தனுஷ்கோடி ராமசாமி தமிழ் முற்போக்கு இலக்கியத்திற்குச் சிறந்த பங்களிப்பைச் செய்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது பல சிறு கதைகள் தனித்தன்மையுடன் இடம்பெறத் தக்கன. அவரது ‘தோழர்’ நாவலும் தமிழ்ச்சூழலில் புதுமை யான முயற்சி. மனிதமும் தோழமையுணர்வும் பொங்கி வழிய வாழ்ந்தவர். அவர்தம் படைப்பு களும் இப்பேருணர்வின் விளைச்சல்களே. த.ரா. இரண்டு குறுநாவல்களைப் படைத்துள்ளார். காதல், அகவாழ்க்கை, ஆண்-பெண் நட்புறவைப் பேசும் ‘நிழல்’, ‘ஓர் கவிதை’ ஆகிய இப்படைப்புகள் போதிய கவனம் பெறவில்லை. யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் ஊடாக மனவெளிப்பயணமாகவும், வாழ்க்கை குறித்த அகதரிசனமாகவும் அமையும் இக்குறு நாவல்களைக் குறித்ததாக இக்கட்டுரை அமைகின்றது.

மனித மனம், வாழ்க்கையின் தேவைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் போராடுகின்றது. தேவைகள் நிறைவடையும் பொழுது மனம் ஓரளவு அமைதியுறு கின்றது. ஆனாலும் இது தொடர்நிகழ்வுதான். சூழல் கருதி நிறைவடையாத மனம் தன்னையே அமைதிப்படுத்தக் கோபம், அழுகை, ஆவேசம் இவற்றோடு மரணம் வரை சென்று மீள்கின்றது. இத்தகைய போராட்டத்திற்கும் மன அமைதிக்குமான இடைப்பட்ட அவஸ்தைகளை த.ரா.வின் குறு நாவல்கள் முன்னெடுக்கின்றன. எனவே, உளவியல் நோக்கில் இவற்றை ஆராய்வதே ஏற்றது என்பதால் இம்முயற்சி கையாளப்பட்டிருக்கிறது.

நிழல்

முருகசாமி திருமணமானவன். ஒரு குழந்தைக்குத் தந்தை. சந்தானலட்சுமி கணவனைப் பிரிந்து வாழ் கிறாள். இருவருக்கும் இடையே காதலா.. அன்பா-என்று புரியாத ஓர் உறவு வளர்ந்து வருகிறது. கணவனோடு சேர்ந்து வாழமுடியாத விரக்தியில் சந்தானம் அடிக்கடி தற்கொலைக்கு முனைகிறாள். அவளின் பாலுணர்வுத் தேவை நிறைவு செய்யப் பட்டால், அவள் வாழ்க்கை நன்றாக அமையும் என முருகசாமி நினைக்கிறான். அதற்காக அவளை நெருங்குகிறபோது, அவள் தடுத்துவிடுகிறாள். அத்துடன் அவன் மீது கொண்ட பிரியம் உண்மை யானது எனத் தெளிவுபடுத்துகிறாள். தான் செய்த குற்றத்திற்காக முருகசாமி வருந்துகிறான். இறுதியில் இருவரும் ஆத்மார்த்தமான நண்பர்களாகப் பயணப் படுகின்றனர். இக்கதை ஆண் பெண் நட்பின் மேன்மையைச் சிறப்பிக்கிறது.

