பேராசிரியர் அ.சிதம்பரநாதன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியர்களுள் தனியாளுமையும், தனித்திறமும் வாய்ந்தவர், சிவந்த மேனியும் நெடி துயர்ந்த தோற்றமும் கொண்டவர். தம் தோற்றத் தைப் போன்றே புலமையிலும் வளமையும் உயர்வும் கொண்டவர். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரும்புலமை கொண்ட மிகச் சில பேராசிரியர் களில் ஒருவராக விளங்கியவர். ஆங்கிலப் பேச் சாற்றலில் முன்னணியில் இருந்தவர்; தமிழ்ப் பேரா சிரியர்களுள் முதன்முதலில் துணைவேந்தராக விளங்கிய பெருமை (பொறுப்பு) அவருக்கே உண்டு; நாவலர், சோமசுந்தர பாரதியாருக்கு மாணவராகவும், பேராசிரியர் வ.சுப.மாணிக்கத்திற்கு ஆசிரியராகவும் விளங்கியவர்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரைக்க அறியாதவர்; நெஞ்சில் பட்டதை அஞ்சாது உரைத்தவர்; எவர்க்கும் எதற்கும் தலைகுனியாதவர்; நிமிர்ந்து வாழ்ந்தவர்; நின்ற சொல்லர்; நீடு தோன்றினியர். அகத்தான் அமர்ந்து இனிது நோக்கும் மாண் பினர். அநீதியும் அநியாயமும் எங்குத் தோன்றி னினும் அஞ்சாது எதிர்க்கும் நோக்கினர். தமிழ்ப் பேராசிரியர்களில் முதன்முதலாகச் சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஆங்கிலம் தமிழ்ப் பேரகராதி வெளி யீட்டுக் குழுவின் தலைவராக விளங்கிய பெருமை கொண்டவர்;

chidambaranathan 420இத்துணைப் பெருமை வாய்ந்த பேராசிரி யரின் எழுத்துகளையும், உரைகளையும் ஒரு சேரத் தொகுத்து 109 தலைப்புகளில் 808 பக்கங்களில் இரு தொகுதிகளாக விழிகள் பதிப்பகம் அண்மையில் (2014) வெளியிட்டுள்ளது. நல்ல தாளில் சிறந்த அச்சில், பதிப்பு உத்தியோடு நூலை வெளியிட்டி ருப்பது நன்றாக உள்ளது. பதிப்பாசிரியர், பேரா சிரியர் இராம.குருநாதன் 15 பக்க அளவில், காத்திர மான நீண்ட ஆய்வு முன்னுரை அளித்துள்ளார். அம்முன்னுரை நூலுக்குள் பயணிக்கத் திசை காட்டி மரமாக உள்ளது. கட்டுரைகளையும், கட்டுரையாசிரியரின் அருமையையும் உணர அஃது உதவுகிறது. பதிப்பகத்தாரின் உரையும் பயனுள்ள தாக உள்ளது. இவற்றையடுத்து, நூலாசிரியரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பும், அவரைப் பற்றி மற்ற பேரறிஞர்கள் கூறிய கருத்துக்களை தொகுத்துத் தந்திருப்பது சிறப்பாக உள்ளது. இவையனைத்தும் வருங்கால ஆய்வுக்குப் பெரிதும் துணைநிற்கும், இவ்விரு தொகுதிகளில் சங்க இலக்கியம் குறித்து 11 கட்டுரைகளும், திருக்குறள் பற்றி 9 கட்டுரைகளும், சிலப்பதிகாரம் குறித்து 12 கட்டுரைகளும், மொழியைக் குறித்து 15 கட்டுரைகளும், பழ மொழிகள் பற்றி 4 கட்டுரைகளும், நாடகத் தமிழ் குறித்து 2 கட்டுரைகளும், பெருங்கதை குறித்து 2 கட்டுரைகளும், மணிமேகலை, கம்பராமாயணம் குறித்து முறையே ஒவ்வொரு கட்டுரையும், மொழி பெயர்ப்புக் கட்டுரை ஒன்றும், மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்றும், அவரது தனிக்கவிதை ஒன்றும், சட்டமன்ற மேலவையில் அவர் பேசிய 7 பேச்சு களும், ஒரு நேர்முகப் பேட்டியும் பற்பல தலைப்பு களில் பற்பல கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன; இவை அனைத்தும் அரிய கருத்துகளும், சீரிய சிந்தனைகளும் கொண்டவையாகும். இவ்விரு தொகுதிகளும் காலத்தினாற் செய்த பெரும் உதவி யாகும்.

சங்க இலக்கியம் குறித்தும் திருக்குறள் குறித்தும் அவர் எழுதியுள்ளவை திட்பமும் நுட்பமும் நிறைந் தவை. அவை அவரது ஆழ்ந்த புலமையை வெளிக் காட்டுபவை; அவரது பொருள் விளக்கும் தன்மை தனிச்சிறப்பு வாய்ந்தது. அவ்விளக்கங்களில் ஒரு பளிச்சிடும் தன்மை உள்ளது. அப்பளிச்சிடும் தன்மையே அவரது தனிச்சிறப்பு. அவரது தனித் தன்மையை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் உணர லாம். சொற்களின் வரலாற்றை ஆயும் போது அறிஞர் பலர் தமிழில் வடமொழி சொற்கள் என்று தலைப்பிட்டே ஆய்வார்கள்; ஆனால், இவரோ அவ்வாறு கொள்ளாமல், தமிழில் வட மொழிச் சொற்கள் எனத் தலைப்பிட்டு ஆய் கிறார். ஏனென்றால் அச்சொற்கள் எல்லாம் தமிழி லிருந்து சென்றதால் அவர் அவ்வாறு தலைப் பிட்டுள்ளார்; அதற்கான அறிவியல் அடிப் படையை உண்மைக் காரணத்தை அவர் எடுத்துக் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக அகத்தியர் என்ற சொல் அகத்தியம் என்ற வடசொல்லிலிருந்து வந்ததாகப் பலர் நம்புகின்றனர். இதனைப் பேரா சிரியர் மறுக்கிறார்.

