வெவ்வேறு வகையான நிலப்பரப்புகளைக் கொண்ட உலகத்தின் வரலாற்றில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவே சமூக வரலாறாக உருப்பெற்றது. இதனை Man-Environment Relationship என்று கொள்ளலாம். ஒத்த நிலப்பரப்பியல் கூறுகளைக் கொண்டிருந் தாலும் ஆற்றுச் சமவெளிகளில் தோன்றிய நாகரிகங்கள் வெவ்வேறு தனித்தனித் தன்மைகள் கொண்டிருந்தன. அந்த வகையில் சிந்துவெளியில் உருவெடுத்த மொகஞ்சோதரோ - அரப்பா நாகரிகமும் கங்கைச் சமவெளியில் தோன்றிய ஆரிய நாகரிகமும் ஒன்றுக்கொன்று வேறு வேறு தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. நவீன இந்தியாவில் ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப வரலாறு எழுதுவோரின் உளப்பாங்கும் மாறிவரும் நிலையினை அவதானிக்கலாம். இந்நிலையில் 1990களில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தவுடன் வரலாறு எழுதுவோர் இந்தியாவின் பழமைத்துவத்தினை இந்துத்துவப் பழமைத்துவம் என்று வலியுறுத்த வேண்டி ஆரியப்பண்பாட்டினை சிந்துவெளி அரப்பா பண்பாட்டின் தொடர்ச்சி என்று வாதிடு கின்றனர். இந்நிலையில் பேரா.ஆர்.எஸ்.சர்மா ஓரவஞ்சனை உள்ள இப்போக்கினை உடைப் பதற்கு ஆரியரின் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ட றியும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் விளைவே, ஆரியரைத் தேடி என்னும் நூல். ஒப்பாய்வு முறையில் இந்நூல் எழுதப்பட்டது. ஆரியப் பண்பாட்டின் முக்கிய கூறுகளான குதிரையின் பயன்பாடு, தீவழிபாடு, சோமவழிபாடு, விலங்குப் பலி, தேர் மற்றும் ஆரைச்சக்கரம் போன்றவற் றினைச் சிந்துவெளி, அரப்பா போன்றவற்றில் தேடி, இல்லை என்ற முடிவிற்கு வருகிறார். இதற் காகத் தொல்லியல் தளங்களின் புதைகுழிகளில் கிடைத்த சான்றுகளைப் பகுப்பாய்வு செய்து முடிவு காண்கிறார்.

ஓர் இனத்தின் தோற்றுவாய்பற்றி அறிந்து கொள்ளப் போதுமான பொருளியல் சான்றுகள் கிட்டாதபோது அவ்வினம் வேறுவேறு இடங் களில் காலங்காலமாகப் பின்பற்றிவந்த சமய வழி பாட்டு வழக்குகளும், விலங்கினத்து, பறவை யினத்து, தாவர இனத்துப் பெயர்களும் பெரு மளவு உதவும். குதிரை ஓடிய வழியே ஆரியரும் ஓடினர். அப்படித்தான் இந்தியாவிற்கும் வந்தனர் என்பதை இவ்வாய்வின் வழியே அறியலாம்.

இலக்கியங்களை முதன்மைச் சான்றுகளாகக் கருத இயலாத நிலையில் அகழாய்வில் கிடைத்த பொருளியல் சான்றுகளின் அடிப்படையில் ஓர் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை இனம் காண லாம்.

சிந்து நாகரிகத்தின் குறிகளை (எழுத்துப் பொறிப்புகள் என்பது தவறு) திராவிட மொழிகளோடு ஒப்பிட்டு அதனைத் தமிழ்மொழி அளவிற்கு நீட்சியாக்கி சிந்து நாகரிகம், தமிழ் நாகரிகம் என்று பிதற்றும் அளவிற்கு ஆய்வுநிலை உள்ளது. சிந்துவெளிக் குறிகளை இடமிருந்து வலமாக எழுதும் முறையில் தோன்றிய திராவிட மொழி யோடும் தமிழ்மொழியோடும் இணைத்துப் பார்ப்பது பொறுத்தமல்ல. வடக்கில் இந்துத்துவவாதிகள் சிந்து நாகரிகத்தினை இந்துநாகரிகத்துடனும் தெற்கில் அதனைத் தமிழ் தேசியத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இரண்டுமே திருட்டுப் பார்வைகள். சிந்து நாகரிகத்தின் வரலாற்றுக் கூறுகளை மார்க்சிய முறையில் வரலாற்று இயங்கியல் முறையில் ஆய்வு மேற்கொண்டுவிடக்கூடாது என்பதற்காக இம் மாதிரியான fanatic பார்வை அறிஞர்களால் திணிக்கப்படுகிறது.

