சமூக மாற்றத்தில் இதழ்களின் பங்களிப்பு பற்றி எழுத நினைத்தாலே சற்று நிதானிக்க வேண்டியுள்ளது. உள்ளதை எழுதுவதா, அல்லது பெருமைகளை மட்டுமே தேடிப் பதிவு செய்வதா என்பதில் பெரும் குழப்பம்தான் ஏற்படும். எப்படியிருப்பினும் இயன்றவரை உண்மையைப் பதிவு செய்வதே நேர்மையாக இருக்கும்.

சமூக மாற்றத்துக்கும் நாளிதழ்கள், வார, புலனாய்வு இதழ்களுக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வியை எழுப்பினால், அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் போலத் தொடர்பற்றவையாகத்தான் இன்றைய வாசகர்கள் பலருக்கும் தோன்றும். ஏனெனில், தற்போதைய நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், உண்மையில் மிகப் பெரிய சமூக மாற்றங்களில் பெருமெடுப்பில் இதழ்களின், எழுத்தின் பங்களிப்பு இருந்திருக்கிறது, இப்போதும் இருப்பதாக நம்பப்படுகிறது; இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வசதிக்காக நாம் தமிழ் இதழ்களை மட்டும் எடுத்துக்கொண்டு பின்னோக்கிச் சென்றால்...

தமிழ்நாட்டில் 1831 ஆம் ஆண்டில் சென்னை கிறித்துவ சமயப் பரப்புக் கழகம் என்ற அமைப்பு வெளியிடத் தொடங்கிய `தமிழ் மேகஸின்’ என்பதுதான் முழுக்க முழுக்கத் தமிழில் வெளியான முதல் தமிழ் இதழ் எனலாம், இது மாத இதழ்.

பின்னர், 1852-இல் பெர்சிவல் பாதிரியார் தொடங்கிய `தினவர்த்தமானி’ என்ற வார இதழ், 1855-இல் `இராஜ வர்த்த போதினி’ என்ற மாத மும்முறை இதழ், 1870-இல் துரைத்தனத் கல்விச் சங்கத்தால் `ஜன விநோதினி’ மாத இதழ், 1876-இல் செங்கல்வராய ராயரின் ஆசிரியப் பொறுப்பில் `ஞானபாநு’ மாத இதழ், 1878-இல் உயர் நீதிமன்ற வழக்குச் செய்திகளைக் கொண்ட `சித்தாந்த சங்கிரகம்’ மாத இதழ், 1877-இல் சேலத்திலிருந்து `சுதேச அபிமானி’, 1882-இல் `சுதேசமித்திரன்’ வார இதழ், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதுவே நாளிதழ், 1885-இல் ஆதிதிராவிடர் பிரச்சினைகளை முன்னெடுப்பதாக ஜான் ரத்தினத்தின் `திராவிடப் பாண்டியன்’, 1893-இல் இரட்ட மலை சீனிவாசனின் `பறையன்’, 1887-இல் `மஹாராணி’, `கலாதரங்கிணி’, 1892-இல் `விவேகசிந்தாமணி’, 1893-இல் கோவையிலிருந்து `வித்யாபாநு’, 1888-இல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் நன்மைகளை முன்னிறுத்தி `உபாத்தியாயர்’, 1895-இல் `லோகோபகாரி’

இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் என்கிற நிலையில் குறிப்பிடும்படியான சில இதழ்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

1900-இல் `ஜனாநுகூலன்’ வார இதழ், `பெண்கல்வி’, 1902-இல் அயோத்திதாச பண்டிதரின் `பைசாத் தமிழன்’, 1907-இல் `இந்தியா’, 1917-இல் `திராவிடப் பத்திரிகை’

வார இதழ், அதே ஆண்டில் திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்ட `தேச பக்தன்’ தேசிய நாளிதழ், 1920-இல் திரு.வி.க.வின் `நவசக்தி’, 1924-இல் சென்னையிலிருந்து எஸ். வரதராஜுலு நாயுடுவால் நிறுவப்பட்ட `தமிழ்நாடு’ நாளிதழ், 1925-இல் தஞ்சையிலிருந்து ரா. வெங்கடாசலம் என்பவரை ஆசிரியராகக் கொண்ட `தமிழ்ப் பொழில்’ மாத இதழ்...

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியில் ஏராளமான தேசிய, திராவிட, பொழுதுபோக்கு மாத இதழ்களும் வார இதழ்களும் மற்றும் நாளிதழ் களும் தோன்றத் தொடங்குகின்றன. நாட்டின் விடுதலைப் போராட்டமும் முனைப்புக் கொண்டிருந்த காலம் அது. ஆனந்த விகடன் (1926), கலைமகள் (1932), பிரசண்ட விகடன் (1933), சக்தி (1940), தமிழன் (1942), குமரி மலர் (1944), குமுதம் (1947), அமுதசுரபி (1949), மணிக்கொடி (1938), கல்கி (1941) ஆகிய வாரமிருமுறை இதழ்களும் வார இதழ்களான ஹநுமான் (1927), தமிழ்நாடு (1927), நாரதர் (1933), பாரததேவி (1939), திராவிட நாடு (1942), குயில் (1940), தமிழ்முரசு (1946) போன்ற வார இதழ்களும் தினமணி (1934), பாரததேவி (1940), தினசரி (1944), தினத்தந்தி (1947) ஆகிய நாளிதழ்களும் தோன்றின.