அகத்தியம் என்பது அகத்தி என்ற கீரைவகைப் பெயரின் அடிப்படையில் தோன்றியது. இச்சொல் கன்னடம், துளு ஆகிய மொழிகளில் அகிசே என்றும், தெலுங்கில் அகசே என்றும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வட மொழியிலோ, அதனோடு தொடர்புடைய இந்திய மொழிகளிலோ அகத்தி என்ற சொல்லே இல்லை யாதலால், அச்சொல் தமிழிலிருந்தே வடமொழிக்குச் சென்றுள்ளதாகக் கூறுகிறார். அவ்வாறே அகில் என்ற மரச்சொல் வடமொழியி லிருந்து பிராகிருதத்திற்குச் சென்று பின்னர் தமிழுக்கு வந்திருப்பதாகப் பலர் கூறி வருகின்றனர். ஆனால் அகில் என்ற சொல், வடமொழியோடு தொடர்புடைய மற்ற இந்திய மொழிகளில் இல்லை யென்றும், அச்சொல் பழங்காலத்திலிருந்து தமிழில் மட்டுமே இருந்து வருகிறதென்றும், அதனால் தான் சங்க இலக்கியத்தில் “குடமலை பிறந்த ஆரமும் அகிலும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அச்சொல் தமிழிலிருந்தே வடமொழிக்குச் சென்றிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். வட மொழியில் உள்ள கூப என்ற சொல்லிலிருந்து தான் கூவல் என்ற சொல் பிறந்ததாகப் பலர் கருதுவதை அவர் மறுக்கிறார். கிணற்றினைக் குறிக்கும் கூவல் என்ற சொல்லும் வடமொழியோடு தொடர்புடைய பிறமொழிகளில் எங்கேயும் இல்லை யென்றும், அச்சொல் சங்க இலக்கியமான மலை படுகடாத்திலும் சிலப்பதிகாரத்திலும் பயின்றுள் ளதையும், சிலப்பதிகாரத்தில் “குடம்புகாக் கூவல்” என்று வருவதையும், இச்சொல் தமிழி லிருந்து வட மொழிக்குப் போய் ரிக்வேதத்தில் “கூப” என்று வழங்கப்படுவதை மேலைநாட்டறிஞர் பர்ரோ குறிப்பிட்டுள்ளதையும் அவர் நமக்கு விளக்கிக் காட்டுகிறார். இவ்வாறு பல சொற் களை இக்கட்டுரையில் ஆய்ந்திருக்கிறார். அவை சிறப்பாக ஆய்வான உள்ளது.

ஆங்கில அகராதிகளில் தமிழ்ச் சொற்கள் எனுங் கட்டுரையில் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் நுழைந்த தமிழ்ச் சொற்களையும் ஆய்ந்து காட்டு கிறார்; ஓலை எனும் தமிழ்ச்சொல் மலையாளத்தில் ‘ஓல’ என்றும், அங்கிருந்து போர்த்துக்கீசிய ஆங்கிலத் தொடர்பால் 1622-ஆம் ஆண்டு முதல் ஆங்கிலத்தில் ஒல்லா என்றும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறு கிறார். தமிழிலுள்ள பச்சிலை என்ற சொல், கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பச்சிலை என்று வழங்கப்படுகிறதென்றும், 1845 முதல் அச்சொல் ஆங்கிலத்தில் பட்சோலை என்று திரிந்துள்ளதாகவும் கூறுகிறார். கறி எனும் சொல் பண்டை சொல்லாகும். கறிக்கப்படுவது கறியாகும். விலங்குகள் கடித்துத் தின்பதைச் சங்க இலக்கியம் “மடப்பினை- வேளைவெண்பூ கறிக்கும் ஆளில் அந்தம் ஆகிய காடே” எனக் கூறும். இச்சொல் கன்னடத்தில் கரில் என ஆகி, பின்னர் போர்த்து கீசியத்திலும் கரில் என அழைக்கப்பட்டு, அடுத்து ஆங்கிலத்தில் கர்ரி என்று வழங்கப்பட்டுள்ளது. இச்சொல் 1898 -முதல் ஆங்கிலத்தில் வழங்கப் பட்டுப் பின்னர் ஐரோப்பிய மொழிகளிலும் கரில் என்றே வழங்கப்பட்டு வருவதாக நிறுவுகிறார் இவ்வாறே, கஞ்சி, கட்டுமரம், கயிறு, குயில், கூலி, தேக்கு, பிண்ணாக்கு, புங்கம், மாங்காய், வெட்டி வேர், வெற்றிலை போன்ற பல சொற்கள் ஆங்கிலத் திற்குச் சென்றுள்ளதையும் எடுத்துக்காட்டுவதோடு நில்லாமல் ஆங்கில அறிஞர்களாகிய தேக்கரே, சௌத்தே, ருட்யார்டு கிப்ளிங் தாம்ப்சன் போன்ற வர்களின் எழுத்துகளில் இந்தியச் சொற்கள் பற்பல பயின்று வந்துள்ளதையும் நமக்கு நினைவுறுத்து கிறார். பேராசிரியர் மொழியியல் அறிஞராகவும், ஆங்கிலம்- தமிழ் அகராதிக்குழுவின் தலைவராக இருந்ததாலும் பெற்ற அனுபவத்தால் இவ்வா றெல்லாம் விரிவாக ஆயும் திறன் பெற்றார் போலும் இவை இனிய விருந்தாக உள்ளது.