இம்மாதிரியான ஆய்வுச் சூழலில் ஆர்.எஸ்.சர்மாவின் நூல் பயனுள்ளது.

ஆய்வுக்களம்

யூரேசியா, அனடொலியா, தஜ்கிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், யூரல் மலைத்தொடர்கள் தொடங்கி சிந்துசமவெளி வழியே கங்கைச் சமவெளிவரை இந்நூலின் ஆய்வுக்களம் விரிந்துள்ளது.

ஆய்வுமுறை

அவெஸ்தா, ஹோமரின் நூல்கள், ரிக்வேத இலக்கியங்கள் போன்றவற்றில் குறிக்கப்பட்டுள்ள வரலாற்றுப்பூர்வமான இடங்கள், சடங்குகள், இடப்பெயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதன் மூலமும் இந்தியாவிலுள்ள வெவ்வேறு தொல் லியல் தலங்களிலுள்ள வெவ்வேறு மண்ணடுக்கு களில் கிடைத்துள்ள மட்கலங்களின் நிறங்கள், அளவுகள் போன்றவற்றை சிந்து, அரப்பா தலங் களில் கிடைத்தவற்றோடு ஒப்பிட்டு வேறுபாடு களைக் கண்டறிந்து சிந்து, அரப்பா பண்பாடு ஆரியப்பண்பாடு அல்ல என்று நிரூபிக்கின்றார். இதுவன்றி ஆரியர்களின் பூர்வீகம் என்று கருதப் படும் தொல்லியல் புதைகுழிகளில் கிடைத்துள்ள சமூக மிச்சங்களை, அடையாளங்களை இந்தியத் தொல்லியல் தலங்களில் கிடைத்துள்ள சமூக மிச்சங்களின் அடையாளங்களோடு ஒப்பிட்டு ஆரியப் பண்பாடு சிந்துப் பண்பாட்டினின்றும் வேறுபட்டது என்று முடிவு காண்கிறார். அதற் கான காரணங்களை அவரே வலியுறுத்துகிறார். இது தவிர, மொழியியல் பின்புலத்தில் சில சொற்களை ஆய்ந்து ஆரியப்பண்பாட்டின்மேல் திராவிடப் பண்பாடு உண்டாக்கிய தாக்கத்தினை அறிவுறுத்தும் வேளையில் அது சிந்து பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதனையும் நிறுவுகிறார்.

அறுபட்ட தொடர்ச்சி

சிந்து, அரப்பா பண்பாட்டின் பிந்திய காலத் திற்கும், ஆரியரின் தொடக்க காலத்திற்கும் இடை யேயான மனித சமூகத்தின் வரலாறு தொடர்ச் சியற்று உள்ளது. சிந்துவெளிக் குறிகளில் சில தமிழ்த் தொல்லெழுத்துக்களின் சாயல் இருந் தாலும், அவை பெரும்பாலும் பானையோட்டுக் குறியீடுகள். சிந்துவெளிக் குறியீடுகள் எடைக் கற்கள் போன்றவற்றில்கூடக் கிடைக்கின்றன. தமி ழகத்தில் அதுபோன்ற பொருள்களில் குறியீடுகள் கிடைக்கவில்லை. இடமிருந்து வலமாக எழுதப் படும் தமிழ்த் தொல்லெழுத்துக்களை வலமிருந்து இடமாகவா, இடமிருந்து வலமாகவா என்று கணிக்கவியலாத சிந்து குறியீடுகளைத் தமிழோடு இணைப்பது அதீதமான கற்பனையே. முழங்கை வரைக்கும் வளையங்களை வளையல்களாக அணிந்துள்ள பெண்ணுருவின் சிலையின் அடிப் படையிலும் அதன் முகத்தோற்றத்தின் அடிப் படையிலும் இன்றும் அதுபோன்று முழங்கை வரை வளையல்கள் அணிந்துள்ள பழங்குடி மலை வாழ் மக்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும். தாடியுடன் கூடிய அந்தக் குண்டு முகம் தமிழ் முகத்தோடு பொருந்தாது.

