மன்னர்களின் ஆட்சியையும் அவர்தம் வெற்றி தோல்விகளையும் பட்டியலிடுவதே வரலாறு என்ற நிலை மாறி வருகிறது. மன்னர்களின் வரலாறு என்பது வரலாற்றின் ஒரு பகுதியேயன்றி அதுவே முழுமையான வரலாறு ஆகாது. ஒரு நாட்டில் - சமூகத்தில் வாழ்ந்த / வாழும் மக்களின் சமயம், சமூகம், பொருளியல் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியதே முழுமையான வரலாறு என்பதான கண்ணோட்டம் உருவாகியுள்ளமையே இதற்குக் காரணமாகும். இலக்கியங்களிலிருந்து வரலாற்றைக் கட்டமைப்பது என்ற நிலை மாறி கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பட்டயங்கள், அகழ்வாய்வுச் சான்றுகள், வெளி நாட்டார் குறிப்புகள், மக்களின் வாய்மொழி மரபுகள் பழக்கவழக்கங்கள், ஆகியனவற்றை நுட்ப மாக ஆய்ந்து அதன்வழி ஒரு சமூகம் கடந்து வந்த பாதையை- பழைய வரலாற்றை ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

“நாடுகள், பேரரசுகள், தேசங்கள் போன்றவற்றின் பெருவரலாறுகளை எழுதும் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு குறிப்பிட்ட ஊரின், வட்டாரத்தின், சாதியின், இனத்தின் வரலாறு என சமூக வரலாற்றைச் சிறிய சிறிய அலகுகளாகப் பிரித்து அவற்றைத் துல்லிய மாக ஆய்வு செய்து வரலாற்றைக் கட்டமைக்கும் பணியும் வேகம் பெற்றுவிட்டது. இம்மாதிரியான சிறு சிறு மக்கள் திரள்களின் வரலாறுகளில் இருந்துதான் ஒரு நாட்டின் வரலாறோ, தேசத்தின் வரலாறோ உருவாக்கப்பட வேண்டும்” (ப. 9) என்ற சிந்தனையும் வலுப்பெற்று வருகிறது. மேலும், சமுதாய வரலாற்றில் உழைப்பவர்கள் வகித்த பங்கினை அறியும் ஆர்வமும், வரலாற்றில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும், சாமானியர்களையும் வரலாற்று மையத்திற்குக் கொண்டு வரும் வரலாற்று வரைவுகள் உருவாகத் தொடங்கி விட்ட காலமாகத் தற்காலம் விளங்குகிறது.

“இதுவரை வெளிவந்துள்ள வரலாற்று நூல்கள் பெரும்பாலும் அரசர், அரசகுடும்பம், அரசு உயர் அலுவலர்கள் ஆகியவர்களைப் பற்றிய செய்திகளின் தொகுப்பாகவே உள்ளன. சமுதாய வரலாறும், சமுதாயத்தின் அங்கங்களான தனி மனிதனின் அன்றாட வாழ்க்கை முறைகளும் தொகுக்கப்பட்டால்தான் ஒரு நாட்டு வரலாறு முழுமை அடையும்” (ப. 7) என்ற கருத்தினைக் கொண்டவரான புலவர் இராசு அவர்கள், அப்படி யான வரலாறுகளை, கல்வெட்டு, செப்பேடு முதலான வரலாற்று ஆவணங்களின் துணை கொண்டு தொடர்ந்து எழுதி வருகிறார். அத் தோடு, கடந்த 45 ஆண்டுகளாக அவர் சார்ந்த கொங்கு நாட்டில் உள்ள கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டையம் முதலானவற்றைத் தேடிக் கண்டறிந்து அவற்றைப் படித்தும், படியெடுத்தும், பதிப்பித்தும் வரும் அவரது பணி புதிய வரலாற் றெழுதியலுக்குத் துணை செய்யக்கூடிய பணி யாகும். அவர் தொகுத்த கொங்கு சமுதாயம் பற்றிய ஆவணங்களில் காணலாகும் விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து ஆராய்வதாக இக் கட்டுரை அமைகின்றது.

