1917 ஆம் ஆண்டு சிம்லா கல்வி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட வட்டார மொழிகளைப் பயிற்றுமொழியாக்கும் திட்டம் குறித்து அன்றைய மைய அரசு சென்னை மாகாண அரசிடம் கருத்து கேட்டது. இக்கருத்தை அறியும் பொருட்டும், சென்னை மாகாணக் கல்வி குறித்து ஆராயவும் சால்டர் ஆணையம் அமைக்கப்பட்டது. அவ் ஆணையம்

“உயர்நிலைப்பள்ளிகளில் வட்டார மொழியே பயிற்றுமொழியாக பயன்படுத்தப்படவேண்டும். ஆங்கிலம், கணிதக்கல்வி ஆகியவை மட்டும் பள்ளிப்படிப்பின் நான்கு கடைசி ஆண்டுகளில் ஆங்கிலத்திலே கற்பிக்கப்படவேண்டும். உயர்நிலைப்பள்ளித் தேர்வுகளில் மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் தவிர பிற பாடங்களில் வட்டார மொழிகளிலோ ஆங்கிலத்திலோ எழுத அனுமதிக்க வேண்டும்” எனப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

கலைச்சொல்லாக்கப் போக்குகள் (1920)

அ.மாதவையா முதலானவர்களால் தொடங்கப்பெற்ற, தமிழர் கல்விச் சங்கத்தின் சார்பில் வெளிவந்த ‘தமிழர்நேசன்’ இதழில் அக்காலக் கலைச் சொல்லாக்கப் போக்குகளை அடையாளப்படுத்தும் வகையில் வெளிவந்த குறிப்பு வருமாறு:

“நாம் தேட வேண்டிய பிரதிபதங்களைத் தனித்தமிழ் வேர்களினின்றே அமைத்துக் கொள்ள வேண்டுமென்றே சிலர் வற்புறுத்துகிறார்கள். தமிழருக்கு சகோதர பாஷையிலிருந்து வரும் வட மொழியிலாவது அப்பிரதிபதங்களை தேடிக் கொள்ள வேண்டுமென்று சிலர் துணிகின்றனர். வேறு சிலர் வீண் முயற்சி ஏன்; உலகெங்கும் பரவிவரும் ஆங்கில மொழியை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா? என்று கேட்கின்றனர். இதைப்பற்றி நாம் ஒருவித தீர்மானத்தைக் கொள்ள வேண்டும். அப்படியாற்றான் பிரதிபதங்கள் அமைப்பது சற்றே எளிதாகும்.”

இக்காலகட்டத்தில் கலைச்சொற்களை தமிழ்ச் சொற்களின் வேர்களிலிருந்து உருவாக்க வேண்டும், வட மொழியிலிருந்து ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆங்கிலச் சொல்லை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மூன்று போக்குகள் கலைச் சொல்லாக்கத்தில் இடம் பெற்றிருந்ததை மேற்காட்டிய பகுதி புலப்படுத்துகிறது.books 670வட்டார மொழிகளில் தேர்வுகள்

இதே காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகப் பேரவை (senate) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை வட்டாரமொழியில் எழுதலாம் என்ற பரிந்துரையினை வழங்கியுள்ளது. 1921இல் அமைக்கப்பட்ட அரசாங்க கல்வி மறுசீரமைப்புக் குழு (Government Education Re organisation Committee) வட்டாரமொழிக் கல்வி, வட்டார மொழிகளில் தேர்வு எழுதுவது குறித்தான கருத்துக்களை வெளியிட்டுள்ளது

சென்னை இம்பீரியல் அவையில் தொடர்ந்து நடந்துவந்த பயிற்றுமொழி தொடர்பான விவாதங்களும், சிம்லா கல்வி மாநாட்டுத் தீர்மானங்களும், சால்டர் ஆணையப் பரிந்துரைகளும், அரசாங்கக் கல்வி மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளும், தனியார் பாடநூல் தயாரிப்பாளர்களிடையே ஏற்பட்ட கலைச்சொல்லாக்க சீர்மையின்மையும் புதிதாகக் கலைச்சொல்லாக்கக் குழு உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.