முன்னோடி வரலாற்று அறிஞர்கள்

1.     “இந்திய தேசியத்தினை அறிவியலின் வழியே இறுகக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடு பட்டிருந்த மஜூம்தார், நீலகண்ட சாஸ்திரி, பந்தர்க்கர், ராய்சவ்த்ரி போன்றோர் இந்தியப் பண்பாட்டின் உன்னதத்தின் நம்பிக்கையில் இருந்தாலும் அரப்பன் பண்பாடு ஆரியப் பண்பாடு இல்லை என்று உறுதியாக நம்பினர்” என்ற கருத்தினை ஆர்.எஸ்.சர்மா முன்வைக்கிறார். தம் ஆய்வின் தொகுப்பாகப் பின்வரும் கருத்துகளைத் தந்துள்ளார்.

ஆரியரும் அரப்பன் பண்பாடும்

2.     முற்றிவளர்ந்த அரப்பன் பண்பாடு கி.மு.2500 - 1700க்கு இடைப்பட்டது என்று நம்பப் படுகிறது. ஆனால், வேதமக்கள் சற்றுப் பின்னரே வருகிறார்கள். அரப்பன் மக்களுக்கும் பிறருக்கும் தொடர்பு இருந்ததுபற்றியான சாயல் இருந்தாலும் அதற்கான ஆதாரக் கூறுகள் இல்லை. ரிக்வேதப் பண்பாடு மேய்ச்சலையும் குதிரையினையும் மையப்படுத்திய ஒரு பண்பாடாகும். ஆனால், அரப்பன் பண்பாட்டில் குதிரையும் இல்லை, மேய்ச்சலும் இல்லை. கிடைத்த குதிரைகளின் எச் சங்கள் காலத்தால் மிகப் பிந்தியவை. அவெஸ்தா, ரிக்வேத நூல்களின் அடிப்படையில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு அடையாளம் காணப் பட்ட பண்பாட்டின் கூறுகளை ஒத்தவை அரப்பன் பண்பாட்டில் இல்லை. அரப்பன் மையங்கள் நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகரி னைக் கொண்டுள்ளன. கைத்தொழில்நுட்பம், வணிகம், தானியக்கிடங்குகள், இருந்ததற்கான வலுவான சான்றுகளைக் கொண்டுள்ளன. அரப்பன் கட்டடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. அவையே நகரிடையேயான சுற்றுப்பாதைகளைக் கட்டப் பயன்படுத்தப் பட்டுள்ளன. ரிக்வேதமோ இவை பற்றி எந்தத் தடயக் குறிப்புகளையும் கொண்டிருக்கவில்லை.

3.     ஆரியனின் தலைமைக் கடவுளான இந்திரன் கோட்டையை அழிப்பவன், Purandara என்று குறிக்கப்படுகிறான். சில வேளைகளில் Pur என்ற சொல்லின் பொருள் கோட்டையில் சூழப் பட்ட குடியிருப்பு என எடுத்துக்கொண்டாலும் அரப்பன் காலத்தின் பிந்திய காலப்பகுதியில் ஒருவேளை சிறிய குடியிருப்புகளையும் குறித்திருக் கலாம். இச்சொல் 1800 வாக்கில் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென்மத்திய ஆசியாவின் அண்டைப் பகுதிகளில் அழிக்கப்பட்ட கோட்டைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். பண்பாட்டினடிப்படையில் தானி என்பவர் எரியூட்டலுக்குப் பின் பிணத்தினை எரிக்கும் பழக்கம் மேற்கொண்டி ருந்த கும்லா இனமக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதி களில் அரப்பன் பண்பாட்டினை அழித்ததாக விவாதிக்கிறார். ரிக்வேதத்தில் ஆரியரின் ஆளு கைக்கு உட்பட்டுக் கோட்டைகள் இருந்ததாகக் குறிப்புகள் இல்லை என்பது இங்கே குறிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆரியர் அக்னியிடம் கோட்டையைக் காப்பது போல எம்மைக் காக்க வேண்டுமெனத் தொழுதனர். பின் வேதகாலப் பகுதிகளில் தேவர்களிடம் கோட்டைகள் இல்லாததால் அசுரர்களிடம் தோற்க வேண்டியதாகிவிட்டது.