“சொல்லும் பொருளும்” எனுந்தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை படிக்கப்படிக்கத் தெவிட்டாத கட்டுரையாக உள்ளது; தமிழை நன்கு பயிலாதவனும் பயின்றவனும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய செய்திகள் அதில் பல உள்ளன; கற்றவர்கள்கூட, சொல்லைப் பொருளறிந்து பயன் படுத்தாத நிலை நம்மிடை உள்ளது; காட்டாக, ஓரிரு சொற்களை நோக்கினால் உண்மை புலப் படும். சினம் என்பதற்கும் சீற்றம் என்பதற்குமுள்ள வேறுபாட்டை விளக்கியுள்ளார். “நான் தூங்கிக் கொண்டிருந்தேன்; என்னை எழுப்பிவிட்டான்; அவன் மீது எனக்குச் சினம் உண்டாயிற்று” என்று கூறலாம்; ஆனால் சீற்றம் கொண்டேன் எனக் கூறக்கூடாது; சீற்றம் என்பது பெருங்கோபம். அடக்க முடியாத கோபம். சீறு என்பதிலிருந்து சீற்றம் பிறந்துள்ளது. தமிழரை இகழ்ந்த வட நாட்டு மன்னர் மீது செங்குட்டுவன் சீற்றம் கொண்டான் என்பது சரி. மற்றும் அழகு, எழில் என்னும் சொற்களுக்கிடையே பெரும் வேறுபாடு உள்ளது என்கிறார். அழகு என்று சொல்லுமிடங் களிளெல்லாம் எழில் என்று சொல்லிவிடக் கூடாது. அழகாயிருக்கும் உறுப்புகள் மேன் மேலும் அழகு பெறுவதாக இருந்தால் மட்டுமே எழில் எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். காட்டாக இளம் பருவத்தினளின் தோளைப் பற்றிப் பேசும்போது அத்தோளை எழிலுடைய தோள் எனக் கூறலாம். அறுபது வயதைக் கடந்த ஒருத்தியின் தோளை அழகுடைய தோள் எனலாம். ஆனால் எழிலுடைய தோள் எனக் கூறல் தகாது என்கிறார். எழில் எனும் சொல் எழுச்சியை உள்ளடக்கியதாகும். எழுகின்ற அழகு, வளர்கின்ற அழகு ஆகியதே எழில் எனப்படும். கல்லிலோ செம்பிலோ காணப்படும் அழகை எழில் எனக் கூடாது; குழந்தையின் அழகை, இளம்பெண்ணின் அழகை எழில் எனக் கூறலாம்; இந்த வேறுபாடு கற்றவர்களுக்கே தெரியாது. காரணம் அங்கு அழகு மிகுந்து தோன்றுகிறது.

இக்கட்டுரையில் மரபிலக்கணத்தில் பெரும் பாலோர் செய்யும் தவறுகளைப் பேராசிரியர் நமக்கு நுட்பமாகப் புலப்படுத்துகிறார். ஓடு என்ற சொல்லைப் பற்றியொரு மரபு உண்டு; அரசரோடு அமைச்சர் வந்தார் என்பது சரி; ஆனால் மாணவ ரோடு ஆசிரியர் வந்தார் என்பது சரியன்று என் கிறார். அதாவது ஓடு என்ற சொல்லை உயர்வுடை யாரோடு மட்டும் சேர்த்துச் சொல்வது நம் இலக்கண மரபு என்கிறார். இவ்வாறு பற்பல சொற்களுக்குப் பற்பல அரிய விளக்கம் அளித்து எழுதியிருப்பது நம்மை இன்பத்தில் ஆழ்த்து வதோடு நல்ல தெளிவையும் ஏற்படுத்துகிறது. மொழியைப் பற்றி மட்டும் 15க்கு மேற்பட்ட கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன; இவ்விரு தொகுதிகளிலும் தனிப்பொருளில் அமைந்த கட்டுரைகளில் மொழியைப் பற்றிய கட்டுரைகளே எண்ணிக்கையில் மிகுதி எனலாம். மொழியியலில் அவர் மிகுந்த ஆர்வம் உடையவர்; மொழியியலைக் குறித்து அவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் பல அடுக்குகளாகச் சில பெட்டிகளில் இருந்ததாகவும் (இதுவரை அச்சில் வராத கட்டுரைகள்) அவை, அவரது இறப்பிற்குப் பின் எப்படியோ தவறி விட்டதாக அவருக்கு அணுக்கமாக இருந்தவர்கள் கூறுவதைக் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ்ப் பேராசிரியர்களில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் இவரேயாவார்; அதுவும் யாப்பிலக்கணத்தைப் பற்றிய ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதிகளிலுள்ள மொழிக் கலை, மொழி, அன்னை மொழிப்பற்று, மொழி- மொழி- மொழி போன்ற கட்டுரைகளும், வேறு சில இலக்கணக் கட்டுரைகளும் அவரது மொழி யியற் புலமையை விளக்குவனவாகும்.

