தம்மை எழுத்தாளனாக்கும் திசையில் அமைந்த பள்ளி, கல்லூரி நாள்களிலே ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி செல்லப்பா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ரங்கண்ணா கதை சொல்லும் விதம் பெரும் பான்மை மணிப்பிரவாள நடையிலே இருக்கும். பதினைந்து வயதுக்குள்ளாகவே எவ்வளவு அதிக பட்ச வாய்ப்பு கிடைக்குமோ அவ்வளவுக்குக் கதைகள் கேட்டிருக்கின்றேன். கேட்டு அறிந்த அற்புதங்களை நினைவில் நிறுத்தியிருக்கிறேன்.

si su chellappaஸ்ரீவைகுண்டத்தில் பத்திரிகைகள் படிக்க நேர்ந்தது. ஆனந்த விகடனில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நகைச்சுவை எழுத்தை ரசித்துப் பேசுவோம். நண்பர்களுடன் சேர்ந்து விகடனிலே வரும் நகைச்சுவை துணுக்குகளைப் பற்றி விவாதம் செய்வோம்.

கலைமகள் பத்திரிகையை நண்பர் ஒருவர் வாங்கி வந்தார். அதையும் தொடர்ந்து படித்து அதைப் பற்றி பேசுவோம். 1933-இல் விகடன், சிறுகதைப் போட்டி ஒன்றை விளம்பரம் செய்தது. 1933 மே மாதம் பரிசுக் கதைகள் வெளிவந்தன. ‘நாலி’யின் ஊமைச்சிக் காதல், முதல் பரிசையும், பி.எஸ். ராமையாவின் ‘மலரும் மணமும்’ ஆறுதல் பரிசையும் பெற்றன. பரிசுக் கதைகளை நாங்கள் ஆழ்ந்து கவனித்துப் படித்தோம்.

‘சென்னையில் எந்த பாரதியின் தேசியப் பாடல்களை எட்டு வயதில் பாடினேனோ, அன்றே எழுதும் ஆர்வம் எனக்குள் முகிழ்த்தது. சட்டென்று ஒரு விகடத் துணுக்குத் தோன்றியது. அதைக் கார்டில் எழுதி விகடனுக்கு அனுப்பி னேன். ஆங்கிலத்தில் ஒரு ஜோக் எழுதி, ‘மெர்ரி’ மாகசினுக்கு அனுப்பினேன். ‘காந்தி’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகைக்கு ஒரு விகடத் துணுக்கு அனுப்பினேன். எதுவும் பத்திரிகையில் வெளிவர வில்லை. காந்தியில் என்னுடைய நகைச்சுவை துணுக்கு வெளிவந்தது. இதுதான் என் எழுத்துப் பிரவேசத்தின் முதல் பயணமும் அனுபவமும் என்று செல்லப்பா கூறியுள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையில், மூன்று வயதுக் குழந்தை அலையோரப் பகுதியிலே மணல் வீடு கட்டி விளையாடுவதைச் செல்லப்பா காண் கிறார். ஒரு பெரிய அலை வந்து அந்த வீட்டைக் கலைத்தால்? இப்படியான எண்ணம் அவருள்ளே தோன்ற உடனே கதை ஒன்று உருவான மாதிரி பிரமை ஏற்பட்டது.

‘மணல் வீடு’ என்ற தலைப்பில் சிறுகதை எழுது கிறார். அதை விகடனுக்கு அனுப்புகிறார். பிரசுரம் ஆக வேண்டுமே என்ற ஆவல், எதிர்பார்ப்பு, வேதனை, வேதனையைச் சுமந்து தாங்கின பின் முடிவில் வந்தது குறை பிரசவம்தான். பிறகு 17.9.1993-இல் வெளிவந்த மணிக்கொடியை வாங்கிப் படிக்கிறார்.