4.     அரப்பன் எழுத்துக் குறிகளை சமஸ்கிருத மொழியின் மூலம் படிப்பது பயனற்றுப் போனது. இதுவரை, தமிழ் அல்லது தொல் திராவிடம் என்பதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டவர்களின் கருத்துகளை அறிஞர்கள் ஏற்கவில்லை. எலாமைட், சுமேரியன், எகிப்தியன் போன்ற பல மொழிகளின் உதவியுடன் அரப்பன் எழுத்தினைப் படிக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தோ ஆர்யன் மொழியில் அரப்பன் எழுத்தினை எழுதியதற்கான வாய்ப்பு கள் சிறிதும் இல்லை. இந்தோ ஆர்யன் மொழிகள் இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்கில் அங்கிருந்து கிழக்காகவும் தெற்காகவும் பரவிற்று. அரப்பன் வட்டாரத்தில் இருந்த சில மொழித் தடயங்கள் அவ்வட்டாரங்களில் முதன்முதலில் இருந்து வந்த மொழி இந்தோ ஆரியர் அல்ல என்பதையே காட்டுகிறது. சிந்துவிற்கு மேற்கே பலுசிஸ்தானத்தில் திராவிடக் குடும்பத்தின் பிராகுயி மொழி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. பிராகுயிமொழி பேசப்படும் பகுதி பரந்த அளவில் திராவிட மொழி பேசப்பட்டு வந்த ஒரு பெரும் நிலப்பரப்பின் எஞ்சிய பகுதியாகத் தோன்றுகிறது. தற்போது இப்பகுதி இந்தோ ஆரிய மொழி பேசப்படும் கடல் போன்ற ஒரு பெரும் நிலப்பரப்பின் நடுவில் தீவு போன்று உள்ளது. ஆனால் இது பண்டைக் காலத்தில், இன்று ஈரான் என்று அறியப்படும் நிலப்பரப்பில் தொல் - திராவிட வாழிடங்களுடன் தொடர்பு கொண்டு இருந்திருக்கலாம்.

5.     ஹர்மத்தா என்பவர் இக்குடியிருப்புப் பகுதிகளை கொப்த்தக், ஷரிஷோக்தா என்னும் இனத்தாருடையதாக அடையாளம் காண்கிறார். இந்தோ ஆரியர்கள் அல்லது தொல் இந்தியர்கள் துணைக் கண்டத்தின் இப்பகுதியில்தான் முதலில் தங்கினர். அவர்களிடையேயான ஒத்திசைவான தொடர்பால் திராவிட மூலத்திலிருந்து பல சொற்கள் சமஸ்கிருத மொழிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இச்சொற்களெல்லாம் விந்திய மலைக்குத் தென்பகுதியிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், இந்திய தீபகற்பத்தில் கி.மு.300க்கு முன்பு திராவிட மொழிக்கான கல் வெட்டுகள் தோன்றவில்லை (ஆனால் அண்மை யில் கண்டுபிடிக்கப்பட்ட புலிமான்கோம்பை கல்வெட்டு கி.மு.300க்கு முந்தியது என்ற கருத்து நிலவுகிறது) அம்மொழியின் தென்னகத்திற்கான வருகையை கி.மு.1000க்கு முன்பாகக் கருத முடியாது.