சிலப்பதிகாரம் அவர் நெஞ்சைக் கொள்ளை கொண்ட காப்பியமாகும்; அவரைச் சிலப்பதி காரச் செம்மல் என்றே போற்றலாம். அவர் எழுதி யுள்ள சிலப்பதிகாரக் கட்டுரைகள், கலைநயம் ததும்பும் கட்டுரைகளாகும். படிக்கப் படிக்கத் தேனூறும் கட்டுரைகளாகும். இத்தொகுதிகளி லுள்ள இளங்கோவின் இன்கவி, சிலம்பின் வென்ற சேயிழை போன்ற கட்டுரைகளின் தலைப்புகளும் உள்ளடக்கமும் அக்காப்பியத்திடத்து அவர் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டையும், அவரது தேர் திறனையும் வெளிக்காட்டுபவையாகும். அக்கட்டு ரைகள், பல நூல்களில் சிதறியிருந்ததால் பலருக்கு அவரது சிலப்பதிகாரப் புலமையை அறிதற்குச் சற்று அரிதாக இருந்தது. இத்தொகுதிகள் அக் குறையை நீக்கி, வாசகர்களுக்கு அரிய விருந்தைப் படைத்துள்ளன; வாசகர்கள் இக்கட்டுரைகளை முதலில் படிப்பது நன்று; காரணம், அங்கு மலைத் தேன் என்னும் சிலம்புத்தேன் உள்ளது; உடனே முந்துங்கள்.

இத்தொகுதிகளில் பழமொழியைக் குறித்து நான்கு கட்டுரைகள் உள்ளன. அவை வித்தியாச மான கட்டுரைகளாகும். அவை உண்மையான ஆய்வு அடிப்படை கொண்டவை. பழங்காலந் தொட்டு மக்களிடத்துப் பயின்று வருவதால் அவை பழமொழி எனப்பட்டது. அதற்கு முது மொழி என்னும் பெயருண்டு; அவை முதிர்ந்த அனுபவத்தால் வெளிவந்தவை. பழுத்த அனுபவங் கொண்டு பழகு தமிழில் சொல்லப்பட்டவை; பழங் காலத்தில் ஏதோவொரு காரணத்துக்காக அவை சொல்லப்பட்டவை; அவற்றுள் பல இன்றைக்குப் பொருந்தா என்று துணிச்சலாகக் கூறுகிறார். அம் முறையில் பல பழமொழிகள் இன்று பெரும் பாலும் ஏற்க முடியாதவையாக உள்ளன என் கிறார். குறிப்பாகப் பல அரையுண்மையுள்ளன வாகவே உள்ளன என்கிறார். இன்னுஞ்சில அரைக் கால் உண்மையுள்ளனவாக உள்ளன என்கிறார். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது ஒரு பழமொழி. சில முகங்களைப் பொறுத்தவரை இது உண்மையாக இருக்கலாம். ஆனால் எல்லா முகங்களுக்கும் ஒவ்வாது என்கிறார். பலருடைய முகத்தைக் கண்டு ஏமாந்து அவரது அகத்தைப் பற்றித் தப்பான எண்ணத்தை நம்மில் பலர் கண்டுள்ளோம். அதனால் இப்பழமொழி முழு வுண்மை ஆகாது என்கிறார். அதனால்தான் பிற் காலத்தில் முகத்தைப் பார்த்து ஏமாறாதே என்ற புதுமொழியும் வந்துவிட்டது.

‘அறிவுடையாரை அரசனும் விரும்புவான்’ என்பது ஒரு பழமொழி, அறிவுடையார் எல்லா ரையும் அரசன் விரும்புகின்றானா? இல்லை யென்றே சொல்லத் தோன்றுகிறது. மேலும், அரசனால் விரும்பப்படுகின்றவனே அறிவுடையன் என்றும், அரசனால் விரும்பப்படாதவன் அறி வுடையன் அல்லன் என்னும் பொருள் படுகிறதால், இம்மொழி அரையுண்மையைப் புலப்படுத்து வதாகவே உள்ளது என்கிறார். இவ்வாறு கற் றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழியும் இத்தகைத்தே என்கிறார். இவ்வாறே “நாள் செய்வது நல்லார் செய்யார்” என்ற பழ மொழியை விரிவாக ஆய்ந்து மூடத்தனத்தை எள்ளி நகையாடுகிறார். காட்டாக, ஒரே நாழி கையில் ஒரே முகத்தில் நிகழும் அனைத்துத் திருமணத் தம்பதியரும் நலமாக இனிதாக வாழ் கின்றனரா? இல்லையே! அவர்களுள் பலர் விதவை களாகவும், மலடுகளாகவும், இறந்தவர்களாகவும் உள்ளனரே! அவர்களுக்கு நாள் என்ன செய்தது? என்கிறார். மற்றும் நல்லோரைக் கொண்டு செய்யும் திருமணங்களில் அத்தம்பதியர் இனிது வாழாது இருக்கின்றனரா என்று நம்மால் கூற முடியுமா? இது குறித்து அவர் “ஐயகோ! நல்லார் நாளினும் தீயரோ? நல்ல நாளில் நடக்கும் எல்லாக் கல்யாணங்களும் சுகமுடையனவோ? நாள் நல்லது செய்யும் என்ற கொள்கை இக்காலத்துக்கு ஏலாது” என்கிறார். இவற்றைப் போன்றே நாற்பதுக்கு மேற் பட்ட பழமொழிகளை மீளாய்வு செய்திருப்பது சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. வாசகர்கள் நூலில் அவ்விருந்தை இனிது காணலாம்.