தொடக்க காலத்தில், கிறிஸ்துவ, முஸ்லிம், சைவ மதப் பிரசாரம், இல்லற வாழ்க்கை ரகசியங்கள், பெண்களுக்கான கற்பொழுக்கம், நகைச்சுவைத் துணுக்குகள் என்றுதான் பெரும்பாலான இதழ்கள், காகிதங்களைக் கறுப்பாக்கிக் குப்பை கொட்டிக்கொண்டு இருந்திருக்கின்றன.

பின்னர், நாட்டின் விடுதலை சார்ந்த அரசியல் - இவற்றில் பல நேரங்களில் உயர்சாதி அபிமானம் மிகுந் திருந்தது - இடம் பிடித்தது. இந்திய தேசியத்தை முன்னெடுத்த இத்தகைய இதழ்களில் பெரும் பாலானவை, நாட்டின் விடுதலையுடன் சமூக மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பதாக நம்பிக்கொண்டு, அல்லது நம்புவதாக நடித்துக்கொண்டு உண்மைச் சமூக மாற்றத்துக்கான பல்வேறு தேவைகளை, பிரச்சினைகளை நீக்குப்போக்காகவே அணுகின.

காங்கிரஸ் சார்பிலேயே நடைபெற்றபோதிலும் தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டிருந்ததால் திருப்பூர், திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டுச் செய்திகளேகூட இவற்றில் சில பத்திரிகைகளில் சரிவர இடம்பெறவில்லை.

வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வைக்கம், சேரன்மகாதேவி கிளர்ச்சிகள் எல்லாம்கூட இந்தப் பத்திரிகைகளில் உரிய இடம் பிடிக்க முடியவில்லை. தேவதாசி முறையை ஆதரித்த தலைவர்கள் எல்லாம் கூட இருந்தார்கள். விடுதலைக்காக விலாவரியாகப் பேசிய ஹிந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் கூட சூத்திரர், நாலாவது வருணத்தார், பஞ்சமர் என்ற சொற்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தன என்றால் அவற்றின் சமூக மாற்றத்துக்கான பார்வை எத்தகையதாக இருந்திருக்கும்?

இந்தக் காலகட்டத்தில்தான் பெரியார் என்ற பெரும் புயல் பத்திரிகையுலகில் வீசத் தொடங்கியது. சமூக மாற்றத்தை மட்டுமே முதன்மையாகக் கொண் டிருந்தன பெரியாரின் இதழ்கள். பிற எல்லாவற்றையும் வெங்காயங்களாக ஒதுக்கிவைத்துவிட்டு, மாற்றத்துக் கான கருத்துப் போரை இதழ்களில் முன்னெடுக்கத் தொடங்கினார் பெரியார். தமிழகத்தில் இதழ்களால் சமூக மாற்றம் என எடுத்துக்கொண்டால் பெரும் பங்கு, தந்தை பெரியாரையே சென்றடையும்.

1925-இல் குடியரசு வார இதழ் தோன்றியது. குடியரசின் பிரகடனமாக அவர் வெளியிட்ட கருத்தைப் பாருங்கள்:

“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மை யுற்று விளங்கச் செய்யவேண்டும். நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும் கலை வளர்ச்சிக்காகவும் மொழி வளர்ச்சிக்காகவும் இதன் மூலம் உழைத்து வருவோம். ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் எனக் கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று, மக்களுள் தன்மதிப்பும் சமத்துவமும் ஓங்கிவளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்'' (குடியரசு 2-5-1925).

(இந்த இடத்தில் தினமணி நாளிதழின் முதல் நாள் தலையங்க வரியும் குறிப்பிடத் தக்கது - `பாரத தேசம் விடுதலையடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் தினமணி துணைபுரியும்’ - 11.9.1934)

`தனிப்பட்ட நபர்கள் பற்றிய கண்டனங்களும் ஊர்வம்பு விஷயங்களும் பிரசுரிக்கப்பட மாட்டா’ என்று செய்தி அனுப்புவோருக்கு அறிவுறுத்தினார் பெரியார். இன்றைக்கு இவையிரண்டும் இல்லாமல் பெரும்பாலான வார இதழ்களையும் எந்தவொரு புலனாய்வு இதழையும் நடத்தவே முடியாது... அரசியலாக இருந்தாலும், திரைப்படத் துறையாக இருந்தாலும் கண்டனங்களும் கிசுகிசுக்கள் என்ற பெயரில் ஊர் வம்புகளுமே பெரும்பகுதி இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. மேலும், வாசகர்களுமே இவற்றுக்குத்தான் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். இத்தகைய சூழலில் சமூக மாற்றத்துக்கும் இதழ்களுக்கும் என்ன தொடர்பு?