சுதந்திரச் சங்கு 1933-இல் சங்கு சுப்ரமண்யனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரலாயிற்று. சங்கு சுப்ரமண்யனில் கனல் கக்கும் எழுத்து நடை மக்களை வீறுகொண்டு எழச்செய்யும். பாரதியார் பாடல்களை அவரைப்போல் யாரும் அவ்வளவு தீவிர உணர்ச்சியோடு பாடமுடியாது. அவரது பேச்சுகளும் வீரத்தைக் காக்கும். ஆகையால் அவரது கருத்தும் நடையும் என்னைக் கவர்ந்தன என்று கூறும் செல்லப்பா தாம் எழுதி முதன் முதலில் பிரசுரமான ‘மார்கழி மலர்’ என்னும் சிறுகதையின் பின்னணியைப் பின்வருமாறு கூறுகிறார்.

“அப்போது டிசம்பர் மாதம் - மார்கழி, கிராமங்களில் மாதம் முழுவதும் வாசலில் பெரிய கோலங்கள் போட்டு, செம்மண் பட்டை பதித்து அலங்காரமாக வைப்பது வழக்கம். கிராமங் களிலே இப்பொழுது அது அரிதாகிவிட்டது. என் வீட்டில் என் இளைய தங்கைகள் கோலம் போட்டு, பூ வைத்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. நாலைந்து வீடுகளுக்கு அப்பால் உள்ளவள். ஆற்றி லிருந்து குடிநீர் கொண்டுவந்து பல வீடுகளுக்குக் கொடுத்துச் சில வீடுகளில் கைக்காரியமும் செய்து ஜீவனம் செய்துவரும் ஒரு ஏழை அம்மாளின் பெண் அவள். எங்களுக்குத் தெரிந்தவள். என் தாய் அலமேலு அவளுக்கும் இரண்டு பூ கொடுக்கும் படி என் தங்கைகளுக்குச் சொல்ல அவள் வாங்கிக் கொண்டு ஆவலோடு தன் வீட்டுக்கு ஓடினாள்.

“இது நடப்பு. அந்தச் சிறுமி பார்த்துக் கொண்டிருந்த பார்வை என் மனதிலே பதிந்தது. ஒரு ஏழைப் பெண்ணின் பார்வை, தன் வீட்டு வாசலில் இந்த மாதிரிப் பூ வாங்கி வைக்க வசதி இல்லாததால், அப்போது அந்தச் சிறுமியின் மனதில் என்ன தோன்றக்கூடும் என்று என் வியூகத்தை ஓடவிட்டேன். கதை பிறந்துவிட்டது. உடனே எழுத ஆரம்பித்தேன் ‘மார்கழி மலர்’ என்னும் தலைப்பில்.”

கதையை ‘சங்கு’ பத்திரிகைக்கு அனுப்பினேன். பதில் கடிதம் வந்தது. இளம் தோழ, வணக்கம். தங்கள் கதை கிடைத்தது. புதிய கதை என்று தெரிகிறது. கதையை திருத்திப் போடுகிறேன். நமஸ்காரம். இப்படிக்கு சங்கு சுப்ரமணியம் என்று கையெழுத்து இட்டிருந்தது. படித்தவுடன் மகிழ்ந்து போய்விட்டேன்.

சங்கு வாரப் பதிப்பின் ஏழாவது வெளி யீட்டில் 1934 சனவரி 4-இல் ‘மார்கழி மலர்’ வெளி வந்தது. அப்போது என்னுடைய புனைப் பெயரான ‘அசுவதி’ என்ற பெயரில் எழுதியிருந்தேன்.

கதையை ஆவலோடு படித்தேன். நான் ஆரம் பித்தபடியே பாரா இருந்தது. பிறகு படித்தபோது பார்த்தால் என் வரிகளுக்கு இடையிடையே ஆங்காங்கே புதிய வரிகள் சேர்க்கப்பட்டிருந்தன. சங்கு சுப்ரமணியம் எழுதியபடி கதையை திருத்தி யிருந்தார். அந்த திருத்தம் கதையின் முடிவுக்கு கம்பீரம் கொடுத்தது.

ஆரம்பம், வளர்ச்சி, முடிவு எல்லாம் ஒரு கதையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை சங்கு சுப்ரமணியத்தின் திருத்தங்களிலிருந்து தெரிந்து கொண்டேன். ஆக, என்னைச் சிறுகதை எழுத் தாளனாக ஆக்கி வெளிப்படுத்தியவர் சங்கு சுப்ர மணியன். அவரை நான் என்றும் நினைவில் வைத் திருப்பேன். என் மணல் வீடு கதையைத் திருப்பி அனுப்பிய விகடன் ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி இதைச் செய்யத் தவறியவர். அவரால் இலக்கியத் தரமான எழுத்தை இனம் காண முடியவில்லை. இதுதான் வ.ரா. சங்கு போன்றோருக்கும், கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே இருந்த வேறு பாடு.

