jayakanthan 439

(சோவியத் புத்தக கண்காட்சியை ஜெயகாந்தன் திறந்து வைக்கிறார். உடன் USSR நடராஜன்)

எழுத்துலக வேந்தரும், என்னரும் நண்பருமாகிய பத்மபூஷன் டாக்டர் ஜெயகாந்தன் அவர் களது தோற்றம், வளர்ச்சி, இலக்கியம், எழுத் துலகப் பயணம் பற்றி இன்றைய தினம் பலரும் பலகோணங்களில் எழுதி வருகிறார்கள். நான் அவருடைய 40 ஆண்டுகால நண்பனாக இருந் தாலும் கடந்த எட்டு ஆண்டுகளாக அவரது உற்ற துணையாக, உடன் பிறவா சகோதரனாக, உதவி யாளராக, பெறாத ஒரு பிள்ளையாக இருந்து அவருக்குப் பணிவிடை செய்கின்ற நல்வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில் என்னுடைய கோணத்தில் திரு.ஜெயகாந்தனைப் பற்றிய சில நினைவுகளை வாசகர்களிடையே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சிங்கநிகர் JK-இன் சிம்ம கர்ஜனை அனைவரும் அறிந்ததே! வேகமானவர்; விவேகமானவர்; தனக்கே உரித்தான தனித்தன்மை கொண்டவர்; எதற்காகவும் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச அறியாதவர்; யாருக்கும் வளைந்து கொடுக்காதவர். கவியரசு கண்ணதாசன் கூறியது போல்ஜெயகாந்தன் ஒரு நிமிர்ந்த தென்னை.”

தமிழில்எழுத்துஎன்ற சொல்லுக்கு எழுச்சி யோடு கூடியதொரு கனத்த மரியாதையைப் பெற்றுத் தந்தவர் இவர்.

ஓர் எழுத்தாளராக, கதாசிரியராக, கவிஞராக, கலைஞராக, பேச்சாளராக, அரசியல்வாதியாக, சமூகப் போராளியாக, முற்போக்குச் சிந்தனை யாளராக எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நேர்மை யான மனிதராக எனப் பன்முகம் கண்ட நன்மகனாக விளங்கியவர் திரு. JK. இவரது விரிந்த பார்வையும், விசாலமனமும் இவருள் சமுதாயச் சிந்தனையை விதைத்தது எனலாம். இவர் எழுத ஆரம்பித்த பிறகு தான் எழுத்து பெருமை பெற்றது; வார்த்தை வளம் பெற்றது. இவரது நடை அதிரடி நடை என்றாலும் அதில் ஒரு இனிமை நயம் இழையோடு வதைக் காணலாம். இவரது படைப்புகள் ஒவ் வொன்றும் இருள்நீக்கி வெளிச்சம் காட்டுவது போல் அமைந்திருக்கும். பெண் கல்வி, பெண்ணிய விடுதலை, பெண்களின் சுதந்திர உணர்வு பெருக வேண்டும். பெண்கள் பல்துறைகளிலும் முன் னேற்றம் காணவேண்டுமென்பதில் அக்கறை காட்டியவர்.

இவர் எந்த அளவிற்கு ஈடுபாட்டோடு தனது படைப்புகளைத் தந்தாரோ, அதே ஈடுபாட்டோடு அவரது ரசிகர்களும், வாசகர்களும் அவற்றை ரசித்துப் படித்தனர் என்பதுதான் அவரது எழுத்தின் வெற்றி! படிக்காத மேதையாகிய இவரது படைப்பு களை ஆய்வு செய்து பட்டம் பெற்றோர் மிகப் பலர்.

துவக்க காலத்தில் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதி வந்த இவர் ஒரு காலகட்டத்தில் மேல் தட்டு வர்க்கத்தினைப் பற்றியும் எழுத ஆரம் பித்தார். தான் எழுதும் எழுத்துக்கு உயிர் தந்து அதன் மூலம் உயிரோட்டமுள்ள கதாபாத்திரங் களைப் படைத்து, வாசகர்களை கதாபாத்திரங் களோடு கைப்பிடித்து அழைத்துச் செல்வதில் வல்லவர் ஜெயகாந்தன்.