தமிழ் மொழியில் இன்றைக்கு மிகப் பெரிய சாதனையாக, மாற்றமாகக் கருதப்படுவது எழுத்துச் சீர்திருத்தம்! இதழ்வழி இயக்கமாகப் பெரியார் நடத்தியதால் விளைந்த மாற்றம்தான் இது.

1925-இல் தொடங்கப்பட்ட குடி அரசு, சட்டப் பிரச்சினையால் 1933-இல் தற்காலிகமாக நிறுத்தப் பெற்று மீண்டும் 1935-இல் தொடங்கியபோது, `ணா, றா, ணை, னை, லை’ என்ற சீர்திருத்தப்பட்ட வரிவடிவ எழுத்து களை, ஒரு சிறிய அறிவிப்புடன், அறிமுகப்படுத்துகிறார் பெரியார்.

அடுத்த இதழில் அந்த மாற்றத்துக்கான காரணங் களை விளக்கி, `தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் நீண்டதொரு ஆசிரியவுரையை எழுதினார் பெரியார்.

“மாறுதலைக் கண்டு அஞ்சாமல் அறிவுடைமை யோடும் ஆண்மையோடும் நின்று விஷயங்களை நன்றாய் ஆராய்ச்சி செய்து காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக், கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாத கடமையாகும். தமிழ் ஏற்பட்டது இன்று நேற்றல்ல, எழுத்துகள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால் எழுத்துகள் கல்லிலும் ஓலையிலும் எழுதுங்காலம் போல், காகிதத்தில் எழுதவும் அச்சில் வார்த்துக் கோக்கவும் ஏற்பட்ட காலந்தொட்டு இன்று வரை அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆதலால் யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டியதாயிற்று. பாஷா ஞானம், இலக்கண ஞானம், பொதுக்கல்வி இல்லாத சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும் பாஷாஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர் எவரும் முயற்சிக்காவிட்டால் என் செய்வது? தவம் செய்வதா?''

“ஒரு பாஷையோ ஒரு வரிவடிவமோ அல்லது வேறு விஷயமோ எவ்வளவு பழையது, தெய்வத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கிறது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.''

பெரியார் இவ்வாறு எழுதியது 1935-இல். இன்றைக்கு யோசித்துப் பாருங்கள். கணினி வழித் தமிழ் புரண்டோடும் இந்த நாளில் யானைக் கொம்பு போட்ட னை, ளை போன்றவற்றை யோசித்துப் பாருங்கள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ, ஒள ஆகிய எழுத்துகளையும் அவரே மாற்றி எழுதத் தொடங்கினார் (ஆனால், அரசின் மாற்றத்தில் இவ்விரண்டும் இடம் பெற வில்லை. மாற்றினால், தமிழில் உயிரெழுத்துகள் எத்தனை என்று சொல்ல முடியும்?)

பெரியார் பற்றாளர்களால் மட்டுமே விடாப் பிடியாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த எழுத்துச் சீர்திருத்தம் எவ்வாறு மக்கள் மத்தியில் மாற்றமாக உருவானது, தமிழ் நாளிதழ், வார இதழ்களில் எவ்வாறு தயங்கித் தயங்கி ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது என்பது தனிக்கதை (சுருக்கமாகச் சொன்னால், இனி எல்லாம் பெரியார் எழுத்துகள்தான் என்று பெரியார் நூற்றாண்டு விழாவின்போது, அப்போதைய முதல் வரான எம்.ஜி.ஆர். அறிவித்ததும் முதல் வேலையாக - சொன்னவர் எம்.ஜி.ஆர். என்பது காரணமாக இருக்கக் கூடும் - தினமலர் மாற்றிவிட்டது. வேறு யாரும் மாற்றவில்லை. `தினமணி’யின் ஆசிரியராக கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக, தினமணியைப் பெரியார் எழுத்துக்கு மாற்றிவிட்டார். பின்னர்தான் ஒவ்வொரு நாளிதழாக மாற்றத் தொடங்கின. மிகுந்த தயக்கத்துக்குப் பின் கடைசியாக மாறிய நாளிதழ், திராவிட இயக்க இதழ்களில் ஒன்று! மாறவே மாற மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்துவிட்டு, இனிமேல் அந்த மாதிரி எழுத்தெல்லாம் டைப்செட் செய்யவே முடியாது என்ற நிலையில் மாறியது துக்ளக்.)