6.     திராவிட மொழி எலாமைட்டுடன் தொடர்புடையது என்று அண்மையில் ஒரு கருத்து நிலவுகிறது. எலாமைட்டுகள் கி.மு.5000-இல் ஒரு பெரிய அரசினைத் தென் ஈரானில் தோற்றுவித்தனர். அவர்கள் சுமேரிய எழுத்தினை ஒத்த ஒருவகை எழுத்தினைப் பயன்படுத்தினர். அதன் காலத்தினை கி.மு.நாலாயிரத்தாண்டின் பிற்பகுதியாகக் கொள்ளலாம். எனவே இவ் வெழுத்தினை எலாமைட் என்று கொள்ளலாம். கி.மு.3000 - 4000 ஆண்டுகளில் தெற்கு ஈரானில் இந்தோ ஆரியர்கள் இருந்தார்கள் என நினைத்து கூடப் பார்க்க முடியாது. ஏனென்றால் அங்குத் திறம் வாய்ந்த எலாமைட் அரசு இருந்தது. கி.மு.மூவாயிரத்தாண்டின் எலாமைட் கல் வெட்டுகளிலுள்ள மொழியினைத் திராவிட மொழிகளோடு தொடர்புபடுத்தலாம். மக் அல் பின் என்னும் மொழியியலாளர் எலாமைட்டும், திராவிட மொழிகளும் ஒரே குடும்பத்தினைச் சார்ந்தவை என்னும் கருத்தினைக் கொண்டிருக் கிறார். மேலும், தொல் எலாமைட் - திராவிட மொழி என்னும் ஒரு மொழி இருந்திருக்கும் என்ற கருத்தினையும் முன்வைக்கிறார். இவரின் கருத்துப்படி பலுசிஸ்தானத்தில் உள்ள பிராகுயி என்னும் மொழி மேற்சொன்ன மொழியிலிருந்து உருவானது. இது வட-இந்திய திராவிட மொழிக் குடும்பத்தினைச் சார்ந்தது. இவர் தொல் எலா மைட் திராவிட மொழியின் மேய்ச்சல் வாழ்க்கை பற்றிய சொற்களுக்குப் புது விளக்கம் தருகிறார்.

இந்தியத் துணைக்கண்டத்தின் திராவிடர்களின் வளர்ச்சியால் இச்சொற்கள் மாறுதலுக்கு உட்பட்டன. தொல் - எலாமைட் - திராவிட மொழியில் சொற்களைக் குறிக்க ஒரே வகையான சொல்லேயுள்ளது. இக்கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. ஏனென்றால் செங்கற்களை மிகப் பெருமளவில் அரப்பன் மற்றும் அதைச் சுற்றி யுள்ள வெண்கலக்காலத்தைச் சார்ந்த நகரநாகரி கங்கள் பயன்படுத்தியுள்ளன. அரப்பன் பண்பாட் டின் முடிவிற்குப் பிறகு கி.மு.300 வரை சுட்ட செங் கற்கள் (இதுவரை) வட இந்தியாவில் காணப்பட வில்லை. சுடாத செங்கற்கள் பற்றிப் பின் வேதகால இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன.

மக் ஆல்பின் கருத்துப்படி, தொல் - எலா மைட் திராவிடப் பண்பாடு கி.மு.4000 வாக்கில் சிதைந்துபோனது. இதன் சரியான காலம் எது வாயிருப்பினும் வரலாற்றாசிரியர்கள் மெல்ல மெல்ல எலாமைட் மொழிக்கும் திராவிட மொழிக்கும், பிராகுயி மொழியையும் சேர்த்து இடையேயான நெருக்கமான உறவை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். இவையனைத் தும் காட்டுவது என்னவெனில் ஆரியருக்கு முந்திய மக்கள் கூட்டம் பரந்த நிலப்பரப்பான தென் ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாக பலு சிஸ்தான் வரையிலும் பரவியிருந்தது என்ப தனையே. இப்பகுதியில் இந்தோ - ஈரானிய, இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசிய மக்கள் கி.மு.2000க்குப் பிறகு தங்கினர்.