இந்த ஊக்கத்தின் வெளியீடாகத் தொடர்ந்து சுறுசுறுப்பாக எழுத முயன்றேன். பசி, வஞ்சம், செய்த கணக்கு என்ற மூன்று சிறுகதைகள் வெளி வந்தன. இவற்றிலே சங்கு ஒரு வரிகூட சேர்க்க வில்லை. எனக்கு சிறுகதை சரியாகப் பிடிபட்டிருப் பதாக அவர் உணர்ந்திருக்கக் கூடும்.

‘என் சிறுகதை பாணி’ என்னும் நூல் சுய சரிதை வகையின் பாற்படும் நூலாகும். அமெரிக்கா விலுள்ள ‘விளக்கு’ அமைப்பின் கீழே இயங்குவது புதுமைப்பித்தன் நினைவு அறக்கட்டளை, ஒரு தமிழ் எழுத்தாளரின் மொத்தப் படைப்புகளையும் கணித்து அவரைக் கௌரவிக்க எண்ணியது விளக்கு. அந்த மரியாதையை முதன்முதலாகப் பெற, சி.சு. செல்லப்பாவே சரியானவர் என்று அறக்கட்டளையினர் முடிவு செய்தனர். அதோடு வாய்ப்பு இல்லாமல் இருக்கும் அவரது படைப்பு களை வெளியிடுவது சிறந்த வழி என்று கருதி ‘என் சிறுகதை பாணி’ விளக்கு அமைப்பால் 1995 செப்டம்பர் மாதம் வெளிவந்தது.

இலக்கிய ஆர்வலர்களுக்கும் சிறுகதை எழுதும், எழுத விரும்பும் எழுத்தாளர்களுக்கும் இந்நூல், செல்லப்பா தரும் மதிப்பிலா பொக்கிஸம்.

தமிழ் எழுத்தாளர் ஒருவர் இவ்வளவு விரி வாகவும் தெளிவாகவும் வியக்கத்தக்க ஞாபக சக்தியுடன் தாம் எழுதிய 109 சிறுகதைகள் ஒவ் வொன்றைப் பற்றியும் எழுதிய தேதி, கரு தோன்றிய விதம், அது முழுதாய் உருவாகி எப்படி வெளி வந்தது என்ற தகவல்களுடன் தன் சொந்த நிர்ண யத்தில் தன் கதை சொல்லும் ஆற்றல் எப்படி படிப் படியாக வளர்ந்தது என்று சீர்தூக்கி நூலாகத் தருவது அரிய, பெரிய சாதனையாகும். செல்லப் பாவின் சிறுகதைகளை ஆராய வேண்டுவோர் கட்டாயமாகப் பாடப்புத்தகமாக ஏற்று பக்தி சிரத்தையுடன் ‘என் சிறுகதை பாணி’யைப் படித்தல் அவசியமாகும்.

சி.சு. செல்லப்பாவின் 109 சிறுகதைகளையும் அலசி ஆராய்வது, தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றும் மிகப்பெரியத் தொண்டாகும். ஆயினும் ஒரு சில சிறுகதைகளை மட்டும் இங்கு ஆராய் வோம்.

1938-இல் கலைமகள் இதழில் வெளிவந்த கணவன் எதிரொலி சிறுகதை சி.சு. செல்லப் பாவின் சிறுகதைகளுள் தலைமை சான்ற சிறு கதையாகக் கருதப்படுகிறது. இச்சிறுகதை ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியரின் ‘ஜுலியஸ் ஸீஸர்’ நாடகத்தில் நாடக நாயகனாக ஸீஸர் மக்கள வையிலே கொலையுறப் போவதற்கு முன்பே பல தீய சகுனங்கள் தெரிந்து, ‘வரும் போக்குகளின் முன் நிழல்கள்’ அவற்றின் தன்மையைக் காட்டும் என்ற உண்மையை உணர்த்தும். இந்த அடிப் படையில் சிறந்த கற்பனைத்திறத்துடன் புனையப் பட்ட ‘கனவின் எதிரொலி’ விலைமதிக்க முடியாத முத்து, நான்கரை ஆண்டுகளில் 22 சிறுகதைகள் வெளிவந்திருக்க இது செல்லப்பாவின் 23-ஆவது வெளியீடாகும்.

