பெ.மாதையனின் ‘சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்’ நூல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இரண்டாம் பதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நூல் வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழியல் மாணவர்கள் இந்நூலை இன்னும் ஆழ்ந்து கற்க வேண்டும். அப்போதுதான் தொல்தமிழ் இலக் கியத்தில் செய்ய வேண்டிய ஆய்வுகளின் திசை வழியை அறிந்து கொள்வார்கள். இந்த அறிமுகம் நூலின் பேசு பொருள் குறித்து ஓர் எளிய அறிமுகத்தை வழங்க முயல்கிறது.

maathaiyan_380நூலாசிரியரே குறிப்பிடுவது போன்று, பழந் தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள் இருவகைப் பட்டன. ஒன்று பழமை போற்றும் பாங்குடையது; மற்றொன்று அறிவியல் மனப்பாங்குடையது. அறிவியல் மனப்பாங்குடைய ஆய்வுகளை அண்மைக் காலத்தில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை, கா.சுப்பிரமணியன், கோ.கேசவன் முதலான மார்க் சியர்கள் வளர்த்துச் சென்றனர். இந்நூலாசிரியரான பெ.மாதையனும் மார்க்சிய வழியில் பண்டைக் காலத் தமிழக அரசு உருவாக்கம் பற்றி ஆராய்ந் துள்ளார்.

இந்நூலுக்கு இரண்டு முன்னாய்வுகள் குறிப்பிடத் தக்க அடிப்படைகளாய் அமைந்துள்ளன என்று கருதுகின்றேன். ஒன்று கா.சிவத்தம்பியின் திணைக் கோட்பாடு பற்றிய பகுப்பாய்வு. மற்றது கா.சுப்பிர மணியனின் பண்டைத் தமிழக சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வு. கா.சிவத்தம்பி திணைக்கோட் பாட்டைப் பண்டைக்காலத் தமிழகத்தில் சமனற்ற சமூக வளர்ச்சியின் புதைநிலை வடிவம் என்று காட்டியிருந்தார்; அகத்திணைக் கருத்தாக்கத்தைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டி இவ்வுண் மையை நிறுவினார். பண்டைத் தமிழகத்தில் இருந்த தலைமை வேறுபாடுகளைப் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், அவை பற்றித் திட்ட வட்டமாக ஆய்வு செய்து வகைப்படுத்திக் காட்டி யவர் கா.சுப்பிரமணியன். இவ்விருவருடைய ஆய்வு களின் அடிப்படையில் இந்நூலாசிரியர் இன்னும் முன்னேறிச் சென்றுள்ளார்.

இந்நூல் ஆறு இயல்களை உடையது. முதல் இயல் ‘திணைக் கோட்பாடும் சங்ககாலத் தலைமை வேறுபாடுகளும்’. இவ்வியல் புறத்திணைகளைப் பகுப்பாய்வு செய்கின்றது. புறத்திணையில் காட்டப் பட்ட போர் செயற்பாடுகளை நேர்க்கோட்டு வளர்ச்சியாகக் காட்டப்படுவதை, அதாவது போர் தொடங்குவதற்கு ஆநிரைகளைக் கவர்தல், பின்பு மீட்டல், பின்பு கோட்டையைச் சூழ்தல் எனப் போர் வளர்ந்து செல்லும் என்று கூறப்படுவதை இந்நூலாசிரியர் மறுக்கிறார். பண்டைத் தமிழகத்தில் சமனற்ற சமூக வளர்ச்சி நிலவியதை எடுத்துக் காட்டுகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய வற்றில் வேறுபட்ட சமூக அமைப்புகள் நிலவியதை விளக்கியுள்ளார். இவ்வேறுபட்ட சமூக அமைப்பில் வேறுபட்ட பண்பு கொண்ட சமூகத் தலைமைகள் நிலவின. நிரை கவர்தல், நிரை மீட்டல் எல்லாம் முல்லை நில மேய்ச்சல் சமூகங்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகள். மருத நிலத்தில் தொல் குடிப் பண்புகளுடன் விளங்கிய முதுகுடி மன்னர் களை அழித்து அரசு என்னும் நிறுவனத்தை, அதாவது நிலையான படை, வரி வசூல், சமூகப் படிநிலையைக் காத்தல் முதலானவற்றை நிறுவிய வேந்தர்களே நிலத்தை அபகரிக்கும் போர்முறைகளை நடப்பிற்குக் கொண்டுவருகின்றனர்; தம் அக்கம் பக்கத்தில் உள்ள அரைகுறை இனக்குழுப் பண்புகள் பெற்ற சீறூர், குறுநில மன்னர்களை அழிக்கின்றனர்; அடிமைப்படுத்துகின்றனர். முதல் இயலில் வேறு பட்ட நிலத்தில், வேறுபட்ட சமூகத்தில் நிலவிய போர்முறைகளே புறத்திணைப் போர் செயற் பாடுகள் காட்டுகின்றன என்று பெ.மாதையன் நிறுவுகிறார். போர் முறைகள் குறிப்பிட்ட சமுதாயப் பொருளாதாரப் பின்புலத்தைப் பெற்றுள்ளவை என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

