(டாக்டர் மா.பா.குருசாமியின் தன் வாழ்க்கை வரலாறு)

டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் தன் வரலாறு ‘எப்படி இப்படி’ என்ற புதுமையான தலைப்பில் நூல் வெளிவந்துள்ளது.

அதனைப் படித்தேன் என்பதைவிடத் துய்த் தேன் என்பதே சரி.

நான் படித்த பத்துக்கு மேற்பட்ட சுய சரிதை களிலிருந்து இந்நூல் முற்றிலும் தனித்தன்மை பெறுகிறது.

ஒரு சமூக வரலாற்று நாவல் போன்று விறு விறுப்பாக விழிப்புணர்வு ஊட்டுகிறது. இந்நூலில் வரும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் எனது சமகால நண்பர்கள் அல்லது என்னோடு பழகிய வர்கள்.

சாதனை படைக்க விரும்புவோருக்கு இந்நூல் அரிய ஒரு புதையலாகும். ஒவ்வொரு பக்கமும் இளைஞர்களைப் பக்குவப்படுத்தவும், பண் பாளராகவும் செதுக்குகிறது, செம்மைப்படுத்து கிறது.

வரிக்கு வரி அட்சரம் லட்சம் பெறும்.

சின்ன வயதில் தாயை இழந்து - ஆச்சி வீட்டில் வளர்ந்து - குக்கிராமச் சூழலில் பழகி - சிறு ஆரம்பப் பள்ளியில் அரிச்சுவடி படித்த ஒருவர் துன்ப துயரங்களைத் தாண்டி - காடு மேடுகளைக் கடந்து கல்லூரியில் கற்றுப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், நூற்றுக்கு மேற்பட்ட நூற்களின் ஆசிரியராகவும் வரமுடியும் என்று நிரூபித்துக் காட்டும் இந்த நூலைக் கல்லூரி களுக்குப் பாட நூலாக வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தொடர்கிறேன்.

திருவில்லிபுத்தூர் சிஎம்எஸ் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மா. குருசாமியை மா.பா.குருசாமியாக்கி பேர்க் குழப்பத்தைத் தீர்த்த கதை சோகச் சுவை ஆகும். ஹெட்மாஸ்டர் ஜி.ஐ.மாணிக்கவாசகத்திற்குச் சிலைவைத்து வணங்க வேண்டும். பாறைப்பட்டி என்ற ஊரை மறக்க முடியாத பிரபலமாக்கிவிட்டார்.

அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகபட்டி, கல்லுப்பட்டி முதலிய கிராமங்கள் சொந்தக் கிராமங்கள் போன்று மனதில் பதிந்துவிட்டன. சாகாவரம் பெற்ற சரித்திர ஊர்களாகிவிட்டன.

விருதுநகர் வணிகவரித்துறை அலுவலக அனுபவங்கள் படிக்கும் போது மெய் சிலிர்க் கின்றது.

இருள் நிழலில் பேரம் பேசாத - தீமைகளோடு ஒத்துப் போகாத வீரம் களிநடம் புரியக் கண்டேன். லஞ்ச ஒழிப்புத் துறையை விட குருசாமியின் வாசக வரிகள் வலுவானவை.

1959 ஜூலை மாதம் கல்லுப்பட்டி சாந்தி நிகேதன் ஆசிரமக் கதர் வித்தியாலயத்தில் விரி வுரையாளராகப் பணியாற்றிய நாளில் - ஆசிரியர் குழாமாக நாசிக் போகிறார்கள். துணை முதல்வர், டாக்டர் குருசாமியை மட்டும் வண்டியிலிருந்து இறக்கிவிட்டு உள்ளுக்குள் மகிழ்கிறார். வாசிக்கும் நெஞ்சங்களுக்கு ஆத்திரம் பொங்குகிறது. ஆனால் அமைதலோடு அவருக்குக் கற்றுக் கொடுத்த பாடம் உலகு அறிய வேண்டிய உதாரணமாகும்.

