ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை’ தானும் சிந்தித்து, மக்கள் பலரையும் சிந்திக்க வைக்கப் பன்முக மாட்சிகளையுடைய பற்பல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஈரோடு மாநகரில் நடத்தி வருகிறது. “தாரகை நடுவண் தண்மதி போல” அதன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தனி மகுடம் வைத்தாற்போல் அமைந்ததுதான் “ஈரோடு புத்தகத் திருவிழா”.

முதலில் “புத்தகக் கண்காட்சியைப் புத்தகத் திருவிழா என்று பெயரிட்ட பொருத்தத்தையும், சிறப்பினையும், நாம் பாராட்டியே ஆக வேண்டும். கண்காட்சியென்றால் சென்று கண்ணாரக் கண்டவர் மட்டுமே மகிழ்வர். ஆனால் திருவிழா, தேர்த் திருவிழா என்றால் ஊர் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுண்டாகும். ‘ஊர்கூடி’த்தானே திருவிழா எடுப்பர். அத்தகைய சீரும், சிறப்பும், பீடும், பெருமையும் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு உண்டு.

மக்கள் சிந்தனைப் பேரவையின் சிந்தனையில் பூத்த இவ்வாடாமலரான புத்தகத் திருவிழா 2005ஆம் ஆண்டு ஒரு கல்யாணமண்டபத்தில் 75 அரங்குகளோடு தொடங்கப் பட்டது. ஈரோடு இரபு பகலாக இயந்திரமாக இயங்கும் தொழில் நகரம் ஆயிற்றே. இங்கு “புத்தகக் கடை விரித்தால் கொள்வார்களா?” என்று பதிப்பகத்தார் - புத்தக வியாபாரிகள் சிலர் பயப்பட்டதுண்டு.

ஆனால் மக்கள் சிந்தனைப் பேரவையின் விளம்பர, பிரச்சார உத்தியினால் புத்தகக் திருவிழாவின் தகவல் அறிந்த போது மக்கள் காந்தம் போல் ஈர்க்கப்பட்டு புத்தகத் திருவிழாவிற்கு வந்து புத்தகங்களை அள்ளிச் சென்றனர். சோதிடம், வாஸ்து, சமையல் கலை முதலிய நூல்களை விட இலக்கியம், வரலாறு, ஆய்வுக் கட்டுரை நூல்கள், சான்றோர் சுயசரிதைகள், அகராதிகள், சுயமுன்னேற்ற நூல்களே அதிகமாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் விற்பனை யானது. பதிப்பகத்தார்களும் - விற்பனையாளர்களும் மிக மகிழ்ந்தனர். ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்ளாத நிறுவனங்கள் அடுத்த ஆண்டு போட்டி போட்டுக் கொண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கேற்கப் புதிய படைப்புக்களோடு முன்வந்தனர். இன்றும் வந்து கொண்டு உள்ளனர்.

75 அரங்குகளோடு 2005-இல் தொடங்கப்பட்ட ஈரோடு புத்தகத் திருவிழா இன்று 2011இல் 200 அரங்கு களோடு அபரிமிதமான உயர் வளர்ச்சியைப் பெற்றதே இது மந்திரத்தில் விழுந்த மாங்காய் அல்ல. மக்கள் சிந்தனைப் பேரவையின் கடும் முயற்சியாலும் பல்வேறு உத்திகளாலும் விளைந்த முன்னேற்றமாகும்.

இன்று உயர்ந்த விருட்சம்போல் 200 கிளைகள் ஆன அரங்குகளைக் கொண்டு புத்தகத் திருவிழா விளங்குகிறது. விரிந்த விருட்சம் நம் கண்களுக்குக் காட்சியளிக்கிறது. இவ்விருட்சம் உயர்ந்தோங்கி வளர்ந்ததற்கும், நின்று நிலைப்பதற்கும் காரணம் அதன் ஆணிவேரும், பக்க வேரும் சல்லிவேருமேயாகும்.

ஓராண்டு புத்தகத் திருவிழா வெற்றிகரமாக முடிந்த அடுத்த நாளே அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவை இன்னும் வெற்றிகரமாக, சிறப்பாக நடத்துவது பற்றி மக்கள் சிந்தனைப் பேரவையினர் சிந்திக்கத் தொடங்கி விடு கின்றனர். ஒரு செயல் வெற்றிபெறத்தக்க திட்டமிடுதலே முதற்காரணம் ஆகும்.

