அறுபத்து நான்கு பக்கங்களே உள்ள இந்நூல் தமிழ்ப் பதிப்பு வரலாற்றின் வெவ்வேறு தளங்கள் குறித்த கட்டுரைகளை - விவாதங்களைக் - கொண்டுள்ளது. ‘19 மற்றும் 20ஆம் நூற்றாண்டு பதிப்பு வரலாறு என்பது தமிழ்ச் சமுகம் சுயமறதியிலிருந்து விழித்துக் கொண்டதன் கதையாகும்’ எனும் ஓர்மையோடு ஆய்வுலகில் செயல்படும் இவர், எந்த ஒரு தனி ஆளுமையையும் ‘திருவுரு’வாகக் கொண்டாடுவதோ அல்லது முற்றாக நிராகரிப்பதோ இல்லை. இதற்கு உ.வே.சா. குறித்த கட்டுரையே சான்று. உ.வே.சா. பதிப்புகளுக்காக காட்டிய கடும் சிரத்தையைக் கொண்டாடும் அதேவேளையில், அக நானூறு பதிப்பிக்கப்படாமல் இருப்பதில் அவர் காட்டிய ‘அக்கறை’ யையும் விமர்சிக்கத் தவறவில்லை. மேலும் உ.வே.சா. புலமைத் தன்மையுடன் கூடிய உரையாசிரியர் மரபிலிருந்து செயல்பட்டதன் சாதக பாதகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக பெயரறிடப்படாத உரையைப் ‘பழையவுரை’ என அவர் பதிவு செய்வதில் உள்ள மனநிலையைத் தர்க்கபூர்வமாக விமர்சித்துள்ளார்.

தொடக்ககாலத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்களைப் போல் இன்று நாம் பதிப்பிப்பதில்லை. இடைப்பட்ட காலத்தில் பதிப்பு நுட்பங்கள் வளர்ந்துள்ளன. இதனை 19ஆம் நூற்றாண்டில் சுவடியிலிருந்து அச்சாக்கம் பெற்ற நூல்களைக் கொண்டு இவர் விளக்குகிறார்.

 

நூல் பதிப்பும் நுண் அரசியலும்

ஆசிரியர்: அ. சதீஷ்

வெளியீடு: புலம் பதிப்பகம் சென்னை பதிப்பு: 2010

விலை ரூ. 40

Pin It