முனைவர் குருசாமி அவர்கள் அநியாயத் தைக் கண்டு சகிக்காமல் நியாயத்தை நிமிர்ந்து நின்று நிலை நாட்டும் தன்மை அவர் வாழ்வின் முக்கிய கூறுகளாகும்.

அக்ரகாரத் தெருவில் உள்ள கிணற்று நீரைச் சாதித் திமிரால் எடுக்கவிடாமல் தடுத்தபோது குருசாமி குதித்து எழுகிறார். உரையாடல் மூலமே உணர்த்த விரும்புகிறார். ஊர் மக்கள் கூடுகிறார் கள். ஊர்க்கிணறு என்ற உரிமை கிடைக்கிறது. சாதீய அடிமைத் தளையை உடைத்தெறி கிறார்கள்.

அடுத்து எழுத்துத் திருட்டு. படிப்பாளிகள் மத்தியிலுள்ள புரட்டுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

‘வள்ளுவர் கண்ட பொருளியல்’ - டாக்டர் குருசாமி எழுதிய ஆய்வு அடங்கல். அதனைத் தன் னோடு பணிபுரியும் பொருளாதாரப் பேராசிரியரி டம் அணிந்துரைக்குக் கொடுக்கிறார். அது அவர் பெயரில் நூலாக வருகிறது. எத்தனை கொடும் கொடுமை.

அறிவர் குருசாமியின் நியாயமான எதிர்ப்பு படிப்புலகிற்கு நல்ல படிப்பினையாகிறது.

விடுதியில் சூதாடிய பணக்காரப் பயலை விடுதியை விட்டே விரட்டுகிறார். பின்னாளில் அவனின் மனமாற்றம் - மாபெரும் ஆன்மிகப் பணி அல்லவா?

தம் இலட்சிய புருஷர்களாக டாக்டர் மு.வ., தலைவர் சிவந்தி ஆதித்தனார், முதல்வர் இரா.கனகசபாபதி ஆகியோர் மீது அவர் கொண்டிருந்த பாசம், பற்று, அன்பு, மதிப்பு, மரியாதை இவைகளை இளம் தலைமுறை அறிய வேண்டாமா?

தம்பியைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்ற அண்ணன் குருசாமி படும்பாடு, செய்த தியாகம் மனித நேயத்தின் உச்ச கட்டத்தை எட்டுகிறது.

மகன் மணிவண்ணன், மகள் செல்வி, பேத்தி எழிலரசி, பேரன் விவேக்............ குருசாமியின் ஓட்ட சாட்டங்களுக்கு மத்தியில் குடும்பப் பாசத்தையும், அன்பின் பிணைப்பையும் பார்க்க முடிகிறது.

1992 மே மாதம் ஆதித்தனார் கல்லூரியின் முதல்வர் பதவியை ஏற்பது - அவரது உண்மையும், உத்தமமுமான கடின உழைப்பிற்குக் கிடைத்த இறைவனின் அருட்கொடை என்றே சொல்ல வேண்டும்.

ஆதித்தனார் கல்லூரி என்ற ஒரே நிறுவனத் தின் கீழ்ப் பல நிலைகளில் பணி செய்து முதல் வராக ஓய்வு பெறுவது - பின்பு அதனைச் சார்ந்த ஆறு கல்லூரிகளுக்கும் தலைமை நிர்வாகி என்ற பொறுப்பை ஏற்பது எவ்வளவு பெரிய சிலாக் கியம், பெரும் பாக்கியம், அரும்பேறு ஆகும்.

முப்பது ஆண்டுகள் திருச்செந்தூரில் தொண் டாற்றி திண்டுக்கல்லுக்குப் போகும்போது படிப் பவர்களுக்கே மனம் பக்பக் என்று அடிக்கிறது.

ஆயினும் மனைவியின் விருப்பம்தானே முக்கியம். துணைவியாரின் பங்களிப்பு தூய சிந்தை களால் நிறைந்துள்ளது. பரிசுத்தமான பாத்திர மாக விளங்குகிறார்கள்.