விளிம்பு நிலை மனிதர்கள்

இந்தியச் சமூகத்தில் ஆள்வோர் முதற்கொண்டு ஆண்டிகள் வரை பலரும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் இந்த சமூகம் ஒரு படித்தானவர்களாகக் கருதுவதுமில்லை, மதிப்பது மில்லை. அதற்குச் சமூக அமைப்பே காரண மாகும். இந்தியச் சமூக அமைப்பானது சாதி, சமயம், ஆண், பெண், ஏழை, பணக்காரன் என்ற படிநிலைகளைக் கொண்டதான -ஏற்றத்தாழ்வு மிக்கதான சமூகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் மேல் X கீழ் என்ற பாகுபாடுண்டு: ஆண் X பெண் என்ற பேதமுண்டு: உயர்வுXதாழ்வு என்ற ஏற்றத்தாழ்வு உண்டு. சமுதாய அடுக்கில் கீழ் நிலையில் - விளிம்பில் - ஓரத்தில் இருப்பவர்களையே, அதாவது சாதி, சமயம், பால், இனம் என்ற எல்லாத் தளங்களிலும் ஒடுக்கப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட - தாழ்நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களையே விளிம்புநிலை மனிதர்கள் என் கிறோம். பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், தேவ தாசிகள், பாலியல் தொழிலாளிகள், அரவாணிகள், தொழுநோயாளிகள், அனாதைகள், ஆதரவற்ற வர்கள், மாற்றுத்திறனாளிகள் முதலானவர்களே விளிம்பு நிலை மனிதர்களாவர். கொங்கு வேளாளர்கள் குறித்த ஆவணங்களில் இத்தகைய மனிதர்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இனி காண்போம்.

பொட்டுக்கட்டுதலும், உடன்கட்டை ஏறுதலும்:

பொட்டுக்கட்டுதல் என்பது சமயம் சார்ந்த கோவில் சடங்கினைக் குறிப்பதாகும். இச்சடங்கின் வாயிலாக ஒரு சிறுமி அல்லது இளம்பெண் கோவில் ஒன்றின் தேவரடியாராக மாறுகிறார்/ மாற்றப்படுகிறார். கோயில்கள் பெருகிய பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இம்முறை தமிழக மெங்கும் பரவலாக இருந்தமையை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். கோவில் வழிபாடு, திருவிழா போன்ற நிகழ்வுகளில் நடனமாடுதல், பாடுதல், கோலமிடுதல், விளக்கு வைத்தல், பூக் கட்டுதல் இன்ன பிற செயல்களைச் செய்பவர் களாக தேவரடியார்கள் இருந்துள்ளனர். தேவரடி யார்களில் இருவகையினர் உண்டு என்பார் நா.வான மாமலை. அரசர், வணிகர் முதலான மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தாமாகவே முன்வந்து தேவரடியாராக மாறி இறைப்பணி செய்தனர். இவர்கள் தம்முடைய சொத்துக்களை கோவிலுக்கு அளித்துவிட்டு, அதிலிருந்து சில உரிமைகளைப் பெற்று வாழ்ந்து வந்தனர். மற் றொரு வகையினர் ஏழைப் பெண்கள். குடும்ப வறுமையின் காரணமாக பெற்றோர்களால் இவர்கள் கோவிலுக்கு விற்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு நிலம், தானியம், ஆடை ஆபரணங்கள் முதலானவை தானமாக/ விலையாக அளிக்கப் படும். தேவரடியார்க்கு பதியிலார், நித்திய சுமங்கலி, தேவடிமை, மாணிக்கி என்று பல பெயர்கள் உண்டு.

பொட்டுக்கட்டுதல் குறித்து இருவகையான கருத்து நிலவுகிறது. சமய நம்பிக்கை மிகுந்தவர்கள் இதனைப் புனித சடங்காகப் பார்க்கின்றனர். சமூகவியல் அறிஞர்கள் இதனை அடிமை முறை களில் ஒன்றாகக் கருதுகின்றனர். “பாலியல், சாதி, பொருளியல் என்ற தன்மைகளின் அடித்தளத்தில் இருக்கும் பெண்ணைப் பொது மகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக்கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது. தேவரடிமையின் வாழ் வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோயிலால் உறுதி செய்யப்பட்டு விட, மேட்டிமை யோரின் குறிப்பாக புரோகித, நிலவுடைமை யாளர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவளது பணியாகிவிடுகிறது” (ப. 67) என்ற அ. சிவசுப்பிரமணியத்தின் கருத்து இங்கு சுட்டத்தக்கது.