இத்தொகுதிகளில் உள்ள ‘தமிழ் காட்டும் உலகு’, ‘திருவள்ளுவர் உலகிற்கு வழங்கும் செய்தி’ ‘கம்பன் காட்டும் உளப்பாங்கு’ எனுந் தலைப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை; இவை சிந்தனை மிளிரும் தலைப்புகளாகும்; மிக விரித்து ஆழமாக ஆய்வதற்கும் இடம் தருபவை; பேராசிரியர் இவற்றைப் பற்றிச் சுருக்கமாகத்தான் எழுதி யுள்ளார். இவற்றில் இரண்டாம் கட்டுரை, மாஸ்கோவில் நடந்த கீழ்த்திசை மாநாட்டில் ஆங்கிலத்தில் எழுதிப் படித்த கட்டுரையின் தமிழாக்கமாகும். திருக்குறளின் நுட்பமான கருத்துகளை அப்பேச்சில் குறிப்பிட்டிருப்பதோடு, ‘ஒருபொழுதும் வாழ்வது அறியார்’ - 337 எனுங் குறளைக் கொண்டு வள்ளுவர் இன்றிருந்தால் போருக்கும் அணுகுண்டுக்கும் எதிராகப் பாடி யிருப்பார் என்று விளக்கி அங்குள்ளோரின் பாராட்டைப் பெற்றுள்ளார். பேராசிரியர் இத் தலைப்பை மேலும் விரிவாக ஆய்ந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்; மேலே குறிப்பிட்டுள்ள மூன்று தலைப்புகளையும், இக்கால ஆய்வாளர்கள், முனைவர் பட்டத்திற்கும், முதுமுனைவர் பட்டத் திற்கும் விரிவாக ஆராயலாம்; இத்தலைப்புகள் பொருளாழமும், காலப் பொருத்தப்பாடும் மிக்கன. இவற்றைப் போன்றே தாகூரும் தமிழிலக்கியங்களும் எனும் கட்டுரையுமாகும். இத்தலைப்பையும் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் முனைவர் பட்டத் திற்கு ஆராயலாகும். (தாகூர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது (1921) ஆஸ்திரிய நாட்டின் வியன்னா நகருக்குச் சென்ற போது அங்கு பத்திரிகை ஆசிரியர்களாலும், மற்றவர்களாலும் சூழப்பட்டு அவரை நோக்கி வினாக்கள் தொடுத்ததை பாரதியார் காலமாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், 25.8.1925-இல் தாகூரைச் சிறப்பித்து எழுதி யிருப்பதைப் பேராசிரியர் எடுத்துக்காட்டுகிறார். தாகூரின் தாக்குரவு பாரதியாரின் கவிதையிலும் கட்டுரையிலும் எவ்வாறு இடம் பெற்றிருக்கிறது என்பதை நுணுக்கமாகப் புலப்படுத்துகிறார். பாரதியார் கண்ணனைத் தந்தையாக, தாயாக ஏவலனாக, மனைவியாக, தோழனாகக் கருதிப் பாடியுள்ளது தமிழ் இலக்கியங்களை மட்டும் முன்னோடியாகக் கொள்ளாமல் தாகூரையும் முன்னோடியாகக் கொண்டுள்ளது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். பாரதியார் நாட்டுக் கல்வியைப் பற்றி எழுதியுள்ளது தாகூர் கவிதையின் மொழியாக்கம் என்றும்,

சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்

தின்று அவிந்தன நுங்கள் விளக்கெலாம்

-----------------------------

தீய நாச உறக்கத்திலிருந்து மருள்நீங்கி

எழுந்து களிப்பூட்டி ஒளி துணையாக

பண்டைக் காலப் பொருட்களைச் சென்று

தேடி அறிய வேண்டாமா?

எனும் கவிதை, தாகூரின் கவிதையுணர்ச்சியைப் பாரதியார் நன்கு புலப்படுத்தியுள்ளார் என்பதைப் பேராசிரியர் விளக்கிக் காட்டுகிறார். மேலும் கீதாஞ்சலியின் சில பாடல்களைக் கவிமணி மொழியாக்கம் செய்துள்ளதையும், பெரியசாமி தூரன் கீதாஞ்சலியில் சில பாடல்களை மொழி யாக்கம் செய்துள்ளதையும், நாமக்கல் கவிஞர், தாகூர் புகழை எட்டுப் பாடல்களில் பாடியுள்ள தையும், அவரின் கவிதைத் தாக்கம் நாமக் கல்லாரின் கவிதைகளில் எப்படிப் படிந்துள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இவ்ஆய்வு வருங்கால ஆய்வுக்குப் பெரிதும் துணை செய்யும்; வழிகாட்டும். இளம் ஆய்வாளர்கள் இப்பொருள் குறித்து விரிவான ஆய்வு செய்வது சிறந்தது.

பேராசிரியர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 1967க்கு முன்னால் ஓரிருவரைத் தவிரப் பலர் பாரதிதாசனைப் பற்றி எழுதத் தயங்கினர்; அஞ்சினர்; ஆனால், அக்காலத்தில் யாருக்கும் அஞ்சாமல் பல மேடைகளில், வகுப்புகளில் பேசியும் எழுதியும் வந்தவர் அவர்; அவர் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவர் அல்லர்; ஆனால் முற்போக்குக் கொள்கை கொண்டவர்; நீதியின் பக்கம் நின்ற நேர்மையர். இந்தப் பண்பே பாரதி தாசனைப் பற்றி அவரை எழுத வைத்தது எனலாம். மூத்த பேராசிரியர் ஒருவர் பாரதிதாசனின் ஒரு பாடலை ஒருபோது கிண்டல் செய்துள்ளார். பின்னால் பெரும் எதிர்ப்பு எழும்பியதும் பின் வாங்கினார். அடுத்து ஆங்கிலத்திலும், தமிழிலும் அவரைப் பற்றி அழகாக எழுதினார். அது