ஓர்கவிதை

‘கருப்பணன்’ என்னும் இளைஞன் நிறைய பெண்களைக் காதலிக்கிறான். இது ஒருதலைக் காதல்தான். இருந்தாலும் அவர்களால் ஏமாற்றப் பட்டதாக நினைக்கிறான். மருத்துவர் சுமதியைப் பேருந்தில் சந்திக்கிறான். அவளிடம் உண்மையான காதலை உணர்கிறான். ஆனால், அவள் மருத்துவர் சிவகுமாரைக் காதலிக்கிறாள். தன் காதலை சுமதி யிடம் தெரிவிப்பதில் ஏற்படுகிற குழப்பநிலை யிலேயே கதை செல்கிறது. ஒருவழியாகத் தன் காதலை அவளிடத்துச் சொல்கிற சூழலில், சுமதி, மருத்துவர் சிவகுமாரைக் காதலிப்பது தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் கருப்பணன் மீது மிகுந்த அன்பு செலுத்துகின்றனர். அவர்களின் உண்மைக் காதலைப் புரிந்துகொண்டு அவர்களின் நல்ல நட்போடு விடைபெறுகிறான். அவன் மனம் குழப்பம் நீங்கித் தெளிவடைகிறது. இக்கதையும் ஆண், பெண் நட்பின் சிறப்பினைப் பேசுகிறது.

சமூக உளவியல்

‘உளவியல்’ என்பது மனித நடத்தைகளைத் தீர்மானிக்கின்ற அகமன இயக்கப்பாடுகளை ஆராயும் ஒரு துறையாகும். சமூக உளவியல் என்பது புறவயக் காரணிகள் எவ்வகையில் மனிதர்களது உணர்வுகள், எண்ணங்கள், செயல்கள் இவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுபற்றி ஆராய்வதாகும். இத்தகைய உளவியல் ஆராய்ச்சிகள், மனப்பாங்கு களை வளர்ப்பதற்கும், செப்பனிடுவதற்கும் எவ்வாறு தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்ற முறைமை களை எடுத்துரைக்கின்றன.

சமூக அறிகையும் - மனப்பாங்கும்

‘சமூக அறிகை’ என்பது சமூகத்தைப்பற்றி அறிந்துகொள்ளும் திறம். மனித நடத்தைகளை வழிநடத்துவதில் ‘மனப்பாங்கு’ முக்கியமானதொரு இடத்தை வகிக்கின்றது. மனிதர்கள் தங்களது தனிப் பட்ட வாழ்க்கை முறையில் பிறர் வற்புறுத்தலின்றித் தனக்கென்று ஓர் கொள்கை நியாயத்தினை வரித்துக் கொள்கின்றனர். அதன்படி வாழவேண்டும் என்ற மனப்பாங்கு ஏற்பட்டுவிடுகிறது. அதற்கான வாழ்க்கைப் போராட்டம் அவர்களுக்குள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது. எத்தகைய மனப் பாங்குகள் மனிதனது அடிப்படை நோக்கங்களைப் பெற உதவுகின்றன என்பதை ‘டேனியல் கட்ஸ்’ (Daniel Catz) என்னும் உளவியலாளர் ஆராய முற்பட்டார்.

மனப்பாங்குகள் ஊடறுத்துச் செல்லவேண்டிய நான்கு வகைப்பட்ட உளவியல் செயல்பாடுகளை அவர் குறிப்பிடுகின்றார். அவை முறையே:

1.            சரிசெய்தல் செயற்பாடு (Adjustment Function)

2.            ஈகோ- பாதுகாப்புச் செயற்பாடு (Ego Defence Function)

3.            பெறுமதி-வெளிப்பாட்டுச் செயற்பாடு (The Value Expressive Function)

4.            அறிவுச் செயற்பாடு (The Knowledge Function) என்பனவாகும்.

சரிசெய்தல் செயற்பாடு

மனித உயிர்கள், உயர்ந்த அளவிலான வெகு மதிகளையும், குறைந்த அளவிலான குற்றங்களையும் மட்டுமே கொண்டிருக்க விரும்புகின்றன. இது மனத்தின் இயல்பான செயல்பாடாகக் கருதப் படுகிறது. ‘நிழல்’ கதையில், முருகசாமி திருமண மானவன். சந்தானலட்சுமி கணவரைப் பிரிந்து வாழ்பவள். இருவருக்குமிடையே ஈர்ப்பு ஏற்படு கிறது. தவறு என்ற நிலையிலும், குறைந்தபட்சம் மனதளவிலேனும் சேர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் உண்டாகிறது. இது குறைந்த அளவிலான குற்றங்களை ஏற்றுக்கொள்கிற மனப் பாங்கு. ஆனால், பெறுமதிகளை விரும்புகிறபோது இதுபோன்ற குற்றங்களைத் தவிர்ப்பதற்கான மனோபாவம் எழத்தொடங்கும். எடுத்துக்காட்டாக,