இன்றைக்குப் புரட்சி என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. அது பற்றிய காரணங்களை விரிவாக இங்கே அலச வேண்டிய தில்லை. இப்போதைக்கு அது நம்முடைய வேலையு மல்ல. ஆனால், பெரியார் எத்தகைய புரட்சிகர எழுத் தாளர் என்பதைக் காணப் பின்வரும் வரிகளைக் கவனி யுங்கள் - 1933-இல் குடி அரசில் பெரியார் எழுதுகிறார்:

“45 மாத காலமாய் விசாரணை நடந்துவந்த மீரத் கம்யூனிஸ்ட் சதி வழக்கு கேசு ஒருவழியாய் முடி வடைந்து விட்டது. அதாவது 27 எதிரிகளுக்கு 3 வருஷம் முதல் ஆயுள் பரியந்தம் வரை சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தண்டனையைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படவில்லை. இந்த 27 பேர் மாத்திரமல்ல, இன்னும் ஒரு 270 பேர்களையோ, 2700 பேர்களையோ, 270000 பேர்களையோ 2700000 பேர்களையோ சேர்த்துத் தூக்கில் போட்டிருந்தாலும் சரி. அதற்காகக் கவலைப்படப் போவதில்லை.

ஏனென்றால் இந்தத் தோழர்கள் சிறையில் இருப்பதாலோ தூக்கில் கொல்லப்படுவதாலோ அவர்களுடைய கொள்கையாகிய பொதுவுடைமைக் கொள்கை என்பது அதாவது முதலாளிகளின் ஆதிக்க ஆட்சியைச் சிதைத்து, நசுக்கி, சரீரத்தால் பாடுபடுகிற மக்களுடைய ஆட்சிக்கு உலக அரசாங்கங்களை யெல்லாம் திருத்தியமைக்க வேண்டுமென்கிற கொள்கையோ உணர்ச்சியோ அருகிப் போய்விடும் என்கின்ற பயம் நமக்கில்லை. மீரத் கம்யூனிஸ்டுகள் ஜெயிலில் இருப்பதன் மூலம் அவர்கள் ஜெயிலில் வதியும் ஒவ்வொரு வினாடியும் அவர்களது கொள்கை யானது அவர்களைப் போன்ற 1,10,100,1000-கணக்கான தொண்டர்களைத் தட்டியெழுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்.

100-க்கு 90 மக்களாய் உள்ளவர்களை வஞ்சித்து, வதைத்து, கொடுமைப்படுத்தி, அழுத்தி வைத்துக் கொள்ளும் தன்மையை வெளியிடுவது பலாத்கார மானால் இவ்வித பலாத்காரத்தை மனிதத் தன்மை உள்ள ஒவ்வோர் ஆணும் பெண்ணும் வரவேற்க வேண்டு மென்றும் விண்ணப்பித்துக் கொள்கிறோம்'' (குடியரசு 21.1.33).

குழந்தைகள் (மகப்பேறு என்று சொல்லக்கூடாது, அது என்ன பேறு?) பெற்றுக்கொள்வது பற்றி 80 ஆண்டு களுக்கு முன் பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்:

“பிள்ளை பெறுவதாலேயே பெண்கள் சமூகம் அடிமையாகி, அநேக ஆபத்துகளுக்கும் வியாதிக்கும் உள்ளாகி, அற்ப ஆயுளுடன் துன்பமும் பட வேண்டிய தாகி அவர்கள் வாழ்வே பரிதாபத்துக்கு உரியதாக முடிகிறது. பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று கருதுவதால் சுதந்திரமும் வீரமும் இன்றி அடிமையானதுமான காரியங்களுக்குப் பெண்கள் ஆளாகிறார்கள். பெண்கள் துன்பம் இப்படியிருக்க, பொதுவில் வேலையில்லாத் துன்பத்தை (!) நீக்கவும் மக்கள் கவலையும் தொல்லையும் இல்லாமல் இருக்கவும் பிள்ளைப் பேற்றைக் குறைப்பது என்பது தக்க வழியாகும்” (குடியரசு 14.12.1930).

இன்றைக்கு ஒரு குழந்தைக்கு மேல் பெற்ற குடும்பங்கள் எத்தனை? இரண்டுக்கு மேல் யாராவது பெற்றுக்கொள்கிறார்களா? இத்தனைக்கும் இப்போது குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரசாரமெல்லாம்கூட மலையேறிவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இதுதான் சமூக மாற்றத்தை நோக்கிய பார்வை, செயல்பாடு என்பது.

1921 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக் கெடுப்புச் செய்தியை வெளியிட்ட `ரிவோல்ட்’ இதழ், சென்னை மாகாணத்திற்கு மட்டுமான மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை 1,92,46,104 பேர். அவர்களில் கைம்பெண்ணாகிவிட்டவர்கள் 37,13,695 பேர். இளங்கைம்பெண்கள் என்ற வகையில் 5 ஆண்டுகட் குட்பட்டோர் 1211, 10 ஆண்டுகட்குட்பட்டோர் 5692, 15 ஆண்டுகட்குட்பட்டோர் 22,337, 20 ஆண்டு கட்குட்பட்டோர் 54699, 25 ஆண்டுகட்குட்பட்டோர் 142267, 30 ஆண்டுகட்குட்பட்டோர் 2,02,651. ஆக மொத்தம் 4,28,757 பேர்'' என்றதுடன்,

இன்னொரு பட்டியலில் இந்திய அளவிலான பட்டியலில், ஓராண்டு அகவையேயான கைம் பெண் களின் எண்ணிக்கை - 497 பேர், 2 ஆண்டுக்கு உட்பட்டோர் - 494 பேர், 3 ஆண்டுக்குட்பட்டோர் 1257, 4 ஆண்டுக்குட்பட்டோர் 2837, 5 ஆண்டுக் குட்பட்டோர் 6707... என்று குறிப்பிட்டிருக்கிறது.