கொங்குப் பகுதியில் வாழும் வேளாளர் சமூகத்தில் பல குலங்கள் உண்டு. ஒவ்வொரு குலத்தாரும் தங்கள் கோயில்களில் பணியாற்ற தேவரடியார்களை “குலமாணிக்கி” எனும் பெயரில் பொட்டுக்கட்டுதல் எனும் சடங்கினைச் செய்து நியமனம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஆடை ஆபரணங்கள், தானியங்கள் மற்றும் நன்செய் புன்செய் நிலங்களைத் தானமாக அளித்துள்ளனர். அதனைச் செப்பேடுகளில் எழுதியும் கொடுத் துள்ளனர். கொங்கு வேளாளர் செப்பேட்டு பட்டயங்கள் எனும் நூலில் குலமாணிக்கிகள் நியமனம் குறித்து ஐந்து செப்பேட்டு பட்டயங்கள் இடம் பெற்றுள்ளன. நாகமலை, அத்திப்பெண், முத்துவாழி, மகுடகுலமாணிக்கி என்பதான பெயர் களைக் கொண்ட இப்பெண்கள், வேளாளருக்காகப் பணி செய்த பட்டன், கூத்தன், பண்பாடி, தக்கை கொட்டி போன்ற கலைஞர்களின் மகள்கள் ஆவர். ‘வசதி படைத்த வேளாளர்கள் தங்கள் பெண் களைப் பொட்டுக் கட்டிவிட விரும்பவில்லை’ என்பதும் தேவரடியார்கள் கிடைக்காத போது அவர்களை விலை கொடுத்து வாங்கிப் பொட்டுக் கட்டியுள்ளனர் என்பதும் பெருங்குடி செப்பேட்டின் (ப. 262) வழி தெரிய வருகிறது. விலை கொடுத்து வாங்கியமைக்கு அப்பெண்ணின் வறுமை நிலை காரணமாக இருக்கக்கூடும்.

‘குலமாணிக்கி’ ஒருவரின் மகளும் தேவரடியாராக நியமிக்கப் பட்டதை தூரன்குலச் செப்பேடு காட்டுகிறது. குலமாணிக்கிகளாக ஒரு சில வேளாளப்பெண்கள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. ஆயினும், அவர்கள் குறித்து எந்தப் பட்டயமும் இல்லை என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. கொங்குப் பகுதியில் நியமனம் செய்யப்பட்ட தேவரடியார்கள் நிலவுடைமை யாளர்கள் சிலரின் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கண்ண குலத் தலைவர் முத்துச்சாமிக்கவுண்டர் இறந்த போது அவருடைய மனைவியரோடு வேறு சில பெண்களும் தீப்பாய்ந்துள்ளனர். அவர்களில் ஒருவராக ‘தேவடியாள் அங்கமுத்து’ என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளமை ஆய்வுக்குரியது. அதே போல். பிற செப்பேடுகளிலெல்லாம் தேவரடி யார், குலமாணிக்கி என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருக்க, மேற்குறிப்பிட்டதிலும், திருமுருகன் பூண்டி கிரய சாசனத்திலும் தேவடியாள், தாசிகள் (தாசிகளில் முத்து ஏற்றின பாடகத்தி, வள்ளி முத்து) எனும் சொல்லாட்சி இடம் பெற்றிருப் பதும் ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