‘நிழல்’ கதையில், சந்தானலட்சுமி முருக சாமியைப் பார்க்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறாள். அக்கடிதத்தில்,

‘நிச்சயமாக என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றோ, காதல் செய்யுங்கள் என்றோ கேவலமாக நான் எதையும் கேட்க மாட்டேன். அவை என் விருப்பமும் இல்லை. உங்களை நான் மனமார நல்லவர் என்று நம்புகிறேன். ஆனால் நீங்கள் என்னை எப்படி எண்ணிக் கொண்டுள்ளீர் களோ... தயவு செய்து நீங்கள் இங்கு வரவேண்டும். நீங்கள் வராத நிலையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. தயவு செய்து இந்த முறை நாம் சந்தித்துப் பேசிக் கொள்வோம்... அப்புறம் வாழ்க்கை முழுவதுமே சந்திக்காது போய்விட்டாலும் பரவாயில்லை’ எனத் துடியாய்த் துடித்து நெஞ்சின் ஈரத்தால் மடல் தீட்டியிருந்தாள் எனத் த.ரா. குறிப்பிடுகிறார். (நிழல், ப.21)

இவற்றைக் கூர்ந்து நோக்குகிறபோது, சந்தானம், முருகசாமியை விரும்பினாலும், காதல், கல்யாணம் என்று கேட்கமாட்டேன் என்கிறாள். அவனை நினைத்துவிடக் கூடாது. தான் நல்லவள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அவனும் தன் மதிப்பை உயர்த்திக்காட்ட அவளுடனான சந்திப்பைத் தவிர்த்து விடுகிறான். தன் ஆசைகளை மறைத்து, சமூகப் பெறுமதிகளை விரும்பி, தன் மீதான உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்த முனையும் இவர்களின் இத்தகைய உளவியல் போக்கினைச் ‘சரிசெய்தல் செயல்பாடு’ எனலாம்.

ஈகோ- பாதுகாப்பு செயற்பாடு

சில மனப்பாங்குகள் வாழ்க்கையின் அடிப் படை உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. வாழ்வின் கசப்பான யதார்த்தங்களையும் அங்கீ கரித்துக் கொள்ளாதவாறு மனம் தடைப்படுத்திக் கொள்கிறது. இதனால் உள்ளார்ந்த துன்பங்கள் வெளியில் தெரியாதபடி கவசமிடப்படுகின்றன. இவை மனத்திற்கான பாதுகாப்புக் கூறாகவும் அமைகின்றன.

கதையில், சந்தானலட்சுமி தான் குடியிருந்த வளாகத்தைவிட்டு அடுத்த தெருவிற்கு வீடு பார்த்துச் சென்று விடுகிறாள். அவளைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக முருகசாமி அவள் வீட்டின் வழியாகச் செல்வதைத் தவிர்த்து விடுகிறான். அவளைப் பற்றி விசாரிப்பது இல்லை. இதையறிந்த சந்தானம் துயரப்படுகிறாள். “ஆனா அவங்க என்னோடு எந்த வகையிலும் ஒட்டிக்கொள்ளக் கூடாதேன்னு ஜாக்கிரதையாக இருக்க விரும்பியது தான் விசாரிக்காம இருந்ததற்குக் காரணம். நான் அப்படிப் போனது தவறுதான்னு நெனக்கக்கூட முடியலே... அப்படிப் போனாத்தான் என்னை நானே நல்ல மனிதனாக நிலைநிறுத்திக் கொள்ள முடியும்னு நெனச்சிட்டேன்” என்கிறான். (நிழல், ப.22)

தன் நேர்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முருகசாமி, அவளை வெறுப்பது போல நடந்து கொள்கிறான். இச்செயல் சுய பாதுகாப்பிற்கான ஈகோ செயல்பாடு ஆகும்.