7.     தீ மேடை, ஆரியரின் பண்பாட்டுக் கூறு என்று வாதிடப்பட்டது. தீ மேடைகள் லோத்தல், கலிபங்கம் போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால் முக்கியமாக அவை, ஹரப் பாவிலோ, மொஹஞ்சதரோவிலோ இருந்தன வாகச் செய்திகள் இல்லை. முன்பே சொன்னபடி வேதமக்களால் பின்பற்றப்பட்ட பிணம் எரி யூட்டும் வழக்கம் முதிர்ந்த அரப்பன் பண்பாட்டில் இல்லை. சிவ உருவத்தின் அடிப்படையில் அரப் பன் பண்பாடு ஆரியப் பண்பாட்டிலுள்ளது என்று வாதிடும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. முத்திரையொன்றிலுள்ள ஓர் உருவத்தினைச் சுற்றிப் பல விலங்குகள் இருப்பதும் அடையாளம் காணப்பட்டது. என்றாலும், இதனைப் பசுபதி சிவன் என்று கருத முடியாது. ரிக்வேதப் பாடல்கள் எண்ணிலாப் பல கடவுள்களுக்குப் படைக்கப் பட்டிருந்தாலும் அக்கடவுளர்களில் சிவன் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை.

8.     அரப்பாவின் அகழாய்வில் பல மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுள் எந்த ஒன்றும் ஆரியருக்கு உரியதாக அடையாளம் காணப்படவில்லை. அவ்வெலும்புக் கூடுகளை மூன்று வகைக்குள் அடக்கலாம். மனிதர்கள் சிலர் மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து வந்து மேற்காசியாவில் தங்கி வந்திருக்கலாம் என்று கோடு காட்டுகிறது. இரண்டாம் வகை தொல் - ஆஸ்ட்ரலாய்ட் கூட்டத்தைச் சார்ந்தது. அவற்றின் உடலியல் கூறுகள் திராவிட மக்களிடையேயும் உள்ளன. தொல் - ஆஸ்ட்ரலாய்ட் மக்கள் ஆஸ்திரேலியாவிலும் இந்தியப் பெருங்கடலின் தீவுகளிலும் வசித்துள்ளார்கள். மூன்றாம்வகை ஆஸ்ட்ரலாய்ட் கூட்டத்தைச் சார்ந்தது. அவற்றின் உடலியல் கூறுகள் திராவிட மக்களிடையேயும் உள்ளன. தொல் ஆஸ்ட்ர லாய்ட் மக்கள் ஆஸ்திரேலியாவிலும் இந்தியப் பெருங்கடலின் தீவுகளிலும் வசித்துள்ளார்கள். மூன்றாம்வகை மங்கொலாய்ட் இனத்தைச் சார்ந்தது. இவ்வகையில் ஒரேயொரு எலும்புக் கூடுதான் கிடைத்துள்ளது. இதுவரையில் அரப் பனில் கிடைத்த எந்தவொரு எலும்புக்கூடும் ஆரிய உடலமைப்பு வகையானதாகக் கருதப்படும் எந்தவொரு சாயலையும் கொண்டிருக்கவில்லை. இதுவே ஒரு பெரிய விவாதத்திற்கான கருவாக உள்ளது.

பின் வேதகால ஆரியர்கள் தான் அரப்பன் பண்பாட்டை உருவாக்கியவர்கள் என்று விவாதிக்கப்பட்டது. என்றாலும் பின் வேதகாலப் பண்பாடு அரப்பன் பண்பாட்டுடன் பொருந்தி வரவில்லை. பின் வேதகால நூல்களின்படி கால்நடை வளர்க்கும் சமூகமாயிருந்த ரிக்வேத மக்கள் வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட மக்களாக மாறினார்கள். இப்பண்பாட்டு மக்கள், இரும்பின் பயனை அறிந்திருந்தார்கள். ஆனால், அது பெரும்பாலும் போருக்கு மட்டுமே பயன்பட்டது. இரும்பைப் பற்றி அழுத்தமான சான்றுகள் வேத நூல்களில் உள்ளன. அரப்பன் பண்பாடு இரும்பின் பயனை அறிந்திருக்கவில்லை. வெண்கல, கற்கருவிகளைப் பயன்படுத்தினர். அரப்பாவிற்கேயுரிய தனித்த கைவினைத்தொழில், நகர வாழ்வு போன்றவற்றைப்பற்றிய பின் வேதகால நூல்களில் காணமுடிகிறது. பெரும்பாலான முதல்தர சமஸ்கிருத இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பின் வேதகாலம் கி.மு.1000-இல் தொடங்கியது என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர். கி.மு.1600 வாக்கிலேயே அரப்பன் பண்பாட்டின் வளர்ச்சித் தன்மை முடிவிற்கு வந்துவிட்டதால் அதனைப் பின் வேதகாலத்திற்கு இட்டுச் செல்ல முடியாது.