உடன்கட்டை ஏறுதல்:-

மன்னர்கள் மற்றும் உயர்சாதியினைச் சேர்ந்த ஆண்கள் இறந்து விட்டால், அவர்களுக்கு உரிமை யுடையவர்கள் குறிப்பாக அவர்தம் மனைவியரை உடன்கட்டை ஏற அல்லது ஏற்றி வைக்கும் வழக்கம் பண்டைக்காலம் தொடங்கி இருந்து வந்த ஒரு கொடூரமான வழக்கமாகும். இராஜா ராம் மோகன்ராய் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் பலரின் முயற்சியால் இவ்வழக்கம் ஒழிக்கப்பட்டு உள்ளது. கொங்குப் பகுதியைச் சேர்ந்த வேளாளர் மற்றும் வேட்டுவர் குலப்பெண்களோடு, அடித் தட்டு வர்க்கத்தினரைச் சேர்ந்த பெண்கள் சிலரும் உடன்கட்டை ஏறியுள்ளனர் என்ற செய்தியும், அதன் பொருட்டு அப்பெண்களின் குடும்பத் தாருக்கு வேளாளரும் வேட்டுவரும் காடுகளைக் கொடையாக அளித்துள்ளனர் என்ற செய்தியும் பட்டயங்களில் இடம் பெற்றுள்ளது.

கன்னிவாடி கண்ணகுலத் தலைவர் முத்து சாமிக் கவுண்டர் மரணமடைகிறார். அதனால் அவருடைய மூன்று மனைவியரும் தீப்பாய முடிவு செய்கின்றனர். அவர்களோடு, முத்துச்சாமிக் கவுண்டரை வளர்த்து ஆளாக்கிய நல்லராண்டியும், அவரது இரு மனைவியரும், முத்துச்சாமிக்குப் பெண் கொடுத்த செல்லப்பகவுண்டர் என நான்கு பேருமாக மொத்தம் ஏழு பேரும் தீப்பாய்கின்றனர். இவர்களோடு “தேவடியாள் அங்கமுத்து, நல்லா நாவிதன் பெண் சாதி வள்ளிப்பிள்ளையும், பறைக் காளி பெண்சாதி வஞ்சமாள் மாறாளும் இவர்கள் தீயுக்குளிப்பாயப் புறப்பட்டார்கள்” (ப. 114) என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. இதே போல வேளாளருக்கும் வேட்டுவருக்கும் ஏற்பட்ட உரிமைச் சண்டையில், வேட்டுவர் சார்பாகச் சண்டையிட்ட 13 பேர் இறந்து விடுகின்றனர். இவர்களில் ஆறுபேர் வேட்டுவ குலத்தினர்.

ஏழு பேர் பிற சாதியினர். அதாவது நாயக்கர், மாகுளவர், தச்சர், உகச்சர், இருளர், பரம்பர், பறையர் சாதியைச் சேர்ந்தவராவர். வேட்டுவர் குலப் பெண்கள் எட்டுப்பேரும் தீப்பாயத் துணி கின்றனர். அவர்களுடன் பிற சாதியினைச் சேர்ந்த எழுவரின் மனைவிமார்களும் தீப்பாய முன் வருகின்றனர். ஆயினும் தங்களுக்கு காணி உரிமை அளிக்க வேண்டும் என்று அப்பெண்கள் ஊராரிடம் முறையிட்டதும் முத்தூரார் அனைவரும் ஒன்று கூடி அவர்களுக்குக் காடு விட்டமையும் குறித்த தகவல் முத்தூர் பட்டயத்தில் (ப. 280) இடம் பெற்றுள்ளது.

சாதி மற்றும் பொருளியல் நிலையில் அடித் தளத்தில் இருந்த மக்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், கொங்குப் பகுதியில் ஆதிக்க சாதியின ரோடு அடித்தட்டுப் பெண்களும் உடன்கட்டை ஏறியிருக்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிப் பதாகவும் ஆய்வுக்குரியதாகவும் அமைந்துள்ளது. அடித்தள மகளிரின் இத்தகைய முடிவுக்குக் காரணம் சுய விருப்பமா? அல்லது தங்கள் எஜமானிகளின் மீது கொண்ட விசுவாசமா அல்லது குடும்ப வறுமைக்குத் தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையினாலா? அல்லது எஜமானி இறந்தால் கூடவே இறக்க வேண்டும் என்ற எழுதப்படாத நியதியினாலா? என்று பல வினாக்கள் மனதில் எழுகிறது. எழுதப் படாத நியதியும், குடும்ப வறுமையும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பது கட்டுரை யாளரின் முடிவாக அமைகிறது. இம்முடிவிற்கு வர ‘காளிப்பறையன் தம்பி கண்ணப் பறையன் தாயே, எங்களுக்கு என்ன கதியென்று கேட்ட வனை நல்லறாண்டி மகன் திருமராண்டி ஒரு அறை அறைந்தான் (ப. 114) எனவரும் கண்ணகுலப் பட்டயச் செய்தியும், தீப்பாயும் பெண்கள் தங்களுக்குக் காடு வேண்டும் என்று கேட்டு முறை யிட்ட முத்தூர் பட்டயச் செய்தியுமே ஆதாரமாக அமைகிறது. இது குறித்து மேலாய்வு தேவை. பெண்களோடு ஆண்கள் இருவரும் (நல்லராண்டி, செல்லப்பகவுண்டர்) உடன்கட்டை ஏறியிருப்பதும் ஆராயத்தக்கது.