வொரு கதை. ஒரு சந்தர்ப்பத்தில் பாரதிதாசன், தம்மைப் பார்க்க வந்த மற்றொரு பேராசிரியரிடம், “தாங்கள் என் கவிதையைப் பற்றித் திறனாய்வு செய்யலாமே” என்றார். அதற்கு அவர், அந்த எண்ணம் எனக்கு நீண்ட நாளாகவே உள்ளது; செய்கிறேன்” என்றார். ஆனால் செய்யவில்லை; பின்னர் 1972-க்குப் பின்னர்தான் செய்தார். அதுவும், தவிர்க்க இயலாத சூழலில்தான் செய் தார். அவர்களைப் போல் அல்லாமல், பேரா சிரியர் எதற்கும் அச்சமுறாமல் அக்காலத்தில் சிறப்பாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. பாரதிதாசன் அழகின் சிரிப்பில் “அச்சமில்லை தம்பி - நல்ல அறம் இருக்கும்போது” என்று கூறியதற்கேற்ப, நம் பேராசிரியரும் வாழ்ந் துள்ளார். இதுதான் சிறப்புக்கு உரியது.

பேராசிரியருக்கு இந்த நேர்மைத்திறன், அஞ்சாமை, உண்மை நோக்கு இருந்ததால்தான் அவர் அக்காலத்திலேயே (காங்கிரசு ஆட்சிக் காலத்தில்) தமிழ் வழிபாடு பற்றியும், தாய்மொழி வழிக்கல்வி பற்றியும் அச்சமுறாமல் எழுதியும் பேசியும் உள்ளார். தமிழ் மொழியில் அறிவியல் நூல்கள் கிடையா என்றும், இந்திய மொழிகள் வளர்ச்சி அடையவில்லை என்றும், கூறுவோரின் வாதங்களை அவர் நொறுக்கித் தள்ளுகிறார்; ஒரு மொழி பயன்பாட்டில் வரும் சூழலை ஏற்படுத்தி னால்தான், நூல்கள் பெருகும், மொழிகள் வளரும், புதுச்சொற்களும் உண்டாகும் என்கிறார்; தமிழைப் பயிற்சி மொழியாக்காமல் அது இல்லை, இது இல்லையென்று சொல்வது எப்படி நியாயமாகும் என்கிறார். அறிவியல் மொழியாக்கத்திற்கும் பெரும்பணம் செலவாகும் என்பதைப் பலர் கூறுவதை நோக்கி, மக்களுக்காக, மொழிக்காக அரசு அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென்று உறுதி கூறுகிறார். மாகாணத்தைவிட்டு வேறொரு மாகாணத்திற்கு மாணவர்கள் செல்லும் போது மற்றொரு மொழியைக் கற்கும் நெருக்கடி ஏற் படுமே என்று சிலர் கூக்குரல் இட்டுள்ளனர். அதற்குப் பேராசிரியர் அப்படிச் செல்லும் மாணாக் கர்கள் அம்மாகாண மொழியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்கிறார். அப்படிச் செல்லும் மாணாக்கர் மிகச் சிலர்; அச்சிலரின் தேவைக் காகப் பெரும்பான்மையரின் வளர்ச்சியைத் தடுப்பது எப்படிச் சரியாகும்? என்பதுதான் அவரது கருத்து.

மேலும், அறிவியல் - தொழில்நுட்பச் சொற் களை எவ்வாறு மொழிபெயர்ப்பது, புதிதாகத் தமிழில் கலைச் சொற்களை எவ்வாறு உருவாக்குவது, மொழியாக்கங்களை எவ்வாறு எளிதாக்குவது, பயிற்சியை எவ்வாறு எளிமைப்படுத்துவது ஆகியன குறித்து நுணுக்கமான கருத்துகளைப் பேராசிரியர் விளக்கிக் காட்டுகிறார். இதுபோன்றே பேரா சிரியர் தமிழ் வழிபாட்டைப் பற்றியும் பேசி யுள்ளார். அதாவது சட்டமன்ற மேலவையில் பேசியுள்ளார். இத்தொகுதியில் இதுதான் சிறப்பு. இத்தொகுதிகளில் பேராசிரியரின் எழுத்துக்களை மட்டும் நமக்கு அளிக்காமல், அவர் மேலவை உறுப்பினராக இருந்தபோது (1958-1965) அவை யில் ஆற்றிய உரைகளை அரிதின் முயன்று இத் தொகுதிகளில் பதிப்பகத்தார் சேர்த்திருப்பது மிகவும் போற்றத்தக்கது. இதற்குப் பதிப்பகத் தாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பதிப் பகத்தார் இவற்றைச் சேர்க்காமல் விட்டிருந்தால் காற்றோடும், சட்டமன்றப் பதிவோடும் போய் அவை மறைந்திருக்கும். அப்படி மறைய வாப்பளிக் காமல் தொகுதிகளை நிறைக் களஞ்சியமாக உரு வாக்கியிருப்பது இன்புறத்தக்கது. தமிழன்பர்கள் இதற்குக் கடப்பாடுடையர்.