ஈகோ பாதுகாப்புச் செயல்முறை உள்ளார்ந்த அடிப்படையில் மட்டும் நிகழும் ஒன்றல்ல. புறவய மாகவும் செயல்படுகிற ஒன்றாகும். எவ்வாறெனில், பிறரது குணவியல்புகள் எமக்கு உவப்பானவை யாகக் காணப்படாதபோது அத்தகைய இயல்பு களின் தாக்கத்திலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கு இப்பாதுகாப்புப் பொறிமுறை உதவுகிறது எனக் கனகசபை சிவானந்தமூர்த்தி கூறுகிறார். (கனகசபை சிவானந்தமூர்த்தி, க. அன்ரன் டயஸ். உளவியல் ஓர் அறிமுகம் ii ப.29)

அவரின் கூற்றினை வைத்துப் பார்க்கிறபோது, முருகசாமியின் நிராகரிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாத சந்தானம் தற்கொலை முயற்சியில் ஈடுபடு கிறாள். முருகசாமியைப் பார்த்து,

“உங்களுக்கு யாரைப் பத்தியும் கவலையில்லை... உங்க மனைவியைப் பத்தியோ... மகனைப் பத்தியோ... உங்களைப் பத்தியோ கூடக் கவலையில்லை. உங் களுக்கு உங்க ஒலகம் நல்லவருன்னு சொல்லணும்... ஒலகஞ் சொல்லுதோ இல்லையோ... காந்தி சொன்ன படி நடந்திட்டதாக நீங்க திருப்தி அடையணும்... அவ்வளவுதானே.. எனக் கூறிச் சந்தானம் பீறிட்டு அழுகிறாள்”. (நிழல். ப.44)

முருகசாமி தான் கொண்ட கொள்கையின் தளத்தில் நிற்கிறான். அதற்கு எதிர்நிலையாக அமையும் புறச்செயல்களை விலக்க முற்படுகிறான். அதனைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உத்வேகம் அவனுள் ஏற்படுகிறது. இவையே அவனுக்கான ஈகோ பாதுகாப்புச் செயலாகவும் அமைந்துவிடுகின்றன. இதனைச் சந்தானத்தின் கூற்று உணர்த்துகிறது.

பெறுமதி-வெளிப்பாட்டுச் செயற்பாடு

விருப்பமற்ற, மகிழ்வற்ற நிலைப்பாடுகளை மனம் வெளிப்படுத்துகிறது. அச்சமயம், நம்மிடம் உள்ள மற்றைய விருப்பங்கள், கண்ணியமான முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இவை பெறுமதி வெளிப்பாட்டுச் செயல்பாடு எனப்படும். இத்தகைய மனப்பாங்குகள் சுய உணர்வு வெளிப்பாட்டிற்கும் அதனை மறுவாக்கம் செய்வதற்கும் உதவுகின்றன. நம் மனதில் உள்ள இலக்கினை அறிவதற்கும் அதனைப் போராடி யேனும் பெற்றுவிட வேண்டும் என்ற கற்பித்தலை மறுவாக்கம் செய்யவும் தூண்டச் செய்கிறது. இச் செயல்பாடு அதீத செயல்வலுவாக்கம் கொண்ட மனிதராக, வெற்றியாளராக ஒருவரை மாற்றி விடுகிறது.

சந்தானலட்சுமி விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறாள். முருகசாமி, அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான். அப்பொழுது, “என்னை மன்னிப்பதற்காகவேனும் கொஞ்சம் உயிரோடு இருங்கள். நீங்கள் பிழைப் பதற்கு எதை வேண்டுமென்றாலும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். கடமையாகவே நினைக் கிறேன். மற்றபடி சத்தியமாக நான் புகழுக்காக வரவில்லை” என்று தேம்பி அழுகிறான். அவன் சந்தானத்திடம் கொண்ட அன்பும், சமூகக் கடமையும் உள்ளீடாக வெளிப்படுகிறது.

