ஜூலை மாத ‘உயிர்எழுத்து’ இதழில் வண்ணதாசன் எழுதிய ‘நாபிக்கமலம்’ சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. நாபிக்கமலம் நாபிக்கமலம் என்று ஆழ்மனத்தில் அசைபோட்டபடி இருந்தபோதே, இதயக்கமலம் என்றொரு சொல் எங்கிருந்தோ பிறந்துவந்து இணைந்து கொண்டது. பிறகு இதயக்கமலம், நாபிக்கமலம் ஆகிய இரு இணைசொற்களையும் நாலைந்து முறை இணைத்து இணைத்து சொல்லிப் பார்த்தேன். சட்டெனெ என் அகத்தில் ஒரு சுடர் மின்னி மறைந்ததை உணரமுடிந்தது. கதையின் மையம் அதைத்தான் காட்சிப்படுத்துகிறது. நாபிக்கமலத்தில் ஒருத்தியும் இதயக்கமலத்தில் இன்னொருத்தியும் இருக்க, ஓர் ஆண் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. பெண்நட்பு என்பதை ஏற்றுக் கொள்வதில் பெண்துணைக்கு உருவாகும் தயக்கம் கொஞ்சநஞ்சமல்ல.

சந்தேகத்துக்கு இலக்காகிவிட்ட ஆணின் பாடுகளை சங்கரபாகம் பாத்திரம் வழியாக வண்ணதாசன் மிகவும் துல்லியமாகச் சித்திரித்திருக்கிறார். மனைவியான கனகுவின் எதிரில், அவரால் சுதந்திரமாக ஒரு புத்தகத்தைப் புரட்டமுடியவில்லை. பழசோ புதிதோ, ஒரு வாழ்த்தட்டையைக்கூட உற்றுப் பார்க்கமுடிய வில்லை. வாசல் பக்கம் சென்று நிற்கமுடியவில்லை. வீட்டைத் தேடி வந்து பேசிவிட்டுப் போகும் பெண்ணிடம் நான்கு நொடிகள் சிரித்துப் பேசவோ, கைபிடித்துக் குலுக்கவோ முடியவில்லை. மகனின் அழைப்பையேற்று பள்ளிக்கூடத்துக்குச் சென்ற இடத்தில் அவருக்கு ஏற்கெனவே பழக்கமான பெண் அங்கே தன் மகனுக்கு ஆசிரியையாக இருப்பதை அறிந்த மகிழ்ச்சியில் கூடுதலாக இரு சொற்கள் பேசி, ஒரு கணம் புன்னகை சிந்தி, ஒருமுறை கையைப் பிடித்து அழுத்தமாகக் குலுக்கிவிட்டு வரவும் முடியவில்லை. உத்வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், பேசிவிட்டோ சிரித்து விட்டோ கைகுலுக்கிவிட்டோ வரும் தினங்களில் அவரைத் தாக்கித் தைக்கும் சொல்லம்புகளுக்கு பஞ்சமே இல்லை. புண்படுவதும் உடைவதும் அழுது சோர்வுறுவதும் அவருக்கு வாடிக்கையான செயல்களாக மாறிவிடுகின்றன. இத்தனைக்குப் பிறகும் சங்கரபாகம் தனது மனைவியை ஒருபோதும் வெறுக்கவில்லை. அவருடைய அன்பு ஆழமும் விரிவும் கொண்டதாகவே இருக்கிறது.