9.     இங்குப் பகுப்பாய்வு செய்யப்பட்ட கூறுகள் இந்தோ - அய்ரோப்பியன் அல்லது ஆரியன் பண்பாட்டின் அடையாளங்களாகக் கருதப் படுபவை. ஆனால், அவற்றின் பயன்பாடுகளில் கால வேறுபாடுகளும் இடவேறுபாடுகளும் உள் ளன. பயிற்றுவிக்கப்பட்ட குதிரை கி.பி. முதலாம் ஆயிரத்தாண்டுகளிலேயே கருங்கடல் பகுதியிலும் வால்கா பகுதியிலும் வந்துவிட்டன. கி.மு.நாலாயிரத்தாண்டினைச் சார்ந்த சக்கரங்களும் குதிரை யின் தலைப்பகுதிகளும் கருங்கடல் - கஸ்பியன் கடல் பகுதிகளில் கிடைத்துள்ளன. ஆனால், ஆரைக்கால்களோ கி.பி.1600 வாக்கில் வால்கா பகுதியின் அன்ட்ரனோவோ பண்பாட்டில் தோன்றின.

விலங்குப்பலி என்பது கி.மு.அய்ந்தாயிரத் தாண்டிலேயே இருந்துள்ளது. ஆனால் குதிரைப் பலியின் தொன்மை கி.மு.2000க்கு முன்பு போகாது. அதுவும்கூட இந்தியாவிற்குள் மட்டுமே வழக்கில் இருந்தது. ஆணாதிக்கம் வடஐரோப்பாலும், சாகாஸ் வட்டாரத்திலும் கி.மு.நாலாயிரத்தாண்டில் வந்தது. குதிரையைப் பயன்படுத்துபவர்களிடையேயான பிணம் எரியூட்டும் வழக்கம் பற்றிய குறிப்பு கி.மு. 1500க்கு முன்பாகத் தெளிவாகக் கிடைக்கவில்லை. ஆனாலும்கூட, இவ் வழக்கம் கி.மு. அய்யாயிரத்தாண்டிலேயே கஸகஸ்தானில் இருந்தது. சோமவழிபாடும் தீவழிபாடும் கூடக் குதிரையினைப் பயன்படுத்தியவர்களிடம் கி.மு.1500 வாக்கில் தோன்றியது.

சில பண்பாட்டுக்கூறுகள் இந்தோ - அய்ரோப்பிய மொழியின் இரு கிளைமொழிகளைப் பேசுபவர்களுக்கும் பொதுவானவை. இரு கூட்டத்தினருமே சவாரிக்கும், வண்டியிழுக்கும் இன்னபிறவற்றுக்கும் குதிரையினைப் பயன்படுத்தினர். பிண எரியூட்டலையும்கூட இரு கூட்டத்தினரும் பின்பற்றியதாகத் தெரிகிறது. இன்னும் ஆர்வம் தூண்டும் செய்தி என்னவென்றால் இந்தோ - அய்ரோப்பியரின் மேற்கத்திய கிளையினர் குதிரைப்பலியினை நடத்தினர் என்பதுதான். ஆணாதிக்கம் இரு கிளைக்கூட்டத்தினரிடமும் இருந்தது. இறந்த கணவனுடன் புதைப்பதற்காகக் கட்டாயப்படுத்தி மனைவியும் கொல்லப்படும் வழக்கம் முதன்முதலில் போலந்திலும் பால்டிக் பகுதியிலும் கி.மு.நாலாயிரத்தில் தோன்றியது. என்றாலும், இது ஒரு பண்பாடாகி பிறகு இந்தியாவில் நிலை கொண்டுவிட்டது. இருந்தபோதிலும், சோமவழிபாடு, தீவழிபாடு, விலங்குப்பலி போன்றவை இந்தியரையும் ஈரானியரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. பிணம் எரியூட்டலும், குதிரைப்பலியும் இந்தியர்களுக்கேயுரிய பண்பாடாக உள்ளது. பெரும்பாலான இக் கூறுகள் இந்தோ - ஐரோப்பியரல்லாதாரிடமிருந்து பெறப்பட்டவையாகும்.