“ப்ளீஸ்.. என்னை ஏன் இந்தக் கொடுமை களுக்கு உள்ளாக்குறீங்க.. உயிரோடு இருக்கும் போது உங்க அன்பு நிழல்கூட என் மேலே பட்றக் கூடாதுன்னு புனிதம் பார்த்து வெரட்னீங்க.. சுய நலமும் அற்பத்தனமும் நெறஞ்ச இந்த உலகத்தி லிருந்து போய்த் தொலையலாம்னா அதுக்குக் கூடத் தடையா நின்னு என்னைச் சித்திரவதை பண்றீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா-? என்று வார்த்தைகளோடு கோபமும் கண்ணீரும் கொட்ட சந்தானம், முருகசாமியிடம் கேட்கிறாள்”. (நிழல், பக்.42-23) சந்தானம் மனவேதனையைத் தெரியப்படுத்துகிறாள். அவளின் தற்கொலைக்கான காரணம் நேரடியாக வெளிப்படவில்லை. ஆயினும், அதைக் கண்டுணர்கிறபோது அதற்கான தீர்வு கிடைத்து அவள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை உளவியல் பாங்கில் முன்னெடுக்கலாம்.

‘ஓர் கவிதை’ நாவலில் இடம்பெற்றுள்ள கருப்பணன், நீண்ட நேரமாகக் காதலைப் பற்றிய எண்ணங்களால் மனதை அலைபாய விடுகிறான். திடீரென சுயநினைவு வந்தவன்போல், “இவ்வளவு நேரமாக.. என் நேசத்திற்குரிய இவ்வுலகை...

என் மண்ணை... என் மக்களைப் பார்க்காமல்

எனக்குள்ளேயே பார்த்துக்கொண்டே இருந்து விட்டேனே...” என்று வருத்தப்படுகிறான். (ஓர் கவிதை ப.95)

கருப்பணன், காதலின் தன்மையை நினைத்து வருத்தப்படுகிற அதே மாத்திரத்தில், மக்களின் மீதான அக்கறை குறித்து அவனுடைய மற்றைய மனப்பாங்குகள் புலப்படுகின்றன. மகிழ்வற்ற இத்தருணங்களில் இருந்து அவன் வெளியேறு வதற்கான சுயப்பிரக்ஞை ஏற்படுகிறபோது தன் சமூக இயல்பினை ஒளியூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. இதைத்தான் கட்ஸ் ‘பெறுமதி வெளிப்பாட்டுச் செயல்பாடு’ என்கிறார்.

அறிவுச் செயற்பாடு

மனிதர்கள், வாழ்வில் ஓர் ஒழுங்குத் தெளி வாற்றலைக் கொண்டிருப்பர். தம்மைச் சுற்றி நடக்கிற சம்பவங்கள், அதற்கான அர்த்தங்களை மதிப்பிடுதல் அவசியமாகிறது. இவ்வாறான மதிப்பீடுகளுக்கு மனப்பாங்குகள் உதவுகின்றன. இதனைக் ‘கற்பித்துக்கூறல்’ அறிகைமுறை எனச் சமூக உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கனகசபை சிவானந்தமூர்த்தி என்னும் உளவியல் ஆராய்ச்சியாளர், கற்பித்துக் கூறல் பற்றி விளக்கம் அளிக்கிறார். அதாவது, ஒருவரது நடத்தைக்கு ஊக்குவிப்பாக இருப்பவை, ஒன்றில் அவை உள்ளார்ந்த காரணிகளாக இருக்கலாம் அல்லது வெளியார்ந்த காரணிகளாக இருக்கலாம். அவை எவை? எத்தகையவை? என்பதைத் தீர்மானிப்பதே கற்பித்துக் கூறல் ஆகும். மனப்பாங்கு என்பது கற்றுக்கொண்டதோர் ஒழுங்கமைப்பாகும் என்கிறார்.

அறிவுச் செயல்பாடு என்பது ஒருவரின் தனித்துவ நடத்தைப் பாங்குகள், உணர்வுகள், நம்பிக்கைகள் இவற்றை உள்ளடக்கியதாகும்.

