந்திய அளவிலும் பலர் குரல் கொடுக்கின்றார்கள். ஆளும் வர்க்கத்தின் பிடியில் வேளாண்மை சிக்கித் தவிக்கும்போது ஏழை சொல் அம்பலம் ஏறுமா? பசுமைப் புரட்சி உடும்பைப் போல வேளாண்மையைக் கௌவிக் கொண்டிருக்கின்றது; நாம் உதற நினைத்தாலும் அது விடாது. சூழல் அப்படி அடைந்து விட்டது.

பேராசிரியர் கி.அரங்கன் நோம் சோம்ஸ்கியின் அரசியல் செயற்பாட்டை விளக்குவதோடு தம்முடைய கருத்தையும் தெளிவாகப் பதிவு செய்கின்றார். சோம்­ஸ்கியின் அரசியல் சிந்தனையைப் படிக்கும்போது தற்போது பொருளாதார மேதாவிகள் பேசியதும் நினைவுக்கு வருகின்றது. இலவசங்கள் கொடுப்பதால் தான் நாட்டின் முன்னேற்றமே நலிவடைகின்றதாம். குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு எப்படி எல்லாம் சிந்திக்கின்றார்கள்!

தம்முடைய உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை; வேலை வாய்ப்பும் நிலையாகக் கிடைக்கவில்லை. உற்பத்திப் பொள்ருகளுக்கு உரிய விலையும் கிடைக்கவில்லை. வேளாண் மக்களின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை; ஊருக்குச் சோறு போட விவசாயியின் தாலி அறுபடுகின்றது. அவர்களுக்குக் கொடுக்கப்படும் இலவச மின்சாரம், சில மானியங்களை மேதாவிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கருப்புப் பணம் பல்லாயிரங் கோடிகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கப்படுகின்றது. வங்கி மோசடி செய்து பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டிக் கொண்டு ஆளும் வர்க்கத்தின் ஆசிபெற்று நாட்டைவிட்டு ஓடி விடுகின்றார்கள். ஒன்றிய அரசு பெரும்பான்மை மக்களுக்குச் கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கிறது. அது இந்தப் பொருளாதார நிபுணர்களின் கண்ணை உறுத்துகின்றது. பெரும் பெரும் நிறுவனங்களுக்குப் பல லெட்சம் கோடிகளை ஒன்றிய அரசு மானியமாகக் கொடுக்கின்றது. கடனைத் தள்ளுபடி செய்கின்றது. இவை எல்லாம் அந்த மேதாவிகளுக்குத் தெரியவில்லை.

வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றதால் வேளாண் மக்கள் இரு மடங்காகக் கிடைக்கக் கூடிய வருவாயை இழந்து விட்டார்களாம்.அவை மட்டும் திரும்பப் பெறாமல் இருந்தால் விவசாயிகளின் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருமானம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகமாகக் கொட்டி இருக்குமாம். நிபுணர்கள் என்னமாயக் கதை விடுகின்றார்கள். அவை கார்பரேட் நிறுவனங்களுக்காகக் கொண்டு வரப்பட்டவை என்பது கோமணம் கட்டாததுகளுக்குக் கூடத் தெரியும்.

கார்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் எந்திரங்கள், உரங்கள், பூச்சி, களைக் கொல்லிகள், விதைகள் எரிபொருள்கள் விலை ஏறுவதுபோல ஏறுகின்றன ஆனால் வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலை சேற்றில் மாட்டிய யானை போல இறங்கு முகமாகவே உள்ளது. இந்த அதிகாரவர்க்க மேதாவிகளுக்குத் தெரியாதவை இல்லை.

ஆட்டுக்குத் தாடி போலத்தான் மாநிலத்திற்கு ஆளுநர் என அண்ணா கூறியது தமிழகத்தில் ஒரு சொலவச் சொல் போல ஆகிவிட்டது. தமிழக ஆளுநர் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணைப்புப் பாலம் போலச் செயல்படலாம். உளவுத்துறை, காவல் துறையில் பணியாற்றியவர்களுக்குக் கைப் புண்ணைப் பார்க்கக் கூடக் கண்ணாடி தேவைப்படும். மாநில உணர்வுகளை மதிக்காதவர் பந்தி வைத்தால் கடை விரித்தோம் கொள்வாரில்லை என்னும் நிலைதான் ஏற்படும். அதிகாரம் என வந்துவிட்டால் மெத்தப்படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத் தான் இருப்பார்கள் போலும்!