`திகைக்க வைத்து அச்சுறுத்தும் எண்ணிக்கைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்ட இந்தச் செய்தியில் ரிவோல்ட் எழுப்பியிருந்த கேள்வி - `உலகில் எந்த நாட்டிலாவது எந்த மதமாவது இத்துணை பெரிய பாழ்நிலைக்கு வழி செய்திருக்கிறதா?’ இப்போதுகூட நமக்கு இதையெல்லாம் நினைக்கும்போது நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலத்தான் தோன்று கிறது.

22.4.1934 புரட்சி இதழில் விபசாரம் மற்றும் பெண் போலீஸ் தொடர்பாகச் செய்தி வெளியிடும்போது, `விபசாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்குத் தக்க தொழில்முறையைக் கற்றுக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒருக்காலும் இன்றைய விபசாரத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பது உறுதி’ என்று குறிப்பிட்டதுடன், `விபசாரத்தை ஒழிக்க ஆண் போலீசைவிட பெண் போலீசே சிறந்தது. குற்றத்துக்கு ஆளான வாலிபப் பெண்களை ஆண் போலீசார் தக்கவாறு நடத்த இயலுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

பகுத்தறிவின் பிரகடனத்தைப் பாருங்கள்:

“பகுத்தறிவு தமிழ் மக்களிடையே அறிவியல் கொள்கைகளை அதிதீவிரமாகப் பரப்ப முயற்சி செய்யும்; விஞ்ஞான மேம்பாட்டை விளக்கமாக எடுத்துக்காட்டும். மேனாட்டு மெய்ஞ்ஞானப் புலவர்கள் கண்ட அரிய, பெரிய அற்புதங்களை எல்லாம் தெள்ளிதில் விளக்கும், மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்கவழக்கங் களையும் புரோகிதப் பித்தலாட்டங்களையும் சாதி சமய சாத்திரப் புரட்டுகளையும் பிட்டுப் பிட்டுக் காட்டும். சுருங்கக் கூறின், அறிவுக்கு மாறுபட்ட அனைத்தையும் நிர்த்தூளிபண்ணி, யாண்டும் அறிவின் ஜோதி ஜொலிக்கத் தன்னாலான எல்லாத் தொண்டினையும் செய்து தமிழ் மக்களின் வாழ்க்கையை இன்பகரமாகச் செய்வதையே தனது கடனாகக் கொண்டு வேலை செய்ய முனைந்து பகுத்தறிவு இன்று உங்கள் முன் வந்துள்ளது.”

நேரத்தைக் கடத்துவதற்காகவெல்லாம் இதழ் களைப் படித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலை யுடன் ஒப்பிட்டால், இதற்காகவெல்லாமா பத்திரிகை நடத்துவார்கள் என்றுதான் இளம் வாசகர்களில் பலருக்கும் வியக்கத் தோன்றும். `பகுத்தறிவு’ முழுவதும் மடமையழிப்புக் கட்டுரைகளும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான கட்டுரைகளும் இடம் பிடித்தன.

இவ்வாறு தொடர்ந்த இயக்கத்தால் குழந்தை மண ஒழிப்பு, விதவை மறுமணங்கள், சாதி மத ஒழிப்பை நோக்கிய திருமணங்கள், குடும்பக் கட்டுப்பாடு, தேவதாசி முறை ஒழிப்பு, சுயமரியாதைத் திருமணங்கள், வகுப்புரிமை, இட ஒதுக்கீடு, குலத்தொழில் ஒழிப்பு, வடசொற்கள் வழக்கொழிப்பு, தாழ்த்தப்பட்டோர் நலன் என இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய சமூக மாற்றங்களில் பெரியாருக்கும் அவருடைய இதழ் களுக்கும் பெரும் பங்கிருந்தது.

அந்தக் காலத்தில் வேறுபல இதழ்களும் குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைத் திருமணம் போன்றவற்றை இயக்கமாகக் கொண்டிருந்தபோதும் அடியோடு புரட்டிப் போடும் சமூகம் சார்ந்த மாற்றங்கள் தொடர்பாக ஒருவிதமான புறக்கணிப்பு அமைதி காத்தன. அரசியல் விடுதலை மூலமே எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் என்பதாக நம்பிக்கை கொண் டிருந்தன. இவை எவற்றுக்குமே தொடர்பு இல்லாமலும் சில பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன.