சாகிறவரைக்கும் சங்கரபாகத்தின் மனைவி கனகு, அவரை நம்பாமலேயே வாழ்ந்து முடித்துவிடுகிறாள். யாரோ ஒரு பெண்ணின் வலையில் தன் கணவன் கண்டிப்பாக விழப்போகிறான் என்கிற அச்ச உணர்வு அவளைப் படாதபாடு படுத்துகிறது. அவர் மனத்தை உடனடியாகக் கலைக்க வசைகளும் கிண்டல்களும் தான் சிறந்த வழியென அவள் மனம் தானாகவே ஒரு முடிவைக் கண்டடைந்து, இறுதிமூச்சு வரைக்கும் அந்த முடிவைச் செயல்படுத்துபவள்போல நெருப்பைக் கக்கிக்கொண்டே இருக்கிறாள். அடுத்த பெண்ணுடன் சிரித்துப் பேசுபவனோ அல்லது கைகுலுக்கிவிட்டுச் சிரிப்பவனோ நல்ல கணவனல்ல என்பது அவளுடைய ஆழமான நம்பிக்கை. பெண்நட்பு என ஒன்று இந்த உலகத்தில் சாத்தியம் என்பதை அவள் மனம் இறுதி வரைக்கும் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

வண்ணதாசனின் நாபிக்கமலத்தோடு இணைத்துப் பார்க்கும் வகையில் இன்னொரு சிறுகதையும் நினைவுக்கு வருகிறது. அது பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய ’துறவு’ என்னும் சிறுகதை. மனமொத்து வாழும் அன்னபூரணி-சுந்தரராஜன் தம்பதியைப்பற்றிய சுருக்கமான சித்திரத்தை இச்சிறுகதையின் தொடக்கப்பகுதி அளிக்கிறது. பத்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தபோதிலும், அவர்களுக்கு பிள்ளைப்பேறு இல்லை. ..அது ஒன்றுதான் குறை. உடலளவிலான குறை கணவனிடம் உள்ளது என்பதை மருத்துவச் சோதனைகளின் அடிப்படையில் தெரிந்து கொண்ட நிலையிலும் அன்னபூரணி அவனை வெறுப்ப தில்லை. மாறாக, எப்போதையும்விட கூடுதலான அன்போடு நடந்துகொள்கிறாள். ஆனால் சுந்தரராஜன் அப்படி நடந்துகொள்ளவில்லை. தன் கடையில் கணக்கெழுத வந்த சுசிலாவிடம் ஆசை வார்த்தை பேசி மயக்கி, ஒரு குழந்தைக்காக இன்னொரு திருமணம் தனக்குத் தேவை என்றெல்லாம் பொய்யுரைத்து, அவளுடன் இருப்பதற்காகவென்றே யாருக்கும் தெரியாமல் இன்னொரு வீட்டைக் கட்டி முடிக்கிறான். வீடு தயாரானதும், அவளைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டு திரும்பி வருகிறான். உண்மையைத் தெரிந்துகொண்ட அன்னபூரணி அதிர்ச்சி யடைகிறாள். மறுகணமே அதைக் கடந்து, புதிய வீட்டிலிருக்கும் சுசீலாவை அழைத்து வந்து தன் வீட்டிலேயே குடியேற்றிவிட்டு, ஊரைத் துறந்து காணாமல் போய்விடுகிறாள். குற்ற உணர்ச்சிக்குள்ளான சுசீலாவோ, அன்னபூரணியின் இருப்பிடத்தை கண்டு பிடிக்கும்வரைக்கும் அவனுக்கும் தனக்கும் இடையே எவ்விதமான பாலுறவுக்கும் இடமில்லை என அறிவித்து விட்டு, அதைத் துறந்து நிற்கிறாள். அன்னபூரணியின் அன்புமின்றி, சுசீலாவின் நெருக்கமுமின்றி தன்னந் தனியே தவிக்கிறான் சுந்தரராஜன். எங்கோ கண்காணாத இடத்துக்குச் சென்றுவிட்ட அன்னபூரணி, ஆதரவற்ற முப்பது நாற்பது குழந்தைகளைச் சேர்த்துக்கொண்டு, எல்லோருக்கும் அன்பும் ஆதரவும் அளிக்கிற தாயாக மாறிவிடுகிறாள்.

