தஞ்சைப் பகுதியில் ஒருவர் ஆனந்த விகடன் வார இதழ் ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் எழுதிய கதையை விகடன் வேறு ஒருவர் பெயரில் வெளியிட்டிருந்தது என்பது குற்றச்சாட்டு. அப்போது ஆனந்தவிகடனை எதிர்த்து வழக்கு போட முடியுமா என்று சில சிற்றிதழ்கள் துணுக்குகள் எழுதின. இது எண்பதுகளில் நடந்தது.

அப்போது ஆனந்த விகடனுக்கு எதிராக வாதாடியவர் டி. என். ஆர் என்று அழைக்கப்பட்ட இராமச்சந்திரன் ஆவார். இறுதியில் ஆனந்தவிகடன் தோல்வியடைந்தது

தஞ்சை வேதாந்த மடத்திற்குத் தானே தலைவராக வர வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது அச்செய்தி பரவலாய் பேசப்பட்டது. இந்த வழக்கில் சித்தாந்தம், வேதாந்தம் அறிந்தவர் மட்டுமே வாதாட முடியும் என்பது யதார்த்தம்.

டி.என்.ஆர் வாதாடினார். வெற்றி பெற்றார். இப்படியாக பல வழக்குகளில் வெற்றி பெற்ற புகழ் பெற்ற வழக்குரைஞர் டி.என்.ஆர்.

t n ramachandranதமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் கணிசமான அளவு கொடை வழங்கியவர்களின் பட்டியலில் வழக்குரைஞர்களுக்கு நிறைய இடம் உண்டு. வேதநாயகம் பிள்ளை, வ.உ.சி, ஜே.எம். நல்லுசாமி பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, ரா பி சேதுப்பிள்ளை, கா.சு.பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், சி.கே.சுப்பிரமணிய முதலியார் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் சேகரித்த தமிழறிஞர்கள் பட்டியலில் 26-க்கு மேற்பட்டவர்கள் தமிழ் அறிஞர்களாகவும் வழக்குரைஞர்களாகவும் வாழ்ந்ததை அறிந்தேன். சிலர் நல்ல வழக்குரைஞர்களாகவும் நல்ல தமிழ் அறிஞர்களாகவும் இருந்தனர். இவர்களில் சிலர் தமிழ் ஆர்வத்தால் வக்கீல் தொழிலை விட்டவர்களும் உண்டு.

இந்தப் பட்டியலில் நல்ல வழக்குரைஞராகவும் தமிழில் ஆழ்ந்த படிப்பும், அர்ப்பணிப்பும் உடையவர்களாகவும் இருந்தவர்களின் வரிசையில் டி. என்.ஆர். என்ற தில்லைத்தானம் நடராஜ அய்யர் ராமச்சந்திர அய்யர் (18 - 8 - 1934 - 6 - 4 - 2021 ) முக்கியமானவர்.

இதுபோலவே அடிப்பொடி என்ற பின்னொட்டு கொண்டவர்கள் சிலர் உண்டு. இவர்களில் கம்பன் அடிப்பொடியான சா.கணேசன் எல்லோரும் அறிந்த அறிஞர். சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ஆர் ஒருவர்தான். சேக்கிழாரின் பெரியபுராணத்திற்கு உரை எழுதியவரும் வாழ்க்கை முழுதும் சேக்கிழார் பற்றி செய்தி சேகரித்தவருமான சி.கே.சுப்பிரமணிய முதலியார் கூட தன்னைச் சேக்கிழார் அடிப்பொடி என்று வெளிப்படையாகக் கூறவில்லை. மற்றவர்களும் சொல்லவில்லை.

டி.என்.ஆர் வாழ்ந்த காலத்தில் பல்கலைக் கழகங்களிலும் தனித் தமிழ் அமைப்புக்களிலும் தமிழ் அறிஞர்களிடமும் பெரும் மரியாதைக்கு உரியவராக டி.என்.ஆர் இருந்தாலும் நவீன வாசகரிடமும் ஆசிரியர்களிடமும் பெரிய அளவில் அறிமுகமாகவில்லை. அவர் பெருமளவில் ஆங்கிலத்தில் எழுதியதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

 இவர் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பாளர். "பெருமளவில் சைவ நூல்களை மொழிபெயர்த்தவர்'.தமிழில் குறைவாக எழுதியவர் - இப்படி சில காரணங்களால் இவர் வாழ்ந்த காலத்தில் பெருமளவில் பேசப்படாதவராக இருந்திருக்கலாம்.