நூல் முழுவதும் மா.பா.குருசாமி இலக்கியப் படைப்பாளராக - இலக்கியப் படிப்பாளியாக, காந்தியத் தொண்டராக, பொருளியல் மாண வராக, நூலாளராக, கட்டுரையாளராக, கடின உழைப்பாளியாகக் கடும் தவம் புரிவதைக் காண்கிறேன்.

எறும்பினும் சுறுசுறுப்பாகப் பொறுப்புகளை மேலும் மேலும் ஏற்றுக்கொள்ளும் பாங்கினை எங்கும் பார்க்க முடிகிறது. கல்லுப்பட்டி சாந்தி னிகேதன் ஆசிரமத்தில் சேவை செய்தபோது பகவத் கீதையில் மூழ்கி விடுவதையும், மதுரை காம ராசர் பல்கலைக்கழகப் பொறுப்பை ஏற்றபோது வள்ளலாரின் திருவருட்பாவில் தோய்ந்திருப்பதை யும் கண்கூடாகக் காணமுடிகிறது.

குருசாமி என்னும் ராஜாளி நூல் முழுவதும் சிறகடித்துப் பறந்து வானுயரும் விந்தையைச் சிந்திக்க வேண்டும்.

குருசாமியின் குலதெய்வம் கடின உழைப்பு.

அவரது உயிர்மூச்சு இலக்கியப் படைப்பு.

அவரின் மூலதனம் சலியாத தியாகம்.

அவரின் இதயத் துடிப்பு தமிழ், தமிழ், தமிழ்.

குருசாமி ஐயாவின் நூற்களில் மணிமகுடம் “காந்தியப் பொருளாதாரம்” என்பார்கள். நான் சொல்வேன், ‘எப்படி இப்படி’ என்ற தன் வர லாற்று நூலாகும்.

2009-இல் நடந்த பனைத் தொழில் வளர்ச்சி பற்றிய கூட்ட நாளில் ஒரு லட்சம் பனங்கொட்டை களை வாங்கி நட்டார்களே......... அவை நாடு முழு வதும் வளர்ந்து அவரது நற்பணிகளுக்குச் சான் றாக நிற்கும்.

துணைவியார் குரு.தேமொழியின் பிரிவு தாங்க முடியாதது.

அவர் கட்டிக் காத்து வரும் ஜே.சி.குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம் நின்று நிலைத்து சாட்சி சொல்லும்.

2009 தைப் பொங்கல் நாள். இருவருக்குமான உரையாடல் : “என்னங்க, நாம் திண்டுக்கல் வந்து எவ்வளவு காலம் ஆகிறது?”

“இது ஏழாம் ஆண்டின் தொடக்கம்.”

“இவ்வளவு நாள் இருப்பேனென்று தெரிஞ்சா அப்பவே திண்டுக்கல் வரனும்னு கூறி இருக்க மாட்டேன்” என்று சொல்லும்போது ஒரு அன்பு மனைவியின் கடமை உணர்வு - நம் கண்ணில் நீரைக் கொட்டுகிறது. பரமேஸ்வரி ஒரு மானசீக தெய்வீகப் பாத்திரம்.

அம்மையாரின், ‘ஐயோ....’ என்ற கடைசிக் குரல் நம் இதயத்தை உடைக்கிறது. அவர்களின் தீர்க்கமான இறுதி முடிவுகள் தீர்க்க தரிசனமாகும்.

மகன் மணிகண்டனுக்கு நாம் யாவரும் கடன்பட்டவர்கள். 62 ஆண்டுகளாக ஓய்வில்லாது ஓடி அலைந்து திரிந்த அனுபவங்களை எழுத - அமெரிக்காவில் மகன் வீட்டிலிருக்கும் போது தான் நேரம் கிடைத்தது. இன்றேல் இந்த அபூர்வ தன் வரலாற்றுக் காவியம் கிடைத்திருக்க முடியாது.

அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல்.

Pin It