நாபிக்கமலத்தில் இடம்பெறும் கனகு கணவன் மீது கோபமுற்று பலமுறை வெடிக்கிறாள். நெருப்பென சொற்களை வீசிச் சுடுகிறாள். ஆனால், ஒருகணமும் அவனைவிட்டு நீங்கும் எண்ணம் அவளிடம் வந்ததே இல்லை. அவனை நீக்கும் எண்ணமும் இல்லை. மாறாக, அவனை இன்னும் நெருக்கமாக இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே அவள் சொற்களில் வெளிப்படுகிறது. பெண்நட்பு என்பதைப் பற்றி அடிப்படையிலேயே நம்பிக்கையற்றவள் என்பதால், சுந்தரபாகத்தின் மனம் நட்பின் எல்லைக்குள் இருக்கும் ஒன்றா அல்லது எல்லையைக் கடந்த ஒன்றா என்றெல்லாம் ஆலோசிக்க அவள் முயற்சி செய்யவே இல்லை. நம்பிக்கையற்ற ஒன்றின்மீது அவளுக்கு விருப்பமும் இல்லை. விருப்பமற்ற ஒன்று மீண்டும் மீண்டும் நிகழும்போது, வெறுப்பாக மாறிவிடுகிறது. ஒரு கோணத்தில் சுந்தரபாகம்மீது அவள் கொண்டி ருக்கும் தீரா அன்புதான், இன்னொரு கோணத்தில் வெறுப்பாக வெடிக்கிறது. தீரா அன்புக்கும் வெறுப்புக்கும் இடையே வாழ்க்கைமுழுதும் ஓடி ஓடி அவள் களைத்து விடுகிறாள். சுந்தரபாகத்தையும் களைப்புற வைத்து விடுகிறாள்.

கனகுவின் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருக்கிறாள் அன்னபூரணி. பெண்நட்பு என்கிற எல்லையைக் கடந்து மற்றொரு பெண்ணுடன் மணஉறவு என்னும் எல்லைக்குள் தன் கணவன் சென்றுவிட்ட நிலையில், இல்லற வாழ்வில் அடுத்த முடிவு என்ன என்னும் தீர்மானத்தை எடுத்தாக வேண்டிய புள்ளிக்கு வந்துவிடுகிறாள். அதே நிலையில் தொடர்வதா அல்லது துண்டித்துக் கொள்வதா என தனக்கிருக்கும் இரு வாய்ப்புகளில் துண்டித்துக் கொள்ளும் முடிவை எடுத்து, மறு சிந்தனைக்கே வழி கொடுக்காமல் வெளியேறிவிடுகிறாள். அவள் நெஞ்சில் வற்றாத ஊற்றாகப் பொங்கி வழியும் அன்பைப் பகிர்ந்துகொள்ள எங்கோ ஒரு மூலையில் ஆதரவில்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அன்னபூரணியையும் கனகுவையும் தமிழ்ச்சிறு கதையுலகில் சந்திக்கும் முன்பாக, ஜெயகாந்தனின் ‘அந்தரங்கம் புனிதமானது’ சிறுகதை முன்வைத்த மனைவி பாத்திரம் நினைவுக்கு வருகிறது. தாத்தா பாட்டியுடன் கிராமத்தில் வளர்ந்த பிள்ளை, பெரிய வனாக வளர்ந்த பிறகு அம்மா அப்பாவுடன் சில நாட்கள் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தில் நகரத்துக்கு வருகிறான். வந்த இடத்தில் அம்மாவும் அப்பாவும் பழகிக்கொள்ளும் முறை அவனுக்கு முதலில் விசித்திர மாக இருக்கிறது. அவனே அதை வெறுப்பாக வளர்த்துக் கொள்கிறான். அவன்தான் ஒருநாள் தன் அப்பாவுக்கு வேறொரு பெண்ணுடன் நட்பு பூத்திருப்பதைக் கண்டு பிடிக்கிறான். அதையட்டி தன் தந்தையுடன் விவாதிக்கவும் செய்கிறான். தன் அம்மாவை ஏமாற்று வதாக அப்பாவின்மீதே நேரிடையாக குற்றம் சுமத்து கிறான். அதற்கு அப்பா கொடுக்கும் விளக்கங்கள் அவனைத் திருப்திப்படுத்தவில்லை. அதை நம்பவும் அவன் தயாராக இல்லை. தன் மனைவியின் மீது தான் கொண்டிருக்கும் பிரியத்தையோ அல்லது நம்பிக்கை யையோ இன்னொருவருக்கு நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை எனச் சொல்லும் அவர் வாதத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட அவன் அம்மாவும் அதே சொற்களையே வேறொரு விதமாக அவனிடம் சொல்கிறாள். ஒவ்வொருவருக்கும் அவரவர் அந்தரங்கம் புனிதமானது என்றும், அந்தக் கோட்டைக் கடந்து இன்னொருவர் நுழைய நினைப்பதே அநாகரிகமான செயல் என்றும் விளக்கமளிக்கிறாள். அவ்விருவருடைய விளக்கங்களையும் செரித்துக்கொள்ள இயலாத அந்த இளைஞன் கிராமத்துக்கே திரும்பி விடுகிறான்.