‘நிழல்’ கதையில், தன்னைச் சந்திக்கவேண்டும் என்று சந்தானம் எழுதிய கடிதத்திற்குப் பதிலாக முருகசாமி,

“ஆணும் பெண்ணும் ஒன்றுவிட்ட சகோதரன் சகோதரியர்களாக இருந்தாலும் தனிமையில் அடிக்கடி விரும்பிப் பார்த்துக்கொள்ளுதல் கூடாது. அப்படிச் சந்தித்தால் தீமையே விளையும் என்று காந்தியடிகள் கூறியுள்ளார். ஆகவேதான் நீங்கிக் கொண்டேன். இதற்கு நான் உங்களை வெறுக் கிறேன் என்பது பொருளில்லை... உங்களுக்கு என்னால் செய்யக்கூடிய எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்ய முன்வருவேன். ஆனால் உங்களோடு கடிதத் தொடர்புகொள்ள விரும்பவில்லை. அது உங்கள் பெற்றோரை மிகுந்த கலக்கத்திலும் வேதனை யிலும் ஆழ்த்திவிடக்கூடும்” என எழுதுகிறான். (நிழல். ப.20)

இரவு நேரத்தில் அவன் சந்தானத்தைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. எவ்வளவு நேர்மையாக இருந்த நான் இப்படி அயோக்கியத்தனம் செய்யுமளவிற்குப் போய்விட்டேனே என்று எண்ணிப்பார்க்கிறான். தனக்குச் சிந்தனை என்பதே அற்றுப்போனதாக உணர்கிறான். மனிதர்களது எண்ணங்கள், செயல் பாடுகள் பிற மனிதர்களை எங்ஙனம் பாதிக்கின்றன என்பதை ஆராய்வது சமூக உளவியலின் நோக்க மாகிறது. அவ்வகையில் சந்தானம் தன் தேவை களை வெளிப்படுத்துகிற விரக்தி நிலை, அதனைப் பூர்த்தி செய்கிற முருகசாமியின் செயல்பாடு போன்ற தனிப்பட்ட மனித நடத்தைகள், வெளியில் தெரிகிற போது அது சமூகச் சூழலின் மாறுபட்ட இயல்பு களை ஏற்படுத்தும்.

ஓர்கவிதை - யில் கருப்பணன் பல பெண்களை மனதில் நினைத்துக்கொண்டு ஒருதலைக் காதலாகச் சுற்றித் திரிகிறான். இறுதியில், “எனக்குக் காதல் பெரிதுதான். உலகின் மீதுள்ள நேசமும் பெரிது தான்.. ஆனால் காதலில் நான் தோல்வி அடைய மாட்டேன்.” என்று அறிவுத் தெளிவு பெறுகிறான். (ஓர் கவிதை, ப. 109)

முருகசாமி மற்றும் கருப்பணனின் மனப் பாங்குகள், வாழ்க்கையின் யதார்த்த உண்மை நிலைகளை உணர்ந்து அதற்கேற்பச் செயல் படுகின்றன. அவர்கள் தங்களின் அனுபவங்கள் மூலமாக சமூக மதிப்புகளைக் கற்றுக்கொள் கின்றனர். மனப்பாங்கு என்பது உணர்வுச் செயல். அதன் உள்ளார்ந்த செயல்பாடுகள் சமுதாய அடிப்படையிலான புறக்காரணிகளால் இயல்பு ஊக்கம் பெறுகின்றமையை நடத்தை விதிகள் வழி நாவல்கள் புலப்படுத்துகின்றன.

குடும்பச் சிதைவுகள்

குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந் தைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் உரிமைகளையும், பொறுப்புகளையும் எடுத்துக் கூறும் ஒழுங்குகள், வழக்கங்கள் ஆகியவற்றின் கலவை என ஆங்கில அறிஞர் மெர்சர் குறிப்பிடுகிறார்...