கதைப் போக்கு

பாண்டியனின் முடிவுக்குக் கட்டியமாக அவனுடைய தேவி ஒரு கனவு காண்கிறாள். “மன்னவன் வாய் முதல் தெறித்தது மணியே” என்று அந்த கணத்திலேயே நீதி பிறந்த நெடுஞ் செழியன் செங்கோல் வளைய அவள் ‘மயிர் நீத்த கவரிமான் உயிர் நீப்பப் போல’ என்ற பாணியில் இந்தக் கதையைச் சொல்கிறார் செல்லப்பா.

நெடுஞ்செழியன் அவசரப்பட்டுப் பொன் செய் கொல்லன் தன் பொய் உரையைக் கேட்டு, ஏன் அநியாயமாகக் கோவலன் சிரத்தைக் கொய்ய ஆணையிட்டான் என்பதற்குக் காரணத்தையும் காட்ட முயல்கிறார் செல்லப்பா.

தேவியின் சிலம்பு ஒன்று களவு போய் விட்டது. ஜோடி பிரிந்தால் கோப்பெருந்தேவி சிலம்பு அணிவதையே விடுத்து, வெறும் காலாய் கவலையுடன் நடமாடுகிறாள். அரசனால் இதைத் தாங்க முடியவில்லை. சிலம்பு அணியாத அவள் கால்கள் மாங்கல்யத்தை இழந்த கழுத்துப் போலத் தெரிந்தன. அரசி ஏக்கத்துடன் கையில் ஏந்திய ஒற்றைச் சிலம்பின் தொங்கணிகள் உராய்ந்து சப்திக்கும் ஒலி, கணவனை இழந்த ஒருத்தியின் ஓலமாய்க் கேட்கிறது. காணாமற் போன சிலம்பு கணவன் மனைவியரிடையே கடுமையான ஊடலை உண்டாக்குகிறது. பாண்டிய மன்னன் தன்னைக் கோழையாக உணர்கிறான். அலைமோதும் மனத் தனாய் அந்தப்புரத்திற்கு வருகிறான். இன்பமாய் ஒரு சொல் பகர்வாள் என்று எதிர்பார்த்து, ஆனால் அதற்கு நேர் மாறாக ஏமாற்றமே காத்திருந்தது.

தான் கண்ட கனவை கோப்பெருந்தேவியார் பாண்டியனிடம் கீழ்க்கண்டவாறு கூறுகிறாள்.

“நான் எந்த இடத்தில் இருந்தேன்; என்ன செய்தேன் என்பதே எனக்குத் தெரியவில்லை.

சிலம்பு சிலம்பு என்று பைத்தியம் போலப் போய்க்கொண்டிருந்தேன். எனக்குச் சற்று தூரத்தில் சிலம்பு உருவமான பிரகாசம் தெரியவே ஓடினேன் அதை நோக்கி ஆசையோடு.

அதை எடுப்பதற்காகக் கிட்டே நெருங்கவும் அங்கே பெரிய தீ ஜுவாலை ஒன்று கிளம்பிக் கொண்டிருந்தது.

பயந்து நான் பின்வாங்கினேன். நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஜுவாலை மளமளவென்று குறைந்து கொண்டே வந்து ஓர் அனல் வளையமாய் ஆகிவிட்டது.

“யாரோ கையில் அதை எடுத்துக்காட்டி ‘இந்தா உன் சிலம்பு’ என்று என் கையில் வைக்க வருவதுபோல் இருந்தது. கனல் வளையம் தான் என் கண்களுக்குத் தெரிந்தது. உருவம் தெரிய வில்லை. ஆனால் குரல் மட்டும் ஒரு பெண்ணின் தீர்க்கமான குரலாக இருந்தது. என் காதுகளில் அந்த சப்தம் இப்போது கூட ஒலித்துக் கொண் டிருக்கிறது. நான் பயந்து பின்வாங்கிக் கொண் டிருக்கும்போதே அனல் வளையம் என்மீது மோதியது.