அடிமைமுறை - நரபலி - தற்கொலை

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் அடிமை முறை பரவலாக இருந் துள்ளது. கோயில்களிலும், அரண்மனைகளிலும், செல்வந்தர்களிடமும் அடிமைகள் இருந்துள்ளனர் என்பதையும் அவர்கள் விலை கொடுத்து வாங்கப் பட்டுள்ளனர் என்பதையும் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளின் துணை கொண்டு ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். கொங்கு நாட்டிலும் அடிமை முறை இருந்தமைக்கு பெருங்குடிப் பட்டயமும், காடையூர்ப் பட்டயமும் சான்று களாக உள்ளன. இப்பட்டயங்களின் காலம்

கி.பி. 16-ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருப்பாதூர் அகத்தீசுவரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று, பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கும் போது, கோயில் மேளத்தாருக்கும் (கம்மாளர்கள்) பெருங் குடியர் குலக் கவுண்டர்களுக்கும் சில உரிமைகள் பற்றித் தகராறு ஏற்படுகிறது. கவுண்டர்களில் ஒருவர் தம் பெண்ணொருத்தியைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டால் மட்டுமே, அவர்களுக் குரிய மரியாதையைத் தர முடியும் என்கின்றனர் மேளத்தார்கள். இதனைக் கவுண்டர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். பிரச்சினை தீரவில்லை. வழக்கு அரசரிடம் செல்கிறது. அரசர் சொன்ன தீர்ப்பும் பின்பு நடந்ததும் “றாசாவானவற் உன் மகளை பொட்டுக்கட்டி விடாமல் போனால் ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி கோயிலுக்குப் பொட்டுக்கட்டிவிடும்படி சொன்னார். அந்தப் படிக்கி பொட்டுக்கட்டின பெண்ணை வஞ்சகங் களினாலே மேளத்தார் கொன்று விட்டார்கள்” (ப. 262) என்பதாகச் செப்பேட்டில் பதிவாகி யுள்ளது.

காடையூர்ப் பட்டக்காரர் ஆட்சியில் காணி பெற்ற வேளாளர்கள் தங்களுக்கு வேட்டுவ நாவிதன் வேண்டாமென்று கூறி குமரன் என்ற வெள்ளாள நாவிதனை இருப்புலி எனும் ஊரி லிருந்து விலைக்கு வாங்கி வந்து ஊத்தூரில் வீடு அளித்து குடியமர்த்தியதைக் காடையூர்ப் பட்டயம் (ப. 247) குறிப்பிடுகிறது. மேலும், குமரன் எதிர்த் தரப்பினரால் கொல்லப்பட்டதையும், அவனுடைய மனைவி பிறந்த 15 நாட்களேயான கைக்குழந்தை யுடன் தற்கொலை செய்யத் துணிந்ததையும், அதனைத் தடுத்து வேளாளர்கள் கறவைப் பசு, தானியம், நிலம் முதலியவற்றை வழங்கி அவளை ஆதரித்ததையும் செப்பேடு விளக்கமாக எடுத் துரைக்கிறது. மேற்சுட்டிய இரண்டு செப்பேடு களின் வழி, கொங்கு நாட்டில் அடிமை முறை இருந்தமையும், அவர்கள் விலை கொடுத்து வாங்கப் பட்டமையும், பிரச்சினைகள் எழுந்தபோது அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப் பட்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