சாகித்ய அகாடமி, சோவியத் நாடு நேரு பரிசு, பத்ம பூஷண், ஞானபீடம் உள்ளிட்ட மிக உயரிய விருதுகளைப் பெற்ற இவரிடம் கவிப்பேரரசு வைரமுத்து மிகுந்த பேரன்பு கொண்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக ஜெய காந்தன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நாட்களில் சிங்கத்தின் சீற்றம் சற்று தணிந்து அமைதியான ஜெயகாந்தனை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. தனது வசீகர எழுத்துக்களால் கோடானு கோடி எழுத்தாளர்களைத் தன்னோடு கைப்பிடித்து அழைத்துச் சென்ற JK அவர்களை கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகக் கைப்பிடித்து நான் முக்கிய விழாக் களுக்கும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்வது வழக்கம். பெரும்பாலும் எனது காரின் முன் இருக்கையில்தான் அமர்ந்து வருவார்.

இவர் ஐந்தாறு ஆண்டுகளுக்குமுன் உடல் நலம் சற்று கூடுதலாக பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களது கனிவான மருத்துவ உதவி மூலம் உயிர்பிழைத்து நேரில்வந்தார். அப்போதே அவரதுசபை” (மாடியில் கொட்டகை) கலைக்கப் பட்டது. அன்றிலிருந்து அவரது மறைவு வரை சைவ உணவு வகைகளை மட்டுமே உட்கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து JK மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார்.

20 ஆண்டு களாக அதிகமாகப் பேசுவதையும், மிக அதிகமாக நண்பர்களைப் பார்ப்பதையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். மூன்று வேளையும் மித மான உணவு, காலை மாலை காப்பி அருந்துதல், டி.வி. பார்ப்பது, ஒரு சில நண்பர்களைச் சந்திப் பது, ஓய்வு நேரத்தில் சிறிது படிப்பது என தனது ஒருநாள் திட்டங்களை வகுத்துக் கொண்டு அதன் படி மிக அமைதியாக ஆனால் மிகுந்த மனஉறுதி யுடன் செயல்பட்டு வந்தார் JK. அருகிருந்து பல ஆண்டுகள் அவரோடு பழகியவன் என்ற முறை யில் முன்னைவிட அண்மைக் காலத்தில் JK-யிடம் இத்தகு வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

ரஷ்யர்களை வியக்க வைத்த JK

1985-இல் எங்களது USSR Book Centre-ல் நடந்த இந்திய- சோவியத் நட்புறவு விழாவில், சோவியத் ரஷ்ய அதிகாரி திரு... உஹாவ் தலைமையில் இந்திய- சோவியத் நட்புறவு பற்றி தமிழில் உணர்ச்சிகரமான உரையாற்றிக் கொண்டிருந்தார் திரு.ஜெயகாந்தன்.

மக்கள் அவரது பேச்சை உள் வாங்கும் விதத்தைக் கவனித்த சோவியத் அதிகாரி அவருக்கு மொழிபெயர்க்கச் சொன்னார். நான் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, அவர் என்ன படித்திருக்கிறார்? ஆங்கிலத்தில் பேச மாட்டாரா? ஆங்கிலத்தில் பேசினால் நாங்களும் கேட்டு ரசிப்போமே என்றார். நான் அவரிடம் ஜெயகாந்தன் 5-ஆம் வகுப்பையே தொடவில்லை.

ஆனாலும் அழகாகப்பேசுவார் என்றேன். எங்கள் உரையாடலைக் கவனித்து என்னிடம் விவரம் கேட்ட JK உடனேஆங்கிலத்தில் ஆற்றிய அசத் தலான உரையைக் கேட்ட ரஷ்ய அதிகாரி உற்சாக மிகுதியில் எழுந்து நின்று, கைதட்டி, JK ஐக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார். அவையோரின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? (ஐந்தாம் வகுப்பு கூட படிக்காத ஒருவர் அசத்தலான ஆங்கிலத்தில் பேசியது அயல் நாட்டவரை அசர வைத்தது- படிக்காத மேதை அல்லவா நமது JK.)