ஐயோ! சிலம்பு. வேண்டாம் வேண்டாம்! என்று அலறித் துடித்தேன்.

கண் விழித்துப் பார்த்தபோது அறை பிரகாச மாய் இருந்தது. உங்களைப் பார்க்க முடியவில்லை. அறை, தீப்பிடித்தது போல இருந்தது. அந்த பயத்திலே அலறினேன்” என்று தேவி மன்னனிடம் கூறுகிறாள். இப்படிக் கதை நகர்கிறது. சிலம்பை இளங்கோ நம்முள் காட்டும் காட்சியை விட செல்லப்பா காட்டும் பாங்கு தனிச் சிறப்பு கொண்டதாக அமைகிறது.

மனித வாழ்வின் அடையாளங்களை, சுவடு களை, இலக்கியங்கள் வழியே மனித குலம் அறிய இயலும். காலப் போக்கில் மொழியில் வளர்ச்சியும், தேய்வும் மாற்ற முடியாத ஒன்றாகிவிட்டன. தலை முறைகளைக் கடந்து வாழக்கூடிய இலக்கியங்கள் ஒரு சிலவே. அவற்றைப் பகுத்தும், ஆராய்ந்தும், விரித்தும், மனித குலத்திற்கு, மனித மாண்புகளை புடம் போட்டுக் காட்டக் கூடியதனைத்தும் படைப்பாளர்களையே சாருகிறது. அவ்வகையில் சி.சு. செல்லப்பாவின் படைப்பாளுமை நம்மை புது உலகிற்கு இட்டுச் செல்கிறது.

வழக்கில் ஒரு கருத்தை ஒரு முறை சொன்னால் புரியாது. முக்கியத்துவம் அறியாது. திரும்பத் திரும்ப அதே கருத்தை வலியுறுத்தும் பொழுது மனதில் அக்கருத்து நீங்கா இடம் பிடிக் கிறது. அவ்வகையில் செல்லப்பாவின் ‘கணவன் எதிரொலி’ என்ற சிறுகதையும், மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து வருகிறது.

எதற்கு வந்தான்

தினமணி கதிரில் 1950-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி செல்லப்பாவின் பிரசுர மான கதைகள் வரிசையில் 68 வது சிறுகதையாக ‘எதற்கு வந்தான்’ வெளிவந்தது. இதன் கதைச் சுருக்கம் பின்வருமாறு கீழே காணலாம்.

விசாலம், ஜானகிராமனின் மனைவி. இவள் இளம்வயதில் இறந்து போகிறாள். அவளுடைய தங்கை பத்மா அப்போது சிறுமி. பத்மா இப் போது வளர்ந்து மணப் பருவத்தின் தலைவாசலில் காதலுக்கு ஆயத்தமாய் நிற்கிறாள். அவளுக்குக் கல்யாணம் பார்த்துக்கொண்டு சோதிடம், சாதகம் என்று தந்தை சங்கரய்யர் அலைந்து கொண் டிருந்தார்.

அப்பொழுது பத்மா, ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு வாசலைப் பார்த்து நின்றிருந் தாள். “அப்பா, யாரோ படியேறி உள்ளே வராப்பா?” என்றாள்.

விசாலத்தின் கணவன் ஜானகிராமனா?

யாரு வந்திருப்பது? என்று இழுத்துக் கேட்டார் சங்கரய்யா.

ஆமாம்! ஜானகிராமன் தான் என்று சொல்லிக் கொண்டே நிலைப்படியில் இருந்த காலை கூடத்து உட்புறமாக தளம் தடவிப் பார்த்து வைப்பதுபோல அடி வைத்தான் ஜானகிராமன். பெரியவருக்கு நமஸ்காரம் செய்கிறான்.

பத்மா அவள் அம்மாவிடம், ‘அத்திம்பேர் தானம்மா’ என்றான்.