நரபலி:-

நாட்டின் நலத்திற்காகவும் தனி மனிதர்களின் நலத்திற்காகவும், பொதுக் காரியத்திற்காகவும் நரபலி தரும் வழக்கம் முற்காலம் தொடங்கி இருந்து வருகிறது. மூடநம்பிக்கையின் பாற்பட்ட இவ்வழக்கம் இன்றும் அங்கொன்றும் இங்கொன்று மாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. கொங்கு நாட்டிலும் இத்தகைய வழக்கம் இருந்ததை வரலாற்று ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆவுலப்பம்பட்டி கரியகாளியம்மனுக்குத் தேரோட்டம் நடத்த ஊர்க்கவுண்டர்கள் கூடி முடிவு செய்கின்றனர். தேரோட வேண்டுமெனில் நரபலி வேண்டும் என்று கவுண்டர் ஒருவரின் கனவில்(!) தோன்றி கடவுள் கூறுகிறார். மறுநாள் கவுண்டர்கள் ஒன்றுகூடி யாரைப் பலியாகக் கொடுப்பது என்று யோசிக்கிறார்கள். ஊராரின் ஏவல் பணிகளைச் செய்து வந்த பறையர்களில் ஒருவனை பலிகொடுப்பது என்று முடிவெடுக் கிறார்கள். (ஏவியதைச் செய்பவர்களுக்குக் கேள்வி ஏது?) பறையன் உருமனிடம் செய்தியைக் கூறு கிறார்கள். அவன், ஊரில் வாழும் மற்றொரு பறையனான சின்னானிடம் கேட்டுச் சொல்வ தாகக் கூறுகிறான்.

செய்தியைக் கேள்விப்பட்ட சின்னான் இரவோடு இரவாக குடும்பத்துடன் ஊரை விட்டு ஓடிவிடுகிறான். இறுதியாக உருமன்தானே பலியாவதற்குச் சம்மதிக்கிறான். அவனுடைய மனைவி, தான் பலியாவதாகவும், உருமன் வேண்டுமானால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளட்டும் என்றும் கூறி நரபலிக்குத் தயாராகிறாள். (யாருடைய தேர் ஓட யார் பலி யாவது?) தேரின் ஆறு சக்கரங்களும் அவள் முதுகின் மீது ஏறி ஓடத்துவங்குகிறது. அப் பெண்ணிற்கு ஏதும் ஆகவில்லை.(!?) (ஆயுள் கெட்டி போல!) அதனைக் கண்ட கவுண்டர்கள் பெருமகிழ்ச்சி கொண்டு, உருமனுக்கு 50 ரூபாய் சன்மானமும், ஆவுலப்பம்பட்டி மற்றும் வரக்க நாட்டுக்குக் காணியாளன் என்ற உரிமையும் அவன் மனைவிக்கு வண்டிக்கரை சேலையும் பரிசாகக் கொடுத்ததை ஆவுலப்பம்பட்டி பட்டயம் (ப. 200) குறிப்பிடுகிறது.

பருத்திப்பள்ளி அமிர்தசாகரம் ஏரியில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது. அதனால், ஊரில் பாசன வசதி இல்லாமல் வேளாண்மை குறைந்து பஞ்சம் நிலவியது. உடைப்பைச் சரி செய்ய ‘ஒரு தாய்க்கு தலையான மூத்த பெண் பிள்ளையை உடைப்பில் நிறுத்திக் கட்டினால் உடைப்பு சீராகி எப்பொழுதும் உடைப்பு ஏற்படாது’ என்று பெரியவர் ஒருவர் கூற, அவ்வூர் வேட்டுவ சமூகத்து இளம் பெண் ஒருத்தி தன்னையே பலியாகத் தந்ததாக ‘கொங்கு குல மகளிர்’ எனும் நூலில் (ப. 90) ஒரு செய்தி பதிவாகி உள்ளமையும் இங்கு குறிக்கத்தக்கது. ஆக, நரபலி தரும் வழக்கம் கொங்குப் பகுதியில் இருந்தமையும், அதற்கு தாழ்த்தப்பட்டவர்களையும், பெண்களையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதனையும் அறிய முடி கிறது.