தஞ்சை வட கிழக்குப் பக்கம் ஒரு தெருவில் 50 எண் கொண்ட வீட்டில் ஊஞ்சலாடும் ஓசையும், பேச்சுச் சத்தமும் கேட்டால் சேக்கிழார் அடிப்பொடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று ஊகிக்கலாம். வீட்டின் உள்ளே சென்றால் சிவந்த மேனி, நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம். வாயில் வெற்றிலை பாக்கை சுவைக்கும் டி.என்.ஆர் ஐச் சுற்றி நண்பர்கள், புத்தகங்கள். அவர் பேசிக்கொண்டே இருப்பார்.

காவிரியின் வடகரையில் இருப்பது திருவையாறு. இதன் மேற்கே ஒரு கல் தொலைவில் திருநெய்த்தானம் உள்ளது. இப்போது இது தில்லைத்தானம் எனப்படுகிறது. இங்கே முதல் பராந்தகன் சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் உண்டு. நெய்யாடிய பாலாம்பிகை உள்ளார், தில்லைத்தானத்தைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களிலும் நடக்கும் திருவிழாக்களில் எடுக்கப்படும் வாகனங்கள் இந்த ஊருக்கு வரும்.

இந்த ஊரில் நடராஜ ஐயர் என்னும் செல்வந்தர் இருந்தார். மனைவி காமாட்சி. இவர்களுக்கு 14 குழந்தைகள். இவர்களில் டி.என்.ஆர் மூன்றாவது மகன். பிறப்பு (18.8.1934) டி.என்.ஆருக்கு இட்ட பெயர் சத்திய மூர்த்தி, பள்ளிக்கூடத்தில் ராமச்சந்திரன்,. தற்காலத்தில் பின்னர் தில்லைத்தான ராமச்சந்திரன் ஆனார். சுருக்கமாக டி.என்.ஆர்.

தந்தை செல்வந்தர் எஸ்.எம்.டி என்னும் பெயரில் பேருந்துக் கழகம் நடத்தினார். சொந்தமாய் நிறைய நிலங்கள் உண்டு அரிசியாலையும் வைத்திருந்தார். சிறந்த நிர்வாகி. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்தவர் டி.என்.ஆர்.

பள்ளிப்படிப்பு சொந்த ஊரில், இளமையில் ஆங்கிலத்தில் ஈடுபாடு. திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.காம் முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார்.

தந்தையின் கட்டாயத்திற்காக தஞ்சை நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டார். புகழ்பெற்ற வழக்குரைஞரின் மகள் கல்யாணியை மணந்தார், தந்தை இறந்தபின் (1967) பேருந்துக் கழகத்தைக் கவனித்துக் கொண்டார். ஆனால் தொழில் நஷ்டக்கணக்குக் காட்டியது. வக்கில் தொழிலில் கவனம் செலுத்தினார். 1994 க்குப் பின்னர் நீதிமன்றத்திற்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டார்.

டி.என்.ஆருக்கு நான்கு மக்கள். எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தந்தையிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்கள்.

டி.என்.ஆர் மொழி பெயர்ப்பாளராக உருவாவதற்கு திரிலோக சீதாராமன் சந்திப்பு முக்கிய காரணம். இது டி.என்.ஆரின் இருபத்தி ஏழாம் வயதில் நிகழ்ந்தது. இந்த இடத்தில் திரிலோக சீதாராம் பற்றி கொஞ்சம் அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

நவீன தமிழ் வாசகன் நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெம்ஸேயின் சித்தார்த்தா நாவலின் மொழிபெயர்ப்பின் மூலம் திரிலோக சீதாராமை அறிந்திருப்பான். இவர் உன்னதமான மொழிபெயர்ப்பாளர் என்பதற்கு இந்த நாவல் உதாரணம்.

திரிலோக சீதாராமன் (1917-1973) தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் கவிஞர். பாரதி பாடல்களைப் பரப்பியவர். ‘சிவாஜி', ‘கிராம ஊழியன்’ என்னும் இரண்டு இதழ்களை நடத்தியவர். பாரதியின் மனைவி செல்லம்மா கடையம் ஊரில் கஷ்டப்படுகிறார் என்பதை அறிந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றவர். செல்லம்மா பாரதியின் இறுதிக்காலத்தில் அவரைக் கவனித்தவர்களில் திரிலோகசீதாராமும் ஒருவர். "இவர் காமராஜின் நெருங்கிய நண்பர்" என்பது இன்னொரு செய்தி.