‘யாரு வந்திருப்பது?’ நம்ம ஜானகிராமனா இது? ஆறு வருஷத்துக்குள்ளே எப்படி மாறிப் போய்விட்டான்? என்கிறாள் பத்மாவின் அம்மா லட்சுமியம்மாள்.

மனைவி இறந்த பின் ஜானகிராமன், சங்கரன் கோவிலிலிருந்து ஸ்ரீ வைகுண்டத்திற்கு இடம் மாறினதைச் சொல்கிறான். அப்போது, “விசாலத்தின் இடத்தில் தான் பத்மாவை மணக்க விரும்பிக் கடிதம் எழுதியிருந்தான். சிறுமியான பத்மா வயதுக்கு வரும் வரை தான் காத்திருப்பேன்” என்றும் சொல்லியிருந்தான்.

ஜானகிராமன் இங்கு வந்திருப்பது ஒருவித முறைமையுடன் பத்மாவை பெண் கேட்கத்தான் இங்கு வந்திருக்கிறான். பத்மாவை நேரில் பார்த்ததும் வியந்து போகிறான். வயதுக்கு வந்து பூத்துக் குலுங்கும் பருவ வாளிப்பின் திளைப்பில் உள்ள, அன்று ஒன்பது வயதுச் சிறுமியாய் தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கிய குட்டியாய் இருந்து இப்போது மாறிவிட்ட பத்மாவை ஜானகிராமன் காண்கிறான். மகிழ்ச்சியில் திளைத்து ஆனந்தம் கொள்கிறான்.

அத்திம்பேருக்குக் கொடுக்க டிபன் தட்டை ஏந்திக்கொண்டு வருகிறாள் பூஞ்சோலை பத்மா. “ரொம்ப மாறிப்போய் விட்டாய் பத்மா” என்று சங்கரய்யா சொல்ல, ‘நான் அதே பத்மாதான், அத்திம்பேரே’ என்று பத்மா பதிலளிக்கிறாள்.

பத்மாவைக் கண்ட ஜானகிராமன் பட்ட அவஸ்தையைச் செல்லப்பா அழகாக வர்ணிக் கிறார்.

இந்த ஆறு வருடங்களாக அவன் பத்மாவைக் கற்பனையில் வளர்த்துக் கொண்டே வந்திருக் கிறான். ஆனால் அத்தனையும் பொய்யாகி விட்டது. இப்போது, சாயல் ஒன்றுதான் அன்று அவன் கண்டவாறு நிலைத்திருந்தது. மற்றபடி எடுப்பாக வளர்ந்திருந்தாள். அந்த உயரத்துக்கு ஏற்றபடி தாக்கான உடல், வாட்டசாட்டமாகக் காட்சியளித்தாள் பத்மா.

பத்மாவின் அழகும் வசீகரமும் போட்டி போட்டுக்கொண்டு ஜானகிராமனை மயக்கியது. ஜானகிராமன் கவிழ்ந்து போய் கீழே கவிழ்ந்தான்.

கதையின் முடிவில் கண்ணாடியில் தன் உருவத்தைக் காணும் ஜானகிராமன் அந்த அதி தேவதை அழகு கொப்பளிக்கும் பத்மா என்னும் அற்புதத்துக்கு தன்னுடைய வயோதிகம் போதாது என்று உணர்ந்து, வந்த வேலையை வருத்ததுடன் துறந்துவிட்டு போவதைக் காட்டுகிறது.

மிகவும் நேர்த்தியான உள்மனப் போக்கு, அகச் சிந்தனை, விவரிப்பு எல்லாவற்றையும் கொண்ட மிகச் சிறந்த சிறுகதை ‘எதற்கு வந்தான்’ சிறுகதையாகும்.

சி.சு. செல்லப்பா தாமே துவக்கி நடத்திய ‘எழுத்து’ இதழில் 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பழக்க வாசனை சிறுகதை வெளிவந்தது.

செல்லப்பா எழுதி தம் முதல் கதையைப் பிரசுரத்தில் கண்டது முதல் நாற்பத்து மூன்று ஆண்டுகள் சென்று விட்டன. இந்த ஆண்டுகளின் போக்கில் அவர் தம் கதை எழுதும் தொழிலைப் பற்றி நிறையக் கண்டு, கற்று, கேட்டு ஏராளமான முன்னேற்றங்களை அடைந்திருந்தார்.