தற்கொலை:-

மோரூரில் வாழ்ந்தவரும், கண்ணகுலத் தலை வராக விளங்கியவருமான காங்கேயர் என்பவருக்கு வெகுநாளாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் அவர் மிகுதியும் வருத்தமுற்றிருந்தார். அவருக்காகப் பணி செய்த செங்குந்தர் குலத்தைச் சேர்ந்த நல்லய்யன் என்பவன் தலைவரின் வருத்தத்தைத் தாங்க முடியாமல், பிள்ளை வரம் வேண்டி அந்தணரைக் கொண்டு நல்லபுள்ளியம்மன் கோவிலில் நடைபெற்ற வேள்வித் தீ முன்பாக நின்று, தன் தலையை இரு துண்டாக வெட்டிக் கொண்டான். அவன் வீரத்தைப் பாராட்டி அவன் வழி வந்தவர்க்கு கன்னிவாடியில் இருக்கும் இயற்கை உரிமைகள் யாவும் மோரூரிலும் வழங்கப் பட்டன. மேலும் நல்லய்யனை சிலை வடிவில் நல்ல புள்ளியம்மனின் கோவிலில் நிறுவி, ‘முத்துக் குமாரசாமி’ என்ற பெயரில் செங்குந்தர்கள் வணங் கவும் கண்ணகுலத்தார் ஏற்பாடு செய்தனர் என்பதை மோரூர் பட்டயம் தாங்கி நிற்கிறது. தலைவனுக்குப் பிள்ளை இல்லையென்று தற்கொலை செய்து கொண்ட அன்றைய தமிழனின் நிலையைக் காட்டிலும் ‘தலைவா’ திரைப்படம் வெளியாகாமைக்கு வருந்தி தற்கொலை செய்து கொண்ட இன்றைய தமிழனின் நிலை தரம் தாழ்ந் திருக்கிறது என்பது வரலாறு சொல்லும் பாடம்.

ஏழூர் நாட்டில் திருக்கோவில் பணிசெய்து அதற்காக மானிய நிலங்கள் பெற்று, பெரும் செல்வம் சேர்த்திருந்த கற்பூர ஆயி, செண்பக ஆயி என்ற இரு சகோதரிகள் இருந்தனர். ஏழூரின் நீர்ப் பாசன வசதிக்காக ஏரி ஒன்றைக் கட்ட சகோதரிகள் முனைந்தனர். அதனைக் கட்டி முடிக்கும் தறு வாயில் பொருள் பற்றாக்குறை ஏற்படவே ஊர் மக்களிடம் பொருள் வேண்டினர். யாரும் உதவ முன்வரவில்லை. ஏரிப்பணியை மேற்பார்வையிட்ட ஒட்டனும் கூலிப்பணம் கேட்டு வற்புறுத்தினான். அவமானம் தாங்க முடியாமல் சகோதரிகள் இருவரும் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனையறிந்த ஒட்டனும் மனம் வருந்தி அதே ஏரியில் விழுந்து இறந்து விடுகிறான். அவனுடைய நாயும் கூட இறந்து விடுகிறது. பிற்காலத்தில் ஊர்மக்கள் ஏரிக்கரையில் இறந்த மூவரோடு நாய்க்கும் சேர்த்து கோயில் கட்டி வழிபட்டனர். கோயில் புதுப்பிக்கப்பட்டு இன்றளவும் வழிபாடு தொடர்வதான செய்தி ‘கொங்கு குல மகளிர்’ எனும் நூலில் (ப. 89) சான்றுகள் ஏதுமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய தரவுகளின் அடிப்படையில் சகோ தரிகள் இருவரும் தேவரடியராக இருந்திருக்கலாம் என்பதும், சொத்துக்களை இழந்ததாலும், ஆதரிப் பவர் இன்மையாலும், அவமானத்தாலும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது மான முடிவுக்கு வரலாம். மேலும், இச்சம்பவங்கள் யாவும் தேவரடியார் முறை ஒழிக்கப்பட்ட கால கட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு.