குடும்பம், சமூகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் புதிய உறவுகளை உருவாக்குகிறது. அவற்றினிடையே ஏற்படும் நீள்தொடர்ச்சியினால் பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாக்கும் ஓர் அமைப் பாகக் குடும்பம் செயல்படுகிறது. இத்தகைய சமூக நிறுவனத்தில் இல்வாழ்க்கை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

சந்தானலட்சுமியின் மாமியார், தன் மகன் மீது கொண்ட பாசத்தினால் தன் மருமகளான சந்தானத்தை மகனுடன் சேர்த்துவைக்க மறுக்கிறாள். நியாய மற்ற காரணத்தைக் கூறி அவளை வீட்டை விட்டு அனுப்பி விடுகின்றனர். தனித்து வாழ விரும்பாமல் சந்தானம் இறந்துவிட நினைக்கிறாள். ‘இப்போ, பாருங்க சீரியஸ், ஸ்டார்ட் இம்மீடியட்லி’ன்னு நீங்க தந்தி கொடுத்துங்கூட.. இதுவரை அவங்க வீட்டிலிருந்து யாருமே வரலை.. இவ அவங்க வீட்டுக்குப் போனாலும் அவங்க யாருமே இவள மதிக்கிறது இல்லை. ஒண்ணு ரெண்டு நாள் அங்கே தனியாகவே இருந்துவிட்டுத் திரும்பிருவா..’ என முருகசாமியிடம் சந்தானத்தின் சகோதரியின் கணவர் கூறுகிறார். (நிழல், ப.48)

இதனைத் தொடர்ந்து, சந்தானலட்சுமியின் தந்தையும், ‘இவ செத்து எல்லாக் காரியமும் முடிஞ்சிருக்கும்ணு வந்தோம்... ஆனா இங்கே இவ கல்லாட்ட உட்கார்ந்திருக்கா..’ என்கிறார் (நிழல் 46)

சந்தானத்தின் தந்தை, தன் மகளுக்கு ஏற்ற மணமகனைத் தேர்ந்தெடுக்கத் தவறி விடுகிறார். மண வாழ்க்கையில் அவளுக்கு ஏற்பட்ட துன்ப நிலைக்குக் காரணம் அறிந்து இரு குடும்பத் தினரிடையே இருக்கும் உட்பூசலை அவர்கள் சரி செய்துகொள்ள விரும்பவில்லை. ஆயினும், அவள் ஏதோ பெருங்குற்றம் செய்தவளாக உறவினர்களால் நிராகரிக்கப்படுகிறாள். அவளின் கணவரும் அவர் குடும்பத்தினரும் தங்கள் குற்றங்களை மூடி மறைப் பதற்காக இவளின் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இவை சரிசெய்யப்படக்கூடிய பிரச்சினைகள் என் றாலும், இரு குடும்ப உறவுகளுக்கு இடையேயான புரிதல் இன்மையால் உறவுகளுக்குள் சிக்கல் விளைகிறது. முடிவில் சந்தானம் பாதிக்கப்படு கிறாள். குடும்பம் என்ற கட்டமைப்பு உடைகிற பொழுது அதன் அங்கங்களான உறவுகளும் மதிப்பு களும் சிதைந்து விடுகின்றன என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகும்.

பண்பாட்டு நெறிகள்

பண்பாடு பற்றிய விளக்கமாக, வே.ஆனை முத்து, அது தனிப்பட்ட ஓர் இயல்பு அன்று என்றும், ஒழுக்கம், பழக்கம், வழக்கம், நாகரிகம், நம்பிக்கை முதலிய கூறுகளின் ஒன்றுபட்ட தன்மையே ஆகும் என்றும் கூறுவர். மேலும், செயல்முறை அறிவின் துணைகொண்டு மேற்கண்டவை வளர்ச்சி பெற்ற நிலையை அடையும்போது பண்பாடு எனக் கூறுதல் பொருத்தமாக இருக்கும் எனக் கூறுகிறார். (வே. ஆனைமுத்து, தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி, ப.345.)