சிறுகதையின் தன்மை, அறிவு, அதனை ஆக்குவதில் உள்ள நுட்பங்கள், எழுது பாதையில் குறுக்கிடும் சிரமங்களை எதிர்கொண்டு அவற்றைப் புறங்காணுதல், நல்ல துவக்கம், இடைப்பகுதி, முத்தாய்ப்பான முடிவு இவற்றைத் தேனொழுக்காக வருமாறு செய்தல் என்று பலவிதமான தேர்ச்சிகள்.

அறுபத்து ஐந்து வயது செல்லப்பாவிடம் இவையெல்லாம் இனிதே வாசம் புரிந்து காணப் பட்டன. தம் படைப்பைத் தாமே வெளி

யிட்டுக் கொள்ள முடியுமென்ற அபாரமான அதீதத் தெம்பை ஊட்டுகின்ற தன்னம்பிக்கையும் அவரிடம் வளர்ந்திருந்தது. பழகிய கைக்குப் பல லாகவங்களாகப் பட்டன. இந்தப் பின்புலத்தில் தான் மந்திரக்கட்டு சிறுகதை செல்லப்பாவால் எழுதப்பட்டது.

மந்திரக்கட்டு போன்ற பல சிறுகதைகளை அவர் தொகுப்புகளாக்கித் தாமே வெளியிட்டார்.

அக்காலகட்டங்களில் கிராமங்களில் பேய், பிசாசு, மாயாஜாலம், வித்தைகள், பில்லி சூன்யம், இன்னும் பிற சூழ்ச்சியால் வெல்லக்கூடிய காரணிகள் பரவலாகக் காணப்பட்டு வந்தன. அந்தப் பின்புலத்தில்தான் சி.சு. செல்லப்பா இச் சிறுகதையைப் படைத்திருக்கிறார்.

செல்லப்பா எந்த ஒரு சூழ்நிலையைக் காண் கிறாரோ, அச்சூழல் அவரை எவ்விதத்தில் பாதிக் கிறதோ அதை அப்படியே சிறுகதையாக்கும் வல்லமை கொண்டவர். வாசகனின் மனநிலையைப் பற்றி கவலைப்படாதவர். பிராமணச் சாதியின் சார்பாலும் தனது வாழ்வியல் அனுபவத்தினாலும் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு சிறுகதைகள் படைத்துள்ளார்.

புதியவள்

புதியவள் என்ற சிறுகதையில் புவனம் அடையும் ஏமாற்றத்தைச் சித்திரித்துக் காட்டி யுள்ளார். குடும்பத்தோடு மாரியம்மாள் கோயிலுக்கு மாட்டு வண்டியில் செல்கிறார்கள். அப்பொழுது புவனத்தைச் சீதாபதி பார்க்கிறான். மனைவியால் பக்கத்தில் அமரவேண்டும் என்ற அவா அவனுக்கு மனதில் மேலோங்குகிறது. சீதாபதியின் ஆசையைப் புரிந்து கொண்டு அருகில் இருந்தவர்கள் அவனை புவனம் பக்கத்தில் அழைத்து அமர வைக் கிறார்கள். சீதாபதிக்கு மகிழ்ச்சி மேலிடுகிறது. இக்கதையில் கணவன் மனைவி அகவுணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் செல்லப்பா.

கொண்டுவந்த சீர்

இச்சிறுகதையில் சிவகாமி என்ற கதா பாத்திரத்தின் சிறப்புகளைக் காணலாம். கண வனுக்கும் மாமியாருக்கும் இடையில் சிவகாமி சிக்கிக்கொண்டு தடுமாறும் இன்னலை எடுத்துக் காட்டுகிறார். இருவரின் குணநலன்களையும் சிவகாமி நன்கு புரிந்து வைத்திருக்கிறாள். இருப் பினும் தாயை மீறி, பிள்ளை பெற்ற கையோடு கணவன் வீட்டுக்குப் பயணிக்கிறாள். அங்கும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பச்சிளங் குழந்தையோடு பரிதவித்து நிற்கிறாள். நடைமுறைச் சமூகத்தை 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சி.சு. செல்லப்பா அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக் கிறார்.

Pin It