திரிலோக சீதாராமால் பெருமளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர். டி.என்.ஆர். கடைசி வரை இந்த பாதிப்பு இருந்தது. சீதாராம் நடத்திய சிவாஜி இதழில் டி.என்.ஆர் எழுதினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் இந்த இதழ் வந்தது. இந்த இதழில்தான் பாரதி, சேக்கிழார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தது.

டி.என்.ஆர். 1966 முதல் 2004 வரை ஆங்கிலத்திலும் தமிழிலும் 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் 34க்கு மேற்பட்ட புத்தகங்களையும் எழுதி உள்ளார். ‘சிவாஜி' ‘கணையாழி' போன்ற இதழ்களிலும் சைவ மாநாட்டு மலர்களிலும் எழுதிய கட்டுரைகள் முழுதும் தொகுக்கப்படவில்லை.

டி.என்.ஆர் தமிழில் எழுதிய நூல்களில் சேக்கிழார் (சாகித்திய அகாடமி 1995) சிவஞான முனிவர் (சாகித்திய அகடமி 1999) வழி வழி பாரதி (2000) சைவசித்தாந்த கையேடு போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

இவரது நூல்களில் பெரும்பாலும் சைவம் தொடர்பானவை அதிகம். மெய்கண்ட சாத்திரங்களான நெஞ்சுவிடு தூது, சிவப்பிரகாசம், திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார், கொடிக்கவி முதலாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

தருமபுர ஆதீனம் வழி ஆறாம் திருமுறை, கைவல்லிய நவநீதம், சைவ சித்தாந்த நிறுவனத்தின் வழி பதி பசு பாசம் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இவரது பெரியபுராணம் மொழிபெயர்ப்பை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் திருவாசகம் மொழிபெயர்ப்பை வெளியிட்டது.

பாரதியின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, பஞ்சரத்தின கீர்த்தனை உட்பட பல பாடல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றில் பல பாடல்கள் சிவாஜி இதழ்களில் வந்தவை.

டி.என்.ஆர் லண்டன் பி.பி.சியிலும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் பாரிஸ் தமிழ்ச் சங்கத்திலும் பேசச் சென்றிருக்கிறார். இவர் வெளிநாடுகளில் கவிதையைப் பற்றி பேசிய பேச்சு Tales and poems of South india  என்னும் தலைப்பில் குறுந்தகடாக வெளிவந்திருக்கிறது.

இவர் வாழ்ந்த காலத்தில் சோழநாட்டு வட்டாரத்தில் பெருமைப்படுத்தப் பட்டிருக்கிறார். இவரைப் பற்றி அப்துல்காதர் என்பவர் இயற்றிய சித்திரக்கவிகள் உண்டு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இது கொண்டாடப்பட்டது (2001) இந்த விழாவில் இவர் நீண்ட நேரம் உரையாற்றியிருக்கிறார். பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் இவரைப் பேசும்படி வேண்டிக் கொண்டனவாம்.

இவரை சைவ மடங்கள் மிகவும் பாராட்டி இருக்கின்றன. பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதி சித்தாந்த செம்மல் என்னும் விருதைப் பெற்றார். இதுபோன்று பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்

டி.என்.ஆர் பற்றிப் பேசி முடிக்கும் நேரத்தில் ஒரு விஷயத்தைக் கட்டாயம் சொல்லி ஆக வேண்டும் இவரது சொந்த நூலகம் பற்றி பலரும் வியந்து பாராட்டி இருக்கிறார்கள். இவரது தந்தையின் பெயரால் அமைந்த இந்த நூல் நிலையத்தில் 40,000 நூற்கள் உள்ளனவாம். இந்த நூல் நிலையம் வழி சில புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு முறை ஜெயகாந்தன் இவரது வீட்டுக்குச் சென்றபோது இவரது பெரிய நூல் நிலையத்தைப் பார்த்து மலைத்துப் போய் ‘உங்களுக்கு மேதமை எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொண்டேன்' என்றாராம்..

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It