இரண்டாவது இயல் இனக்குழுச் சமுதாய எச்சங்களும் சீறூர் மன்னர் சமுதாயம் பற்றியது. முல்லை நிலத்தில் நடப்பில் இருந்த சீறூர் மன்னர் சமுதாயம் மேட்டுநில வேளாண்மையையும், மேய்ச் சலையும் அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டது. இதனால் கூட்டுழைப்பும், பொதுமைப் பண்பும் நிலவின. சீறூர் மன்னர்களும் வேந்தர்களுக்குப் பணி செய்தும் தங்கள் பண்புகளைப் பேணியதை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.

மூன்றாவது, நான்காவது இயல்கள் ‘உடைமைச் சமுதாயமும் வேந்தரும்’, ‘புலவர் மன்னர் உறவுகள் முறைகள்’ என்பன. இவ்வியல்கள் பண்டைத் தமிழக வளர்ச்சியை அற்புதமாக எடுத்துக்காட்டு கின்றன; அவ்வளர்ச்சியில் நிலவிய அசமத்துவம் பற்றியும் சிறப்பாகக் கவனம் செலுத்தியுள்ளன. வேந்தர்கள் மருதநிலத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள்; தனிஉடைமைப் பண்பு பெற்ற வர்கள்; மருதநிலம் பெருக்கமடைய விழைகின்றனர்; வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றனர். பின்பழந் தமிழ்க் காலத்தில் வேளாண்மையைவிட வாணிகமே முதன்மை பெற்றதை ஆசிரியர் நெல் - முத்து பற்றிய ஆய்வில் மூலம் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். இதற்கு மாறாக முதுகுடி, குறுநில மன்னர்களின் உடைமையின்மையையும், கொடைப் பண்பையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

பண்டைப் புலவர்கள் அரசர்களின் ஊது குழல்களாக மட்டுமே விளங்கினர் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இது ஓரளவுக்கு உண்மை. ஆயினும் முழு உண்மையன்று. பண்டைத் தமிழகத்தில் வேறுபட்ட சமுதாய அமைப்புகள், தலைமைகள் நிலவியதைப் போன்றே புலவர் - மன்னர் உறவுகளும் வேறுபட்ட தன்மையுடையவையாக விளங்கின. முதுகுடி, சீறூர், குறுநில மன்னர்கள் எந்தக் கைம் மாறும் கருதாமல் எல்லாக் கலைஞர்களையும் போற்றியதை ஆசிரியர் சிறப்பாக எடுத்துக்காட்டி யுள்ளார். அது இனக்குழுச் சமூகங்களின் பண்பு. ஆனால் வேந்தர்கள் தம் புகழ்பாடுவதை ஊக்குவித்து, வரிசையறிந்து, பாணர் உள்ளிட்ட கலைஞர்களைவிட செந்நாப் புலவர்களை மட்டுமே போற்றி யதை எடுத்துக்காட்டியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு மிகமிக முக்கியமானது. பெ.மாதையன் எந்தெந்தப் புலவர்கள் எந்தெந்த மன்னர்களைப் பாடியுள்ளனர் என்றொரு பட்டியலைக் கொடுத் துள்ளார். இதன் மூலம் புலவர்களின் சமூகச் சார்பு, அதாவது அவர்கள் தனிஉடைமை வேந்தர் சமுதாயத்தைச் சார்ந்திருந்தனரா, இனக்குழுப் பண்பு பெற்ற சமுதாயத்தைச் சார்ந்திருந்தனரா என்பது தெளிவாகிறது. இதன் மூலம் புதிய முறையில் தொல்தமிழ் இலக்கியத்தை வாசிப்பதற்கான அடிப் படையை பெ.மாதையன் இட்டிருக்கிறார்.

அடுத்த இரு இயல்கள் ‘வேள்வி - அந்தணர் பணிவு - வைதீகச் செல்வாக்குகள்’, ‘சங்ககால அரசு உருவாக்கச் சூழல்’ என்பன. இவ்விரு இயல்களும் பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கத்தின் போது நடந்த கருத்துநிலை செயற்பாடுகளைப் பகுப்பாய்வு செய்கின்றன; குறிப்பாக வைதிகம் செல்வாக்குப் பெறுதல், இலக்கிய உருவாக்கம் பற்றிச் சிறப்பான கருத்துருவை நமக்கு அளிக்கின்றன.

இந்நூல் சிந்தனைக் கிளர்ச்சியைத் தூண்டி விடுவதாக அமைந்துள்ளது. இந்நூலைப் படித்து முடித்த பின்னர் சங்க இலக்கியத்தைப் புதிய நோக்கில் காணும் ஆவல் பிறக்கும்.

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்

ஆசிரியர் : பெ.மாதையன்

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.60/-

Pin It