இப்போது மட்டும் என்ன நிலைமை? ஒடுக்கப் பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் புறக்கணிக்கப் படுகின்றன; அல்லது எல்லாரும் அழுகிறார்கள் என்பதற்காக இவர்களும் அழுது வைக்கிறார்கள்.

இந்த இடத்தில் நினைவுகூர வேண்டிய ஒரு தகவல் - சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு கணக் கெடுப்பின்படி, இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் தேசிய அளவிலான ஊடகத் துறையில் பணி புரிவோரிடையே 71 சதவிகிதத்தினர் உயர் சாதியினர், (நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இவர்கள் 8 சதவிகிதம் மட்டுமே). இவர்களில் பிராமணர்கள் மட்டுமே 49 சதவிகிதம். முஸ்லிம்களோ 3 சதவிகிதத் துக்கும் குறைவு (நாட்டின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதம்). முடிவெடுக்கக்கூடிய இடத்தில் தலித் - ஆதிவாசிகள் ஒருவர்கூட இல்லை. இவர்கள் அனுப்பும் அல்லது உருவாக்கும் செய்திகள் தான் நாடு முழுக்கச் சென்றடைகின்றன. நிலைமை இப்படியிருக்கும்போது, சமூக மாற்றத்துக்கான வழிவகை எங்கிருந்து காணப்படும்? (ஜிலீமீ பிவீஸீபீu, 05tலீ யிuஸீமீ 2006).

சமூக மாற்றம் என்று எடுத்துக்கொண்டால் பெரியாரைப் பேசாமல் வேறொருவரைப் பேச இயலாது. இன்றைய காலகட்டத்தில், இந்தச் சமூகத்துக்காக இதழ்களும் நபர்களும் செய்ததையும், செய்திருக்க வேண்டியதையும், செய்யத் தவறியதையும் விரிவான தனியரு புத்தகமாகவே எழுதலாம்.

அண்ணாவின் காஞ்சி, திராவிடநாடு, மு. கருணாநிதியின் முரசொலி, பாரதிதாசனின் குயில், நெடுஞ்செழியனின் மன்றம், கண்ணதாசனின் தென்றல், பழ. நெடுமாறனின் குறிஞ்சி, பொதுவுடைமை இதழ்களான ஜனசக்தி, தாமரை, தீக்கதிர்... போன்றவையும் இயன்றதைச் செய்தன.

புலனாய்வு இதழ்களை எடுத்துக்கொண்டால், இந்து நேசன், சிவப்புநாடா காலந்தொட்டு புலனாய்வு பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருந்தாலும் தமிழில் புலனாய்வையே பிரதானமாகக் கொண்ட (தற்போதைய வடிவிலான) இதழ்களின் வரவு 1980-களில் தொடங்கியது எனலாம்.

தொடக்கத்தில் துக்ளக் மட்டும்தான் ஓரளவில் இந்த வகையிலான செய்திகளை வெளியிட்டுக் கொண் டிருந்தது. தொடர்ந்து, முதன்முதலாக விகடன் குழுமத்தி லிருந்து ஜூனியர் விகடன் அறிமுகமானது (அதுவும்கூட என்ன காரணத்தாலோ, முதல் இதழில் புடைவையை எப்படிக் கட்ட வேண்டும் என்று - நடுப்பக்கத்தில் என்று நினைக்கிறேன் - அன்றைய நடிகை பூர்ணிமா ஜெயராமை வைத்துக் கட்டிக் காட்டியது).

அடுத்தடுத்த காலங்களில் தராசு, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், தமிழக அரசியல் போன்றவை வந்தன. இன்னமும் வந்துகொண்டிருக்கின்றன. இன்று காளான் களைப் போல முளைத்துக் கடை நிறையத் தொங்கிக் கொண்டிருக்கின்றன புலனாய்வுப் பத்திரிகைகள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான நோக்கம் (நல்லவேளை பெரியார் செத்துப்போய்விட்டார்!).

சமூக மாற்றம் என்பது மதிப்புமிக்க சொற்செட்டு. தங்கள் இதழ் மூலம் சமூக மாற்றத்துக்கு - கவனிக்க வேண்டியது - சமூக மாற்றத்துக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறீர்கள்? என்ற கேள்வியை இன்றைய இதழ்கள் சார்ந்தவர்களையேகூட கேட்கலாம். அவர்களும் தங்களைப் பற்றிச் சுயபரிசோதனை செய்துகொள்ள வசதியாக இருக்கும்.

சமுதாயத்தில் நீடித்திருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் அவ்வப்போது எழுகின்ற சிக்கல்களைப் பற்றியும் இந்த மக்களின் பல்வேறு தரப்புகளிடையேயும் நிலவும் கருத்துகளைத் தொடர்ந்து விவாதத்துக்கு உள்படுத்தி, ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை அல்லது கருத்தைப் பெரும்பான்மையான மக்களின் கருத்தாக உருப்பெறச் செய்து - இயலுமானால் அரசுகளையும் அந்த மாற்றங்களை ஏற்கச் செய்யும் நெருக்கடிக் குள்ளாக்கி - அந்த மாற்றங்களை நடைமுறைக்கும் வரச் செய்யும்போதுதான் சமூக மாற்றத்துக்கான - முன்னேற்றத்துக்கான இதழ்களின் பங்களிப்பு முழுமை பெறுகிறது.

