அஞ்சுவன்னம் சொல்லியல் அடிப்படையிலும், வரலாற்றியல் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அஞ்சுவன்னத்திற்கு ஒரு அர்த்தம்தான் உண்டு,ஒரு உச்சரிப்பு முறைதான் உண்டு என்று சொன்னால் அது போதாமையாகும்.

அஞ்சுவன்னம், அஞ்சுவண்ணம், அஞ்சுவர்ணம், அஞ்சுவனம் என இச்சொல் பல்வித உச்சரிப்புகளையும் கொண்டுள்ளது.

1) பொதுநிலையில் அஞ்சுவன்னத்தார் என்பது முஸ்லிம்களைக் குறிக்கும் சொல். அஞ்சுக்கடமைகளைப் பேணுவோர், அஞ்சுநேரத்தொழுகையை நிறைவேற்று வோர், என்பதால் அஞ்சுவன்னத்தார் முஸ்லிம்களைக் குறிக்கிறது.

2) அஞ்சுவன்னத்தார் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நோக்கத்தைக் கொண்ட ஒரு இனமக்கள் அஞ்சுத்தெருக்களில் குழுமமாக வசிப்போர் என்றும் பொருள்படுகிறது.

அஞ்சுவன்னத்தார் வாழும்தெரு அஞ்சுவன்னம் தெரு என்றும் அஞ்சுவன்ன மக்கள் தங்கள் சமயக் கடமையை நிறைவேற்றும் பள்ளிவாசலை அஞ்சுவன்னப் பள்ளி என்று அழைப்பதாகவும் குறிப்பிடலாம்.

3) அஞ்சுமன் என்ற பார்சி சொல்லுக்கு மன்றம், சபை. குழு, என அர்த்தங்களும் உண்டு. இச் சொல் இன் ஜிமா என்ற அரபுச் சொல்லில் இருந்து உருவாக்கம் பெற்றது. இன் ஜிமாவிற்கு கூட்டம் கூடுதல் என்று பொருள்படும். ஜம் உ சொல்லிலிருந்து ஜமாத் சொல் உருவானது போல் அஞ்சுமன் சொல்லின் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஜமாத்திற்கு ஒரே நோக்கத்திற்கு ஒன்று சேரும் ஒரே இனமக்கள் என்ற பொருளும் உண்டு.

4) சோழநாட்டுப் பகுதியில் நாகப்பட்டினம், பாண்டியநாட்டின் தென்பகுதி நாஞ்சில்நாட்டின் திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் தென்காசி, கடைய நல்லூர், இராமநாதபுரம், தூத்துக்குடி குலசேகரப் பட்டினம், கடற்கரையூர் எனத் தமிழகத்தின் பல பகுதி களிலும் முஸ்லிம்களின் இருப்பிடங்களின் அடையாள மாக அஞ்சுவன்னம் இருக்கிறது.

5)தமிழ்ச்சமூக அமைப்பின் அடுக்குமுறையில் இந்து வர்ணாசிரம முறையில் பிராமணர் (புரோகிதர்) சத்திரியர் (அரசர்-போர்வீரர்) வைசியர் (வணிகர்) சூத்திரர் (விவசாயிகள்) என நான்கு வர்ணங்கள் உண்டு. இந்த நான்கு வர்ணங்களுக்கும் உட்படாத இந்து அல்லாத அஞ்சாவது வர்ணத்தார் என்பதால் முஸ்லிம்களுக்கு அஞ்சுவன்னத்தார் என்ற பெயரிடுதலும் நிகழ்ந்திருக்கக் கூடும்.

6) அஞ்சுவன்னத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நெசவுத் தொழிலோடு சம்பந்தப்பட்டவர்கள். நெசவில் வண்ணங் களின் சேர்க்கை முக்கியமானது. வெள்ளை நிறத்தை சாயத்தில் நனைத்து வண்ண ஆடைகளாக மாற்றுவதும் துணி நெசவில் துணியின் விளிம்புக்கு அஞ்சுவகையான வர்ணங்களைப் பயன்படுத்துவதாலும் அஞ்சுவர்ணத்தார் என்ற பெயரிடுதல் நிகழ்ந்திருக்கக்கூடும். சென்னைப் பல்கலைக்கழக அகராதி அகரமுதலி அஞ்சுவன்னத்தார் என்பதற்கு நெசவு செய்யும் பழங்குடியினர் (A Tribe of Weavers) குறிப்பாக முஸல்மான்கள் என்கிறது.

7) மறைந்த இலங்கை முஸ்லிம் தமிழ்அறிஞர் உவைஸ் அஞ்சுவன்னத்தார் என்பதை அம் - சுவனம் - அத்து - ஆர் எனப் பிரித்தெழுதி அழகிய சுவனத்துக்கு உரிமை உடையவர் என விளக்குகிறார்.மேலும் பல விளக்கங்களை அளிக்கும் அவர் அஞ்சுவன்னத்தார் என்பவர் பாரசீக நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த அஞ்சு வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார். ஆசிம் வமிசம் (நபிநாயகம்ஸல்வழியினர்) பக்கிரிவமிசம் (அபூபக்கர்ரலி வழியினர்) பாரூக்கிவமிசத்தினர் (உமர் ரலி வழியினர்) உமையாவமிசம் (உதுமான் ரலி வழியினர் இராணுவ யுக்தர்கள் (ராவுத்தர் எனப்படும் குதிரை வாணிகம், குதிரை ஏற்றத்தில் சிறந்து விளங்கியவர்) என அஞ்சுவகைக் குழுவினர் அஞ்சுவன்னத்தார் எனக் குறிப்பிடுகிறார்.