டாக்டர் அப்துல்கலாம் அவர்களது அதீத அன்பு

ஜெயகாந்தன் அவர்களது 75ஆம் ஆண்டு விழா முதன்மை சிறப்பு விருந்தினராக மேதகு மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கலந்து கொண்டார்கள். JK நிகழ்ச்சிக்கு முன்பாக அன்று மாலையே ஆரளi ஹஉயனநஅல-இல் வேறொரு நிகழ்ச்சி. அதில் திரு.கலாம் அவர்களோடு திரு. ஜெயகாந்தனும் கலந்துகொண்டார். விழாவிற்கு என்னுடைய காரில் ஜெயகாந்தனை நான் அழைத்துச் சென்றிருந்தேன்.

அந்த விழா முடிந்து பாரதீய வித்யாபவனில் JK ன் 75-ஆவது விழா நிகழ்வு. அதற்குப் புறப்பட்ட போது JK அவர்களை கலாம் அவர்கள் நீங்கள் எப்படி வரப் போகிறீர்கள் என்று கேட்க அவர் நான் USSR நடராசன் காரில் வந்து விடுகிறேன் என்று சொல்ல, விழா நாயகர் நீங்கள்! நீங்கள் தனியாக வந்தால் போக்குவரத்து நெரிசலில் வரத் தாமதமாகும்! ஆகையால் என்னோடு என் காரில் வாருங்கள் என JK வை அன்போடு தன் னுடன் அழைத்துச் சென்ற காட்சியைக் கண்ட வர்கள் JK ன் மாட்சியையும், திரு. கலாம் அவர் களது உயரிய பண்பு நலனையும் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

தமிழுக்கு மரியாதை

ஜெயகாந்தன் அவர்களது 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயகாந்தனை அப்போதைய முதல்வர் மாண்பமை, டாக்டர் கலைஞர் அவர் களைச் சந்திக்க நான் அழைத்துச் சென்றிருந்தேன். லிப்டில் ஏறி மேலே சென்றால் வழக்கமாக தனது சோபாவில் அமர்ந்திருக்கும் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அங்கு இல்லை. எங்கே என்று எங்கள் கண்கள் தேடியபோது, நான் இங்கே நிற்கிறேன் என்று கூறிய மாண்பமை டாக்டர் கலைஞர் அவர்கள் கையில் ஒரு பொன்னாடையை வைத்துக் கொண்டு உதவியாளர்கள் உதவியுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்த நான், ஐயா சற்று உடல் நலம் சரியில்லாத தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்களே! எனக் கேட்ட போது, தமிழுக்குப் பெருமை சேர்த்த, தன் காந்த எழுத்துக்கள் மூலம் தமிழர்களை தலை நிமிரச் செய்த சிறந்த தமிழறிஞர், எழுத்துலக வேந்தர் வருகிறார் என்றால், நாம் அவரை எதிர்கொண்டு வரவேற்று வாழ்த்துவதுதான் தமிழுக்குச் செய்யும் மரியாதை எனக் கூறி JK அவர்களை இன்முகத் தோடு வரவேற்று, உபசரித்து வாழ்த்தி மகிழ்ந்தார் முதல்வர் கலைஞர். இன்னும் அந்த நிகழ்வு என் கண்களில் நிழலாடுகிறது!

பெண் ரசிகர்களின் பெருமைமிகு வரவேற்பு

எழுதிக் கொண்டிருக்கும் போதே சில எழுத் தாளர்களுக்குப் புகழ் கிடைப்பதில்லை. ஆனால் எழுதுவதை நிறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் JK ன் புத்தகங்களின் வாசிப்பு கொஞ்சம் குறையவில்லை; அவர்மீது மக்களுக் குள்ள நேசிப்பு பன்மடங்கு பெருகிவருவதை நான் பல இடங்களில் கண்கூடாகக் கண்டுவருகிறேன்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்புகூட நான் அவரை வடபழனியில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்ற போது அங்கு முன்னமேயே சிகிச்சைக்காக அமர்ந்திருந்த அகவை முதிர்ந்த மற்றும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் இவரையே கண் கொட்டாமல் பார்த்து எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து, என்னிடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் தானே இவர் என கண்களில் மகிழ்ச்சி ததும்பக் கேட்டு அவரை வணங்கிய போது இந்த மகத்தான மனிதரின் மாண்பை எண்ணி நான் வியந்து போனேன். இவரது அனைத்துப் படைப்புகளையும் படித்திருக்கிறோம். இவரது பரமரசிகை நாங்கள் என இவரைக் கண்ட மகிழ்ச்சியில் நோயின் தாக்கம் கூட குறைந்து விட்டதாகக் கூறி குதூகலித் தார்கள்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்