அரசியலை மதம், உளவுத்துறை, காவல்துறை கைப்பற்றிக் கொண்டால் எரியும் நெருப்புக்குக் காற்று துணை நிற்பது போலத்தான். சிறுபான்மை மதத்தினரும் பெரும்மதத்தின் அடித்தட்டு மக்களும் படாதபாடுபடுவார்கள். எனவே தான் நோம் சோம்­ஸ்கி அறம் சார்ந்த அறிவாளிகள் ஆளும் வர்க்கத்திற்குத் தேவை என்கின்றார்.

நாகலாந்தில் இருந்து மாற்றப்பட்ட தற்போதைய தமிழக ஆளுநரை நினைக்கும்போது இராபர்ட் கிளைவ் தான் நினைவுக்கு வருகிறார். இங்கிலாந்தில் அடங்காப்பிடாரி, வில்லங்கம் பிடித்தவர்களைக் காலனி நாடுகளுக்கு ஆட்சி செய்ய அனுப்புவார்களாம்! காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேர்தலில் வென்றால் அமைச்சர், தோற்றால் ஆளுநர் என்பார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைக் குறை கூறவும் எதையாவது குண்டக்க மண்டக்கப் பேசவும் தகுதி பெற்றால் ஒன்றிய அரசு ஆளுநர் பதவி கொடுக்க வாய்ப்புள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநரே தேவை­யில்லை எனப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

பல்கலைக் கழகத் துணை வேந்தரை மாநில ஆளும் கட்சி தெரிவு செய்தால் அரசியல் கலந்து விடுமாம். ஆளுநர்களும் அரசியல்வாதிகள் தான்; பொறுப்பேற்றவுடன் புனிதர்களாகவா மாறி விடுகின்றார்கள்? அண்மைக் காலத்தில் பொறுப்பேற்ற பல துணை வேந்தர்கள் ஒன்றிய அரசுக்குத் துணை போகின்றவர்களே!

நீட் தேர்வு, பேரறிவாளன் விடுதலை போன்றவற்றில் தற்போதைய ஆளுநர் எவ்வளவு அழிச்சாட்டியம் செய்கின்றார்? மாநில அரசின் உரிமைகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பறித்து வைத்துக்கொண்டு ஒன்றிய அரசு தேவை இல்லாமல் குடைச்சல் கொடுக்கின்றது. பாபர் மசூதி போன்ற வழக்குகளில் மக்கள் உச்சநீதி மன்றத்தின் மீது கொண்டிருந்த ஒவ்வாமையை பேரறிவாளன் விடுதலை வழி மாற்றி விட்டது. ஆளும் வர்க்கத்திற்கு அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் தவறான தகவல்களைக் கொடுப்பதால் ஏற்பட்ட பிழை. முப்பத்தோர் ஆண்டுகள் பேரளிவாளனின் வாழ்க்கை-இளமை வீணே கழிந்துள்ளது.

உலகில் ஏதாவது சிக்கல் வரும்; உணவுப் பஞ்சம் வரும்; விலை உயரும்; இப்படி வரும்போதுஅதிகார வர்க்கம் திசைதிருப்ப ஏதாவது ஒரு நரித் தந்திரம் செய்யும். அப்படிப்பட்ட ஒன்றைப் பேராசிரியர் கி.அரங்கன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போர் ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. போர் ஏற்படுகின்ற சூழலில் நாட்டு மக்களின் முழுக் கவனமும் போரை நோக்கித் திருப்பி விடப்படுகின்றது. கருத்து மோதல்கள் மறக்கப்பட்டு நாட்டுப்பற்று முன்னிறுத்தப்படுகின்றது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்கள் முழு ஆற்றலையும் தங்கள் நாட்டின் வெற்றி என்ற திக்கை நோக்கிச் செலுத்துகின்றார்கள்.(ப.177).

மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கி வியட்நாம் போர், இலங்கைப் போர் போன்றவற்றுக்கு எல்லாம் கடுமையாகக் குரல் கொடுக்கின்றார். வியட்நாமில் அமெரிக்கா போர் செய்தபோது பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மாண்டு போனார்கள். குடி மக்களின் வரிப்பணம் வீணாகச் செலவு செய்யப்பட்டது. வியட்நாமில் நடைபெறும் போருக்காக அமெரிக்கா தன் குடிமக்களின் வரிப் பணத்தைச் செலவிடுவதால், அக்குற்றத்தைத் தடுக்கும் வழியில் தாம் அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில் வரி செலுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்காக அமெரிக்க அரசு அவரைச் சிறையிலும் அடைத்தது (பக்.121 - 122).