அனாதைகளுக்கு ஆதரவும் மாற்றுத்திறனாளிகளுக்குக் காப்பகமும்

கைகால் ஊனமுற்றவர்களுக்கான காப்பகம் (முடவர்சத்திரம்) ஒன்று சத்தியமங்கலத்தில் (கஸ்பாபேட்டை) பூந்துறை வாரணவாசிக் கவுண்ட ரால் ஏற்படுத்தப்பட்டமையும், அக்காப்பகம் இயங்க ஏழு ஊர்களைக் கொடையாகக் கொடுத்த துடன், ஊரில் யார் யார் எவ்வளவு பொருள்/ பணம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டதையும் மொடவாண்டிகள் பட்டயம் விரிவாக விளக்குகிறது. (ப. 253). வேளாளர்களின் மனித நேயத்திற்குச் சான்றாக இப்பட்டயம் திகழ் கிறது. அதே சமயத்தில், வசதி படைத்தவர்களாக இருந்தாலும் குறைபாடுடைய குழந்தைகள் பிறந் தால் அதனை யாருக்கும் தெரியாமல் பேழையில் வைத்து ஆற்றில் விடும் பழக்கம் அக்கால கட்டத் திலேயே இருந்தமையும் இப்பட்டயம் வழி அறிய முடிகிறது.

கொடுமுடி மகுடலிங்கர் கோயிலில் சேவகம் செய்து வந்த உமையாயி என்ற வேளாளர் குலப் பெண்மணியை திருச்செங்கோட்டைச் சேர்ந்த மயில்சாமி கவுண்டர் என்பவர் வீடு மற்றும் நன்செய், புன்செய் நிலம் கொடுத்து தனதூர் கோயிலில் சேவகம் செய்ய அழைத்து வந்தார். அவ்வப்போது கொடுமுடி சென்று வந்த உமையாயி, தன் வீட்டருகே வசித்த தாய் தந்தையரை இழந்த வேலப்பன், மலையப்பன் என்ற இரு குயவர் குலச் சிறுவர்களை திருச்செங்கோட்டிற்கு அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அவர் களை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைத்ததுடன், தன் சொத்து முழுவதையும் அவர் களுக்கு எழுதியும் வைத்தார். அவர்கள் இருவரும் குலத்தொழிலை செய்வதற்கு மயில்சாமி கவுண்டரின் உதவியுடன் சில ஊர்களையும் காணியாகப் பெற்றுத் தந்தார் என்ற செய்தியை (ப. 97-100) “கொங்கு குலமகளிர்” நூலில் புலவர் இராசு பதிவு செய்துள்ளார். மேற்சுட்டிய இரு நிகழ்வுகளும் கொங்கு வேளாளரின் மனிதநேயத்திற்கும், இரக்க சிந்தனைக்கும் சான்றுகளாக அமைகின்றன.

நிறைவாக:-

ஒரு நாட்டின் - சமூகத்தின் வரலாறு என்பது அங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் சமய, சமூக, பொருளியல், பண்பாட்டு நிகழ்வுகளையும் உள்ளடக்கியதான வரலாறாக அமைய வேண்டும். இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் யாவும் அப்படி எழுதப்படவில்லை. ஒன்று, பொதுவான வரலாறாக இருக்கிறது அல்லது ஒரு சாராருக்கு ஆதரவான வரலாறாக இருக்கிறது. இப்படியான வரலாற்று எழுதியல் முறை மாற வேண்டும். அதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன. “தமிழர் வளர்ச்சிப் போக்கை உண்மையாகச் சித்திரிக்கும் வரலாறு - எழுதப்பட வேண்டும். இனக் கண்ணோட்டம் உண்மையைக் காண உதவாது. வரலாறு ஒரு சமூக விஞ்ஞானம். அது பல விஞ்ஞானிகளின் துணையோடு எழுதப்பட வேண்டும். மானிடவியல், அகழ்வு ஆராய்ச்சி, காசு ஆராய்ச்சி, சமூகவியல், அரசியல், பொருளா தாரம் ஆகிய விஞ்ஞானங்களின் துணையோடு வரலாறு எழுதப்பட வேண்டும்” (ப. 38) என்ற நா.வானமாமலையின் கருத்தோடு இக்கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

பயன்பட்ட நூல்கள்:-

1.             செ.இராசு, கொங்கு வேளாளர் செப்பேட்டு பட்டயங்கள்

2.             செ.இராசு, கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப் பாடல்களும்

3.             செ. இராசு, கொங்கு குல மகளிர்

4.             ஆ. சிவசுப்பிரமணியம், தமிழகத்தில் அடிமை முறை

5.             நா.வானமாமலை, தமிழர் வரலாறும், பண்பாடும்.

Pin It