மனிதனுடைய நடத்தையை ஒழுங்குபடுத்து கின்ற நெறிகளை அனைத்துச் சமூகங்களும் கொண் டிருக்கின்றன. அனைத்துச் சமூகமும் மனித நடத் தைக்குக் குறிப்பிட்ட தரங்களை அளிக்கின்றன. அந்த நடத்தைத் தரங்களே நெறிகள் எனப்படு வதாக வாழ்வியல் களஞ்சியம் வெளிப்படுத்து கிறது (வாழ்வியல் களஞ்சியம், தொகுதி -8, ப.854)

சந்தானம் திருமண வாழ்விற்குப் பின் பெரும் துயரத்திற்கு ஆட்படுகிறாள். இருப்பினும், பண் பாடு மீறாமல் சமூக ஒழுங்கமைவிற்கு ஏற்ப வாழ நினைக்கிறாள். அவளுக்குள்ள முரண்பாடுகள், ஹிஸ்டீரியா நோய், சண்டைகள் போடறது..., தற்கொலை முயற்சி எல்லாத்துக்குமே காரணம் அவளுடைய நிறைவேறாத செக்ஸ்தான். அவளுடைய அறிவுக் கூர்மை, கற்பனைகள் இரண்டுமா சேர்ந்து அவளுடைய செக்ஸ் பீலிங்ஸை ரொம்பக் கூர்மையா.... நாகரிகமா... வளர்த்திருச்சு ... அதுதான் அவளை அலக்கழிக்குது..... சின்ன வயதிலிருந்தே வளர்ந்த கட்டுப்பாடு, அத ஒட்டிய கற்பனைகள் அவள் கற்புங்ற எல்லைக் கோட்டைத் தாண்ட விடாது தடுத்தும் விட்டன எனத் த.ரா. சித்திரித்திருக்கிறார். (நிழல்.49,50)

சமூக மதிப்புகள் பல்வேறு புறக் காரணி களால் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. ஒரு தலை முறை விட்டுச் சென்ற ஒழுக்கமுறைகள், நடத்தை விதிகள் அடுத்த தலைமுறையினரால் காக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கதையில் வரும் கற்புநெறி மீறாத சந்தானலட்சுமி போன்ற வர்கள், பண்பாட்டு நெறிகளைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர். அதன் விளைவாக உளவியல் சிக்கல்கள் எழுகின்றன. ஆயினும், தன்னைச் சூழ்ந்த மக்களின் நலனின் அக்கறை கொண்ட இவர்கள் உயர்ந்த எண்ணங்களோடு பண்பட்டு வாழத் துடிக்கின்றனர். இதனைத் த.ரா. கதையில் தெளிவு படுத்தியிருக்கிறார். இதனைப் பின்பற்றுகிற நிலை யினால் மட்டுமே வலுவான பண்பாட்டுத் தளம் போற்றப்படும்.

தனிமனித நடத்தை குறித்த ஆராய்ச்சிகள், சமூகப் பண்பாடு, கலாசாரம் இவற்றின் வரை யறை மாற்றங்களைப் புலப்படுத்துகின்றன. ஒரு வரது ஆழ்மனைச் சிதைவும், ஆளுமைப் பிறழ்வும் அவர் தொடர்பான உறவுகளை, ஒட்டுமொத்த சமூகத்தைப் பாதிக்கின்றன. பெண் தன் உடல் மொழி குறித்து வெளிப்படையாகப் பேசமுடியாமல் மனதிற்குள்ளேயே புதைத்து மன அழுத்தம் ஏற்பட்டு உளவியல் நோய்க்கு ஆளாகி விடுகிறாள். வாழ்க் கையைத் தெளிவாகத் தீர்மானிக்கும் நுண்ணறிவு பெண்களுக்கு வேண்டும். உண்மையான காதல் உடல் சார்ந்தது மட்டுமல்ல; அது அன்புத் தேடல், பண்புப் பரிமாற்றம் என்பதை த.ரா. கதைகளின் உள்ளடக்கத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இக்குறுநாவல்கள் இரண்டும் உளவியல் அடிப் படையில் அமைந்தாலும் பெண்நோக்குப் பார் வையும், மனிதநேயமும் விரவிய படைப்புகளாகவும் இருப்பது தனுஷ்கோடியின் தனித்தன்மையாக மிளிர்கிறது.

Pin It