தமிழகக் கோயில்களில் தமிழ் வழிபாட்டை நிகழ்த்துவது குறித்த சட்டம் இயற்ற பேராசிரியர் மேலவையில் பேசிய பேச்சு கூரிய சீரிய அரிய பேச்சாகும். அப்பேச்சில், பேராசிரியரின் பரந்து விரிந்த வாசிப்பையும், ஆழ்ந்த சிந்தனையையும் வாதத் திறனையும், சமூக நீதியையும், அதிகாரத் திற்கு அஞ்சாத அஞ்சாமையையும் சமயோசித புத்தியையும் வரலாற்றறிவையும் உணர முடிகிறது. இந்த உரையை சேர்த்தது பதிப்பகத்தாரின் சிறந்த பங்களிப்பாகும். இந்தச் சட்டம் விவாதத்திற்கு வந்த போது அச்சட்டத்தைத் தடுக்க, பதஞ்சலி சாஸ்திரி, நாடாளுமன்றம் இயற்றாமல் இருக்க நாம் இயற்றுவது சரியன்று; சட்டமாகாது என்றும் கூறியுள்ளார். அவரைப் பின்பற்றி மற்றொரு உறுப் பினரான சேஷாச்சாரியும் மறுத்துள்ளார். இருவர் வாதத்தையும் அரசியல் சட்டப்படி பேராசிரியர் மறுத்துள்ளார். நாடாளுமன்றம் நாடு முழுமைக் கான சட்டம் இயற்றலாம். இச்சட்டம் இயற்று வதற்கு மாநிலத்திற்கு முழுவுரிமை உள்ளதென்றும், இதனை உடனே இயற்ற வேண்டுமென்றும், மக்களுக்குச் சீர்திருத்தம் செய்யும் முறையில் சட்டம் இயற்றும் போதெல்லாம், மதம் குறுக் கிட்டுத் தடுக்கிறது என்றும் இது புதிதல்ல என்றும் கூறியுள்ளார். இது குறித்து, 1922ஆம் ஆண்டில் நீதிக் கட்சி இருந்த போது ஆலயங்களை மேம் படுத்தும் சட்டம் வந்த போது ஏற்பட்ட நிகழ் வையும், பம்பாயில் 1827-லும் 1863லும் நிகழ்ந்த சட்டமாற்றத்தையும் எடுத்துக்கூறி, நாம் சட்ட மாக்குவதில் பின்வாங்கினால் சமுதாயத்தில் பேரழிவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டவிதி 246-2-ன் கீழ் வரிசை எண் - 28-இல் உள்ளபடி, நாடாளுமன்றம் சட்டம் இயற்றாத வரையில், நாம் சட்டம் இயற்ற உரிமை யுண்டு; நாடாளுமன்றம் இப்பொருள் பற்றி இதுவரையில் சட்டம் இயற்றாத போது நாம் இயற்றுவது மீறப்பட்டதோ பொருத்தமற்றதோ அல்ல, உடனே சட்டம் இயற்றுவது நம் உரிமைக்கு உட்பட்டதே என்று அரசுக்குத் துணிவேற்றுகிறார்.

தீண்டாமையை ஒழிக்க அரசியல் சட்டம் இயற்றி எல்லா மக்களையும் கோயிலுக்குள் அனு மதிக்க முற்படும்போது நாம், எல்லா மக்களின் மொழியாக இருக்கும் நம் தாய்மொழியை வழி பாட்டு மொழியாக ஆக்குவது நம் உரிமையாகும் என்கிறார். மற்றும் ஒரு குறிப்பிட்ட மொழியை கடவுள் மொழியென்றும், அதுவே வழிபாட்டுக் குரியது என்றும் கூறுவது தவறானது; முரணானது என்கிறார். கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர் எனில், இவர் இப்புவியிலுள்ள எல்லா மொழிகளையும் அறிந்தவராகவே இருக்க வேண்டும் அன்றோ! தமிழையும் அறிந்திருப்பார் அன்றோ! அந்தத் தமிழுக்குத் தடை ஏற்படுத்துவது இறை நெறியாகுமா? என்கிறார். மேலும் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டு உரிமை காக்கும் சட்டம் இயற்றுவதைத் தடுப்பது நாகரிகமாகாது, உண்மை யுமாகாது என்கிறார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் நமது அரசமைப்புச் சட்டத்தின் மீதான இறுதித் தீர்ப்பல்ல என்று டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி தம் கருத்துக்கு அரண் சேர்க்கிறார். உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் சில அவை வழங்குபவர்களின் கருத்துக்கேற்பவே வழங்கப்படுகின்றன. அதாவது தவறாக வழங்கப்படுகின்றன என்கிறார். ஆனால் வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகளை மாற்றிக் கொள்ளலாம். அந்த நம்பிக்கையில் வழிபாட்டுச் சட்டத்தை நிறைவேற்றுவது நம் கடமையாகும் என்பதை ஆணித்தரமாக விளக்கியுள்ளார். பேரா சிரியரின் அஞ்சாமை இங்குச் சிறப்பாக வெளிப் பட்டுள்ளது. இந்த அஞ்சாமையின் உருவம்தான் அவர், மறைமலையடிகளின் தமிழும் ஒரு தமிழா? என்று கேட்டவன் ஒரு தமிழனா என்று வெகுண்டு உரைத்தவர் நம் பேராசிரியர். இத்தகு அருமைப் பேராசிரியரின் அரிய ஆக்கங்களைத்தான் விழிகள் பதிப்பகம் இப்போது வெளியிட்டுள்ளது. பேராசிரியர் வாழ்ந்த காலத்திலேயே அவரது நூல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கிடைத்தன; அரிதாகத்தான் கிடைத்தன; அவர், அவருடைய ஆற்றலுக்கு எவ்வளவோ எழுதிக் குவித்திருக்க வேண்டும். ஆனால் இயலவில்லை; நிருவாகப் பணி, மேலவைப் பணி, அகராதிப் பணி, போன்றவை அதற்குத் தடைகளாக இருந்திருக்கக் கூடும்! இந்நிலையில் அவரது எல்லா ஆக்கங் களையும் (பெரும்பாலும்) இப்போது வெளியிட்டி ருப்பது பாராட்டத்தக்கது.