ஆர்ய என்னும் சொல்லும் இந்தோ - ஐரோப்பிய மொழியின் கீழை மொழியில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. பொருத்தமான இலக்கணச் சூத்திரங்களும் உருவாக்கப்பட்டு வெவ்வேறு வடிவங்கள் உள்வாங்கப்பட்டன. மீண்டும் சொல்வதானால் பிணம் எரியூட்டல் ஒருவேளை கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் வந்திருக்க வேண்டும். ஆரைக்கால், மெசபடோமிய மக்களின் கொடையாக இருக்க வேண்டும். இருந்தும் இவையனைத்தும் சேர்ந்து குதிரையை அடிப்படையாகக் கொண்டமைந்த தலைவர்களுக்கு மேலாதிக்கத் தைத் தந்தது. இவர்களுக்கிடையேயான செய்தித் தொடர்பின் வேகம் - ஒரேயொரு மொழி மூலமாகவோ இம்மொழியின் கிளைமொழிகள் வழியாகவோ நடந்தேறியது. வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட சடங்குகளை ஒன்று சேர்க்க குருமார்கள் இந்தோ - ஐரோப்பிய மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம். மொழி, தொல்குடிகளுக்கிடையிலான தொடர்பிற்கு வழிவிட்டது. தொழில்நுட்பப் பரிமாறுதலுக்கும் உதவியது. மெல்ல மெல்லக் குதிரையைப் பயன்படுத்தும் கூட்டம் சொந்த பண்பாட்டுக் கூறுகளையும் ஒன்றிணைத்து சுமார் கி.மு.2500-இல் மத்திய ஆசியாவில் ஒரு தன்னியல்பான பண்பாட்டை உருவாக்கியது.

ஆரியர் பண்பாடு இருந்ததற்கான சான்றுகள் ரிக்வேதம் அவெஸ்தா இவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டன. இவ்விரண்டிலிருந்தும் சேகரிக்கப்பட்ட சமூக வாழ்வியல் நடைமுறைகள் அன்ட்ரனோவா பண்பாட்டின் பின்னணியில் ஆரியன் பண்பாட்டின் பொதுவான கூறுகளைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். கி.மு.2300 - 600க்கு இடைப்பட்ட காலத்திய கல்வெட்டுகள் குதிரை, சமூக, மதநடவடிக்கைகள்பற்றி மேலே நாம் பகுப்பாய்வு செய்த சான்றுகளை உறுதி செய்து அவற்றுக்கு வலுசேர்க்கின்றன. கி.மு.ஈராயிரத்தாண்டின் மொழியியல் சான்றுகளின் பரிந்துரைகளுடன் தொல்லியல் சான்றுகள் பெருமளவில் ஒத்துப் போகின்றன. குதிரையைப் பயன்படுத்திய கூட்டத்தினரின் தொடர்ச்சியான வருகை எந்தப் பாதையினைப் பின்பற்றி நடந்தது என்பதைக் கண்டறிவது எளிதான ஒன்றன்று. என்றாலும் இந்தோ - ஐரோப்பியப் பண்பாடு சுமார் கி.மு.2500-இல் மத்திய ஆசியாவில் கிழக்கிந்தியக் கலவையை மேற்கொண்டு ஈரானில் சில மாறுதல்களுக்கு உள்ளாகிப் பின் ஆப்கானிஸ்தானத்திலும் தொடர்ந்து இந்தியத் துணைக் கண்டத்திலும் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் சில மாற்றங்களைப் பெற்றது எனலாம்.

Pin It