‘சுவர்கள் முட்டாளின் காகிதம்” என்று அறியாதவர் எவரோ தவறாகக் கூறிவிட்டால் சுவர்கள்தான் மக்கள் கவனத்திற்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் மகத்தான தகவல் தொடர்பு சாதனமாகத் திகழுகிறது. இந்தப் பேருண்மையை நன்கு உணர்ந்த மக்கள் சிந்தனைப் பேரவையினர் எளிதாக மக்கள் பார்க்கும் பொது இடங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் அவர் கண்ணைக் கவரும் வகையிலும், கருத்தைக் கவரும் வகையிலும் வண்ண விளம்பரங்களைச் செய்ய சுவரில் எழுதியவர்களைப் பணித்தனர் (தேர்தல் கமிஷனால் வாய்ப்பை இழந்த ஓவிய எழுத்தர்கள் வருமானம் பெற்றனர்.)

ஈரோடு மாவட்டம் மட்டும் அல்ல; கொங்கு மண்டலத்தில் அண்டை மாவட்டங்களிலும் தக்க முக்கிய மான இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இம்முயற்சி எல்லோருக்கும் எளிதாகப் புத்தகத் திருவிழா பற்றிய தகவலைக் கொண்டு சென்றது. பள்ளிகள் கல்லூரி களில் நிர்வாகத்தினர் அனுமதியோடு நூலகம், நூல்களின் சிறப்பைப் பற்றியும் புத்தகத் திருவிழாவிற்கு வந்து புத்தகங் களைப் பார்வையிடுவதும் தேவையான புத்தகங்கள் வாங்குவதும் அவசியம் என்று மாணவ - மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் விளக்கக் கூட்டங்கள் பல நடைபெற்றன. மக்கள் எல்லோருக்கும் புத்தகத் திருவிழாவைப் பற்றி விளம்பரம் செய்யப்பட்டது. புத்தகத் திருவிழாவைப் பற்றி அறியாதார் அறியாதாரே.

நாட்டில் நாளைய குடிமக்களான மாணவ - மாணவியர் புத்தகம் வாங்கும் ஆர்வத்தைத் தூண்ட சில கவர்ச்சிகரமான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 250 ரூபாய்க்கும் அதற்கு மேலும் புத்தகம் வாங்கும் மாணவ மாணவியருக்கு “புத்தக ஆர்வலர்” என்ற சான்றிதழ் வழங்கப்பட்டன. இதை மாணவர் உலகம் பெறும் பேறாகக் கருதியது.

ஆண்டு முழுவதும் கிடைக்கும் சிறிய அளவிலான காசுகளைச் சேமித்து (அடுத்த ஆண்டு) சேமித்த பணத்தைக் கொண்டு தேவையான நூல்கள் வாங்க மாணவ - மாணவி யருக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன. மாணவ - மாணவியர் எளிதாக உண்டியல் வாங்கும் வகையில் அடக்க விலைக்கும் குறைவாக அவை வழங்கப்பட்டன. மாணவ - மாணவியர் போட்டி போட்டுக்கொண்டு உண்டியல் களைப் பெற்றுச் சென்றனர். மறைமுகமாக வீண் செலவைத் தடுக்க இம்முயற்சி சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தியது.

பொது மக்களும் அலுவல்களில் ஈடுபட்டோரும் மாலை நேரத்தில் தான் பெரும்பாலும் புத்தகக் கண் காட்சிக்கு வருவர். முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 3-4மணிவரை பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் பல்லாயிரக்கணக்கில் வந்து சாரி சாரியாக “பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல்” என்பார்களே அதுபோல அரங்கு களில் கூடியிருப்பதும் பெரும்பாலோர் புத்தகங்கள் வாங்குவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மாணவ - மாணவியர் புத்தகம் வாங்கப் பணம் அளிக்கும் அவர்கள் பெற்றோர்களும் மாணவ - மாணவியர்களைப் பள்ளி, கல்லூரிப் பேருந்துகளில் அழைத்துவர ஏற்பாடு செய்யும் நிர்வாகிகளும் அவர்களை வழிநடத்திவரும் ஆசிரியர் - ஆசிரியைகளும் மிகவும் பாராட்டுக்குரிய வர்கள். இது வேறு எந்தப் புத்தகக் கண்காட்சியிலும் நடைபெறாத அரிய நிகழ்ச்சியாகும்.