அந்தரங்கம் புனிதமானது என்றுரைக்கும் மனைவி பெண்நட்பை உணர்ந்தவளாகவும் அதற்கு மதிப்பளிக்கிற வளாகவும் இருக்கிறாள். அது ஒருகாலும் மணஉறவாக மாறாது என்னும் நம்பிக்கையும் அவளை உறுதியாக நிற்கவைக்கிறது.

தமிழ்ச்சிறுகதைகள் சித்திரித்துக் காட்டியிருக்கும் மூன்றுவிதமான பெண்களையும் இப்படி ஒரு நேர்க் கோட்டில் நிறுத்திவைத்து, குடும்பத்தளத்தில் பெண் நட்பு உருவாக்கும் விளைவு என்ன என்பதை யோசிக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆண்நட்புக்கும் பெண்நட்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டுக்கும் அடிப்படை அன்பு ஒன்றே. ஆயினும் பெண்நட்பு என்பதை, மனைவியாக இருக்கும் பெண் எந்த அளவுக்குப் புரிந்துகொள்கிறாள் அல்லது ஏற்றுக்கொள்கிறாள் என்பதைப் பொறுத்தே அதைத் தொடரக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. அந்தரங்கம் புனிதமானது என்ற நிலைப்பாட்டோடு, பெண்நட்பை அங்கீகரிப்பவளாக இருந்துவிட்டால், ஒரு பிரச்சினையும் இல்லை. மாறாக, அவளுடைய அங்கீகாரம் கிட்டாத நிலையில் ஒவ்வொரு கணமும் பிரச்சினை வெடித்தபடியே இருக்கும். ஆணின் பார்வையில் அது அவஸ்தையாகத் தோன்றக்கூடும். ஆனால் பெண்ணின் பார்வையில் அது ஒரு தற்காப்புச் சொல்வேலியாகத்தான் தோன்றும். பெண்நட்பு என்பது எக்கணத்திலும் பெண் உறவாக மாறக்கூடிய சாத்தியம் அதிகம் என்பதாலும் கோவலன் காலத்திலிருந்து அப்படி உருவான சாத்தியங்கள் புராணங்களிலும் வரலாற்றிலும் ஏராளம் என்பதாலும், பெண்ணின் தற்காப்புச் சொல்வேலியை பிழையானது என்றோ அல்லது தேவையற்றது என்றோ ஒருநாளும் சொல்லி விடமுடியாது.

சொல்வேலியில் பாய்ச்சப்பட்டிருக்கும் மின்சாரம் தீண்டும்போதெல்லாம் திகைத்தும் துவண்டும் அதிர்ந்தும் உள்சுருங்கியும் சரிந்துவிழ நேர்வது, ஆணைப் பொறுத்தவரையில் கடுமையான துன்பியல் அனுபவம். பெண்நட்புக்காக கொடுக்க நேர்கிற பெரிய விலை அது.

Pin It