பேராசிரியர் கி.அரங்கன் நோம் சோம்ஸ்கியின் அரசியற் பார்வை அறம் சார்ந்தும் மானுட நேயம் சார்ந்தும் இருப்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஒரு அரசு பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவும் சிறுபான்மையான் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமானதாகவும் அமையும்போது அடக்குமுறை ஏவி விடப்படும். உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நசுக்கப்படும். அங்கு மனித இயல்பான படைப்பாற்றல் வெளிப்பட முடியாது. உழைப்பு சுகமானது என்ற நிலையிலிருந்து அது எந்திர கதியானது என்ற நிலைக்கு அந்த நிலை நம்மை இழுத்தும் செல்லும். மனித மனம் ஒன்றாத உழைப்பு அவனுக்கு அந்நியமாகிறது. கொடுக்கப்படும் கூலிக்காக உழைப்பு அங்கு விற்கப்படுகின்றது. முதலாளித்துவம் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தச் சூழல் ஒரு வணிக மையமான சூழல் மனித உறவுகளுக்கு எந்தவித இடமும் அங்குக் கிடையாது (ப.129).

தங்கள் சுகபோக வாழ்க்கைக்கும் முறையற்ற பதவி உயர்வுகளுக்கும் ஆளும் வர்க்கத்திற்குத் துணையாகப் பணியமர்த்தப்படும் அறிவாளிகள், அதிகாரிகள் சோரம் போகக் கூடாது என்பது நோம் சோம்ஸ்கின் கருத்தாகும்.

ஆளுகின்றவர்கள் அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதில்லை. முடியாட்சி, மக்களாட்சி காலங்களின் வரலாற்றில் பார்க்கின்றோமே! நல்ல அறிவாளிகள் சுயநலம் இல்லாத அறம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது உலகின் தலைசிறந்த ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கியின் வேண்டுகோள்.

உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுமை இலக்கணம் கூறிய மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கி ஒட்டுமொத்த மானுட இனம் நாடு, மதம் உயர்வு - தாழ்வு என்னும் வேறுபாடின்றி வாழ விரும்புகின்றார். அதிகார வர்க்கமும் அறிவாளி வர்க்கமும் அறம் சார்ந்து சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும் என விரும்புகின்றார். முற்போக்காளர்களான கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், பெரியார் அம்பேத்கர் போன்ற இடது சாரிச் சிந்தனையாளர்களால் தான் இப்படிச் சிந்திக்க முடியும்.

போர் என்பது பூமியின் உயிரினங்களுக்கு மரணத்தின் முன்னறிவிப்பாகும். அங்கு வெற்றியாளர்களே இல்லை. மனித வரலாற்றில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அதை மறுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது (இந்து-தமிழ், ப. 6, 22-5-2022). உலக மொழிகளுக்கு எல்லாம் பொதுமை இலக்கணம் கூறிய பேரறிஞர் நோம் சோம்ஸ்கி அண்மைப் பேட்டியில் உலக ஏதேச்சிகாரச் செயல்பாட்டாளர்களின் ஒட்டு மொத்த மனநோய் குறித்துச் சிந்தித்துள்ளார். போர் வெறியைத் தூண்டுகின்றவர்கள், மத வெறி, மொழி வெறியைத் தூண்டுகின்றவர்களால் மனித குலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உயிரினங்களும் அழியப்போவதைக் குறிப்பிடுகின்றார்.

ஏற்கனவே தொழிற்புரட்சியாலும் பசுமைப் புரட்சியாலும் பல உயிரினங்கள் இயற்கை வளங்களும் ஆண்டுக்கு ஒரு நாள் நினைவு தினம் கொண்டாடும் நிலையை அடைந்து விட்டன. முதல், இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஆங்காங்கே நடந்த போர்களாலும் தற்போதும் நடக்கும் போர்களாலும் இந்த உலகம் குட்டிச் சுவர் ஆகப் போவதை உலகின் ஆகச் சிறந்த மாமேதை நோம் சோம்ஸகி முன்னெச்சரிக்கையாகக் குறிப்பிடுகின்றார். இப்படி உலகளாவிய வளர்ச்சி சார்ந்து சிந்திப்பவர்கள் தாம் வரலாற்றில் மாமேதைகள் மற்றவர்கள், அவரவர் விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம்.

பேராசிரியர் கி.அரங்கன் தமக்கு மொழியியலின் ஆகச் சிறந்த கோட்பாட்டைக் கற்றுத் தந்த மொழியியல் மேதை நோம் சோம்ஸ்கியைத் தமிழில் தெளிவாக அறிமுகப்படுத்துகின்றார். பல்லாண்டுகள் வாழ வாழ்த்தி வணங்குவோம்.

- ச. சுபாஷ் சந்திரபோஸ், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர், இலக்கணவியல் ஆய்வாளர், எழுத்தாளர்.

Pin It