பொதுவாகப் பார்க்கும்போது, நாட்டின் விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய உறுப்புகளாகவே இதழ்கள் கருதப்பட்டன. மேலும், மக்களுக்காக சேவை செய்யப் புகுந்த வலுவான ஆயுதங்களாகவும் அவை திகழ்ந்தன. ஆனால், `செய்தி என்பது சேவை’ என்ற அன்றைய நிலை மாறி, இன்று `செய்தி என்பது விற்பனைக்குரிய ஒரு பொருள்’ என்பதாக மாற்றப்பட்டுவிட்டது. இதழியல் துறையும் இதழ்களை நடத்தும் நிறுவனங்களும் தொழிற்சாலைகளுக்குரிய கூறுகளுடன் செயல்படத் தொடங்கிவிட்டன; செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தொழிற்சாலை என்றான பிறகு அதன் சரக்குகள் வெற்றிகரமாக விற்க வேண்டுமல்லவா? எனவே, பொருளின், அதாவது இதழின் வெற்றிக்கான அனைத்து உத்திகளும் - மலிவான பிற வணிக உத்திகளைப் போலவே - இங்கேயும் பின்பற்றப்படுகின்றன.

அதனால்தான், நடிகை என்னவிதமான உடைகளை உடுத்துகிறார், யாருடன் தங்கியிருந்தார் என்பனவற்றில் எல்லாம் இதழ்கள் ஆர்வம் காட்டுகின்றன. தவிர, வாசகர்களின் மனநிலையும்கூட அப்படித்தான் இருக்கிறது. அறிவார்ந்த விவாதங்கள் அட்டைப் படச் செய்தியாக வரும் இதழ்கள் விற்பதில்லை. எந்தச் சாமியார் அல்லது எந்த நடிகர் எந்த நடிகைகளுடன் இருந்தார் என்ற செய்தி தாங்கும் இதழ்கள்தான் விற்றுக் குவிகின்றன. லாபம் கருதி விற்பனையாளர்களும் அதையே விரும்பத் தொடங்க, தொழிற்சாலைகள் என்ன செய்யும்? உற்பத்தி செய்து குவிக்கின்றன. இங்கே எங்கிருந்து சமூக மாற்றம் வரப் போகிறது?

ஊடகங்களின் வருவாயில் 80 முதல் 90 சதவிகிதம் விளம்பரங்களை நம்பியே இருக்கின்றன என்கிற இன்றைய நிலையில், மிக மோசமான, மக்கள் விரோத அக்கிரமங்களே நடந்துகொண்டிருந்தாலும் அரசுக்கு எதிரான குரல்கள் எழுவதில்லை. வணிக நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அல்லது விளம்பர வருவாய் சார்ந்த கல்வி நிறுவனங்கள் உள்பட வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலும் ஊடகங்கள் மூச்சடக்கிக் கிடக்கின்றன; அல்லது கிடக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.

எதுவுமே செய்யப்படவில்லையா? என்று கோபங்கொள்ளலாம்; செய்யப்படுகின்றன. ஆனால், எல்லாமே அவற்றின் `மையக் குறிக்கோளை’ விட்டு விலகிவிடாமல்தான் மேற்கொள்ளப்படுகின்றன!

எனினும், ஒரேயடியாக இதழ்கள் அனைத்தையுமே எதுவும் செய்யவில்லை என்று நிராகரித்துவிடவும் இயலாது. சமூக மாற்றத்தை நோக்கி என்றில்லா விட்டாலும் குறைந்தபட்சம் சமூகக் கடமையென்ற அளவிலேனும் துண்டு துண்டாகச் செய்திகளும் நிகழ்வுகளும் அதையட்டிய திருத்தங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

என்றாலும், இதழ்களில் எழுதப்படும் கட்டுரைகள், வெளியிடப்படும் செய்திகளால் ஏதேனும் பலன் விளைந்தால் அதுவொரு குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வு என்பதாகத்தான் கருதப்பட முடியுமே தவிர, சமூக மாற்றத்தை நோக்கியதாகக் கொள்ள முடியாது.

இந்த இடத்திலும் இதழ்கள் சார்ந்த சுயநலன்களும் இருக்கின்றன. தங்களைக் குறைந்தபட்சம் மக்களுக்கானவர் களைப் போல அடையாளம் காட்டிக் கொள்வதும், இதழ்களுக்கு உரிய அடிப்படையான காரம் மணம் குணம் இல்லாவிட்டால் ஊற்றிக் கொண்டுவிடும் என்ற வெற்றிக்கான வணிக உத்தியும்கூட இவற்றுக்குக் காரணங்களாகக் கருதப்படலாம். அல்லாமல் பத்திரிகை களுக்கென்ற தனித்ததொரு அடையாளம் இல்லா விட்டால் சோப்பு, சீப்பு, கண்ணாடி விற்கும் நிறுவனத்தைப் போன்றதாகிவிடும் ஆபத்தும் இருக்கிறதல்லவா?