இன்னொரு முக்கியமான செய்தி குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சென்னை, மதுரையில் நடத்தும் புத்தகக் கண்காட்சிக்கும் மிகப் பெரிய அரசு சார்ந்த நிறுவனமான நெய்வேலி நிலக்கரி சுரங்கம் நடத்தும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ஆனால் ஈரோடு புத்தகத் திருவிழாவை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையினர் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் சிலர் குறைந்த கட்டணம் வசூலிக்கலாம் என்றும், உண்டியல் வைக்கலாம், விரும்பி யவர்கள் பணம் போடலாம் என்றும் சொன்ன யோசனையை மக்கள் சிந்தனைப் பேரவையினர் ஏற்க மறுத்துவிட்டனர். இலவச அனுமதி இன்றும் தொடர்கிறது; நாளையும் தொடரும்.

200 அரங்குகளிலும் தமிழகத்தில் தலைசிறந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். வடமாநிலங் களிலிருந்து பதிப்பாளர்கள் பலர் வருகை புரிகின்றனர். இது போட்டித் தேர்வுகள் யுகம். ஆனால் இந்தியாவில் நடைபெறும் மாநில / மையத் தேர்வுகளுக்கான விளக்க நூல்கள் விவரங்களடக்கிய அரங்குகளும், புதிய தகவல் நுட்ப தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல வகைப் பட்ட பல்லாயிரக்கணக்கான குறுந்தகடுகளும் கிடைக்கும் அரங்குகளும் எண்ணற்ற பல பதிப்பாளர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கென்று புதிய நூல்களைத் தயாரித்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்தோர், அயல்நாட்டுத் தமிழ்ப் படைப் பாளர் நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களைக் காட்சிப் படுத்துவதோடு பணி நின்றுவிடுவதில்லை. பார்வையாளர்கள் பொது அறிவு பெறும் வகையில் சிறப்பு அரங்குகள் அமைக்கப் படுகின்றன. விடுதலை வேள்வியில் பங்கு கொண்ட தியாக தீபங்கள் அரங்கு, விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்கள் அரங்கு (2010) அமைக்கப்பட்டன. இவ்வாண்டு (2011) ‘பாரதிதாசன் வாழ்வும் பணியும்’ என்ற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு அரங்குகள் பெரிதும் பயனுடையன எனப் பாராட்டியுள்ளனர்.

புத்தகத் திருவிழாவில் வாங்கும் நூல்கள் அனைத் திற்கும் 10 சதவீதம் தள்ளுபடியுண்டு. சில நிறுவனங்கள் அதற்கு மேலும் தள்ளுபடி அளிக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. அரங்கங்களுக்குக் குறைவான கட்டணம் வசூலிப்பத் துடன், விரும்பியோர் தங்க தக்க ஏற்பாடுகளும் செய்யப் படுகின்றன. எல்லா ஏற்பாடுகளும் அனைவருக்கும் திருப்தி யளிப்பதாக உள்ளது.

புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கு, பட்டிமன்றம், கவி யரங்கு நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பானவை. தமிழகத்தின் மிகச் சிறந்த கவிமார்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெற்றுச் சிறப்பிக்கின்றனர். பார்வையாளர்கள் அனைவருக்கும் இருக்கைகள் போடப்பட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொள்வது வேறு எங்கும் நடைபெறாத அதிசயமாகும்.

அரங்கம் நிறைந்து வெளியே கூடியிருக்கும் மக்கள் நிகழ்ச்சிகளைக் காண உரிய திரைகள் வெளியே அமைக்கப் படுகின்றன. சொற்பொழிவுகள் அனைத்தும் பதிவு செய்யப் பட்டு குறுந்தகடு மூலம் மக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் கொங்கு மண்டல - குறிப்பாக ஈரோடு மாவட்ட எழுத்தாளர்கள், படைப் பாளர்களில் ஒருவர் பாராட்டப்படுகிறார். அவர்களில் பலரைப் பொதுமக்கள் நேரில் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ‘குடத்துள் விளக்காக’ உள்ள சில படைப் பாளர்கள் பொது மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டுப் பாராட்டப்படுவது சிறப்புக்குரியதாகும்.