ஜெயகாந்தன் தனது வசீகர எழுத்துக்கள் மூலமாக கோடானுகோடி மக்களை தன்பால் ஈர்த்து கைப்பிடித்து அழைத்துச் சென்றவர். அத்தகு மாமனிதரை கடந்த 8 ஆண்டுகளாக கைப்பிடித்து விழாக்களுக்கும், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லுகின்ற ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

கையை மட்டுமல்ல அடிக்கடி அவர் காலைத் தொடும் பாக்கியமும் எனக்குக் கிடைத்திருக்கிறது! ஒவ்வொரு முறையும் எனது காரில் இருக்கையில் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அமர வைத்து, பின் அவரது இருகால்களையும் தூக்கி காரின் உள்ளே வைத்து அழைத்துச் செல் வேன். எழுத்து உலகமே வியந்து போற்றும் உன்னத மகான் திரு.ஜெயகாந்தனின் ஆசியை இவ்வாறு அடிக்கடி பெறும் வாய்ப்பு அவரது கடைசி காலத்தில் எனக்கு நிரம்பவே கிடைத்ததில் பெருமைப்படுகிறேன் நான்.

கண் கலங்கிய JK

எனது நாற்பதாண்டுகால நண்பர் ஜெயகாந்தன் அவர்களை அருகிருந்து கடந்த 8 ஆண்டுகளாக, உற்ற துணையாக, உடன்பிறவா தம்பியாக, உதவி யாளராக, பாதுகாவலராக, பெறாத பிள்ளையாக இருந்து அடிக்கடி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அருகிருந்து கவனித்துக் கொள்வேன். அத்தகு தருணங்களில், எனது கைகளைப் பிடித்துக் கொண்டு JK அவர்கள், USSR நடராசன், உங்களை நான் அடிக்கடி மிகுந்த தொந்தரவு செய்கிறேன்! உங்களுக்குத்தான் எத்துணை சிரமம்? கூப்பிட்ட போதெல்லாம் ஓடோடி வந்து எனக்கு உறுதுணை யாக இருந்து உதவிசெய்து வருகிறீர்கள்! என கண்ணீர் மல்கக் கூறியபோது, நான் JK அப்படி தாங்கள் சொல்லக் கூடாது. எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. உண்மையிலேயே மிகுந்த மனமகிழ்ச்சி யுடன் தங்களுக்கு பணிவிடை செய்கிறேன். அது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு. பாக்கியம். இதனை நான் தனிமனிதனாகச் செய்யவில்லை. தமிழ்ப் பேருலகத்தின் பிரதிநிதியாக நின்று அனைவரது சார்பாகவும் தான் செய்து வருகிறேன் என்று JK அவர்களை நான் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்! சிம்மத்தின் இதயத்திலிருந்து சின்னதோர் கசிவு! கனிவு!

கால்கடுக்க நின்ற JK

தன்வீட்டுத் திருமணத்தில் கூட இவ்வளவு நேரம் மேடையிலே நின்றிருப்பாரோ என எண்ணுகின்ற வகையிலே திரு.ஜெயகாந்தன் அவர்கள் 2011-இல் சென்னையில் நடைபெற்ற எங்கள் மகன் ககாரின்- நிவேதா திருமண வரவேற்பில் தனது உடல் நலனைக் கூட பொருட்படுத்தாது எங்கள் பால் உள்ள உண்மையான அன்பின் காரணமாக எழுத்து இமயம் பட்டு வேட்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் சகிதமாக வந்திருந்து, மேடையில் மணமக்களோடு சுமார் 4 மணி நேரம் கால்கடுக்க நின்று வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் எங்கள் சார்பாக வரவேற்று மகிழ்ந்ததை வந்திருந்த அத்துணை பெருமக்களும் ஆச்சரியத்தோடு பார்த்து அதிசயித்துச் சென்றனர்.