ஊழல்கள் அவ்வப்போது வெளிப்படுத்தப்படு கின்றன, அரசமைப்பின் சீர்கேடுகள் வெளிப்படுத்தப் படுகின்றன, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் அம்பலப்படுத்தப்படுகின்றன (ஆனால், எல்லாமே துண்டு துண்டாக! அரசியல் சார்ந்தவையாக இருக்கும் தருணங்களில் அவற்றுக்கொரு பின்னணியும் இருக்கும்).

காவல்துறை பற்றி, ரயில்வே பற்றி, ஆளுங்கட்சி பற்றி, குறிப்பிட்ட தலைவர்களைப் பற்றி, அல்லது குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில்லை என்பதில் இதழ்கள் உறுதியாக இருக்கின்றன. இதழ் களுக்குத் தக்கவாறு இந்தப் பிரச்சினைகள் வேறுபடும், அவ்வளவே.

அண்மைக் காலத்தில் நம் எல்லாருடைய கண் முன் நடந்தவற்றையே எடுத்துக்கொள்ளலாம். பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலங் கையில் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப் பட்டார்கள்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காகக்கூட கவலைப்பட வேண்டாம், மக்கள் அல்லவா? உயிர்கள் அல்லவா? எவ்வளவு குழந்தைகள்? இளம்பெண்களுக்கு நேர்ந்த அவலம் எத்தகையது? முதியோர் என்ன கதிக்கு ஆளானார்கள்? காரண காரியத்தைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம், நடந்தவையெல்லாம் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அல்லவா?

அரசுகளையும் அரசியல்வாதிகளையும்கூட ஒதுக்கி விடுங்கள். ஊடகங்கள் என்ன செய்தன? தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி, ஒட்டுமொத்தமான மக்கள் கருத்தை உருவாக்க இவை ஏன் தவறின?

(இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் வெளிவரும் புகழ்பெற்ற ஆங்கில நாளிதழொன்றில் வெளியான செய்தி நினைவுகூரத்தக்கது. `தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சுமாரான ஒரு நடிகையின் கால்களில் நிறையவும் மயிர் வளர்ந்து விட்டிருக்கிறது. இதையெல்லாம் கவனித்து (மழித்து?) தன்னுடைய அழகில் அக்கறை செலுத்த வேண்டாமா அவர்?’ என்று வருத்தப்பட்டுக் கேள்வி எழுப்பியதுடன், கால்களைக் குளோஸ் அப் ஆகவும் படமெடுத்து வெளியிட்டிருந்தது.)

சரி, சந்தன மர வீரப்பன் பிரச்சினை காலத்தில் அதிரடிப் படை வீரர்களால் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினர், இங்குள்ள தமிழர்கள்தானே, அவர்கள் நிலை பற்றி; இப்போதும் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் பற்றி...?

மக்களைச் சமூக மாற்றத்தை நோக்கி நகர்த்த, இயக்கமாக எடுத்துச் செல்ல இன்றென்ன பிரச்சினைகள் இல்லாமலா இருக்கின்றன? பொன்னுலகமா இங்கே இருக்கிறது? ரௌடிகள், லஞ்சம், சாதிவெறி... (சாதிகளை முன்னிறுத்தி, தூண்டிவிட்டு லாபம் பார்க்க நினைக்கும் தலைவர்களையும் இயக்கங்களையும் புறக்கணிப்பது, இருட்டடிப்புச் செய்வதென பத்திரிகைகள் அனைத்தும் முடிவு செய்தால்...)

வெறும் அரசியல், திரைப்படம், குற்றங்கள் மட்டும் அல்ல, அவற்றால் நடத்தப்படும் வியாபாரமும் பெறப்படும் லாபமும் மட்டுமல்ல இதழ்களுக்கான நோக்கம். சமூக மாற்றத்துக்கென ஒவ்வோர் இதழும் உரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பது இதழ் களுக்கான வரலாற்றுக் கடமையும்கூட.

சமூக மாற்றத்தில் இதழ்களின் அல்லது ஊடகங் களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தையே கேள்விகளாக மாற்றி, இன்னொரு கால் நூற்றாண்டுக்குப் பிறகு, வரலாறு எழுப்பும்போது, இன்றைய இதழ்களின் பதில், வெறும் கள்ள மௌனமாக மட்டுமே இருக்க முடியும்!

[தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சி.பா. ஆதித்தனார் நினைவுக் கருத்தரங்கில் நிகழ்த்திய உரையின் விரிவான கட்டுரை]

Pin It