ஈரோட்டு வள்ளல் பெருமக்களான கல்லூரி, பள்ளி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கொடையாளிகள் மாலை நேர நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்று மக்கள் சிந்தனைப் பேரவையின் சிரமத்தைப் பெரிதும் குறை கின்றனர். சென்ற ஆண்டு (2010) மாலை நேர நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசு தலைவர் மாண்புமிகு அ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இது ஈரோட்டு வரலாற்றில் போற்றத்தக்க பெரும் நிகழ்ச்சியாக அமைந்து எல்லோ ராலும் பாராட்டப்பட்டது.

புத்தகத் திருவிழா தொடங்கும் சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அனைத்துப் பத்திரிகைகளும் புத்தகத் திருவிழா பற்றிய செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து நன்கு விரிவாக வெளியிடுகின்றன. நகர் முழுவதும் ஊர்தி விளம்பரம் செய்யப்படுகிறது. அலைபேசிக் குறுஞ்செய்திகளும் அனுப்பப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் அச்சிட்ட ஆர்வமிக்க மாணவத் தொண்டர்களால் டுகள் தோறும் அவை விநியோகிக்கப்படுகின்றன.

புத்தகத் திருவிழா தொடர்பான செய்திகள் கொடைக் கானல் வானொலியிலும் அஞ்சல் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நூற்றுக்கணக்கான மனித சக்திகளையுடைய ஒரு பெரிய நிறுவனம்தான் பெரும் பொருட் செலவோடு இவை போன்று நிகழ்ச்சிகளை நடத்த இயலும் என்றாலும் ஆர்வமும், அர்ப்பணிப்பும் அதில் இருக்க இயலாது.

மக்கள் சிந்தனைப் பேரவையில் மூத்த பெருமக்கள் பலர் அங்கம் பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், பலரை வைத்து ஏவித் தொழில்புரியும் பெரிய தொழில் விற்பன்னர்கள், வணிகப் பெருமக்கள் பலர் புத்தகத் திருவிழா ஏற்பாடுகளில் பக்கதுணையாக நின்று பணி செய்யும் காட்சியைக் காணலாம்.

ஆர்வம்மிக்க பல தொண்டுள்ளம் கொண்ட இளைஞர்கள் தன்னலம் பாராமல் உழைக்கும் அரிய காட்சிகள் இங்குதான் நிகழ்கிறது. பொதுப் பணிகளின் பயிற்சிக்களமாக அவர்களுக்குப் புத்தகத் திருவிழாப் பணி அமைந்துள்ளது.

பட்டாம்பூச்சிகள் போல், சிட்டுக்குருவிகள் போல் புத்தகத் திருவிழாவில் அங்கிங்கெனாது எங்கும் நீக்கமற நின்றும் ஓடியும் பணி செய்யும் மாணவமணிகட்கும் இது பொதுச் சேவையின் பயிற்சிக்களமாக அமைந்துள்ளது. மேடையில் அவர்களைக் காண்பதும் அவர்கள் ஆற்றும் பணியும் எல்லோருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.

புத்தகத் திருவிழாவில் கோடிக்கணக்கில் புத்தகங்கள் விற்பனையாவது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஊட்டக் கூடியதோர் செய்தியாகும். ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நன்கு திட்டமிட்டுப் பெரும் சிறப்போடு நடத்தும் இப்புத்தகத் திருவிழாவின் மூலம் ஏற்படுவது நாட்டின் அறிவுப் புரட்சியாகும். இது நாளை புதிய உலகம் பிறக்கும் என்பதன் சீரிய அடையாளம் ஆகும்.

மக்கள்

சுவாசித்தால் மட்டும் போதாது

வாசிக்கவும் வேண்டும்

என்பதைப் புரிந்துகொண்டனர். “புத்தகம் வாங்குவது செலவு அல்ல சேமிப்பு” என்றபதைக் கண்டுகொண்டனர்.

படிப்பாளிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் மனநிறை வளிக்கும் இத்திருவிழாப் போல ஊர்தோறும் நடைபெற வேண்டும். நடைபெற்றால் புத்துலகம் படைக்கப்படும் என்பது உறுதி.

Pin It