USSR- 60

மணிவிழா என்பது அனைவருக்கும் நடக்கும். ஆனால் எனது மணிவிழாவை, தான் மணிவிழாத் தலைவராகப் பொறுப்பேற்று, அனைவரையும் அழைத்து, அன்போடு உபசரித்து, மணியான விழாவாக, மகத்தான ஒரு விழாவாக, மண்ணுலகில் இப்படி ஒரு மணிவிழா நடந்திருக்குமா எனப் பிறர் எண்ணுகின்ற வகையிலே நடத்திக் காட்டினார் எழுத்துலக வேந்தர் பத்மபூஷன் டாக்டர் .ஜெய காந்தன் அவர்கள். கவிப்பேரரசு வைரமுத்து, தோழர் நல்லகண்ணு, ரஷ்யதூதர் நிக்கோலாய் லிஸ்டபடோவ், நல்லி குப்புசாமி செட்டியார், பட்டர்பிளை லட்சுமிநாராயணன், IOB நம சிவாயம், S.P. முத்துராமன், அவ்வை நடராசன், ..அறவாணன், கங்கை அமரன், நடிகர் பாண்டிய ராஜன், நீதியரசர் வள்ளிநாயகம், அமெரிக்க அமைச்சரின் பிரதிநிதி மற்றும் டாக்டர் ஆறு. அழகப்பன் என தமிழகத்தின் தலைசிறந்த பிரமுகர் களையெல்லாம் மேடைக்கு அழைத்து வந்து வாழ்த்தி எங்களைப் பெருமைப்படுத்திய பெருந் தகை JK அவர்கள்.

இல்லம் வந்து சிறப்பித்த எளிமையின் சிகரம் JK

கோடானுகோடி ரசிகர்களைக் கொண்ட JK அவர்கள் சபையில் நண்பர்களைச் சந்திப்பார். வெகுசில நண்பர்களின் வீடுகளுக்கு மட்டுமே செல்வார். அதுவும் ஓரிருமுறை மட்டுமே!

ஆனால் 2008 மற்றும் 2011-2012 ஆண்டுகளில் அவர் உடல்நலம் சற்று தேறி வந்த காலகட்டத் திலே அவருடைய அணுக்கத் தொண்டனாகி இருந்த எனது அன்பு அழைப்பை ஏற்று ஒருசில ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் இல்லம் வருவார். காலையில் சென்று அழைத்து வருவேன். காபி அருந்திவிட்டு வருகை தந்திருக்கின்ற எனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அவரது அபிமானிகளிடமும் ஓரிரு மணி நேரங்கள் பேசிக் கொண்டிருப்பார்.

பிறகு 1 மணி அளவில் தனக்குப் பிடித்த சைவ உணவை ரசித்து ருசித்துச் சாப்பிடுவார். பிறகு மாடிக்கு அழைத்துச் சென்று அவரை ஓய்வெடுக்கச் செய்வேன்! மாலை 4 மணி அளவில் கீழே இறங்கி வருவார். சுவையான ஒரு பில்டர் காபியை அருந்திய பின் சிறிது நேரம் அளவளாவிவிட்டு வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்பார். கொண்டுவிட்டு திரும்புவேன். இது ஒருமுறை இருமுறை அல்ல! பலமுறை நிகழ்ந்திருக்கிறது!

சில நேரங்களில் JK அவர்கள் தலைமையில் இந்திய-ரஷ்ய கலாசார கழக கூட்டங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் எங்கள் இல்லத்தில் நடை பெறுவது வழக்கம்.

சபைக்குதவா USSR நடராஜன்

எனது 40 ஆண்டு கால நண்பர் திரு ஜெயகாந்தன் அவர்களுடன் 2007-ஆம் ஆண்டிலிருந்து அவரது இறுதி மூச்சு வரை உடனிருந்து கவனித்து வந்த பாக்கியம் பெற்றவன் நான்.

ஆனால் அவரது சபை நிறைந்திருந்த காலங் களில் நான் ஒருநாளும் சபையில் முழுமையாகக் கலந்து கொண்டதில்லை. 1980-1990களில் ஏதாவது விழாக்களுக்கு JK- அழைத்து சபைக்குச் செல் வேன். சபை எனக்கு அலர்ஜி என்பதனை அறிந்து வைத்திருந்த JK உடனடியாக நான் விழாவிற்கு கேட்ட தேதியைக் கொடுத்து கிளம்புங்கள் நட ராஜன் என வழியனுப்பி வைத்து விடுவார். எனவே நான் அவ்வப்போது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே சபையில் ஐக்கியமாவேன். (அவரது பிறந்த நாள் நிகழ்வுகள் விதிவிலக்கு- சில மணி நேரங்களில் அவருடன் சபையில் இருப்பேன்.)