8) அஞ்சுவன்னத்தவர் என்ற சொல் நானாதேசிகர், மணிக்கிராமத்தார், ஐம்பேராயர், எண்பேராயர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் போன்ற சொற்களோடு கலந் திருப்பதின் அடிப்படையிலும். கல்வெட்டு ஆதாரங்கள், செப்பேடுகள், பழந்தமிழ் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையிலும் சில பதிவுகளை எட்டமுடிகிறது.

அஞ்சுவன்னத்தார் கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை கேரளத்திலும் தமிழகத் திலும் வணிகம் செய்த இஸ்லாமிய வணிகக் குழுவினர் என்பதான கருத்தும் அதில் ஒன்று.

9) கல்வெட்டுத்துறை ஆராய்ச்சியாளர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் முஸ்லிம்களின் பழமையான பல்சந்தமாலை என்னும் நூலில் நாகப்பட்டினத்தைப் புகழும் தனிப்பாடல் ஒன்றில் இடம்பெறும்

அஞ்சுவண்ணமும் தழைத்து

அறம் தழைத்த வானவூர்

என்பதான வரிகளில் குறிப்பிட்டு நாகப்பட்டினத்தில் அஞ்சுவண்ணத்தவர் வாழ்ந்த செய்தியை உறுதிப்படுத்து கிறார். இந்நூலில் அயன்மிகு தானையர் அஞ்சு வண்ணத்தவர் என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

10) முஸ்லிம்களின் பழமையான பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியம் பல்சந்தமாலை.

தமிழ் இலக்கிய வரலாற்றியல் அறிஞர் மு.அருணா சலம் பல்சந்தமாலையின் ஒரு பகுதியைக் குறிப்பிடுகிறார்.

யவனராசன் கலுபதிதா முதல் எண்ண வந்தோர்

அயல்மிகு தானையர் அஞ்சுவண்ணத்தவர்

என்பதான வரிகளில் அஞ்சுவண்ணத்தவர் இடம் பெறுவதும், யவன்ராசன் கலுபதி என்பது இஸ்லாமிய சமய ஆட்சியாளரான கலிபாவை குறிப்பிடும் சொல்லாகும் என்கிறார்.

தமிழகத்தில் அரபுவணிகர்களான இஸ்லாமியர் களும் இறைநேசர்களும் கடற்கரைப்பகுதிகளிலும் ,பட்டணங்களிலும் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்தனர். சங்க காலத்திலும் பிறகும் இவை யவனச் சேரி என்று அழைக்கப்பட்டன. கிழக்குக் கடற்கரையில் அமைந்த தேவிபட்டினத்தின் தென்பகுதி,பெரிய பட்டினத்தின் வடக்குப் பகுதி கீழக்கரைக்கு அண்மைக் கிராமம் அரபுநத்தக்காடு,நத்தக்காடு,நத்தம் என அழைக்கப்படுகின்றன.

இவ்வாறாகவே தமிழகத்தில் அரபுகளின் வசிப்பிடங் களாக இருந்த யவனச்சேரிகளே பிற்காலத்தில் நத்தம் காடுகளாகிக் கல்வெட்டுகளில் அஞ்சுவன்னம் ஆயிற்று என இஸ்லாமிய வரலாற்றாய்வாளர் எஸ்.எம்.கமால் குறிப்பிடுகிறார்.

11) கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பாஸ்கர ரவி வர்மனின் கோட்டயம் செப்பேடு ஒன்றில்,

ஈசுப்பு ராப்பனுக்கு மணிக்கிராம்மும் அஞ்சு வண்ணப் பேறும் கொடுத்தோம் என்பதன் அடிப் படையில் அஞ்சுவண்ணப் பேறு என்பது அஞ்சு வண்ணத்தார் மீது விதிக்கப்பட்ட ஒரு வரியாகக் கருதுவதையும் குறிப்பிடலாம். முனைவர் தொ.பரம சிவம் இத்தகைய வரலாற்றியல் தரவுகளைத் தனது அறியப்படாத தமிழகம் நூலின் கட்டுரை ஒன்றில் விளக்குகிறார். ஒன்பது, பத்தாவது நூற்றாண்டின் மாறவர்மனது தீர்த்தாண்ட கல்வெட்டிலும் அஞ்சு வண்ணம் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.

12)பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்து ஆலிப் புலவரின் மிகுராஜ் மாலை இலக்கியம். இக் காப்பியத்திலும்

அண்டர் தருவெனக் கொடுக்கு மஞ்சு வண்ண முசுலி மவர்கள் - என

அஞ்சுவண்ணம் என்பதான சொல்லாடல் முசுலிம்களின் பண்பாட்டு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இலக்கியத்தரவுகள், கல்வெட்டுகள் அடிப் படையிலும் அஞ்சுவண்ணம் பற்றிய புரிதலை நாம் இன்னும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

Pin It