சென்னை மாகாண அரசு கலைச்சொல் குழு (1923)

சென்னை மாகாண பள்ளிக் கல்வித் துறைக்குப் பொறுப்பு வகித்த ஆர்.ஜி.கிரிவ் வட்டாரமொழிகளில் கலைச்சொல்லாக்கக் குழு உருவாக்க வேண்டியதன் தேவையை வற்புறுத்தி, கலைச்சொல்லாக்கக் குழு உறுப்பினர்களின் பட்டியலுடன் அன்றைய அரசு செயலருக்குக் கடிதம் ஒன்றை 12.12.1923இல் எழுதினார். அக்கடிதம் வருமாறு:

“தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளின் வகுப்புக்களுக்கு பயன்படும், மாகாணத்தில் கல்வி கற்பிக்கப்படும் வட்டார மொழிகளின் தரப்படுத்தப்பட்ட கலைச்சொல் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் பட்டியல் மாகாணத்தின் வட்டார மொழிகளின் வழி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பள்ளிகளில் பயன்படும். மேலும் அறிவியல் நூல்களை எழுதுபவர்களுக்கும் நூல் வெளியீட்டாளர்களுக்கும் பயன்படும். அரசு இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன். எனவே இக்கடிதத்துடன் கலைச்சொல்லாக்கக் குழு உறுப்பினர்களின் பட்டியலை அனுப்பியுள்ளேன்”

போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு ஆகியவைகளைத் தவிர்க்கும் நோக்கில் பெரும்பாலும் சென்னையில் பணியாற்றுபவர்களை மட்டுமே இப்பணியில் ஈடுபடுத்த கிரிவ் பரிந்துரை செய்துள்ளார். மேலும்,

“குழுவில் கூடுதல் உறுப்பினர்களாக திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பணியாற்றும் பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார், கோவை வேளாண்மைக் கல்லூரியில் பணியாற்றும் தாவரவியல் விரிவுரையாளர் ராவ்பகதூர் ரங்காச்சாரியார் ஆகிய இருவருக்கு மட்டும் அரசு பயணப்படி கொடுத்தால் அவர்களையும் இக்குழுவில் இணைத்துக் கொள்ள வாய்ப்புண்டு” எனவும் அப்பரிந்துரையில் எழுதியிருந்தார்.

கலைச்சொல்லாக்கக் குழுவைக்கொண்டு தயாரிக்கப்படும் பட்டியலை கல்விநிலையத் தலைவர்களுக்கு அனுப்பி, மீண்டும் இப்பட்டியலைத் திருத்தி வெளியிடவும் எனப் பரிந்துரை செய்திருந்தார். இத்திட்டப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே குழுக்களை நியமிக்கலாம் எனவும், உருது பள்ளிகளுக்கு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியப் பல்கலைக் கழகத்திடமிருந்து கலைச்சொற்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கிரிவ் தம் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கலைச் சொல்லாக்கக் குழு (1923) உறுப்பினர்கள்

(அ) கணிதம்

(1)          பி.வி.சிசு அய்யர், பேராசிரியர், மாநிலக் கல்லூரி.

(2)          சின்னத்தம்பி பிள்ளை, பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி.

(3)          வி.ரகுநாத ஐயர், ஆசிரியர் கல்லூரி சைதாப்பேட்டை.

(ஆ) வேதியியல், பௌதிகம்

(1) அனந்தபத்மநாத ராவ், பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை. (2) கே.சீத்தாராமையா அறிவியல் உதவியாளர், கிறித்தவக் கல்லூரி.

(இ) இயற்கை அறிவியல் (தாவர இயல், விலங்கியல், உடல் இயங்கியல், புவியியல்)

(1) கே.ராமுன்னிமேனன், பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம் (2) நாராயணராவ், பேராசிரியர், மாநிலக் கல்லூரி. (3) டி.ஏகாம்பரம், ஆசிரியர் பள்ளி. சைதாப்பேட்டை. (4) டாக்டர் எம்.சி.கோமன்.

(ஈ) வரலாறு, நிலவியல்

(1) சி.பி.வெட்கட்டராம ஐயர், ஆசிரியர் கல்லூரி சைதாப்பேட்டை.