இறுதி மரியாதை

யாரையும் மதிக்காதவர், எவருக்கும் தலை வணங்காதவர், கர்வம் படைத்த கனத்த மனிதர் என இவரை விமர்சனம் செய்தவர்கள் கூட இவர் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதைப் பார்த்து இலக்கிய உலகமே வியந்து பார்த்தது!

தமிழகத்தில் அத்துணை அரசியல் தலை வர்கள், திரைத்துறை பிரபலங்கள், எழுத்துலக ஏந்தல்கள், பல்துறை சார்ந்த சான்றோர் பெரு மக்கள், திரளாக அவரது ரசிகப் பெருமக்கள் என ஆயிரக்கணக்கில் சாரிசாரியாக வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். மறைந்தும் மறையாமல் இன்னும் நம் எல்லோர் மனங்களில் மலர்ந்து நிற்கிறார் JK என்பதே உண்மை!

கடைசி நாட்கள் கண்களால் பேசிய JK

JK அவர்கள் சற்று உடல்நலம் குன்றியிருந்த கடந்த சில வருடங்களாக, நூற்றுக்கணக்கானோர் திரு. ஜெயகாந்தனைச் சந்திக்க வேண்டும் என என்னிடம் வைத்த வேண்டுகோளை அவரது உடல் நலன் கருதி என்னால் நிறைவேற்ற இயல வில்லை. ஆனாலும் இயன்றவரை திரு JK அவர் களது அனுமதி மற்றும் அவரது வீட்டவர் அனுமதியுடன் பல்துறை சார்ந்த பிரமுகர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். சந்திப்பின் போது நானும் உடன் இருப்பது வழக்கம். அதுவே JK ன் விருப்பம்!

கடந்த சில மாதங்களில் அவரைச் சந்தித்த முக்கிய நண்பர்களுள் சிலர், மேனாள் மத்திய நிதி அமைச்சர் திரு.. சிதம்பரம் அவர்கள். தனதுஎழுத்துஇயக்கத்திற்கு JK யிடம் ஆசி பெற்றுச் சென்றார். பத்மஸ்ரீ நல்லிகுப்புசாமி செட்டியார் தனது 75 வது பிறந்த நாளுக்கு பட்டுவேட்டி- பட்டுப்புடவை, பழங்கள் என பலத்த வரிசைகளோடு வந்து JK -யைச் சந்தித்து ஆசி பெற்றதோடு அவரது படைப்புகளிலிருந்து பல இடங்களை JKக்கு வாசித்துக் காட்டி அவரை வசீகரித்தார்.

JK பால் மிகுந்த அன்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரித்து நன்மைகள் பல JKக்கு செய்த பெருமகனார் நமது பெருமதிப்பிற்குரிய கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள்தான். JK வை கடைசியாகச் சந்தித்த பிரமுகரும் இவர்தான். JKன் கடைசி வாழ்த்துச் செய்தியைப் பெற்றவரும் கவிப்பேரரசு அவர்கள்தான்.

கடைசியாக ஜெயகாந்தன் அவர்களுக்கு வாழ்த்து சொன்னவர் நமது இளங்கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் திரு.விவேக் வேல்முருகன் அவர்கள்தான். அவர்காவியம்இதழில் JK -யைப் பற்றி கொடுத்திருந்த மிக நெகிழ்ச்சியான ஒரு பேட்டியைத்தான் JK க்கு அவர் மறைவுக்கு முன்னதாகப் படித்துக்காட்டி, அந்தப் பிரதியை அவர் கையில் கொடுத்தேன்! “ஜோடிக்கண்களால் கோடிக் கண்களை ஈர்த்தவர் ஜெயகாந்தன்” “எழுத்துலகின் சரித்திரத்தில் பிரம்மாண்டமான பெயர் திரு.ஜெயகாந்தன்என்ற வரிகளை நான் படிக்கும் போது, JK தனது கண்களாலேயே நன்றி தெரிவித்து கவிஞர் விவேக்கை வாழ்த்தினார்.

கடைசி 8 ஆண்டுகள் அடிக்கடி அவருடனேயே இருந்த எனக்கு அவரது கண்களின் பாஷை அத்துப்படி!

Pin It