பேராசிரியரின் ஆங்கிலப் பேச்சு, தனித் தன்மை வாய்ந்தது. அவர் பேச்சைப் பற்றிப் பலர் அறியாதது ஒன்று உள்ளது; அதனை இங்கு நினைவு கூர்வது சிறந்தது. வரலாற்றுப் பேரா சிரியர் ந.சுப்பிரமணியன் அவர்களை உடுமலைப் பேட்டையில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது (2007) என்னிடம் ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ந.சுப்பிரமணியன் மாண வனாக இருந்த போது, தீரர் சத்தியமூர்த்தி அங் கொருமுறை வருகை புரிந்து ஆங்கிலத்தில் சிறப் பாகப் பேசினாராம். அவரும் ஆங்கிலத்தில் சிறப் பாகப் பேசுபவர் என்பது நாடறிந்த உண்மை; ஆனால் அன்று அவர் பேச்சு எடுபடவில்லையாம். அன்று தலைமை வகித்துப் பேசிய பேராசிரியர் விருந்தினரை முதலில் வரவேற்றும், இறுதியில் பாராட்டியும் மிக அருமையாக ஆங்கிலத்தில் பேசியது சத்தியமூர்த்தியின் பேச்சைவிடச் சிறப் பாக இருந்ததாம்! இந்தப் பேச்சுத் திறத்தால்தான் வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரியாரின் அன்பைப் பெற்றார் போலும்! பேராசிரியர் இப்பேராற்ற லுடன், பெருந்தன்மையும் பெருந்தகவும் வாய்ந் தவர். இதற்கு ஒரு நிகழ்வை நோக்கினால் உண்மை புரியும். 1961-ஆம் ஆண்டில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பின் அப்பொறுப்புக்கு மூவர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒருவர் பேரா சிரியர்; இரண்டாமவர் பேராசிரியர் சி.இலக்கு வனார்; மூன்றாமவர் டாக்டர் மு.வ. மு.வ. தேர்ந் தெடுக்கப்பட்டதும் சில நாள்களுக்கு அடுத்துப் பேராசிரியர் மு.வ.வை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினாராம். இந்தப் பெருந்தன்மை எவருக்கு வரும்! ஆம்; அவர்தான் நம் பேராசிரியர். இச் செய்தியை என்னிடம் கூறியவர் பேராசிரியர் ந.சஞ்சீவி. பேராசிரியர் தம் இல்லத்தில் ஒரு நாயை வளர்த்துள்ளார். அந்நாயிடம் அவர் பேரன்பு காட்டியுள்ளார். பேராசிரியர் காலமான பின் அந்நாய் உணவு உட்கொள்ளாமல் அப்படியே இறந்துவிட்டதாம். அதனைப் பேராசிரியர் ந.சுப்பிர மணியன் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் குறித் துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பதிப்பில் கவனிக்கத்தக்கன:

*             கட்டுரைகளைக் கால வரிசைப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவை கிடைக்கா விடில் கூட நூல்கள் வெளிவந்த ஆண்டுகளை முன்னிட்டு அமைத்திருக்கலாம். பதிப்பாளர் உரையில் நூல்கள் வெளிவந்த ஆண்டுகள் இருப்பினும், அவற்றைப் பொருளடக்கத் திலும் இணைக்க வேண்டும்.

*             பேராசிரியர் அவ்வை.துரைசாமிபிள்ளை எழுதிய பதிற்றுப்பத்து உரைக்குப் பேராசிரியர் நீண்ட அணிந்துரையை ஆங்கிலத்தில் அளித்துள்ளார்; அதனை மொழிபெயர்த்து இணைத்தல் வேண்டும்.

*             1966-க்கு முன்னர் வெளிவந்த திராவிட நாடு, முரசொலி பொங்கல் மலர்களில் பேராசிரி யரின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற் றையும் சேர்க்க வேண்டும்.

*             இத்தொகுதியில் கட்டுரைகளின் பத்தி மிக நீண்டுள்ளன. அவற்றை மூலநூலில் உள்ளன போல் வெளியிடல் நலம்.

*             பதிப்பாளர் தம் குறிப்பில், பேராசிரியரின் கிடைக்காத நூல்களையும், பொழிவுகளையும், கட்டுரைகளையும் பதிவு செய்துள்ளனர். அவற்றை, முயன்று தேடி இணைப்பது மிக முக்கியம். தமிழன்பர்களும் உதவ வேண்டும்.

*             பேராசிரியரின் சில படங்களை நூலின் உள்ளே இணைத்தால் நன்றாக இருக்கும்.

*             எழுத்துப் பிழை மிகச் சிலவே உள்ளன; அண் மையில் வெளிவந்த தொகுதிகளில் எழுத்துப் பிழையற்ற தொகுதிகளில், இத்தொகுதிக்கு முக்கிய இடம் உண்டு.

மொத்தத்தில் இந்நூல் அரிய கட்டுரைக் களஞ்சியம்; படிக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய கருத்துப் பெட்டகம்; நீண்ட இடை வெளிக்குப் பின் வெளிவந்துள்ள சீரிய திரட்டு; இவற்றை வெளிக்கொணர்ந்த பதிப்பகம் பாராட்டுக் குரியது; செந்தமிழ் உணர்வு பெருக, செந்தமிழ்க் காவலரின் இத்தொகுதிகள் இல்லந்தோறும் இருக்க வேண்டியவை; தமிழர் ஆதரிப்பாராக!

செந்தமிழ்க் கவிஞர் டாக்டர் அ.சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் - உரைகள்

தொகுதி - 1

பதிப்பாசிரியர்: முனைவர் இராம.குருநாதன்

வெளியீடு: விழிகள் பதிப்பகம்,

8/ஆ 139, 7ஆம் குறுக்குத் தெரு,

திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு,

சென்னை - 600 041

விலை: ரூ.275/-

Pin It