(2) பொதுவானது: (1) குப்புசாமி சாஸ்திரி, பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை (2) அனவர்த நாயகம் பிள்ளை, தமிழ் அகராதி குழு. (3) எல்.டி.சுவாமிக்கண்ணு பிள்ளை. ஐ.எஸ்.ஒ (4) பிரநாத்தரதிரஹர அய்யர், ஐ.எஸ்.ஒ (5) பஞ்சாபகேச அய்யர், பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி. மயிலாப்பூர் (6) அப்துற்றஹிம் சாகேப், துணை இயக்குனர், பொது அறிவுறுத்தல், சென்னை. (7) ஆர்.டபிள்யூ. ரோஸ், முதல்வர் அறிவுறுத்தல், சென்னை. (8) பி.வி.குறுவில்லா, அரசு மலையாளம் மொழிபெயர்ப்பாளர். (9) பி.சோமசுந்திர ராவ், அரசு தெலுங்கு மொழிபெயர்ப்பாளர். (10) கே.ஏ.வீரராகவாச்சாரியார், மாக்மில்லன் கம்பெனி. (11) டபிள்யூ. துரைசாமி அய்யர், லாங்மேன்ஸ் கீரீன் அண்ட் கோ. (12) கே.வி.லெஷ்மணராவ் பந்துலு, தலைமை ஆசிரியர், தெலுங்கு கலைக் களஞ்சியம், எக்மோர்.

அரசு ஆணை

கிரிவின் திட்டத்தை ஆராய்ந்த அரசு அவர் அளித்த அறிஞர்களின் பட்டியலையே ஏற்றுக்கொண்டு வட்டாரமொழிகளில் அறிவியல் கலைச்சொல்லாக்கக் குழுவை அமைக்க ஆணை வெளியிட்டது. அந்த ஆணை வருமாறு.

“பள்ளிக்கல்வி இயக்குநர் (Director of Public Instruction) அனுப்பிய திட்டத்தின்படி சென்னை மாகாணத்தில் முக்கிய நான்கு வட்டார மொழிகளில் ஆதாரபூர்வமான கலைச்சொற்களைத் தயாரிக்க குழு ஒன்றை அரசு நிறுவுகிறது.”

குழுவின் கூட்டங்கள்

குழுவின் முதல் கூட்டம் நடப்பதற்கு முன்பாகவே 23.05.1923ஆம் நாள் ‘குழு உறுப்பினர்களில் ஒருவரான பி.சோமசுந்தரராவ்காருவுக்குப் பதிலாக சி.பானுமூர்த்திகாரு நியமிக்கப்பட்டார்’. ‘குழுஉறுப்பினரான கே.வி.லக்ஷூமணராவ் பந்துலுவுக்குப் பதிலாக வெங்கடசுப்பையாகாரு நியமிக்கப்பட்டார்’. குழு உறுப்பினர் ‘வி.ரகுநாத அய்யருக்கு பதிலாக எஸ்.பாலகிருஷ்ண அய்யர் நியமனம் செய்யப்பட்டார்.’

கலைச்சொல்லாக்கக் குழுவின் முதல் கூட்டம் 01.09.1923ஆம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட புதிய உறுப்பினர்கள் குழுவில் உறுப்பினர்களாகத் தொடர்ந்து செயல்பட இசைவு தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பாலகிருஷ்ண அய்யர், வெங்கட சுப்பையாகாரு ஆகியோரின் நியமனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இரண்டாவது கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக ‘15.10.1923இல் பள்ளிக் கல்வி இயக்குநர் பா.வே.மாணிக்கநாயக்கரைப் புதிய உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ள கிரீவ்அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்’. மேலும் குழுவில் இடம் பெற்றிருந்த சட்டக் கல்லூரிப் பேராசிரியர் ஏ. பஞ்சாபகேச அய்யருக்குப் பதிலாக கா. சுப்பிரமணியப்பிள்ளையைச் சேர்த்துக் கொள்ள அவர் பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் ‘பத்தொன்பது உறுப்பினர்களை நியமனம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.’

“1932இல் சென்னை அரசாங்கம் கலைச்சொல் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு Chemistry, Physics, Mathematics, Natural Science, Physiology and Hygiene, Geography, History, Economics, Administration, Politics & Civil commerce ஆகிய துறைகளுக்கான ஏறத்தாழ 7400 கலைச்சொற்களை வெளியிட்டது.”

குழுவினர் உருவாக்கிய கலைச்சொல் பட்டியல்கள் வெளியிடப்பட்ட ஆண்டுகள் பின்வருமாறு.subject terms

1932இல் குழுக்கள் அமைக்கப்பட்டு அதே ஆண்டில் கலைச்சொல் பட்டியல்கள் வெளிவந்திருக்க வாய்ப்பில்லை.

1930ஆம் ஆண்டில் நடைபெற்ற இம்பீரியல் சட்டமன்றக்கூட்டத்தில் வட்டாரமொழிகளில் கலைச்சொற்களை உருவாக்கும் பணி தனியார் குழுக்களுக்குத் தரப்படுமா என உறுப்பினர் பாலசுப்பிரமணிய முதலியாரும், கே. கோடி ரெட்டியும் கேள்வி எழுப்பினர். அதற்கு சி. கோபாலமேனன், “அரசு இதுபோன்ற குழு ஒன்றை அமைத்துள்ளதையும், அக்குழுவின் மலையாளக் கலைச்சொற்களை ஆக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப் பட்டிருப்பதாகவும் கடினமானதாகையால் இது குறித்த தகவல்களைப் பெற புலமையுடையவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும் அவர்கள் கேள்விகளுக்கு அன்றைய முதல்வர் சுப்பராயன் பதிலளித்துப் பேசுகையில், “கோபாலமேனன் குறிப்பிட்ட கலைச்சொல்லாக்கக் குழுவைப்பற்றி அறிவேன். அக்குழுவின் செயலராக இருக்கும் கிருஷ்ணராவ் போன்ஸ்லே எனக்கு நண்பர். ஆகையால் அக்குழுவின் செயல்களைப் பற்றி நான் அறிவேன் என்றார். இக்குழு அரசுக்குத் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தால், மதிப்புமிக்க செயலைச் செய்துவரும் அவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படும்” என்றார்.

இக்குழு அளித்த கலைச்சொல் பட்டியல்கள் பற்றி குறிப்பு எழுதிய அதிகாரி, “திரு. சி. கோபாலமேனனால் சுட்டிக்காட்டப்பட்ட குழு பொதுக்கல்வித்துறை இயக்குநர் (Director of Public Instructions) ஆணையின்படி (1923) வட்டாரமொழிகளில் கலைச்சொற்களின் அதிகாரபூர்வப் பட்டியலைத் தொகுக்க அமைக்கப்பட்ட குழுவேயாகும். அண்மையில் அக்குழு தொகுத்தளித்த தொடக்கநிலைப் பட்டியலை D.P.L அரசுக்கு அனுப்பியுள்ளது. அரசாங்க மொழிபெயர்ப்பாளர்களால் சரிபார்க்க இப்பட்டியல்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன (1930).”

என எழுதியுள்ளார். சட்டமன்றத்தில் அன்றைய முதல்வரின் பதில், பிற உறுப்பினர்களின் பேச்சுக்கள், அதிகாரியின் குறிப்பு ஆகியவை 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குழு 1930 வரை தொடர்ந்து காலச்சுணக்கத்துடன் செயல்பட்டுள்ளதை உறுதி செய்கின்றன.

1932இல் அரசு வெளியிட்ட கலைச்சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.subject terms 1

அரசு கலைச்சொல் பட்டியல் எதிர்ப்பு

1932இல் வெளியிடப்பட்ட அரசாங்கக் கலைச்சொல் பட்டியலில் பெரும்பாலும் சமஸ்கிருதப் பெயர்களும், ஆங்கிலப் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆதலால் இப்பட்டியலுக்கு ஆசிரியர்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இது பற்றி சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரி முதல்வர் கூறியுள்ள கருத்து வருமாறு:

“அரசாங்கம் கலைச்சொற் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதிலுள்ள சொற்கள் நீளமானதாகவும் சமஸ்கிருதச் சொற்களாகவும் உள்ளதால் எளிமையாக பயன்படுத்த இயலவில்லை.”

ஆக வட்டார மொழிகளில் அறிவியல் பாடங்களை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பட்டியல், விமர்சனங்களைச் சந்தித்ததே தவிர அப்பட்டியலால் வேறு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை அறியமுடிகிறது.

- டாக்டர். சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It